ஒவ்வொருவரைப் பற்றியும் அறிமுகக் குறிப்பு வேண்டும். ஒவ்வொரு படைப்பாளியுடனும் உசாவ வேண்டும். அனைத்து சமகால இலக்கியகர்த்தாக்களுடனும் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
அருங்காட்சியகங்கள் சென்றிருப்பீர்கள். அதில் ஒவ்வொரு ஓவியத்தின் பக்கத்திலும் ஒரு குறிப்பு இருக்கும். எந்த வருடம் வரையப்பட்டது; எவர் வரைந்தார்; எந்த மாதிரிச் சூழலில் வரைந்தார்; அதற்கு முன் அவருடைய முக்கிய படைப்புகள் என்னென்ன? அதற்குப் பின் அவருடைய ஆக்கங்கள் எவ்வாறு உருமாறின? யாரைப் பற்றி அல்லது எதைப் பற்றி இந்த ஓவியத்தைப் படைத்தார்?
இன்னும் கொஞ்சம் ஆராய்ந்தால், அந்தத் தளத்தின் ஈசானிய மூலையில், அந்தத் தளத்தில் இடம் பெற்ற ஓவியர்களைக் குறித்தும் கண்டெடுக்கப்பட்ட காலகட்டங்களைக் குறித்தும் அரும்பொருட்களைக் குறித்தும் விரிவான வெளியீடு இருக்கும். அதில் ஓவியரின் பேட்டிகள், தற்கால ஆய்வாளர்களின் விமர்சனங்கள், முந்தைய ஆய்வுகள் குறித்த மேற்கோள்கள் – இன்ன பிற தாங்கிய நூலோ புத்தகமோக் காணக்கிடைக்கும்.
பேட்டிகளும் நேர்காணல்களும் முக்கியமானவை. முன்னுமொரு காலத்தில் காலச்சுவட்டின் ஒவ்வொரு இதழிலும் பாரிஸ் ரிவ்யூ போல் விரிவான சந்திப்புகள் காணக்கிடைத்தன. இன்றையச் சூழலில் படைப்பாளிகளும் இலக்கிய ஆளுமைகளும் பெருகி விட்ட காலத்தில் இந்த மாதிரி ஆழமான உரையாடல்கள் பன்மடங்கு அதிகரித்திருக்க வேண்டும். இதை இக்காலத்தில் அருண்பிரசாத் சற்றே சமரசங்களுடன் செய்கிறார். ஹிந்து நாளிதழின் தமிழ்ப் பதிப்பில் வெளியாவதால், அச்சுப் பதிப்புகளுக்கே உரித்தான இட நெருக்கடியுடன் அவர் செயல்படுகிறார்.
நேர்காணல்கள் வரலாறு – வாசிப்பு – அறிவியல்
ஆனால், இப்பொழுது இந்த மாதிரி தீவிர வாசிப்பும் அதன் தொடர்ச்சியான விரிவான பேச்சும், அதன் இறுதியில் அவற்றை வரிவடிவத்தில் பதிவாக்குவதும் அருகியேக் காணப்படுகிறது.
இருபதாண்டுகள் முன்பு நண்பர் பா ராகவனும் நேசமுடன் / கல்கி ஆர் வெங்கடேஷும் எனக்கொரு ஆலோசனையை முன்வைத்தார்கள். ஒருவரின் எல்லாப் புத்தகங்களையும் எடுங்கள். தி ஜானகிராமனோ அகிலனோ ஃபிலிப் ராத்தோ – அவரின் ஆக்கங்கள் அனைத்தையும் வாசியுங்கள். எதையும் விடாதீர்கள். கட்டுரைகள், துணுக்குகள், வாழ்க்கை வரலாறுகள், நினைவுக் குறிப்புகள், சண்டைகள், சச்சரவுக் கடிதங்கள், அறிவியல் புனைவுகள், துப்பறியும் கதைகள், சமூகக் கதைகள், அபுனைவுகள், ஓவியங்கள், கிறுக்கல்கள், கவிதைகள், மொழியாக்கங்கள், புனைப்பெயரில் எழுதியவை, அவர் எழுதியிருக்கக் கூடியதாக நம்பப்படும் கர்ண பரம்பரைக் கட்டுக்கதைகள் – எல்லாமும், எதையும் வாசியுங்கள்.
ஒரு வாரமோ / ஒரு மாதமோ கெடு வைத்துக் கொள்ளவும். அதன் பின் அவற்றைப் பற்றி நீங்கள் எடுத்தக் குறிப்புகளைத் தொகுங்கள். அவரிடம் என்ன கேள்வி கேட்க வேண்டுமோ, அவரின் படைப்பு குறித்த சந்தேகங்களைப் பற்றியோ, அவர் எழுத்து குறித்த விமர்சனங்களை முன் வையுங்கள். சும்மா, ஒரேயொரு சிறுகதையையோ, ஓரிரு நாவலையோ வாசித்துவிட்டு – எந்தக் கேள்வியையும் முன்வைக்காதீர்கள்.
நான் வி எஸ் நைபாலை கையில் எடுத்தேன். நான் கேள்விகளைத் தொகுப்பதற்குள் அவர் போய் சேர்ந்துவிட்டார்.
எனவே, இனிமேலும் இவ்வாறு முழுக்கக் காத்திருக்கப் போவதில்லை. ஒருவரின் அனைத்துப் படைப்புகளையும் முழுக்க வாசித்து, ஜீரணமான பின்பே – அவரிடம் கேள்விகளைக் கேட்கப் போவதில்லை. அந்த முடிவின் தொடக்கமாக கிரிதரன் அவர்களை #சொல்வனம் இதழுக்காக பேட்டி கண்டேன்.
