துள்ளித் திரிந்த காலம்


என் அம்மாவின் பிறந்த நாள் மே 21, 1937. அவரின் பெற்றோர்களான லக்ஷ்மி, இராமசுப்பிரமணியம் பெயரிலும் பத்திரிகைகளில் எழுதி உள்ளார். சென்னை திருவல்லிக்கேணியில் பிறந்தவர். 1944 ஜனவரியில் அம்மாவுக்குத் தங்கை பிறந்தாள். அதே ஆண்டு கந்த சஷ்டியன்று தந்தையை இழந்தார்.

1951-இல் சென்னையை விட்டு கல்லிடைகுறிச்சிக்கு அருகில் இருக்கும் சிங்கம்பட்டி ஜமீனுக்கு குடி பெயர்ந்தனர். தாத்தாவின் பிரிவை மறக்க தாய் துணையாகத் தேடிக் கொண்டது படிக்கும் பழக்கத்தை. ஆனந்த விகடன் துணுக்குகளைப் படித்த சிறுமி மெதுவாக சிறுகதைகளைப் படித்தாள். தொடர்ந்து ‘லஷ்மி’யின் நாவல்களான பெண்மனம், காஞ்சனையின் கனவு, லட்சியவாதி, ‘தேவனின்’ துப்பறியும் சாம்பு, ஸ்ரீமான் சுதர்சனம், மிஸ்டர் வேதாந்தம், ஜஸ்டிஸ் ஜகந்நாதன், ‘எஸ்.ஏ.பி’யின் காதலெனும் தீவினிலே, இன்றே,இங்கே,இப்பொழுதே, நீ, சூறாவளி போன்ற கதைகளில் லயித்ததோடு மட்டுமில்லாமல் அவர்களோடு வாழ்ந்ததாகவே சொல்லி யிருக்கிறார்கள்.

கல்கியின் ‘பொன்னியின் செல்வனே’ சரித்திரமும் ருசியாயிருக்கும் என்று அவர்களுக்கு சொல்லி கொடுத்தது. பி.எஸ். ராமையா, எஸ்.வி.வி, எல்லார்வி கதைகள் அம்மாவின் உணர்வுகளை அலைக்கழித்தவை. இன்னார் கதைகள் என்று பொறுக்காமல், போரடிக்கும் (நான் எழுதுவது போன்ற 🙂 கதைகளிலும் என்ன இருக்கிறதென்று பார்க்க பொறுமையுடன் படித்தாள்.

பொன்னியின் செல்வனின் முதல் பாகத்தோடு சென்னை வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. சிங்கம்பட்டியில் ஒரு ஓவர்ஸியர் குடும்பத்தில் கல்கி இருப்பதை அறிந்து மீண்டும் வந்தியத்தேவனும், குந்தவையும், நந்தினியும், அருள்மொழி வர்மனும் அவளோடு உறவாடினர். மீண்டும் ஆனந்த விகடன் அவர்களின் நண்பனானான்.

ஒரு சிவராத்திரி இரவில் பெரிய எழுத்து விக்ரமாதித்தனை முடித்தாள். அவர்கள் பெரியப்பா வீட்டிலிருந்த கம்பராமாயணம், வால்மீகி ராமாயணம் அவளை ஆன்மீகத்தில் ஈடுபாடு கொள்ளச் செய்தது. அவளைச் சுற்றி எப்போதும் சிறுவர், சிறுமியர் அவளது கற்பனைக் கதைகளைக் கேட்க; பிள்ளைகலைச் சாக்கிட்டு பெற்றோரும் கூடினர்.

அவளுக்கு மிகவும் பிடித்த பத்திரிகை குமுதம். போரடித்த போது படிக்க ஆரம்பித்த சாண்டில்யனின் சரித்திரக் கதைகளால் நிறைய விஷயங்களைத் தெரிந்து கொண்டாள். குறிப்பாக சீனாவின் அங்குபங்சர் சிகிச்சையில் காதலே பிறந்தது.

(சிறு குறிப்பு வளரும்)

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.