Tag Archives: வடிவம்

கனலி – சில எண்ணங்கள்

சுனீல் கிருஷ்ணன் பதிவில் (சொல்வனம் ரொபர்டோ போலான்யோ இதழுக்கு வாழ்த்து | ஒரு துளி பிரபஞ்சம் …) இந்தப் பட்டியல் கண்ணைக் கவர்ந்தது:

 தமிழினி, கனலி, வல்லினம், யாவரும், உயிர்மை,  வாசகசாலை என சொல்வனத்திற்கு வெகுகாலம் பின்னர் உருவாகி வந்த எல்லா இதழ்களுக்கும் ஃபேஸ்புக்கில் / சமூக ஊடகத்தில் வலுவான தளம் உள்ளது.

இந்த இதழ்கள் ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு என் எண்ணங்களைப் பகிர உத்தேசம். முதலில் கலை இலக்கிய இணையதளம் | கனலி

உரிமைத்துறப்பு

இந்தப் பதிவின் நோக்கங்கள்:

  1. என்னை எரிச்சலூட்டும் விஷயங்களைப் பகிர்வது
  2. வசதிக்குறைவான விஷயங்களை சுட்டுவது
  3. பிற தளங்களில் இருக்கும் நடைமுறையை அனுசரிக்க வேண்டுவது
  4. இந்தப் பதிவு கனலி வலைத்தளத்திற்கான பரிந்துரைகள் மட்டுமே என்றாலும் சொல்வனம் உட்பட அனைத்து வலைத்தளங்களுக்கும் சுட்டுவது

பொறுப்புத் துறப்பு

  • சொல்வனம் போன்ற தளங்களிலும் இதே போல் பல குறைகள் இருக்கின்றன. அவற்றில் சில்வற்றையாவது பொதுவெளியில் உரையாடலுக்கு நேரம் கிடைக்கும்போது முன்வைக்கிறேன்.
  • சொல்வனம் போன்ற தளங்களில் இருக்கும் குறைகளையும், அந்தத் தளங்களை மேம்படுத்தும் ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். வெப் அட்மின் ஆக இருப்பதால், நம் குறைகள், நமக்கேத் தெரியாமல் போகின்றன.
  • இந்தப் பதிவில், கனலி தளைத்தில் வெளியான மொழியாக்கத்தின் தரம், புனைவுகளின் முக்கியத்துவம், கட்டுரைகளின் செறிவு போன்றவற்றை கவனிக்கவில்லை. அதற்கு இன்னொரு தடவை அனைத்து விஷயங்களையும் மீண்டும் கனலியில் வாசித்து விட்டு வருகிறேன்.

மேம்படுத்த வேண்டியவை

1. வலது பக்க மவுஸ் பொத்தான் இயங்கவில்லை

ரைட் க்ளிக்கை கனலி அனுமதிப்பதில்லை. நான் ஒரே சமயத்தில் நாலைந்து டாப்-களைத் திறந்து படிப்பவன். வலது பக்க சொடுக்கை நீக்குவதால் எந்த வித லாபமும் கிடையாது. இதனால் காப்புரிமையை பாதுகாக்க முடியாது. திருட நினைப்பவர்கள் எப்படி இருந்தாலும் மேட்டரை உருவி விடுவார்கள்.

இது ஒரு மோசமான வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது.

தேடுவதில் கூட பிறிதொரு இடத்தில் எழுதியதை, வெட்டி எடுத்து, ரைட் பொத்தானை சொடுக்கி ஒட்டுவது பலரின் வழக்கம். இன்றைக்கு கணினியில் இப்படியெல்லாம் எழுத்தைப் பாதுகாக்க முடியாது. உங்களின் எழுத்து அதிகம் வாசிக்கப் பட வேண்டும்; அதன் மூலம் வருவாய் வர வேண்டும் என எண்ணுவது நியாயமே. அதற்கான வழிகள் பல உள்ளன. அதையெல்லாம் நாடாமல், ரைட் க்ளிக்கை நீக்குவது முடக்கும் செயல்பாடு.