1. காலையில் மூன்று மணி நேரம்; மாலையில் நான்கு மணி நேரம். நான் இரண்டு நேரங்களிலும் ஓரளவு கேட்டேன்; கலந்து கொண்டேன். காலை சந்திப்பின் துவக்க தொண்ணூறு நிமிடங்கள் நேரலையில் யுடியுப் வாயிலாக உன்னிப்பாகக் கேட்டேன். அதே போல் மாலை சந்திப்பின் கடைசி 90 நிமிடங்களில் ஜூம் வாயிலாக இணைந்தேன். இவ்வளவு நேரம் பேசுவது என்பது, ஜஸ்ட் சாதனை. அதுவும் தெளிவாக, கோர்வையாக, மேமிராவைப் பார்த்துக் கொண்டு, இருந்த இடத்தில் இருந்து அசையாது – பிரமிக்கிறேன். உங்களால் கூறியது கூறல் இன்றி சொற்கோர்வையுடன் ஏழு மணி நேரம் பல் வேறு (வாசகர் + உலகளாவிய அளவில் காணுவோர்) தரப்போடு அளவளாவ முடியுமா?! இந்த ஆசான் என்பவர் கதைகளில் வருபவர். வியாசர். குரு பகவான். தெய்வம் மனுஷ ரூபேண
2. இந்த மாதிரி ஒருவரால் உரையாட முடியும் என்று எவராவது சொல்லி இருந்தால் நகைத்து புறந்தள்ளி இருப்பேன். அதிலும் காலையில் 400 பேர், மாலையில் 400 பேர் இருப்பார்கள் என்றால், “அலுத்துப் போய், பாதியில் கழன்று கொண்டு விடுவார்கள்” என்றெல்லாம் கருத்து சொல்லியிருப்பேன். என்னுடைய கணக்கின் படி ஐநூறு பேராவது இதில் பங்கெடுத்திருப்பார்கள். பல பேர் என்னைப் போன்று காலையிலும் மாலையிலும் என இரு வேளையிலும் ஆஜர் செய்தாலும், 500+ இலக்கிய வாசகர்களை மூன்று மணி நேரத்திற்கு இணையச் சந்திப்பில் ஒரேயொருத்தர் கட்டுற வைத்திருப்பார் / வைத்திருந்தார் என்பது சற்றே நம்ப இயலவில்லை. ஆனால், நம்புங்கள். சினிமா நடிகரோ, திரைப்படக் கவர்ச்சியோ, பொய்யோ, ஆபாசமோ, கிசுகிசுவோ, வம்போ எதுவும் இல்லாமல், வெறும் மஹாபாரதம்; அவரின் நாவல்; 7 வருடங்கள் ,26 நாவல்கள், 25,000 பக்கங்கள் – அதற்காக நன்றி சொல்லவும் ஆசி வாங்கவும் கருத்துகளைப் பகிரவும் வந்தவர்கள். அசகாய சூரருக்கு வணக்கங்கள்.
3. நாம் நம் ஆதர்சங்களை சம கால சாதனையாளர்களைக் கொண்டாடுவதில்லை. இந்த நிகழ்வு எல்லா தொலைக்காட்சிகளிலும் அனைத்து சமூக ஊடகங்களிலும் சாதாரண திரள் மந்தை வாட்ஸப் வாயிலாக வைரலாக வேண்டியது. பாதி நிகழ்வில் கலந்த பிறகுதான் தோன்றியது. இதை நான் லைவ் ட்வீட் செய்திருக்க வேண்டும். பட்டி தொட்டியெங்கும் பரப்ப வேண்டும். இதற்கு டீசர் ஒன்று வீடியோவாக விட்டிருக்க வேண்டும். அதன் பிறகு டீஸர் ட்ரெயிலர் விட வேண்டும். இதையெல்லாம் செய்யாமல், ஆசானின் வாசகர் eன்று சொல்லுவதில் அர்த்தம் என்பதேயில்லை.
4. திருவள்ளுவரே எல்லா குறள்களையும் எழுதவில்லை. 1330 குறள்களும் தொகை நூல் போல் பல வள்ளுவர்களால் உருவாக்கப்பட்டது என்றே நினைத்திருந்தேன். இப்போது சத்தியமாக நம்புகிறேன். ஒருவரே எல்லாவற்றையும் செய்திருக்க முடியும்; செய்திருப்பார். அறம், பொருள் மற்றும் இன்பம் – எல்லாமும் ஒருவரே எழுதுவார். தெளிவாக கூறியது கூறல் இருந்தாலும் இலக்கிய நயமும் இலக்கணக் கட்டமைப்பும் புதுமையும் பல்லாயிரம் ஆண்டுகள் கழித்தாலும் பொருந்தும் தன்மையும் கொண்டு இயற்றுவார் என்பதற்கு நவீன வியாசர் ஜெமோ-வே ஆகச் சிறந்த உதாரணம்.
6. ஆங்கிலத்தில் ஜெயமோகனின் புகழ் பாட வேண்டும். இதை ஏன் இன்னும் ஜெர்மனியில் இங்கிலாந்தில் அமெரிக்காவில் உள்ளவர்கள் அவரவர் நாட்டின் உள்ளூர் மொழியில் கொண்டு செல்லவில்லை? ஆங்கில விக்கிப்பிடியா ஆகட்டும்; அல்லது மற்ற மொழிகள் ஆன ஃப்ரெஞ்சு, இத்தாலி, ஸ்பானிஷ் ஆகட்டும்; அந்தந்த ஊரில் மைந்தருக்கு ஏற்றவாறு வலையகங்கள் உருவாக்க வேண்டும். ஒவ்வொரு நாட்டிற்கும் கொண்டு செல்ல வேண்டும். மஹாபாரதம் எனபது எது? அது எவ்வாறு தமிழில் நவீனமயமாக்கப்பட்டுள்ளது? எங்கனம் அதை நீங்கள் வாசிக்கலாம்? அதெல்லாம் அந்தந்த மொழியின் வலையகங்களில் அறிமுகங்களாகவோ குறிப்புகளாகவோ விமர்சனங்களாகவே செய்யப்பட வேண்டும். ஆங்கிலத்திற்கான வலைத்தளங்களிலாவது நான் செய்ய வேண்டும்!
7. ஜெயமோகனின் தனிப் பதிவுகளை, விமர்சனங்களை, இடையிடையே போடும் ஆசுவாசங்களை எல்லோரும் எதிர்கொள்கிறார்கள். சுந்தர ராமசமியின் பிள்ளை கெடுத்தாள் விளை சிறுகதைக்கு கிடைத்த கடுமையான எதிர்வினையில் ஒரு சதவிகிதம் கூட ஜெமோ-வின் வெண்முரசு மகாபாரதத்தின் எந்தப் பகுதிக்கும் கிடைக்கவில்லை என்பது சற்றே வருத்தம் கலந்த சோகமான நிகழ்வு. 2000-களில் இலக்கியகர்த்தாக்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து ஒரேயொரு கதையை அது சொல்லாத விஷயங்கள், உணர்த்திய விஷயங்கள்; புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என்று ஒன்று சேர்ந்து சு.ரா.வுக்கு எதிரே காலச்சுவடு என்னும் பண்பாட்டு நிறுவனத்திற்கு எதிராக வெறுமனே கிளர்ந்தார்கள். இன்று அது போல் வெண்முரசு வாசிப்புள்ளாக்க வேண்டும். எல்லோரும் அதன் ஒவ்வொரு கூறுகளையும் விடுபடுதல்களையும் சேர்த்தல்களையும் அர்த்த அனர்த்தங்களையும் அறைகூவி அலசி ஆராய வேண்டும். இப்பொழுது இல்லாவிட்டால்… எப்பொழுது!?
