ஏற்கனவே பத்து காரணங்களைப் பார்த்து அலுத்து இருப்பீர்கள்.
இருந்தாலும் #PS2 வந்த பிறகு 11வது காரணம்:
டைரக்டர் ஷங்கர் தியாகராஜன் மகன் நடிகர் பிரசாந்த்தை வைத்து ஜீன்ஸ் இயக்குகிறார். அது மதுராந்தாகன். தகுதி இல்லாதவர். பணத்தினால் பதவியை அடைபவர். இதுவே மாந்திரீக யதார்த்தம்.
டைரக்டர் மணி ரத்தினம் புகழ்பெற்ற விஜய் சேதுபதியையும் பணம் படைத்த அருண் விஜய்யையும் வைத்து செக்கச் சிவந்த வானம் இயக்குகிறார். இது பொன்னியின் செல்வன் – அருண் மொழி – ராஜராஜன். இது பணம் படைத்த தயாரிப்பாளர் மகன் ‘ஜெயம்’ ரவி. இது குறிப்பால் பொருளுணுர்த்துவது.
இத்தனை காலமாய் நான் ஏன் இதை புரிந்து கொண்டு உணரவில்லை… என் போதாமைதான்!
இசையமைப்பாளர் ஏ ஆர் ரெஹ்மான் தன் மச்சான் ரகுமானுக்காக “சங்கமம்” கொடுக்கிறார். உறவினரால் வாய்ப்பளிக்கப் படுகிறார் ஒருவர். அது மதுராந்தாகன். தகுதி இல்லாதவர். இதுவே ஒன்றைக் கொண்டு இன்னொன்றைச் சொல்வது. அதற்கு பெயர் மாந்திரிகம்; எதார்த்தம்.
இது போன்ற சமரசங்களை மேஜிக்கல் ரியலிசமாகக் கொடுப்பதுதான் #பொசெ2 திரைப்படம்.
கொலைவெறியில் உண்மையான ஆதிக்க அரசர் அரக்கராக – ஆதித்த கரிகாலன் உதாரண இயக்குநர். அவர் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா போன்றவர். அவரிடம் கொடுத்தால் ‘ஓரம் போ’, அல்லது ‘மாடர்ன் லவ்: சென்னை’ போன்ற அசல் பதார்த்தம் வரும்.
உண்மையான சூத்திரதாரி என்பவர் திறைமறைவில் எக்சியூடிவ் ப்ரொடியூசர் ஆக இயங்குபவர். அவர் அசல் வாழ்வில் தோல்வியுற்றவர். அவர் தனியாக படையெடுத்து போரிட்டால் வெற்றி பெற மாட்டார். அந்த ஆள் தன் சொந்தக் காலில் சுய முயற்சியாக படம் எடுத்து படுதோல்வி கண்டிருப்பார், அது ‘சிவா’ – “ஓகே காதல் கண்மணி” படத்தின் அண்ணனாக வருவாரே… அவர். பொ.செ. கதையில் வல்லவரையன் வந்தியத் தேவன்.
நந்தினி என்பார் ‘ஐஷ்வர்யா ராய்’ என்பாரே தான். அவர் அசல் நடிகையாக மதிக்கப் பெறாதவர். ஒரு ராதிகா ஆப்தே-விற்கோ. கொன்கொனா சென்-னிற்கோ… அவ்வளவு ஏன் தற்போதைய என்னுடைய நாயகி ‘தேவி’ தபூ-விற்கோ கிடைக்கும் அந்தஸ்து கிடைக்கப் பெறாதவர். அதே போல் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் அரசியாகக் கொண்டாடப் படாதவர். அவரை குறித்துணர்த்தத் தான் நந்தினிக்கு அய்ஷ்வர்யா ராயே நடிக்கிறார்.
அவரின் வயதை நேரடியாக மந்தாகினியாக மேக்கப் இல்லாமல், பூச்சுகள் இல்லாமல் உலா வருகிறார். டிம்பிள் கபாடியாவிற்கும் கனவுக்கன்னி ஹேமமாலினிக்கும் வயதாகும். இருந்தாலும் இளமையாக நினைப்போம். நடிக்கிறோம். நாடக மேடை. அரச சபை. அரசி என்பவள் நடிகை அரசன் என்பவன் தந்தையை ரவுடியாகக் கொண்டவன். இயக்குநர் என்பவர் ராஜகுரு. அனிருத்த பிரும்மராயர். காதில் ஒதுவார். ஒதுவது புரிந்தத்தா?
பிராமண குடும்ப சாஸ்த்ரோப்தங்களைக் கிண்டல் செய்தும் ‘நம்பினால் நடந்துவிடுமோ?’ என சந்தேகிக்கும் கரு;
மலையாளத் திருமணமும், படகு வீட்டில் அந்தி சாயும் வேளையில் பொன்னிற வானத்தை மல்லாந்து பார்த்தபடி நதியோடு மிதக்கும் ஏகாந்தமான காட்சியமைப்பு;
முப்பதாண்டுகள் கழித்து அசப்பில் ‘மௌன ராகம்’ ரேவதியும் கார்த்திக்கும் எட்டிப்பார்க்கும் வசனம்;
கிறித்துவத்தில் கருக்கலைப்பை எவ்வாறு பார்ப்பார்கள் என்று வாழைப்பழத்தில் ஊசி ஏற்றும் உணர்த்தல்;
’அலைகள் ஓய்வதில்லை’ ஆர்ப்பாட்டத்திற்கு எல்லாம் அப்புறம் எவ்வளவு தூரம் வந்திருக்கிறோம் என கடந்து போகும் மதம் பார்க்காத காதல்;
வெறுமனே காதல் கதையாக இல்லாமல், அமெரிக்கா அனுப்பும் கணினி நிறுவனம்; அந்தக் குழுமத்தின் தலைவர்; கூட வேலை பார்க்கும் மேலாளர் ஆக அனுபமா பரமேஸ்வரன் (என்ன லட்சணம்!)
தெலுங்குப் பெயர்களின் நீளம்; விளம்பரத்திற்கு நிதி ஒதுக்காமல் தன் சிப்பந்திகளையே நடிக்க விடும் அலுவல் நுட்பம்; ஹோமங்கள், யக்ஞங்கள், யாகங்கள், பரிகாரங்கள்; தர்ப்பையை நாக்கில் பொசுக்கும் கண்டுபிடிப்புகள்
படத்தில் ஏதோ இருக்கிறது. அந்த இயக்குநர் விவேக் ஆத்ரேயாவின் போன படமும் இப்படித்தான். குழப்படியாக குப்பாச்சுவாக இடியாப்ப லிங்க்வீனி பாஸ்டா சிக்கலாக, புதுமையாக சுவாரசியமாக இருக்கும்.
ஆன்டி சுந்தரினிகி – வெள்ளித்திரையில் ஏன் ஹிட் ஆகவில்லை?
Vikramadithyan Documentary | Vishnupuram Awards 2021: ‘வீடும் வீதிகளும்’, 2021ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது பெறும் கவிஞர் விக்ரமாதித்யன் அவர்களைப் பற்றிய ஆவணப்படம் பார்த்தேன்.
சில எண்ணங்கள்:
1. துணையெழுத்து இல்லாமை: தமிழ்க் கவிஞரைப் பற்றிய அறிமுகப் படத்தில் வரும் உரையாடலை, உரையாடற் மொழியிலோ பிற வேற்று மொழியிலோ எழுத்து வடிவில் காட்டப்படும் உரை; ஆங்கிலத்தில் துணையுரை இல்லாமல் இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.
2. அரை மணி நேரத்தில் முடிக்க வேண்டும் என்று அவசர கதியில் மிச்சம் மீதியைப் போட்டு செய்யும் வடகறி கொத்து பரோட்டா போல் வந்திருக்கிறது. வடகறி சுவையாக இருக்கும். ஆனால், இங்கே சாஸ்திரோப்தமான சூப், சிற்றுண்டி பலகாரம், தலைவாழை இலை சாப்பாடு, பீடா எல்லாம் எதிர்பார்க்கிறேன்.
3. இந்தப் படங்கள் எவரைக் குறிவைத்து எடுக்கப்படுகின்றன?
அ) தமிழ்க் கவிஞர்களை அதிகம் அறியாத தமிழ் தெரிந்தோர்
ஆ) விக்கிரமாதித்தனை நன்கு அறிந்தோர்
இ) தமிழ் இலக்கியத்தில் நிறைய பரிச்சயம் இருந்தாலும் விக்கிரமாதித்தனை அறியாதோர்
ஈ) தமிழ் புரிந்தாலும் எழுத/வாசிக்கத் தெரியாத தலைமுறை
உ) விஷ்ணுபுரம் வாசகர் வட்டம்
என்னை (இ) பிரிவில் வைத்திருக்கிறேன். என் மனைவியை (அ) பிரிவில் வைக்கிறேன். எங்கள் குழந்தைகளை (ஈ) பிரிவில் வைக்கலாம். இந்த மூவருக்குமே இந்தப் படம் எதையும் கொண்டு சேர்க்கவில்லை.
4. நான் எதை எதிர்பார்த்தேன் – இந்தப் படத்தில்?
i) தமிழ்க் கவிஞர்கள் – சுருக்கமான பாரம்பரியம்; எந்த இடத்தில் விக்கிரமாதித்தன் வருகிறார்?
ii) விக்கிரமாதித்தன் தோற்றமும் வளர்ச்சியும் – எவ்வாறு அந்தக் கவியாளுமை உருவானது?
iii) சமகால கவிஞர்களை எவ்வாறு அவர் ஊடுருவுகிறார்? அவரின் நெடிய இலக்கிய பயணத்தில் என்னென்ன மாற்றங்கள் தோன்றின?
iv) கவிஞரை வாசித்ததால் அவரவருக்கு என்ன கிடைத்தது? போகன் சங்கர், லஷ்மி மணிவண்ணன், வண்ணதாசன் – சுய அனுபவம் / நேர்மையான தன்மை நிலைப் பார்வை / அகப் பகிர்வு – இது இல்லாமல் பீடத்தில் இருந்து கொண்டு சொற்பொழிவாற்றுவது ‘ராஜாதி ராஜ ராஜ கவிராய ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர விக்கிரமாதித்தாய நமஹ!’ என அலறுகிறது.
5. அறிமுகமாக அந்த வீணை இசை மெல்லிய அபாரம். படம் முழுக்கவே சத்தமாக, “நான் இருக்கிறேன்!” என்று கத்தாமல், படத்தோடு இயைபான இசை.
6. ஏன் பேசுபவர்களின் பெயர்களை ஆங்கிலத்தில் போடுகிறார்கள்? பேசுபவர் யார், எங்கிருக்கிறார், என்ன எழுதியிருக்கிறார், ஏன் பேசத் தகுதியானவர் என்றெல்லாம் போட வேண்டும்.
7. கவிஞரைக் குறித்த ஜெயமோகனின் அறிமுகம் முகஞ்சுளிக்க வைத்தது. இன்னாரைப் பாராட்டி சீராட்டும் தருணத்தில் “சட்டையில்லாமல் வந்தார்! சண்டைக்காரராக முன்வந்தார்!!” என்று சொல்லிவிட்டு, “நான் எழுதியதுதான் அவரைப் பற்றிய முதல் கட்டுரை!” என்று ஜம்பமும் தட்டிக் கொள்வது உவ்வேக். கொஞ்சம் தன்னடக்கத்தோடு உரையாடியிருக்கலாம்.
8. இறுதியில் போடப்படும் பெயர் பட்டியல் – அகர வரிசைப்படி இருக்க வேண்டும். இது ஏதோ இலக்கிய அந்தஸ்து பீடம் போல் வயதை வைத்து போடப்பட்டிருக்கிறது.
9. ஒரே ஒரு பெண்ணாக சுபஸ்ரீ வந்து போகிறார். நன்றாகப் பேசினார்.
10. விக்கிரமாதித்தன் உரையாடலை இன்னும் தீவிரமாக ஆழமாக நடத்தியிருக்க வேண்டும். குடியோடு என்றால் குடியோடு. ஏழெட்டு நாள்கள் என்றால் அத்தனை பொறுமையோடு. அதன் பின் கத்திரி போட்டு ஆங்காங்கே கிடைத்த நறுக்குகளைக் கொண்டு அவரின் பேச்சு வந்திருக்க வேண்டும். இப்பொழுது ஏதோ தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்த்தை வைத்து பொம்மை கோச்சடையான் எடுத்த மாதிரி தீட்டியிருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் திரைக்கதையில் ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கின்றன. தர்க்கப் பிழைகள் இருக்கின்றன. இதன் க்ளைமாக்ஸ் ஓர் உதாரணம். அதன் காரணமாக படம் நன்றாக இல்லை.