நமக்குப் பிடித்த விஷயங்களை மேற்கோள் காட்ட இந்த காபி + பேஸ்ட் நுட்பத்தை பயன்படுத்துகிறோம். நறுக்குகளை சேமிப்பது என்பது காலந்தோறும் நாம் படிக்கும் வழக்கம். புத்தகத்தின் வெள்ளையோரங்களில் குறிப்பு எழுதி வைப்போம். அவ்வாறு ரசித்த சொற்றொடர்களை பிரதியெடுக்கும் வசதி கொடுக்காமல் இருப்பது அக்கிரமம்.

இவ்வளவு சொல்லிவிட்டு எப்படி சரக்கை சுடுவது என்று சொல்லாமல் இருப்பது உகந்ததல்ல. கனலியில் இருந்து கோப்பை எடுப்பது மிக எளிது:

  1. கண்ட்ரோல் + எஸ் பொத்தானை அமுக்குங்கள். அதன் மூலம் உங்கள் கணினியில் மேட்டர் இறங்கும்.
  2. அதை உங்களின் நோட்பேட் போன்ற எடிட்டரில் திறக்கவும்
  3. இப்பொழுது வேண்டிய விஷயங்களை வெட்டி எடுத்துக் கொள்ளலாம்
  4. இதற்கென்றே பிரத்தியேகமான நிரலிகள் எக்கச்சக்கமாய் இருக்கின்றன – அவற்றையும் பயன்படுத்தி, மொத்த தளத்தையும் கூகிள்/யாஹூ/மைக்ரோசாஃப்ட் பிங் போன்ற தேடுபொறிகள் உருவுகின்றன
  5. கனலியில் இந்த மாதிரி சுடுவது எளிது. பிரதிலிபி போன்ற தளங்கள் இந்த மாதிரி மோசமான கெடுபிடிகளின் அடுத்த கட்டம். அவர்களிடமிருந்தும் ஸ்க்ரீன் ஸ்க்ரேப் செய்யும் வித்தைகள் எளிதே.
  6. கள்ளன் எப்பவுமே பெருசு; காப்பான் எப்பவுமே சிறுசு.

2. பார்த்தவர்களின் எண்ணிக்கை – Post Views

பார்வையாளர் வருகை என்பது இலக்கிய இதழ்களில் அப்பட்டமான பொய். இது மாயத் தோற்றத்தை உருவாக்கும். இணைய இதழுக்கு வருபவர்களில் தேடுபொறி யார், உண்மையான மனிதர் யார் என்று பிரித்தறிவது இயலவே இயலாத காரியம். முகமூடி போட்டுக் கொண்டு வருபவர்கள், ப்ராக்ஸி மூலம் வருபவர்கள், தங்களில் தளம் இயங்குகிறதா என பரிசோதிக்க வருபவர்கள், வலையகத்தை சீக்கிரமாகத் தருவதற்காக உள்ளூர் சி.டி.என். மூலமாக இறக்கிக் கொள்பவர்கள், அது தவிர சமூக மிடையங்கள் (ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவை), சுட்டிகளை சோதிக்க வரும் பாட்-கள் என எல்லோரும் இந்தக் கணக்கில் சேர்வார்கள்.

இது தவிர பேஜ் ஹிட்ஸ் என்னும் மாயமானைத் துரத்துவதற்கென்றே நிரலிகள் கூட எழுதலாம். (எ.கா.: Explained: How auto-refresh on your website affects your audience data).

இந்த வருகையாளர் எண்ணிக்கையை பகிரங்கமாகச் சொல்வதால் எந்த இலாபமும் கிடையாது. நான் நூற்றுக்கு 82 மதிப்பெண்… நீ எவ்வளவு என்று கேட்பது போல் சின்னபிள்ளைத் தனமாக இருக்கிறது. எத்தனை பேர் வந்தார்கள் என்று கணக்கிடுவது அரதப் பழசு. எத்தனை பேர் எங்கே கண்ணை செலுத்தினார்கள்; எவ்வளவு நேரம் வாசித்தார்கள்; எப்படி எந்தப் பத்திகளில் ஆழ்ந்து ஊன்றி கவனித்தார்கள்; எப்படி ஸ்க்ரால் செய்தார்கள்; எங்கே கவனம் தப்பியது என்றெல்லாம் கூட கணக்கிட கூகிள் அனலிடிக்ஸ் போன்ற பல தளங்கள் இருக்கின்றன.