ஜெம் எழுதும் இராஜன் குறை, மாமல்லன் போன்ற ஆசுவாசங்களைத் தவிர்த்து அது போன்ற பா ஜெயபிராகாசர்களும் இன்ன பிறரும் இலக்கிய விமர்சனங்களை முன் வைத்து விவாதிக்க வேண்டும் என்பது தீரவொண்ணா ஆவல் + வேண்டுகோள். எவராவது சுவாரசியமாக அக்கபோர் அற்று விவரங்கள் உடன் வெண்முரசு போன்ற காவியத்தை விமர்சித்து அளவெடுக்க வேண்டும். இப்போதைக்கு அடிமுடி காணமுடியாத அண்ணாமுலையான் போல் வியாபித்து பிரமித்து ஸ்தம்பிக்க வைக்கிறது. காட்டான் ஜெமோ!
8. தமிழில் எழுத்தாளர் எக்கச்சக்கம். ஒவ்வொருவரையும் கொண்டாட வேண்டும். ஒவ்வொருவரையும் மேலும் மேலும் மேலும் (முன்று முறை சொல்லியாகி விட்டது) ஆராதித்துக் கொண்டாடி மகிழ வேண்டும். ஒரு பட்டியல்:
புதுமைப்பித்தன்,
கல்கி,
மௌனி,
ஜெயகாந்தன்,
கு.அழகிரிசாமி,
கு.ப.ரா,
சி.சு.செல்லப்பா,
ந.பிச்சமூர்த்தி
லா.ச.ரா,
சுஜாதா. — நிறைய பேசிவிட்டோம்
ராஜம் கிருஷ்ணன்,
சுந்தரராமசாமி, — நிறைய பேசிவிட்டோம்
ஆதவன்,
கரிச்சான்குஞ்சு,
ஆர்.சூடாமணி,
ஜெயந்தன்,
ப.சிங்காரம்,
நகுலன்,
ஜி.நாகராஜன்,
லட்சுமி,
நா.பார்த்தசாரதி,
எம்.வி.வெங்கட்ராம்,
பாலகுமாரன்,
ஆர்.சண்முகசுந்தரம்,.
ர.சு.நல்லபெருமாள்,
கந்தர்வன்,
மேலாண்மை பொன்னுசாமி
அன்றையத் தேதியில் வாழும் எழுத்தாளர்கள் :
அ.முத்துலிங்கம், – சொல்வனம் சிறப்பிதழ் நன்றாக கவனம் கோருகிறது அம்பை, – சொல்வனம் சிறப்பிதழ் நன்றாக கவனம் கோருகிறது பாவண்ணன்– பதாகை சிறப்பாக செய்திருக்கிறார்கள்; அதை மீறி இன்னும் நன்றாக செய்ய நம்மிடம் நல்ல உழைப்பு தேவை; இயலாதவை. நாஞ்சில்நாடன் – பதாகை சிறப்பாக செய்திருக்கிறார்கள்; அதை மீறி இன்னும் நன்றாக செய்ய நம்மிடம் நல்ல உழைப்பு தேவை; மற்ற ஆதர்சங்களைப் பகிர்வோம்.
இந்திராபார்த்தசாரதி,
கி.ராஜநாராயணன்,
வண்ணதாசன்,
பிரபஞ்சன்,
வண்ணநிலவன்,
மாலன்
ஆ.மாதவன்,
நீலபத்மநாபன்,
எஸ்ராமகிருஷ்ணன் — இன்னும் தீவிரமாக இயங்குபவர். இப்போதைக்கு சந்திப்புகள், யுடியுப் கேள்வி நேரங்கள், ஜூம் தொலைக்காணல்கள் என்றே வைத்துக் கோள்வோம். மேதை!
சிவசங்கரி,
பொன்னீலன்,
எஸ்.சங்கரநாராயணன்,
சா.கந்தசாமி,
வாசந்தி,
கோணங்கி,
சோ .தர்மன்,
தோப்பில்முகமது மீரான்,
பூமணி,
சு.வேணுகோபால்,
பாமா,
திலீப்குமார்,
இந்துமதி,
அழகிய பெரியவன்,
சாரு நிவேதிதா, — நிறைய செய்கிறார். ஆதரவு (பணம் அல்ல) நல்குவோம். இன்னொரு அகிலன் போன்று காணாமல் போவாரா அல்லது சோ போன்று குறிப்பிட்ட சராரின் இஷ்ட தெய்வமாவாரா என்று காலம் இவரின் இலக்கிய இடத்தை நிர்ணயம் செய்யும்.
முன்னுமொரு காலத்தில் விமானம் இருந்தது. விமானத்தில் அமெரிக்காவில் இருந்து இந்தியா வரலாம். அப்படி வரும்போது சிலரை சந்தித்து இருக்கிறேன். இது ஐந்தாண்டுகளுக்கு முன்பு நிஜத்தில் நடந்த கதை:
சொல்வனத்திற்காக நிறைய தெலுங்குக் கதைகளை கௌரி என்பவர் மொழியாக்கம் செய்திருக்கிறார். அவரின் கணவர் கிருபானந்தத்தை சந்தித்தேன். வெகு அழகாக கதை சொல்கிறார். பேச்சை நிதானமாகவும் இனிமையாகவும் பல்வேறு கோணங்களிலும் கொண்டு சென்றார்.
சென்னையில் ‘வெளுத்துக் கட்டு’ என்று டோபி சங்கிலிக் கடைகள் முளைப்பது போன்ற இளைப்பாறல்களை இடையிடையே நுழைத்து, என் சிதறிய கவனத்தை மீண்டும் குவித்த போது ஜெயமோகன் நினைவிற்கு வந்தார். 2015-ல் நடந்த ‘நவீன விருட்சம்’ சந்திப்பில் சொல்வனம் மைத்ரேனையும் கதாசிரியர் அசோகமித்திரனையும் சந்தித்து இருக்கிறார்.
திரு பிரபஞ்சன் அவர்களின் சந்திப்பும்,நேர்காணலும் அதில் ஒன்று. சாரு நிவேதிதாவைக் கூட அழைத்து இருக்கிறார்கள். கவிதைப் போட்டி நடத்தி தங்கள் தைரியத்தை நிரூபித்து இருக்கிறார்கள். சிறுகதை வாசிப்பை வாரந்தோறும் இயக்கமாகச் செய்கிறார்கள். கிரேஸி மோகன் ஆரம்பித்து திருப்பூர் கிருஷ்ணன் வரை நீண்ட நட்பு பட்டியல் வைத்து இருக்கிறார்.