இப்படம் இஸ்லாமியர்களை ‘மட்டும்’ மோசமாகச் சித்தரித்திருப்பதாகவும் அவர்களது தீவினைகளுக்கு எதிர்வினையாகவே இந்துத்வர்கள் செயல்படுவது போலக் கட்டமைக்கப் பிரயத்தனப்படுகிறது என்றும் பலரும் அபிப்ராயப்படுவதை நான் ஏற்கவில்லை.
முதல் விஷயம், பிருத்விராஜ் சொல்கிற ஃப்ளாஷ்பேக். ஃபிரான்சின் நவீன மனநிலையுடன் ஒப்பிடும்போது, அவர்களது முற்போக்குத்தனத்துடன் ஒப்பிடும்போது, இஸ்லாமியர்கள் அங்கே நிகழ்த்திய வன்முறை – நேரடியாகவும் கருத்தியல் ரீதியிலும் – சகித்துக்கொள்ள முடியாதது. சார்லி ஹெப்டோ பத்திரிகையில் முகமது நபியின் கேலிச் சித்திரத்தை வரைந்ததற்காக குண்டு வைத்த இஸ்லாமியர்களைக் கண்டு ஐரோப்பியர்கள் அஞ்சுவது நியாயமானதே. புரிந்துகொள்ளக்கூடியதே. அவர்கள் முந்நூறு ஆண்டுகளாக இரத்தம் சிந்தி அந்தக் கருத்துச் சுதந்திரத்தை அடைந்தவர்கள். அவர்களுக்கு அதன் மதிப்பு தெரியும்.
இந்தப் படம் இஸ்லாமியக் குடியேறிகள் ஃப்ரான்ஸில் செய்த அட்டூழியங்களையும் அவர்கள் ஈடுபட்ட ஜனநாயக விரோத நடவடிக்கைகளையும் தன்னுடைய கதாபாத்திரத்தின் மனநிலையை வகுப்பதற்கான reference-ஆக எடுத்துக்கொள்கிறது. இதில் எந்தத் தவறுமில்லை.
நான் இப்படிப் புரிந்துகொள்கிறேன்.
இரண்டு விதமான இஸ்லாமியர்களை இப்படம் சித்தரிக்க முயல்கிறது.
1. தங்களது மதவெறி காரணமாக கொலைவெறிச் செயல்களில் ஈடுபடுபவர்கள்.
2. இஸ்லாமிய மதநெறியின் பொருட்டு தங்களது நன்னம்பிக்கை வழுவாது வாழ்பவர்கள். யாருடைய பார்வை சரி, எந்தத் தரப்பு தவறு என்பதற்குள் விரிவாகச் செல்லாமல் சுருக்கமாக இப்படி வரையறுக்கலாம். இந்த இரண்டு தரப்பு இஸ்லாமியர்களுமே தங்களது நம்பிக்கை மீது மிகுந்த பிடிப்புடனும் பற்றுடனும் வாழ்கிறார்கள். அதில் பாவனை இல்லை, நாடகம் இல்லை, போலித்தனம் இல்லை. சரியோ தவறோ தாங்கள் தீர்க்கமாக நம்புவதைக் கடைபிடிப்பதில் தயக்கங்கள் இல்லை. இதில் அவரவர்க்கு அவரவர் நியாயம் இருக்கிறது.
ஆனால், பலரும் கருதுவதைப் போல அந்த இந்துத்வ சிறுவனை இப்படம் அப்பாவியாகக் காட்டவில்லை. அவனை ஒரு புழுவைப் போல காட்டுகிறார்கள். அவன் தனது கொள்கைக்கு விரோதமாக மாட்டுக்கறி உண்கிறான். தன்னைக் காப்பாற்றிக்கொள்ள எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கிறான். இதன் மூலம் அவன் எவ்வளவு அற்பமானவன் என்பதை நிறுவிவிடுகிறார்கள்.
‘அவங்க கோவிலை எரிச்சாங்க. இவன் கத்தியை எடுத்துட்டான்’ என இந்துப் பெண் சுமா சொல்லும் காரணம்கூட வெறும் சால்ஜாப்புதான். இஸ்லாமியர்களைப் போல தன்னுடைய செயலுக்கான விளைவுகளை (conviction) ஏற்றுக்கொள்ள அவன் தயாராக இல்லை. தன்னுடைய வயதைக் காரணம் காட்டி அடுத்தவர்கள் மீதோ பழிசுமத்தி தன்னைத் தூய்மையில் நிறுத்திக்கொள்ள அவன் நடிக்கிறான். அதற்கு சுமா துணைபோகிறாள். கடைசியில், தான் உயிர் பிழைப்பதற்காக, தன்னைக் காப்பாற்றிய சுமாவையும் அவளது அண்ணனையும் நடுக்காட்டில் தள்ளிவிட்டு இருவரையும் உயிருக்குப் போராட விட்டுவிடுகிறான். எவ்வளவு சுயநலம்! குள்ளநரித்தனம்! (ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கே மதவெறி/சாதிவெறி அதிகம் எனக் கோடிட்டுக் காட்டுகிறார்கள்.)
பிரச்சினை என வந்துவிட்டால், இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் சளைக்காமல் உதவுகிறார்கள். தங்களது கூட்டாளிகளைப் பாதுகாக்கிறார்கள். ஆனால், இந்துத்வனோ, தான் மட்டும் தப்பிப் பிழைத்தால் போதுமென நினைக்கிறான். ஓர் இந்துத்வனை நம்பி சக இந்துக்கள் அவனுக்கு உதவிசெய்ய நினைப்பதுகூட பேராபத்தில்தான் முடியும் என்பதல்லவா இதன் பொருள்? அவன் கடைசிவரை தன் தவறை ஒப்புக்கொள்வதில்லை, மனம் திருந்துவதில்லை, தனக்காகச் சொந்த மதத்தினரைப் பகைத்துக்கொண்ட ஓர் இஸ்லாமியக் குடும்பத்தின் வேதனை எந்த விதத்திலும் அவனைப் பாதிக்கவில்லை. அவர்களது குருதியை உறிஞ்சிவிட்டு இன்னமும் வெறி அடங்காது வெறுப்புடன் திரிகிறான். இவனை விடவா இப்படத்தின் இஸ்லாமியத் தீவிரவாதிகள் மோசமானவர்கள்?
அதனால், அந்த இந்துத்வனை அப்பாவியாகச் சித்தரித்திருக்கிறார்கள் என்பதைத் தர்க்கரீதியில் ஒப்புக்கொள்ள முடியாது. அவனைத் தீமையின் உருவகமாகக் காட்டியிருக்கிறார்கள் என்கிற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது.
‘குருதி’ மலையாள திரைப்படம் பார்த்தேன். மேற்கண்ட வாக்கியம்தான் இந்தப் படத்தின் ஆதார மையம் என்று தோன்றுகிறது.
‘இந்த வாக்கியத்தை உங்களால் தாண்டி வர முடியுமா?” என்கிற சவாலான கேள்வியை, மூசா என்கிற ஓர் இஸ்லாமியப் பெரியவரின் வழியாக ஒவ்வொரு பார்வையாளனையும் நோக்கி கேட்கிறது இந்தப் படம்.
ஆயிரம்தான் இருந்தாலும் மதம் என்பது ஒரு கற்பிதம்தான். அது நம்முள் விதைக்கும் நல்ல விஷயங்களைத் தாண்டி வன்மமாகவும் வெறுப்பரசியலாகவும் பரவும் அபத்தத்தை ரத்தக் கறையோடு விறுவிறுப்பாக சொல்லிச் செல்கிறது இந்தத் திரைப்படம்.
அனைத்து மதத்திலும் சில அடிப்படைவாதிகள் இருப்பார்கள். மத அரசியலின் புகையை ஊதிக் கொண்டே இருப்பார்கள். இந்தச் சாத்தான்களின் குரலை புறக்கணித்து விட்டாலே போதும்.
அப்படியொரு ‘சாத்தானாக’ ருத்ரதாண்டவம் ஆடியிருக்கிறார் பிருத்விராஜ். அவருடைய தயாரிப்பாக இருந்தாலும் இப்படியொரு எதிர்மறைப் பாத்திரத்தை எடுத்ததற்கு பாராட்டு. (ஹேராமில் கமல் ‘அப்யங்கர்’ பாத்திரத்தை எடுத்திருப்பாரா என்கிற கேள்வி இங்கு எழுகிறது).
படம் இழுவையான காட்சிகளுடன் துவங்கினாலும் ஒரு கட்டத்தில் நெருப்பு மாதிரி பற்றிக் கொள்கிறது. பிறகு வேகம். வேகம்தான்..
மதக்காழ்ப்பு என்பது சிலரிடம் அப்பட்டமாகவும் பலரிடம் மறைமுகமாகவும் ஒளிந்திருக்கும் ஆபத்து, ‘நாம்’ ‘அவர்கள்’ போன்ற பிரிவினைவாத சிந்தனைகள் எவ்வாறு உருவாகின்றன என்பது உள்ளிட்ட பல விஷயங்களை சொல்லிச் செல்கிறது, இந்தப்படம்.
திரைக்கதை, ஒளிப்பதிவு, பின்னணி இசை என்று பல தொழில்நுட்ப சமாச்சாரங்கள் சிறப்பாக அமைந்துள்ளன. நிச்சயம் தவற விடக்கூடாத திரைப்படம்.
சிறப்பான படத்தை பார்த்த ஒரு திருப்தி. வாழ்வில் நாம் காணும் மனிதர்களின் மேல் அரசியல் , சுயநலம் ,பொறாமை என்ற பெயரில் நாம் செலுத்தும் வெறுப்பை நம் கண் முன்னே ஓர் இரவின் நிகழ்வுகள் பின்னணியில் சொல்லிவிடுவதே இந்த படம்.
மதத்தின் மேல் பலருக்கும் பல கருத்துக்கள் இருக்கும். அந்த கருத்துக்கள் ஒரு பக்கம் இருக்கட்டும் , அதன் இரு வேறு நன்மை தீமைகளை எடுத்துக்கூறும் ஒரு திரைக்காவியம் என்பதாக இந்த படத்தை நாம் காணலாம்.
ஒரு காட்சி என்னை மிகவும் கவர்ந்தது, கொல்வதற்காக வரும் எதிரிகள் வீட்டு மெயின் ஸ்விட்சை அணைக்கிறார்கள் அப்பொழுது அங்கு உள்ளிருக்கும் இருவர் தன்னைத்தான் கொல்ல வருகிறான் என்று நினைத்து இரு மத இளைஞர்கள் எதிர் எதிர் ஒரு ஆயுதத்தை ஏந்தி எதிர்த்து நிற்பார்கள் . அப்பொழுது அங்கிருக்கும் பெரியவர் ” இதுதான் நம் நாட்டின் பிரச்சனையும் ” என்பார். எவ்வளவு நாசூக்காக நம் நாட்டின் மத பிரச்சினையை விளக்கி விட்டார்.
லண்டன் ரயில் நிலையத்தில் அந்தக் குட்டிக் கரடி வந்து இறங்கும். அதனுடைய கழுத்தில் “இந்தக் கரடியை கவனித்துக் கொள்ளுங்களேன்!” என்று எழுதியிருக்கும். இந்தக் காட்சியை சரியாகப் புரிந்து கொள்வதற்கு செப்டம்பர் மாதம் 1939க்கு பின் செல்ல வேண்டி இருந்தது. லண்டன் மாநகரத்தை குண்டு போட்டுத் தாக்குவார்களோ என அஞ்சிக் கொண்டிருந்த காலகட்டம் அது. ஜெர்மனியுடன் போரிடுவதற்காக தந்தையர் எல்லாம் போர்முனைக்குச் சென்றுவிட, அன்னையர் எல்லாம் செவிலியர் ஆகிவிட, அனாதைகளாக ஆனக் குழந்தைகளை சித்திகளும் மாமிகளும் ரயில் ஏற்றி கிரமாப்புறமாக அனுப்பி விடுகின்றனர்.
போர் முடிந்து சொந்த வீடு இருக்கும் லண்டன் நகரம் திரும்ப பல்லாண்டு காலம் ஆகலாம். ’பேடிங்டன்’ படத்தில் வரும் அழகுக் கரடியும் பெரு நாட்டில் இருந்து கள்ளத்தோணி ஏறி விசா இல்லாமல் இங்கிலாந்து நாட்டிற்குள் குடிபுகுகிறது. அங்கே நட்ட நடுவில் அது அமர்ந்திருந்தாலும், எந்தப் பயணியரும் அதை கவனிப்பதில்லை. அவரவருக்கு அவரவரின் அவசரம் + வேலை. ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது பிரவுனின் குடும்பம் வந்து சேர்கிறது. எப்போதும் உற்சாகமாக இருக்கும் கரடியும், “எப்படி இருக்கிறீர்கள்? நலமா? நான் வசிப்பதற்கு இல்லம் தருவீர்களா!?” எனக் கேட்கிறது.
