வேட்டு வைத்த பூண்டு – ஆனந்த் சங்கரன்


வலைப்பூவில் அமெரிக்க உணவு வகைகள், உணவகங்கள் பற்றி படித்த பொழுது எனக்கு என்னுடைய அலுவலகத்தில் நடந்த இந்தச் சம்பவம் நினைவுக்கு வந்தது.

சுமார் ஒன்னறை ஆண்டுகளுக்கு முன் நான் பிரபல அமெரிக்க கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்தேன். ஐநூறுக்கும் மேற்பட்டோர் வேலை செய்த அலுவலகத்தில், நம்மவர்களின் (இந்தியர்கள்) எண்ணிக்கை நிறைய உண்டு. இந்தியர்கள் நிறைய இருந்தாலும் தென்னிந்தியர்கள் ஒரு சிலரே இருந்தோம். மற்றவர்கள் வடநாட்டினர். (எனக்கு பேஸின் ப்ரிட்ஜை தாண்டினாலே வட நாடுதான்).

எனக்கு இரண்டு இருக்கைகள் தள்ளி ஒரு தமிழ் பேசும் கன்னடரும் இருந்தார். வேலையில் கில்லாடி. கொடுத்த வேலையை திறம்பட செய்யக்கூடியவர். ஆனால் அவருடைய பிரச்சனையே அவருடைய பழக்க வழக்கத்தை மாற்றிக் கொள்ளாததுதான். வீட்டில் எப்படி பேசுவாரோ அதே போல் சத்தமாக தொலைபேசியில் உரையாடுவார் (அதுவும் தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில்). அருகில் இருப்போருக்கு கேட்குமோ அவர்களுக்கு எரிச்சலாக இருக்குமே என்று துளியும் யோசிக்கமாட்டார். போதாத குறைக்கு அனைவரிடமும் நட்பாக பேசுகிறோம் என்று நினைத்துக் கொண்டு அனைவரின் பர்சனல் விஷயங்களிலும் மூக்கை நுழைப்பார். எனக்கே இது பல முறை எரிச்சல் மூட்டியுள்ளது. ஒரு முறை அவரிடம் இதைப் பற்றி பேசப்போக அதில் இருந்து என்னிடம் ‘காய்’ விட்டுவிட்டார்.

இதெல்லாம் கூட தேவலை, ஆனால் தினமும் காலையிலும் மதியத்திலும் அவர் செய்யும் அலும்பு இருக்கிறதே ! யப்பா.. தாங்காது.

வந்ததும் வராததுமாய் ஊறுகாய் பாட்டிலை (பூண்டு ஊறுகாய் அவர் மேஜை மீது எப்பொழுதும் இருக்கும்) திறந்து வைத்துக் கொண்டு அந்த அறையையே நாறடிப்பார். எனக்கும் பூண்டு பிடிக்கும்தான் ஆனால் ஒரு அளவு இருக்கிறது. அந்த அறையில் வேலை செய்யும் மற்ற அமெரிக்க நண்பர்களுக்கு தாங்காது. அவர்கள் முகம் சுளிப்பார்கள் – வெளியே எழுந்து போவார்கள். ஆயினும் இவர் அதை ஒரு பொருட்டாகவே எண்ண மட்டார்.

அமெரிக்கர்களிடம் ஒரு நல்ல குணம் (அதுவே வேட்டு வைக்கும் குணம்) இருக்கும். தனக்கு ஒரு விஷயம் பிடிக்கவில்லையென்றால் அதை முகத்தில் அறைந்தார் போல் சொல்ல மாட்டார்கள். பேசாமல் இருந்துவிட்டு அதை வேறு விதமாக காட்டுவார்கள். எனது நண்பர் விஷயத்திலும் இதுதான் நடந்தது.

அலுவலகத்தில் ஆட்குறைப்பு செய்த பொழுது அந்த நண்பர் வேலை போயிற்று. இத்தனைக்கு மிக முக்கிய பணியை அவர் செய்து வந்தார். அவருடைய இழப்பு கம்பெனிக்கு பெரிய நஷ்டம். ஆனாலும் அவர் வெளியே அனுபப்படார். எனக்கும் கத்தி வருமோ என்று பயந்தேன். நல்ல வேளையாக தப்பித்தேன்.

ஆட்குறைப்பிற்கு ஒரு நாள் நானும் என் மேனேஜரும் உரையாடிக்கொண்டிருந்த பொழுது, என்னிடம் விளையாட்டாக ‘உன் அருக்கில் இருப்பானே அந்த பேமானிக்கு ஏன் வேலை போச்சு தெரியுமா ?’ என்று நக்கலாக கேட்டார். நான் வெறும் புன்முறுவல் செய்தேன். ‘அவனுடைய வேலை நன்றாக இருந்தாலும் அவனுடைய பூண்டும், பேச்சும் அவன் வேலைக்கு வேட்டு வைத்தது.’ என்று கூறி மற்றொரு பேமானியை உபயோகித்தார்.

மேலிடம் செய்தது சரியா தவறா என்ற ஆராய்ச்சியை விட நாம் கவனமாக இருப்பது நமக்குதானே நல்லது !!

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.