சனிக்கிழமை மாலை நான்கரை மணிக்கு இவர் அபிலாஷைப் பேசச் சொல்லி கூட்டம் போட்டிருக்கிறார். மன்மத ஆண்டில்ஆனந்த் ராகவ் எழுதிய மணிப்பூர் சதுரங்கம் நாடகத்திற்கு அழைத்தார்.
கிருபானந்தனும் வலையகப் பத்திரிகை நடத்துகிறார். என்னை எழுதச் சொல்லிவில்லை.
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வருடா வருடம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது (இயல் விருது) இம்முறை தமிழ் விக்கிப்பீடியா என்னும் இணையத்தளக் கலைக்களஞ்சிய கூட்டாக்கத் திட்டத்தை தொடங்கி வெற்றிகரமாக இயக்கிவரும் திரு இ.மயூரநாதன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 17வது இயல் விருது ஆகும்.
இலங்கையில் வண்ணார்பண்ணை என்னுமிடத்தில் பிறந்த திரு மயூரநாதன் . கட்டடக்கலையில் முதுநிலை பட்டம் பெற்றபின்னர் கொழும்பில் 17 ஆண்டுகள் பணியாற்றினார். 1993-ல் துபாய்க்குப் புலம்பெயர்ந்தவர் தமிழ் அறிவியல் துறையில் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார். 2001ம் ஆண்டு ஆங்கிலத்தில் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டபோது, அதன் பின்னணியில் உள்ள தொழில்நுட்பம் கொடுக்கும் ஆற்றலையும், அறிவு உருவாக்கத்தில் அதன் மகத்தான பங்களிப்பையும் உணர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவை 2003ம்ஆண்டிலேயே தொடங்கினார். முதல் 12 மாதங்கள் தனியாளாக அதன் அடிப்படை வசதிகளைச் செய்து வலுவான தளமாக அமைப்பதற்கு உழைத்தார். பின்னர் சிறிது சிறிதாக இணையத்தளத்தை விரிவாக்கி திறமையான பங்களிப்பாளர்களை இணைத்து மிகச் சிறப்பாக இயங்கும் ஒரு கூட்டுக்குழுமமாக அதை நிறுவினார்.
தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்திருப்பவர்கள் ஏறத்தாழ நூறு பேர்தான் எனினும், இன்று 88,000 பேருக்கும் அதிகமானவர்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளனர். கலைக்களஞ்சியத்தில் ஏற்றப்பட்ட கட்டுரைகளின் எண்ணிக்கை 83,000. இதில் 80 வீதம் கட்டுரைகளை ஒதுக்கிவிட்டாலும்கூட 16,600 தரமான கட்டுரைகள் என்பது 24 தொகுதிகள் அடங்கிய அச்சுக் கலைக்களஞ்சியத்திற்கு சமமானது. இம்மாபெரும் படைப்பில் மயூரநாதன் மட்டுமே முதல் கட்டுரையிலிருந்து இன்றுவரை 4200-க்கும் மேற்பட்ட தரமான கட்டுரைகளைத் தொடங்கி உருவாக்கியுள்ளார். இவற்றை அச்சிட்டால், குறைந்தது 500 பக்கங்கள் கொண்ட எட்டு நூல்களாக அமையும்.
இன்று தமிழ் விக்கிப்பீடியா மாதந்தோறும் 3.5 மில்லியன் பார்வையாளர்களை எட்டும் பிரபல தளமாகவுள்ளது. உலகப் பன்மொழி திட்டத்தில் இன்று 291 மொழிகளில் விக்கிப்பீடியாக்கள் இயங்குகின்றன. இதில் தமிழ் மொழியின் இடம் 61. இந்திய மொழிகளில் உள்ள விக்கிப்பீடியாவை அலசியதில், எண்ணிக்கை அடிப்படையில் தமிழ் இரண்டாவதாக வந்தாலும், தரத்தின் அடிப்படையில் பல வகைளில் தமிழ் விக்கிப்பீடியா முதலாவதாக நிற்கின்றது
தமிழ் விக்கிப்பிடியா தொடர்பாக எப்போதும் இருக்கும் கேள்விகள்
உங்களைப் பற்றி விக்கிப்பிடியாவில் நீங்கள் தகவல் சேர்த்ததுண்டா?
உங்களையும் உங்கள் நிறுவனத்தையும் (நீங்கள் எழுதிய புத்தகம், விற்கும் பொருள் போன்றவை) தவிர வேறு எதாவது விக்கிப்பிடியாவில் எழுதியதுண்டா?
ஸ, ஹ, ஜ, ஷ, ஸ்ரீ, க்ஷ போன்ற எழுத்துக்களை நீக்கி கர்ண கடூரமாக்கும் முறை பற்றி உங்கள் எண்ணம் என்ன? (தொடர்புள்ள இடுகை: விக்கிப்பீடியா:கிரந்த எழுத்துப் பயன்பாடு) – கவனிக்க… எனக்கு பஜ்ஜி சொஜ்ஜி பிடிக்கும்
85 பேர் சேர்ந்து 78.7% பக்கங்களைத் தொகுக்கும் முயற்சியில் அந்தக் கூட்டமைப்பிற்குத்தானே விருது போக வேண்டும்?
பலரும் வலைப்பதிவு, ட்விட்டர் ஓடை, ஃபேஸ்புக் பக்கம், புத்தக வெளியீடு, அச்சு நூல், ஊடக வேலை என்று பிழைப்பையோ பெருமையோ நாடும்போது, எது தன்னலமற்ற விக்கிப்பிடியாவை நாட வைக்கிறது?
பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் விக்கிப்பிடியாவை குறிப்புதவிக்கு பயன்படுத்தக்கூடாது என்பதை சொல்லியே வளர்க்கிறார்கள். இவ்விதச் சூழலில் விக்கிப்பிடியாவின் பயன்பாட்டையும் மதிப்பையும் எப்படி தக்க வைப்பது?
நீங்கள் எழுதிய ஒன்றை இன்னொருவர் உடனடியாக மாற்றுவார்; உங்களின் ஆக்கத்தை மற்றொருவர் அழிப்பார்; பஞ்சாயத்தில் வரும் தீர்ப்பே இறுதி முடிவு என்னும் சூழலில் தொடர்ந்து இயங்குவதற்கான உந்துசக்தி எங்கிருந்து வருகிறது?
லாபநோக்கற்ற அமைப்புகள் தொடர்ந்து நீடித்திருப்பது ஆச்சரியகரமானது. நன்கொடைகள் மூலமாகவே காலாகாலத்திற்கும் தமிழ் விக்கிப்பீடியா இயங்குமா?
