பிராமண குடும்ப சாஸ்த்ரோப்தங்களைக் கிண்டல் செய்தும் ‘நம்பினால் நடந்துவிடுமோ?’ என சந்தேகிக்கும் கரு;
மலையாளத் திருமணமும், படகு வீட்டில் அந்தி சாயும் வேளையில் பொன்னிற வானத்தை மல்லாந்து பார்த்தபடி நதியோடு மிதக்கும் ஏகாந்தமான காட்சியமைப்பு;
முப்பதாண்டுகள் கழித்து அசப்பில் ‘மௌன ராகம்’ ரேவதியும் கார்த்திக்கும் எட்டிப்பார்க்கும் வசனம்;
கிறித்துவத்தில் கருக்கலைப்பை எவ்வாறு பார்ப்பார்கள் என்று வாழைப்பழத்தில் ஊசி ஏற்றும் உணர்த்தல்;
’அலைகள் ஓய்வதில்லை’ ஆர்ப்பாட்டத்திற்கு எல்லாம் அப்புறம் எவ்வளவு தூரம் வந்திருக்கிறோம் என கடந்து போகும் மதம் பார்க்காத காதல்;
வெறுமனே காதல் கதையாக இல்லாமல், அமெரிக்கா அனுப்பும் கணினி நிறுவனம்; அந்தக் குழுமத்தின் தலைவர்; கூட வேலை பார்க்கும் மேலாளர் ஆக அனுபமா பரமேஸ்வரன் (என்ன லட்சணம்!)
தெலுங்குப் பெயர்களின் நீளம்; விளம்பரத்திற்கு நிதி ஒதுக்காமல் தன் சிப்பந்திகளையே நடிக்க விடும் அலுவல் நுட்பம்; ஹோமங்கள், யக்ஞங்கள், யாகங்கள், பரிகாரங்கள்; தர்ப்பையை நாக்கில் பொசுக்கும் கண்டுபிடிப்புகள்
படத்தில் ஏதோ இருக்கிறது. அந்த இயக்குநர் விவேக் ஆத்ரேயாவின் போன படமும் இப்படித்தான். குழப்படியாக குப்பாச்சுவாக இடியாப்ப லிங்க்வீனி பாஸ்டா சிக்கலாக, புதுமையாக சுவாரசியமாக இருக்கும்.
ஆன்டி சுந்தரினிகி – வெள்ளித்திரையில் ஏன் ஹிட் ஆகவில்லை?
சொல்வனம் தளத்தின் சிறப்பு இந்த மாதிரி விநோதமான கதைகளைத் தமிழில் அறிமுகம் செய்வது; வெறுமனே ஆங்கிலத்தில் இருக்கிறது என்று மட்டும் சுட்டாமல், வாசிக்கக் கூடிய தமிழில் உருவாக்கம் செய்வது!
தந்திரக் கை – கசந்த இனிப்பைச் சொல்லும் கதை. குறுவிசனம்.
ஒன்றை இழந்தால் மட்டுமே இன்னொன்றைப் பெற முடியுமா? இதை மேற்குலகில் Faustian offer என்கிறார்கள்.
இளம் பெண் சமீபத்தில் தனது கணவனையும் மகளையும் திடீரென்று சோகமான விபத்தில் இழக்கிறார். துக்கமும், வாழ்க்கையும் இறப்பும் அவை குறித்த நினைவுகளுமாய் கதை எழுகிறது. என்ன பேரம் போட்டார்கள்? எவற்றை விலை பேசினார்கள்? நினைத்தது நின்றதா?
“பால்ய கால நினைவுகளில் இருந்து இந்தக் கதை உருவானது. அப்பொழுதுதான், அந்தத் தாறுமாறான விளம்பரத்தை அதைவிட தாறுமாறான இடத்தில் தற்செயலாக பார்த்தேன். மூளையில் ஏற்பட்ட வீக்கத்திற்காக என் ஒன்றுவிட்ட அக்கா, அறுவை சிகிச்சைக்குள்ளாக இருந்த சமயம் அது. அந்த சமயத்தில் கடுமையான, நிலையான கலக்கத்தில் இருந்தேன். அப்பொழுது பயத்தால் முடங்கி, செய்வதறியாது அவளின் கணவனை, தினசரி இரண்டு தடவை அழைத்து அவளின் நிலையைப் பற்றி கேட்பேன். அறுவை சிகிச்சை முடிந்து, குணமாகி அவள் சகஜநிலையான பிறகு, இதை எழுதத் துவங்கினேன். ”
solvanam வாருங்கள். வாசியுங்கள். உங்கள் கருத்தைப் பகிருங்கள்.
மேற்குலகின் இலக்கிய வட்டத்தில் சிறுகதைகள் ஆழமான வாசிப்புக்கு போதுமானவை அல்ல என்பது பெரும்பான்மை வாதம். அந்தக் கருத்திற்கு சவால் விட்டு நிராகரிக்கும் ஆக்கங்கள் பரிசு பெறுகின்றன.
அந்த மாதிரியான படைப்பு – டீஷா ஃபில்யா எழுதிய “ஒரு இயற்பியலாளரைக் காதலித்துக் கலப்பதெப்படி? ”
இது எச்.பி.ஓ. தொலைக்காட்சியில் டிவி தொடராக வரப்போகிறது. பென் + ஃபாக்னர் விருது வாங்கியிருக்கிறது. லாஸ் ஏஞ்சலீஸ் ரிவ்யூ ஆஃப் புக்ஸ் புகழைப் பெற்றிருக்கிறது.
இந்த மாதிரி பரிசுகள் பெறுவதற்கு முன், முதலில் ஒரு வெளியீட்டாளரைக் கண்டுபிடிப்பதில் சிரமங்களை எதிர் கொள்கின்றன. நிராகரிப்புக்குப் பிறகு நிராகரிப்பை எதிர்கொண்ட டீஷா, “ஒவ்வொரு புத்தக வெளியீட்டாளரும் அது “நல்ல பொருத்தம்” அல்ல என்று வலியுறுத்துகின்றனர். ஏன் இவ்வளவு பிரசுரகர்த்தாக்கள் என் தொகுப்பை திரும்ப அனுப்பினார்கள் என்று யோசிக்காமல் இருப்பது கடினம் என நினைத்தேன். அவர்கள் எல்லோரும் கறுப்பு (குணம்) என்னும் அடையாளத்தை அழித்து கருப்பினத்தவர்களின் கதைகளை எழுதச் சொன்னார்கள். அந்த மாதிரி கட்டுப்பாடுகள் இல்லாத பதிப்பகத்தார் கடைசியில்தான் கிடைத்தார்.” என்கிறார்.