எத்தனை பேர் க்ளிக்கினார்கள் என்பதை விட எவர் படிக்கிறார்கள் என்பதும் எப்படி உள்வாங்கினார்கள் என்பதுமே முக்கியம் என்பதை இலக்கிய இதழ்களாவது வலியுறுத்த வேண்டும். ஃபேஸ்புக் மூலமாக ஆயிரக்கணக்கான நண்பர்களைப் பெற்றிருப்பவர்களுக்கு இந்த எண்கள் முக்கியமாகத் தெரியலாம். ஆனால், கனலி போன்ற தீவிர இதழ்கள் இந்த எண்ணை நிராகரிக்க வேண்டும்.

வெறும் வாசகர் எண்ணிக்கை முக்கியமென்றால், பத்திரிகை.காம் வைக்கும் தலைப்புகள் போல் சுண்டியிழுத்து விடலாம்; ஒன் இந்தியா போடும் கவர்ச்சிகரமான துணுக்குகள் மூலம் க்ளிக்க வைக்கலாம். வாசகர் எண்ணிக்கையை கூட்டிக் காட்டுவது வியாபாரிகளின் நோக்கம். பரபரப்பு என்பது விளம்பரதாரர்களுக்குத் தேவை. வாசகர் எண்ணிக்கை என்பது விளம்பரத்தை நாடுவோருக்கான தேவை.

3. எழுத்தாளர் பெயர்

எழுதியவர் பெயர் எப்பொழுதுமே கனலி என்றே இருக்கிறது. எனக்குப் பிடித்த எழுத்தாளர் “சித்துராஜ் பொன்ராஜ்” என வைத்துக் கொள்வோம். அவர் எழுதிய எல்லாம் மட்டும் வாசிக்க விழைகிறேன். இப்பொழுது அப்படி என்னால் பருந்துப் பார்வை பார்க்க முடிவதில்லை. தேடினாலும் கிடைப்பதில்லை.

4. நிலை நிற்றல் – இயைபு

ஆசிரியரின் பெயரை தலைப்பின் அடியில் போடுவது மரபு. ஆசிரியரின் புகைப்படத்தைப் போடுவது சற்றே முகத்திலடித்தது போல் இருக்கிறது. சில எழுத்தாளர்களுக்கு நிழற்படம் போடுவதும் சிலருக்கும் போடாமல் இருப்பதும் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது.

ஒரே மாதிரி வடிவமைப்பை எல்லாருக்கும் பின்பற்ற வேண்டும். நர்மி எழுதும் தொடர் ஒவ்வொன்றுக்கும் அவரின் ஒவ்வொரு புகைப்படங்கள் போடுவது; பாலா கருப்பசாமிக்கும் கமலக்கண்ணனுக்கும் அவ்வப்போது அவர்களின் படங்கள்; அவ்வப்போது வேறு பொருத்தமான படங்கள் என்று முரன்பாடாக இருக்கக் கூடாது.

  • ஒவ்வொரு பதிவுக்கும் எழுத்தாளரின் பெயர்
  • ஒவ்வொரு பதிவின் முடிவில் (கட்டாங்கடைசியாக) அந்த எழுத்தாளரைக் குறிக்கும் ஒளிப்படம் அல்லது அவதாரப் படம் (சிறிய ஸ்டாம்ப் அளவில்)
  • ஒவ்வொரு பதிவின் துவக்கத்தில் – அந்தப் பதிவை, எழுத்தை, கதையை ஒட்டிய பெரிய ஓவியம் அல்லது ஒளிப்படம் (எடுத்தவர் (அ) வரைந்தவர் யார், காப்புரிமை எவருக்கு போன்ற விவரங்களை படத்தின் அடியில் சொல்ல வேண்டும்)

5. தொடர்கள்

தொடர்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரே ஒரு சுட்டி கொடுத்தால் போதுமானது. ஒரு தொடருக்கு ஒரு உரல். அந்த உரலுக்குள் சென்றால், அந்தத் தொடரின் அனைத்து பகுதிகளுக்குள்ளும் செல்லும் வசதி என அமைக்கலாம்.