தமிழ் வாசிக்கத் தெரியாத (ஆனால், கேட்க/பார்க்க மட்டுமே தெரிந்த) தலைமுறை இப்போது உருவாகி இருக்கிறது. இந்த நிலையில் தமிழ் விக்கியின் வருங்கால முக்கியத்துவம் எப்படி இருக்கும்?
விக்கிப்பிடியாவின் நம்பகத்தன்மையை எவ்வாறு நம்புவது? காந்திக்கு இரு பக்கம் என்று நிரூபிப்பதற்காக, மஹாத்மாவின் மீது வீசப்படும் சேறுகளுக்கு இடம் தந்து நடுநிலை வகிப்பதாலா? அல்லது மதவெறியைத் தூண்டும் அமைப்பிற்கும் பக்கம் ஒதுக்கி அவர்களின் தூஷணை வெளிப்பாட்டிற்கு தளம் அமைத்து இயங்குவதாலா?
சில சுவாரசியங்கள்
டிசம்பர் 2003ல் முதன் முதலாக துவங்கியவுடன் எழுதப்பட்ட பக்கங்கள்:
நீல் கெமன் எழுத்துக்கள் சுவாரசியமானவை. இங்கே தந்தைமை குணத்தைப் பற்றி பேசுகிறார். உருக்கமான சொற்பொழிவில் சிரிப்பும் வருகிறது. நகைச்சுவைக்கு நடுவே அழுகைத்துளிக் கூட வந்துவிடலாம்.
அவர் சொல்லும் சமபவங்களில் சில என் வாழ்வில் நடந்திருக்கிறது. கிரிக்கெட் விளையாடும்போது, இரு அணிகளுக்கு ஆள் எடுப்பார்கள். புளியங்கொட்டை போல் உள்ளங்கைக்குள் அடங்கும் சிறிய விஷயத்தை இரு அணியின் கப்தான்களும் எடுத்துக் கொள்வார்கள். அதை ஒருவர், ‘எந்தக் கை’யில் வைத்திருக்கிறார் என்று இன்னொரு அணித்தலைவர் சொல்ல வேண்டும். சரியாகச் சொன்னால், முதலில் அழைக்க ஆரம்பிக்கலாம். தன் அணியில் எவர் விளையாடுவார் என்று ஒவ்வொருவராகக் கூப்பிடுவார்.
அவன் அந்த அணி; இவன் அந்த அணி என்று இரு பக்கமும் எல்லோரும் போய்விடுவார்கள். கடைசியில் இருவர் இருப்பார்கள். ஒரு பக்கம் சோடா பாட்டில் கண்ணாடியுடன் நான். இன்னொரு பக்கம், என்னைவிட நாலு வயது இளையவளான எதிர்வீட்டு இலச்சுமி. அப்போது, அவளைத் தேர்ந்தெடுத்து, என்னை விட்டுக் கொடுக்கும் பெருந்தன்மையாகச் சொல்வார் எதிரணியின் கேப்டன்.
கையில் திறன்பேசி இல்லாமலே, கற்பனைக் கோட்டையாக நகவிரலில் நகாசு செதுக்கி சிந்தனைவயப்பட்டிருக்கும்போது, ‘மொட்டை…. மொட்டை’ என்று எவரோ கதறுவது — கிணற்றுக்குள் இருந்து கூவுவது போல் அரசல்புரசலாகக் காதில் விழும். நிமிர்ந்து பார்த்தால், டென்னிஸ் பந்து என்னை நோக்கி விரையும். அதை அவதானித்து, கீழே விழுந்தபின் தூர்தர்ஷனில் பார்த்த அவார்டுப் படத்தில் வாசலில் கோமூத்திரமும் சாணமும் போடும்வரை காத்திருந்து, பின் ‘பஷூ’ என்று அழைக்கும் மலையாளக்காரர் போல், ‘பந்து’ என்று சொல்லும்போது, “ஏண்டா… உன்னை எனக்குக் கொடுத்தாங்க” என்று திட்டும் அணித் தலைவரை நினைவுகூறும் சமபவம், இவருக்கும் நிகழ்ந்திருக்கிறது.
அவர்… பெரிய, முக்கியமான, புகழ்பெற்ற, விருதுகள் குவிக்கும் எழுத்தாளர். நான் இன்னும் உங்களுடன் பதிவில் பேசிக் கொண்டிருக்கிறேன்.
சாயங்காலம் ஆனால், கால்கள் தானாக அந்தப் பக்கம் சென்றுவிடுகிறது. மனைவி இல் நானும் இருப்பது ஒரு காரணம். இலவசமாக பீட்சா பரிமாறுகிறார்கள் என்பது இன்னொரு காரணம்.
என்ன இலவசம்? காரை நிறுத்த முப்பது சொச்சம் டாலர் செலவு. அந்தி மயங்கும் வேளையில் வீடு திரும்பும் எண்ணற்ற ஜனத்திரளில் ஊர்ந்து ஊர்ந்து செல்ல பெட்ரோல் செலவு. நியு யார்க்கை விட மோசமாக ஓட்டும் பாஸ்டன் நகர கட்டுமானத்திற்கு இடையே நுழைந்து வளைத்து இடிபடாமல் செல்லும் இதய நோய் உண்டாக்கம் கூட செலவு.
புற்றுநோய் வந்தவர்களுக்கான ஆதரவுக் குழு; மதுவின் பிடிக்குள் சிக்கினவருக்கான வாராந்திர சந்திப்புகள்; பொதுமேடையில் பேசுவதற்கான அச்சம் நீக்கும் டோஸ்ட்மாஸ்டர் கூட்டங்கள்… போல், இதுவும் ஒத்த பயனீட்டாளர்களின் ஊற்றுக்களம். ஒரு சிந்தனையாளரை அழைத்து, அவரைப் பேசவிட்டு, அவரின் வாயும் பவர்பாயின்ட்டும் பார்க்கும் களம்.
செவ்வாய் என்றால் ஜாவா; புதன் அன்று நோ சீக்வல்; வியாழன்தோறும் பத்தாண்டுகளுக்கு மேலாக புத்தம்புதியதாக மிளிரும் அதிவிரைவு மென்பொருள் உருவாக்கம் (agile software development). வாரத்தின் முதல் நாள் என்பதால் திங்கள் கிடையாது; இளவயதினர் ஜோடிப் பொருத்தத்திற்காக கிளப் விட்டு கிளப் மேய்வதால் வெள்ளிக்கிழமையும் விடுமுறை.
வாரயிறுதிகளில் இன்னும் பெரிய ஜமா கூடும். முழுவதுமாக ஆழ்ந்து பயிற்சிப் பெறும் செய்முறை விளக்கக் காட்சிகள் உண்டு; சொந்தக் கணினி எடுத்துக் கொண்டு போனால், புதிய நிரலிகளை உருவாக்குவதில் சரிசமமாக அனைவரும் பங்குப் பெற்று, முழுவதாக தயார் ஆன புத்தம்புதிய பயன்பாட்டை உலகிற்கே உடனடியாக உலவ விட சனியும் ஞாயிறும் போதுமானது.
ஆனால்… உங்களுக்குத்தான் பரிசிலோ பங்கோ சன்மானமோ கிடைக்காது. சொவ்வறை எழுதினோம்; அது நாளைய கூகிளிலோ, வருங்கால யாஹூவிலோ ஒரு அங்கமாக இருக்கக் கூடும் என்னும் மனத்திருப்தி மட்டுமே வாய்க்கப் பெறும்.
ஃபைட் கிளப் போல் இப்படி மன்றம் மன்றமாக சென்று வருவதும் மாலையானால் ‘என்ன கச்சேரி’ என்று தி ஹிந்துவில் எங்கேஜ்மென்ட் பார்ப்பதும் ஒன்றா என்பதை ஆராய தீஸிஸ் பரிந்துரை இட்டிருக்கிறேன்.
கோடை காலத்தில் பாஸ்டனின் அட்லாண்டிக் கடலில் நிறைய திமிங்கிலங்களைக் காணலாம். ஒரு மணி நேர அளவில் கப்பலில் கடலுக்குள் பயணித்தால், குட்டியுடன் விளையாடும் தாய், கூட்டமாக இரை பிடிக்கும் இளைஞர் கூட்டம் என விதவிதமாகப் பார்க்கலாம். அடைத்து வைக்கப்பட்ட மீன்காட்சியகத்தில் தரிசிக்காமல், பரந்த வெளியில் சுதந்திரமாக நீந்தும் திமிங்கிலங்களை இயற்கையான பரப்பில் காணலாம்.
பி.ஏ.கே. பசிஃபிக் சமுத்திரத்தில் விதவிதமான திமிங்கிலங்களைப் பார்த்த காட்சிகளை ஒளிப்படமாக இட்டிருந்தார். பாஸ்டனுக்கு வரும் பிரபலங்களுடன் இந்தப் பயணம் செல்வது குதூகலமான நிகழ்வு. ஆசுவாசமாக மூன்று மணி நேரம் உரையாடலாம். வெளியே விரிந்திருக்கும் எல்லையற்ற நீர்ப்பரப்பின் அமைதியோடும், வெயில் கொளுத்தினாலும் கடலின் குளுமையாலும், செல்பேசி இடைவேளிகளும் இடையூறுகள் தவிர்க்கப்பட்டதாலும் ரம்மியமான உல்லாசமான நேரம். சூரியவொளி புகாத ஆழ்க்கடலில், தன்னுடைய இரையின் இருப்பிடத்தைத் துல்லியமாக அறிந்து அவற்றைப் பிடிக்க எதிரொலி உத்தியை திமிங்கலங்கள் பயன்படுத்தும். அதே போல், வந்திருக்கும் எழுத்தாளர்களும் தங்களுடைய எழுத்துக்கான ’குரலை’ எவ்வாரு அறிந்து கொண்டார்கள் என்று அறிந்துகொள்ள ஏற்ற தருணமாக இந்தப் பயணங்கள் அமையும்.
திமிங்கிலம் காணச்செல்லும் இந்தக் கடல் பயணத்தின் முதல் சிக்கல் – எல்லோரும் வாந்தி எடுப்பது. அலைகளைக் கிழித்துக் கொண்டு எதிர்க்காற்றில் கப்பல் செல்லும். அது எதுக்களிக்கும். கோபம் எழும்போது தேவையில்லாத கதைகளை எப்பொழுதோ வாசித்திருந்த இலக்கியப் புத்தகங்களில் இருந்து நினைவுகூர்வேன். அதற்கொப்ப, எப்பொழுதோ உட்கொண்ட உணவை வெளிக்கொணரும். கப்பல் எங்கும் ஓக்காள உமிழ்வுகள்.
இன்னொரு சிக்கல் திமிங்கிலத்தின் அபான வாயு. கருவாட்டு வாயால் மூச்சுவிட்டால் கூட பொறுத்துக் கொள்ள முடியாத மீன்வாடை. திமிங்கிலத்தின் நாக்கில் ஐம்பது பேர் அமர்ந்து செல்லலாம். ஐம்பது பேரும் ஒரே சமயத்தில் குசு விட்டால் எப்படி இருக்கும்?
இப்பொழுது நேற்று நடந்த புதிய பிரச்சினை. வழக்கம் போல் அந்தப் பயணமும் கடலுக்குக் கிளம்பி இருக்கிறது. ஆனால், கார்னிவல் நிறுவனத்தின் கப்பல் பயணங்கள் போல் நடுக்கடலில் சிக்கிக் கொண்டுவிட்டது. சேராத இடம் சேர்ந்து கப்பலின் வடம் பாஸ்டனுக்கு எரிவாயு கொண்டு செல்லும் குழாய்களுடன் மாட்டிக் கொண்டது. ”அரை மணி நேரத்தில் சரியாகிவிடும்; ஒரு மணி நேரத்தில் கரை திரும்பிடுவோம்” என்று சால்ஜாப்பு சொல்லியவர்கள், கடைசியாக இரவு முழுக்க முழுக்க கடலிலேயே தத்தளித்து இருக்கிறார்கள்.
1. பாலியல் வல்லுறவு சம்பவங்கள் அதிகரித்து இருக்கின்றன என்று எப்படி சொல்ல முடிகிறது? அதற்கான தரவுகளோ, முறையான ஆய்வுகளோ இல்லாமல், பொத்தாம் பொதுவாக “ஜாஸ்தியாகி விட்டது” என எப்படி சொல்ல முடியும்?
2. அமெரிக்க கல்லூரிகளில் பாலியல் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டாமல் போகிறது. குற்றம் செய்தவர்களுக்கு ஆதரவாக நிர்வாகம் செயல்படுவதைத் தடுக்க ஆவன செய்ய வேண்டும் என ஒபாமாவே அறிக்கை விடும் அளவு நிலைமை மோசமாக இருக்கிறது. மேற்குலகில் கற்பு பறிபோய் விட்டது என செய்தியாக்குவதைவிட குற்றவாளி தண்டிக்கப் பட வேண்டும் என்பதே போராட்டத்தின் காரணமாக இருக்கிறது. இந்தியாவிற்கு எது முக்கியமாக இருக்கிறது? ஒவ்வொருவரும் நிம்மதியாக நடமாட வேண்டும் என்பதா (அல்லது) அநீதி இழைத்தவர்களை காலத்தே குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும் என்பதா?