கதைசொல்லி நாற்பதுகளில் இருக்கும் ஆப்பிரிக்க-அமெரிக்க பெண்மணி. பள்ளியில் ஓவியம் கற்றுக் கொடுப்பவர். அவளை ஒரு பொதுக்கூட்டத்தில் சந்திக்கிறோம். கலையையும் அறிவியலையும் ஒருங்கிணைத்து எவ்வாறு மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கலாம் என்பதற்காக அந்தக் கல்வி மாநாடு நடக்கிறது. அவளுக்கு கருப்பின ஆண்கள் எவ்வளவு பேர் வந்திருக்கிறார்கள் என்பதன் மீது ஒரு கண். அந்த ஆடவனை அவளின் அம்மா ஒப்புக் கொள்ள வேண்டும்.
அவள் திறமையான இயற்பியலாளரை சந்திக்கிறாள். அவளுக்கு அவனைப் பிடித்திருக்கிறது. ஆனால் அவசரப்படாமல் எச்சரிக்கையாக இருக்கிறார். முதல் சந்திப்பில் மணிக்கூறாக பேசுகிறார்கள். அவளின் வேலையைப் பற்றிப் பகிர்கிறாள். அவனும் தன் வேலையைப் பற்றிச் சொல்கிறான். இருவரும் குறுந்தகவல்கள் அனுப்பிக் கொள்கிறார்கள். இருப்பினும் முதலில் அவனுக்கு காதல் ஆர்வம் இல்லை என்பது போல் தோன்றுகிறது.
உறவின் வளர்ச்சியைப் பார்ப்பதுதான் கதையின் உற்சாகம்.
இந்த அற்புதமான கதையை நீங்கள் படிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
கதையை திற்ம்பட மொழியாக்கம் செய்த ஷ்யாமா அவர்களுக்கு என் வாழ்த்துகள்!
கோதண்டராம நதி என்பது, கழுகுமலைப் பிரதேசத்தில் உற்பத்தியாகும் சிறு வாய்க்கால். இதன் நீர் சிறிது உப்பாயிருப்பதால் உப்போடையென்றும் வழங்கப் பெறும்.
இந்த நதியைப் பற்றி கதையொன்று உண்டு. மானைத் தேடி வந்த இராமபிரான், தாக மிகுதியினால் பக்கத்திலிருந்த ஆனைமலையில் இருந்து ஆனைநதி (கஜநதி – கயத்தாறு) வருமாறு பணித்தார். இதில் வந்த நீர் உப்பாயிருக்கவே, தம் கோதண்டத்தைப் பூமியில் ஊன்றிக் கங்கையை வரவழைத்துத் தாகத்தைத் தீர்த்துக் கொண்டார்.
முக்கூடல் என்பது திருநெல்வேலி ஜில்லாவில் தாமிரவருணி நதியின் வடகரையிலுள்ள சிறு கிராமம், மூன்று ஆறுகள் கூடுமிடத்தில் இருப்பதால் முக்கூடலாயிற்று. முன் காலத்தில் சித்திரா நதியும் கோதண்டராம நதியும் இவ்வூரில் வந்து பொருநையில் கலந்தமையால், இவ்வூருக்கு இப்பெயர் வந்தது.
நடுத்தர வர்க்கம். சென்னைக்கு இடப்பெயர்வு. வானொலிப் பாடல் என அந்த நாள் நினைவும் நெல்லையும் கலந்துகட்டி வந்திருக்கிறது.
திருநெல்வேலி அல்வாவை விழுங்குவது போல எளிதாக எழுதுகிறார் வ.நி. அது வாசிப்பிற்கு நல்ல சௌகரியம்.
என் அம்மாவிற்கு சொந்த ஊர் கல்லிடைக்குறிச்சி. அது எழில் மிக்க சிற்றுார். கனடியன் வாய்க்கால் பற்றி கதை கதையாகச் சொல்வார். அதை எழுத வேண்டும் என்று நினைத்தேன். இங்கே வண்ணநிலவன் அமர்க்களமாகத் துவங்கியிருக்கிறார்.
ரொம்ப நாள் கழித்து நல்ல கதை ஒன்றைப் படித்த திருப்தி பிரஜேஷ்வர் மதன் எழுதிய “தபால் பெட்டி”யில் கிடைக்கிறது.
ஆங்கிலம் வழி தமிழாக்கம் என்பது அமெரிக்க உணவகங்களில் இந்தியச் சாப்பாடு உண்பது போல், “உங்களுக்கு காரம் எவ்வளவு வேண்டும்? மைல்ட்? மீடியம்?? ஹாட் அண்ட் ஸ்பைசி???” என்பது போல் தூவப்பட்ட மசாலாவோடு இருக்கும்.
தலைப்பாகட்டிக்கோ அஞ்சப்பருக்கோ போனால் அதெல்லாம் கேட்கமாட்டார்கள். அவர்களாக இஷ்டத்துக்குப் போட்டுத் தருவார்கள். ஹிந்தி வழி தமிழாக்கம் செய்யும் அனுராதா க்ருஷ்ணஸ்வாமி அந்த வகை லோக்கல். எல்லாம் சரியாக இருக்கும்.
இந்தக் கதை ஏன் கவர்கிறது?
சும்மா அங்குமிங்கும் பாய்கிறார்: தபால் பெட்டியை வைத்து என்னைக் குறி வைக்கிறார் பிரஜெஷ்வர் மதான்.
சிந்து பைரவியில் ஜனகராஜ் கதாபாத்திரம் போன்று இதுவும் செம்மையாக செதுக்கப்பட்டிருக்கிறது.
சம்பிரதாயமான சம்பவங்கள்; முடிவை நோக்கி பயணிக்கும் பாணி இல்லை. அதுபாட்டுக்கு இழுத்துச் செல்கிறது.
அதற்காக கோணங்கித் தனமாக புரியாமல், நான்கைந்து வாட்டி வாசித்தாலும் குழப்பாமல் சீராகச் சொல்லப்பட்டிருக்கிறது.
எல்லாம் இரட்டை அர்த்தம்; ஆனால், வலிந்து எல்லாம் திணிக்கவில்லை. எல்லாம் குறியீடு; எனவே, உங்கள் அனுபவத்திற்கேற்ப சொடேர் சொடேரென்று அடிக்கும்.