இப்போதைய நிலையில் தொடர் என்று பட்டியலிடப்பட்ட அனைத்தும் கூட்டமாக ஒரே இடத்தில் கொத்தாக தேதி வாரியாக இருக்கின்றன. ஒரு தொடரின் முந்தைய பகுதிக்கும் அடுத்த பகுதிக்கும் நடுவே முன்பின்னாக எளிமையாக சென்று வர முடிவதில்லை.

கீழே பாருங்கள். இது தொடரின் ஆறாம் பகுதி. நான் ஐந்தாம் பகுதிக்கு செல்ல விரும்புகிறேன். இது எளிதாக வேண்டும். மூன்றாம் பகுதியில் இருந்து அடுத்த பகுதியான நான்காம் பகுதிக்குச் செல்ல “ஏழு கடல், ஆறு மலை” தாண்டக் கூடாது.

6. ஆங்கிலம்

எங்கேயும் தமிழிலேயே தளம் அமைய வேண்டும். மறுமொழி சொல்வதற்கான பெட்டிகள் ஆங்கிலத்தில் அமைந்துள்ளன. ”Home” போன்ற சொற்றொடர்களை தமிழில் “முகப்பு” என்றோ “இல்லம்” என்றோ “வாயில்” என்றோ அழைக்குமாறு மாற்றலாம்.

7. தொடர்புடைய பதிவுகள்

கவிதைகளுக்கான பதிவில் (சார்லஸ் சிமிக் கவிதைகள் | கனலி) கீழே காணும் தொடர்பான பதிவுகள் காணக் கிடைக்கின்றன. மொழிபெயர்ப்பு கவிதையை வாசிப்பவர், அப்படியே சிறுகதைக்குச் செல்லலாம் என்பது உண்மையே. இருந்தாலும் கவிதைகளையோ மொழியாக்கங்களையோக் கொடுத்தால் பொருத்தமாக இருக்கும்.

இதை வகைப்படுத்தல் மூலமாகவோ, குறிச்சொற்கள் கொடுப்பது மூலமாகவோ செய்யலாம். கணினி நிரலியே தானியங்கியாக இதைத் தேர்ந்தெடுப்பது சாலச் சிறந்தது. நாமே இங்கேத் தொடுப்பு கொடுப்பது எப்போதும் ஒரே விஷயத்தையே முன்னிறுத்தும். புதிய + பழைய + வித்தியாசமான என்று சரக்கை மாற்றி மாற்றிக் கலந்து கொடுக்கும் வித்தை நிரலிக்கு எளிது. மனித மூளைக்கு அப்படிக் கலைத்துப் போட்டு தேர்ந்தெடுப்பது முடியாத விஷயம்.

8. குவிமையம் & சித்தாந்தம்

வலையகம் என்பது ஒரு விஷயத்தை முக்கியமெனக் கருத வேண்டும். கனலி அவ்வாறு எதை – தன்னுடைய கவனத்தைக் கோரும் ஏக சிந்தையாய்க் கொண்டுள்ளது என்பது இப்பொழுது தெளிவாகவில்லை. இது காலப்போக்கில் தெளிவாகாலம்.

உதாரணத்திற்கு சமீபத்திய வரவான The Juggernaut பாருங்கள்.

ஒவ்வொரு பத்திரிகைக்கும் ஒவ்வொரு குறிக்கோள் வேண்டும்.

  • நகரத்திற்கு புலம்பெயர்ந்த மாந்தர்களின் அனுபவங்களைப் பகிருதல்
  • இளைய படைப்பாளிகளின் புனைவுகளை சீர் செய்து ஒழுங்குபடுத்தி தர மேம்படுத்தல்
  • கவனம் கிடைக்காத அரிய கலைகளை அறிமுகம் செய்தல்
  • குழந்தைகளுக்கான இலக்கியம்

இப்பொழுது அகல உழல்கிறார்கள். ஆழ உழல்வது அவசியம்.

9. புகழ் பெற்ற ஆக்கங்கள்

நியு யார்க்கருக்கும் அறிமுகம் தேவையில்லை. ஹருகி முரகாமிக்கும் அறிமுகம் தேவையில்லை. ஒரு ஷினகாவா குரங்கின் ஒப்புதல் வாக்குமூலம் | கனலி போன்ற படைப்புகளை விட அதிகம் அறிமுகமாகாத உலக எழுத்தாளர்களை முன்வைக்கலாம்.

அதே நியு யார்க்கரில் முதன்முறையாக வெளியாகிறவர்கள் இருக்கிறார்கள். ஆங்கிலத்தில் சிறுபத்திரிகைகள் எக்கச்சக்கம். அவற்றில் எழுதுபவர்களில் இருந்து அதிகம் புழங்காத பெயர்களை மொழிபெயர்க்கலாம். அல்லது பெரிய பத்திரிகைகளே சிறந்தது என்றால் கிரந்தா, அக்னி, ஹார்ப்பர்ஸ் என்று சிறகை விரிக்கலாம்.

இடைவேளை

“நவீனத்துவத்திற்குப் பிந்திய இலக்கியப் போக்குகளைப் பற்றிய பேச்சு, அமைப்பியல், பின்னமைப்பியல், பின்நவீனத்துவம், தலித்தியம், பெண்ணியம் போன்றவை இந்திய மொழிகளிலேயே தமிழில் அதிகமாக இருக்கலாம். அல்லது அதிகமாக இருக்கும் மொழிகளில் தமிழும் ஒன்றாக இருக்கலாம்”

சுந்தர ராமசாமி

பாராட்டுகள்

இவ்வளவு ஆலோசனைகள் சொல்லியாகி விட்டது. இப்பொழுது சௌகரியமான விஷயங்களைப் பார்ப்போம்

  1. நான்கு சமூக மிடையங்களில் இயங்குவது வெகு வெகு ஆரோக்கியமானது. இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியுப் – இரண்டுமே மாறுபட்ட தளம். ஃபேஸ்புக், டிவிட்டர் போல் இல்லாமல் வேறு விதமான பயனர்களைப் பெற்றுத்தரும். நான்கிலும் தொடர்ந்து செயலூக்கத்துடன், தொலைநோக்குத் திட்டத்துடன் அந்த ஊடகங்களின் அனைத்து பயன்களையும் முழுமையாக உபயோகித்து செயல்பட்டால், கனலி தவிர்க்க முடியாத சக்தியாக ஆகும்.
  2. கனலி இலக்கிய நேரம் – இது போன்ற சந்திப்புகளும் சொற்பொழிவுகளும்தான் ஒரு அமைப்பை உருவாக்குகின்றன. தொடர்ச்சியாக நிகழ்வுகளை நடத்துவதன் மூலமும் அந்த நிகழ்வுகளில் பரந்துபட்ட தலைப்புகளில் நன்றாகப் பேசுவோரை உரையாட அழைப்பதும் புதிய வாசகர்களை உருவாக்கிக் கொண்டேயிருக்கும்.
  3. Content is King – எவ்வளவு நேர்காணல்கள்! எத்தனையெத்தனை தமிழாக்கங்கள்!! எம்புட்டு சிறுகதைகள்!!! சரக்கு அதிகமாக இருப்பதினாலேயே தளம் மேம்படுகிறது என்பதை நான் உறுதியாக நம்புபவன். சரக்கு உயர்தரமாக இருப்பது இரண்டாம் பட்சம். சரக்கு வடிவுற அமைப்பது மூன்றாம் பட்சம்.
  4. போட்டிகள் – தமிழில் இதற்கு நெடிய பாரம்பரியம் இருக்கிறது. குறுங்கதை ஆட்டம் மாதிரி, இன்னும் நிறைய பந்தயங்களை நடத்த வேண்டும். பயணக் கட்டுரை, அறிவியல் அறிமுகம், அனுபவப் பதிவு, என்று பல்வேறு தலைப்புகளில் தொடர்ந்து நடத்த வேண்டும்.
  5. ஆசிரியரின் உரிய அனுமதி – அழியாச்சுடர்கள் தளம் என்றும் பிடித்தமானது. பெட்டகம் பகுதி அது போல் மிகச் சிறப்பாக வந்து கொண்டிருக்கிறது. அதுவும், பிறிதொரு இடத்தில் வெளியானதாக இல்லாமல், புதிய விஷயங்களாகப் பழைய ஆக்கங்களை இணையத்தில் ஏற்றுவது போற்றுதலுக்குரியது.
  6. ஃபேஸ்புக்கில் தட்டி வைப்பது – இதை க. விக்னேஷ்வரன் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். அதுவும் ஒரே வார்ப்புருவில் போடாமல் அலுப்பு தட்டாத வகையில் விதவிதமாகப் பரிமாறுகிறார். ஒரு நாள் பார்த்தால் உலக இலக்கியகர்த்தா; மற்றொரு நாள் புத்தம் புதிய படைப்பாளியின் ஆக்கம்; இன்னொரு நாள் வேறொரு சுவாரசியமான போஸ்டர். இதை இவர்கள் ஃபேஸ்புக் விளம்பரமாகவும் செய்யத் துவங்கலாம். இன்னும் பலரைச் சென்றடையலாம்.

ஆலோசனைகள்

  1. பாட்காஸ்ட் – ஒலிப்பதிவை துவக்குவது. அன்றாடம் கிடைக்கும் இலக்கியப் பதிவுகள், படித்தவை, கிடைத்தவை என எல்லாவற்றையும் பேச்சில், ஒலிவடிவில் அறிமுகம் செய்யவேண்டும். இந்தக் காலத்தில் சவுண்ட்கிளவுட் இருந்தால்தான் எவரும் மதிக்கிறார்கள்.
  2. குவிமையம் / சிறப்பிதழ் – ஆங்கில இதழ்கள் இதை மாதா மாதம், இதழ்தோறும் செய்கிறார்கள். ஏதாவது ஒரு தலைப்பு, விவாதப் பொருள், மூலக் கரு – எடுத்துக் கொள்கிறார்கள். பணிவு, தந்தை, அரங்கு என்று ஏதோ ஒரு விஷயத்தைச் சுற்றி பல பேர் எழுதுகிறார்கள். வலையகத்துக்கென்று பிரத்தியேகமாக தொலைநோக்கு பார்வை இருப்பது நெடுநாளைக்கான வேண்டுகோள் (மிஷன் / விஷன்). ஒவ்வொரு இதழுக்கும் ஒரு ஒருமிப்பு (ஃபோகஸ்) இருப்பது உடனடி வேண்டுகோள். உதாரணத்திற்கு லஃபாம்ஸ் இதழின் மையங்கள்:
    • பழிப்பு
    • நினைவு
    • காலநிலை
    • மகிழ்ச்சி
    • வர்த்தகம்
    • இரவு
    • போட்டி
    • நீர்
    • சட்டம்
    • இசை
    • பயம்
    • மனநிலை
    • வீடு
    • அதிர்ஷ்டம்
    • சதை
  3. இ-புக் – கிண்டில் புத்தகங்களும் கூகுள் ப்ளே நூலகத்தில் தொகுப்புகளும் கிடைக்குமாறு செய்ய வேண்டும். இணைய அங்காடிகளில் ஈபுக் விற்க வேண்டும்.
  4. ஆடியோ புக் – எக்கச்சக்கமான விஷயங்கள் கனலி தளத்தில் இருக்கிறது. அதையெல்லாம் ஒலிபுத்தகங்களாக மாற்ற வேண்டும். ஒரு பதிவை ஒருவர் வாசிக்கலாம். வாசிப்புக்கு ஒருவரே ஏற்ற இறக்கங்களோடு ஒலிநூலாக்கலாம்.

முந்தைய மின்னிதழ் பார்வைகள் / விமர்சனங்கள் / அறிமுகங்கள்

  1. தமிழ் மின் இதழ்: ஒரு பார்வை | Snap Judgment
  2. நூலகம் – 2015 புத்தகங்கள் | Snap Judgment
  3. Tamil Literary Magazines: Internet Publications | Snap Judgment
  4. தமிழ் சிறுபத்திரிகைகள் | Snap Judgment
  5. என்னைக் கவர்ந்த தலை 10 தமிழ் சிறுபத்திரிகைகள் | Snap Judgment
  6. சிறு சரித்திரக்குறிப்புகள்: சிறுபத்திரிகை மகாத்மியம் | Snap Judgment

நிலையியற் பொருளும் இயங்கியற் பொருளும்

சொல்வனம் கலைமகள் நடனம் காண… – சொல்வனம் பதிவைப் படித்த பின்…

Pigeons_Food_Humans_Ants_Pick_Eat_Throw_Snacks_LeftOvers_Animals_Birds

இதில் அஜிதன் என்பதற்கு பதில் மனதின் குரல் அல்லது alter-ego என்று வைத்துக் கொள்ளுங்கள். ஏரியை மனிதனின் புத்தி. அதில் மின்னும் நட்சத்திர பிரதிபலிப்புகள் அண்டம். அதன் அருகே உள்ள மின்விளக்கு நகரம் ரத்தக்கொதி நிலை. நீலம் என்பது இரவில் கருமையில் தெரியாத பகலின் நீலவெளி. ஜெயம் (வெற்றி) என்பது இருட்டிலும் நீலத்தைப் புணரும் அண்டம்.

மேற்கண்டவாறு பலவிதங்களில் இந்தக் கதையை ஆராயலாம்.

இந்தக் கதையில் பல உச்சநிலைகள் இருந்தாலும், இரண்டு பிரயோகங்களை மட்டும் பார்ப்போம்:

1. ”ஹீரோக்கு கறி வாங்கப் போவோம். பெரும்பாலும் இளம் கன்று. அது ஆண் என்பதால் கறிக்கு விற்கப்படும். அதன் கறியே கிடைக்கும்.”

இங்கே ரஜினி, விஜய், அஜீத் போன்ற ஹீரோக்களுக்கு ரசிகர்கள் எப்படி அடிமையாகிறார்கள் என்பது இங்கே சுட்டப்படுகிறது. ஹாலிவுட்டில் கறுப்பர்களுக்கு எந்த விருதும் தராமல், அவர்களின் பணத்தை மட்டும் குறிவைக்கும் ஆஸ்கார் விருதுகளை சுட்டுகிறார். அம்மாவும் கலைஞர் கருணாநிதியும் கேப்டன் விஜய்காந்த்தும் நடத்தும் அரசியலைச் சாடுகிறார்!

2. “கூகை. ஆந்தை இனத்தைச் சேர்ந்தது. ” என்றுவிட்டுத் தொடர்ந்தான்.” அதன் எடையைப் பாருங்கள் ஆனால் அது பறக்கும் போது, காற்று கூட அசையாது, சிறகுகள் எந்த ஒலியும் எழுப்பாது”

இதற்கு முந்தையப் பத்தியில்தான் குல தெய்வ வழிப்பாட்டில் இருக்கும் தத்துவப் பார்வை அற்ற வெற்றுச் சடங்கில் மெய்மை தேடும் பயணம் பற்றி சொல்லியிருந்தார். அதாவது நாம் ஆந்தை போல் இரவில் விழித்திருக்கிறோம். ஃபேஸ்புக் பார்க்கிறோம். செய்தியைக் கேட்கிறோம். எல்லாம் எடையில்லாதவை. அவற்றை அனுபவிக்கும்போது நிஜவுலகின் புரிதல் எட்டாது. விஷயம் தெரியாமல், விளைவுகள் ஏற்படுத்தாமல் பறக்கிறோம்!

ஜெயமோகனின் எழுத்துக்களுக்குத்தான் இப்படி வியாக்கியானம் எழுத முடியும். ஆனால், அவர் சம்பந்தமேயில்லாத பதிவொன்றுக்கு இவ்வாறு எழுதமுடிவது எழுத்தாளரின் சாதனை.