Tag Archives: விக்கி

பூர்விகரான புலவர்

எழுத்தாளர் அம்பையைக் குறித்த தமிழ்.விக்கி பதிவை பார்த்தேன். அதன் பிறகு கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவையும் பார்த்தேன்.

இரண்டுமே திருப்தி தரவில்லை. இரண்டிலுமே கணக்கு இருக்கிறது. மாற்றங்களைச் செய்யலாம். அதன் பிறகு அந்தப் பரிந்துரைகளை திருத்துவோரும் ஒப்பளிப்பவரும் சான்றுரைஞரும் தாண்டி வர வேண்டும். வந்தாலும் நிலைக்க வேண்டும்.

அம்பை என்றால் புயல்.

அம்பை என்றால் ஸ்பாரோ.

அம்பை என்றால் காலச்சுவடு பேட்டி.

அம்பை என்றால் இயக்கம், செயல்பாடு, வேகம், பூரணம்.

இதையெல்லாம் முழுமையாக அம்பை ஈடுபடுவது போல் கச்சிதமாக, முழுமையாக எழுதவேண்டும். இதையெல்லாம் நினைத்தால் கூகிளே சிறப்பென தோன்றுகிறது.

தொடர்புள்ள செய்தி: Google and the Internet Archive are the first customers to gain commercial access to Wikipedia content

இன்னொரு உதாரணத்தைப் பார்ப்போம்.

என். ஆர். தாசன் என்பவரைத் தேடுகிறீர்கள். இவருக்கு பெரிய இலக்கிய இடம் இல்லை. கண்ணதாசன் பத்திரிகையில் எழுதிக் குவித்தவர். கே.என்,சிவராமன், பாவை சந்திரன், கோலப்பன், மணா, நா.கதிர்வேலன், கடற்கரய் போல் அந்த நாளில் பரவலாக அறியப்பட்டவர். சிறுபத்திரிகை ஆசிரியர். புத்தக, பத்திரிகை உலகில் தெரிந்திருந்தவர்.

இந்த இதழாளர்களை, எழுதிக் குவிப்பவர்களை, அன்றைய பா. ராகவர்களை நினைக்கும்போது தாமரை மணாளன் நினைவிற்கு வந்தார். அவருக்கும் எந்த விக்கியிலும் இடமில்லை. அசல் விக்கிபிடியாவைத் தேடினேன். அங்குமில்லை; புதிய ஜெயமோகன் விக்கியிலும் இடமில்லை. தாமரைமணாளன் – பொன். பாஸ்கர மார்த்தாண்டன் என்று பக்தி சொட்ட பரணீதரன் ஆக மாறுவார். சுஜாதா மாதிரி ‘கல்கி’ இதழில் சில்லுக்கருப்பட்டி தொடர் எழுதுவார்.

இதெல்லாம் போகட்டும்.

எந்த விக்கியிலும் என் பெயரும் இல்லை சார்.

உன் கத எனக்கெதுக்கு மாமா…

என் சோகக் கதயக் கேளு தாய்க்குலமே!

வளநீர்ப் பண்ணையும் வாவியும்

”சின்னச் சின்னக் குற்றங்கள்” என்னும் தலைப்பைத்தான் முதலில் தேர்ந்தெடுத்திருந்தேன். அது எதிர்மறை என்பதால் வேறு தலைப்பிற்கு மாறிவிட்டேன். ஏன் அந்தத் தலைப்பை முன்வைக்க நினைத்தேன்? ஏன் அப்படிப்பட்ட அனுபவத்தை முன்னிலையாக்க எண்ணினேன்?

நான் ஓர் அக்மார்க் இண்ட்ரோவெர்ட். விக்சனரி பாஷையில் சொல்வதானால் “தன்னைப் பற்றியே எண்ணுபவன்”. எனவே முகாமிற்கு வந்த ஒவ்வொருவரைப் பற்றிய சிறுகுறிப்புடன் தொடங்குவது சாலச் சிறந்தது.

முதற்கண்ணாக ஏற்கனவே அறிமுகமானவர்கள். அவர்களில் முதன்மையாகத் தெரிந்தது பழனி ஜோதியும் மகேஸ்வரியும். எனக்குப் பெயர்கள் மறந்து விடும். முகங்கள் நினைவில் தங்கும். மகேஸ்வரியை ஓட்டுநர் என்று அறிந்து வைத்திருந்தேன். நியூ ஹாம்ப்ஷைருக்கு ஜெயமோகன் உடன் சென்றபோது கும்மிருட்டில் அலுங்காது குலுங்காது தூங்காது கொண்டு சேர்த்தவர். அவரின் சாரதித்தன்மை தெரிந்திருந்தாலும் எங்கு பார்த்தோம் என்று தடுமாறி ஓரளவு சமாளித்து மீண்டும் அறிமுகம் செய்து கொண்டேன். இவர்கள் இருவரும் பாடல் பெற்ற வாசகர்கள். அவர்களை ஜெயமோகன்.இன் தளத்திலேயே அறியலாம்.

அடுத்தவர் சிஜோ. இவர் இன்றைய சாரதி. கஷ்டமான மொழியாக்கம் என்றால் “கூப்பிடு சிஜோவை!” என்று சொல்வனம் பதிப்புக் குழுவினால் பரிந்துரைக்கப்படுபவர். இந்த பூன் முகாமிற்கு வெளியூரில் இருந்து வந்தவர்களை பத்திரமாகக் கொண்டு சேர்த்தவர்களில் ஒருவர்.

இன்னொரு ஓட்டுனர் தாமோ எனப்படும் தாமோதரன். இவரும் அட்லாண்டாக்காரர். தன் காரை இசை-ரதமாக ஆக்கியவர். சிஜோ-வையும், விபி எனப்படும் வெங்கட் பிரசாத்தின் அழைப்புகளையும் கவனித்துக் கொண்டே பின்னால் நடக்கும் தாளக் கச்சேரியையும் ஒருங்கிணைத்த மேஸ்ட்ரோ.

நிறைய வெங்கட்கள் இருப்பதாலோ விஐபி என்பதன் சுருக்கமாகவோ, வி.பி. என்று அழைக்கப்படும் வெங்கட்பிரசாத் வீட்டில் நளபாக உணவு கிடைத்தது. இதை கொண்டாட்டத்தின் துவக்கம் எனலாம். முதன் முதலாக சக பயணிகளின் அறிமுகமும் உரையாடலும் கூடவே அமர்க்களமான விருந்தும் கிடைத்தது. சின்ன வெங்காயம் போட்ட கார குழம்பு, பூசணிக்காய் கிடைக்கும் அரைத்து விட்ட சாம்பார், மிளகும் தக்காளியும் போட்டி போட்ட சூடான ரசம், சிறிது சிறிதாக வெட்டப்பட்ட உருளைக் கறி, சுரைக்காய் கூட்டு, கெட்டித் தயிர், ஊறுகாய் என அனைத்தையும் கபளீகரம் செய்த பிறகு இரண்டு டம்ளர் பருப்பு பாயாசம் என்று கனஜோரான வீட்டுச் சமையல் போஜனத்தில் விழாவைத் துவக்கி களைகட்ட வைத்தனர் விபி தம்பதியினர். விபி ஒரு கவிஞர்.