முன்னுமொரு காலத்தில் மாந்திரீக யதார்த்தம் எல்லாம் உலா வந்து கொண்டிருந்த காலத்தில் இப்படியாகப் பட்ட புனைவுகளை தமிழிலும் சந்தித்து இருக்கிறேன். இன்றைய காலகட்டத்தில் எவர் இப்படி கொடுக்கிறார்கள்?
நான் ஹரன்பிரசன்னாவின் கட்டுரைகளின் ரசிகன். அவரின் சிறுகதைகளை அவ்வப்போது வாசித்து இருக்கிறேன். ஆதிகாலத்து யாஹூ குழுமங்களில் இருந்து அறிமுகமானவராக இருந்தாலும் இன்றளவும் ஃபேஸ்புக்கில் நண்பர் ஆகத் தொடர்பவர். அவரின் பதிவுகளும் விமர்சனங்களும் ரசனைகளும் பரிந்துரைகளும் என்னை கவனம் கொள்ள வைக்கும். அவரின் முதல் நாவல் வெளிவந்திருக்கிறது. அமேசான் கிண்டில் நூலாக வாங்கி கடகடவென்று வாசித்து விட்டேன்.
நீங்கள் முதன் முதலாக பிரவேசித்தது எங்கே? பேச்சுப் போட்டியில் கலந்து கொள்வதற்காக மேடையேறி இருக்கலாம். பிடித்த துணையை வசப்படுத்துவதற்காக காதலரைக் கவர நிஜ வாழ்க்கையில் அசல் நாடகம் போட்டிருக்கலாம். நேர்காணலில் பயத்துடன் உளறாமல் இருக்க ஒத்திகை பார்த்த சொற்றொடர்களை ஒப்பித்து இருக்கலாம். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்பை திட்டமிட்டு, பயத்தை வெளிக்காட்டாமல், சந்தேகங்களை மனதுக்குள் போட்டு புழுங்காமல் போட்டுடைத்து, ஆபத்துகளை நிவர்த்தி செய்து, சமர்த்தராக முடித்து வெற்றிக் கொடி நாட்டி இருக்கலாம். இங்கே ஹரன்பிரசன்னா, தன் நாவலை அவ்வாறு தன் தோற்றத்தை இலக்கியப் பதிவேட்டில் ஆஜர் ஆக்குகிறார்.
முதல் நாவல் ஒரு அகக் கொந்தளிப்பு இல்லையா? எல்லா நாவலுமே அகக் கொந்தளிப்புத்தான். ஒவ்வொரு நாளும் மனைவியுடன் கூடும்போதும் ஏதோ ஒரு கட்டத்தில் ஒரு வெறி வரத்தான் செய்கிறது. ஆனாலும் முதல் நாள் தொடுகையுடன் அதை ஒப்பிடமுடியுமா? முதல் நாவல் அப்படி இல்லையா? முதல் நாவலிலேயே ஒட்டுமொத்தத்தையும் யோசிக்கமுடியுமா? யோசிக்கத்தான் வேண்டுமா? நாவலுக்கு அழகு அகத்தில் இருந்து வரும் சொற்கள் இல்லையா? இங்கே எல்லாமே வெறும் சொற்களா? லே அவுட்டுக்குள் சிக்கி நிற்கும் சொற்களா நாவல்? ராகவனுக்குத் தலை சுற்றியது.
Haran prasanna, ஹரன் பிரசன்னா. மாயப் பெரு நதி (நாவல்) (Tamil Edition) . தடம் பதிப்பகம் | Thadam pathippagam. Kindle Edition.
நாவலின் களம், கதை, அதன் கருத்து என்று எண்ணிப் பார்ப்பதற்கு முன் சில சுருக்கமான எண்ணங்கள்:
தேவையற்ற இடையூறு: ராகவன் என்று நாயகனின் பெயரை இனிஷியல் போடாமல் சூட்டியதற்கு தனி தைரியம் வேண்டும். அதை விட அவர் வேலை பார்க்கும் பதிப்பகத்தையும் மூன்றெழுத்தில் அமைத்ததற்கு கொஞ்சம் உதாசீனம் கலந்த தெனாவட்டு இருக்கிறது. எனினும், வடம் பெயரையும் கற்பனையற்ற எழுத்தாளர் பெயரையும் தவித்திருக்க வேண்டும்.
மருட்புனைவு: அந்த அலட்சியமும் நம்பிக்கையும் உற்சாகமும் எழுத்தாளர்களின் அரசியலை வெளிப்படையாக சொல்ல வைக்காமல், வெறுமனே கதை 1, 2… என 10 பட்டியலிட்டது தெனாவட்டின் எல்லைகளை பல்லிளித்து சுட்டுகிறது. அவற்றை நேர்மையாக புனைவின் சாத்தியங்களுடன் உருவாக்கி இருந்தால் இன்னொரு “ஜே.ஜே.” என்றிருக்கலாம்.
கனா வினா: கட்டுரைக்கு கேள்விகள் பயனளிக்கும். கதைக்கு வாசகர் தான் கேள்வியைத் தொடுக்க வேண்டும். அகப் பயணங்களை வினாக்களாகப் பட்டியலிட்டுத் தொடுப்பது நாவலா அல்லது நாவலுக்கான குறிப்புகளா என கதாசிரியரின் புத்திசாலித்தனத்தின் மீது அயர்ச்சியைக் கொடுத்து கதையை அன்னியமாக்குகிறது.
இச்சா அதிகாரம்: கிட்டத்தட்ட சரோஜா தேவி எழுதிய பலான புத்தகமோ என பயம் வருமளவு ஏடாகூட வருணணைகள். விலாவாரியான செக்ஸ் விவரிப்புகள். புணர்தலை எழுதுவது என்பது பல உலக இலக்கியவாதிகளால் இயலாத காரியம். ஹாருகி முரகாமி முதல் சுஜாதா வரை சறுக்கிய தருணங்களை உதாரணங்களுடன் பட்டியலிடலாம். ஆனால், ஹரன்பிரசன்னா கில்லி அடித்திருக்கிறார். காமத்திற்கும் போகத்திற்கும் ஒரு எழுத்துதான் வித்தியாசம் என்பது போல் பிசகாமல் தரமாக எழுத்து வடிவாக்கி இருக்கிறார்.