அதே மாதிரி அனாதரவான நிலையில் இருந்தாலும், ‘தி கிரேட் மேன்’ (பெரிய மனிதன் – The Great Man – ஃபிரென்ச் “Le grand homme”) படத்தின் பத்து வயது பாலகன் கட்ஜி (Khadji) பாரிஸ் ரயில் நிலையத்தில் பரிதாபமாக முகம் காட்டி, எவரிடமும் இறைஞ்சவில்லை. இது போரைக் குறித்த படம் எனலாம். அப்படியே, நாடு விட்டு நாடு தாவும் வந்தேறிகளின் குடிபுகலை சுட்டும் படம் எனலாம். நட்பின் நேசத்தின் கண்ணியத்தை உணர்த்தும் படம் எனலாம். அன்னியக் கலாச்சாரத்தைக் கண்டு அஞ்சும் மரபுவாத நாட்டின், புதிய தலைமுறை அனாதைக்கு — மகனின் பாசத்தை உணர்த்தி, வாழ்வை அர்த்தப்படுத்தும் சிறுவனின் கதை எனலாம்.
படத்தை பல்வேறு அத்தியாயங்களாக, அதன் இயக்குநர் சாரா லியானோர் (Sarah Leonor) பிரித்திருக்கிறார். முதல் அத்தியாயம் ஆஃப்கானிஸ்தானில் துவங்குகிறது. மார்கோவ் (நடிகர் சுர்ஹோ சுகாய்போவ்) என்பவரும் ஹாமில்டன் (நடிகர் ஜெரமி ரேனியர்) என்பரும் அங்கே காவல் காக்கிறார்கள். இருவரும் அத்யந்த நண்பர்கள். ஒருவருக்கு தாகம் எடுத்தால், இன்னொருத்தர் தண்ணீர் குடித்தால் அந்த தாகம் அடங்கும் என்று பின்னணியில் சிறுவனினின் குரல் ஒலிக்கிறது. அவர்களுடைய கனவில் சிறுத்தைப்புலி வருகிறது. அந்தக் கானல் புலியைத் தேடி அலைகிறார்கள். அப்போது ஹாமில்டன் சுடப்படுகிறான். அவனை பிரம்மப்பிரயத்தனப்பட்டு, அவனின் தோழன் மார்க்கோவ் காப்பாற்றுகிறான். ஆனால், அவனைத் தூக்கி வரும் வழியில் தன் கைத்துப்பாக்கியை இழக்கிறான. அதற்கான தண்டனையாக, அவனுக்கு இராணுவத்தில் பணியாற்றிய காலகட்டம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என அறிகிறான்.
இராணுவத்தில் மார்கோவ் சேர்ந்ததற்கு ஒரேயொரு காரணம்தான் இருக்கிறது. செசன்யாவில் இருந்து பஞ்சம் பிழைக்க பிரான்ஸிற்கு அடைக்கலம் புகுகிறான் மார்க்கோவ். அவனுடைய மனைவி ருஷியாவின் தாக்குதல் போரில் இறந்துவிட்டாள். அவனுக்கு இருப்பதோ ஒரேயொரு மகன். மகனுக்கோ, தந்தையற்ற வாழ்க்கையை நினைத்து கழிவிறக்கம் கலந்த அச்சம் உடன் சேர்ந்த பதின்ம வயது ஆற்றாமை கோபம். இப்பொழுது மகனுடன் நேரம் கழிக்காவிடில், மீண்டும் மகனை, நல்லதொரு குடிமகனாக்க இயலாது என்பதை உணர்ந்த மார்க்கோவ், அதிகாரபூர்வ குடியுரிமையைக் கானல் நீராகக் கண்ணில் தண்ணி காட்டும் பிரெஞ்சு இராணுவ வாழ்க்கையைத் துறந்து, அதிகாரபூர்வமற்ற வந்தேறியாக மாறுகிறான்.
குடிமகர்களுக்கே வேலை கிடைப்பது பிரான்ஸில் யூனிகார்ன் குதிரைக்கொம்பாக, பெரும்பாடாக இருக்கிறது. இந்த நிலையில், அத்துமீறி உள்நுழைந்து, படைப்பிரிவில் இருந்தும் விலக்கப்பட்ட மார்க்கோவ் என்பவனுக்கு எப்படி ஊதியம் கிடைக்கும்? பல்லாண்டு காலமாக பிரிந்திருந்த மகனுடன் எவ்வாறு பாந்தமாக, பாசமான தந்தையாக உறவாட முடியும்?
அமெரிக்காவை விட பிரான்சு போன்ற நாடுகளில் குடியுரிமை பெறாதவர்கள், எவ்வாறு வேட்டையாடப்பட்டு, நாடு கடத்தப்படுகிறார்கள் என்பது இந்தப் படத்தில் காட்சிகளால், வசனங்களால், குறிப்பால் உணர்த்தப்படுகிறது. படத்தில் பல காட்சிகளில் நெடிய வசனங்கள் கிடையாது. குறிப்பாகச் சொன்னால். மகனும் தந்தையும் ஒன்றுசேரும் இடத்தைச் சொல்லலாம். மகனின் நல்வாழ்க்கைகாகத்தான் போருக்குச் சென்றேன் என்பதை பெரிய உரையாடல் மூலம் சொல்வதற்கு தந்தை மார்க்கோவ் முயல்கிறான். அந்த நெடிய சொற்பொழிவைக் கேட்க விரும்பாத மகன் கட்ஜி, எதிர்ப்புறமாகச் சென்று ஈஃபில் டவரின் ஒய்யாரத்தையும் பூட்டுகளால காதலைச் சொல்லும் பாலங்களையும் பார்ப்பது போல் ஓடி விடுகிறான். அந்த புதிய பூமியின் ஈர்ப்பும், மாபெரும் பாரிஸ் பிரும்மாண்டங்களும், இரவின் குளுமையும் அவனைத் தந்தையை நோக்கி இட்டுச் செல்கிறது. பாலம் மறைக்கும்போது வெளிச்சம் தடுக்கப்படுகிறது. பாலத்தின் அடியில் இருந்து வெட்டவெளியில் படகில் பயணிக்கும்போது நிலவின் வெளிச்சம் அப்பாவை அரவணைக்க வைக்கிறது. இருவரும் நெருங்குகிறார்கள்.
இந்த மாதிரி காட்சிகளைக் காதலில் பார்த்து இருப்போம். இரவின் நீல நிறத்தில் நண்பர்களின் கொண்டாட்டத்தைப் பார்த்து இருப்போம். ஆனால், தாய்மண்ணற்ற பிரதேசத்தில், வீடற்ற நாட்டில், தந்தையைக் கண்ணால் நாள்பட பார்த்தே இராத பாலகனின் பாசத்தை, நெருக்கத்தை அடையப் பாடுபடும் தந்தையையும், தூரதேசத்தில் நெருங்கிக் கொள்ளும் அன்னிய நாட்டவரின் ஈடுபாடும் மனித நேசத்தை வெளிச்சம் போடுகின்றன.
ஃபிரெஞ்சு புரட்சியின்போது அரசியல் கொள்கைகளைப் பரவலாக்க கலைப்படைப்புக்களின் உதவியது. பிரஞ்சுப் பேரரசை நெப்போலியன் உருவாக்கியபோது செய்தி என்பது தேசிய உணர்வைப் பொங்கச் செய்வதாக இருக்க வேண்டும் என்று நெப்போலியன் நினைத்தார். மற்ற நாடுகளும் நெப்போலியனை பின்பற்றி, அவனைக் கொடுங்கோலனாகச் சித்தரிக்க ஆரம்பித்தன. கீழே ஜெர்மனிய அரசின் பிரச்சார போஸ்டரைப் பார்க்கலாம். இதில் ‘தி கிரேட் மேன்’ என்று பிரான்ஸில் சொல்பவரை, ‘வெறும் எலி’ என்று சித்தரிக்கிறார்கள்.
பிரெஞ்சு நாட்டின் அடிநாதமாக Liberté, égalité, fraternité (விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம்) என்பதைச் சொல்கிறார்கள். அதைத்தான் இந்தப் படம் தேடுகிறது. ஒரு தேசத்தில் அன்னிய மக்கள், அதிகமாக உள் நுழைய நுழைய, அந்த தேசத்தின் கொள்கைகள் எவ்வாறு மாறுகின்றன? புதிதாக குடிபுகுந்தவர்கள், அந்த தேசத்தின் மையச்சரடோடு ஒத்துப் போவார்களா? அன்னியநாட்டில் இருந்து நுழைபவர்களுக்கு அந்த மண்ணின் மைந்தர்கள் எவ்வாறு, தங்கள் விழுமியங்களை விதைப்பார்கள்?
சிரியா வேண்டாம். தற்போதைய சிரியாவில் இருந்து தப்பிக்க முயலும் ஆசிய நாட்டினரைக் கூட ஐரோப்பியருடன் ஒப்பிட வேண்டாம். சில மாதம் முந்தைய கிரேக்கப் பிரச்சினையை எடுத்துக் கொள்ளலாம். எத்தனை ஜெர்மானியர், தங்களின் சொந்தச் சகோதரர்களுக்காக, தங்கள் கைக்காசைக் கொடுக்க முன்வந்தார்கள்?
கில்கமேஷ் காதை உங்களுக்கு நினைவிருக்கலாம். அது இரு நண்பர்களின் கதை. கில்கமேஷும் அவனுடைய தோழர் என்கிடு என்பவரும் தோழர்களாகவே தங்கள் பயணத்தைத் துவங்கவில்லை. இந்தப் படத்திலும் அவ்வாறே, மார்க்கோவும் ஹாமில்டனும் சிறுசிறு பிணக்குகளுக்குப் பின் தங்கள் திறமைகளை அறிந்து, உற்ற பந்தங்கள் ஆகின்றனர். ஹம்பாபா என்னும் கோர விலங்கைத் தேடி, அந்த மாபெரும் இராட்சத மிருகத்தை வேட்டையாடுவதற்காக, பெரியோரின் சொல்லைக் கேளாமல், கில்கமேஷ் மற்றும் என்கிடு, தங்களின் பயணத்தை மேற்கோள்கின்றனர். இந்தப் படத்தில் சிறுத்தைப்புலியை துரத்த வேண்டாம் என்னும் தங்களின் மேல் அதிகாரியில் சொல்லைக் கேளாமல், இரு நண்பர்களும் அந்த வீரப் பயணத்தை எடுக்கின்றனர். கிலகமேஷுக்கு பயமுறுத்தும் கனாக்கள் வருகின்றன. என்கிடு அவனின் கனவுகளை நல்லெண்ணங்களாக உணர்த்தி, சாகசத்தைத் தொடர்கிறான். நண்பன் என்கிடுவின் மரணத்திற்குப் பிறகு, மரணமற்றப் பெருவாழ்வை நோக்கிய தேடலை கிலகமேஷ் மேற்கொள்கிறான். இதுதான் இந்தப் படத்தின் அடிநாதம்.
தீவிரவாதம் என்னும் சிறுத்தைப்புலியைத் தேடி அடக்க நினைத்த மார்க்கோவ் என்னும் என்கிடு இறந்துவிடுகிறான். அவனின் உற்ற தோழனாலும் அதை சட்டென்று அடக்க முடியாது. ஒரு தந்தையாக, அனாதையானக் குழந்தையை இரட்சிப்பதில், தன்னுடைய இறவாத்தன்மையை உணர்வதாக ஹாமில்டன் என்னும் கில்கமேஷைப் பார்க்கிறோம். அப்படியானால், தாய்மைக்கு, இங்கே என்ன இடம் என்பதை பெண் இயக்குநர் சாரா சொல்லாமல் விட்டுவிடுகிறார். ஆனால், பெண்ணாக இருப்பதினாலேயே, ஒரு ஆணிற்குள் அடக்குண்டு இருக்கும் பொறுப்பையும், குழந்தைமையைப் பேணும் தாய்மை குணத்தையும் அவரால் பூடகமாக உணர்த்தமுடிகிறது. ஆண் இயக்குநர்கள் எடுக்கும் படங்களின் ஆண் கதாபாத்திரங்கள் ஆவேசமாக இயங்குவார்கள். துப்பாக்கியும் கையுமாக, இரத்தம் படிந்த கறைகளுடன் போர்களில் உலா வருவார்கள். அது ஆடவர்களின் ஆண்மையை நிலைநிறுத்துவதற்காக ஆடவர் எடுக்கும் படம். இது மனிதரின் குணத்தை உணர்த்துவதற்காக, பெண்கள் அதிகம் உலாவராதத் திரைக்கதையில், ஆண்களின் பராக்கிரமத்தை உணர்த்தும் பெண் எடுத்த படம். திரைப்படத்தின் தலைப்பையேப் பாருங்களேன். தி கிரேட் மான் – மாபெரும் ஆண்மகன்: ஆண்மகனுக்கு என்ன இலட்சணம்?
