நாங்கள் புறக்கணிக்கப்படுகிறோம் :: தலையங்கம்
மேடை மணி – ஜனவரி 2007
இன்று சென்னையைச் சுற்றி பல்லாயிரக்கோடி மூலதனத்தில் பல தொழிற்பூங்காக்கள் வருகின்றன. பல லட்சம் மக்களுக்கு வேலைவாய்ப்பு வசதி இருக்கின்றது. இது சந்தோஷமான செய்திதான். இன்னும் கூட ஏராளமான தொழிற்சாலைகள் வரவேண்டுமென விரும்புகின்றோம். இது போன்ற வசதி வாய்ப்புகளெல்லாம் மாநிலத் தலைநகரிலும் தலைநகரைச் சுற்றியுள்ள பகுதிகளிலும்தான் ஏற்படும். காரணம், அங்கு தான் அரசு சம்பந்தப்பட்ட அனைத்துத் தலைமை அலுவலகங்களும் உள்ளன.
சாலை வசதிகள், விமானப் போக்குவரத்து வசதிகள் என அனைத்து வசதிகளும் உள்ளன. தேவைப்பட்டால், அமைச்சர்கள் உட்பட அனைத்துத் தலைமை அலுவலர்களையும் பார்த்திடும் வாய்ப்பு இங்கு உண்டு. இந்த வாய்ப்பு வசதிகள் எல்லாம் தென்பகுதி மக்களுக்கு இல்லை! ஒன்றிரண்டு ஆலைகளையும், ஓரிரு கல்லூரிகளையும் அங்கே ஏற்படுத்துவதால் மட்டும் இந்த ஏற்றத்தாழ்வை சரி செய்திட இயலாது.
தென் தமிழ்நாடு, தனி மாநிலமானால் மட்டுமே, அம்மக்களுக்கு சமவாய்ப்பும் வசதியும் ஏற்படும்! தாங்கள் புறக்கணிக்கப்படுகிறோம் – என அம்மக்கள் கிளர்ச்சி செய்யும் காலம் வரை காத்திருக்கவேண்டிய அவசியமில்லை. விதர்பா, தெலுங்கானா – போன்ற தனி மாநில கோரிக்கைகளுக்கு எது காரணமோ, அதுதான் நமது தனிமாநில கோரிக்கைக்கும் காரணம்.
எனவே மக்களின் நலன் கருதி, பிற மாநிலங்களில் தனி மாநிலங்கள் உருவாக்கப்படும்போது தமிழ்நாட்டிலும் மதுரையைத் தலைநகராகக் கொண்டு தென்தமிழ்நாடு என்ற தனி மாநிலத்தை உருவாக்கிட வேண்டுகிறோம்! தென்தமிழ்நாட்டில் உள்ள மக்கள் சம வளத்துடன் வாழ அது ஒன்றே வழி!