உள்ளுடையும் உறையும்: பிரசன்னாவின் நாயகன் ஆன ராகவனுக்கு அட்டை குறித்த கவலை இருக்கிறது. இருந்தும் இப்படி ஒரு அட்டையைப் படம் போட்டு இருப்பது கவர்ச்சியாக இல்லை. கனவு, மாயை, இரட்டை எனச் சுழலும் நாவலுக்கு கொஞ்சம் எதார்த்தம் இல்லாத தன்மை கொண்ட முகப்புப் படம் சுவாரசியம் தந்திருக்கும்.
பாஷா முரண்கள்: விக்கிரஹத்தை ஒத்தி எடுங்கள் என்று வருகிறது; துடையுங்கள் என்றும் வருகிறது. சென்னையில் வசிப்பவர்களின் மொழி, கன்னடம் கலந்த தமிழின் மொழி போன்ற சுவைகளை கொடுத்திருக்கலாம். அதிபூதா துக்கம், தாரதம்யம் என்றெல்லாம் மொழி நடனமாடுபவர் இன்ன பிற இடங்களிலும் அசல்தன்மையை நடமாட விட்டிருக்க வேண்டும்.
சொப்பன தரிசனம்: சில விஷயங்களை “சொல்லவியலாது” என்று எழுதுபவரே கையை விரித்து விடுவது ஏமாற்றம் தந்தது. கனவு என்று சொல்லாமல் அந்த மாய உலகை உலவவிட்டு அதனுள்ளே நம்மை இழுத்து சென்றிருக்கலாம்.
தூங்கலோசை: நாவலில் திகைப்புகளே இல்லை. க்ளைமேக்ஸ் எனப்படும் தருணத்தில் அசாதரணமான விஷயங்களோ, அத்தியாயத்திற்கு அத்தியாயம் அவிழாத முடிச்சுகளோ, அதிர்ச்சியூட்டும் திருப்பங்களோ, பரபரப்பான விஷயங்களோ இல்லாமல் இராமாயணம் தெரிந்தவர் கம்பராமாயணம் வாசிப்பது போல் அமைதியாக சொல்லிச் செல்கிறது.
அவளைக் கூர்ந்து பார்த்தான். மூக்கு குத்தி இருக்கிறாள். அதனால்தான் முகத்தில் மாற்றம் வந்திருக்கிறது. தாவணி அணிந்திருக்கிறாள். பெரியவளானதால் உடலில் செழுமை வந்திருக்கிறதா அல்லது தாவணி உடுத்தி இருப்பதால் அப்படித் தெரிகிறதா? மார்புகள் லேசாக மேடாகி இருக்கின்றன. அவற்றின் மேல் இரட்டை ஜடை படுத்திருக்கிறது. தாவணியில் அவளது இடுப்பு கொஞ்சம் தெரிந்தது. அந்த வெண்ணிறம் அவனைப் பித்துக்கொள்ளச் செய்தது. பூப் போட்ட பாவாடை அணிந்திருந்தாள். கால் பாதங்கள் பளிச்சென இருந்தன. மஞ்சள் பூசிக் குளித்திருப்பாள் போல. அவன் இன்னும் கொஞ்சம் நெருங்கி அவளருகில் வந்தாள்.
நாவலில் நேரடித்தன்மை எளிதாகப் புரிகிறது. ராகவன் கீழ் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவன். பதிப்பகத் துறையில் பல்லாண்டு காலமாக பணியாற்றுபவன். நாவல் எழுதுகிறான். அதை சொந்தமாக வெளியிடுகிறான். தான் வேலை பார்க்கும் நிறுவனம் மூலம் வெளியிட கூச்சமோ தன்னடக்கமோ தடுக்கிறது. அதன் கூட புத்தகக் கண்காட்சியில் நடக்கும் குளறுபடிகளும் வருகிறது. சற்றே ஊறுகாய் ஆக புத்தக எழுத்தாளர்களின் உள்ளடி வேலைகளும் தூவப்படுகிறது. அவனின் குழந்தையும் மனைவியும் ரஜினி படத்தில் த்ரிஷா போல் எட்டிப் பார்க்கிறார்கள்.
இதன் முற்பிறவி அசல் நாவலுக்கான சகல சாமுத்ரிகா லட்சணங்களையும் கொண்டிருக்கிறது. அதில் கதாபாத்திரங்களுக்கு அஸ்திவாரம் இருக்கிறது. அவர்களின் காரியங்களுக்கு காரணம் சொல்லப்பட்டிருக்கிறது. தானே பதிப்பித்த நூல் போல் சுயம்பு உருவாகும் தருணங்கள் கோர்க்கப்பட்டிருக்கிறது. இந்தப் பகுதி இன்னும் விரிவாக தத்துவ சிக்கல்களுடன் வந்திருக்க வேண்டும். பாரத தேசம் முழுக்க பயணம் செய்திருக்க வேண்டும். பட்டியல்களைப் படையலாக ஆக்காமல் அந்தப் புத்தகங்களின் உள்ளார்ந்த கிரகிப்புகளைப் பகிர்தலாக ஆக்கியிருக்க வேண்டும்.
முதல் பாகத்தை மின்சார ரயில் பகுதி எனலாம். தெரிந்த விஷயங்கள். அதே குப்பை நாற்றங்கள். பழகிய முகங்கள். இருப்பிடம் வந்தாலும் நாளையும் இதே பயணம் என்னும் எதிர்பார்ப்பில்லாத திக்கில் முடிவு. அடுத்த பகுதி சென்னை முதல் டெல்லி செல்லும் ராஜதானி வண்டி. அவசரகதியில் எக்ஸ்பிரெஸ் ரயிலாக சேரிடத்தில் முடிந்தாலும், அந்தப் பயணம் சுவாரசியம் மிக்கது. தெரியாத, புதிய விஷயங்களை உணர்த்துவது. தூங்கி எழுந்தவுடன் கடைசி ஸ்டேஷன் வந்து விடுவது போல் சடாரென்று முடிவுக்கு வருவது மட்டுமே குறை.
மீதம் இருக்கும் குழம்பையும் சாதத்தையும் எண்ணெய்யும் உப்பும் போட்டுப் பிசைந்து உருட்டிக் கொடுக்கச் சொல்லி உண்டால் எத்தனை சந்தோஷமாக இருக்கும் என்று தோன்றியது.
புத்தகக் கண்காட்சியில் சாப்பிடச் செல்கிறான் நாயகன் ராகவன். ஆத்துச் சாப்பாட்டில் திளைக்கிறவன் ராகவன். வெறும் பொரியலிலும் வத்தக் குழம்பிலும் ஜமாய்க்கிற மனைவின் கைப்பக்குவத்தை நினைத்துப் பார்க்கிறான். அதே சமயம் கூடை சோற்றைப் போட்டு அதை அவக்கு அவக்கென்று விழுங்கும் கூட்டத்தை சமபந்தியில் பார்க்கிறான். இது நாலே பக்கக் கதையில் கூட நளபாகத்தைப் போடும் இலக்கியகர்த்தாவையும், நாலு ஃபாரம் கொடுத்தாலும் கூறியதையேக் கூறும் அ-புனைவு விற்பனை எழுத்தாளனையும் ஒப்பிட்டது போல் அமைந்துள்ளது.
இதுவே பின் பகுதியான இரண்டாம் பாக நாவலில் ஆனந்தனையும் மாதவனையும் உணர்த்த இன்னொரு வழியில் சொல்லப்படுகிறது. ஆனந்தனுக்கு லௌகீக உணவே கொண்டாட்டம். வாசனையை வைத்தே என்ன சமையல் என்பதைக் கண்டுபிடிக்கிறான். அதில் லயிக்கிறான். தத்துவமும் துறவும் எண்ணமாகக் கொண்ட மாதவனுக்கு உணவு என்பது அத்தியாவசியம். ஏதோ கொஞ்சமாய் உண்ண வேண்டும். ருசிக்கும் பசிக்கும் அல்ல. கவளம் கிடைத்த சிந்தைக்காக சற்றே உட்கொள்கிறான்.
He gazed sadly at the threatening sky, at the burned-out remnants of a locust-plagued summer, and suddenly saw on the twig of an acacia, as in a vision, the progress of spring, summer, fall and winter, as if the whole of time were a frivolous interlude in the much greater spaces of eternity, a brilliant conjuring trick to produce something apparently orderly out of chaos, to establish a vantage point from which chance might begin to look like necessity …and he saw himself nailed to the cross of his own cradle and coffin, painfully trying to tear his body away, only, eventually, to deliver himself—utterly naked, without identifying mark, stripped down to essentials—into the care of the people whose duty it was to wash the corpses, people obeying an order snapped out in the dry air against a background loud with torturers and flayers of skin, where he was obliged to regard the human condition without a trace of pity, without a single possibility of anyway back to life, because by then he would know for certain that all his life he had been playing with cheaters who had marked the cards and who would, in the end, strip him even of his last means of defense, of that hope of someday finding his way back home.
An excerpt from the beginning (and end) of László Krasznahorkai’s novel Satantango. English translation by George Szirtes.
இரண்டு காலகட்டங்களுக்குள் விரியும் நாவல். ஒன்று இன்றைய காலகட்டம். இன்னொன்று நூறு ஆண்டுகளுக்கும் முன்பான ஒரு காலகட்டம். பழங்காலத்தில் மாத்வ பிரமாணர்களின் அன்றைய வாழ்க்கையைத் தொட்டுச் செல்லும் நாவல், இன்றைய காலத்தில் சென்னைப் புத்தகக் கண்காட்சிக்குள் விரிகிறது. இரண்டையும் பிணைக்கும் ஒரு சரடென எப்போதும் கூடவே ஓடிவரும் ஒரு மாயப் பெரு நதி. திருநெல்வேலியில் பிறந்து இளமையைக் கழித்த எந்த ஒருவனுக்கும் தாமிரபரணியே மாயப் பெரு நதி. எங்கே எதன் நிமித்தமாக எப்படி வாழ்ந்தாலும் உள்ளுக்குள் ஓடிக்கொண்டே இருக்கும் ஒரு கனவு நதி.
ஹரன் பிரசன்னாவின் முதல் நாவல் இது. அவரது தீவிரமான மொழி இந்நாவலுக்கு பெரிய பலமாக அமைந்திருக்கிறது. எப்போதும் கனவுலகத்துக்குள்ளே சுழன்றபடி இருக்கும் இந்நாவல் ஒரு கனவைப் போலவே நமக்குள் நிகழ்கிறது.
Vikramadithyan Documentary | Vishnupuram Awards 2021: ‘வீடும் வீதிகளும்’, 2021ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது பெறும் கவிஞர் விக்ரமாதித்யன் அவர்களைப் பற்றிய ஆவணப்படம் பார்த்தேன்.
சில எண்ணங்கள்:
1. துணையெழுத்து இல்லாமை: தமிழ்க் கவிஞரைப் பற்றிய அறிமுகப் படத்தில் வரும் உரையாடலை, உரையாடற் மொழியிலோ பிற வேற்று மொழியிலோ எழுத்து வடிவில் காட்டப்படும் உரை; ஆங்கிலத்தில் துணையுரை இல்லாமல் இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.
2. அரை மணி நேரத்தில் முடிக்க வேண்டும் என்று அவசர கதியில் மிச்சம் மீதியைப் போட்டு செய்யும் வடகறி கொத்து பரோட்டா போல் வந்திருக்கிறது. வடகறி சுவையாக இருக்கும். ஆனால், இங்கே சாஸ்திரோப்தமான சூப், சிற்றுண்டி பலகாரம், தலைவாழை இலை சாப்பாடு, பீடா எல்லாம் எதிர்பார்க்கிறேன்.
3. இந்தப் படங்கள் எவரைக் குறிவைத்து எடுக்கப்படுகின்றன?
அ) தமிழ்க் கவிஞர்களை அதிகம் அறியாத தமிழ் தெரிந்தோர்
ஆ) விக்கிரமாதித்தனை நன்கு அறிந்தோர்
இ) தமிழ் இலக்கியத்தில் நிறைய பரிச்சயம் இருந்தாலும் விக்கிரமாதித்தனை அறியாதோர்
ஈ) தமிழ் புரிந்தாலும் எழுத/வாசிக்கத் தெரியாத தலைமுறை
உ) விஷ்ணுபுரம் வாசகர் வட்டம்
என்னை (இ) பிரிவில் வைத்திருக்கிறேன். என் மனைவியை (அ) பிரிவில் வைக்கிறேன். எங்கள் குழந்தைகளை (ஈ) பிரிவில் வைக்கலாம். இந்த மூவருக்குமே இந்தப் படம் எதையும் கொண்டு சேர்க்கவில்லை.
4. நான் எதை எதிர்பார்த்தேன் – இந்தப் படத்தில்?
i) தமிழ்க் கவிஞர்கள் – சுருக்கமான பாரம்பரியம்; எந்த இடத்தில் விக்கிரமாதித்தன் வருகிறார்?
ii) விக்கிரமாதித்தன் தோற்றமும் வளர்ச்சியும் – எவ்வாறு அந்தக் கவியாளுமை உருவானது?
iii) சமகால கவிஞர்களை எவ்வாறு அவர் ஊடுருவுகிறார்? அவரின் நெடிய இலக்கிய பயணத்தில் என்னென்ன மாற்றங்கள் தோன்றின?
iv) கவிஞரை வாசித்ததால் அவரவருக்கு என்ன கிடைத்தது? போகன் சங்கர், லஷ்மி மணிவண்ணன், வண்ணதாசன் – சுய அனுபவம் / நேர்மையான தன்மை நிலைப் பார்வை / அகப் பகிர்வு – இது இல்லாமல் பீடத்தில் இருந்து கொண்டு சொற்பொழிவாற்றுவது ‘ராஜாதி ராஜ ராஜ கவிராய ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர விக்கிரமாதித்தாய நமஹ!’ என அலறுகிறது.
5. அறிமுகமாக அந்த வீணை இசை மெல்லிய அபாரம். படம் முழுக்கவே சத்தமாக, “நான் இருக்கிறேன்!” என்று கத்தாமல், படத்தோடு இயைபான இசை.
6. ஏன் பேசுபவர்களின் பெயர்களை ஆங்கிலத்தில் போடுகிறார்கள்? பேசுபவர் யார், எங்கிருக்கிறார், என்ன எழுதியிருக்கிறார், ஏன் பேசத் தகுதியானவர் என்றெல்லாம் போட வேண்டும்.
7. கவிஞரைக் குறித்த ஜெயமோகனின் அறிமுகம் முகஞ்சுளிக்க வைத்தது. இன்னாரைப் பாராட்டி சீராட்டும் தருணத்தில் “சட்டையில்லாமல் வந்தார்! சண்டைக்காரராக முன்வந்தார்!!” என்று சொல்லிவிட்டு, “நான் எழுதியதுதான் அவரைப் பற்றிய முதல் கட்டுரை!” என்று ஜம்பமும் தட்டிக் கொள்வது உவ்வேக். கொஞ்சம் தன்னடக்கத்தோடு உரையாடியிருக்கலாம்.
8. இறுதியில் போடப்படும் பெயர் பட்டியல் – அகர வரிசைப்படி இருக்க வேண்டும். இது ஏதோ இலக்கிய அந்தஸ்து பீடம் போல் வயதை வைத்து போடப்பட்டிருக்கிறது.
9. ஒரே ஒரு பெண்ணாக சுபஸ்ரீ வந்து போகிறார். நன்றாகப் பேசினார்.
10. விக்கிரமாதித்தன் உரையாடலை இன்னும் தீவிரமாக ஆழமாக நடத்தியிருக்க வேண்டும். குடியோடு என்றால் குடியோடு. ஏழெட்டு நாள்கள் என்றால் அத்தனை பொறுமையோடு. அதன் பின் கத்திரி போட்டு ஆங்காங்கே கிடைத்த நறுக்குகளைக் கொண்டு அவரின் பேச்சு வந்திருக்க வேண்டும். இப்பொழுது ஏதோ தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்த்தை வைத்து பொம்மை கோச்சடையான் எடுத்த மாதிரி தீட்டியிருக்கிறார்கள்.
ஒரு எழுத்தின் சாயல் உங்கள் மீது பட்டு விடாமல் இருக்க கண்டதையும் படிக்க வேண்டும். வித விதமாக வாசிக்க வேண்டும். ஆய்வுக் கட்டுரை முதல் ஆன்மிகம் வரை எதையும் விடக் கூடாது.
அதுவும் அறிவியல் புனைவு மாதிரி எழுத நினைக்கும் போது ஃபிலிப் ராத் கதைகளும் ஜெயகாந்தன் புனைவுகளும் கையில் எடுக்க வேண்டும். சம்பந்தமே இல்லாத துறையில் ஆழ்ந்து, அமைதியாக மூழ்கினால் நல்ல எழுத்து வரும்.
அந்த நினைப்பில் மீண்டும் தி.ஜா.வை எடுத்தேன். பயப்பட வேண்டாம். இன்னும் எதுவும் எழுத ஆரம்பிக்கவில்லை. எனினும், அரூ போட்டி முடிவவில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளும், அதில் சில கதைகள் ஜெயமோகனின் சாயலில் இருப்பதாக வெளியான கட்டுரைகளும் இந்த முன்குறிப்பை எழுத வைத்தது.
தலைப்புக்கு போய் விடலாம்: ”வெங்கிட்டு சார் ஏன் ஓடினார்” – குறுநாவல் அளவில் ஒரு சிறுகதை. நல்ல வேளையாக இணையத்தில் கிடைக்கவில்லை.
கதையை சொல்லாமல், இந்த ஆக்கம் ஏன் எனக்குப் பிடித்தது என்று பட்டியல் போடலாம்:
பா. ராகவன் சொல்வார் (அவர்தான் என்று நினைக்கிறேன். இல்லாவிட்டாலும் சிக்கலில்லை) – ஒரு நல்லவர் கெட்ட விஷயத்தை செய்ய வேண்டும். கெட்டவராக சித்தரிக்கப்படும் கதாபாத்திரம் ஏதாவதொரு உத்தமமான விஷயத்தை செய்ய வேண்டும். அதெல்லாம் இந்தக் கதையில் நடக்கிறது.
2. என்னுடைய மாமா அன்னதாதா. நிறைய தான தருமங்கள் செய்பவர். தினமும் வீட்டு வாசலில் வரும் மாடு முதல் எங்கோ இருக்கும் குப்பைமேட்டில் பொறுக்குபவர் வரை தேடிச் சென்று உணவுப் பொட்டலங்களும் ஆடைகளும் தருபவர். கோடையில் அவரின் நிலத்தடி நீர் வற்றி விட்டது. கிணற்றை தூர் வார ஆட்களை அழைத்திருந்தார். நூறடி வரை புரட்டிப் போட்டு வெளியகற்றுவது என்று ஒப்புதல். வந்த மூன்று பேரும் காலை ஏழில் இருந்து மாலை நான்கு வரை அடைப்பை நீக்கி தெளிவாக்கின்றனர். வண்டலை இழுத்து வெளியேற்றி விட்டதாகச் சொல்கின்றனர். நீர்நிலைகளின் கொள்ளளவு அதிகமாகி நீரேந்தும் அளவும் மேம்பட்டதாக கண்ணுக்கு பட்டது. ஆனால், என் மாமாவோ, “இது நூறடி இல்லை!” என்றார். அவர்கள், “சாமீ… இது சத்தியமா நீங்க சொன்ன கூலிக்கு, ஒப்பந்தப்படி முழுக்க தூர் வாரிட்டோம்.” என இறைஞ்சுகிறார்கள்.
