இந்த வார தமிழோவியத்தில் இருந்து
பாபா வாக்கு
அருள்வாக்கு
பெயரில் என்ன இருக்கிறது? ஜோசியரைக் கேட்டால் விஜய்காந்த்தின் ‘பெரியண்ணா’வை Periannaha என்று மாற்றியது போல் ஏதாவது நியுமராலஜிப்படி திருகிவிடுவார்.
உளவியல் ஆராய்ச்சியாளர்களிடம் கேட்டால் இனிஷியலில்தான் எல்லாமும் இருக்கிறது என்று முதலெழுத்தை கைகாட்டுகிறார்கள்.
நேரு ஏன் நியு டில்லியை ஆண்டார்? காந்திக்கும் காங்கிரசுக்கும் என்ன தொடர்பு? சென்னைக்கு செயலலிதாவுக்கும் எப்படி பொருத்தம்?தன்னையறியாமல் அன்னி பெசன்ட் பாரதம் நோக்கி வந்தார் என்று நிலைநிறுத்தாத குறை.
நம் முதலெழுத்தைப் பொறுத்து, அதே எழுத்துடைய ஊர், உறவினர், உடைமை எல்லாமே நாடிச் செல்கிறோம்.
பாலாஜி பாஸ்டனில் தங்குவதும், பாலாம்பிகா பெயரில் மயங்குவதும், பார்ன்ஸ் அன்ட் நோபிளில் புத்தகம் வாங்குவதும் சகஜம். கலைஞர் கருணாநிதிக்கு எந்த மகவு பேல் பாசம் அதிகம் என்பது உங்களுடைய வீட்டுப்பாடம்.
எம்.பி.ஏ மாணாக்கர்களிந் பெயர்கள் ‘C’ அல்லது ‘D’யில் ஆரம்பித்தால் கம்மி மதிப்பெண்கள் எடுத்திருக்கிறார்கள். வழக்கறிஞர்களில் ‘A’ அல்லது ‘B’யில் பெயர் துவங்குபவர்கள் ஜோராகப் படித்து சி/டி இனிஷியல்காரர்களை விட நல்ல கிரேடு வாங்கியிருக்கிறார்கள். அப்பா இனிமேல் ‘ஏண்டா ஃபெயிலானே?’ என்று பிரம்பை தூக்கினால், ‘என் பெயரை ஒழுங்கா வைப்பா!’ என்று சொல்லலாம்.
ஆதாரம்: Moniker Maladies: When Names Sabotage Success. Leif D. Nelson & Joseph P. Simmons
சுட்ட வாக்கு
வகுப்புவாதத்தைத் தீனியாகக் கொண்டுதான் அந்த இயக்கம் இந்த அளவு வளர்ந்தது.
“உயிரும் மயிருமில்லா
உருவச் சிலைகளுக்கு
வயிர முடிகள் ஏனடா?”
“வாயும் வயிறுமில்லா
சாமிக்கு மானியமாகவே
வயலும் வாய்க்காலும் ஏன்டா?”
— என்றும்,
“சீரங்கநாதரையும்
தில்லை நடராசரையும்
பீரங்கி வைத்துப்
பிளப்பதுவும் எக்காலம்?”
— என்றும் அவர்கள் பாட்டுப் பாடினார்கள்.
“ஏரோட்டும் மக்களெல்லாம்
ஏங்கித் தவிக்கையிலே
தேரோட்டம் எனுனக்கு
தியாகராசா?”— என்று கருணாநிதி பாட்டெழுதினார்.
அதற்குப் பதிலாக காங்கிரஸ்காரர்,
“ஏரோட்டும் மக்களெல்லாம்
ஏங்கித் தவிக்கையினிலே
காரோட்டம் ஏனுனக்குக்
கருணாநிதி”
— என்று பதில் பாட்டெழுதினார்
நன்றி: கண்ணதாசனின் வனவாசம்
பட வாக்கு
‘தி நியூ யார்க்கர்’ இதழிந் அட்டைப்படத்தை மேற்படி படம் அலங்கரித்திருப்பதை ஒபாமாவிடம் கண்டித்து இருக்கிறார்.
- பராக் ஒபாமாவிற்கு முஸ்லீம் முண்டாசு,
- மனைவி மிஷேல் ஒபாமாவிற்கு ருசிய துப்பாக்கி;
- குளிர் காய எரியும் நெருப்பில் அமெரிக்கக் கொடி;
- வெள்ளை மாளிகையில் ஒசாமா பின் லாடன் உருவப்படம்;
- ஆப்பிரிக்க – அமெரிக்கர்களின் சிகையலங்காரத்தையும்
- இஸ்லாமியச் சின்னங்களையும்
வைத்து கிண்டலடிப்பவர்களை கிண்டலடிப்பதுதான் நியு யார்க்கரின் குறிக்கோள். ஆனால், ஒபாமாவோ, ‘வெறும் வாயை மெல்பவர்களுக்கு’, சூயிங் கம் கொடுத்திருக்கிறது ‘நியு யார்க்கர்’ என்கிறார்.
பண வாக்கு
விலையுயர்ந்த வலையக முகவரிகளின் பட்டியல்
- Sex.com $12 million
- Porn.com $9.5 million
- Business.com $7.5 million
- Diamond.com $7.5 million
- Beer.com $7 million
நன்றி: ஃபோர்ப்ஸ்
ட்விட்டர் உரை வாக்கு
முதலாளி கூலிக்காரனை நடத்துவது போல் மக்கள் நலனில் அக்கறை செலுத்தும் அமெரிக்கா, தொழிலாளியிடம் வரி போடும்போது சோஷலிசம் பேசும். – லேக்னி & ஃப்ரெட் வில்சன்
பாடல் வாக்கு
ப்ரம்மம் ஒக்கடே பரப்பிரம்மமொக்கடே
அரசனா இருக்கட்டும்; ஆண்டியா இருக்கட்டும்; தூக்கம் ரென்டு பேருக்கும் ஒண்ணுதான்!
பிராமனணா இருக்கட்டும்; தலித்தா இருக்கட்டும்; நடக்கிறது இந்த பூமி மேலத்தான்!
அறுநூறு வருஷம் முன்பு தாழ்த்தப்பட்டவர்கள் திருமலைக்குள் நுழைய வைத்த அன்னம்மாச்சார்யாவில் பாடலை ஜனரஞ்சகமாக இயக்கியிருக்கிறார்கள்.