ரஜினி பத்து


1. ‘சந்திரமுகி’ மோசமாக இருந்தாலும், படுமோசமாக இருந்தாலும், ஞானி முதற்கொண்டு டீக்கடை வரை நொள்ளை எழுதலாம். சொன்னவை, சொல்லாதவை, காட்டியவை, காட்டாதவை, மறந்தவை, மறக்காதவை, வெளிப்படுத்தியவை, வெளிப்படுத்தாதவை என்று படுத்தி படத்தையும் படுக்க வைக்கலாம்.

2. ரஜினியை சிலாகித்து வளர்ந்தவர்கள் நடு வயதை எட்டிப் பிடித்து வேலைக்குப் பின் ஓடிக் கொண்டிருப்பதால், தியேட்டர்களில் படச்சுருள் திருடா விட்டாலும், கோடை கால காற்று மட்டுமே அலைமோதலாம். என்னைப் போன்றவர்கள் ‘நல்லவனுக்கு நல்லவன்’ போன்ற அக்மார்க் சூப்பர் ஸ்டார் படங்களையும், தமிழகம் வாழ் மக்கள் ‘சந்திரமுகி’யையும் விசிடியில் மீண்டும் மீண்டும் பார்த்து மகிழலாம்.

3. ரசிகர் மன்றத்தினர்… தவறு…. நற்பணி மன்றத்தினர், ரஜினிக்கு பதிலாக ‘மாப்பிள்ளை’யின் கட்-அவுட்டிற்கு பாலபிஷேகம் நடக்கலாம்.

4. ரஜினியிடம் என்ன எதிர்பார்க்கிறோம் என்றே அறியாத அவர்களின் ரசிகர்கள் தெரியாத்தனமாக சந்திரமுகியை ஹிட்டாக்கி விடலாம். ‘பாபா’வாக ஆக்கினாலும் அமிதாப் போல் வயதுக்கு ஏற்ற வேஷங்களையோ, சூர்யா/மாதவன்/விஜய் போன்ற முண்ணனி நடிகர்களுடனோ, ‘தம்பிக்கு எந்த ஊரு’ போன்ற சாதாரண நடப்புகளை சித்தரிப்பதையோ தரிசனம் செய்யும் வாய்ப்பு கிடைக்காமல் போகலாம்.

5. கமலை விட அதிகமாக இயக்குநரின் நல்ல பெயரை (பி வாசுவுக்கு அப்படி எல்லாம் ஒன்று இருக்கிறதா என்ன?) பலி கொடுத்து, கெடுப்பவர் என்னும் அடைமொழி கிடைக்கலாம். பாலா, ஷங்கர் போன்றோரையாவது இறைவர் காத்தருள வேண்டலாம்.

6. வலை நிறுவனங்களின் ஐ.பி.ஓ.வில் அதிரடியாக விலை அதிகரிக்கப்படுவது நான்காண்டுகளுக்குப் முன் சுரத்திழந்து போனது. ரஜினி படங்களுக்கு பதினைந்து டாலர் நுழைவுச்சீட்டு வைப்பதும் ப்ளாக்கில் ஐநூறு ரூபாய் கேட்பதும் இயலாததாகலாம்.

7. ஹியுலெட் பக்கர்ட் (HP) நிறுவனத்தில் சமீபத்தில் காவு கொடுக்கப்பட்ட தலைவர் கார்லி (Carly Fiorina) போல படம் தோல்வியடைந்தாலும் பல கோடி ரூபாய் பணம் வரவாகலாம். எல்லா குறைகளுக்கும் ·பியோரினாவை மட்டுமே குற்றங்காட்டியது போல் சந்திரமுகியின் வீழ்ச்சிக்கு ரஜினி மட்டுமே காரணமாக்கப் படலாம்.

8. ரஜினி சட்டையை அவிழ்த்து திரளாத புஜங்களை முறுக்கலாம். அப்பாஸ் மாதிரி சந்திரமுகியில் பிரபு ‘வாட் எ பாடீ’ என்று ஆங்கிலம் பேசுவதை அரசியல்வாதர்கள் எதிர்க்கலாம்.

9. திருட்டு தட்டுக்கள், அதீத எதிர்பார்ப்புகள், விகடன் விமர்சனங்கள், கதாபாத்திர பொருத்தங்கள், இது போன்ற பத்து அஸ்துக்கள் எல்லாவற்றையும் மீறி அறியாமையாக ‘படையப்பா’வாக்கி விடலாம். ஷாலினி – அஜீத்தின் மகளை ஹீரோயினாக அடுத்த படத்துக்கு புக் செய்யலாம்.

10. அயிங்காரன் வெளியீட்டையோ வெள்ளித் திரையிலோ பார்த்தவர்கள் மட்டுமே பாய்ந்து மிதிக்கலாம். காமிரா ப்ரிண்ட் களித்தவர்கள் முகமூடி தாங்கி விமர்சிக்கலாம்.

– பாஸ்டன் பாலாஜி
tamiloviam.com

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.