கடகடவென் மாமா கிணற்றில் கயிற்றைப் பிடித்துக் கொண்டு அதல பாதாளத்தை நோக்கி இறங்க ஆரம்பித்தார். கையில் நூறடியை அளக்கும் அளவுகோல் வேறு. நான் மிரண்டு விட்டேன். அவர்களும் அரண்டு விட்டார்கள். கடைசியில் அளந்து பார்த்ததில் எண்பத்தி ஏழு அடிதான் ஆகி இருந்தது. தானம் கொடுத்த மாட்டின் பல்லைப் பிடித்துப் பார்க்க மாட்டார்; ஆனால், ஆற்றில் போடும் ஊதியத்தை அளந்து பார்ப்பார்கள் மனிதர்கள்.
மீண்டும் பாரா: சிறு சிறு விவரங்கள் சிறுகதைக்கு முக்கியம். ஒரு கதையில் ஆள், உயரம்,வாசனை,நடை, நாற்றம்,லே அவுட், மேனரிசம், கோபம், புன்னகை,அழுகை, துடிப்பு, வேகம்,சூழல், செயல், செயலின்மை, பேச்சு, மௌனம் இதெல்லாம் வரவேண்டும்; தெரியவேண்டும். – இதெல்லாம் வைத்திருக்கிறார் ஜானகிராமன்.
இதைத்தான் சிவசங்கரி “சின்ன நூற்கண்டா உங்களை சிறைப்படுத்தும்?” என்று அ-புனைவாக ஆக்கினார்?
தி.ஜா.ரா.வின் வார்த்தையிலே சொல்வதானால்: “எடுத்துக்கொண்ட விஷயம் உணர்வோ, சிரிப்போ, புன்சிரிப்போ, நகையாடலோ முறுக்கேறிய, துடிப்பான ஒரு கட்டத்தில்தான் இருக்கமுடியும். சிறிது நேரத்தில் வெடித்துவிடப் போகிற ஒரு தெறிப்பும், ஓர் அவசரத் தன்மையும் நம்மை ஆட்கொள்ள வேண்டும். தெறிக்கப் போகிறது பட்டுக் கயிறாக இருக்கலாம். எஃகு வடமாக இருக்கலாம். ஆனால் அந்தத் தெறிப்பும் நிரம்பி வழிகிற துடிப்பும் இருக்கத்தான் வேண்டும். இந்தத் தெறிப்பு விஷயத்திறகுத் தகுந்தாற்போல் வேறுபடுவது சகஜம். கதையின் பொருள் சோம்பல், காதல், வீரம், தியாகம், நிராசை, ஏமாற்றம், நம்பிக்கை, பக்தி, உல்லாசம், புதிர் அவிழல் அல்லது இவற்றில் சிலவற்றின் கலவைகளாக இருக்கலாம். அதற்குத் தகுந்தபடி அந்தத் தெறிப்பு பஞ்சின் தெறிப்பாகவோ, பட்டின் தெறிப்பாகவோ, எஃகின் தெறிப்பாகவோ, குண்டு மருந்தின் வெடிப்பாகவோ சத்தம் அதிகமாகவோ குறைந்தோ மௌனமாகவோ மாறுபடும். ”
இந்தக் கதையில் என்னத் தெறிப்பு என்பதை வாசித்து விட்டு சொல்லுங்கள்.
எழுத்தாளரைப் பற்றி சற்றே தெரிந்திருப்பது சிறுகதை வாசிப்பிற்கு சற்றே இடைஞ்சல். சுஜாதாவைக் குறித்தும் புதுமைப்பித்தன் குறித்தும் எதுவும் தெரியாது. என்ன ஜாதி, எந்த ஊர், எவ்வளவு வயது, இருக்காரா, போயிட்டாரா, ஆணா, பெண்ணா, நாலைந்து பேர் ஒரே பேரில் எழுதுகிறார்களா, நாலைந்து பேரில் எழுதுகிறாரா…
எதுவும் தெரியாது. எனவே, இந்தக் கதை பிடித்திருந்தது; இந்தக் கதை எரிச்சலூட்டுகிறது; இந்த கதையை கால்வாசியோடு நிறுத்திக் கொள்ளலாம் என்று முடிவெடுப்பதில் தர்மசங்கடங்களோ முன்முடிவுகளோ எதிர்பார்ப்புகளோ கிடையாது.
சௌகரியமாக வாசித்த காலம். மீண்டும் அவ்வாறு கண்ணைக் கட்டிக் கொண்டு வாசிக்க வேண்டும்.
ஒரு கதையை எதற்காக நான் வாசிக்கிறேன்? அதில் இருந்து புதிய வாசல்கள் ஏதேனும் திறக்கிறதா என்னும் சுயநலம்; புரியாத விஷயங்கள், அறியாத மனிதர்கள், புலப்படாத தீர்மானங்கள் என்று விடை கிடைக்காத புதிர்கள் அவிழ்கிறதா என்னும் ஆர்வம்; சுவாரசியம், வாசிப்பின்பம், மகிழ்ச்சி போன்ற வேற்றுலகப் பிரவேசத்திற்கான சந்தோஷம்.
இந்தக் கதையில் அப்படி எதுவும் கிடைக்கவில்லை.
அறிந்த மனிதர்கள்; தேய்வழக்கான உரையாடல்கள்; போரடிக்கும் வாக்குவாதங்கள்; நானே இதை அறிவார்ந்து எழுதியிருந்தால் கூட கொஞ்சம் தர்க்கபூர்வமாக எழுதியிருப்பேனோ என்னும் அலட்சியம் கலந்த ஊக்கத்தைக் கொடுக்கும் நகர்வுகள்.
எடுத்த களம் – பாலச்சந்தர் காலத்து பெண்ணியம். சொல்லிய விதமாவது பாலு மகேந்திரா பாணியில் கவர்ச்சியாக இருந்ததா என்றால் அதுவும் இல்லை.
கதையை விட கடிதங்கள் மோசம். இந்தப் படைப்பில் எந்த விஷயங்களை ஆசிரியர் கையில் எடுத்திருக்கலாம்? நிஜ வாழ்வில் இந்த மாதிரி சம்பாஷணைகள் எத்தனை நாள் நீடிக்கும்? சுயம்புவாக ஒருவர் மட்டுமே முடிவெடுத்தால் அது எத்தகைய எதிர்வினைகளை உருவாக்கும்? இந்த மாதிரி பெரும்பாலும் அமைவதில்லை.
இதில் “விக்னேஷ் ஹரிஹரன்” கடிதம் தேவலாம். ஓரளவிற்கு மேல் சர்க்கரை திகட்டிப் போகிறது. அதையேத் தொடர்ந்து வாசகர் எதிர்வினையாகப் படித்துக் கொண்டிருந்தால்… அயர்ச்சி ஏற்பட்டு, கடிதங்கள் பிரிவையே ஒதுக்க நேரிடுகிறது.
தமிழில் இவ்வாறு ஆங்கில்ப் பேச்சுகளை பாவனைகளை இயல்பாக எழுதும் பலரை இப்போதைய காலகட்டத்தில் நான் அதிகம் பார்க்க / படிக்கவில்லை. எனவே, அது “பேஷ்”.
இந்த மாதிரி விஷயங்களைக் கையிலெடுக்க அனேகர் கூசுவார்கள். சாரு நிவேதிதா இந்தக் கதையை வேறு மாதிரி பலான பாதையில் கொண்டு சென்று ஜிகினாத் தோரணமாக்கியிருப்பார். எடுத்த சப்ஜெக்ட் மற்றும் சொல்ல நினைத்த விதம் – “பேஷ்”.
விவாதங்கள், உரையாடல்கள், வாதங்கள் – விடலைத்தனமாக முதிர்ச்சியடையாமல் வந்திருக்கிறது. போர்ட் ஆஃப் டைரக்டரில் இருப்பவர்கள் இவ்வளவு சின்னபிள்ளைத்தனமாக விவாதிக்க மாட்டார்கள். நம்பகத்தன்மை இல்லாததால் – ”அழுகல்”.
கடைசியில் வரும் ஒயின் அருந்தல் இன்னும் சோகமானது. ஒரு குடிகாரன் இதை எழுதியிருந்தால் அமர்க்களமாகி இருக்கும். இங்கே நீர்த்துப் போன காக்டெயிலாகவும் இல்லாமல், காத்திரமான விஸ்கி போல் குடலையும் எரிக்காமல் உப்பு சப்பற்ற பார்லி தண்ணீராக – “உவ்வே”.
கையடித்தல், முஷ்டிகைமைதுத்தனம் என்று பலவகையில் இன்னும் உள்ளே சென்று உளவியல் சிக்கலையும் ஆராயவில்லை. அவர்களின் வாழ்க்கைத் தேர்வுகளுக்கான காரணங்களையும் மேலோட்டமாகவே பார்க்கிறது “குமிழிகள்”. அரைகுறைப் படமாகவே முடிந்தும் விடுகிறது.
ஒரு நாட்குறிப்பில் நாலு வார்த்தை எழுதும்போது பாதி சித்திரத்தைத் தீட்டி விட்டு ஓய்ந்து விடலாம். ஒரு சிறுகதைக்கு தன்னளவில் முழுமை தேவை. ஒரு படைப்பு அதன் கர்த்தாக்களின் காரியங்களுக்கான நியாயத்தை ஆராய வேண்டும். அவர்களின் முடிவுகளுக்கான பாதையை வரைபடமாக்க வேண்டும். புதிர் போல் ஒருங்கிணைந்து பூர்த்தியாக வேண்டும்.
தகவல்களும் வித்துகளும் புனைவிற்கு முக்கியம். ஆனால், புனைவாக நினைவில் தங்க அது மட்டும் போதாது.
Vikesh Kapoor is the winner of the 2022 Daylight Photo Awards! Vikesh's project See You At Home is an ongoing perso… twitter.com/i/web/status/1…2 days ago
Here’s the Real Story behind the Massive ‘Blob’ of Seaweed Heading toward Florida
Florida beaches are already recei… twitter.com/i/web/status/1…3 days ago
What was the impact of Julius Caesar’s murder? - Peter Stothard Author of The Last Assassin: The Hunt for the Kille… twitter.com/i/web/status/1…3 days ago
A Sontag Sampler
Things I dislike: sleeping in an apartment alone, couples, football games, swimming, anchovies, m… twitter.com/i/web/status/1…3 days ago
India ‘Green Growth’ Climate Spending Shortchanges Adaptation
Budget laid out plans to increase public investments… twitter.com/i/web/status/1…3 days ago
Indian NGOs Received Rs 55,449 Crore In Foreign Funding In 3 Years
Delhi - Rs 13,957.84 cr
Tamil Nadu - Rs 6,803.7… twitter.com/i/web/status/1…6 days ago
“Naatu Naatu”: “dappankuthu” (literally “drum punch”) in Tamil or “teenmaar” (literally “three sounds”) in Telugu,… twitter.com/i/web/status/1…1 week ago
PNAS is Not a Good Journal
(& Other Hard Truths about Journal Prestige)
What is a “Good” Mag?
publish lower quali… twitter.com/i/web/status/1…1 week ago
neuroscientist Christof Koch lays the foundation for the material basis of consciousness; and social psychologist C… twitter.com/i/web/status/1…1 week ago
intersection between religion and science. 18th-century philosopher Moses Mendelssohn’s rational arguments for the… twitter.com/i/web/status/1…1 week ago
The Transcendent Brain: Spirituality in the Age of Science - Gazing at the stars, falling in love, or listening to… twitter.com/i/web/status/1…1 week ago
THE TRANSCENDENT BRAIN
Humans are evolutionarily drawn to beauty. How do such complex experiences emerge from a col… twitter.com/i/web/status/1…1 week ago
Monsters: Claire
these days the impulse to, say, binge-watch Woody Allen movies or indulge an obsession with “Ros… twitter.com/i/web/status/1…1 week ago
Living the writing life means living with failure - On Writing and Failure,” Marche attempts to reset the way we ta… twitter.com/i/web/status/1…1 week ago
After the mother tongues
Persian language we know today was born out of interaction with Arabic and Islam
Cultura… twitter.com/i/web/status/1…1 week ago
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde