Category Archives: Uncategorized

Mookkuthi distribution by ADMK candidate in Porur

Dinamani.com – Chennai Page

வாக்காளர்களுக்கு மூக்குத்தி விநியோகம்: அ.தி.மு.க.வினர் கைது

சென்னை, அக். 12: போரூர் காரம்பாக்கத்தில் வாக்காளர்களுக்கு மூக்குத்தி விநியோகித்த அ.தி.மு.க. வேட்பாளரின் உறவினர்கள் 3 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.

போரூரை அடுத்துள்ளது காரம்பாக்கம் ஊராட்சி. இதன் தலைவர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் காசி ஜெனார்த்தனம் போட்டியிடுகிறார். திமுக சார்பில் க.கணபதி போட்டியிடுகிறார்.

இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தனக்கு சாதகமாக வாக்களிக்க வேண்டும் எனக் கோரி வாக்களர்களுக்கு அ.தி.மு.க.வேட்பாளர் காசி ஜெனார்த்தனம் மூக்குத்திகள் கொடுத்தாக தி.மு.க. வேட்பாளர் போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸôர் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டவர்களிடம் சோதனை நடத்தினர்.

இதில், காசி ஜெனார்த்தனின் தம்பி மணி (50), அவரது உறவினர்கள் சுரேஷ், கட்சியின் கிளைப் பொருளாளர் சரவணன் என்ற முருகன் ஆகியோரிடம் இருந்து 23 மூக்குத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், 25 பேருக்கு அவர்கள் மூக்குத்தி கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து மூவரும் கைது செய்யப்பட்டனர்.

‘Think about your offsprings & vote’ – Karunanidhi

Dinamani.com – TamilNadu Page

“திராவிடர்களின் தலைவன் என்பதே பெருமை’

சேலம், அக். 12: “தமிழகத்தின் முதல்வர் என்பதைவிட, திராவிடர்களின் தலைவன்- வழிகாட்டி என்பதே எனக்குப் பெருமை’ என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

சேலத்தில் புதன்கிழமை நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியது:

பட்டம், பதவிக்காக நாங்கள் திராவிடர் கழகத்திலும், திமுக-விலும் சேரவில்லை. எப்படியாவது அதிகாரத்தைப் பெற வேண்டும் என்றும் நினைக்கவில்லை.

ஏற்றுக் கொண்ட கொள்கை அடிப்படையில் செயல்பட்டோம். முதலமைச்சர் என்பதைவிட திராவிடர் என்று கூறிக் கொள்வதில்தான் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழகத்தில் திராவிடர்களுக்கு தனி சரித்திரம் உண்டு. ஆனால் இப்போது யார் யாரையோ திராவிடன் என்று குறிப்பிடுகின்றனர்.

திராவிடன் என்றால் மூடநம்பிக்கை, ஜாதி, மனுதர்மத்தை எதிர்ப்பவன்.

மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும். மானத்தோடு வாழ வேண்டும் என்ற உணர்வோடு செயல்படுபவன். அந்த உணர்வைத்தான் திராவிட இயக்கங்கள் ஊட்டி வளர்த்து வருகின்றன.

அவ்விதத்தில் என்னை திராவிடர்களின் தலைவன்- வழிகாட்டி என்று கூறுவதே மகிழ்ச்சியளிக்கிறது.

எதிர்கால தலைமுறையினர் மானத்தோடு, நல்ல சூழலில் வாழ வேண்டும் என்பதற்காக திராவிட இயக்கங்கள் பாடுபடுகின்றன. அதற்கு நீங்களும் ஆதரவளிக்க வேண்டும்.

திராவிடர் இயக்கத்தினர் தியாகத் திருவிளக்குகள். உங்கள் வாரிசுகளின் எதிர்காலத்தை எண்ணி அந்த இயக்கங்களை நீங்கள் ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் கருணாநிதி.

68 per cent polling at Madurai Cental Bypoll

Dinamani.com – TamilNadu Page

மதுரை இடைத் தேர்தலில் 68% வாக்குப்பதிவு

மதுரை, அக்.12: மதுரை மத்திய சட்டப் பேரவைத் தொகுதியில் புதன்கிழமை நடைபெற்ற இடைத்தேர்தலில் 68.7 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தொகுதியின் எந்தப் பகுதியிலும் அசம்பாவிதச் சம்பவங்கள் எதுவும் நடைபெற்றதாகத் தகவல் இல்லை.

வாக்குப் பதிவு தொடங்கியபோதே சுப்பிரமணியபுரம், சுந்தரராஜபுரம், மகபூப்பாளையம், பேச்சியம்மன்படித்துறை ஆகிய பகுதிகளில், ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

விறுவிறுப்பான வாக்குப்பதிவு: வாக்குப் பதிவு தொடங்கியபோது, வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாலும், வாக்காளர் சிலர் கட்சி சின்னத்துடன் கூடிய பனியனுடன் வந்ததாலும் ஒரு சில இடங்களில் பிரச்சினை ஏற்பட்டது. எனினும் தொகுதியின் அனைத்துப் பகுதிகளிலும் பெரிய அசம்பாவிதம் ஏதுமின்றி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் துணை நிலை ராணுவத்தினர் பிரதான பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மொத்தம் 3000-க்கும் மேற்பட்ட போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

தேர்தல் பார்வையாளர்கள்:மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான உதயச்சந்திரன், தேர்தல் பார்வையாளர்கள் சஞ்சீவ்குமார், மீனா, மாஹி, தென்மண்டல ஐ.ஜி. சஞ்சீவ்குமார், மாநகர் காவல்துறை துணை ஆணையர்கள் அறிவுச்செல்வம், பி.நாகராஜன் ஆகியோரும் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறுகிறதா என்பதைப் பார்வையிட்டனர்.

வாக்களித்த வேட்பாளர்: பிரதானக் கட்சிகளின் வேட்பாளர்களில் திமுக வேட்பாளர் கௌஸ்பாஷாவுக்கு மட்டுமே இத்தொகுதியில் வாக்குரிமை உள்ளது. அவர், டி.பி.கே. சாலையில் இருந்த வாக்குச் சாவடிக்கு, வாக்களிக்கச் சென்றபோது, கட்சி சின்னத்துடன் கூடிய பாட்ஜ் அணிந்திருந்தார். இதற்கு வாக்குச் சாவடியில் இருந்த பிற கட்சி ஏஜெண்ட்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் அதை எடுத்துவிட்டுச் சென்று வாக்களித்தார்.

வாக்காளர்கள்: இத்தொகுதியில் மொத்தம் 1,32,231 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 66,331 பேர் ஆண் வாக்காளர்கள், 65,900 பேர் பெண் வாக்காளர்கள்.

இத் தேர்தலில்தான் தமிழகத்தில் முதன்முறையாக வாக்காளர் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் பயன்படுத்தப்பட்டது. வாக்காளர்கள் பெரும்பாலும் புகைப்பட அடையாள அட்டையையே எடுத்து வந்திருந்தனர். அடையாள அட்டை இல்லாதவர்கள், தேர்தல் ஆணையம் அறிவித்த 13 வகையான மாற்று ஆவணங்களை வாக்களிப்பதற்குப் பயன்படுத்தினர்.

19 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் 2 வாக்குப்பதிவு இயந்திரங்களும், ஒரு கட்டுப்பாட்டு இயந்திரமும் பயன்படுத்தப்பட்டன.

கடந்த பொதுத் தேர்தலில் மொத்தம் 94,224 வாக்குகள் பதிவானது. இதில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் 43,185 வாக்குகளும், அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட எஸ்.டி.கே. ஜக்கையன் 35,992 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் சுந்தரராஜன் 12,038 வாக்குகளும் பெற்றனர்.

அக்.17-ல் வாக்கு எண்ணிக்கை: இடைத் தேர்தலில் பயன்படுத்தப்படும் அனைத்து வாக்குப் பதிவு, கட்டுப்பாட்டு இயந்திரங்களும் போலீஸ் பாதுகாப்புடன் மதுரை மருத்துவக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன. வாக்கு எண்ணிக்கை வரும் அக்.17-ம் தேதி நடைபெறுகிறது.

Local Body Elections in Pappapatti, Keeripatti, Naattamangalam

BBCTamil.com

தமிழகத்தின் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டமங்கலம், கொட்டகாச்சியேந்தல் உள்ளாட்சித் தேர்தல் நிலவரம்

தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரம், கடந்த இரண்டு வாரமாக திருவிழா போல கோலகலமாக நடைபெற்று வருகின்றது. ஆனால் மதுரை ஒட்டிய பாப்பாபட்டி, கீரிப்பட்டி, கொட்டக்காச்சியேந்தல், நாட்டமங்கலம் போன்ற கிராமப் பஞ்சாயத்துகளில், தேர்தல் பிரச்சாரத்தின் சுவடே தெரியவில்லை.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இந்த பஞ்சாயத்துகளில், பஞ்சாயத்து தலைவர்களை தேர்வு செய்ய தமிழக அரசு கடந்த பத்தாண்டுகளாக மேற்கொண்டு வந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஒன்று தேர்தலில் யாரும் போட்டியிடுவதில்லை, அல்லது ஊரின் சார்பில் யாராவது தாழ்த்தப்பட்டவரை தேர்தலில் நிறுத்தி வெற்றிபெற செய்து, பதவியேற்கவும் செய்து விட்டு, மறு விநாடியே ராஜினாமா செய்ய வைக்கும் நிலைமை நீடிக்கிறது.