இந்தப் படத்தில் பெரிய கதாபத்திரங்களில் பெண்கள் கிடையாது. ஆண் என்பவன் வாள் ஏந்துவான்; சுட்டுத் தள்ளுவான்; சாப்பட்டைக் கொண்டு வருவான்; அதெலாம் இங்கே காண்பிக்கப்படுகிறது. ஆனால், நல்ல மனிதர் என்பவர், சக மனிதருக்கு மரியாதை தருவார். அவரின் நிலை, நாடு, அரசியல், இனம், மொழி, மதம், போன்ற சின்னங்களை ஒதுக்கி, சக நேசனாக நடத்துவார். இந்த உலகமோ, சொந்த நாடோ, அதைச் செய்யாவிட்டாலும் கூட… தன்னுடைய அண்டை அயலாரை அவ்வாறு நடத்துபவரே ‘தி கிரேட் மேன்’.
இந்த சமூகத்தில் நல்ல மனிதனாக வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும்? போரில் அடிமைகளாக ஆனவர்களை வெற்றி கொண்டவர்கள் எவ்வாறு நடத்த வேண்டும்? வேண்டாத சண்டையின் நடுவே அகப்பட்டு கொண்டவர்களை எவ்வாறு மீட்க வேண்டும்? இதற்கெல்லாம் சரியான பதில் எவரிடமும் கிடையாது. ஆனால், ‘தி கிரேட் மேன்’ அதற்கான விடைகளை நோக்கி நம்மை செலுத்துகிறது.
ருக்மிணி, (சத்ய)பாமா, ராதா – மூன்று நாயகிகள். பாமா ஆக ஷ்ரதா ஸ்ரீநாத் (நேர் கொண்ட பார்வை படத்தில் நடித்தவரேதான்).
பாடல்கள் நன்றாக பொருந்துகின்றன. “அலைபாயுதே கண்ணா” கூட உண்டு.
3. தஞ்சாவூர் ஷங்கர் அய்யரின் தில்லானா; ஆனந்த பைரவி ராகம்; இசை: மகேஷ் இராகவன்; பாடுவோர்: வினோத் கிருஷ்ணன், சுஷ்மிதா ரவிக்குமார்; மிருதங்கம்: விவேக் ரமணன்: EDM-ised version of Thanjavur Shankar Iyer’s thillana in Ananda Bhairavi ragam, performed by Vinod Krishnan, Sushmitha Ravikumar with Vivek Ramanan on mridangam. Music arranged by Mahesh Raghvan
முத்தமிட்டாள் யசோதா… முற்றத்தில் நல்முத்தை எடுத்து, எத்தனையுன் மகிமைகள்?! தேவகியின் மகனே!! சரணம் எத்தனையோ ஆய்ச்சியர்கள், கையிலேந்திய மாணிக்கமே!துஷ்டனான கம்சனை, கொன்றதுன் கை வைரமோ? (2) ஒளிபொழியும் மூன்று லோகத்தில், மரகதமாய் படர்ந்தாய்! (2) எங்கள் உள்ளே வாசம் செய்யும் சின்ன கிருஷ்ணனே! (2) (முத்தம்…) ரதிதேவி ருக்மிணியின் அதரத்தில் நீ பவழமோ? கோவர்த்தனம் சுமந்த கோமேதகம் நீயோ? (2) என்றும் சங்கு சக்கரத்தின் நடுவில் நிற்கும் வைடூர்யமே! (2) கதியென்றோம் எமைக் காப்பாய்! கமலக் கண்ணா !! (2) (முத்தம்…) காலிங்கனின் தலைமேலே நர்த்தனமாய் புஷ்பராகமே!என்றென்றும் ஸ்ரீவெங்கடாத்திரியில் நின்று ஆளும் நீலமே!! (2) பாற்கடலில் அற்புதங்களில், ரத்தினமாம் அற்புதமே! (2) பாலகனாய் திரிந்தாய் பத்மநாபனே !! (2) (முத்தம்…)
5. கிருஷ்ணருக்கு முன்பே காதல் இருந்தது என்பதற்கு ஆர்ச்சி சாட்சி. ஆர்ச்சி கதாபாத்திரத்திற்கு பெட்டி + வெரோனிகா என்று இரட்டை நாயகிகள். எண்பதுகளில் சுனௌதி என்றொரு ஹிந்தி தொடர் வந்தது. அதில் வரும் ரெட்டை வால் குருவி போன்ற பாத்திரப் படைப்பு இன்றும் கிளரவைக்கிறது.
6. ஆனால், வெறும் ஆண் பார்வை என்று சொல்ல முடியாத பாத்திரப் படைப்புகள் & வசனங்கள். “சத்யா” கதாபாத்திரம் துவக்கக் காட்சியில் நாயகனை விட்டு விலகும் காட்சியைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். “நான் ஒன்றும் உன் உடைமை அல்ல! நீ எவருடன் பழகச் சொல்கிறாயோ, அவர்களுடன் மட்டும் நட்பு பாராட்ட…” என்று “கிருஷ்ணா”வை விட்டு விலகும் ஆளுமை கலந்த நாடியறியும் பயணத்தைத் துவக்குவதில் மகளிர் எண்ணத்தை உரைக்கிறார்.
7. அந்த மாதிரி ஓரிண்டு காட்சிகள் தவிர இது பாலு மகேந்திரா, மஹேஷ் பட், காக்டெயில் போன்ற கொண்டாட்ட படம் இது. “உனக்கு பீரியட்ஸ் டைம் போல – that time of the month” என்று காதலியின் கோபத்தை உதாசீனம் செய்வது முதல் “எல்லோர் மீதும் பிரியம் வருகிறது, இச்சை தோன்றுகிறது” என்பதை நியாயப்படுத்துவது வரை – அக்மார்க் ஆண் படம்.
8. யாராவது, எந்த மடையனாவது பழைய காதலியின் உடன் எடுத்த புகைப்படங்களை ஃபோனில் வைத்து இருப்பானா? அதெல்லாம் பலான படம் போல் பத்திரமாக எங்கேனும் கிளவுட் டிராப் பாக்ஸ் கணக்கில், ரகசியமாக எவருக்கும் தெரியாமல் சேமித்து வைக்க வேண்டாமா? இந்த மாதிரி டெக் தெரியாத கிராக்கி எல்லாம் எப்படி எட்டு பொண்டாட்டி வைத்து சமாளிப்பான்?
9. இதன் அடுத்த பாகத்தை சத்தியமாக எதிர்பார்க்கலாம். பகவத் புராணப்படியும் ஜெயமோகன் எழுதிய வெண்முரசு இந்திரநீலம் படியும் கண்ணன் ஜாம்பவதி, கலிந்தி, மித்ரவிந்தா, நக்நஜித்தி, பத்ரா, லஷ்மணா மற்றும் ருக்மிணி, சத்யாபாமா, என்னும் எட்டு நாயகியரை கொண்டவர்.
இன்னொரு பக்கம் கண்ணுக்கு பசுமையான கல்யாணி ப்ரியதர்ஷன். எத்தனை படம் பார்த்தாலும் இன்னும் டெல்லி பக்கத்து கல்லூரியின் மாணவிகளை நினவுறுத்தும் நிதானமும் குளிர்ச்சியும் அகங்காரமும் கலந்த பாந்தம். அம்மா லிஸியைக் கூட இதே போல் கண் குளிர பார்த்த நினைப்பு.
துணை நடிகர்கள் பிரும்மாண்டமாக இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் அற்புதமான கதாபாத்திரங்களாக உலவுகிறார்கள். நன்றாக சித்தரிக்கப்பட்டு, சிறப்பாக பொருந்தியிருக்கிறார்கள்.
மெகாதீரா + மொம்மரில்லு “சுனில்” ஆகட்டும்; தூகுடு + ஆலா வைந்தபுரமுலு + ஜானு “வெண்ணிலா கிஷோர்” ஆகட்டும்; அத்தடு “போஸனி கிருஷ்ண முரளி” ஆகட்டும்; கஸ்துரிபா காந்தி “ரோஹினி ஹட்டாங்கடி” ஆகட்டும்; ஈசன் “ராவ் ரமேஷ்” ஆகட்டும் – ஒவ்வொன்றுக்கும் பொறுக்கி எடுத்துப் போட்டு இருக்கிறார்கள்.
இசை டி.எஸ்.பி. – தேவி ஸ்ரீபிரசாத். ஆனால், ஆச்சரியம். கத்தல் இல்லை; அலறல் இல்லை. மென்மையாகவே கேட்கும்படி இருக்கிறது.
இப்பொழுது பார்க்கும் படங்களில் எல்லாம் எப்படியோ மெட்ரோ வருகிறது. கதையோடு ஒன்றி பயணிக்கிறது. “ஞான் ப்ரகாஷன்” இப்பொழுதுதான் பார்த்தேன். அப்புறம் “விக்ருதி” படத்தின் மூலஸ்தானத்திலும்… காதலிலும் ட்ரெயின்; சோகத்திலும் ரயில்; பிரிவோம்; சந்திப்போம் எனச் சொல்வதற்கு வசதியான தொடர்வண்டி.
படத்தில் கல்யாணிக்கு அப்புறம் பிடித்தது வசனங்கள்:
ஸ்விக்கியில் சொன்னால் வரிசைப்படி வீட்டில் உட்கார்ந்தபடி எல்லாமும் வரும் என்பதைப் போல் எல்லாவற்றையும் எதிர்பார்க்காதே. வெற்றி நேரம் எடுக்கும்!
என் வாழ்க்கையில் நான்கு திசைகளிலும் விடியல் காலத்தில் சூரியனின் திசையில் ஒளி பிரகாசிக்கிறது. ஏனென்றால் நான் இருளின் முகவரி.
வாழ்வது என்பது பிழைப்பது என்று அர்த்தமல்ல. வாழ்க்கையை விட அதிகமாக நேசித்த ஒரு பெண்ணுடன் இருப்பது.
நீங்கள் விரும்பும் போது உங்களைப் பார்ப்பதை விட, உங்களைப் பார்க்கும்போது உங்களை நன்றாக உணர வைக்கும் ஒரே விஷயம் காதல்.
உங்கள் தவறை அறிந்து கொள்வதை விட பெரிய சாதனை எதுவுமில்லை
ஒரு காலத்தில், நூறு பேர் இருந்தால், சீனு என்று அழைத்தால், இருபது பேர் திரும்பிப் பார்ப்பார்கள். இப்போது நாம் பொறியியலாளர் (எஞ்சினியர்) என்று அழைக்கும்போது, ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் திரும்பிப் பார்க்கிறோம்.
அம்மா, அப்பா, பணம், சாதி, மதம் என்று பிரியக் கூடியதற்கு காரணங்களை யோசியாமல் ஒரு முறை இருவரும் காதலிப்போம். நீங்களே அதில் ஈடுபடுங்கள். துன்பத்தின் மகிழ்ச்சி உங்கள் கைகளில் உள்ளது.
(தோழியிடம் காதலைச் சொல்லாமல் சொல்வது) பவன் கல்யாண் படத்தில் அவரால் தன் மனதில் உள்ள உண்மையான உணர்வுகளை ஏன் சொல்ல முடியவில்லை என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை, ஆனால் அது விரைவில் வருமா என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
நான் உங்களை தொந்தரவு செய்ய விடாதே.
காதலி: நான் செல்கிறேன். காதலன்: நீங்கள் போய்விட்டீர்கள்.
அவர் கலாம் அல்ல என்று கலாம் நினைத்தால், அவரும் ஒரு சாதாரண மனிதர். சோற்றுக்கனவு பிழைப்போடு கலாம் போல் ஆக கனவு காண முடியாது.
வாழ்வது என்பது பிழைப்பாக இருக்கக்கூடாது.
தோல்வியடைவது ஒரு அதிர்ஷ்டம். தோல்வி சிறந்த ஆசிரியர். தோல்வி என்பது நமக்குத் தெரிந்த விஷயம். தோல்வி என்பது எதையும் கொண்டு வரத் துணிந்த ஒரே விஷயம்.
வெற்றியாளர் வெற்றிபெறும் போதெல்லாம் அது தலைவலி. தோல்வியுற்றவர் வெற்றி பெறும்போது, அது வரலாறு.
உதயநிதிக்கு கண்ணாடி மாட்டி விட்டார் பாருங்க எங்க டைரக்டர் மிஸ்கின் – அங்கே நிற்கிறார். நடிக்கத் தெரியாத ஆள்; டப்பு உள்ள தயாரிப்பாளர். எப்படியோ சமாளிக்கிறார்… பாருங்க!
ஃபாஹத் பாசில் போன்ற நடிகரை வைத்து படம் பண்ணுவது எந்த கத்துக்குட்டி இயக்குநராலும் முடியும். ஆனால், உடலில் பெருத்த நித்யா மேனன் போன்றவரையும் “சிரித்த முகமும் கண்டு” என்று எப்பொழுதும் மோனப் புன்னகை தவழும் உதயநிதி ஸ்டாலின் கொண்டும் படம் பண்ணுவதற்கு தனித்திறமை வேண்டும்.