இவ்வளவு முக்கியமான சாரதிகளைச் சொல்லிவிட்டு, சாரதியைச் சொல்லாவிட்டால் எப்படி? “நீங்க கிஷோர்தானே?” என்று அவரிடம் அறிமுகம் செய்து கொண்டேன். அவர் சாந்தமாக புன்னகையுடன் “நான் சாரதி.” என்றார். வழக்கம் போல் எதற்கும் உதவாத “மன்னிக்கவும்.” உதிர்த்துவிட்டு என் ஆர்பாட்டப் பேச்சைத் தொடர்ந்தேன். இந்த சாரதி என் பெட்டியை விமான நிலையம் முழுக்க சுமந்தவர். கலிஃபோர்னியாக்காரர். தலபுராணங்கள் எதன்பொருட்டு?, ஓநாய்குலச் சின்னம் என கடிதங்கள் எழுதியவர்.

சாரதியின் பேட்டைக்கு பக்கத்திலேயே வசிப்பவர் சாரதா. விவாதங்களில் பங்கெடுத்தவர். தன் கருத்தை வெளிப்படையாக பதிவு செய்தவர். அமெரிக்க பண்பாட்டையும் இந்தியாவில் வாழாவிட்டாலும் பட்டிக்காட்டான் போல் குட்டி பாரத்தை உருவாக்கி அதில் மட்டும் பவனிவரும் தேஸி கலாச்சாரத்தையும் அவர்களுக்குப் பிறந்த இந்திய-அமெரிக்க குழந்தைகளின் குழப்பங்களையும் வினாக்களாகத் தொடுத்தவர்.

முக அடையாளம் நன்றாக ஞாபகம் இருக்கும் எனச் சொல்லிக் குழப்பிக் கொண்ட கிஷோர் – கனெக்டிகட் வாசி. சாரதிக்கும் இவருக்கும் ஆறு வித்தியாசத்திற்கும் மேல் இருக்கும். ஒற்றுமைகள் எனப் பார்த்தால் இருவரும் கண்ணாடி அணிந்திருந்தனர். இருவரும் கவனிப்பவர்கள். உள்வாங்குபவர்கள். அமைதியானவர்கள்.

சிஜோ அழைத்து வந்த பட்டாளத்தில் எங்களுடன் இணைந்தவர் கண்ணப்பன். துடிப்பானவர். நான்கைந்து கார்கள் சார்லட் நகரத்தில் பூன் மலைவாசஸ்தலத்திற்கு கிளம்பின. இதில் பயணித்த இருபதிற்கும் மேற்பற்பட்டவர்களின் விண்ணப்பங்கள். ”ஸ்டார்பக்ஸ் போகலாம்!”, “குடிநீர் வாங்கலாம்!”, “அவசரமாக ஒன்றுக்கு வருகிறது”, என்னும் கோரிக்கைகளை காதில் வாங்கிக் கொண்டு செல்பேசியையும் இன்னொரு காதில் வைத்து பேசிக் கொண்டு அதே செல்பேசியில் செல்லுமிடத்திற்கான வழித்தடத்தையும் காண்பித்தவர். நிறைய வினாக்களுடன் உண்மையான மாணவராக ஆசான் முன் கைகட்டி நின்று கவனித்தவர்.

டாலஸ் பாலாஜி. இவர் ஏ.டபிள்யூ.எஸ். (AWS) கஞ்சுகம் அணிந்திருந்தார். என்னுடன் தன் படுக்கையை பாதியாக விட்டுக் கொடுத்துப் பகிர்ந்தவர். என் குறட்டையை பொருட்படுத்தாது இன்முகத்தோடு அடுத்த நாளும் சிரித்து, மீண்டும் என்னுடன் துணிந்து உறங்கிய தைரியசாலி.

இசையமைப்பாளர் ராஜன். முதல் இரு ஜெயமோகன் வருகைகளை முன்னின்று கவனித்தவன் நான் என்றால், சமீபத்திய இரு வருகைகளை செவ்வனே செய்பவர் ராஜன். விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தின் அமைப்பாளர்களில் ஒருவர். வெண்முரசு பிள்ளைத்தமிழுக்கு சங்கீதம் இயற்றியவர்.

மியாமியில் இருந்து இன்னொரு ராஜன். ஜெயமோகனுக்காக… ஆசானை சந்திப்பதற்காக மட்டும்… பிரத்தியேகமாக குருவின் குரலைக் கேட்பதற்காக… என வந்தவர்கள் பெரும்பாலானோர். அவர்களின் பிரதிநித்துவம் இவரைப் போன்றோர்.

விபி வீட்டில் ஸ்ரீகாந்த் அறிமுகமானாலும் அவரின் புல்லாங்குழல் திறமை பின்னரே தெரியவந்தது. சினிமாப் பாட்டு, கர்னாடக சங்கீதம், பஜன்கள் என்று எல்லாவற்றிற்கும் வளைந்து கொடுக்கும் விரல்களும் பான்சூரியும் நிகழ்வின் ஒவ்வொரு பகுதியின் துவக்கத்தில் ஒலிக்கும் பாடலுக்கும் சூழலுக்கும் இனிமையைக் கொணர்ந்தது.

இனி சற்றே கொத்து கொத்தாக வந்தவர்களைப் பார்க்கலாம்.

வெண்முரசு ஆவணப்பட மொழிபெயர்ப்பில் பெரும் பங்காற்றியவர் என நான் அறிந்திருந்த ரெமிதா சதீஷ். ஜெயமோகன் தளத்தை சற்றே தேடிய பிறகு, பல்வேறு மொழியாக்கங்களை ரமிதா சிறப்பாக செய்து வெளியிடுவது தெரிய வந்தது. சிரித்த முகமும் மோனப் புன்னகையும் தவழவிட்ட ராலே ரவி. விழா ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக நடத்திய முத்து காளிமுத்து. ஏற்கனவே செய்த சொல்வன மொழிபெயர்ப்புகள் மூலமாகவும் நன்கு அறிமுகமானவர் முத்து. பூன் முகாமில் உணவும் உபசரிப்பும் சிறக்க இன்னொரு முக்கிய காரணமான விவேக்கும் வட கரோலினாகாரர்.

இவர்கள் உள்ளூர் படை என்றால், தமிழ்.விக்கி திறப்புவிழாவைத் தொடர்ந்து வந்த வாஷிங்டன் டிசி, மேரிலாந்து மாகாணம் மற்றும் வர்ஜினியா மாநிலக்காரர்கள் பெரும்சேனை. ஆசான் முதன் முறை அமெரிக்கா வந்தபோது வரவேற்று விருந்தோபியவர்கள் வேல்முருகன் பெரியசாமியும் நிர்மல் பிச்சையும். இருவரும் பல தசாப்தங்களாக ஜெயமோகனை வாசித்து பின் தொடர்பவர்கள். பாசக்கார மகேந்திரன் பெரியசாமி. யோகா குறித்து கட்டுரை மட்டுமல்ல காலையில் யோகம் செய்து காண்பித்த விஜய் சத்தியா. ரவியும் அவரின் மனைவி ஸ்வர்ணலதாவும் தத்தமது அறிமுகத்தில் ஆழமாக அசத்தினார்கள். என் வாசிப்பெல்லாம் ஒன்றுமேயில்லை என எண்ணவைக்குமளவு நேர்த்தியான வாசகர்கள் நிறைந்த சபை என்பதை உணர்த்தினார்கள்.

வந்தவர்களை நிறுத்திவைத்துவிட்டு, கொஞ்சம் மூச்சு வாங்கி தமிழ்.விக்கி குறித்து பார்ப்போம். ஒரு பக்கம் கூகுள் தேடுபொறியில் எதைத் தேடினாலும் முதல் முடிவாக வரும் தமிழ் விக்கிப்பீடியா. இன்னொரு பக்கம் காலச்சுவடு, உயிர்மை, சொல்வனம் போன்ற அதிகாரமையங்கள். இவர்களுக்கு நடுவாந்தரமாக திரிசங்கு சொர்க்கம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

பூமியிலிருந்து சொர்க்கத்துக்கு தன்னுடைய உடலுடனேயே போக முயற்சித்தானாம் திரிசங்கு என்கிற மன்னன். ராஜா திரிசங்குவை தமிழர் என வைத்துக் கொள்ளுங்கள். சொர்க்கத்துக்கான யாத்திரையில் பாதிவழியிலேயே அவனுக்கு விசா கொடுக்காமல் நிறுத்தி விட்டாராம் சொர்க்கத்தின் அதிபர் இந்திரன். இந்திரனை கூகிள் எனக் கொள்ளவும். பூமியை விட்டு வெளியேறி விட்டதால் மீண்டும் பூமிக்கும் திரும்ப முடியவில்லையாம் திரிசங்குவால். அந்தரத்திலேயே இருந்த அவனுக்கு தன் தவ வலிமையால் தனி சொர்க்கத்தை விஸ்வாமித்திரர் உருவாக்கிக் கொடுத்தாராம். விசுவாமித்திரரை ஜெயமோகன் எனலாம். இதைத்தான் திரிசங்கு சொர்க்கம் என்கிறது புராணக் கதை. இந்தக் காலத்தில் தமிழ்.விக்கி. அந்தத் திரிசங்கு சொர்க்கத்தில் கரப்பான் பூச்சிகளைத் தோற்றுவிக்கிறார் கௌசிகர். அங்கே எலிகளையும் பல்லிகளையும் உருவாக்குகிறார் பிரும்மரிஷி. இந்த திரிசங்கு போல் இங்குமில்லாமல் அங்குமில்லாமல் நடுவில் இருக்கிறது தமிழ்.விக்கி என்பது என் எண்ணம்.

சாதாரண மக்கள் தங்களுக்கானத் தேடல் முடிவுகளைச் சென்றடைய கூகிள் உதவுகிறது. கூகுள் தளத்திற்கு அதிகாரபூர்வ விக்கிப்பீடியா மிகவும் பிடித்திருக்கிறது. எனவே, கூகிளில் எதைத் தேடினாலும் முதன்முதல் முடிவாக விக்கிப்பிடியாவை வரவைக்கிறது. அந்த கூகிள் உதவியில்லாமல் தமிழ்.விக்கி முதல் பக்கத்தில் சாதாரணத் தமிழரின் கவனத்திற்கு வரவே வராது. கூகுள் தளமே க்னால் (knol), கீன் (keen) என்று பல்வேறு முயற்சிகளில் சோதனை செய்கிறது. அவர்களின் ஆசி, அதாவது அசல் ப்ரம்மரிஷியான வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பெறாவிட்டால் தமிழ்.விக்கி தளத்திற்கு சொர்க்கலோகம் கிட்டாது.

ஏன் வசிஷ்டர் கூகுள், புதிய தமிழ்.விக்கியை கைகொடுத்து வரவேற்க மாட்டேன் என்கிறது? நவீன விருட்சம் அழகியசிங்கர் தினசரியைத் துவங்குவார். கௌதம சித்தார்த்தன் ஆலா என்னும் நிரலியை புழக்கத்தில் விடுகிறார். 25க்கும் மேற்பட்ட இலக்கிய பத்திரிகைகள் இணையத்தில் தீவிரமாக இயங்குகின்றன. இவற்றில் எது கொந்தர்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு உங்களின் கணினியை பாதிக்காது என்பதையும் கூகுள் கண்காணிக்க வேண்டும். இந்தத் தளங்களில் எதில் உள்ளடக்கம் சீரழிந்து சற்றே மோசமான ஆக்கங்களை உள்ளீடு செய்கிறார்கள் என்னும் தரக்கட்டுப்பாடும் தேவை. அதே சமயம் தினசரி புதுசு புதுசாக, வித விதமாக, வெவ்வேறுத் தலைப்புகளில் தனித்துவமான விஷயங்களைக் கொடுக்கிறார்களா என்றும் பார்க்க வேண்டும். பணத்திற்காக விளம்பரங்களை விஷயங்கள் என்று விற்கிறார்களா என்றும் யோசிக்க வேண்டும். இப்படியெல்லாம் நாள்தோறும் எல்லாவற்றையும் மேய்த்து தன் சக்தியை வீணடிப்பதற்கு பதிலாக விக்கிப்பிடியாவிற்கு தன் முடிவுகளை குத்தகைக்கு விட்டிருக்கிறது கூகுள்.

ஜெயமோகனின் நண்பரான வேதசகாயகுமார் விட்டுவிட்டதை ஜெயமோகன் கையில் எடுத்திருக்கிறார்:

தமிழ் விமார்சனக் கலைக் களஞ்சியம், தமிழ்ப் புனைகதைக் களஞ்சியம், சங்க இலக்கியக் கலைக் களஞ்சியம் என்ற மூன்று கலைக் களஞ்சியங்களை உருவாக்கத் திட்டமிட்டார் குமார். தமிழ் விமர்சனக் கலைக் களஞ்சியம் பல்கலைக்கழக மானியக் குழு நிதி உதவியுடன் நிறைவு பெற்றது. அவருடைய கல்விப் பணியில் இது முக்கியமானது.

பொன்னீலன்

அது வேறு சிக்கல். இன்னொரு தடவை விரிவாக அரசியலும் சமூகப் போரும் தனித் தமிழ்ப் போராளிகளின் நிலையையும் பல்கலைக்கழகப் பதவி போட்டியும் கலந்து ஆலோசிக்க வேண்டிய ஒன்று. அதற்குள் இன்னொரு நாள் செல்லலாம்.

மீண்டும்… பூன் காவிய முகாமிற்குள்ளும் அங்கே பங்கு பெற்றவர்களுக்குள்ளும் செல்லலாம்…

டெக்சாஸில் இருந்து வந்தவர்கள் தனித்தனியாக வந்ததாலோ என்னவோ தனித்துவம் கொண்டிருந்தார்கள். கிதார் வாங்கபோவதாக மிரட்டி கைக்கு அடக்கமான வாத்தியப் பொட்டி வாங்கி அதை வாசித்தும் அசத்திய ஸ்கந்தநாராயணன். இரண்டாம் நாள் புகைப்படங்களில் ஒவ்வொருவரையும் தனித்தனியே அழகழகாக சுட்டுத் தள்ளிய கோபி. பண்பட்ட ஆங்கில மொழிபெயர்ப்பாளராக நன்கு அறிமுகமான ஹூஸ்டன் சிவா.

டெட்ராயிட்டில் இருந்து வந்தவர்கள் இன்னொரு இனிய குழுமம். திருச்செந்தாழையின் கதையான ஆபரணத்தை அறிமுகம் செய்த மதுநிகா. எல்லோருடனும் இயல்பாக கலந்து பழகி வாய் நிறையப் பேசிய மேனகா. ஒளி ஓவியரும் மண்டலா கலைஞரும் இனிய குரல் கொண்ட பாடகருமான டெட்ராயிட் சங்கர்.

கலிஃபோர்னியாவில் இருந்து வந்த பெருங்கூட்டத்தில் பெரும்பாலானோரை ஏற்கனவே அறிமுகம் செய்து கொண்டோம். அவர்களைப் போலவே புத்தரைப் போன்ற சாந்தத்துடனும் அதே ஆனந்தர் போல் ஆழமான அவதானிப்புகளுடன் பழகிய சன்னிவேல் விஜய்.

அடுத்து தம்பதி சமேதராக வந்தவர்களைப் பார்க்கலாம்.

விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தின் அமைப்பாளர்களில் ஒருவரான ஆஸ்டின் சௌந்தரும் அவரின் மனைவி ராதாவும். காற்றின்நிழல் மூலமாகவும் வெண்முரசு ஆவணப்படம் மூலமாகவும் நன்கு அறிமுகமானவர்கள். முதல் முறையாக நேரில் பார்க்கிறேன்.

ஜெகதீஷ் குமாரும் அவரின் மனைவி அனுஷாவும். ஆங்கிலத்தில் பல கதைகளை மொழிபெயர்த்து அவற்றை பல்வேறு பத்திரிகைகளில் வெளியிட்டவர் என ஜெகதீஷை அறிந்து வைத்திருந்தேன். அனுஷா அவர்கள் முதல் நாள் புகைப்படங்களை சுட்டுத் தள்ளினார். இருவரும் கல்யாணத்திற்கு வந்தது போல் பாரம்பரிய ஆடைகளில் வளைய வந்தது முகாமிற்கு திருவிழா கோலத்தைக் கொடுத்தது.

விசுவும் அவரின் மனைவி பிரமோதினியும். இவர்கள் இருவரும் ஜெயமோகனோடும் அருண்மொழியோடும் அமெரிக்கா நெடுக பயணிக்கப் போகிறவர்கள் என்றவுடன் காதில் பெரும்புகை கிளம்பியது.

அதே போல் அந்த தொடர் பயணத்தில் காரில் கூட செல்லப் போகிறவராக ஸ்ரீராம் அறிமுகமானார்.

கடைசி அங்கமாக இந்த கால்கோள் முகாமில் பேசியவர்களில் சிலர்.

மெம்ஃபிஸ் செந்தில் கம்பராமாயணப் பாடல்களை வாசித்து விளக்கினார். கவிதைகள் குறித்து பாலாஜி ராஜு.

இறுதியாக என்னை பூன் முகாமிற்கு கொண்டு சேர்த்த ஷங்கர் பிரதாப். உடன் பயணித்த மதன். மற்றும் திரும்பும் வழியில் அமரிக்கையாக முதன்மையான கேள்விகளைத் தொடுத்து பயணத்தை சுவாரசியமானதாக்கிய ஓவியர் அருண். செல்பேசி உரையாடல்களில் மூலமே அறிமுகமாகியிருந்த பிரகாசம். இவர்கள் மீண்டும் மீண்டும் என்னைத் தரைக்குக் கொணர்ந்தவர்கள். உனக்கும் மேலே உள்ளவர்கள் கோடி… நினைத்துப் பார்த்து நிம்மதியை நாடு என்னும் தத்துவத்தை பூடகமாக தங்களின் வாசிப்பினாலும் (மதன், சியாட்டில் ஷங்கர் ப்ரதாப் போன்றோர்), திறமையினாலும் (ஓவியக்கார அருண், ஓளி ஓவிய கலைஞரான மிச்சிகன் சங்கர நாராயணன் போன்ற படைப்பாளிகள்), ஹூஸ்டன் சிவா போன்ற திறமையான முழுமையான மொழியாக்க வல்லுநர்களும் என் போதாமையையும் போக வேண்டிய தூரத்தையும் தங்களின் செயல்திறமையினால் விளக்கினார்கள்.

விடுபட்டவர்கள் மன்னிக்க வேண்டும். அவர்கள் மட்டுமே ஜெ என்னும் ஆளுமையின் முழுமையான சொற்பொழிவுக்கும் ஈர்க்கும் வசீகரத்திற்கும் உட்பட்டவர்கள்.

மீண்டும் தலைப்பிற்கே வந்துவிடலாம். ஜெயமோகனின் புகழ் பெற்ற பிரிவுகளில் ஒன்று – டால்ஸ்டாயும் தாஸ்தவெய்ஸ்கியும். ஒருவர் நல்லவர்களைப் பார்ப்பவர். இன்னொருவர் எதிலும் எல்லாவற்றிலும் குற்றங்களை நுணுக்கி நுணுக்கி தெரிந்து மகிழ்பவர். அறம் அற்ற இந்தியர்களை எங்கும் காண்கிறேன். குப்பையை அப்படியே வீசுவது. மாற்றுத் திறனாளிக்கான கார் நிறுத்துமிடத்தைத் திருடுபவர். பத்து பைசா அதிகம் கொடுத்தால் தன் விசுவாசத்தை இன்னொருவருக்குத் தந்துவிடும் முதலிய வழிபாட்டாளர். பற்பசை திருடுபவர்.

கூட்டம் என்பது மந்தை. திரள் பொதுசனம். அதில் இருந்து எது ஒருவரை வித்தியாசப்படுத்துகிறது?

அவர்கள் மேற்சென்று தங்கள் திறமையை செயலூக்கமாக்குகிறார்களா? ஒரு renaissance போல் மறுமலர்ச்சி போன்ற குறுகியவட்டத்தில் தளத்தில் கிடைத்த அனுபவங்களைக் கொண்டு ஒரு கூட்டத்தை, ஒரு நாட்டை, ஒரு பிரதேசத்தை, தங்களின் ஈர்ப்பு விசையால் ஆகர்ஷித்து மேற்கொணர்ந்து முன்னகர்த்துகிறார்களா? ஆசானையும் குருவையும் வெறுமனே போஷிக்காமல், அவரின் லட்சியங்களையும் அவரின் குணாதிசயங்களையும் கடைபிடித்து, அவரின் சித்தாந்தங்களை உள்வாங்கிக் கொண்டு சிறப்பாக செயல்படுத்துகிறார்களா?

இங்கே குழுமியவர்களில் படத் தயாரிப்பாளர்கள் இருந்தார்கள். திறமையான இசைக் கலைஞர்கள் பலரும் பங்கு பெற்றார்கள். நிர்வாகமும் எல்லோரையும் கட்டி மேய்க்கும் அதிகாரமும் கொண்டவர்கள் விழாவை வெகு சிறப்பாக நடத்திக் காட்டினார்கள். ஓவியர்கள், சித்திரக்காரர்கள், கலைநயம் மிக்க புகைப்படக்காரர்கள், என்று தங்கள் பணிபுரியும் அறிவியல், பொறியியல், கணிதம், நிதி நிர்வாகம், மேலாண்மை போன்ற துறைகள் தவிர்த்து பரிமளிக்கும் வித்தகர்கள் இருந்தார்கள். பலரும் பண்பட்ட எழுத்தாளர்கள்.

பொது யுகத்திற்கு முன் நான்காம் நூற்றாண்டில் ஏத்தனியர்கள் என்று கிரேக்கத்தில் ஒரு குழு அமைகிறது. நாம் அறிந்த சாக்ரடீஸ், ப்ளாட்டோ, அரிஸ்டாட்டில், பித்தோகரஸ் போன்ற பல அறிஞர்களும் அவர்களின் வழித்தோன்றல்களும் இன்றளவும் நம் சிந்தையையும் செயலையும் ஆக்கிரமித்திருக்கிறார்கள்.

அதே போல் பொது யுகத்திற்கு பின் பதினைந்தாம் நூற்றாண்டில் ஐரோப்பிய வரலாற்றின் மறுமலர்ச்சி (renaissance) காலம் இத்தாலியில் உதயமாகிறது. அதற்கு ஆதரவு தந்தவர்கள் கலைகளில் அவதானம் செலுத்தக்கூடிய சுதந்திர மனநிலையை உடையோராக இருந்ததுடன் கலைகளை ஆதரிக்கக்கூடிய பணபலமும் அவர்களிடம் இருந்தது.

இத்தாலியில் தாந்தே, இங்கிலாந்தில் வில்லியம் ஷேக்ஸ்பியர், பிரான்சில் இராஸ்மஸ், சித்திரக் கலைஞர்களில் லியானாடோ டாவின்சி, மைக்கல் ஆஞ்சலோ, விஞ்ஞானத் துறையில் போலந்தரான நிக்கலஸ் கொபர்னிகஸ், ஜேர்மனியரான ஜொஹென்ஸ் கெப்லர், இத்தாலியரான கலிலியோ கலிலி, இங்கிலாந்தைச் சேர்ந்த ஐசக் நியுட்டன் என அறிவியல், அரசியல், மருத்துவம், சிற்பம், கட்டிடம், பொருளாதாரம், மொழி, இலக்கியம் என பலவற்றிலும் தங்கள் முத்திரையைப் பதித்து புதிய எழுச்சியை உருவாக்கினார்கள்.

இந்தக் குழு அப்படிப்பட்டகுழு என்றுதான் எண்ணுகிறேன். காலம் விடை சொல்லும்.

வந்தவர்கள் எல்லாம் சரி! விஷயம் என்ன? எதைக் குறித்து விவாதித்தீர்கள்? என்னவெல்லாம் பேசினீர்கள்? யார் உரைத்தார்கள்? அவற்றை இன்னொரு பதிவில் பார்க்கலாம்.

மேலும்:

  1. பூன் முகாம் முழுநிகழ்வு- ஜெகதீஷ்குமார்
  2. கூடுதல் என்பது களிப்பு
  3. டல்லாஸ், டெக்ஸாஸ் வாசகர் சந்திப்பு – கடிதம்
  4. அமெரிக்கா- கடிதம்
  5. பூன்முகாம், கவிதை -கடிதம்: ஷங்கர் பிரதாப்
  6. அமெரிக்க பயணம் 2022
  7. பூன் இலக்கியக்கூடுகை

Review of Vikramadithyan Documentary | Vishnupuram Awards 2021

Vikramadithyan Documentary | Vishnupuram Awards 2021: ‘வீடும் வீதிகளும்’, 2021ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது பெறும் கவிஞர் விக்ரமாதித்யன் அவர்களைப் பற்றிய ஆவணப்படம் பார்த்தேன்.

சில எண்ணங்கள்:

1. துணையெழுத்து இல்லாமை: தமிழ்க் கவிஞரைப் பற்றிய அறிமுகப் படத்தில் வரும் உரையாடலை, உரையாடற் மொழியிலோ பிற வேற்று மொழியிலோ எழுத்து வடிவில் காட்டப்படும் உரை; ஆங்கிலத்தில் துணையுரை இல்லாமல் இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.

2. அரை மணி நேரத்தில் முடிக்க வேண்டும் என்று அவசர கதியில் மிச்சம் மீதியைப் போட்டு செய்யும் வடகறி கொத்து பரோட்டா போல் வந்திருக்கிறது. வடகறி சுவையாக இருக்கும். ஆனால், இங்கே சாஸ்திரோப்தமான சூப், சிற்றுண்டி பலகாரம், தலைவாழை இலை சாப்பாடு, பீடா எல்லாம் எதிர்பார்க்கிறேன்.

3. இந்தப் படங்கள் எவரைக் குறிவைத்து எடுக்கப்படுகின்றன?

அ) தமிழ்க் கவிஞர்களை அதிகம் அறியாத தமிழ் தெரிந்தோர்

ஆ) விக்கிரமாதித்தனை நன்கு அறிந்தோர்

இ) தமிழ் இலக்கியத்தில் நிறைய பரிச்சயம் இருந்தாலும் விக்கிரமாதித்தனை அறியாதோர்

ஈ) தமிழ் புரிந்தாலும் எழுத/வாசிக்கத் தெரியாத தலைமுறை

உ) விஷ்ணுபுரம் வாசகர் வட்டம்

என்னை (இ) பிரிவில் வைத்திருக்கிறேன். என் மனைவியை (அ) பிரிவில் வைக்கிறேன். எங்கள் குழந்தைகளை (ஈ) பிரிவில் வைக்கலாம். இந்த மூவருக்குமே இந்தப் படம் எதையும் கொண்டு சேர்க்கவில்லை.

4. நான் எதை எதிர்பார்த்தேன் – இந்தப் படத்தில்?

i) தமிழ்க் கவிஞர்கள் – சுருக்கமான பாரம்பரியம்; எந்த இடத்தில் விக்கிரமாதித்தன் வருகிறார்?

ii) விக்கிரமாதித்தன் தோற்றமும் வளர்ச்சியும் – எவ்வாறு அந்தக் கவியாளுமை உருவானது?

iii) சமகால கவிஞர்களை எவ்வாறு அவர் ஊடுருவுகிறார்? அவரின் நெடிய இலக்கிய பயணத்தில் என்னென்ன மாற்றங்கள் தோன்றின?

iv) கவிஞரை வாசித்ததால் அவரவருக்கு என்ன கிடைத்தது? போகன் சங்கர், லஷ்மி மணிவண்ணன், வண்ணதாசன் – சுய அனுபவம் / நேர்மையான தன்மை நிலைப் பார்வை / அகப் பகிர்வு – இது இல்லாமல் பீடத்தில் இருந்து கொண்டு சொற்பொழிவாற்றுவது ‘ராஜாதி ராஜ ராஜ கவிராய ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர விக்கிரமாதித்தாய நமஹ!’ என அலறுகிறது.

5. அறிமுகமாக அந்த வீணை இசை மெல்லிய அபாரம். படம் முழுக்கவே சத்தமாக, “நான் இருக்கிறேன்!” என்று கத்தாமல், படத்தோடு இயைபான இசை.

6. ஏன் பேசுபவர்களின் பெயர்களை ஆங்கிலத்தில் போடுகிறார்கள்? பேசுபவர் யார், எங்கிருக்கிறார், என்ன எழுதியிருக்கிறார், ஏன் பேசத் தகுதியானவர் என்றெல்லாம் போட வேண்டும்.

7. கவிஞரைக் குறித்த ஜெயமோகனின் அறிமுகம் முகஞ்சுளிக்க வைத்தது. இன்னாரைப் பாராட்டி சீராட்டும் தருணத்தில் “சட்டையில்லாமல் வந்தார்! சண்டைக்காரராக முன்வந்தார்!!” என்று சொல்லிவிட்டு, “நான் எழுதியதுதான் அவரைப் பற்றிய முதல் கட்டுரை!” என்று ஜம்பமும் தட்டிக் கொள்வது உவ்வேக். கொஞ்சம் தன்னடக்கத்தோடு உரையாடியிருக்கலாம்.

8. இறுதியில் போடப்படும் பெயர் பட்டியல் – அகர வரிசைப்படி இருக்க வேண்டும். இது ஏதோ இலக்கிய அந்தஸ்து பீடம் போல் வயதை வைத்து போடப்பட்டிருக்கிறது.

9. ஒரே ஒரு பெண்ணாக சுபஸ்ரீ வந்து போகிறார். நன்றாகப் பேசினார்.

10. விக்கிரமாதித்தன் உரையாடலை இன்னும் தீவிரமாக ஆழமாக நடத்தியிருக்க வேண்டும். குடியோடு என்றால் குடியோடு. ஏழெட்டு நாள்கள் என்றால் அத்தனை பொறுமையோடு. அதன் பின் கத்திரி போட்டு ஆங்காங்கே கிடைத்த நறுக்குகளைக் கொண்டு அவரின் பேச்சு வந்திருக்க வேண்டும். இப்பொழுது ஏதோ தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்த்தை வைத்து பொம்மை கோச்சடையான் எடுத்த மாதிரி தீட்டியிருக்கிறார்கள்.

தமிழ் விக்கிப்பீடியாவும் இயல் விருதும்: கேள்விகளும் சச்சரவுகளும்

E_Mayooranadhan_I_Mayuranathan

இயல் விருது அறிவிப்பு

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வருடா வருடம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது (இயல் விருது) இம்முறை தமிழ் விக்கிப்பீடியா என்னும் இணையத்தளக் கலைக்களஞ்சிய கூட்டாக்கத் திட்டத்தை தொடங்கி வெற்றிகரமாக இயக்கிவரும் திரு இ.மயூரநாதன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 17வது இயல் விருது ஆகும்.

இலங்கையில் வண்ணார்பண்ணை என்னுமிடத்தில் பிறந்த திரு மயூரநாதன் . கட்டடக்கலையில் முதுநிலை பட்டம் பெற்றபின்னர் கொழும்பில் 17 ஆண்டுகள் பணியாற்றினார். 1993-ல் துபாய்க்குப் புலம்பெயர்ந்தவர் தமிழ் அறிவியல் துறையில் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார். 2001ம் ஆண்டு ஆங்கிலத்தில் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டபோது, அதன் பின்னணியில் உள்ள தொழில்நுட்பம் கொடுக்கும் ஆற்றலையும், அறிவு உருவாக்கத்தில் அதன் மகத்தான பங்களிப்பையும் உணர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவை 2003ம் ஆண்டிலேயே தொடங்கினார். முதல் 12 மாதங்கள் தனியாளாக அதன் அடிப்படை வசதிகளைச் செய்து வலுவான தளமாக அமைப்பதற்கு உழைத்தார். பின்னர் சிறிது சிறிதாக இணையத்தளத்தை விரிவாக்கி திறமையான பங்களிப்பாளர்களை இணைத்து மிகச் சிறப்பாக இயங்கும் ஒரு கூட்டுக்குழுமமாக அதை நிறுவினார்.

தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்திருப்பவர்கள் ஏறத்தாழ நூறு பேர்தான் எனினும், இன்று 88,000 பேருக்கும் அதிகமானவர்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளனர். கலைக்களஞ்சியத்தில் ஏற்றப்பட்ட கட்டுரைகளின் எண்ணிக்கை 83,000. இதில் 80 வீதம் கட்டுரைகளை ஒதுக்கிவிட்டாலும்கூட 16,600 தரமான கட்டுரைகள் என்பது 24 தொகுதிகள் அடங்கிய அச்சுக் கலைக்களஞ்சியத்திற்கு சமமானது. இம்மாபெரும் படைப்பில் மயூரநாதன் மட்டுமே முதல் கட்டுரையிலிருந்து இன்றுவரை 4200-க்கும் மேற்பட்ட தரமான கட்டுரைகளைத் தொடங்கி உருவாக்கியுள்ளார். இவற்றை அச்சிட்டால், குறைந்தது 500 பக்கங்கள் கொண்ட எட்டு நூல்களாக அமையும்.

இன்று தமிழ் விக்கிப்பீடியா மாதந்தோறும் 3.5 மில்லியன் பார்வையாளர்களை எட்டும் பிரபல தளமாகவுள்ளது. உலகப் பன்மொழி திட்டத்தில் இன்று 291 மொழிகளில் விக்கிப்பீடியாக்கள் இயங்குகின்றன. இதில் தமிழ் மொழியின் இடம் 61. இந்திய மொழிகளில் உள்ள விக்கிப்பீடியாவை அலசியதில், எண்ணிக்கை அடிப்படையில் தமிழ் இரண்டாவதாக வந்தாலும், தரத்தின் அடிப்படையில் பல வகைளில் தமிழ் விக்கிப்பீடியா முதலாவதாக நிற்கின்றது

Wiki_Tamil_Wikipedia_India_Languuages_Charts_Quality_Content_Stats_Statistics_users_updated

சிஜு ஆலெக்ஸ் Shiju Alex 2010 இல் செய்த தர ஒப்பீடு

1. Analysis of the Indic Language Wikipedia Statistical Report 2012 | Indian Wikimedia Stories

2. Wiki turns 15, free libraries a bonanza – Times of India

Page_View_Wikipedia_Tamil_India_Languages_Wkik_Users_Bengali_Hindi_readers_updated

 

கூகுளும் விக்கியும் மொழியாக்கமும்

 

Soda_Bottle_Bala_Jeyaraman-Google_translation_project_-_Tamil_Wikipedia.pdf

நன்றி: 1. A Review on Google Translation project in Tamil Wikipedia – A-Review-on-Google-Translation-project-in-Tamil.pdf

2. Google_translation_project_-_Tamil_Wikipedia.pdf

3. Google Translate Blog: Translating Wikipedia

 

தமிழ்விக்கியில் தரப்பட்டுள்ள புள்ளிவிவரம்

நன்றி: தமிழ் விக்கிப்பீடியா குறித்த தரவுகள்

  • பக்கங்கள்= 2,43,640
  • கட்டுரைகள்= 84,002
  • கோப்புகள்= 9,251
  • தொகுப்புகள்= 20,92,989
  • பயனர்கள் = 94,626
  • சிறப்பு பங்களிப்பாளர்கள்= 304
  • தானியங்கிகள் = 181
  • நிருவாகிகள் = 37
  • அதிகாரிகள் = 4

 

தமிழ் விக்கிப்பிடியா தொடர்பாக எப்போதும் இருக்கும் கேள்விகள்

  1. உங்களைப் பற்றி விக்கிப்பிடியாவில் நீங்கள் தகவல் சேர்த்ததுண்டா?
  2.  உங்களையும் உங்கள் நிறுவனத்தையும் (நீங்கள் எழுதிய புத்தகம், விற்கும் பொருள் போன்றவை) தவிர வேறு எதாவது விக்கிப்பிடியாவில் எழுதியதுண்டா?
  3. ஸ, ஹ, ஜ, ஷ,  ஸ்ரீ, க்ஷ போன்ற எழுத்துக்களை நீக்கி கர்ண கடூரமாக்கும் முறை பற்றி உங்கள் எண்ணம் என்ன? (தொடர்புள்ள இடுகை: விக்கிப்பீடியா:கிரந்த எழுத்துப் பயன்பாடு) – கவனிக்க… எனக்கு பஜ்ஜி சொஜ்ஜி பிடிக்கும்
  4. 85 பேர் சேர்ந்து 78.7% பக்கங்களைத் தொகுக்கும் முயற்சியில் அந்தக் கூட்டமைப்பிற்குத்தானே விருது போக வேண்டும்?
  5. பலரும் வலைப்பதிவு, ட்விட்டர் ஓடை, ஃபேஸ்புக் பக்கம், புத்தக வெளியீடு, அச்சு நூல், ஊடக வேலை என்று பிழைப்பையோ பெருமையோ நாடும்போது, எது தன்னலமற்ற விக்கிப்பிடியாவை நாட வைக்கிறது?
  6. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் விக்கிப்பிடியாவை குறிப்புதவிக்கு பயன்படுத்தக்கூடாது என்பதை சொல்லியே வளர்க்கிறார்கள். இவ்விதச் சூழலில் விக்கிப்பிடியாவின் பயன்பாட்டையும் மதிப்பையும் எப்படி தக்க வைப்பது?
  7. நீங்கள் எழுதிய ஒன்றை இன்னொருவர் உடனடியாக மாற்றுவார்; உங்களின் ஆக்கத்தை மற்றொருவர் அழிப்பார்; பஞ்சாயத்தில் வரும் தீர்ப்பே இறுதி முடிவு என்னும் சூழலில் தொடர்ந்து இயங்குவதற்கான உந்துசக்தி எங்கிருந்து வருகிறது?
  8. லாபநோக்கற்ற அமைப்புகள் தொடர்ந்து நீடித்திருப்பது ஆச்சரியகரமானது. நன்கொடைகள் மூலமாகவே காலாகாலத்திற்கும் தமிழ் விக்கிப்பீடியா இயங்குமா?
  9. தமிழ் வாசிக்கத் தெரியாத (ஆனால், கேட்க/பார்க்க மட்டுமே தெரிந்த) தலைமுறை இப்போது உருவாகி இருக்கிறது. இந்த நிலையில் தமிழ் விக்கியின் வருங்கால முக்கியத்துவம் எப்படி இருக்கும்?
  10. விக்கிப்பிடியாவின் நம்பகத்தன்மையை எவ்வாறு நம்புவது? காந்திக்கு இரு பக்கம் என்று நிரூபிப்பதற்காக, மஹாத்மாவின் மீது வீசப்படும் சேறுகளுக்கு இடம் தந்து நடுநிலை வகிப்பதாலா? அல்லது மதவெறியைத் தூண்டும் அமைப்பிற்கும் பக்கம் ஒதுக்கி அவர்களின் தூஷணை வெளிப்பாட்டிற்கு தளம் அமைத்து இயங்குவதாலா?

சில சுவாரசியங்கள்

  1. டிசம்பர் 2003ல் முதன் முதலாக துவங்கியவுடன் எழுதப்பட்ட பக்கங்கள்:
    1. 1 2 தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல் ,
    2. 2 2 தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல் ,
    3. 3 1 இந்து சமயம்
  2. பத்து பக்கங்களுக்குள் கை வைத்தவர்களின் எண்ணிக்கை: 11,381 (80% பேர் சேர்ந்து இரண்டு சதவிகிதத்திற்கும் கீழான பக்கங்களில் கை வைத்திருக்கிறார்கள்)
  3. டாப் 10 விக்கிப்பிடியர்களை இங்கேக் காணலாம்.
  4. ஆங்கில் விக்கியில் கீழ்க்கண்ட பக்கங்கள் மிக அதிகமாக மறுபடியும் மறுபடியும் திருத்தி சண்டைக்குள்ளாகி எடிட் செய்யப்பட்டிருக்கிறது:
    1. Sri Lankan Tamil people
    2. Sri Lankan Tamil nationalism
    3. Liberation Tigers of Tamil Eelam
    4. List of top Tamil-language films
    5. Chennai Super Kings
  5. இன்றைய தேதியில் 61ஆம் இடத்தில் தமிழ் இருக்கிறது:
    1. 61 Tamil தமிழ் ta 84,002 243,640 2,092,989 37 94,626 304 9,251 31
    2. Language Language (local) Wiki Articles Total Edits Admins Users Active Users Images Depth
  6. ஆங்கிலத்தில் இருந்து ஸ்பானிஷ் மொழிக்கு விக்கி ஆக்கங்களை உருவாக்கியதைக் குறித்த விழியத்தை இங்கே பார்க்கலாம் (தொடர்புள்ள பதிவு: Duolingo creator: ‘I wanted to create a way to learn languages for free’ | Education | The Guardian)
  7. இன்றைய நிலையில் தலை பத்து விக்கி மொழிகள்:
    1. வரிசை மொழி மொத்த விக்கியில் இந்த மொழியின் பங்கு
      1 ஆங்கிலம் 55.5%
      2 ருஷியன் 5.9%
      3 ஜெர்மன் 5.8%
      4 ஜப்பானிய 5.0%
      5 ஸ்பானிஷ் 4.6%
      6 ஃபிரென்ச் 4.0%
      7 சீனம் 2.8%
      8 போர்த்துஇசியம் 2.5%
      9 இத்தாலிய 1.9%
      10 போலிஷ் 1.7%
  8. பயன்பாட்டின் (உபயோகிப்போரின் எண்ணிக்கைப்படி)
    1. வரிசை மொழி வலைவழியே பார்வையிடுவோர் தொகை     மொத்த வருகையாளர்களின் இந்த மொழியின் பங்கு
      1 English 872,950,266 25.9%
      2 Chinese 704,484,396 20.9%
      3 Spanish 256,787,878   7.6%
      4 Arabic 168,176,008   5.0%
      5 Portuguese 131,903,391   3.9%
      6 Japanese 114,963,827   3.4%
      7 Russian 103,147,691   3.1%
      8 Malay 98,915,747   2.9%
      9 French 97,180,032   2.9%
      10 German 83,738,911   2.5%
  9. விக்கி திட்டங்கள்
    1. திட்டம் உரல்
      விக்கிப்பீடியா http://ta.wikipedia.org/
      விக்‌ஷனரி http://ta.wiktionary.org/
      விக்கி புத்தகங்கள் http://ta.wikibooks.org/
      விக்கி மூலம் http://ta.wikisource.org/
      மேற்கோள் விக்கிப்பிடியா http://ta.wikiquote.org/
      செய்திகள் வாசிப்பது விக்கி http://ta.wikinews.org/
  10. மேலும் புள்ளிவிவரங்கள்
    1. ata Languages Regions Participation Usage Content
      Month Code
      ⇒ Project
      Main Page
      Language
      ⇒ Wikipedia article
        Speakers in millions
      (log scale) (?)

        Editors per million
      speakers (5+ edits)
      Prim.+Sec.
      Speakers
      M=millions
      k=thousands
      Editors (5+)
      per million
      speakers
      Views
      per hour
      Article
      count
    2. Dec Summary Tables Charts ta Tamil AS
      66 M 2 2,668 83,971

டிஜிட்டல் கொலையாளிகள்: 66A – ITAct

இன்றைய தேதியில் கசாப்களை விட இணையத்தில் கொலை செய்பவர்கள்தான் அதிகம்.

சின்மயிக்கு @ போட்டு ராகிங் செய்பவர்கள், கார்த்தி சிதம்பரத்தை கிண்டல் அடித்து வெறுப்பேற்றுபவர்கள், பெங்களூர் பிகாரி வன்முறை, ரோஜா செல்வமணி கருத்து காவலர்கள், பால் தாக்கரே என்று யாரை விமர்சித்தாலும் காவல்துறையும் சட்டம்+ஒழுங்கும் துள்ளி எழுகிறதே… ஏன்?

இந்த மாதிரி கோபக்கார புரபசர்களுக்கும் பகிடி புரொகிராமர்களுக்கும் யார் முன்னோடி?

கென்னடியை சுட்டது யார் என்று தெரியும். ஆனால், எதற்காக என்பது அமெரிக்கர்களுக்கு புரியாத புதிர். மூன்று திரைப்படங்கள், பதினேழு புத்தகங்களாவது ஜே.எஃப்.கே. கொலைவழக்கு குறித்து அலசி ஆராய்ந்திருக்கிறது. இதெல்லாம் நடந்து முடிந்த மே 2005, நாஷ்வில் நகரத்தில் இருந்து விக்கிப்பீடியாவில் ஒருவன் எழுதுகிறான்:

1960களில் அட்டர்னி ஜெனரலாக இருந்த கென்னடியின் உதவியளாராக ஜான் செய்காந்தளர் பணியாற்றினார். ஜான் எஃப் கென்னடியும் அவரின் சகோதரர் பாபி கென்னடியும் கொலை செய்யப்பட்டதில் அவருக்கு நேரடி தொடர்பு இருந்ததாக அவர் மேல் சில காலம் சந்தேகம் இருந்தது. ஆனால், அவை நிரூபிக்கப்படவில்லை. 1971ல் ஜான் செய்காந்தார் சோவியத் ருசியாவிற்கு இடம் மாறினார். 1984ல் மீண்டும் அமெரிக்கா திரும்பினார்.

உண்மையில் ஜான் செய்காந்தளர் மார்ட்டின் லூதர் கிங்குடன் போராடியவர். கென்னடிக்காக ஊழியம் செய்தவர். கருப்பின போராட்டத்தில் பங்கு பெற்றவர்.

அவரிடம் இந்த விஷயம் பற்றி விசாரித்தபோது, “என்னப் பற்றி எதற்கு தவறாக எழுதணும்? அதில் எள்ளளவு மட்டுமே உண்மை இருக்கிறது. அவருடைய செயலாளராக இருந்திருக்கிறேன். கென்னடியின் இறுதி ஊர்வலத்தில் அவரை தூக்கும் பாக்கியம் பெற்றிருக்கிறேன். இந்த எழுபத்தெட்டு வயதில் விக்கிப்பிடியாவைக் கற்றுக் கொண்டு, இந்த அவதூறை நீக்குவது எப்படி?” என்று சோர்வும் வருத்தமும் சேறடித்தவர் எவர் என்று கூட தெரியாத அச்சமும் கலந்து பேசியிருக்கிறார்.

கென்னடி குறித்த விக்கி பக்கத்தில் இந்த வடிகட்டின பொய் நூற்றி முப்பத்திரண்டு நாள்கள் நிலைத்து லட்சக்கணக்கானோர் பார்வைக்கு சென்றுள்ளது. வழக்கம் போல் இதை ஆதாரமாகக் கொண்டு ஆன்ஸ்வர்ஸ்.காம், கூகில், ரெபரன்ஸ்.கொம் போன்ற கல்லூரி மாணவர்களும் பள்ளிச் சிறுவர்களும் பயன்படுத்தும் தளங்களும் ததாஸ்து சொல்லி திக்கெட்டும் தகவலைப் பரப்பி இருக்கிறது.

நீங்கள் சுடப்பட்டால் உங்களுக்கே தெரியாது. உங்களின் கேரக்டர் கொலையுண்டதை ஊரார் அறிந்திருப்பார்கள். நம் குணச்சித்திரம் சின்னாபின்னமானது நோர்வே முதல் நமீபியா வரை பரவியிருக்க நமக்கு ரொம்பவே பொறுமையாக அறிவிக்கப்படும். அதுவும் நாமே கண்டுபிடித்தால் மட்டுமே சாத்தியம்.

இந்த மாதிரி இழுக்குகளில் இருந்து சாமானியர்களைக் காப்பாற்றவே சட்டமும் ஒழுங்கும் செகஷன் அறுப்பத்தி ஆறு ஏ-வை உண்டாக்கி இருக்கிறது.

ஆனால், 66ஏ நியாயமாக உபயோகமாகிறதா என்றால், இந்தியாவின் எல்லா சட்டமீறல்கள் போலவே அதுவும் மக்களுக்கு பிரயோசனமின்றி போகும் உபத்திரவ பட்டியலில் +1

தண்ணியடிக்காத புலம்பல்: கொடுமை சீரீஸ் – 1

மதுரை நியூ காலேஜ் ஹவுசில் கூட மிஞ்சியதை வைத்துதான் கொத்து பரோட்டா போடுவார்கள் என்பதை ஒப்ப சில பதிவுகளைப் பார்க்கும்போது நொந்து நூடுல்ஸ் ஆவதை பதிவு செய்யும் திட்டத்தில் முதல் என்ட்ரி: எழுத்தாளர் தாமரைமணாளன்

இந்தப் பரிந்துரைக்கு உங்கள் பதிவு உரித்தாக ஆறு காரணங்கள்:

  1. ஜெயமோகன், சாரு போன்றோருடன் எடுத்துக் கொண்ட ஒளிப்படம் உங்கள் பக்கமுகப்பில் நேம்ட்ராப் செய்யவேண்டும்
  2. விக்கிப்பீடியா தொகுப்பிற்குக் கூட லாயக்கில்லாத தகவல்கள் கொடுக்க வேண்டும்.
  3. முன்னுமொரு காலத்திலே என்று துவங்க வேண்டும்.
  4. ஜெனரலைஸேஷன் நிறைந்திருக்க வேண்டும்.
  5. தற்கால முக்கிய எழுத்தாளர்களின் மோசமான படைப்புகளை அடையாளம் காட்டாமல், எப்பொழுதோ இறந்து, எழுந்து அடிக்க வராத சந்ததியைச் சார்ந்தவரை சாடும் படைப்பாக இருக்க வேண்டும்.
  6. அழகாபுரி அழகப்பன், ஜெகசிற்பியன் என்று டங்குவார் கழன்றவர்களையும் கவனிக்கும் ஆழ்வாசகரின் அடர்த்தியான ஆக்கமாக வேண்டும்.

இந்த மாதிரி பதிவு படித்து அழுது தொலைப்பதற்கு பதிலாக,

  • கேபிள் சங்கரின் சினிமா விமர்சனத்தையோ, எட்ஜ் கருத்துப் பத்தியையோ படிக்கவும் …
  • ஆர்வி ஆலிவ் கிட்டரிட்ஜ் போன்ற ஆங்கிலப் புத்தகங்களைப் படிக்கவும் …

மைல்கல் மைனர்களைப் பிரார்த்திக்கின்றேன்.