இந்த நான்கு ஊர்களுக்கு தற்போதும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலாவதாக கீரிப்பட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ஊரின் சார்பில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் ஊரின் சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்தவரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் போட்டியின்றி தேர்வாகின்றார்.

ஆனால் இதனை உள்ளூர் மக்கள் ஏற்க மறுக்கின்றனர். இவ்வாறு நிலவும் சூழ்நிலையில், இப்பகுதிகளுக்கு சென்ற பிபிசியின் செய்தியாளர் எல்.ஆர்.ஜெகதீசன், இந்த ஊர்களின் தேர்தல் நிலவரம் குறித்து தயாரித்துள்ள பெட்டகத்தினை பிபிசி உலக சேவை வானொலியின் தமிழ் சேவையான செய்தியரங்கத்தில் கேட்கலாம்.

Madurai (Central) Bypoll Violence – Dinamani Editorial

Dinamani.com – Editorial Page

காவலன் காவல் அன்றெனில்…

மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தலில் நடைபெற்றுள்ள வன்முறைகளுக்காக திமுக, அதிமுக இரு கட்சிகளையும் தேர்தல் ஆணையம் கண்டித்துள்ளது. இரு கட்சிகளுமே, “இதில் உண்மையில்லை’ என்று மறுக்கலாம். அல்லது “தொண்டர்கள் சிலர் உணர்ச்சிவசப்பட்டு செய்திருக்கலாம்’ என்று பொத்தாம்பொதுவில் சொல்லலாம். சட்டத்தின் முன்பாக தங்கள் பொறுப்புகளைக் கை கழுவினாலும் இரு கட்சிகளுக்கும் இது அவமானம். இந்த வன்முறைகளுக்கு மெüன சாட்சியாக இருந்த கூட்டணிக் கட்சிகளுக்கும் (வெற்றி தோல்விகளில் பங்குகொள்வதுபோல) இந்த வன்முறையிலும் தார்மிகப் பொறுப்பு உள்ளது.

வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்வதற்காக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஒரு சத்திரத்தில் இருந்ததாகவும் அப்போது திமுகவினர் அவரை பணத்துடன் பிடித்து அரைநிர்வாணமாக ஊர்வலமாக அழைத்து வந்ததாகவும் இதில் காவல்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும் செய்திகள் விவரிக்கின்றன. படம்பிடிக்கச் சென்ற பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டுள்ளனர்.

ஒரு சத்திரத்துக்குள் புகுந்து தாக்குகின்ற அளவுக்கு ஆத்திரம் ஏற்படக் காரணம் ஒரு இடைத்தேர்தலின் தோல்வியை ஆளும்கட்சி தன் வீழ்ச்சியாகக் கருதுவதும் அதை எதிர்க்கட்சி தனது அடுத்த பொதுத்தேர்தலுக்கான முதல் கணக்குத் தொடக்கம் என்று நினைப்பதும்தான். இடைத்தேர்தலுக்கு அதிக முக்கியத்துவம் தராமல், இரு கட்சித் தலைமைகளும் கட்சிபலம் முழுவதையும் களம் இறக்குவதைத் தவிர்த்தாலே வன்முறை குறைந்துவிடும்.

அரசியல் பாகுபாடுகள் ஒரு புறம் இருக்க, இந்த வன்முறைகள் வாக்காளர் மத்தியில் பீதியை ஏற்படுத்தக் கூடியவை என்பதால் இதனைத் தொடக்கத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு காவல்துறைக்கு உள்ளது. ஆனால், மதுரை போலீஸ் கமிஷனர் சிதம்பரசாமி பாரபட்சமின்றி செயல்படவில்லை என்றும், தனது பதவிக்கு ஏற்றபடி அவர் நடந்துகொள்ளவில்லை என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

மதுரை போலீஸ் கமிஷனர் பதவியிலிருந்து சிதம்பரசாமி பணியிடம் மாற்றப்பட்டபோதிலும் இது காவல்துறை முழுவதற்குமே இழுக்கு. அதேநேரம் காவல்துறை என்பது ஆளும்கட்சிக்கே ஆதரவாகச் செயல்படும்- அல்லது செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டுக்கு காரணம் அரசியல் தலைவர்கள்தான்.

தங்களுக்கு வேண்டிய ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை பொறுப்புகளில் நியமிப்பதும், வேண்டிய அதிகாரிகளை மட்டுமே ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவிகளுக்காக மாநில அரசிலிருந்து பரிந்துரைப்பதும் அரசியல் தலைவர்கள் ஏற்படுத்திய வழக்கம். அதனால் காவல்துறையிலும் அரசு நிர்வாகத்திலும் கடமையைவிட “விசுவாசம்’ முக்கியமானதாக மாறிவிட்டது.

தனது விசுவாசக் கட்சி ஆட்சியில் இருந்தால் அதற்குப் பாதகமானவற்றை இருட்டடிப்பு செய்வதிலும் எதிர்க்கட்சியாக மாறும்போது ஆளும்கட்சியின் தவறுகளை உள்-ஒற்றுவேலை பார்த்து, பத்திரிகைகளுக்கு தீனிபோடுவதுமாக இவர்களின் விசுவாசக் கடமைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன.

யார் ஆட்சி செய்தாலும் தங்கள் கடமையை விட்டுக்கொடுக்காமல் பணியாற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு எந்நாளும் மதிப்பு உண்டு. குறிப்பாக மக்களிடத்தில்! அத்தகைய அதிகாரிகள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதன் அடையாளம்தான் மதுரைச் சம்பவம்.

“மாதவர் நோன்பும் மாதரார் கற்பும் காவலன் காவல் அன்றெனில் அன்றாம்” – என்கிறது தமிழ் இலக்கியம். அரசனின் காவல் இல்லையானால் முற்றும் துறந்த மாமுனிவர்கள் தவம் இயற்றுவதும் பெண்கள் கற்புடன் இருப்பதும் சாத்தியம் இல்லையென்றாகிவிடும் என்பதே இதன் பொருள்.

Pallavaram – Queen Marys College student competes in Inkbottle symbol

Headline News – Maalai Malar

பல்லாவரம் நகரசபை: ராணிமேரி கல்லூரி மாணவி போட்டி

சென்னை, அக். 11-
பல்லாவரம் நகரசபையில் 12-வது வார்டில் கல்லூரி மாணவி ரேவதி சுயேட்சையாக போட்டியிடுகிறார். இவர் ராணி மேரி கல்லூரியில் தமிழ் இலக்கியம் 2-வது ஆண்டு படிக்கிறார்.

கடந்த ஆண்டு கல்லூரியின் செயலாளராக இருந்த ரேவதி தற்போது நகரசபை வார்டில் போட்டியிடுகிறார். 12-வது வார்டில் மொத்தம் 6,390 ஓட்டுகள் உள்ளன. அவருடன் சேர்த்து மொத்தம் 13 பேர் அந்த வார்டில் களத்தில் உள்ளனர்.

ரேவதிக்கு ஆதரவாக கல்லூரி மாணவிகள் ஓட்டு கேட்டு வருகிறார்கள். 12-வது வார்டில் உள்ள 8 குடியிருப்பு நல சங்கங்கள் அவருக்கு ஓட்டு அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் செலவுக்காக தன்னால் ரூ. 15 ஆயிரத்திற்கு மேல் செலவு செய்ய முடியாது என்று மைபாட்டில் சின்னத்தில் போட்டியிடும் ரேவதி கூறியுள்ளார். அவர் வீடு வீடாக சென்று நோட்டீசுகளை கொடுத்து வாக்கு சேகரிக்கிறார். கடந்த 2 தினங்களில் மட்டும் தான் அவரது ஆதரவான போஸ்டர்களை ஓட்டி இருந்தனர். ஆட்டோவிலும் சென்று பிரசாரம் செய்தனர். தனக்கு வாக்கு அளித்தால் தூய்மையான குடிநீர், சாலை வசதிகள் செய்து தருவதாக 22 வயதான ரேவதி கூறியுள்ளார்.

GK Vaasan distributes Dosa batter & Shawls to the Underprivileged

Headline News – Maalai Malar

தேர்தல் பிரசாரத்தில் ருசிகரம்: குடிசை பெண்களுக்கு தோசை மாவு வழங்கிய ஜி.கே.வாசன்

சென்னை, மாநகராட்சி பகுதியில் மத்திய மந்திரி ஜி.கே.வாசன் சுற்றுப்பயணம் செய்து காங்கிரஸ் மற்றும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

107-வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் ருக்மணிக்கு ஆதரவு திரட்டினார். புஷ்பா நகர் குடிசை பகுதியில் நடந்து சென்று ஓட்டு கேட்ட வாசனுக்கு வயதான மூதாட்டி உள்பட ஏழை பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர்.

மிகவும் ஏழை பெண்கள் செலவு செய்து ஆரத்தி எடுத்ததை பார்த்து நெகிழ்ந்த வாசன் அவர்களுக்கு சால்வை அணிவித்தார். வியாபாரி ஒருவர் தோசை மாவு பாக்கெட்டுகளை விற்ப னைக்கு வைத்து இருந்தார். ஒரு கிலோ எடையுள்ள அந்த மாவு பாக்கெட் என்ன விலை என்று விசாரித்தார். ரூ.12 என்றார் அவர்.

உடனே அவரிடம் இருந்த 20 பாக்கெட் மாவுக்கும் தனது பாக்கெட்டில் இருந்து ரூ.240 எடுத்து கொடுத்தார். அந்த மாவு பாக்கெட்டுகளை அங்கு நின்று கொண்டிருந்த ஏழை பெண்களுக்கு கொடுக்கும் படி கூறினார். பின்னர் தொடர்ந்து பிரசாரம் செய்தார்.

Price Comparison for Commodities – ADMK vs DMK Govt

Dinamani.com – TamilNadu Page

பொருள்கள் விலை: ஜெ. ஒப்பீடு

சேலத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, அதிமுக ஆட்சியில் பல்வேறு அத்தியாவசியப் பொருள்களின் விலை குறைவாக இருந்தது; தற்போது அவற்றின் விலை அதிகரித்து விட்டது என்று புள்ளி விவரங்களுடன் விளக்கினார்.

அவர் குறிப்பிட்ட விலை விவரம்: (அடைப்புக்குறிக்குள் அதிமுக ஆட்சியில் நிலவிய விலை)

மஞ்சள் ஒரு கிலோ ரூ.50 (ரூ.28)

புளி கிலோ ரூ.50 (ரூ.25)

வெள்ளைப்பூண்டு ரூ.75 (ரூ.50)

துவரம்பருப்பு ரூ.52 (ரூ.28)

உளுத்தம்பருப்பு ரூ.65 (ரூ.25)

கடலைப்பருப்பு ரூ.45 (ரூ.18)

பாசிப்பருப்பு ரூ.55 (ரூ.26)

மைதா ரூ.21 (ரூ.12)

கோதுமை மாவு ரூ.20 (ரூ.12)

ரவை ரூ.22 (ரூ.14)

மொச்சைப்பயறு ரூ.60 (ரூ.25)

காராமணி ரூ.50 (ரூ.25)

தனியா ரூ.45 (ரூ.28)

மிளகாய்வத்தல் ரூ.45 (ரூ.30)

சுண்டல்கடலை ரூ.50 (ரூ.30)

சீரகம் ரூ.125 (ரூ.90)

கடுகு ரூ.30 (ரூ.15)

வெல்லம் ரூ.12 (ரூ.6)

சர்க்கரை ரூ.18 (ரூ.15)

மிளகாய்த்தூள் ரூ.105 (ரூ.55)

பாமாயில் ரூ.50 (ரூ.30)

நல்லெண்ணெய் ரூ.50 (ரூ.38)

தேங்காய் எண்ணெய் ரூ.75 (ரூ.50)

ரீபைண்டு ஆயில் ரூ.55 (ரூ.28)

இதுதான் திமுக ஆட்சியின் லட்சணம் என்றார் ஜெயலலிதா.

ரசிக்கும் சீமானே

ஓ…
ரசிக்கும் சீமானே வா

ஜொலிக்கும் உடையணிந்து
களிக்கும் நடனம் புரிவோம்

அதை நினைக்கும் பொழுது மனம்
இனிக்கும் விதத்தில் சுகம்
அளிக்கும் கலைகள் அறிவோம்.

கற்சிலையின் சித்திரமும் கண்டு
அதன் கட்டழகிலே மயக்கம் கொண்டு
கற்சிலையின் கட்டழகிலே மயக்கம் கொண்டு

வீண் கற்பனையெல்லாம்
மனதில் அற்புதமே என்று
மகிழ்ந்து விற்பனை செய்யாதே
மதியே

தினம் நினைக்கும் பொழுது மனம்
இனிக்கும் விதத்தில் சுகம்
அளிக்கும் கலைகள் அறிவோம்.

ஓ…
ரசிக்கும் சீமானே வா

வானுலகம் போற்றுவதை நாடி
இன்ப வாழ்க்கையை இழந்தவர்கள் கோடி
பெண்கள் இன்ப வாழ்க்கையை இழந்தவர்கள் கோடி

வெறும் ஆணவத்தினாலே
பெரும் ஞானியைப் போலே நினைந்து
வீணிலே அலைய வேண்டாம்!

தினம் நினைக்கும் பொழுது மனம்
இனிக்கும் விதத்தில் சுகம்
அளிக்கும் கலைகள் அறிவோம்.

ஓ…
ரசிக்கும் சீமானே வா


அன்றும் இன்றும்

  • அன்று: ‘பராசக்தி’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல். குமாரி கமலா நடனம் ஆடுவார். கனவான்கள் திண்டு சகிதம் அமர்ந்திருக்க சிவாஜி வந்து சேருவார். பாட்டின் முடிவில் சிவாஜிக்கு மயக்க மருந்து தரப்படும்.

    இன்று: நேரு உள்நாட்டு விளையாட்டரங்கத்தில் சினேகா ஆடுகிறார். கலைஞர் இளமையில் எழுதிய பாடலுக்கு புது முலாம் பூசப்படுகிறது. திரையுலகின் மணிரத்னம், அஜீத் போன்ற விரல்விட்டு எண்ணக்கூடிய சிலர் தவிர குறிப்பிடத்தக்க அனைவரும் ஆஜர். பொதுஜனம் லத்திசார்ஜ் வாங்கினாலும், ஆஜர் ஆகிவிடுகிறார்.

  • அன்று: ‘கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா?’ என்று வசனம் எழுதினார்.

    இன்று: ‘கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா?’ என்று எண்ண வைக்கிறார்.

  • அன்று: கிட்டத்தட்ட நிரந்தர முதல்வராக உள்ள ம.கோ.ரா.விற்கு பாராட்டு விழா எடுக்க பிரபலங்கள் அணுகுகின்றனர். ‘நாங்கள் தற்போது ஆரம்பித்திருக்கும் “சத்துணவு திட்டத்திற்கு”, விழாவிற்கு ஆகும் செலவை கொடுத்து விடுங்க… எனக்கு விழா வேண்டாம்’ என்று நாசூக்காக மறுத்து, பொதுநலத்திற்கும் நிதி சேர்க்கிறார் அன்றைய முதல்வர். (படித்த இதழ்: இதயம் பேசுகிறது)

    இன்று: பக்கத்து வீட்டில் சிகுன் குனியா, அண்டை மாநிலத்தில் டெங்கு என்று நோய்கள் பிரச்சாரம் இல்லாமல் பெருகினாலும், பிரச்சாரத்திற்காக பெருவிழா எடுத்து இளைஞர்களைக் கவரும் ரெகார்ட் டான்ஸ் விழா.

    திரையுலகக் கலைஞர்கள் எடுத்த விழா குறித்த தமிழ்ப்பதிவுகள்:

    1. நுனிப்புல்: நல்லா நடிக்கிறாங்கப்பா!

    2. பினாத்தல்கள்: பிரம்மாண்ட நட்சத்திரக்கலைவிழா..

    3. அலசல்: யார் இதை சொன்னாங்கன்னு தெரியுமா?

    4. கில்லி – Gilli » Tamil Cinema felicitates Chief Minister Karunanidhi


    | | | |

  • Flashback – 5 Years Back & Still unanswered Questions

    Dinamani.com – Editorial Page

    என்று மடியும் எங்கள் குடிமையின் சோகம்?

    அ.கி. வேங்கட சுப்ரமணியன்

    மறுபடியும் சென்னை மாநகராட்சிக்குத் தேர்தல் நடக்கப் போகிறது. 2001 சென்னை மாநகராட்சித் தேர்தலில் சராசரி வாக்குப் பதிவு சுமார் 35 சதவீதம்தான். சில கோட்டங்களில் 20 – 25 சதவீதம்தான். இந்தக் கோட்டங்களில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு கோட்டத்தில் உள்ள மொத்த வாக்குகளில் 10 சதவீத வாக்குகள் கூட கிடைக்கவில்லை. மாநகராட்சி முழுவதிலும் சேர்ந்து முக்கிய இரு கட்சிகளுக்கும் மொத்த வாக்குகளில் சுமார் 10 சதவிகிதமே கிடைத்தது.

    வாக்குப் பதிவின் போது சில கோட்டங்களில் வன்முறையால் வாக்குச் சாவடிகள் கைப்பற்றப்பட்டன. குறைவான வாக்குப்பதிவுக்கு இந்த வன்முறையும் ஒரு காரணம். பிற்பகலில் வாக்களிக்கலாம் என்று இருந்த வாக்காளர்கள் முற்பகலில் நடந்த வன்முறையைத் தொலைக்காட்சியில் பார்த்த பின்பு வாக்களிக்க வேண்டாம் என்று வீட்டிலேயே இருந்து விட்டார்கள்.

  • “சென்னையில் சில வாக்குச் சாவடிகள் சூறை; அ.தி.மு.க., – தி.மு.க. மோதல்: வாக்குச் சீட்டுக்கள் கிழிப்பு”
  • “தி.மு.க, அ.தி.மு.க பரஸ்பர புகார்”
  • “திருவான்மியூரில் இரு வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு பாதிப்பு; கராத்தே தியாகராஜன், சரத்குமார் வாக்குவாதம்; டி .வி., காமிரா சேதம்; மூன்று வேட்பாளர்கள் தர்ணா”

    மேற்கண்டவை எல்லாம் 17-10-2001 தினமணி நாளிதழில் வெளியான செய்தித் தலைப்புகள்.

    வாக்களிக்கும்போது மட்டுமல்ல, 22.10.2001 அன்று வாக்குகள் எண்ணப்படுகின்ற மையங்களிலும் வன்முறை நடந்தது. 23.10.2001 தினமணியில் இதுபற்றி வெளியான செய்தித் தலைப்புகள்:

  • “சென்னையில் வாக்கு எண்ணும் 3 மையங்களில் அ.தி.மு.க வன்முறை – ஸ்டாலின் புகார்”
  • “சென்னையில் 10க்கும் மேற்பட்ட வார்டுகளில் மறு தேர்தல் நடத்த வேண்டும் – கருணாநிதி கோரிக்கை”

    இந்தச் செய்தியில் “ஜனநாயகப் படுகொலை செய்யப்படுவதாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் தற்போது RAPE செய்யப்பட்டிருக்கிறது என்றார் கருணாநிதி” என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

    உள்ளாட்சி அமைப்புகளில் கட்சி ஆட்சி தேவையில்லை. அந்தந்தப் பகுதி மக்களே தங்களுக்குள் ஒரு நல்ல நபரை வேட்பாளர்களாக நிறுத்தி வெற்றியடையச் செய்ய வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் 152வது கிழக்கு அடையாறு கோட்டத்தில் ஒரு வேட்பாளர் “கிழக்கு அடையாறு குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின்” சார்பில் நிறுத்தப்பட்டார். இந்தத் தொகுதி பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி. வேட்பாளருக்காக எளிய முறையில் பிரசாரம் நடந்தது; அவருக்கும் வெற்றி பெற வாய்ப்பு இருந்தது. ஆனால் குடிமக்களின் இந்த முன் முயற்சி (initiative) இறுதியில் ஒரு சோக நாடகமாகவே முடிந்தது.

    இந்தக் கோட்டத்தின் வாக்கு எண்ணிக்கை இரவு 9.45க்குத் தொடங்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் தங்களுக்குப் போதிய பாதுகாப்பு இல்லை என்று கூறி வாக்கு எண்ண மறுத்து தர்ணா செய்தார்கள். அவர்களைச் சமாதானப்படுத்திய பிறகு இரவு சுமார் 1 மணிக்குத்தான் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது.

    பிறகு நடந்தது இந்தக் கோட்டத்தில் உள்ள 16 வாக்காளர்கள் சேர்ந்து அளித்த தேர்தல் மேல்முறையீட்டு மனுவில் விவரமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. சுருக்கமாகச் சொல்வதென்றால், முறையாக வாக்குச்சீட்டுகள் எண்ணப்படுவது நடைபெற இயலாத சூழ்நிலை வன்முறையால் உருவாக்கப்பட்டது. கூட்டமைப்பின் வேட்பாளர் வாக்கு எண்ணிக்கை மையத் தலைமை அலுவலரிடமும், காவல் துறையினரிடம் எவ்வளவோ முறையிட்டும் ஒரு பயனும் கிடைக்கவில்லை. வாக்கு எண்ணிக்கையை விடியோ படம் எடுக்க வேண்டும் என்று நீதிமன்ற ஆணை இருந்தும் அது நடைபெறவில்லை.

    நான் அறிந்த வரை இந்தியாவிலேயே வாக்காளர்கள் தேர்தல் மனு தாக்கல் செய்தது இதுவே முதல் தடவை.

    இதைப்போலவே இதர மையங்களிலும், வாக்குச் சாவடிகளிலும் நடந்த அராஜகச் செயலால் பாதிக்கப்பட்ட வேட்பாளர்களும், தேர்தல் மனு தாக்கல் செய்தனர். சுமார் 60 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

    ஏறக்குறைய ஐந்தாண்டுகள் கழிந்த நிலையில், அடுத்த நகராட்சித் தேர்தலும் அறிவிக்கப்பட்ட பிறகும், வாக்காளரது தேர்தல் மனு இன்னும் நிலுவையில் உள்ளது. அதில் எதிர் மனுதாரர்களாக குறிப்பிடப்பட்டிருந்த மாநிலத் தேர்தல் ஆணையம், சென்னை மாநகராட்சியைச் சேர்ந்த தேர்தல் அலுவலர், உதவித் தேர்தல் அலுவலர் ஆகியோர் தங்களது எதிர்மனுவை (Counter) இதுவரை தாக்கல் செய்யவில்லை. தேர்தலில் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டவர் மட்டும் எதிர்மனு தாக்கல் செய்ததாகக் கூறி வாய்தா வாங்கிக் கொண்டே இருக்கிறார்.

    முக்கிய எதிர்க்கட்சியான தி.மு.க வேட்பாளர்கள் தாக்கல் செய்த தேர்தல் மனுக்கள், மனுதாரர் வருகை தராததால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன (Dismissed). இதை எதிர்த்து அவர்கள் மேல்முறையீடு செய்ததாகத் தெரியவில்லை.

    இந்தச் சூழலில் பல கேள்விகள் எழுகின்றன.

    * தேர்தல் முறையீடுகளை விசாரித்து தீர்ப்பளிப்பதற்கு காலவரையறை கிடையாதா?

    * வாக்காளர்கள் கொடுத்த தேர்தல் மனுவின் மீது மாநிலத்தேர்தல் ஆணையமும் மாநகராட்சியும் எதிர்மனு தாக்கல் செய்யாததற்கு மனுவில் கூறிய சம்பவங்கள் நடைபெறவில்லை என்று அவர்களால் வாதாட இயலாத நிலைதான் காரணமா?

    * வன்முறை நடந்த பொழுது அதைக் கடுமையாகச் சாடிய எதிர்க்கட்சியினர் நீதிமன்றத்தில் தொடர்ந்து ஆஜராகவில்லை என்ற காரணத்தினால் அவர்களது தேர்தல் மனு தள்ளுபடி செய்யப்பட்டபொழுது ஏன் மேல் முறையீடு செய்யவில்லை?

    * சென்ற முறை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டிருந்தால் வாக்குப்பதிவு எண்ணிக்கை மையத்தில் வாக்குச்சீட்டுகள் முறைகேடாக கையாளப்பட்டதைத் தவிர்த்திருக்க முடியும். இதை ஒரு பாடமாகக் கருதி இந்தத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இயந்திரங்கள் ஏன் பயன்படுத்தப்படவில்லை?

    * வாக்கு எண்ணிக்கை மையத்தில் அராஜகம் நடத்தியவர்கள் சொன்னது, “அன்று அவர்கள் இதையேதான் செய்தார்கள். இப்பொழுது நாங்கள் அதைச் செய்கிறோம்”. இப்பொழுது இவர்களும், “அன்று அவர்கள் இதையேதான் செய்தார்கள். இப்பொழுது எங்கள் முறை” என்று சொல்லப்போகிறார்களா?

    * அரசியல் என்பது கட்சிகளுக்கிடையே உள்ள ஒரு போர் விளையாட்டு (War Game). அதில் குடிமக்களின் பங்கு தேர்தலில் ஓட்டுப் போடுவது அல்லது போடாமல் இருப்பது என்பது மட்டும்தானா?

    * முக்கியக் கட்சிகள் முறை போட்டு முறைகேடு செய்தால் யாரிடம் முறையிடுவது?

    * நீதிமன்றத்திலே முறையிட்டால் நீண்ட காலம் ஆகிறது. நீண்டகாலத்திற்குப் பிறகு தீர்ப்பு வந்தாலும் அராஜகச் செயலைச் செய்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகச் சான்று இல்லை. ஜனநாயகப் படுகொலை அல்லது rape செய்பவர்களுக்கு எந்தத் தண்டனையும் கிடையாதா?

    * கட்சிகளுக்குப் பெருத்த பண பலம், (Money Power), படை பலம், (Muscle Power), பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி பலம் (Media Power) இருக்கிறது. இதற்கு மேலும் கூட்டணி பலம் இருக்கிறது. ஆளுங்கட்சியாக இருந்தால் அதிகார பலமும் இருக்கிறது. இவ்வளவு பலம் இருந்தும் நேர்வழியில் தேர்தலை நேர்கொள்ளாது வன்முறையிலும், குறுக்கு வழியிலும் அவர்கள் வெற்றி பெறத் துடிப்பது ஏன்? அந்த அளவிற்குப் பதவி மோகமா? அதிகார தாகமா?

    * அப்படியானால்~

    “என்று தணியும் இந்த அதிகார தாகம்?
    என்று மடியும் எங்கள் குடிமையின் சோகம்?”

    இந்தக் கேள்விகளுக்கு விடைகளை சம்பந்தப்பட்டவர்களிடமும் தங்களுக்குள்ளேயும் மக்கள் கேட்க வேண்டும்.