புகழ்பெற்ற “வந்தே மாதரம்” பாடலை எழுதிய வங்கமொழிக் கவிஞர் பங்கிம் சந்திர சட்டர்ஜியின் புகழ் பெற்ற “கிருஷ்ணகாந்தன் உயில்” என்ற நாவல் வங்கமொழியில் திரைப்படமாக வெளிவந்தது. அதை தமிழ் எழுத்தாளர் த.நா. குமாரசுவாமி தமிழில் மொழிபெயர்த்தார். அதில் முக்கிய காட்சி போல் அந்த அக்பர் / பவா செல்லத்துரை சிபி / சிஐடி காட்சி அமைந்துள்ளது.
See No Evil, Hear No Evil என்னும் படத்தில் வரும் வண்டியோட்டும் காட்சி பிரபலமானது. குரு பூர்ணிமாவின் மூல நாயகன் எழுத்தாளர் சுஜாதா சொன்னது போல் “ஒரு சிறுகதையை எழுதாதே; ஒரு படத்தில் இருந்து திருடாதே; ஒரு விஷயத்தை உன் எழுத்தில் சொல்லாதே!” என்பது போல் பல்வேறு ஹாலிவுட் படங்கள்; எண்ணற்ற காட்சிகள் – எல்லாவற்றையும் கலைத்துப் போட்டு மீண்டும் மசாலா ஆக்கித் தரும் மிஷ்கின் – ஜஸ்ட் வாழ்க!
ஆண்ட்ரியா பாச்செல்லி கண் தெரியாதவர். கலைஞர். அது போல் நம் நாயகன் மிஷ்கின் பார்வையற்ற உலகிற்கு பாணன். இந்தப் படத்தில் கௌதம் என்னும் நடிக்கவியலாத ஒருவரை இயக்கும் கர்த்தா. நம் குரு மிஷ்கின் எப்போதும் குளிராடி அணிந்தவர்
எத்தனை எழுத்தாளர்களை செட் ப்ராபெர்டியா வச்சு அநியாயமா டம்மி ஆக்குறார் இவர்… தப்புய்யா… பவா செல்லதுரை, ஷாஜி, பாரதி மணி! – எழுத வையுங்கப்பா! சும்மா வந்து போக வைக்காதீங்கப்பா!!
ராம் – இவர் நடிப்பு சற்றே அயர வைக்கும். சற்றே அல்ல!! நிறைய!!! ஆனால், இவரை ஒழுங்காக, லிமிடெட் மீல்ஸ் ஆக நடிக்க வைப்பவர் சாமர்த்தியசாலி + திறமைசாலி.
எத்தனை படம் இப்படியே எடுப்பார் மிஷ்கின்! ஆனால், ஒவ்வொன்றிலும் ஓரளவு ஃப்ரெஷ்ஷாகவே இருக்கார் மிஸ்கின். மீண்டும் பார்க்கும்போது பல விஷயங்களை ஒளித்திருக்கிறார். இயக்குநர் இயக்குவது போல், குருடன் நடத்திச் செல்வது போல், தயாரிபாளரின் “ஆடுறா ராமா”வுக்கு சலாம் போடும் வழிநடத்துனர் போல் – என்னென்னவோ வைக்கிறார்.
இளையராஜா சார்!! பின்னியிருக்கிறார்!!!
குத்துப் பாட்டு இல்லீங்களே!?
இதுக்கெல்லாம் பத்து போதாது. செவிலியர், கான்வென்ட், தனியார் பள்ளிக்கூடம், சிஸ்டர், கையடிப்பு, மனப்பிழற்வு, தற்கொலை, – இன்னும் நிறைய எடுங்க தல 🙂
புத்தர், அங்குலிமாலன் கதை தெரிந்திருக்கும்:
999 பேரைக் கொன்று விரல்களை எடுத்திருந்த அங்குலிமாலா ஆயிரமாவது ஆளுக்காகக் காத்திருந்த வேளையில், அவன் இருக்கக் கூடிய காட்டுப் பகுதியிலே செல்ல ததாகதர் முயன்ற போது அவரின் சீடர்கள் அவரைத் தடுத்தனர். அவர்களுக்குச் செவி கொடுக்காத ததாகதர் அவ்வழியிலேயே தனித்துப் பயணமானார். அங்குலிமாலன் அவரெதிரிலே வந்தான். அங்கு என்ன நடந்தது என்பது பற்றி பலவாறாகச் சொல்லப்படுகிறது. இறுதியில் புத்தர் அவனை மனமாற்றமடையச் செய்து புத்தச் சங்கத்தில் சேர்த்துக் கொண்டார்.
இந்த மாதிரி நிறைய புத்தகங்கள் வந்திருக்கிறது. எனினும், ஏதேனும் ஒரு நூலையாவது முழுவதுமாக வாசிக்க வேண்டும். எனவே:
Look Again: How to Experience the Old Masters
by Ossian Ward
Flexibound: 176 pages
Publisher: Thames & Hudson; 1 edition (May 21, 2019)
Language: English
முன்னொரு காலத்தில் ஜான் பெர்கர் (John Berger’s Ways of Seeing – 1972) இந்த நல்ல காரியத்தை செய்தார். இப்பொழுது வார்ட் அதே போன்ற வேலையை செய்திருக்கிறார்.
இன்றைய காலம் தொலைக்காட்சியின் கடந்தகாலம். செல்பேசியில் மூழ்கும் காலம். அந்தச் சின்னத் திரையில் விளையாட்டுக்களோ, சினிமாவோ, குறுந்தொடர்களோ – பார்த்து களிப்பில் மூழுகும் காலம். கணினியிலே சதா சர்வ காலமும் காலந்தள்ளும் காலம். அவர்களைப் போய் பத்து நிமிடம் ஒரேயொரு ஓவியத்தைப் பார்த்து ஆராயுங்கள் என்கிறார் வார்ட்.
அந்தக் கால ஐரோப்பிய ஓவியங்களைப் பார்த்தால் ‘காதலா… காதலா’ கமல்+பிரபு தேவா போல் கிரேசி மோகனுடன் கிண்டல் அடிக்கத் தோன்றலாம். அவற்றை நெருங்குவதற்கு அஞ்சலாம். அது ரொம்பவே பழைய காலம். இப்போது கணினியே ஓவியம் வரையும் காலம். புகைப்படம், ஒளிப்படம், ஃபோட்டோஷாப் என்றெல்லாம் நிஜத்தை உருவாக்கும் பொய்க்காலம்.
வார்டின் வார்த்தைகளில் சொல்வதானால்: “இந்த ஓவியங்களோடு சற்றே சண்டை போட வேண்டும்; அவற்றோடு வாக்குவாதத்தில் ஈடுபடவும். கேள்வி கேட்டு துளைக்கவும். ஒவ்வொரு சித்திரத்தையும் உள்ளுணர்வில் புரிந்துணர்ந்து மதிப்பிட்டு தராசில் நிறுக்கவும். பெரும்வாணரால் உண்டான சித்திரமாக இருந்தாலும், அதை உங்கள் அளவுகோலால் அணுகவேண்டும். அணுகுவதால் உணர்வீர்கள்; உணர்வதால் நெருங்குவீர்கள்; நெருங்குவதால் புரிந்து கொள்வீர்கள்! ”
தபுலா ரஸா
அதற்கு ஆங்கிலத்தின் முதலெழுத்துக்களைக் கொண்டு TABULA RASA உதவியை நாடுகிறார்
time – எந்த காலகட்டம்?
just hold on, don’t turn your back yet. Stay there for a few minutes before deciding the work is not for you (that’s one rule i should follow more often.)
association – இந்த ஓவியத்தை உங்கள் வாழ்வில் எப்படி பொருத்துவீர்கள்?
find an entry point, look for the tone, story, theme or image that strikes a chord with you.
background – இந்தச் சித்திரத்தின் பின்னணி என்ன?
the title, personal history of the artist or short description of a piece should enable you to understand and appreciate it better.
understand – ஓவியம் புரிகிறதா?
by this stage you might have a better understanding of the work and if not…
look again – முதலில் இருந்து மீண்டும் புதிய பார்வை பார்க்கவும்
everyone deserves a second chance.
assess – கணிப்பு
this is where you’re allowed to be subjective and form your own opinion about a work.
rhythm – ஓவியத்தின் ஆதார தாளம், சுருதி
allegory – ஓவியம் எதைக் குறிப்பால் உணர்த்துகிறது?
structure – உள்ளடக்கமும் வடிவ நேர்த்தியும் ஒழுங்கும் கட்டமைப்பும்
atmosphere – சூழல்
அது தவிர…
art as philosophy – கலையை தத்துவ வடிவில் நோக்குதல்
art as honesty – கலையை நேர்மையின் வடிவமாக நோக்குதல்
art as drama – கலையை உணர்ச்சிவயமாக நோக்குதல்
art as beauty – கலையை அழகுணர்ச்சியாக நோக்குதல்
art as horror – கலையை திகில் உணர்வுடன் நோக்குதல்
art as paradox – கலையில் முரண்களை கவனித்து நோக்குதல்
art as folly – கலையை விளையாட்டாக கேளிக்கை உணர்வுடன் நோக்குதல்
art as vision – கலையை தொலைநோக்குப் பார்வை கொண்டு நோக்குதல்
வார்டின் மற்றொரு புத்தகம்: Ways Of Looking (How to Experience Contemporary Art). அதில் தற்கால சிற்பங்களையும் அருங்காட்சியக அமைப்புகளையும் ஆராய அழைக்கிறார். இவ்வாறாக பிரித்து அனுபவித்து ரசிக்கக் கோருகிறார்:
Art as Entertainment – கேளிக்கை அல்லது பொழுதுபோக்கு
Art as Confrontation – நம்முள்ளே புதைந்து இருக்கும் நம்பிக்கைகளையும் மனச்சாய்வுகளையும் நோக்கி கேள்வி எழுப்புதல்
Art as Event (Performance Art) – நிகழ்த்து கலை
Art as Message – செய்தி
Art as Joke – விளையாட்டு
Art as Spectacle – காட்சிப்பொருள் + விந்தை = கருவி
Art as Meditation – தியானம் + சிந்தனை = புலப்படுதல்
தமிழில் பி ஏ கிருஷ்ணன் இரு நூல்களை இது போன்று காலச்சுவடு பதிப்பகம் வெளியீடாக எழுதியிருக்கிறார். ஓவியங்களைப் பற்றிய கட்டுரைகளோ, நூல்களோ தமிழில் அரிதாகவே வருகின்ற பின்புலத்தில் அதிலும் ஐரோப்பிய ஓவியங்களைப் பற்றி யாரும் எழுதாதபோது, பி.ஏ. கிருஷ்ணன் இந்த அரிய நூல் மூலம் மேற்கத்திய ஓவியங்களைத் தமிழ் வாசகர்களுக்கும் எளிதாக உள்வாங்கக்கூடிய நடையில் அறிமுகப்படுத்துகிறார். :
மேற்கத்திய ஓவியங்கள் / 288 பக்கங்கள் / முதல் பதிப்பு: ஏப்ரல் 2014
மேற்கத்திய ஓவியங்கள் II / 336 பக்கங்கள் / முதல் பதிப்பு: 2018
“தியடோர் பாஸ்கரன், ‘தி இந்து நாளிதழில்’ ‘மேற்கத்திய ஓவியங்கள்’ முதல் நூலுக்குக் கிடைத்த வரவேற்பு இரண்டாம் கட்ட நூலுக்குக் கடுமையாக உழைக்கும் உற்சாகத்தை எனக்குத் தந்தது. நூற்றிற்கும் மேற்பட்ட ஓவியர்களின் படைப்புகளைப் பற்றியும் அவர்களின் மேதைமையின் வீச்சு, ஓவியங்களின் வரலாற்றுப் பின்னணி என்பவை பற்றியும் சுருக்கமாக, ஆனால் தெளிவாகச் சொல்லுவதில் ஓரளவு வெற்றி அடைந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.”
– பி.ஏ. கிருஷ்ணன்
பதிப்பாளர் குறிப்பு: இந்நூலில் நமக்கு மிகவும் பரிச்சயமான பல ஓவியங்கள் பேசப்படுகின்றன. இருநூற்று நாற்பதிற்கு மேற்பட்ட வண்ண ஓவியங்களுடன் புத்தகம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தமிழ் பதிப்பு வரலாற்றில் இவ்விரு நூல்களும் மைல்கற்களாக அமையும் என்பது உறுதி.
உங்களுக்கான வீட்டுப்பாடம்: மூன்று நூலில் ஏதாவது ஒன்றை வாசிக்கவும்.
Vice interviewed the author about Ways of Looking.
இன்று மனுசங்கடா திரைப்படம் காணக் கிடைத்தது. கூடவே, ‘திண்ணை’ கோபால் ராஜாராமும் இருந்தது படத்தைக் குறித்த பார்வையை விசாலாமாக்கியது.
படத்தைக் குறித்து சில எண்ணங்கள்:
கோலப்பனாக நடித்தவர் அம்ஷனின் மகனாமே! நன்றாக செய்திருக்கிறார். அழகாகாவும் இருக்கிறார்.
பையனே அப்பாவை ‘பாடி’ என்று சொல்வது சற்றே நெருடியது.
அம்ஷனின் முந்தையப் படம் ‘ஒருத்தி’ சற்றே மறந்து போனது. ‘மனுஷங்கடா’ நிறைய தசாப்தம் நினைவில் நிற்குமாறு இருக்கிறது.
கீழ்வெண்மணி என்றவுடன் நெஞ்சம் படபடக்கும். அதை சொல்லாமல் சொல்லும் காட்சியமைப்பு பதைபதைக்க வைத்தது.
தமிழகத்தில் கூட படம் எடுக்க முடியாமால், மொழி புரியாத ஆந்திராவிற்குச் சென்று காட்சியாக்கமும் ஒளிப்பதிவும் செய்தது, இந்தியாவைக் குறித்த எதிர்மறை எண்ணத்தை அய்ர்வாக எழச் செய்தது.
“அண்ணன்” ஆக நடித்தவருக்கு நல்ல குரல்வளம். ஆனால், நடிப்பு சற்றே சீரியல்தனம்
உணர்ச்சிக் கொந்தளிப்புடன் கதையைக் காட்சியாக்கி இருக்கிறார். கிட்டத்தட்ட ஷங்கர் படம் பார்த்த ஆக்ரோஷத்துடன் படம் முடிகிறது. இந்த மனித உரிமை மீறல் அக்கிரமத்தை படம் பார்த்த திருப்தியோடு கை கழுவாமல் இருக்க வேண்டும்.
வாழும் போது மட்டுமல்ல, வாழாமல் செத்த பிறகும் சாவிலும் கூட விடாமல் துரத்துகிறது சாதியம். சட்டமும் நீதியும் கூட கெட்டி தட்டிப் போன அந்த இறுக்கத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை. கோலப்பன் தேடுவது தந்தையின் பிணத்தையல்ல, இந்தியாவின் ஜனநாயகத்தை, அதன் அரசியல் அமைப்பு சட்டத்தையே குழிகளில் தேடுகிறான் என்கிற சமிக்ஞையோடு படம் முடிந்ததாக எனக்குப் பட்டது.
எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் எளிய அலங்காரத்துடன் படம் நேர்மையாக நகர்கிறது. இதனாலேயே சிலர் சலிப்படையக்கூடும். ஜோடனைகள் இல்லாத உண்மை அத்தனை சுவாரசியமானதாக இருக்காதுதான்.
சமீபத்தில் நிகழ்ந்த ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு நோ்மையானதொரு தலித் சினிமாவை உருவாக்கியிருக்கிறார் அம்ஷன் குமார். ‘தீண்டாமை என்பது பெருங்குற்றம்’ என்பது பாடப்புத்தகங்களில் அல்ல, மனித மனங்களில் ஆழமாக எழுதப்பட வேண்டியது என்கிற செய்தியை இயல்பாக சொல்லிச் செல்கிறது இந்த திரைப்படம்.
இதில் வரும் நடிகர்கள் இயல்பான நடிப்பைத் தந்துள்ளனர். சினிமா ஆர்வலர்களின் ஆதரவு நிச்சயம் தரப்பட வேண்டிய திரைப்படம் இது.
விரிவான கட்டுரை வரும்.
மனுஷ்யபுத்திரன்
இன்று காலை அம்ஷன் குமாரின் ‘ மனுசங்கடா’ திரைப்படத்தை தியாகராய நகர் ஏஜிஸ் ல் பார்த்தேன். இரண்டு மூன்று வரிசைகளே நிரம்பியிருந்தன. பெரும்பாலான இருக்கைகள் காலியாக கிடந்தன. சென்னையில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு ஏழாம்தர குப்பைப்படத்தைக் கூட முன்பதிவு செய்யமல் பார்த்துவிடமுடியாது. இன்றைய காலி அரங்கம் எனக்கு மனதை பிசைவதாக இருந்தது. நண்பர்களுக்கான தனிப்பட்ட ஒரு ஷோ போல இருந்தது.
இத்தனைக்கும் ‘ மனுசங்கடா’ தமிழின் மிக முக்கியமான படம். சாதியத்தின் கோரமுகத்தை வெளிப்படுத்தும் படம். தன் தந்தையின் பிணத்தை பொதுவழியில் இடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல உயர்நீதிமன்றம்வரை சென்றுபோராடும் ஒரு தலித் இளைஞனின் கதை. எந்த வணிக சமரங்களும் இல்லை. அவலத்தின் நடுவே காதல் கிளுகிளுப்புகளின் பூச்சுகள் இல்லை. ஒரு மனிதன் இறந்து அடக்கம் செய்யப்படும் வரையிலான இரண்டு நாளின் கதை. படத்தில் பிண்ணனி இசை என்று தனியாக எதுவும் இல்லை. சுற்றுச் சூழலின் அசலான ஒலிகளே பிண்ணனி இசை. சினிமாவின் அலங்காரங்கள் இல்லாமல் எதார்தத்தை மறுபடைப்பு செய்ய அம்ஷன் குமார் படம் முழுக்க முனைகிறார். அதில் பார்க்கும் கோர்ட் நாம் நிஜத்தில் பார்க்கும் கோர்ட். நாம் பார்க்கும் வருவாய் துறை அதிகாரியும் காவல்துறை அதிகாரியும் நாம் அன்றாடம் காணும் அதிகாரிகள். அதில் வரும் தலித் சமூக தலைவரை நானே நேரில் பலமுறை சந்தித்திருக்கிறேன்.
இந்தப்படம் தெளிவாக சொல்லும் செய்தி ஒன்று உண்டு. இந்த நாட்டில் அரசியல் சாசனமோ நீதிமன்ற உத்தரவுகளோ சாதிய அதிகாரத்தை, அதன் சட்டங்களை வெல்ல முடியாது என்பதுதான். ஒடுக்கப்பட்ட மக்கள் வன்முறையின் மூலமாகவோ போலி சமரசங்கள் வாயிலாகவோ பொய் வாக்குறுதிகள் மூலமாகவோ தங்கள் உரிமைகளை விட்டுத்தர நிர்பந்திக்கப்படுகிறார்கள். தன் தந்தையின் பொதுவழியில் கொண்டு சென்று புதைப்பதற்கான நீதிமன்ற உத்தரவைப் பெற்றுவரும் இளைஞனால் கடைசியில் தன் தந்தையை காவல்துறையினர் பலவந்தமாக எங்கே புதைத்தார்கள் என்பதைக்கூட அறியமுடியாமல்போவது அவலத்தின் உச்சம்.
நடிகர்கள் தங்கள் பாத்திரத்தின் எல்லைமீறாமல் நடித்திருந்தார்கள். நவீன நாடகபாணியிலான நடிப்புமுறை சில இடங்களில் தூக்கலாக வெளிப்படுவதை தவிர்த்திருக்கலாம். எந்த ஊர் அடையாளமும் சாதி அடையாளமும் வெளிப்பட்டுவிடாமல் கதையை நகர்த்தியிருப்பது இயக்குனரின் வெற்றி என்றாலும் ஒரு முழுமையான எதார்த்த சினிமாவாக அது மாறுவதை பலவீனப்படுத்துகிறது. ஆனால் அத்தகைய அடையாளங்களை சுட்டினால் படம் வெளியே வந்திருக்காது. உயர் சாதிகளை சாதிப்பெருமை பேச மட்டுமே திரைப்படங்களில் வெளிப்படுத்த லைசன்ஸ் உண்டு. அம்ஷன் குமாரின் திரைப்பயணத்தில் நிச்சயம் இப்படம் அவருக்கு மிக முக்கியமான இடத்தைப்பெற்றுத்தரும்.
பல சர்வதேச விழாக்களில் படம் காட்டப்பட்டு கவனமும் பாராட்டும் பெற்றிருக்கிறது. விழாக்களில் மட்டுமல்ல, பொது சமூகத்தின் மனசாட்சியை இதுபோன்ற படங்கள் உலுக்கவேண்டும். பெரும் போராட்டத்திற்குப்பிறகு சென்னையின் சில திரையங்குகளில் சில காட்சிகள் மட்டுமே இந்த மூன்று நாட்களில் இப்படம் திரையிடப்ப்பட்டது
நாளை இருக்குமா என்று தெரியவில்லை. விளம்பரத்திற்கு கோடிகளை கொட்ட முடியாத, தியேட்டர்களை பிடிக்கும் வலிமையற்ற குறைந்த பட்ஜெட்டில் படம் எடுக்கும் ஒரு சமூகமாற்றத்திற்கான இயக்குனர் தமிழ்சினிமாவின் மிருகவிதிகளின் முன் தன் படைப்பை அத்தோடு மறந்துவிட வேண்டியதுதான்.
சினிமா என்பது தமிழர்களின் கலை அல்ல, அபின். இங்குவேண்டப்படுவது மிகையுணர்ச்சிகளின் அதீத நாடகமேயன்றி எதார்த்தத்தின் சித்திரங்கள் அல்ல
இன்குலாப்பின் கனல் தீராத கவிதை வரியை தலைப்பாக்கி வெளியாகி இருக்கும் திரைப்படம்.
நேற்றுப் பார்க்க வாய்த்தது.
சாதியத்தின் கோரமுகத்தை மூக்கு உரசும் தூரத்தில் உணர்ந்த அனுபவம்.
திருநாள்கொண்டசேரி சம்பவம் திரையாக்கமாகி இருக்கிறது.
பிறப்பில் துவங்கி ஒவ்வொரு நொடியிலும் உணரும் சாதிய ஒடுக்கு முறையை இறந்த பின்னாலும் பிணமாய் அனுபவிக்க நேரும் கொடூரமே கதைக் களம்.
பொது வழியில் ஒடுக்கப் பட்டோரின் பிணங்களை எடுத்துச் செல்ல அனுமதிக்க மறுக்கும் சாதிய திமிர் கொழுத்த கிராமங்களில் ஒன்று அம்மையப்பன் கிராமம்.
ஒடுக்கப் பட்டவர்களின் பிணத்தை எடுத்துச் செல்ல ஒதுக்கப் பட்ட தனிப் பாதை என்பது வெறும் முட்காடு. அதை பாதையாக்க எந்த முயற்சியும் செய்யாத ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள்.
இறந்த தன் தந்தையை பொதுவழியில் எடுத்துச் செல்ல முடிவு செய்து நீதிமன்றத்தை நாடுகிறான் கதாநாயகன் கோலப்பன். அதிசயமாய் நீதி வெல்கிறது. பொதுப்பாதையில் பிணத்தை எடுத்துச் செல்ல உத்தரவிடுகிறார் நீதிபதி. பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கும் அதிகாரிகளுக்கும் ஆணையிடப்படுகிறது.
அந்த தீர்ப்பின் படி, பிணம் பொது வழியில் அனுமதிக்கப் பட்டதா? எப்படி ஆதிக்க சாதியினரும் அதிகாரிகளும் அதற்கு எதிர்வினை ஆற்றினார்கள் என்பதே ஆழமும் அழுத்தமுமான கதை.
உண்மையின் கதையாடல்கள் வலியோடு பதிவாகி இருக்கிறது. எவ்வளவு கேவலமான சமூகத்தில் வாழ்கிறோம் என்கின்ற எதார்தத்தின் சூடு கட்டாயம் உரைக்கும் உணர்வுள்ளவர்களுக்கு.
சிறிய முதலீட்டில் சமூக அக்கறையுள்ள படைப்பை வழக்கிய அம்ஷன் குமார் அவர்களுக்கு மதிப்பு மிகுந்த வாழ்த்துக்கள்.
திரைக்கதையில் உதவிய எழுத்தாளர் அழகிய பெரியவன் அவர்களுக்கும் வாழ்த்துகள்.
சாதியை வெறுக்கும் முற்போக்கு மனநிலை உள்ளவர்கள், மாற்றுத் திரைப்படங்களை ஆதரிப்பவர்கள், கொஞ்சம் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கும் திரையரங்களில் மனுசங்கடாவைப் பார்ப்பதை தனது கடமையாக உணர வேண்டும்.
அது அப்படி இருந்திருக்கல்லாம், இது இப்படி இருந்திருக்கலாம் என்கிற சில லாம்கள் உண்டு தான்.
அதையெல்லாம் மீறி உண்மையும் நேர்மையுமான அக்கறையுமான ஒரு திரைப்படம் என்பதை உறுதியாய் உணர முடிகிற படைப்பு மனுசங்கடா ..