3. பெண்கள் என்றால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வேலை பார்க்கும் உத்தியோகங்கள் நிறைந்த காலத்தில் இருந்து 24 மணி நேரமும் உழைக்கும் காலகட்டத்திற்கு மாறியிருக்கிறோம். ஆண் மட்டும் தனியே திரும்பும்போது ஜேப்படி என்பது பெரிய பிரச்சினை. இன்று பெண்களும் பின்னிரவில் தனியே பயணிக்கும்போது வேறு பிரச்சினைகளும் எழுகின்றன. இதுவும் உலகளாவிய சிக்கலாகவே இருக்கிறது. இவற்றை எப்படி சமாளிக்கலாம்?
4. பெண்களின் பொய் புகார்கள்: ஈ எம் ஃபார்ஸ்டரின் “பாஸேஜ் டு இந்தியா”வில் இருந்து: “Pity, wrath, and heroism filled them, but the power of putting two and two together was annihilated.” பிரிந்த காதலனைப் பழிவாங்கவோ… உறவினரை உள்ளே தள்ளவோ வல்லுறவுக் குற்றச்சாட்டுகள் உதவலாம். அந்த வகையில் எவ்வளவு நிரபராதிகள் மாட்டிக் கொண்டிருப்பார்கள்?
5. போர்னோ தளங்கள்: நம் ஒவ்வொருவர் வீட்டிலும் கத்தி வைத்திருக்கிறோம். தமிழ் சினிமா முழுக்கவே கொலைகளும் வெட்டு குத்துகளும் நிறைந்திருக்கின்றன. பாலியல் படங்கள் சுலபமாகக் கிடைப்பதால் பாலியல் குற்றங்கள் அதிகமாகின்றன என்பதை ஒத்துக் கொண்டால் வீட்டுக்கு வீடு அல்லது தெருவிற்கு தெரு இரத்தம் பெருக்கெடுத்து ஓடவேண்டுமோ?
6. மது அதிகம் கிடைப்பதால் மதுவருந்துபவர்கள் பெருகவில்லை. மதுவருந்தும் பணவசதியைப் பலரும் அடைந்திருப்பதால் மதுபானக் கடைகள் பெருகியிருக்கின்றன. அதே போல், கோழி அதிகம் கிடைப்பதால் கோழி சாப்பிடுபவர்கள் பெருகவில்லை. கோழி வாங்கும் சக்தியும் அடிக்கடி வாங்கும் பணவசதியையும் பலரும் பெற்றிருப்பதால், கோழிக்கடைகளும் கோழிப்பண்ணைகளும் பெருகியிருக்கின்றன. கோழி அதிகம் சாப்பிடுவதால்தான் பாலியல் வன்முறைகள் பெருகுகிறது என நிறுவலாமா?
7. பள்ளிக்காலங்களில் என்னுடைய நண்பன் நிறைய கதை சொல்வான். “நான் அவளுடன் இந்த மாதிரி இருந்தேன்” என கற்பனையும் காமமும் கலந்து புதிது புதிதாக விவரிப்பான். ஆர்வமில்லாமல் கேட்பவர்களும் கூட அவனுடைய எந்த காலட்சேபத்தையும் தவறவிடாமல் கேட்பார்கள். இந்த மாதிரி பொய்யும் புரட்டும் சொல்பவர்கள், இந்தக் காலத்திலும் ஊடகங்களிலும் கல்லூரிகளிலும் இருப்பார்கள். இவர்களைப் போன்றோரை நம்மில் எவ்வளவு பேர் தட்டிக் கேட்டு தடுத்திருக்கிறோம்? இந்த மாதிரி இட்டுக் கட்டி கிசுகிசுப்போரைத் தடுக்க சட்டத்தை விட தனி மனித செயல்பாடு அவசியமா?
8. ஐ.நா. புள்ளிவிவரத்தின் படி மூன்றில் ஒரு பெண்ணாவது பாலியல் வன்முறைக்குள்ளாகி இருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு பில்லியன் பெண்கள் உலகெங்கும்….. ஆணாக எனக்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இருந்ததில்லை. எப்பொழுது வீட்டிற்கு வரவேண்டும், எப்படி அடை அணிய வேண்டும், எங்கே செல்லக் கூடாது, எவ்வாறு நடக்கக்கூடாது என்று எந்த அறிவுரைகளும் வந்ததில்லை. ஆணாக இருப்பதால் மட்டுமே எனக்கு எந்த பய உணர்வும் வந்ததில்லை. ஆனால், பெண்ணால் இருப்பதால் மட்டுமே உருவாகும் அச்ச உணர்வு கலாச்சாரத்தை எப்படித் தவிர்க்கப் போகிறோம்? அவர்களை எப்பொழுது பொதுவெளியில் சுதந்திரமாகப் பேசவிட்டுக் கேட்கப் போகிறோம்?
9. பாலியல் வல்லுறவு கலாச்சாரமாக தனி மனிதன் என்ன செய்ய வேண்டும்? தனி உரையாடலில் அல்லது ஃபேஸ்புக்கில் கீழ்த்தரமான நகைச்சுவை வெளிப்பட்டால் எத்தனை பேர் அந்த நண்பரை கண்டிக்கிறோம்? எத்தனை தடவை கண்டும் காணாமலும் போய்விடுகிறோம்? சினிமாவில், தொலைக்காட்சியில் செய்யப்படும் வார்ப்புரு தோற்றங்களை எவ்வளவு பேர் கண்டிக்கிறோம்? எவ்வாறு அதையெல்லாம் மாற்றப் போகிறோம்?
ஒவ்வொரு நாளும் காலையில் கன்னலுக்கு ஓரிருவர் வருகிறார்கள்.
கலைஞர் டிவியின் ‘விடியலே வா’வில் திராவிடர் கழக வரலாறு சொல்ல சுப. வீரபாண்டியனும் ”தீதும் நன்றும்” மனுஷ்யபுத்திரனும்; கூடவே குளிராடி மாட்டிக் கொண்ட டாக்டர் காளிமுத்து மாதிரி சித்த வைத்தியரும் வருகிறார். சிறப்பு விருந்தினர் நேர்காணலும் தினசரி உண்டு.
சன் தொலைக்காட்சியில் ஆன்மிகக் கதைகள் சொல்ல கி சிவகுமார்; அரட்டை அடிக்க பாரதி பாஸ்கரும் ராஜாவும்; சப்த நிமிடங்கள் சொல்ல குரல்வளமிக்க சண்முகம். வணக்கம் தமிழகத்தில் வரும் பிரபலங்கள், பெரும்பாலும் திரைத்துறை சார்ந்து இருக்கிறார்கள்.
பொதிகையில் இராமாயணத்தை வேளுக்குடியும் சிவனுக்கு இரா. செல்வக்கணபதியும்; நான்மணிக்கடிகைக்கு சாரதா நம்பி ஆரூரனும், தியான யோகம் சிந்திக்க ஜி கே பாரதியும்; ‘உயிர் யாரிடம்’ சொல்ல டாக்டர் ஜெயம் கண்ணன். தூர்தர்ஷனிலும் ஓவியரோ ஆசிரியரோ வந்து நேர்முகம் கொடுக்கிறார்கள்.
ஜெயாவில் உபன்யாசம் உண்டு. கூடவே (கமல் புகழ்) கு ஞானசம்பந்தனும் உண்டு. நான் பார்த்த நேற்று பொருளாதார வித்தகர் வந்து பங்குச்சந்தையில் முதலீட்ட அழைத்தார்.
பேரா. கு. ஞானசம்பந்தன் புத்தகங்களையும் தமிழிலக்கிய வரலாறையும் நயம்பட எடுத்துரைக்கிறார். மனுஷ்யபுத்திரனை அவரின் சட்டைத் தேர்வுகளுக்காக பார்க்க வேண்டும்; ’இவர் ஒரு காலத்தில் புதுக்கவிதை எல்லாம் எழுதினாராக்கும்’ என்று சொன்னால் நம்பமுடியாதபடி பேசுகிறார். சுப வீரபாண்டியனின் புளித்த மாவை இன்னும் ஒரு இழை கூட எவரும் திரிக்க இயலாது. சிவகுமாரை அவ்வப்போது நுழைக்கும் கம்ப ராமாயணத்திற்காக கேட்கலாம். பச் பச் பளிச்களுக்காக சண்முகத்தை தவறவிடக்கூடாது. ஆனால், டாக்டர் ஜெயம் கண்ணன் மட்டும்தான் ஃபேஸ்புக் குறித்து சொற்பொழிவாற்றுகிறார்.
இதையெல்லாம் காலங்கார்த்தாலே அலுவல் கிளம்பும் அவசரத்தில் யார் பார்க்கிறார்கள் என்பதெல்லாம் நீல்சன் சம்பந்தப்பட்ட விஷயம். ’டிக்… டிக்… டிக்’கில் வரும் கமல்ஹாசனின் விடியல் போல் பாலிமரில் வரும் திரை முன்னோட்டத்தில் துவங்கும் காலை எனக்கு பிடித்தமானது.
மகளின் தமிழ்ப் புத்தகத்தில் கொடுத்திருந்த விடுகதைக்கு விடை தேடிக் கொண்டிருந்தோம். அவளும் அறிவியல்பூர்வமாக யோசித்து ‘தோல்’ என்றாள். குளிர்காலத்தில் தோல் தசைகள் சுருங்கும். கோடை சூரியன் காய்ச்ச ஆரம்பித்த பின் சிவப்பாகி நீளும்.
எனக்கு சரியான விடை அது இல்லை. அடுத்ததாக என் மனைவி விடை தெரியும் என்றாள். ‘மில்கி வே’, புவி. நமது சூரிய மண்டலத்தைப் பொருத்தவரை, இந்தப் பேரண்டம் பெரிதாகிக் கொண்டே இருக்கிறது. ரொம்ப நோவா பார்க்கிறாளோ என்று சந்தேகம் வந்துவிட்டது.
இப்படியே நிறைய பதில் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
– பலூன். வெளியில் போனால் பறக்கிறது.
– முட்டை. வயிற்றுக்குள் குட்டி; வெளியில் வந்தால் குஞ்சு; கொஞ்ச நாளிலேயே முழு வளர்ச்சி
– புத்தகம். கிணற்றுத் தவளையாக இல்லத்திற்குள்ளே முடங்கினால் சிந்தனை சுருங்கும்; உலகைப் பார்க்க கிளம்பினால் மனம் விரிவடையும்.
எதுவும் திருப்தியில்லை. நான் கவிஞன் இல்லை. விஞ்ஞானி. விடை ஒன்றுதான் இருக்க முடியும்.
கடைசியாக துப்பு கொடுக்க ஆரம்பித்தேன். “மழை.”
மகள் உடனடியாக விடை சொன்னாள். “அம்ப்ரெல்லா.”
“தமிழில் சொல்லு…”
“மழையில் இருந்து தப்பிக்க ஷீல்ட் மாதிரி உபயோகிக்கிறோம். எனவே, அதன் பெயர், ‘மழைக் கேடயம்’.
Why Narcissists "Breadcrumb" You
Breadcrumbing is when a person gives someone just enough attention to "string the… twitter.com/i/web/status/1…2 days ago
The 2023 “QS World University Rankings” have been published. These contain rankings by subject matter, including ph… twitter.com/i/web/status/1…2 days ago
British Journal for the History of Philosophy Awards: Michael Kremer (Chicago) “Margaret MacDonald and Gilbert Ryle… twitter.com/i/web/status/1…5 days ago
Godfrey Cheshire of The New York Press prescient essay titled “The Death of Film, the Decay of Cinema.”
NYT Magazi… twitter.com/i/web/status/1…6 days ago
A.O. Scott conducts his own exit interview as he moves to a new post after more than two decades of reviewing films… twitter.com/i/web/status/1…6 days ago
Our Film Critic on Why He’s Done With the Movies
A.O. Scott discusses how American cinema has evolved over his 23… twitter.com/i/web/status/1…6 days ago
These Mushrooms Are Not for Eating
Anthropologist Anna Tsing’s book “The Mushroom at the End of the World,” which… twitter.com/i/web/status/1…6 days ago
Los Angeles’s Metro Is Using Classical Music as a Weapon
The music — described to me as “earplugs-at-a-concert lou… twitter.com/i/web/status/1…1 week ago
American Masters: Roberta Flack follows the music icon from a piano lounge through her rise to stardom. From “First… twitter.com/i/web/status/1…1 week ago
Writers Guild of America WGA Would Allow Artificial Intelligence in Scriptwriting, as Long as Writers Maintain Cred… twitter.com/i/web/status/1…1 week ago
World Poetry Day: What is the best use of poems in cinema?
Interstellar: Dylan Thomas – Do Not Go Gentle Into That… twitter.com/i/web/status/1…1 week ago
The End of ‘Life’ As You Know It
Society’s outdated ideas about what it means to be alive are obstructing progress… twitter.com/i/web/status/1…1 week ago
Vikesh Kapoor is the winner of the 2022 Daylight Photo Awards! Vikesh's project See You At Home is an ongoing perso… twitter.com/i/web/status/1…1 week ago
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde