புதிய தலைமுறை இதழுக்காக எழுதியது:

விவகாரம் இல்லாமல் விவகாரத்தை முன்னிறுத்துவது எப்படி?
தமிழில் மிகவும் புகழ்பெற்ற பழமொழி இருக்கிறது. ‘அரசன் எவ்வழி; மக்கள் அவ்வழி!’ இது பாஸ்டனுக்கும் பொருந்தும். பம்பாய்க்கும் பொருந்தும்.
வேகமாக வண்டியை ஓட்டினால் மாட்டிக்குவோம். அரை அங்குலாம் அதிகமாக வீட்டைக் கட்டினால் தரைமட்டமாக்கப் படுவோம் என்று பயந்து வாழ்க்கையை சட்டதிட்டத்திற்கு உட்பட்டு அமெரிக்காவில் வாழ்கிறேன். அஞ்சி அஞ்சி வாழும் வாழ்வு இந்தியாவில் கிடையாது. இணையத்தில் அந்த அச்சம் சுத்தமாக நீங்கி, டார்ஜான் போல் சுதந்திரமாக சுற்றித் திரிய முடிகிறது.
என்னுடைய வாழ்க்கையே இணையத்தில் என்றாகி விட்டது. உன் நண்பர்களைச் சொல்… உன்னைப் பற்றி சொல்கிறேன் என்பது அந்தக் காலம். உன் மின்னஞ்சல் முகவரியைச் சொல்… உன் சரித்திரத்தை அப்பட்டமாக்குகிறேன் என்பது இந்தக் காலம்.
இப்பொழுதெல்லாம் நேர்காணலுக்குச் சென்றால், ‘உங்கள் பொழுதுபோக்கு என்ன?’ என்றெல்லாம் கேட்பதில்லை. நமது ஃபேஸ்புக், டுவிட்டர் பழக்க வழக்கத்தை உளவு கண்டு அவர்களே அறிந்து வைத்திருக்கிறார்கள். ரொம்ப நேர்மையாக ‘நமக்கு அந்த மாதிரி சமூகத்தளங்களில் எல்லாம் ஐடி கிடையாதுங்க’ என்றால் அதை விட மிகப் பெரிய பிரச்சினை. எல்லாக் குரங்கும் நான்கு கால் கொண்டு தாவும்பொழுது, நாம் மட்டும் இரண்டு கால் கொண்டு நடந்தால்… பிரச்சினைதான். எனவே, சமூக வலைத்தளங்களில் நம் முகவரியும் இருக்க வேண்டும். இயங்கவும் வேண்டும். அதே சமயம் உங்களின் உண்மையான விருப்பங்களில் ஈடுபாட்டோடு செயல்பட வேண்டும்.
ஹிண்டுவில் ‘லெட்டர்ஸ் டு தி எடிட்டர்’ எழுதி நான்கு நாள் தேவுடு காத்து, அதன் பின் அது வெளியாகாத கோபத்தில் ஹிந்து மீது கோபம் கொண்டு திட்டுவது எல்லாம் மலையேறிப் போயாச்சு. சன் டிவியிலோ, குமுதத்திலோ தவறான தகவல் வந்தால், அதை உடனுக்குடன் கிழித்துத் தொங்க விட்டு, நண்பர்களைக் கொண்டு பரபரப்பாக்கி, அந்தந்த மீடியாவின் போட்டியாளர்களின் பார்வைக்கு கொண்டு செல்கிறார்கள். நாளடைவில் இந்தப் பிழை அப்படியே அமுங்கிப் போகாமல், கவனத்தில் இருக்குமாறு வைத்திருக்கிறார்கள்.
இதே போன்ற சுமைதாங்கியை எந்த வலைப்பதிவர் மீதும் சாத்தலாம். இது நம் பக்கமும் வரலாம். ஒரு விஷயத்தை வலையில் பகிருமுன் சரி பாருங்கள். இதை நம் அப்பா படித்தால்… நம் மகள் படித்தால்… எப்படி இருக்கும் என்று யோசியுங்கள். அவர்களுக்கு தகுந்த மொழியில் எழுதுங்கள்.
நம் மகளோ மனைவியோ படித்தால் நம்மை எளிதில் தொடர்பு கொண்டு அவர்கள் தரப்பு கருத்தை சொல்லலாம். மற்றவர்களுக்கு என்ன வழி? உங்களைத் தொடர்பு கொள்ளும் முகவரியை பிரதானமாகப் போடுங்கள். மறுமொழிப் பெட்டியை வைத்திருங்கள். பதில் போட பல வழிகள் கொடுங்கள்.
அதற்காக, அனாமதேயமாக வருபவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். முகங்காட்டாமல் வருபவர்கள், உங்களின் இடத்தை உபயோகப்படுத்தி பிறரை தூற்றலாம். அதற்கு இடம் கொடுக்க வேண்டாம். என் வீட்டில் நடக்கும் விருந்தில் அனைவருக்கும் இடமுண்டு. அதற்காக என் முகத்தில் குத்துபவருக்கும் இலவச இடம் தரமாட்டேன். முக்கியமாக சாப்பிட வந்திருக்கும் சக விருந்தினரை குத்த நிச்சயம் அனுமதி கிடையாது.
நீங்களும் முகமூடி போட்டு போலி மின்னஞ்சல் கொண்டு எங்காவது கருத்து சொல்லும்போது கவனமாக இருக்கவும். எந்த மாதிரி முகத்திரை போட்டாலும் அது அழுந்து தொங்கும். அது விக்கிலீக்ஸ் ஜூலியன் அசாஞ்சேயாகவே இருந்தாலும் சரி. நிச்சயம் பல நாள் போலி ஒரு நாள் அகப்படுவான்.
தகவலை பகிரும் ஆசையில் எங்கிருந்து இந்தத் தகவல் கிடைத்தது என்பதை போட மறந்து விடுவோம். இன்னாரைப் பற்றி இன்னார் என்னா சொன்ன்னார் என்று தெளிவாக இடஞ்சுட்டி விடுங்கள். இது காப்பிரைட் தகராறுகளில் இருந்து நம்மைக் காப்பாற்றும். நாளைக்கே எவறாவது அவதூறு என்று கிளம்பினாலும், ‘அந்த உடுப்பி பவன் சாம்பார்தான் இங்கே ஊற்றப்பட்டது. இது நான் சொந்தமாக சமைத்தது அல்ல!’ என்று கைகாட்டி தப்பித்து விடலாம்.
ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் யூடியூபிலும் கருத்து வந்து விழுந்தவுடன் வேகமாக எதிர்வினை செய்வது அவசியம். என்னைப் பற்றி பேசுகிறார் என்றால் சும்மா ஒட்டு மட்டும் கேட்டால் போதும். என்னைக் குறித்து தப்பான பிரச்சாரம் நடக்கிறது என்றால் அதை நிச்சயம் தட்டிக் கேட்க வேண்டும். தவறு நம் பக்கம் இருந்தால் மன்னிப்பு கேட்டு விடுங்கள். இல்லாவிட்டால், எதிராளி மன்னிப்பு கேட்கும்வரை விடாதீர்கள்.
சட்டென்று செயல்படுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.
பத்து பேரை கேட்காமல், புத்தகங்களை நாலு மணி நேரம் புரட்டாமல் கீபோர்ட் துணையோடு கூகிள் வேகம் பிடித்திருக்கிறது. கால்பந்தாட்டத்தின் கடைசி நிமிடத்தில் குறுக்கே பாய்ந்து கோல் போடும் விறுவிறுப்பான ஆட்டம் ரசிக்கிறது. திறமைக்கும் இளமைக்கும் அடையாளமாக வேகம் திகழ்கிறது. ’வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்பது போல் நான் ஈயாக இருந்தாலும் இக்கட்டான சூழ்நிலையிலும் உடனடி பாய்ச்சல் அனைவரையும் வசீகரிக்கிறது.
இந்த அபார வேகம் சமூக வலைப்பின்னல் தளங்களில் இயங்க மிகவும் தேவை. இந்த வேகத்தை நிதானம் இழக்காமல் இயக்க அசுர நிதானம் அதைவிட அத்தியாவசியமான தேவை.
டென்னிஸ் வீரரையே எடுத்துக் கொள்வோம். எதிராளி பந்து போட்டவுடன் அவசரப்படுபவரை விட அனுமானித்து ஆடுபவரே வெற்றி அடைகிறார். பந்து எங்கே விழும், எப்படி சுழலும், பந்தை எங்கே இருந்து எப்படி போடுகிறார், என்றெல்லாம் கணித்து ஆடுபவரால் மட்டுமே வேகமான பந்தை சரியாக ஆட முடிகிறது. சொல்லப்போனால் விரைவாக அடிப்பதை விட பந்தைக் குறித்த தகவல்களை சேமிப்பதே முக்கியமாகி விடுகிறது.
ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் யூடியூபிலும் கருத்து வந்து விழுந்தவுடன் வேகமாக எதிர்வினை செய்வது அவசியம். நாம் சார்ந்திருக்கும் நிறுவனம் குறித்த அவதூறையோ, நம்முடைய உயரிய விழுமியத்திரற்கு எதிரான பிரச்சாரத்தையோ தோன்றிய புதிதில் தடுத்தாட்கொள்ளுதல் மிகவும் முக்கியம்.
ஆனால், டென்னிஸ் வீரரின் கணிப்பு போல் இந்தக் விவாதம் எவ்வாறு மாறும், எங்ஙனம் உருப்பெறும் என்று யோசிக்கவும் வேண்டும்.
இதற்கு மூன்று கட்டமாக திட்டம் வகுக்கலாம்.
1) பத்தியம் – சாதாரணமாகச் சொன்னால் கவனமாக இருத்தல்; பத்தியமாக இருப்பது என்றால் பாதுகாப்பாக இருத்தல். தகவல்களையும் நண்பர்களையும் உசாத்துணைகளையும் சேர்த்தல்.
2) செயற்பாங்கு – திரும்ப திரும்ப ஒன்றை செய்வதன் மூலமே நம் வேகம் அதிகரிக்கிறது. ’எனக்கு பத்தாயிரம் வித்தை தெரிந்தவனைக் குறித்து கவலையில்லை; ஆனால், ஒரே வித்தையை பத்தாயிரம் தடவை பயிற்சி செய்தவனை நினைத்துதான் அஞ்சுகிறேன்’ என்று ப்ரூஸ்லீ சொன்ன மாதிரி பயின்ற செயல்முறையில் இருந்து ஒன்றைத் தேர்ந்தெடுத்தல்.
3) கூத்து – நடவடிக்கையை செவ்வனே நிறைவேற்றுவது.
வாரத்திற்கு ஒரு முறை என்பதற்கு பதில் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் என்றோ, ஒரு மணி நேரத்திற்கு ஐந்து நிமிடம் என்றோ தொடர்ந்த கவனிப்பில் இருக்க வேண்டும். கெட்ட பழக்கங்களை நீக்க கடும் பிரயத்தனத்தில் இறங்க வேண்டாம்; சிறப்பான நடவடிக்கைகளை அன்றாட செயல்பாடாக ஆக்கவும். அன்றாட செயல்களை தொடர்பயிற்சியின் மூலம் கூராக்கவும்.
தோட்டக்காரனைப் போல் யோசித்து, தச்சனைப் போல் செயல்படவும்.
அன்றாட செய்திகளுக்கு விமர்சனம், சமூக அவலங்களுக்கு எதிராக ஆமீர் கான் போல் அரட்டை கோஷம் என இவை எல்லாவற்றையும் விட உங்களுக்கு லட்சியமான ஒரு விஷயத்தை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். அது கனடாவின் கரடிகளைக் காப்பாற்றும் பிரச்சாரமாக இருக்கலாம்; போபால் விஷவாயுவிற்கான நஷ்டஈடாக இருக்கலாம். உங்கள் பெயரைச் சொன்னால், அனைவருக்கும் அந்த சிக்கல்தான் நினைவிற்கு வரவேண்டும்.
சிக்கல் இல்லாமல் வலையில் உலா வாருங்கள்.
இறுதியாக புத்தகத்தைப் பயில வேண்டுமானால், படித்த புத்தகத்தை மூட வேண்டும். அதே போல் சமூக நட்புகளை நிஜமாக்க வேண்டுமானால், அவர்களோடு சமூக வலைப்பின்னல் தளம் தாண்டியும் நட்பு பயில வேண்டும். அவ்வாறு தோழமைக்கு உருவமும் உயிரும் இருந்தால்தான் நம்மைக் குறித்து அவர்களுக்கு அக்கறையும் அவர்களைக் குறித்து நமக்கு பொறுப்பும் இயல்பாக உருவாகும்.
குடுகுடுவென்று காரியத்தில் இறங்காதே! காலத்தே பயிர் செய்யாமலும் இராதே!!
தொடர்புள்ள பதிவு: BBC News – Need a job? Learn to impress the robots