அம்பேத்கரின் நூற்றாண்டு விழாவிற்குப் பிறகு எழுந்த ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சி கலை இலக்கியங்களில் பிரதிபலித்தது. சாதி குறித்த பார்வையும் அழுத்தமும் பல விதங்களில் வெளிப்பட்டன, அப்பார்வையை ஆவணப்படங்கள்
அர்ப்பணிப்போடு முன்னெடுத்துச் சென்றன,,,ஆனால் நம்முடைய புனைவுத் திரைப்படங்களோ 25 வருடங்களுக்கு மேலாகியும் நேரடியாகச் சாதி குறித்துப் பேசவில்லை அல்லது தயங்குகின்றன. எளிமையான ஆவணத்தன்மையுடன் “மனுசங்கடா” அதனைப் பேசுகிறது. 25 வருடங்களாக நடந்த சாதி குறித்த விவாதங்களைப் புறக்கணிக்காமல் சாதி வன்கொடுமையைப் பேசுவது , சாதியை நேரடியாகத் தாக்குவது இக்காலத்தின் தவிர்க்க முடியாத கருப்பொருளாகும்.
வில்லன் -கதாநாயகன் என்ற எதிர்நிலைகளை உருவாக்கி ஒருவொரையொருவர் வெற்றி கொள்வது, தோல்வி அடைவது இது வணிக சினிமா மனோபாவம், மனுசங்கடா படத்தில் எதிரிகளில் குறிப்பிட்ட நபர்கள் என்று யாருமில்லை, வெகு தூரத்தில் அவர்கள் யாரென்று தெரியாமலே படமாக்கப்படுள்ளது, ஏனெனில் எதிரி தனிப்பட்ட ஒருவர் அல்ல,, அமைப்புதான்(System) எதிரி.அதை விவாதிப்பதே முக்கியம்.
சாதிக்கொடுமைகளின் உச்சமான அன்றாடம் நடக்கும் “புதைக்கும் உரிமை” மறுக்கப்பட்ட சமூகத்தின் குரல் திரைப்படத்தில் புனையப்பட்டது வரலாற்று முக்கியத்துவமானது.
திருநாள்கொண்டசேரி. நாகப்பட்டினம் மாவட்டம் , மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள வழுவூர் ஊராட்சிக்குட்பட்ட கிராமம். இக்கிராமத்தில் வசிக்கும் தலித் மக்களுக்கு தனியாக வசிப்பதற்கென சேரி ஒதுக்கப்பட்டிருப்பது போல, செத்துப் போனால் புதைப்பதற்கென தனியாக இடுகாடு ஒதுக்கப்படவில்லை. ஒரே இடுகாடு என தப்பர்த்தம் கொள்ள வேண்டாம். இடுகாடே கிடையாது. ஒதுக்கப்படவில்லை.
பிறகு, செத்துப் போகிறவர்களை எப்படித்தான் அடக்கம் செய்வார்களாம் என்றால், அக்கிராமத்திலிருத்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் மதிமலை என்கிற இடத்தின் ஆற்றங்கரையில்தான் புதைக்க வேண்டும். அதுதான் அந்த பகுதியில் காலங்காலமான நடைமுறை. அவ்வளவு தூரம் சுமந்து சென்றுதான் பிணங்களைப் புதைத்து வருகிறார்கள் தலித் மக்கள்.
ஆனால் ஒரு கண்டிஷன். அவர்கள் பிணத்தைத் தூக்கிக் கொண்டு ஊரின் பொதுப் பாதையில் செல்லக் கூடாது, கல்லும் முள்ளும் பாவிக் கிடக்கும் வரப்பின் வழியாகத்தான் பிணத்தை எடுத்துச் செல்ல வேண்டும். எப்பேர்ப்பட்ட நீதிபதிகளும் கூட மீறவியலாத இந்த கண்டிஷனை போட்டு வைத்திருப்பது அக்கிராமத்தின் சாதி இந்துக்கள்.
அவர்களுடைய அடாவடியிலிருந்து விலகியிருக்க நினைக்கும் தலித் மக்கள் , தங்கள் பகுதியிலேயே தங்களுக்கென தனித்த சுடுகாடு வேண்டும் என்கிற கோரிக்கையை வைக்கிறார்கள். ஓராண்டில்லை. ஈராண்டில்லை. சுமார் நாற்பதாண்டு காலமாக எழுப்பப்பட்டு வரும் அந்த கோரிக்கையை அரசாங்கம் கண்டுகொள்ளவேயில்லை. ஆயிரமாயிரம் புகார்கள். ம்ஹூம். நடவடிக்கையே இல்லை. தலித் மக்களில் எவரேனும் இறந்து போகும் ஒவ்வொரு முறையும், சாதி இந்துக்கள் தங்களின் மனநோயை வெளிப்படுத்தத் தவறியதே இல்லை. பொதுப் பாதையில் பிணம் எடுத்துச் செல்ல முயற்சிக்கும் தலித்துகளை கடுமையாகத் தாக்கியும் அவமானப்படுத்தியும் வருகின்றனர்.
இந்நிலையில், கடுமையான ஒரு மழை காலத்தில், தலித் மூதாட்டி ஒருவர் இறந்து போகிறார். வழக்கமாகப் பிணம் தூக்கிச் செல்லும் வரப்பில் தண்ணீர் அதிகமும் தேங்கி இருந்ததால் பொதுப்பாதையில் செல்ல காவல் துறையினரிடமும் மாவட்ட ஆட்சி நிர்வாகத்தினரிடமும் அனுமதி கேட்கின்றனர் தலித் மக்கள். அப்படிப்பட்ட தனிமனித உரிமைக்கான சட்டம் இருப்பதையும் எடுத்துச் சொல்லி கெஞ்சுகின்றனர். தலித் மக்கள் பொதுப்பாதையில் சடலத்தைத் தூக்கிச் செல்லலாம் என கோர்ட் ஆணையிட்டுவிட்டது. தலித் மக்களின் கெஞ்சலைக் கண்டும் கோர்ட் ஆணையை நிறைவேற்றும் பொருட்டும் போலிஸ்காரர்கள் சாதி இந்துக்களிடம் செல்கின்றனர். அவர்களிடம் கெஞ்சுகின்றனர். “ஐயா.. போனா போகட்டுங்யா.. எப்படியாவது அவங்களுக்கு வழி உட்ருங்யா ப்ளீஸ்” எந்த கெஞ்சுதல், வேண்டுதல், சாதி இந்துக்களிடத்தில் நிறைவேறியிருக்கிறது?
அவர்கள்தான் மனநோயாளிகளாயிற்றே! கொஞ்சமும் மசியவில்லை. மட்டுமின்றி, காவல் துறையினரையும் கூட மிரட்டுகின்றனர். அவர்களின் மிரட்டலுக்கு அடிபணிந்து, அவமானப்பட்ட காவல்துறையினர் அந்த அவமானத்தால் கொண்ட ஆத்திரத்தையும் வெறித்தனத்தையும் தலித் மக்கள் மீது காட்டியுள்ளனர்.
“தலித் மக்கள் பொதுப்பாதை வழியாக சடலத்தைக் கொண்டு செல்லலாம்” என்கிற தீர்ப்பை கனம் கோர்ட்டாரே சொல்லிய பிறகும் அதை ஒரு டேஷ்க்கும் மதிக்காமல் ’கோர்ட்டாவது மயிராவது’ எனச் சொல்லி ( நன்றி : பாஜகவின் ஹெச். ராஜா ) போலிசையே எதிர்க்கும் ஆற்றல் சாதி இந்துக்களுக்கு இருக்கிறது என்றால் அந்த ஆற்றல் எங்கிருந்து வருகிறது? ஏன் வருகிறது?
சாதியுணர்வு ஒரு மனநோய் என்று பாபாசாகேப் அம்பேத்கர் சொன்னது எவ்வளவு உண்மை.
அந்த மன நோயாளிகளிடம் மல்லுக்கட்ட முடியாமல் போலீசே பிணத்தைச் சுமந்து சென்று அடக்கம் செய்திருக்கிறது. (இச்சம்பவம் தோழர் எவிடென்ஸ் கதிர் அவர்களின் கட்டுரை ஒன்றிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. அவருக்கு நன்றி. )
இப்படியான கேவலமான ஒரு செயல் உலகில் எந்த நாட்டிலாவது நடக்குமா?
இப்படியான சம்பவங்கள் ஒருமுறை இருமுறை, மும்முறைகளல்ல. காலங்காலமாக நடந்து வருகின்றன. இன்றைய டிஜிட்டல்இந்தியா வரை. இந்த டிஜிட்டல் தேசத்தைக் காறித்துப்ப வைக்கும் இப்படிப்பட்ட நிலைமை ஒவ்வொரு நாளும் ஏதோவொரு சேரியில் நடந்து கொண்டிருந்துதானிருக்கிறது.
அன்னாடம் நடந்துவருகின்ற இப்படியான சாதிய அசிங்கங்கள் குறித்து நம்மூரார் யாரேனும் வாய் திறக்கிறார்களா என்றால் இல்லை. மட்டார்கள். அவர்களுக்கு வேறு பல கேளிக்கைகள் இருக்கின்றன. சமயங்களில் இப்படிப்பட்ட செய்திகள் ஊடகங்களில் இடம் பெறும்தான். மற்ற செய்திகள் ஏதும் கிடைக்காத போது.
செத்தாலும் மறையாத இப்படிப்பட்ட சாதியக் கொடுமைகளை, (வெகுசன) அச்சு ஊடகங்களிலேயே சொல்ல முடியாத போது, திரைப்படங்கள் என்கிற வெகுமக்களுக்குப் பிடித்தமான கலையின் மூலம் காட்டுவது என்பதெல்லாம் சாத்தியமில்லாத ஒன்று. ஆனால், அதை சாத்தியப்படுத்தியிருக்கிறது ‘மனுசங்கடா’ திரைப்படம்.
பல்வேறு ஆவணப்படங்கள், ‘ஒருத்தி’ உள்ளிட்ட சுயாதீன படம் ஆகியவற்றின் இயக்குனரும், எழுத்தாளருமான அம்ஷன் குமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார். பல்வேறு படவிழாக்களில் கலந்து கொண்டு அங்கீகாரத்தைப் பெற்ற இப்படம் இப்போது, வெகுமக்களின் பார்வைக்கு வந்துள்ளது.
திருநாள்கொண்டசேரியில் நடந்தைப் போல பல்லாயிரம் கிராமங்களில் இன்றும் நிகழ்ந்து கொண்டிருக்கும் சாதிய அசிங்கத்தை அப்பட்டமாகவும் அதிர்ச்சியுடனும் காட்டியிருக்கிறது இப்படம். மட்டுமின்றி, சமத்துவம் பேசும் திரைப்படங்களைக் கூட பல கோடிகளில்தான் உருவாக்க முடியும் என்கிற மாயையையும் இப்படம் உடைத்திருக்கிறது.
சினிமா என்கிற கலையை எளிய மக்கள் அனைவராலும் உருவாக்க முடியும், (உருவாக்க வேண்டும்) அதில் மக்களின் பாடுகளைச் சொல்ல முடியும் (சொல்ல வேண்டும்) என்கிற வகையிலும், சாதியத்தின் அசிங்கத்தைக் அவ்வளவு வெளிப்படையாகக் காட்டியிருக்கும் வகையிலும் ’மனுசங்கடா’ முக்கியமான அரசியல் படமாகின்றது. படக்குழுவினரை வெகுவாகப் பாராட்டுகிறேன்.
இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் ட்ரைபாட் இல்லாமல், காமிராவை கையால் வைத்தபடியே காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். ஆனாலும் நேர்த்தியான படப்பதிவு. டப்பிங்கே இல்லை என்பதை நம்ப முடியவில்லை. துல்லியமான ஒலிப்பதிவு. சபாஷ் அம்ஷன் குமார் & குழுவினர்.
படத்தில் நடித்திருக்கும் அத்தனை நடிகர்களும் (ஓரிரு இடங்களைத் தவிர) நேர்த்தியாக நடித்திருக்கின்றனர். குறிப்பாக மையப்பாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் ராஜிவ் ஆனந்த் கவனிக்க வைக்கிறார். படம் தொடங்கியதிலிருந்து இறுதிவரை கொந்தளிப்பான முகத்தை கடைபிடித்திருக்கிறார் அவர். எல்லோரும் நவீன நாடக கலைஞர்கள். ஆகவே, ஒரு தேர்ந்த நடிப்பு வெளிப்பட்டிருக்கிறது ( அந்த வழக்கமான மாடுலேஷனை மட்டும் அவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்).
நீதிமன்ற காட்சி அதன் சமன் குலையாமல் இருக்கிறது. அக்காட்சி முழுக்க, முழுக்க பாபாசாகேப் அம்பேத்கரின் கருத்தியலை மையப்படுத்தியே உருவாக்கப்பட்டிருக்கிறது என்பேன். அவர் உருவாக்கிய சட்டம் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமைகளையும் மனதில் கொண்டு அவற்றைப் பாதுகாக்கும் நோக்கத்தில் மட்டுமே இருக்கிறது. அப்படிப்பட்ட சமத்துவ சிந்தனையாளர் அண்ணல் அம்பேத்கர்.
அரசின் சட்ட விதிமுறைகள் யாவும் அனைவருக்கும் சமமாகத்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்துவதில்தான் பாகுபாடுகளும் தாழ்வுகளும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன என்கிற அவலத்தை சமரசமின்றி சொல்லிச் செல்கிறது இப்படம்.
பெரும்பாலான வழக்குகளில் நீதிமன்றங்கள் நீதியற்ற தீர்ப்புகளைச் சொல்லி தங்களை அம்பலப்படுத்திக் கொள்கின்றன. அரிதாக, எப்போதாவது நீதிமன்றமே நீதியை நிலைநாட்டச் சொன்னாலும் கூட, அந்த தீர்ப்பு சாதியத்தின் மசுருக்குக் கூட சமானமாவதில்லை என்பதாகத்தான் இருக்கிறது.
அப்படிப்பட்ட அவலத்தைத் தான் பேசியிருக்கிறது இப்படம்.
சமூகத்தின் மீது அக்கறை கொண்டியங்கும் ஒவ்வொருவரும் அவசியம் காண வேண்டிய திரைப்படம் இது. இப்படத்தை ஒவ்வொருவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டிய, விவாதிக்க வேண்டிய அக்கறையும் பொறுப்பும் நமக்கிருக்கிறது.
வணிக அடிப்படையில் பார்த்தால் இம்மாதிரியான சுயாதீன திரைப்படங்களுக்கான ஆரோக்கியமான சூழல் இல்லாததால் குறைந்தளவு காட்சிகள் மட்டுமே திரையிடப்படுகின்றன. ஆகவே, உடனடியாக இப்படத்தைப் பார்த்து விடுங்கள் தோழர்களே!
மேலும், இப்படிப்பட்ட அக்கறையான படங்களுக்காகவும் நம் குரல் ஒலிக்க வேண்டும். சமூக வலைதளங்களில் அதற்கான குரல் வலுவாக எழுப்பப்பட வேண்டும். இப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதன் மூலமாக சுயாதீன படங்களுக்கான ஆரோக்கியமான வெளியை உருவாக்க முடியும். அதன் மூலமாக வணிக சினிமா உருவாக்கியிருக்கும் கவர்ச்சியையும் அதுசார்ந்த போலியான பிம்பங்களையும் உடைக்க முடியும்.
இறுதியாக, ஒரு வேண்டுகோள் தலித்துகள் சாதி இந்துக்களைப் பார்த்து, ’நாங்க மனுசங்சடா…’ ’நாங்க மனுசங்கடா..’ என்கிற உண்மையைப் பலகாலமாகச் சொல்லி வருகிறார்கள். இனி கேட்க வேண்டியது, சாதி இந்துக்களைப் பார்த்துத்தான்.
அண்மையில் சென்னையில் குறிப்பிட்ட சில திரையரங்குகளில் மட்டுமே திரையிட வாய்ப்புகள் பெற்ற அம்ஷன்குமாரின்
மனுசங்கடா திரைப்படம் இன்றைய தமிழ் சமூகத்தின் முக்கிய பிரச்னையான சாதிய கட்டுமான இறுக்கத்தை ஒரு நேரிடையான மிகையற்ற யதார்த்த மொழியில் அதற்குரிய தீவிரத்தன்மையுடன் தோலுரித்துக்காட்டிய ஒரு சிறப்பான திரைப்படம்.
அண்மைக்காலங்களில் விளிம்புநிலை வாழ்வியல் பற்றிய சித்தரிப்புகள் குறித்த ஆர்வங்கள் தமிழ் சினிமாவில்பெருகத் துவங்கியிருக்கிற ஒரு சூழலில் தமிழ் சினிமாவின் வழமையான ரொமாண்டிசிஸத்தையும்,குரூரத்தையும் தவிர்த்துதீவிரத்தன்மை கெடாத ஒரு யதார்த்த சூழலை வடிவமைத்திருப்பது ஒரு சிறப்பான உத்தி.
அண்மைக்காலங்களில் தீண்டாமைச் சுவர்களும்,ஆணவக் கொலைகளும்தமிழ் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கிக்கொண்டிருக்கிற ஒரு காலகட்டத்தில்தலைநகரத்திலிருந்து நூறு கிலோமீட்டர் தூரமே உள்ள ஒருகிராமத்தில் இன்றும் நிலவிவரும் ஒரு தீண்டாமை நடைமுறையை திரைமொழியின் வீச்சுடன் அம்பலப்படுத்தியிருப்பது ஒரு சமூக நோக்கம்கொண்ட துணிச்சலான முயற்சி.
இன்றைய ஜனநாயக அமைப்பில் தங்களுடைய அடிப்படை உரிமைகளைப் பெற நீதிமன்றம் மற்றும் ஊடகங்களை நாடுவதற்கு வாய்ப்பு பெற்றுள்ள கல்வி அறிவு பெற்ற தலித் இளைஞர்கள் கூட சாதியக் கட்டுமானம் ஆழமாக ஊடுருவியுள்ள கிராமிய அடிமட்ட அமைப்புகளை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாத அவல நிலைதான் இத்திரைப்ப டத்தில் காட்சிகளாக வடிவம் பெறுகிறது.
நகரத்தில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒரு தலித் இளைஞன் கிராமத்திலுள்ள தன்னுடைய தந்தையின் திடீர் மரணச் செய்தி கேட்டு துக்கத்துடன் கிராமத்துக்கு விரைகிறான்.அங்கு பொதுவழியில் தந்தையை மயானத்துக்கு எடுத்துச் செல்லமுடியாத சூழல் நிலவுகிறது.அவர்களுக்கென்று உள்ள முட்கள் நிறைந்த பாதை உபயோகிக்க பயனற்றதாக இருக்கிறது. பொதுவழியை உபயோகிக்கும் தங்கள் உரிமையை நிலைநாட்ட நீதிமன்றத்தை அணுகி உத்தரவுபெற்ற பிறகும் கூட கிராமிய அதிகாரிகளும் காவல்துறையும் ஆதிக்க சக்திகளுக்கு துணைநின்று பிணத்தைப் பறித்து தாங்களே எடுத்துச்சென்று புதைக்கின்றனர்.தந்தையின் புதைக்கப்பட்ட இடத்தைக்கூட அடையாளம் கண்டுபிடிக்க முடியாதஅவலத்தையேயே தலித் எதிர்கொள்கிறான். .மரணத்துக்குப்பிறகும்ஒரு தலித் உடல் அவமானத்துக்குரிய பொருளாகவேஇருக்கிறது. மூன்று நாட்களில் நடைபெறும் இச்சம்பவங்களின் மூலமாக இன்றைய கிராமிய
யதார்த்தம் ஒரு வலுவான அழகியல் ஆவணமாக முன்நிறுத்தப்படுகிறது.
எந்தவிதமான செயற்கைத்தன்மையும் அற்று ஒரு இயல்பான உயிரோட்டம் கொண்ட பாத்திரங்களாக நடிகர்கள் இயங்குகின்றனர்.ஹீரோதன்மை அற்ற ஆனால் இயல்பான கோபம் கொண்ட தலித் இளைஞன்,கூட வேலை பார்க்கும் அவன் சுக துக்கங்களில் பங்குகொள்ளும் சகதோழி,நிலைமைகள் குறித்த புரிதலும் அணுகுமுறையும் கொண்ட தலித் தலைவர்,விரைந்து செயலாற்றி நீதிபெற்றுத்தர உறுதிபூணும் வக்கீல்,நிலைமைகளை உணர்ந்து தெளிவான தீர்ப்பு வழங்கும் நீதிபதி,கணவன் இறந்த துக்கத்தை ஒப்பாரிப்பாடல்களால் அரற்றித் தீர்க்கும் வேளையிலும் தன் மகனுக்கு மனைவியாகப் போகிறவளை வாஞ்சையுடன் தடவிப் பார்க்கும் தாய் என பாத்திரங்கள் மிகவும் உயிர்ப்புடன் வெளிப்படுகின்றன. பிணத்தை வீட்டுக்குள் எடுத்துச் சென்று தாழிட்டுக் கொள்வது, காவல்துறை அச்சுறுத்தல்களுக்கிடையிலும் பிணத்தை தர மறுப்பது, இறுதியில் காவல்துறை வன்முறையை பிரயோகித்து பிணத்தை பறித்துப் புதைப்பது என இறுதிக்காட்சிகள் ஒரு அதிகபட்ச நாடக உயிர்ப்புடன் வெளிப்படுகின்றன.
இத்தகைய மிகைத்தன்மையோ குரூரங்களோ அற்ற ஒரு இயல்பான காட்சிமொழி க்கு நம் பொது தமிழ்சினிமா மனநிலை அதிகம் பழக்கப்படாததால் இது ஒரு நவீன நாடகம் போன்றும் ஆவணப்படம் போன்றும் நகர்வதாக நம் சூழலில் தயக்கங்கள் நிலவுகின்றன.ஆனால் மாற்று சினிமா குறித்த அறிவும்,ஆவணப்பட அனுபவமும்,நவீன நாடக நடிகர்களை தன்னுடைய படைப்புகளில் தொடர்ந்து உபயோகப்படுத்தியும்வரும் இயக்குனர் அம்ஷன்குமார் இத்துறைகளின் ஊடாட்டத்தை ஒரு செறிவான காட்சிமொழியாக இத்திரைப்படத்தில் உருமாற்றி இருப்பதை பல காட்சிகளில் காண முடிகிறது.
முக்கியமாக பிணத்தை எடுப்பதற்கு முன்பாக அந்த தலித் இளைஞர்கள் ஆடும்பறையாட்டமும்,தான் குழியில் தள்ளப்பட்டு மண்வீசப்படுவதாக அந்த தலித் இளைஞன் காணும் முடிவற்ற கனவும் காலம்காலமான கூக்குரலின் குறியீடுகளாக உள்ளன.
வெற்று முழக்கங்களோ,உரத்த குரல்களோ இன்றி ஒரு படைப்புக்கலைஞன்செய்யத்துணியும்இத்தகைய ஆதிக்கத்துக்கு எதிரானஅழகியல் பதிவுகள் தான். இப்பிரச்னை குறித்த அதிகபட்ச கவனத்தை வேண்டுவதாக இருக்கின்றன.
அம்ஷன் குமார்
தோழர் ஆர்.நல்லகண்ணு (ஆர்என்கே) தோழர் சி .மகேந்திரன் ஆகியோருக்கு மனுசங்கடா படத்தை போட்டுக்காட்டினேன். 93வயதான பெருமதிப்பிற்குரிய தோழர் ஆர்என்கே அவர்கள் இந்திய கம்னியூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர். மக்கள் நலப்போரட்டங்களும் தியாகங்களும் நிறைந்த நெடிய வரலாறாக அவரது வாழ்க்கை விளங்குகிறது. படத்தை வெகுவாகப் பாராட்டினார். திரையரங்குகளைத் தாண்டி படத்தை மக்களிடம் குறிப்பாக இளைஞர்களிடம் கொண்டுசெல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தினார். பள்ளிகளில் திரையிட்டுக் காட்டவேண்டும் என்றார். மனுசங்கடா பாடல் எழுதிய கவிஞர் இன்குலாப் பற்றி பேச்சு எழுந்தது. படத்திற்காக சமீபத்திய சாதி வெறித்தனங்களை அவர் பாடல் வரிகளில் சேர்த்திருப்பதை கூறினேன். அதனால் பழைய பாடல் வரிகளில் இடம் பெற்ற குளப்பாடி சம்பவம் இதில் இடம் பெறவில்லை என்பதை தெரிவித்தேன்.1980 இல் பெரம்பலூரிலுள்ள குளப்பாடி கிராமத்தில் ஜாதி வெறிபிடித்த சிவசாமி தனது கிணற்றில் தாழ்த்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள் குளித்தது பொறுக்கமுடியாமல் நீரில் மின்சாரம் பாய்ச்சிக் கொன்ற சம்பவம் இன்குலாபை பின்வருமாறு எழுத வைத்தது.
தோழர் ஆர் என்கே அவர்கள் அச்சமயம் விவசாய சங்கத் தொழிலாளர் தலைவராக இருந்தார்.அவரது முயற்சியின் விளைவாக அப்போதைய கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினரான திரு.அழகர்சாமி சட்டமன்றத்தில் இதுபற்றிய கவனத்தைக் கொண்டுவந்தார்.
தோழர் சி.மகேந்திரன் எனது நெடுநாளைய அன்புத்தோழர். படம் பற்றி நுணுக்கமாக பல கருத்துகளை தெரிவித்தார். இருவர் பேசியதையும் விரைவில் காணொளியாக யூடிபில் பார்க்க முடியும். அவர்களுக்கு படத்தைக் காட்ட முடிந்தது எனக்கு வாய்த்த அரிய சந்தர்ப்பம்.
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde