Tag Archives: வானொலி

Tamil Podcasts: Novels, Classics and Literature for Listening

சொல்வனம் ஒலிவனம் வழியாக: தரையில் இறங்கும் விமானங்கள் – இந்துமதி : ஒவ்வொரு புதன்கிழமையும் கேட்கத் தவறாதீர்கள்!

கூடிய சீக்கிரமே, Saraswathi Thiagarajan சரஸ்வதி தியாகராஜன் ‘தினம் ஒரு தொடர்’ போர்டு போட்டுவிடுவார்.

இப்போதைக்கு இவற்றை ஒலியும் ஒளியுமாகக் கொடுத்து வருகிறார்:
1. இரா. முருகனின் ‘மிளகு’ – #சொல்வனம் தளத்தில் வெளியாகும் பெருங்காப்பியம் (மாதத்தின் இரண்டாம் ஞாயிறு மற்றும் நான்காம் ஞாயிறு)

2. கரிச்சான் குஞ்சு எழுதிய பசித்த மானிடம்: செவ்வியல் இலக்கியங்கள்

3. தி. ஜானகிராமனின் அம்மா வந்தாள் நாவல்: காலச்சுவடு கிளாசிக்

4. இரா. முருகனின் ‘தினை’ – புத்தம் புதிய புதினம்: திண்ணை (வாரந்தோறும்)

5. அதிரியன் நினைவுகள் – #solvanam Series (மாதத்திற்கு இரு முறை)


6. ராக் தர்பாரி – சொல்வனம் | ஶ்ரீலால் சுக்ல | இந்தி | சரஸ்வதி ராம்நாத் | தமிழாக்கம் : வெள்ளிதோறும்

இது தவிர சமகாலச் சிறுகதைகள், அஞ்சலிகள், சுவாரசியமான கட்டுரைகள், சொல்வனம் இதழில் வெளியாகும் இடுகைகள் எல்லாமும் சொல்வனம் ஒலி/ஒளிவனத்தில் கிடைக்கிறது.

https://www.youtube.com/@thamils/playlists

அவருடன் ஜமீலா. ஜி என்பவரும், வித்யா அருண் என்பவரும் கூட இணைந்து செயல்படுகிறார்கள். சுகா எழுதிய கட்டுரைகளை வித்யா சுபாஷ் வாசித்து இருந்தார்.

தரையில் இறங்கும் விமானங்கள் இந்துமதியால் 1982-ல் ஆனந்த விகடன் இதழில் தொடராக எழுதப்பட்டு பின்னர் நூல்வடிவம் பெற்றது. பொதுவாசிப்புக்குரிய படைப்பு எனினும் நாடகத்தன்மை கொண்ட நிகழ்வுகளோ செயற்கையான உணர்வுகளோ இல்லாமல் எளிய உரையாடல்கள், ரசனையின் பரிமாற்றங்கள் வழியாகச் சென்று நிறைவுறுகிறது. எண்பதுகளின் உணர்வுநிலைகளை மிகச்சரியாக வெளிப்படுத்திய பொதுவாசிப்புக்குரிய நூல்களில் ஒன்று என அடையாளப்படுத்தப்படுகிறது (நன்றி: ஜெ. விக்கி)

இந்த நாவல், துரை இயக்கி அஜித் நடித்த திரைப்படமான ‘முகவரி’யை எனக்கு நினைவுப்படுத்திக் கொண்டேயிருந்தது. இசைத்துறையில் ஆர்வமும் திறமையும் கொண்ட ஓர் இளைஞன் சினிமாவில் முட்டி மோதி தோற்றுப் போய் குடும்பச் சூழல் காரணமாக இறுதியில் பணிக்குச் செல்லும் கதை. இந்துமதியின் நாவலில் இருந்து துரை தூண்டுதல் பெற்றிருந்தாலும் ஆச்சரியமில்லை. அண்ணன், அண்ணி பாத்திரம் உட்பட திரைப்படத்திற்கும் நாவலுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. இந்த நாவல், தொலைக்காட்சி தொடராக படமாக்கப்பட்ட போது விஸ்வம் பாத்திரத்தில் ரகுவரன் நடித்திருந்தார் என்று நினைவு. ஆனால் ‘முகவரி’யில் நாயகனுக்கு அண்ணனாக, அதாவது பரசு பாத்திரத்தை அவர் ஏற்றிருந்தார். (நன்றி: பிச்சைப்பாத்திரம் சுரேஷ் கண்ணன்)

வலைபரப்பு – உங்களுக்குப் பிடித்த பாட்காஸ்டிங் வலையொலி நிரலி வழியாகக் கேட்கலாம்
காணொளி – யூடியுப் கன்னல் வழியாகப் பார்க்கலாம்.

சொல்வனம் ஒலிவனம் வழியாக: தரையில் இறங்கும் விமானங்கள் – இந்துமதி : ஒவ்வொரு புதன்கிழமையும் கேட்கத் தவறாதீர்கள்!

ஒன்லி எ கேம் – ஆட்டம் முடிவு

ஞாயிற்றுக்கிழமைகளில் பாட்டி வீட்டிற்கு செல்வோம். அவள் விவித பாரதியின் சாயாகீத் ரசிகை. அங்கே கேட்க ஆரம்பித்த “தேரே பினா ஜிந்தகி ஸே கோயி… ஷிக்வா தோ நஹி”, பிறிதொரு அந்தாக்‌ஷரியில் கை கொடுத்தது.

அந்தப் பாடலை சற்றே பார்ப்போம். நாயகனும் நாயகியும் ரகசியமாக சந்திக்கிறார்கள். நாயகியைப் பொறுத்தவரை அவன் மட்டும் அவளுடைய வாழ்வில் குறுக்கிடா விட்டால், அவள் வாழ்வு தெளிந்த நதியாக, கொந்தளிப்புகள் இல்லாமல் அமைதியான ஓடத்தில் மிதந்து சென்றிருக்கும். ஆனால், அவன் இல்லாவிட்டால், வாழ்க்கை என்பது வாழ்வாக இருந்திருக்காது.

நான் நாவலும் சிறுகதையும் படிக்க ஆரம்பித்ததே, அதை ஏதாவதொரு பெண்ணிடம் கொடுத்து அவளின் மனதைத் தொட்டு விடலாம் என்ற எண்ணத்தில்தான். “நில்… கவனி… காதலி” என்று ராஜேஷ் குமார் கொடுத்து பார்த்தேன்; பலிக்கவில்லை. அடுத்த அஸ்திரம்… ‘பாட்டுக்கு பாட்டெடுத்து’ அந்தாக்சரி விளையாட்டு. இந்தப் பாடல் என் உணர்வை, குறிப்பால் உணர்த்த உதவியது.

அந்த மாதிரி இன்னொரு அற்புதமான ரேடியோ நிகழ்ச்சி Only A Game.

அலுவலில் அரசியல் பேச முடியாது. எல்லோரும் தீவிர கொள்கைவாதிகள். என் உடன் வேலை பார்க்கும் டீமில் ஐந்து பேருக்கு ஐந்து கொள்கை; ஒரே அணியில் துப்பாக்கி வைத்திருப்பதற்கு ஆதரவாக ஒருவர்; காவல்துறையின் பணிக்கு அதி தீவிர ஆதரவாளர் இன்னொருவர்; பாரதப் பிரதமர் நரேந்திர மோடியையும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப்பையும் வெறுப்பவர் பலர்; சட்டம் மற்றும் ஒழுங்கு முக்கியம் என்று உறவினர்களை போருக்கும் காக்கி சட்டைக்கும் பலி கொடுத்தவர் சிலர்.

எனவே, எல்லோருக்கும் பொழுதுபோக்கான பேச்சு என்பது – “விளையாட்டு”. நேற்று ரெட் சாக்ஸ் எப்படி பேஸ்பால் ஆடினார்கள்? இந்த வருடம் பாஸ்டன் செல்டிக்ஸ் கூடைப்பந்தில் சாதிப்பார்களா? பனிச்சறுக்கு ஹாக்கியில் ப்ருயின்ஸ் எவ்வாறு கெலிப்பார்கள்? எல்லாவற்றிற்கும் மேலாக நியு இங்கிலாந்து பேட்ரியாட்ஸ், டாம் ப்ரேடி, பெலிசிக் எல்லோரும் போங்காட்டம் ஆடுகிறார்களா அல்லது அழுகுணி ஆட்டத்தில் அமெரிக்க கால்பந்தின் மன்னர்களாக இருக்கிறார்களா?

இப்படி பேச ஒரு நிகழ்ச்சி… ஒலிப்பதிவு… பாட்காஸ்டிங்… தேவை. அதை டபிள்யூ.பி.யூ.ஆர். வானொலியின் “ஒன்லி எ கேம்” நிகழ்ச்சி அருமையாக பூர்த்தி செய்தது.

அலுவலுக்குப் போக ஒரு மணி நேரம். திரும்பி வருவதற்கு இன்னொரு மணி நேரம். அப்போது கேட்பதற்கென்று பிரத்தியேகமாக சில நிகழ்ச்சிகளை தேர்ந்தெடுத்து வைத்திருப்பேன்:

  • வெயிட் வெயிட்… டோண்ட் டெல் மீ
  • ரேடியோ லாப்
  • ஃப்ரீகனாமிக்ஸ்
  • டெட் டாக்ஸ்
  • ஷங்கர் வேதாந்தம் வழங்கும் ஹிட்டன் பிரெயின்

அந்த வரிசையில் இந்த ஒலிபரப்பிற்கு சிறப்பான இடம் இருந்தது. வெறுமனே ஸ்கோர்களை ஒப்பிக்காமல், அந்த ஆட்டக்காரர்களின் கதையையும் சொல்லியது. சட்டென்று பருந்துப் பார்வை பார்த்து, பழைய சரித்திரத்தை விவரித்து, விஷயத்தைப் புரிய வைத்தது. பெரிய பெரிய அணிகளின் ஆட்டங்களைப் பற்றி மட்டும் அலசாமல், பக்கத்து வீட்டுப் பையன் ஆடிய விதத்தை அவ்வப்போது கண்முன்னே காதின் வழியே உபாசித்தது.

எத்தனையெத்தனை கதைகள்! எவ்வளவு அணுக்கமான சம்பவங்கள்!! நெகிழவைக்கும் உண்மை நிகழ்வுகளின் குரல்கள்!!!

ஆண்கள் மட்டுமே ஆடிய விளையாட்டுகள் எல்லோரின் கவனத்தைக் கவர்ந்தபோது, மகளிர் கலந்து கொண்ட போட்டிகள், அவர்களின் சாதனைகள், அந்தப் பெண்களின் போராட்டங்கள் என்று என்.பி.ஆர். ரேடியோவிற்கே உரிய தனித்தன்மையை நிலைநாட்டியது. மியா ஹாம், க்றிஸ்டீன் லில்லி, ப்ரியானா ஸ்கரி எனப் பல பெண் நட்சத்திரங்களை முதன் முதலாக அறிமுகப்படுத்திக் கொண்டது இவர்கள் வழியாகத்தான். 1999ல் உலகக் கோப்பை வீரர்களாக அவர்கள் உலகம் அறியப்படுவதற்குமுன் அலைவரிசையில் அவர்களை உலாவவிட்டு கண்முன்னேக் கொணர்ந்திருந்தார்கள்.

உச்சத்தில் இருக்கும்போது விடைப்பெற்றுவிட வேண்டும். ஒரு நிகழ்ச்சியோ பத்திரிகையோ நடிகரோ – தன் தொழிலில் சாதித்துக் கொண்டிருக்கும்போதே ஓய்வு பெற்று, வெற்றிடத்தை உணர்த்த வேண்டும்.

உணர்த்தி இருக்கிறது – “இது வெறும் விளையாட்டு மட்டுமே”.

எந்திரனும் நானும்

ரொம்ப நாள் கழித்து ‘மச்சீ’ என்றழைக்கும் உரிமையை கல்லூரி செஷன்ஸ் நீதிமன்ற அனுமதி பெற்றிருந்த தோழர் அழைத்திருந்தார்.

“எந்திரன் பார்த்தாச்சாடா?”

“இனிமேல் ‘பாபா’ குறித்த பயம் போயாச்சு. அப்படியே ‘முள்ளும் மலரும்’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’னு பல்லவி பாடும் ஷாஜி பிள்ளையாண்டர்களுக்கும் புதுசா ஒண்ணு சேர்ந்துகிடுச்சு.”

எந்திரன் பிரச்சாரங்களை பட்டியல் போட்டால்:

  1. சன் டிவி அராஜகம்: மாறன் சகோதரர்களின் அசுர பலம்
  2. ஐஸ்வர்யா ராஜ் சிலாகிப்பு: எப்பொழுது, எங்கே முத்தம்
  3. சூப்பர் ஸ்டார் பன்ச்: ரோபோ நடிக்கும் அற்புதம்
  4. ஷங்கர் அரசியல்: பெண்ணியம் முதல் காறியுமிழும் புணர்ச்சி
  5. சுஜாதா சுட்டார்: அறிபுனை கதை அணிவகுப்பு ஜெராக்ஸ்
  6. ரெஹ்மான் நாதம்: டமார மொழி
  7. பெரும் பொருட்செலவு: சிறுவியாபாரிகளை நசுக்கும் பட்ஜெட்
  8. ரசிகரடிப்பொடி மனநிலை: பா.ம.க., பாஜக + தமிழக அரசியல்

இப்படியாக தமிழிலிருந்தே தமிழுக்கு காப்பியடிக்கும் விமர்சகச் சூழலில் எந்திரமயமான பயம் தொற்றிக் கொண்டது.

  1. சன் டிவி ரோபாட்: சீரியலுக்கு வசனம் முதல் சீரிய சிந்தனை வரை
  2. ஐஸ்வர்யா ராஜ் எந்திரம்: நாட்டுக் கட்டை
  3. சூப்பர் ஸ்டார் சக்கரம்: தன்னைத் தானே எறித்துக் கொள்ளும் சூரியன்
  4. ஷங்கர் பொறி: பணம் செய்யும் மெஷின்
  5. சுஜாதா சூத்திரம்: ஏற்கனவே தமிழ் எழுத்துலகத்தை ஆக்கிரமிக்கும் எழுத்து சுனாமி
  6. ரெஹ்மான் கருவி: இயந்திரமே இயந்திரத்தை இயற்றும் மீட்டும்
  7. பொருட்செலவு விறிசு: என் இனிய இயந்திராவிற்கு அடுத்து ஜீனோ
  8. ரசிகரடிப்பொடி உபகரணம்: இது மட்டும் ரோபோ அல்ல

எந்திரம் பத்திரம். கூடிய சீக்கிரமே எந்திரக் குழந்தையும் ‘இந்தப் பாடலைப் பாடுபவர் உங்கள் எந்திரனின் வாரிசு’ என்று வெள்ளித்திரையில் வலம் வரும்.

சற்றே தொடர்பிருந்திருக்கக் கூடிய குரல் பதிவு: Conquering A Fear Of Robots : NPR