அரசு பதில்களுக்காக குமுதம் வாங்கியவர்கள்; கல்கி கிடைத்தவுடன் பொன்னியின் செல்வனைத் தேடியவர்கள்; மெர்க்குரிப் பூக்கள் வந்த பிறகே சாவி என்னும் பத்திரிகை இருப்பதை அறிந்தவர்கள்; தங்கள் நாயகனின் போஸ்டருக்காக ஸ்போர்ட்ஸ்டார் பெற்றவர்கள்
லலிதாராம் அந்த வகையைச் சார்ந்தவர்.
சொல்வனம் தளத்தில் சுகா கட்டுரை இடம்பெற்றால் முதல் நாளே பத்தாயிரம் வாசகர்கள் வருவார்கள். அவரை வாசிப்பார்கள். பகிர்வார்கள். மீண்டும் இன்னொரு தடவை வாசிக்கவும் திளைக்கவும் அனுபவிக்கவும் வருவார்கள். அப்படியே அடுத்த நாள்.
இந்த மாதிரி இன்னொரு நம்பகமான ஆள் லலிதா ராம். சுகா சூப்பர் ஸ்டார் ரஜினி என்றால் தீபாவளி ரிலீஸாகப் போட்டி போடும் கமல்ஹாசனாக இவர்.
1978 தீபாவளிக்கு பதினொன்று தமிழ்ப்படங்கள் வெள்ளித்திரையில் வந்தது. அவள் அப்படித்தான் தப்புத் தாளங்கள் சிகப்பு ரோஜாக்கள் பைலட் பிரேம்நாத் தாய் மீது சத்தியம் மனிதரில் இத்தனை நிறங்களா வண்டிக்காரன் மகன் ஸ்ரீ காஞ்சி காமாட்சி தங்கரங்கன் கண்ணாமூச்சி அதிர்ஷ்டக்காரன்
இருந்தாலும் ப்ளாக்கில் எல்லோரும் பார்க்க நினைத்தது ஒன்றிரண்டுதான் இருக்கும். அந்த மாதிரி கட்டுரை முதல் பின்னூட்டமாகக் கீழே கிடைக்கும்
உசேனி இருபத்தோராவது மேளகர்த்தா இராகமும், “வேத” என்று அழைக்கப்படும் நான்காவது சக்கரத்தின் நான்காவது இராகமுமாகிய கரகரப்பிரியாவின் ஜன்னிய இராகம் ஆகும்.
லண்டன் ரயில் நிலையத்தில் அந்தக் குட்டிக் கரடி வந்து இறங்கும். அதனுடைய கழுத்தில் “இந்தக் கரடியை கவனித்துக் கொள்ளுங்களேன்!” என்று எழுதியிருக்கும். இந்தக் காட்சியை சரியாகப் புரிந்து கொள்வதற்கு செப்டம்பர் மாதம் 1939க்கு பின் செல்ல வேண்டி இருந்தது. லண்டன் மாநகரத்தை குண்டு போட்டுத் தாக்குவார்களோ என அஞ்சிக் கொண்டிருந்த காலகட்டம் அது. ஜெர்மனியுடன் போரிடுவதற்காக தந்தையர் எல்லாம் போர்முனைக்குச் சென்றுவிட, அன்னையர் எல்லாம் செவிலியர் ஆகிவிட, அனாதைகளாக ஆனக் குழந்தைகளை சித்திகளும் மாமிகளும் ரயில் ஏற்றி கிரமாப்புறமாக அனுப்பி விடுகின்றனர்.
போர் முடிந்து சொந்த வீடு இருக்கும் லண்டன் நகரம் திரும்ப பல்லாண்டு காலம் ஆகலாம். ’பேடிங்டன்’ படத்தில் வரும் அழகுக் கரடியும் பெரு நாட்டில் இருந்து கள்ளத்தோணி ஏறி விசா இல்லாமல் இங்கிலாந்து நாட்டிற்குள் குடிபுகுகிறது. அங்கே நட்ட நடுவில் அது அமர்ந்திருந்தாலும், எந்தப் பயணியரும் அதை கவனிப்பதில்லை. அவரவருக்கு அவரவரின் அவசரம் + வேலை. ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது பிரவுனின் குடும்பம் வந்து சேர்கிறது. எப்போதும் உற்சாகமாக இருக்கும் கரடியும், “எப்படி இருக்கிறீர்கள்? நலமா? நான் வசிப்பதற்கு இல்லம் தருவீர்களா!?” எனக் கேட்கிறது.
அதே மாதிரி அனாதரவான நிலையில் இருந்தாலும், ‘தி கிரேட் மேன்’ (பெரிய மனிதன் – The Great Man – ஃபிரென்ச் “Le grand homme”) படத்தின் பத்து வயது பாலகன் கட்ஜி (Khadji) பாரிஸ் ரயில் நிலையத்தில் பரிதாபமாக முகம் காட்டி, எவரிடமும் இறைஞ்சவில்லை. இது போரைக் குறித்த படம் எனலாம். அப்படியே, நாடு விட்டு நாடு தாவும் வந்தேறிகளின் குடிபுகலை சுட்டும் படம் எனலாம். நட்பின் நேசத்தின் கண்ணியத்தை உணர்த்தும் படம் எனலாம். அன்னியக் கலாச்சாரத்தைக் கண்டு அஞ்சும் மரபுவாத நாட்டின், புதிய தலைமுறை அனாதைக்கு — மகனின் பாசத்தை உணர்த்தி, வாழ்வை அர்த்தப்படுத்தும் சிறுவனின் கதை எனலாம்.
படத்தை பல்வேறு அத்தியாயங்களாக, அதன் இயக்குநர் சாரா லியானோர் (Sarah Leonor) பிரித்திருக்கிறார். முதல் அத்தியாயம் ஆஃப்கானிஸ்தானில் துவங்குகிறது. மார்கோவ் (நடிகர் சுர்ஹோ சுகாய்போவ்) என்பவரும் ஹாமில்டன் (நடிகர் ஜெரமி ரேனியர்) என்பரும் அங்கே காவல் காக்கிறார்கள். இருவரும் அத்யந்த நண்பர்கள். ஒருவருக்கு தாகம் எடுத்தால், இன்னொருத்தர் தண்ணீர் குடித்தால் அந்த தாகம் அடங்கும் என்று பின்னணியில் சிறுவனினின் குரல் ஒலிக்கிறது. அவர்களுடைய கனவில் சிறுத்தைப்புலி வருகிறது. அந்தக் கானல் புலியைத் தேடி அலைகிறார்கள். அப்போது ஹாமில்டன் சுடப்படுகிறான். அவனை பிரம்மப்பிரயத்தனப்பட்டு, அவனின் தோழன் மார்க்கோவ் காப்பாற்றுகிறான். ஆனால், அவனைத் தூக்கி வரும் வழியில் தன் கைத்துப்பாக்கியை இழக்கிறான. அதற்கான தண்டனையாக, அவனுக்கு இராணுவத்தில் பணியாற்றிய காலகட்டம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என அறிகிறான்.
இராணுவத்தில் மார்கோவ் சேர்ந்ததற்கு ஒரேயொரு காரணம்தான் இருக்கிறது. செசன்யாவில் இருந்து பஞ்சம் பிழைக்க பிரான்ஸிற்கு அடைக்கலம் புகுகிறான் மார்க்கோவ். அவனுடைய மனைவி ருஷியாவின் தாக்குதல் போரில் இறந்துவிட்டாள். அவனுக்கு இருப்பதோ ஒரேயொரு மகன். மகனுக்கோ, தந்தையற்ற வாழ்க்கையை நினைத்து கழிவிறக்கம் கலந்த அச்சம் உடன் சேர்ந்த பதின்ம வயது ஆற்றாமை கோபம். இப்பொழுது மகனுடன் நேரம் கழிக்காவிடில், மீண்டும் மகனை, நல்லதொரு குடிமகனாக்க இயலாது என்பதை உணர்ந்த மார்க்கோவ், அதிகாரபூர்வ குடியுரிமையைக் கானல் நீராகக் கண்ணில் தண்ணி காட்டும் பிரெஞ்சு இராணுவ வாழ்க்கையைத் துறந்து, அதிகாரபூர்வமற்ற வந்தேறியாக மாறுகிறான்.
குடிமகர்களுக்கே வேலை கிடைப்பது பிரான்ஸில் யூனிகார்ன் குதிரைக்கொம்பாக, பெரும்பாடாக இருக்கிறது. இந்த நிலையில், அத்துமீறி உள்நுழைந்து, படைப்பிரிவில் இருந்தும் விலக்கப்பட்ட மார்க்கோவ் என்பவனுக்கு எப்படி ஊதியம் கிடைக்கும்? பல்லாண்டு காலமாக பிரிந்திருந்த மகனுடன் எவ்வாறு பாந்தமாக, பாசமான தந்தையாக உறவாட முடியும்?
அமெரிக்காவை விட பிரான்சு போன்ற நாடுகளில் குடியுரிமை பெறாதவர்கள், எவ்வாறு வேட்டையாடப்பட்டு, நாடு கடத்தப்படுகிறார்கள் என்பது இந்தப் படத்தில் காட்சிகளால், வசனங்களால், குறிப்பால் உணர்த்தப்படுகிறது. படத்தில் பல காட்சிகளில் நெடிய வசனங்கள் கிடையாது. குறிப்பாகச் சொன்னால். மகனும் தந்தையும் ஒன்றுசேரும் இடத்தைச் சொல்லலாம். மகனின் நல்வாழ்க்கைகாகத்தான் போருக்குச் சென்றேன் என்பதை பெரிய உரையாடல் மூலம் சொல்வதற்கு தந்தை மார்க்கோவ் முயல்கிறான். அந்த நெடிய சொற்பொழிவைக் கேட்க விரும்பாத மகன் கட்ஜி, எதிர்ப்புறமாகச் சென்று ஈஃபில் டவரின் ஒய்யாரத்தையும் பூட்டுகளால காதலைச் சொல்லும் பாலங்களையும் பார்ப்பது போல் ஓடி விடுகிறான். அந்த புதிய பூமியின் ஈர்ப்பும், மாபெரும் பாரிஸ் பிரும்மாண்டங்களும், இரவின் குளுமையும் அவனைத் தந்தையை நோக்கி இட்டுச் செல்கிறது. பாலம் மறைக்கும்போது வெளிச்சம் தடுக்கப்படுகிறது. பாலத்தின் அடியில் இருந்து வெட்டவெளியில் படகில் பயணிக்கும்போது நிலவின் வெளிச்சம் அப்பாவை அரவணைக்க வைக்கிறது. இருவரும் நெருங்குகிறார்கள்.
இந்த மாதிரி காட்சிகளைக் காதலில் பார்த்து இருப்போம். இரவின் நீல நிறத்தில் நண்பர்களின் கொண்டாட்டத்தைப் பார்த்து இருப்போம். ஆனால், தாய்மண்ணற்ற பிரதேசத்தில், வீடற்ற நாட்டில், தந்தையைக் கண்ணால் நாள்பட பார்த்தே இராத பாலகனின் பாசத்தை, நெருக்கத்தை அடையப் பாடுபடும் தந்தையையும், தூரதேசத்தில் நெருங்கிக் கொள்ளும் அன்னிய நாட்டவரின் ஈடுபாடும் மனித நேசத்தை வெளிச்சம் போடுகின்றன.
ஃபிரெஞ்சு புரட்சியின்போது அரசியல் கொள்கைகளைப் பரவலாக்க கலைப்படைப்புக்களின் உதவியது. பிரஞ்சுப் பேரரசை நெப்போலியன் உருவாக்கியபோது செய்தி என்பது தேசிய உணர்வைப் பொங்கச் செய்வதாக இருக்க வேண்டும் என்று நெப்போலியன் நினைத்தார். மற்ற நாடுகளும் நெப்போலியனை பின்பற்றி, அவனைக் கொடுங்கோலனாகச் சித்தரிக்க ஆரம்பித்தன. கீழே ஜெர்மனிய அரசின் பிரச்சார போஸ்டரைப் பார்க்கலாம். இதில் ‘தி கிரேட் மேன்’ என்று பிரான்ஸில் சொல்பவரை, ‘வெறும் எலி’ என்று சித்தரிக்கிறார்கள்.
பிரெஞ்சு நாட்டின் அடிநாதமாக Liberté, égalité, fraternité (விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம்) என்பதைச் சொல்கிறார்கள். அதைத்தான் இந்தப் படம் தேடுகிறது. ஒரு தேசத்தில் அன்னிய மக்கள், அதிகமாக உள் நுழைய நுழைய, அந்த தேசத்தின் கொள்கைகள் எவ்வாறு மாறுகின்றன? புதிதாக குடிபுகுந்தவர்கள், அந்த தேசத்தின் மையச்சரடோடு ஒத்துப் போவார்களா? அன்னியநாட்டில் இருந்து நுழைபவர்களுக்கு அந்த மண்ணின் மைந்தர்கள் எவ்வாறு, தங்கள் விழுமியங்களை விதைப்பார்கள்?
சிரியா வேண்டாம். தற்போதைய சிரியாவில் இருந்து தப்பிக்க முயலும் ஆசிய நாட்டினரைக் கூட ஐரோப்பியருடன் ஒப்பிட வேண்டாம். சில மாதம் முந்தைய கிரேக்கப் பிரச்சினையை எடுத்துக் கொள்ளலாம். எத்தனை ஜெர்மானியர், தங்களின் சொந்தச் சகோதரர்களுக்காக, தங்கள் கைக்காசைக் கொடுக்க முன்வந்தார்கள்?
கில்கமேஷ் காதை உங்களுக்கு நினைவிருக்கலாம். அது இரு நண்பர்களின் கதை. கில்கமேஷும் அவனுடைய தோழர் என்கிடு என்பவரும் தோழர்களாகவே தங்கள் பயணத்தைத் துவங்கவில்லை. இந்தப் படத்திலும் அவ்வாறே, மார்க்கோவும் ஹாமில்டனும் சிறுசிறு பிணக்குகளுக்குப் பின் தங்கள் திறமைகளை அறிந்து, உற்ற பந்தங்கள் ஆகின்றனர். ஹம்பாபா என்னும் கோர விலங்கைத் தேடி, அந்த மாபெரும் இராட்சத மிருகத்தை வேட்டையாடுவதற்காக, பெரியோரின் சொல்லைக் கேளாமல், கில்கமேஷ் மற்றும் என்கிடு, தங்களின் பயணத்தை மேற்கோள்கின்றனர். இந்தப் படத்தில் சிறுத்தைப்புலியை துரத்த வேண்டாம் என்னும் தங்களின் மேல் அதிகாரியில் சொல்லைக் கேளாமல், இரு நண்பர்களும் அந்த வீரப் பயணத்தை எடுக்கின்றனர். கிலகமேஷுக்கு பயமுறுத்தும் கனாக்கள் வருகின்றன. என்கிடு அவனின் கனவுகளை நல்லெண்ணங்களாக உணர்த்தி, சாகசத்தைத் தொடர்கிறான். நண்பன் என்கிடுவின் மரணத்திற்குப் பிறகு, மரணமற்றப் பெருவாழ்வை நோக்கிய தேடலை கிலகமேஷ் மேற்கொள்கிறான். இதுதான் இந்தப் படத்தின் அடிநாதம்.
தீவிரவாதம் என்னும் சிறுத்தைப்புலியைத் தேடி அடக்க நினைத்த மார்க்கோவ் என்னும் என்கிடு இறந்துவிடுகிறான். அவனின் உற்ற தோழனாலும் அதை சட்டென்று அடக்க முடியாது. ஒரு தந்தையாக, அனாதையானக் குழந்தையை இரட்சிப்பதில், தன்னுடைய இறவாத்தன்மையை உணர்வதாக ஹாமில்டன் என்னும் கில்கமேஷைப் பார்க்கிறோம். அப்படியானால், தாய்மைக்கு, இங்கே என்ன இடம் என்பதை பெண் இயக்குநர் சாரா சொல்லாமல் விட்டுவிடுகிறார். ஆனால், பெண்ணாக இருப்பதினாலேயே, ஒரு ஆணிற்குள் அடக்குண்டு இருக்கும் பொறுப்பையும், குழந்தைமையைப் பேணும் தாய்மை குணத்தையும் அவரால் பூடகமாக உணர்த்தமுடிகிறது. ஆண் இயக்குநர்கள் எடுக்கும் படங்களின் ஆண் கதாபாத்திரங்கள் ஆவேசமாக இயங்குவார்கள். துப்பாக்கியும் கையுமாக, இரத்தம் படிந்த கறைகளுடன் போர்களில் உலா வருவார்கள். அது ஆடவர்களின் ஆண்மையை நிலைநிறுத்துவதற்காக ஆடவர் எடுக்கும் படம். இது மனிதரின் குணத்தை உணர்த்துவதற்காக, பெண்கள் அதிகம் உலாவராதத் திரைக்கதையில், ஆண்களின் பராக்கிரமத்தை உணர்த்தும் பெண் எடுத்த படம். திரைப்படத்தின் தலைப்பையேப் பாருங்களேன். தி கிரேட் மான் – மாபெரும் ஆண்மகன்: ஆண்மகனுக்கு என்ன இலட்சணம்?
இந்தப் படத்தில் பெரிய கதாபத்திரங்களில் பெண்கள் கிடையாது. ஆண் என்பவன் வாள் ஏந்துவான்; சுட்டுத் தள்ளுவான்; சாப்பட்டைக் கொண்டு வருவான்; அதெலாம் இங்கே காண்பிக்கப்படுகிறது. ஆனால், நல்ல மனிதர் என்பவர், சக மனிதருக்கு மரியாதை தருவார். அவரின் நிலை, நாடு, அரசியல், இனம், மொழி, மதம், போன்ற சின்னங்களை ஒதுக்கி, சக நேசனாக நடத்துவார். இந்த உலகமோ, சொந்த நாடோ, அதைச் செய்யாவிட்டாலும் கூட… தன்னுடைய அண்டை அயலாரை அவ்வாறு நடத்துபவரே ‘தி கிரேட் மேன்’.
இந்த சமூகத்தில் நல்ல மனிதனாக வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும்? போரில் அடிமைகளாக ஆனவர்களை வெற்றி கொண்டவர்கள் எவ்வாறு நடத்த வேண்டும்? வேண்டாத சண்டையின் நடுவே அகப்பட்டு கொண்டவர்களை எவ்வாறு மீட்க வேண்டும்? இதற்கெல்லாம் சரியான பதில் எவரிடமும் கிடையாது. ஆனால், ‘தி கிரேட் மேன்’ அதற்கான விடைகளை நோக்கி நம்மை செலுத்துகிறது.
உதயநிதிக்கு கண்ணாடி மாட்டி விட்டார் பாருங்க எங்க டைரக்டர் மிஸ்கின் – அங்கே நிற்கிறார். நடிக்கத் தெரியாத ஆள்; டப்பு உள்ள தயாரிப்பாளர். எப்படியோ சமாளிக்கிறார்… பாருங்க!
ஃபாஹத் பாசில் போன்ற நடிகரை வைத்து படம் பண்ணுவது எந்த கத்துக்குட்டி இயக்குநராலும் முடியும். ஆனால், உடலில் பெருத்த நித்யா மேனன் போன்றவரையும் “சிரித்த முகமும் கண்டு” என்று எப்பொழுதும் மோனப் புன்னகை தவழும் உதயநிதி ஸ்டாலின் கொண்டும் படம் பண்ணுவதற்கு தனித்திறமை வேண்டும்.
புகழ்பெற்ற “வந்தே மாதரம்” பாடலை எழுதிய வங்கமொழிக் கவிஞர் பங்கிம் சந்திர சட்டர்ஜியின் புகழ் பெற்ற “கிருஷ்ணகாந்தன் உயில்” என்ற நாவல் வங்கமொழியில் திரைப்படமாக வெளிவந்தது. அதை தமிழ் எழுத்தாளர் த.நா. குமாரசுவாமி தமிழில் மொழிபெயர்த்தார். அதில் முக்கிய காட்சி போல் அந்த அக்பர் / பவா செல்லத்துரை சிபி / சிஐடி காட்சி அமைந்துள்ளது.
See No Evil, Hear No Evil என்னும் படத்தில் வரும் வண்டியோட்டும் காட்சி பிரபலமானது. குரு பூர்ணிமாவின் மூல நாயகன் எழுத்தாளர் சுஜாதா சொன்னது போல் “ஒரு சிறுகதையை எழுதாதே; ஒரு படத்தில் இருந்து திருடாதே; ஒரு விஷயத்தை உன் எழுத்தில் சொல்லாதே!” என்பது போல் பல்வேறு ஹாலிவுட் படங்கள்; எண்ணற்ற காட்சிகள் – எல்லாவற்றையும் கலைத்துப் போட்டு மீண்டும் மசாலா ஆக்கித் தரும் மிஷ்கின் – ஜஸ்ட் வாழ்க!
ஆண்ட்ரியா பாச்செல்லி கண் தெரியாதவர். கலைஞர். அது போல் நம் நாயகன் மிஷ்கின் பார்வையற்ற உலகிற்கு பாணன். இந்தப் படத்தில் கௌதம் என்னும் நடிக்கவியலாத ஒருவரை இயக்கும் கர்த்தா. நம் குரு மிஷ்கின் எப்போதும் குளிராடி அணிந்தவர்
எத்தனை எழுத்தாளர்களை செட் ப்ராபெர்டியா வச்சு அநியாயமா டம்மி ஆக்குறார் இவர்… தப்புய்யா… பவா செல்லதுரை, ஷாஜி, பாரதி மணி! – எழுத வையுங்கப்பா! சும்மா வந்து போக வைக்காதீங்கப்பா!!
ராம் – இவர் நடிப்பு சற்றே அயர வைக்கும். சற்றே அல்ல!! நிறைய!!! ஆனால், இவரை ஒழுங்காக, லிமிடெட் மீல்ஸ் ஆக நடிக்க வைப்பவர் சாமர்த்தியசாலி + திறமைசாலி.
எத்தனை படம் இப்படியே எடுப்பார் மிஷ்கின்! ஆனால், ஒவ்வொன்றிலும் ஓரளவு ஃப்ரெஷ்ஷாகவே இருக்கார் மிஸ்கின். மீண்டும் பார்க்கும்போது பல விஷயங்களை ஒளித்திருக்கிறார். இயக்குநர் இயக்குவது போல், குருடன் நடத்திச் செல்வது போல், தயாரிபாளரின் “ஆடுறா ராமா”வுக்கு சலாம் போடும் வழிநடத்துனர் போல் – என்னென்னவோ வைக்கிறார்.
இளையராஜா சார்!! பின்னியிருக்கிறார்!!!
குத்துப் பாட்டு இல்லீங்களே!?
இதுக்கெல்லாம் பத்து போதாது. செவிலியர், கான்வென்ட், தனியார் பள்ளிக்கூடம், சிஸ்டர், கையடிப்பு, மனப்பிழற்வு, தற்கொலை, – இன்னும் நிறைய எடுங்க தல 🙂
புத்தர், அங்குலிமாலன் கதை தெரிந்திருக்கும்:
999 பேரைக் கொன்று விரல்களை எடுத்திருந்த அங்குலிமாலா ஆயிரமாவது ஆளுக்காகக் காத்திருந்த வேளையில், அவன் இருக்கக் கூடிய காட்டுப் பகுதியிலே செல்ல ததாகதர் முயன்ற போது அவரின் சீடர்கள் அவரைத் தடுத்தனர். அவர்களுக்குச் செவி கொடுக்காத ததாகதர் அவ்வழியிலேயே தனித்துப் பயணமானார். அங்குலிமாலன் அவரெதிரிலே வந்தான். அங்கு என்ன நடந்தது என்பது பற்றி பலவாறாகச் சொல்லப்படுகிறது. இறுதியில் புத்தர் அவனை மனமாற்றமடையச் செய்து புத்தச் சங்கத்தில் சேர்த்துக் கொண்டார்.
இது “Birdman” திரைக்கதை எழுதிய நிக்கொலஸ் Nicolas Giacobone-இன் சமீபத்திய ஆக்கம்.
அதில பட இயக்குநரால் கதாசிரியர் கடத்தப்பட்டு மூலையிடத்தில் அடைக்கப்படுகிறார். படத்தை எழுதி முடித்தால் மட்டுமே விடுதலை கிடைக்கும். அதில் இருந்து குட்டி நறுக்கு கீழே:
திரைக்கதையை எழுதி முடிக்கும்போது, ‘இது பரவாயில்லையே… சுலபமாகத்தானே இருக்கு’னு நினைத்தாலோ, திரைக்கதை எழுதுவதற்கெல்லாம் எந்த சிதம்பர ரகசியமும் கிடையாதுனு சொன்னாலோ, அந்தக் கதை மயிருக்குத்தான் சமானம். நீங்கள் அல்லாட வேண்டும். சுவற்றில் மண்டையை முட்டிக் கொள்ள வேண்டும். இதெல்லாம் எந்த எழவுக்கும் பிரயோஜனம் இல்லையோ என்று நெருநெருக்க வேண்டும். உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்த்து அந்த முகத்தின் மூடத்தனத்தை உணரவேண்டும்; ஏனென்றால் எல்லோருக்கும் முழுமூட முகங்களே உள்ளன – அவ்வளவு ஏன் மூடத்தனமான கண்களைக் கொண்டுள்ளோம். வாரத்திலொரு முறையாவது பைத்தியம் போல் விழுந்து விழுந்து சிரிக்க வேண்டும். நீங்கள் அழவேண்டும். எழுதியதைப் படித்தவுடன் அழவேண்டும் – காட்சிகள் சோகமாக இருப்பதால் அல்ல; அவை படுமோசமாக இருப்பதால். மணிக்கணக்கில், நாள்கணக்கில், மற்ற தொழில்கள் செய்வதை கற்பனை செய்து பார்க்கவேண்டும். மணிக்கணக்காக பெருஞ்சாமங்கள் செலவழித்து தகுதியான சால்ஜாப்புகளை பொய்யாகவேனும் தோற்றுவித்து தோல்விகளை நியாயப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இன்று மனுசங்கடா திரைப்படம் காணக் கிடைத்தது. கூடவே, ‘திண்ணை’ கோபால் ராஜாராமும் இருந்தது படத்தைக் குறித்த பார்வையை விசாலாமாக்கியது.
படத்தைக் குறித்து சில எண்ணங்கள்:
கோலப்பனாக நடித்தவர் அம்ஷனின் மகனாமே! நன்றாக செய்திருக்கிறார். அழகாகாவும் இருக்கிறார்.
பையனே அப்பாவை ‘பாடி’ என்று சொல்வது சற்றே நெருடியது.
அம்ஷனின் முந்தையப் படம் ‘ஒருத்தி’ சற்றே மறந்து போனது. ‘மனுஷங்கடா’ நிறைய தசாப்தம் நினைவில் நிற்குமாறு இருக்கிறது.
கீழ்வெண்மணி என்றவுடன் நெஞ்சம் படபடக்கும். அதை சொல்லாமல் சொல்லும் காட்சியமைப்பு பதைபதைக்க வைத்தது.
தமிழகத்தில் கூட படம் எடுக்க முடியாமால், மொழி புரியாத ஆந்திராவிற்குச் சென்று காட்சியாக்கமும் ஒளிப்பதிவும் செய்தது, இந்தியாவைக் குறித்த எதிர்மறை எண்ணத்தை அய்ர்வாக எழச் செய்தது.
“அண்ணன்” ஆக நடித்தவருக்கு நல்ல குரல்வளம். ஆனால், நடிப்பு சற்றே சீரியல்தனம்
உணர்ச்சிக் கொந்தளிப்புடன் கதையைக் காட்சியாக்கி இருக்கிறார். கிட்டத்தட்ட ஷங்கர் படம் பார்த்த ஆக்ரோஷத்துடன் படம் முடிகிறது. இந்த மனித உரிமை மீறல் அக்கிரமத்தை படம் பார்த்த திருப்தியோடு கை கழுவாமல் இருக்க வேண்டும்.
வாழும் போது மட்டுமல்ல, வாழாமல் செத்த பிறகும் சாவிலும் கூட விடாமல் துரத்துகிறது சாதியம். சட்டமும் நீதியும் கூட கெட்டி தட்டிப் போன அந்த இறுக்கத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை. கோலப்பன் தேடுவது தந்தையின் பிணத்தையல்ல, இந்தியாவின் ஜனநாயகத்தை, அதன் அரசியல் அமைப்பு சட்டத்தையே குழிகளில் தேடுகிறான் என்கிற சமிக்ஞையோடு படம் முடிந்ததாக எனக்குப் பட்டது.
எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் எளிய அலங்காரத்துடன் படம் நேர்மையாக நகர்கிறது. இதனாலேயே சிலர் சலிப்படையக்கூடும். ஜோடனைகள் இல்லாத உண்மை அத்தனை சுவாரசியமானதாக இருக்காதுதான்.
சமீபத்தில் நிகழ்ந்த ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு நோ்மையானதொரு தலித் சினிமாவை உருவாக்கியிருக்கிறார் அம்ஷன் குமார். ‘தீண்டாமை என்பது பெருங்குற்றம்’ என்பது பாடப்புத்தகங்களில் அல்ல, மனித மனங்களில் ஆழமாக எழுதப்பட வேண்டியது என்கிற செய்தியை இயல்பாக சொல்லிச் செல்கிறது இந்த திரைப்படம்.
இதில் வரும் நடிகர்கள் இயல்பான நடிப்பைத் தந்துள்ளனர். சினிமா ஆர்வலர்களின் ஆதரவு நிச்சயம் தரப்பட வேண்டிய திரைப்படம் இது.
விரிவான கட்டுரை வரும்.
மனுஷ்யபுத்திரன்
இன்று காலை அம்ஷன் குமாரின் ‘ மனுசங்கடா’ திரைப்படத்தை தியாகராய நகர் ஏஜிஸ் ல் பார்த்தேன். இரண்டு மூன்று வரிசைகளே நிரம்பியிருந்தன. பெரும்பாலான இருக்கைகள் காலியாக கிடந்தன. சென்னையில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு ஏழாம்தர குப்பைப்படத்தைக் கூட முன்பதிவு செய்யமல் பார்த்துவிடமுடியாது. இன்றைய காலி அரங்கம் எனக்கு மனதை பிசைவதாக இருந்தது. நண்பர்களுக்கான தனிப்பட்ட ஒரு ஷோ போல இருந்தது.
இத்தனைக்கும் ‘ மனுசங்கடா’ தமிழின் மிக முக்கியமான படம். சாதியத்தின் கோரமுகத்தை வெளிப்படுத்தும் படம். தன் தந்தையின் பிணத்தை பொதுவழியில் இடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல உயர்நீதிமன்றம்வரை சென்றுபோராடும் ஒரு தலித் இளைஞனின் கதை. எந்த வணிக சமரங்களும் இல்லை. அவலத்தின் நடுவே காதல் கிளுகிளுப்புகளின் பூச்சுகள் இல்லை. ஒரு மனிதன் இறந்து அடக்கம் செய்யப்படும் வரையிலான இரண்டு நாளின் கதை. படத்தில் பிண்ணனி இசை என்று தனியாக எதுவும் இல்லை. சுற்றுச் சூழலின் அசலான ஒலிகளே பிண்ணனி இசை. சினிமாவின் அலங்காரங்கள் இல்லாமல் எதார்தத்தை மறுபடைப்பு செய்ய அம்ஷன் குமார் படம் முழுக்க முனைகிறார். அதில் பார்க்கும் கோர்ட் நாம் நிஜத்தில் பார்க்கும் கோர்ட். நாம் பார்க்கும் வருவாய் துறை அதிகாரியும் காவல்துறை அதிகாரியும் நாம் அன்றாடம் காணும் அதிகாரிகள். அதில் வரும் தலித் சமூக தலைவரை நானே நேரில் பலமுறை சந்தித்திருக்கிறேன்.
இந்தப்படம் தெளிவாக சொல்லும் செய்தி ஒன்று உண்டு. இந்த நாட்டில் அரசியல் சாசனமோ நீதிமன்ற உத்தரவுகளோ சாதிய அதிகாரத்தை, அதன் சட்டங்களை வெல்ல முடியாது என்பதுதான். ஒடுக்கப்பட்ட மக்கள் வன்முறையின் மூலமாகவோ போலி சமரசங்கள் வாயிலாகவோ பொய் வாக்குறுதிகள் மூலமாகவோ தங்கள் உரிமைகளை விட்டுத்தர நிர்பந்திக்கப்படுகிறார்கள். தன் தந்தையின் பொதுவழியில் கொண்டு சென்று புதைப்பதற்கான நீதிமன்ற உத்தரவைப் பெற்றுவரும் இளைஞனால் கடைசியில் தன் தந்தையை காவல்துறையினர் பலவந்தமாக எங்கே புதைத்தார்கள் என்பதைக்கூட அறியமுடியாமல்போவது அவலத்தின் உச்சம்.
நடிகர்கள் தங்கள் பாத்திரத்தின் எல்லைமீறாமல் நடித்திருந்தார்கள். நவீன நாடகபாணியிலான நடிப்புமுறை சில இடங்களில் தூக்கலாக வெளிப்படுவதை தவிர்த்திருக்கலாம். எந்த ஊர் அடையாளமும் சாதி அடையாளமும் வெளிப்பட்டுவிடாமல் கதையை நகர்த்தியிருப்பது இயக்குனரின் வெற்றி என்றாலும் ஒரு முழுமையான எதார்த்த சினிமாவாக அது மாறுவதை பலவீனப்படுத்துகிறது. ஆனால் அத்தகைய அடையாளங்களை சுட்டினால் படம் வெளியே வந்திருக்காது. உயர் சாதிகளை சாதிப்பெருமை பேச மட்டுமே திரைப்படங்களில் வெளிப்படுத்த லைசன்ஸ் உண்டு. அம்ஷன் குமாரின் திரைப்பயணத்தில் நிச்சயம் இப்படம் அவருக்கு மிக முக்கியமான இடத்தைப்பெற்றுத்தரும்.
பல சர்வதேச விழாக்களில் படம் காட்டப்பட்டு கவனமும் பாராட்டும் பெற்றிருக்கிறது. விழாக்களில் மட்டுமல்ல, பொது சமூகத்தின் மனசாட்சியை இதுபோன்ற படங்கள் உலுக்கவேண்டும். பெரும் போராட்டத்திற்குப்பிறகு சென்னையின் சில திரையங்குகளில் சில காட்சிகள் மட்டுமே இந்த மூன்று நாட்களில் இப்படம் திரையிடப்ப்பட்டது
நாளை இருக்குமா என்று தெரியவில்லை. விளம்பரத்திற்கு கோடிகளை கொட்ட முடியாத, தியேட்டர்களை பிடிக்கும் வலிமையற்ற குறைந்த பட்ஜெட்டில் படம் எடுக்கும் ஒரு சமூகமாற்றத்திற்கான இயக்குனர் தமிழ்சினிமாவின் மிருகவிதிகளின் முன் தன் படைப்பை அத்தோடு மறந்துவிட வேண்டியதுதான்.
சினிமா என்பது தமிழர்களின் கலை அல்ல, அபின். இங்குவேண்டப்படுவது மிகையுணர்ச்சிகளின் அதீத நாடகமேயன்றி எதார்த்தத்தின் சித்திரங்கள் அல்ல
இன்குலாப்பின் கனல் தீராத கவிதை வரியை தலைப்பாக்கி வெளியாகி இருக்கும் திரைப்படம்.
நேற்றுப் பார்க்க வாய்த்தது.
சாதியத்தின் கோரமுகத்தை மூக்கு உரசும் தூரத்தில் உணர்ந்த அனுபவம்.
திருநாள்கொண்டசேரி சம்பவம் திரையாக்கமாகி இருக்கிறது.
பிறப்பில் துவங்கி ஒவ்வொரு நொடியிலும் உணரும் சாதிய ஒடுக்கு முறையை இறந்த பின்னாலும் பிணமாய் அனுபவிக்க நேரும் கொடூரமே கதைக் களம்.
பொது வழியில் ஒடுக்கப் பட்டோரின் பிணங்களை எடுத்துச் செல்ல அனுமதிக்க மறுக்கும் சாதிய திமிர் கொழுத்த கிராமங்களில் ஒன்று அம்மையப்பன் கிராமம்.
ஒடுக்கப் பட்டவர்களின் பிணத்தை எடுத்துச் செல்ல ஒதுக்கப் பட்ட தனிப் பாதை என்பது வெறும் முட்காடு. அதை பாதையாக்க எந்த முயற்சியும் செய்யாத ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள்.
இறந்த தன் தந்தையை பொதுவழியில் எடுத்துச் செல்ல முடிவு செய்து நீதிமன்றத்தை நாடுகிறான் கதாநாயகன் கோலப்பன். அதிசயமாய் நீதி வெல்கிறது. பொதுப்பாதையில் பிணத்தை எடுத்துச் செல்ல உத்தரவிடுகிறார் நீதிபதி. பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கும் அதிகாரிகளுக்கும் ஆணையிடப்படுகிறது.
அந்த தீர்ப்பின் படி, பிணம் பொது வழியில் அனுமதிக்கப் பட்டதா? எப்படி ஆதிக்க சாதியினரும் அதிகாரிகளும் அதற்கு எதிர்வினை ஆற்றினார்கள் என்பதே ஆழமும் அழுத்தமுமான கதை.
உண்மையின் கதையாடல்கள் வலியோடு பதிவாகி இருக்கிறது. எவ்வளவு கேவலமான சமூகத்தில் வாழ்கிறோம் என்கின்ற எதார்தத்தின் சூடு கட்டாயம் உரைக்கும் உணர்வுள்ளவர்களுக்கு.
சிறிய முதலீட்டில் சமூக அக்கறையுள்ள படைப்பை வழக்கிய அம்ஷன் குமார் அவர்களுக்கு மதிப்பு மிகுந்த வாழ்த்துக்கள்.
திரைக்கதையில் உதவிய எழுத்தாளர் அழகிய பெரியவன் அவர்களுக்கும் வாழ்த்துகள்.
சாதியை வெறுக்கும் முற்போக்கு மனநிலை உள்ளவர்கள், மாற்றுத் திரைப்படங்களை ஆதரிப்பவர்கள், கொஞ்சம் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கும் திரையரங்களில் மனுசங்கடாவைப் பார்ப்பதை தனது கடமையாக உணர வேண்டும்.
அது அப்படி இருந்திருக்கல்லாம், இது இப்படி இருந்திருக்கலாம் என்கிற சில லாம்கள் உண்டு தான்.
அதையெல்லாம் மீறி உண்மையும் நேர்மையுமான அக்கறையுமான ஒரு திரைப்படம் என்பதை உறுதியாய் உணர முடிகிற படைப்பு மனுசங்கடா ..
அம்பேத்கரின் நூற்றாண்டு விழாவிற்குப் பிறகு எழுந்த ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சி கலை இலக்கியங்களில் பிரதிபலித்தது. சாதி குறித்த பார்வையும் அழுத்தமும் பல விதங்களில் வெளிப்பட்டன, அப்பார்வையை ஆவணப்படங்கள்
அர்ப்பணிப்போடு முன்னெடுத்துச் சென்றன,,,ஆனால் நம்முடைய புனைவுத் திரைப்படங்களோ 25 வருடங்களுக்கு மேலாகியும் நேரடியாகச் சாதி குறித்துப் பேசவில்லை அல்லது தயங்குகின்றன. எளிமையான ஆவணத்தன்மையுடன் “மனுசங்கடா” அதனைப் பேசுகிறது. 25 வருடங்களாக நடந்த சாதி குறித்த விவாதங்களைப் புறக்கணிக்காமல் சாதி வன்கொடுமையைப் பேசுவது , சாதியை நேரடியாகத் தாக்குவது இக்காலத்தின் தவிர்க்க முடியாத கருப்பொருளாகும்.
வில்லன் -கதாநாயகன் என்ற எதிர்நிலைகளை உருவாக்கி ஒருவொரையொருவர் வெற்றி கொள்வது, தோல்வி அடைவது இது வணிக சினிமா மனோபாவம், மனுசங்கடா படத்தில் எதிரிகளில் குறிப்பிட்ட நபர்கள் என்று யாருமில்லை, வெகு தூரத்தில் அவர்கள் யாரென்று தெரியாமலே படமாக்கப்படுள்ளது, ஏனெனில் எதிரி தனிப்பட்ட ஒருவர் அல்ல,, அமைப்புதான்(System) எதிரி.அதை விவாதிப்பதே முக்கியம்.
சாதிக்கொடுமைகளின் உச்சமான அன்றாடம் நடக்கும் “புதைக்கும் உரிமை” மறுக்கப்பட்ட சமூகத்தின் குரல் திரைப்படத்தில் புனையப்பட்டது வரலாற்று முக்கியத்துவமானது.
திருநாள்கொண்டசேரி. நாகப்பட்டினம் மாவட்டம் , மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள வழுவூர் ஊராட்சிக்குட்பட்ட கிராமம். இக்கிராமத்தில் வசிக்கும் தலித் மக்களுக்கு தனியாக வசிப்பதற்கென சேரி ஒதுக்கப்பட்டிருப்பது போல, செத்துப் போனால் புதைப்பதற்கென தனியாக இடுகாடு ஒதுக்கப்படவில்லை. ஒரே இடுகாடு என தப்பர்த்தம் கொள்ள வேண்டாம். இடுகாடே கிடையாது. ஒதுக்கப்படவில்லை.
பிறகு, செத்துப் போகிறவர்களை எப்படித்தான் அடக்கம் செய்வார்களாம் என்றால், அக்கிராமத்திலிருத்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் மதிமலை என்கிற இடத்தின் ஆற்றங்கரையில்தான் புதைக்க வேண்டும். அதுதான் அந்த பகுதியில் காலங்காலமான நடைமுறை. அவ்வளவு தூரம் சுமந்து சென்றுதான் பிணங்களைப் புதைத்து வருகிறார்கள் தலித் மக்கள்.
ஆனால் ஒரு கண்டிஷன். அவர்கள் பிணத்தைத் தூக்கிக் கொண்டு ஊரின் பொதுப் பாதையில் செல்லக் கூடாது, கல்லும் முள்ளும் பாவிக் கிடக்கும் வரப்பின் வழியாகத்தான் பிணத்தை எடுத்துச் செல்ல வேண்டும். எப்பேர்ப்பட்ட நீதிபதிகளும் கூட மீறவியலாத இந்த கண்டிஷனை போட்டு வைத்திருப்பது அக்கிராமத்தின் சாதி இந்துக்கள்.
அவர்களுடைய அடாவடியிலிருந்து விலகியிருக்க நினைக்கும் தலித் மக்கள் , தங்கள் பகுதியிலேயே தங்களுக்கென தனித்த சுடுகாடு வேண்டும் என்கிற கோரிக்கையை வைக்கிறார்கள். ஓராண்டில்லை. ஈராண்டில்லை. சுமார் நாற்பதாண்டு காலமாக எழுப்பப்பட்டு வரும் அந்த கோரிக்கையை அரசாங்கம் கண்டுகொள்ளவேயில்லை. ஆயிரமாயிரம் புகார்கள். ம்ஹூம். நடவடிக்கையே இல்லை. தலித் மக்களில் எவரேனும் இறந்து போகும் ஒவ்வொரு முறையும், சாதி இந்துக்கள் தங்களின் மனநோயை வெளிப்படுத்தத் தவறியதே இல்லை. பொதுப் பாதையில் பிணம் எடுத்துச் செல்ல முயற்சிக்கும் தலித்துகளை கடுமையாகத் தாக்கியும் அவமானப்படுத்தியும் வருகின்றனர்.
இந்நிலையில், கடுமையான ஒரு மழை காலத்தில், தலித் மூதாட்டி ஒருவர் இறந்து போகிறார். வழக்கமாகப் பிணம் தூக்கிச் செல்லும் வரப்பில் தண்ணீர் அதிகமும் தேங்கி இருந்ததால் பொதுப்பாதையில் செல்ல காவல் துறையினரிடமும் மாவட்ட ஆட்சி நிர்வாகத்தினரிடமும் அனுமதி கேட்கின்றனர் தலித் மக்கள். அப்படிப்பட்ட தனிமனித உரிமைக்கான சட்டம் இருப்பதையும் எடுத்துச் சொல்லி கெஞ்சுகின்றனர். தலித் மக்கள் பொதுப்பாதையில் சடலத்தைத் தூக்கிச் செல்லலாம் என கோர்ட் ஆணையிட்டுவிட்டது. தலித் மக்களின் கெஞ்சலைக் கண்டும் கோர்ட் ஆணையை நிறைவேற்றும் பொருட்டும் போலிஸ்காரர்கள் சாதி இந்துக்களிடம் செல்கின்றனர். அவர்களிடம் கெஞ்சுகின்றனர். “ஐயா.. போனா போகட்டுங்யா.. எப்படியாவது அவங்களுக்கு வழி உட்ருங்யா ப்ளீஸ்” எந்த கெஞ்சுதல், வேண்டுதல், சாதி இந்துக்களிடத்தில் நிறைவேறியிருக்கிறது?
அவர்கள்தான் மனநோயாளிகளாயிற்றே! கொஞ்சமும் மசியவில்லை. மட்டுமின்றி, காவல் துறையினரையும் கூட மிரட்டுகின்றனர். அவர்களின் மிரட்டலுக்கு அடிபணிந்து, அவமானப்பட்ட காவல்துறையினர் அந்த அவமானத்தால் கொண்ட ஆத்திரத்தையும் வெறித்தனத்தையும் தலித் மக்கள் மீது காட்டியுள்ளனர்.
“தலித் மக்கள் பொதுப்பாதை வழியாக சடலத்தைக் கொண்டு செல்லலாம்” என்கிற தீர்ப்பை கனம் கோர்ட்டாரே சொல்லிய பிறகும் அதை ஒரு டேஷ்க்கும் மதிக்காமல் ’கோர்ட்டாவது மயிராவது’ எனச் சொல்லி ( நன்றி : பாஜகவின் ஹெச். ராஜா ) போலிசையே எதிர்க்கும் ஆற்றல் சாதி இந்துக்களுக்கு இருக்கிறது என்றால் அந்த ஆற்றல் எங்கிருந்து வருகிறது? ஏன் வருகிறது?
சாதியுணர்வு ஒரு மனநோய் என்று பாபாசாகேப் அம்பேத்கர் சொன்னது எவ்வளவு உண்மை.
அந்த மன நோயாளிகளிடம் மல்லுக்கட்ட முடியாமல் போலீசே பிணத்தைச் சுமந்து சென்று அடக்கம் செய்திருக்கிறது. (இச்சம்பவம் தோழர் எவிடென்ஸ் கதிர் அவர்களின் கட்டுரை ஒன்றிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. அவருக்கு நன்றி. )
இப்படியான கேவலமான ஒரு செயல் உலகில் எந்த நாட்டிலாவது நடக்குமா?
இப்படியான சம்பவங்கள் ஒருமுறை இருமுறை, மும்முறைகளல்ல. காலங்காலமாக நடந்து வருகின்றன. இன்றைய டிஜிட்டல்இந்தியா வரை. இந்த டிஜிட்டல் தேசத்தைக் காறித்துப்ப வைக்கும் இப்படிப்பட்ட நிலைமை ஒவ்வொரு நாளும் ஏதோவொரு சேரியில் நடந்து கொண்டிருந்துதானிருக்கிறது.
அன்னாடம் நடந்துவருகின்ற இப்படியான சாதிய அசிங்கங்கள் குறித்து நம்மூரார் யாரேனும் வாய் திறக்கிறார்களா என்றால் இல்லை. மட்டார்கள். அவர்களுக்கு வேறு பல கேளிக்கைகள் இருக்கின்றன. சமயங்களில் இப்படிப்பட்ட செய்திகள் ஊடகங்களில் இடம் பெறும்தான். மற்ற செய்திகள் ஏதும் கிடைக்காத போது.
செத்தாலும் மறையாத இப்படிப்பட்ட சாதியக் கொடுமைகளை, (வெகுசன) அச்சு ஊடகங்களிலேயே சொல்ல முடியாத போது, திரைப்படங்கள் என்கிற வெகுமக்களுக்குப் பிடித்தமான கலையின் மூலம் காட்டுவது என்பதெல்லாம் சாத்தியமில்லாத ஒன்று. ஆனால், அதை சாத்தியப்படுத்தியிருக்கிறது ‘மனுசங்கடா’ திரைப்படம்.
பல்வேறு ஆவணப்படங்கள், ‘ஒருத்தி’ உள்ளிட்ட சுயாதீன படம் ஆகியவற்றின் இயக்குனரும், எழுத்தாளருமான அம்ஷன் குமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார். பல்வேறு படவிழாக்களில் கலந்து கொண்டு அங்கீகாரத்தைப் பெற்ற இப்படம் இப்போது, வெகுமக்களின் பார்வைக்கு வந்துள்ளது.
திருநாள்கொண்டசேரியில் நடந்தைப் போல பல்லாயிரம் கிராமங்களில் இன்றும் நிகழ்ந்து கொண்டிருக்கும் சாதிய அசிங்கத்தை அப்பட்டமாகவும் அதிர்ச்சியுடனும் காட்டியிருக்கிறது இப்படம். மட்டுமின்றி, சமத்துவம் பேசும் திரைப்படங்களைக் கூட பல கோடிகளில்தான் உருவாக்க முடியும் என்கிற மாயையையும் இப்படம் உடைத்திருக்கிறது.
சினிமா என்கிற கலையை எளிய மக்கள் அனைவராலும் உருவாக்க முடியும், (உருவாக்க வேண்டும்) அதில் மக்களின் பாடுகளைச் சொல்ல முடியும் (சொல்ல வேண்டும்) என்கிற வகையிலும், சாதியத்தின் அசிங்கத்தைக் அவ்வளவு வெளிப்படையாகக் காட்டியிருக்கும் வகையிலும் ’மனுசங்கடா’ முக்கியமான அரசியல் படமாகின்றது. படக்குழுவினரை வெகுவாகப் பாராட்டுகிறேன்.
இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் ட்ரைபாட் இல்லாமல், காமிராவை கையால் வைத்தபடியே காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். ஆனாலும் நேர்த்தியான படப்பதிவு. டப்பிங்கே இல்லை என்பதை நம்ப முடியவில்லை. துல்லியமான ஒலிப்பதிவு. சபாஷ் அம்ஷன் குமார் & குழுவினர்.
படத்தில் நடித்திருக்கும் அத்தனை நடிகர்களும் (ஓரிரு இடங்களைத் தவிர) நேர்த்தியாக நடித்திருக்கின்றனர். குறிப்பாக மையப்பாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் ராஜிவ் ஆனந்த் கவனிக்க வைக்கிறார். படம் தொடங்கியதிலிருந்து இறுதிவரை கொந்தளிப்பான முகத்தை கடைபிடித்திருக்கிறார் அவர். எல்லோரும் நவீன நாடக கலைஞர்கள். ஆகவே, ஒரு தேர்ந்த நடிப்பு வெளிப்பட்டிருக்கிறது ( அந்த வழக்கமான மாடுலேஷனை மட்டும் அவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்).
நீதிமன்ற காட்சி அதன் சமன் குலையாமல் இருக்கிறது. அக்காட்சி முழுக்க, முழுக்க பாபாசாகேப் அம்பேத்கரின் கருத்தியலை மையப்படுத்தியே உருவாக்கப்பட்டிருக்கிறது என்பேன். அவர் உருவாக்கிய சட்டம் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமைகளையும் மனதில் கொண்டு அவற்றைப் பாதுகாக்கும் நோக்கத்தில் மட்டுமே இருக்கிறது. அப்படிப்பட்ட சமத்துவ சிந்தனையாளர் அண்ணல் அம்பேத்கர்.
அரசின் சட்ட விதிமுறைகள் யாவும் அனைவருக்கும் சமமாகத்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்துவதில்தான் பாகுபாடுகளும் தாழ்வுகளும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன என்கிற அவலத்தை சமரசமின்றி சொல்லிச் செல்கிறது இப்படம்.
பெரும்பாலான வழக்குகளில் நீதிமன்றங்கள் நீதியற்ற தீர்ப்புகளைச் சொல்லி தங்களை அம்பலப்படுத்திக் கொள்கின்றன. அரிதாக, எப்போதாவது நீதிமன்றமே நீதியை நிலைநாட்டச் சொன்னாலும் கூட, அந்த தீர்ப்பு சாதியத்தின் மசுருக்குக் கூட சமானமாவதில்லை என்பதாகத்தான் இருக்கிறது.
அப்படிப்பட்ட அவலத்தைத் தான் பேசியிருக்கிறது இப்படம்.
சமூகத்தின் மீது அக்கறை கொண்டியங்கும் ஒவ்வொருவரும் அவசியம் காண வேண்டிய திரைப்படம் இது. இப்படத்தை ஒவ்வொருவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டிய, விவாதிக்க வேண்டிய அக்கறையும் பொறுப்பும் நமக்கிருக்கிறது.
வணிக அடிப்படையில் பார்த்தால் இம்மாதிரியான சுயாதீன திரைப்படங்களுக்கான ஆரோக்கியமான சூழல் இல்லாததால் குறைந்தளவு காட்சிகள் மட்டுமே திரையிடப்படுகின்றன. ஆகவே, உடனடியாக இப்படத்தைப் பார்த்து விடுங்கள் தோழர்களே!
மேலும், இப்படிப்பட்ட அக்கறையான படங்களுக்காகவும் நம் குரல் ஒலிக்க வேண்டும். சமூக வலைதளங்களில் அதற்கான குரல் வலுவாக எழுப்பப்பட வேண்டும். இப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதன் மூலமாக சுயாதீன படங்களுக்கான ஆரோக்கியமான வெளியை உருவாக்க முடியும். அதன் மூலமாக வணிக சினிமா உருவாக்கியிருக்கும் கவர்ச்சியையும் அதுசார்ந்த போலியான பிம்பங்களையும் உடைக்க முடியும்.
இறுதியாக, ஒரு வேண்டுகோள் தலித்துகள் சாதி இந்துக்களைப் பார்த்து, ’நாங்க மனுசங்சடா…’ ’நாங்க மனுசங்கடா..’ என்கிற உண்மையைப் பலகாலமாகச் சொல்லி வருகிறார்கள். இனி கேட்க வேண்டியது, சாதி இந்துக்களைப் பார்த்துத்தான்.
அண்மையில் சென்னையில் குறிப்பிட்ட சில திரையரங்குகளில் மட்டுமே திரையிட வாய்ப்புகள் பெற்ற அம்ஷன்குமாரின்
மனுசங்கடா திரைப்படம் இன்றைய தமிழ் சமூகத்தின் முக்கிய பிரச்னையான சாதிய கட்டுமான இறுக்கத்தை ஒரு நேரிடையான மிகையற்ற யதார்த்த மொழியில் அதற்குரிய தீவிரத்தன்மையுடன் தோலுரித்துக்காட்டிய ஒரு சிறப்பான திரைப்படம்.
அண்மைக்காலங்களில் விளிம்புநிலை வாழ்வியல் பற்றிய சித்தரிப்புகள் குறித்த ஆர்வங்கள் தமிழ் சினிமாவில்பெருகத் துவங்கியிருக்கிற ஒரு சூழலில் தமிழ் சினிமாவின் வழமையான ரொமாண்டிசிஸத்தையும்,குரூரத்தையும் தவிர்த்துதீவிரத்தன்மை கெடாத ஒரு யதார்த்த சூழலை வடிவமைத்திருப்பது ஒரு சிறப்பான உத்தி.
அண்மைக்காலங்களில் தீண்டாமைச் சுவர்களும்,ஆணவக் கொலைகளும்தமிழ் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கிக்கொண்டிருக்கிற ஒரு காலகட்டத்தில்தலைநகரத்திலிருந்து நூறு கிலோமீட்டர் தூரமே உள்ள ஒருகிராமத்தில் இன்றும் நிலவிவரும் ஒரு தீண்டாமை நடைமுறையை திரைமொழியின் வீச்சுடன் அம்பலப்படுத்தியிருப்பது ஒரு சமூக நோக்கம்கொண்ட துணிச்சலான முயற்சி.
இன்றைய ஜனநாயக அமைப்பில் தங்களுடைய அடிப்படை உரிமைகளைப் பெற நீதிமன்றம் மற்றும் ஊடகங்களை நாடுவதற்கு வாய்ப்பு பெற்றுள்ள கல்வி அறிவு பெற்ற தலித் இளைஞர்கள் கூட சாதியக் கட்டுமானம் ஆழமாக ஊடுருவியுள்ள கிராமிய அடிமட்ட அமைப்புகளை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாத அவல நிலைதான் இத்திரைப்ப டத்தில் காட்சிகளாக வடிவம் பெறுகிறது.
நகரத்தில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒரு தலித் இளைஞன் கிராமத்திலுள்ள தன்னுடைய தந்தையின் திடீர் மரணச் செய்தி கேட்டு துக்கத்துடன் கிராமத்துக்கு விரைகிறான்.அங்கு பொதுவழியில் தந்தையை மயானத்துக்கு எடுத்துச் செல்லமுடியாத சூழல் நிலவுகிறது.அவர்களுக்கென்று உள்ள முட்கள் நிறைந்த பாதை உபயோகிக்க பயனற்றதாக இருக்கிறது. பொதுவழியை உபயோகிக்கும் தங்கள் உரிமையை நிலைநாட்ட நீதிமன்றத்தை அணுகி உத்தரவுபெற்ற பிறகும் கூட கிராமிய அதிகாரிகளும் காவல்துறையும் ஆதிக்க சக்திகளுக்கு துணைநின்று பிணத்தைப் பறித்து தாங்களே எடுத்துச்சென்று புதைக்கின்றனர்.தந்தையின் புதைக்கப்பட்ட இடத்தைக்கூட அடையாளம் கண்டுபிடிக்க முடியாதஅவலத்தையேயே தலித் எதிர்கொள்கிறான். .மரணத்துக்குப்பிறகும்ஒரு தலித் உடல் அவமானத்துக்குரிய பொருளாகவேஇருக்கிறது. மூன்று நாட்களில் நடைபெறும் இச்சம்பவங்களின் மூலமாக இன்றைய கிராமிய
யதார்த்தம் ஒரு வலுவான அழகியல் ஆவணமாக முன்நிறுத்தப்படுகிறது.
எந்தவிதமான செயற்கைத்தன்மையும் அற்று ஒரு இயல்பான உயிரோட்டம் கொண்ட பாத்திரங்களாக நடிகர்கள் இயங்குகின்றனர்.ஹீரோதன்மை அற்ற ஆனால் இயல்பான கோபம் கொண்ட தலித் இளைஞன்,கூட வேலை பார்க்கும் அவன் சுக துக்கங்களில் பங்குகொள்ளும் சகதோழி,நிலைமைகள் குறித்த புரிதலும் அணுகுமுறையும் கொண்ட தலித் தலைவர்,விரைந்து செயலாற்றி நீதிபெற்றுத்தர உறுதிபூணும் வக்கீல்,நிலைமைகளை உணர்ந்து தெளிவான தீர்ப்பு வழங்கும் நீதிபதி,கணவன் இறந்த துக்கத்தை ஒப்பாரிப்பாடல்களால் அரற்றித் தீர்க்கும் வேளையிலும் தன் மகனுக்கு மனைவியாகப் போகிறவளை வாஞ்சையுடன் தடவிப் பார்க்கும் தாய் என பாத்திரங்கள் மிகவும் உயிர்ப்புடன் வெளிப்படுகின்றன. பிணத்தை வீட்டுக்குள் எடுத்துச் சென்று தாழிட்டுக் கொள்வது, காவல்துறை அச்சுறுத்தல்களுக்கிடையிலும் பிணத்தை தர மறுப்பது, இறுதியில் காவல்துறை வன்முறையை பிரயோகித்து பிணத்தை பறித்துப் புதைப்பது என இறுதிக்காட்சிகள் ஒரு அதிகபட்ச நாடக உயிர்ப்புடன் வெளிப்படுகின்றன.
இத்தகைய மிகைத்தன்மையோ குரூரங்களோ அற்ற ஒரு இயல்பான காட்சிமொழி க்கு நம் பொது தமிழ்சினிமா மனநிலை அதிகம் பழக்கப்படாததால் இது ஒரு நவீன நாடகம் போன்றும் ஆவணப்படம் போன்றும் நகர்வதாக நம் சூழலில் தயக்கங்கள் நிலவுகின்றன.ஆனால் மாற்று சினிமா குறித்த அறிவும்,ஆவணப்பட அனுபவமும்,நவீன நாடக நடிகர்களை தன்னுடைய படைப்புகளில் தொடர்ந்து உபயோகப்படுத்தியும்வரும் இயக்குனர் அம்ஷன்குமார் இத்துறைகளின் ஊடாட்டத்தை ஒரு செறிவான காட்சிமொழியாக இத்திரைப்படத்தில் உருமாற்றி இருப்பதை பல காட்சிகளில் காண முடிகிறது.
முக்கியமாக பிணத்தை எடுப்பதற்கு முன்பாக அந்த தலித் இளைஞர்கள் ஆடும்பறையாட்டமும்,தான் குழியில் தள்ளப்பட்டு மண்வீசப்படுவதாக அந்த தலித் இளைஞன் காணும் முடிவற்ற கனவும் காலம்காலமான கூக்குரலின் குறியீடுகளாக உள்ளன.
வெற்று முழக்கங்களோ,உரத்த குரல்களோ இன்றி ஒரு படைப்புக்கலைஞன்செய்யத்துணியும்இத்தகைய ஆதிக்கத்துக்கு எதிரானஅழகியல் பதிவுகள் தான். இப்பிரச்னை குறித்த அதிகபட்ச கவனத்தை வேண்டுவதாக இருக்கின்றன.
அம்ஷன் குமார்
தோழர் ஆர்.நல்லகண்ணு (ஆர்என்கே) தோழர் சி .மகேந்திரன் ஆகியோருக்கு மனுசங்கடா படத்தை போட்டுக்காட்டினேன். 93வயதான பெருமதிப்பிற்குரிய தோழர் ஆர்என்கே அவர்கள் இந்திய கம்னியூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர். மக்கள் நலப்போரட்டங்களும் தியாகங்களும் நிறைந்த நெடிய வரலாறாக அவரது வாழ்க்கை விளங்குகிறது. படத்தை வெகுவாகப் பாராட்டினார். திரையரங்குகளைத் தாண்டி படத்தை மக்களிடம் குறிப்பாக இளைஞர்களிடம் கொண்டுசெல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தினார். பள்ளிகளில் திரையிட்டுக் காட்டவேண்டும் என்றார். மனுசங்கடா பாடல் எழுதிய கவிஞர் இன்குலாப் பற்றி பேச்சு எழுந்தது. படத்திற்காக சமீபத்திய சாதி வெறித்தனங்களை அவர் பாடல் வரிகளில் சேர்த்திருப்பதை கூறினேன். அதனால் பழைய பாடல் வரிகளில் இடம் பெற்ற குளப்பாடி சம்பவம் இதில் இடம் பெறவில்லை என்பதை தெரிவித்தேன்.1980 இல் பெரம்பலூரிலுள்ள குளப்பாடி கிராமத்தில் ஜாதி வெறிபிடித்த சிவசாமி தனது கிணற்றில் தாழ்த்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள் குளித்தது பொறுக்கமுடியாமல் நீரில் மின்சாரம் பாய்ச்சிக் கொன்ற சம்பவம் இன்குலாபை பின்வருமாறு எழுத வைத்தது.
தோழர் ஆர் என்கே அவர்கள் அச்சமயம் விவசாய சங்கத் தொழிலாளர் தலைவராக இருந்தார்.அவரது முயற்சியின் விளைவாக அப்போதைய கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினரான திரு.அழகர்சாமி சட்டமன்றத்தில் இதுபற்றிய கவனத்தைக் கொண்டுவந்தார்.
தோழர் சி.மகேந்திரன் எனது நெடுநாளைய அன்புத்தோழர். படம் பற்றி நுணுக்கமாக பல கருத்துகளை தெரிவித்தார். இருவர் பேசியதையும் விரைவில் காணொளியாக யூடிபில் பார்க்க முடியும். அவர்களுக்கு படத்தைக் காட்ட முடிந்தது எனக்கு வாய்த்த அரிய சந்தர்ப்பம்.
விஜயனை உங்களுக்குத் தெரியும். ஆர்.ஜே. ரத்னாகரை இன்னொரு விஷயத்திற்காக பார்த்திருக்கிறேன். இவரைப் போன்ற அதிகாரிகளையும் மேலாளர்களையும் எப்படித்தான் ஒரே படத்தில் நடிக்க வைத்தாரோ!
ஏ,ஆர்.எஸ்., ஜனகராஜ் என்று அதிகம் நடித்துவிடும் அபார நடிகர்கள் இருந்தாலும் எல்லோரையும் கட்டுக்குள் வைத்திருந்தவர், கமலிடம் கோட்டை விட்டார்.
படத்தின் வன்முறையை இப்போது பார்த்தால் கூட அதிர்கிறது.
கள்ளக் கடத்தலையும் பாலியல் தொழிலையும் இவ்வளவு கவர்ச்சிகரமாகக் காட்ட முடியுமா?
உங்களுக்கு மாதந்தோறும் ஐம்பதாயிரம் ரூபாய் சம்பளம் கிடைக்கும் வேலையில் இருக்கிறீர்கள். திடீரென்று ஒரு நாள் வேலை போய்விட்டது. என்ன செய்வீர்கள்?
முருகன் இட்லி கடையில் சேர்வீர்களா? காலை ஒன்பது முதல் மாலை ஐந்து வரை காலர் கசங்காமல் இருந்தவர், ஒரே நாளில் கழிவறை சுத்தம் செய்பவராக மாறுவீர்களா? ஒரு மணி நேரத்திற்கு ஒரு சந்திப்பு, மதிய உணவிற்கு ஒன்றரை மணி நேர ஒதுக்கல், எக்ஸெல் கோப்புகளை நிரப்புதல் என்றெல்லாம் காலந்தள்ளியவர் நான்கு டபரா காபியும் எட்டு தட்டு இட்லியும் எடுத்துக் கொண்டு ஒவ்வொரு வினாடியும் பம்பரமாகாச் சுழல்வீர்களா?
ஜேம்ஸ் ஆடம்ஸ் நிஜமாகவே செய்து பார்த்திருக்கிறார். அவர் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்தவர். முதலீட்டாளர்களிடம் “இது அருமையான முதலீடு. உங்கள் சேமிப்பை என்னிடம் கொடுத்தால் ஒரே மாதத்தில் இரட்டிப்பு ஆக்குவேன்!” என்று வார்த்தைஜாலத்தில் மயக்கி, பணம் பறித்தவர். 2008ல் துவங்கிய பொருளாதாரச் சரிவு 2009ல் விஸ்வரூபம் எடுத்தபோது, முதலீட்டாளர்களின் பொருள் எல்லாம் திவாலாகி விட, அந்தப் பணத்தை நிர்வகித்த ஜேம்ஸ் ஆடம்ஸும் வேலை நீக்கம் ஆகிறார்.
நானும் பலமுறை வேலை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் மீண்டும் அதே துறையிலேயே வேலை தேடி இருக்கிறேன். கணினி நிரலி எழுதுவதில் இருந்து கணினித்துறை ஆலோசகராக – பக்கத்து வீட்டிற்குத் தாவி இருக்கிறேன். தொலைத்தொடர்பு துறையில் இருந்து பொருளாதாரத் துறை; அங்கிருந்து சேமநலத்துறை என்று வெவ்வேறு துறைகளுக்குத் தாவினாலும் எல்லாமே கணினியும் நிரலியும் மென்பொருளும் நிர்வாகமும் சார்ந்த வேலைகள். ஒரு நாள் கூட இன்று மெக் டொனால்ட்ஸ் உணவகத்தில் வேலை பார்க்கலாம் என்றோ பர்கர் கிங் கிளை ஒன்றைத் துவக்கலாம் என்றோ யோசித்ததே இல்லை.
இந்த மாதிரி சாதாரண மக்கள் யோசிப்பதில்லை. ஜேம்ஸ் ஆடம்ஸ் யோசிக்கிறார். ஏன்?
இரண்டு காரணங்கள் இருந்திருக்கும். முதலாவது… அவருடைய குடும்பப் பின்புலம். தாத்தா தொழில் செய்திருக்கிறார். டயர் விற்றிருக்கிறார். கார் பழுது பார்க்கும் நிறுவனம் நடத்தியிருக்கிறார். அப்பாவும் அதே போல் பிறிதொரு பிஸினெஸ் நடத்தியிருக்கிறார். சர்க்கஸில் கீழே பாதுகாப்பு வளையம் இன்றி ஆடுபவர்கள் சாதாரணர்கள். ஆனால், சொந்தமும் பந்தமும் பக்கத்து ஊர்களில் இருப்பதும், அவர்களின் பணம் கொடுக்கும் துணைக்கரமும் கொண்டவர் ஜேம்ஸ்.
இரண்டாவது… மார்கன் ஸ்டான்லி அல்லது கோல்ட்மென் சாக்ஸ் போன்ற மிகப்பெரிய நிறுவனங்கள் இந்த மாதிரி பொய் வாக்குறுதி கொடுத்து செல்லாத பத்திரங்களை விற்று பெரும் பணம் ஈட்டியது. அதன் பிறகு, அந்த வருவாய் வருவதற்குக் காரணமாக இருந்த முகங்களை மாற்றியது. அந்த முகங்களில் ஒருவர் ஜேம்ஸ். புத்திசாலி நிதி வர்த்தகர். நிதியாளுமை தெரிந்தவர். வேலையை விட்டுத் தூக்கும்போது மூன்றாண்டு சம்பளம் கூட கொடுத்து சீட்டைக் கிழித்திருப்பார்கள். சிலர் இந்த பல்லாண்டு கால ஊதியத்தை வைத்துக் கொண்டு புதிய தொழில் தொடங்குவார்கள். ஜேம்ஸும் அது போல் யோசித்து இருப்பார்.
ஆனால், பெரும்பாலான சப்வே உணாகங்களை குஜராத்திகள் நடத்துவதாக அமெரிக்க தேஸிகளுக்கு இடையே பேச்சு உண்டு. இது இன்னும் டிரம்ப் காதிற்கு எட்டியதா என்று தெரியவில்லை. அதே போல் உள்ளூர் காபிக் கடையான ‘டன்கின் டோண்ட்ஸ்’ உடனடி உணவகங்களும் இந்தியர்களே பெரும்பாலும் நடத்துகிறார்கள். இதைப் படித்த வெள்ளை இனவெறியர் எவராவது துப்பாக்கியும் கையுமாக டன்கின் டோனட்ஸுக்குச் சென்று அதன் முதலாளிகளை சுட்டுத் தள்ளாமல் இருப்பாராக என எல்லாம் வல்ல ஃபேஸ்புக்காரை வேண்டிக் கொள்கிறேன்.
இது போன்ற விரைவு உணவகங்களுக்கு வருமானம் ஓரளவு உத்தரவாதம். முதல் கிளையைத் துவக்கி நடத்துவதுதான் சிரமம். அதில் நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொள்ளலாம். அதன் பிறகு இரண்டாவது கிளை, மூன்றாவது கிளை என்று கடகடவென விரிவாக்கலாம். முதல் கிளையில் நாய் போல் உழைத்தவர்களை இரண்டாம் கிளையின் மேலாளர் ஆக்கலாம். அதை, அப்படியே விரிவாக்கி, ஒரு லயத்தில் செலுத்தினால் ஆறேழு கிளைகள் வரை எளிதாகக் கொண்டு சென்று நிம்மதியாக வாழலாம். ஆனால், முதல் கிளை மட்டும் ஒழுங்காக அமையாவிட்டால், முழு கட்டிடமும் விழுந்து விடும்.
முதல் கிளை நல்ல இடத்தில் இருக்க வேண்டும். அங்கே கூட்டம் வர வேண்டும். சுவாரசியமான கூட்டமாக இருக்க வேண்டும். கிம் கர்டாஷியன் போன்றோர் எல்லாம் வாஃபுல் ஹவுஸ் பக்கம் வருவார்கள். அது நமது வாஃபுல் ஹவுஸ் ஆக இருக்க வேண்டும். துப்பாக்கிச் சூடு இருக்கக் கூடாது. சிப்பந்திகள் கர்ம சிரத்தையாக பணி புரிய வேண்டும். யாரும் கடன் சொல்லி ஏமாற்றி ஓடக் கூடாது. சும்மா சாப்பிடுபவர்களை விட இளைஞர் குழாம் வர வேண்டும். கல்லூரி மாணவிகள் வந்தால் மற்றெல்லோரும் தானாக வருவார்கள். எலி, கரப்பான் பூச்சிகள் இல்லாத சுகாதாரம் அமைய வேண்டும். முதல் கோணல் முற்றும் கோணல். அதனால், முதல் கிளையில் உயிரைக் கொடுத்து நடத்த வேண்டும். அதன் பின், தன்னாலேயே கல்லா கட்டலாம்.
இதில் சில எட்டாக்கனிகளும் உண்டு. மெக்டொனால்ட் உணவகம் ஆரம்பிக்க ஐந்து மில்லியன் கேட்பார்கள். அதுவே சிபோட்லே துரித உணவகம் ஆரம்பிக்க வெறும் இரண்டு மில்லியன் போதும். வாஃபுல் ஸ்ட்ரீட் ஆரம்பிக்க 335,000 கேட்கிறார்கள். அவ்வளவு பணத்திற்கு எங்கே போவது? எனவே, பலருக்கு இந்த தொழில் தொடங்குவது எல்லாம் ‘சீச்சீ… அந்தப் பழம் புளிக்கும்’ என்றே ஆகி விடுகிறது.
இந்தத் திரைப்படம் எப்படி முக்கியமானது ஆகிறது:
1. வாழ்ந்துகெட்டவரின் வாழ்க்கையைச் சொல்கிறது. பந்தா பி.எம்.டபிள்யூ. கார். நான்கு படுக்கையறைகளும் அழகிய அறைகலன்களும் கொண்ட வீட்டைக் கொண்டவரின் நிஜவாழ்க்கை இது. எனக்கும் இது போல் நிகழ்ந்து, அமெரிக்காவில் நடுத்தெருவிற்கு எப்பொழுது வேண்டுமானாலும் எவர் வேண்டுமானாலும் வரலாம் என்பதை உணர்த்தும் கதை.
2. மேற்கத்திய உலகு இப்போது கிளார்க் உத்தியோகத்தில் இருந்து ஒப்பந்தக்கார உலகிற்கு மாறிக் கொண்டிருக்கிறது. அதை இவரின் வாழ்க்கையும் சுட்டுகிறது. குமாஸ்தா வாழ்க்கை முடிந்துவிட்டது. இன்ன வேலையை முடிக்க இவ்வளவு டாலர் என்று பேரம் பேசுவோம். அந்த வேலையை செய்து முடித்தால் கையில் காசு. செய்து முடிக்காவிட்டால் பணமும் போச்சு; பேரும் போச்சு. கணித்துறை வல்லுநரோ, பயிலக குருவோ… எவரானாலும் காரியம் முடித்தால் மட்டுமே சோறு பொங்க முடியும்.
3. இந்த வேலை என்னால் செய்ய முடியும்; அந்த வேலையில் வருவாய் வரும் என்பதால் நாம் ஒரு பணியில் இருக்கிறோமா? அல்லது இந்த வேலையில் நயாபைசா லாபம் இல்லாவிட்டால் கூட செய்துகொண்டிருப்போமா? – இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொள்வது அவசியம். ஒரு செயலை ஊதியத்திற்காக செய்தால் சிரத்தை இருக்கலாம்; நேர்த்தி கூட அமைந்து விடலாம்; நமக்கு திருப்தி கிடைக்குமா?
படத்தில் நடித்திருக்கும் மிஷ்கினின் கதாபாத்திரத்தின்மீதும் சரி, ஸ்ரீயின் கதாபாத்திரத்தின் மேலும் சரி, முதல் பாதி முடியும்வரை எந்த அட்டாச்மெண்ட்டும் வரவில்லை. படத்தின் துவக்கத்திலேயே மிஷ்கினின் பாத்திரத்தைப்பற்றி போலீஸ் மூலமாக நமக்குத் தெரிந்துவிடுகிறது. கதையில் ஒரு சிறிய துணுக்காக, ஒரு சமூக விரோதிக்கு சிகிச்சை செய்து போலீஸில் மாட்டிக்கொள்ளும் ஸ்ரீயின் கதை இருந்தாலும், அதனால்கூட அவர் பாத்திரத்தின் மேல் எந்தவித உணர்ச்சிகளும் வரவில்லை.
2. காட்சியாக சொல்லப்பட வேண்டிய கதை எல்லாம், கடைசி ஐந்து நிமிடத்தில் டெலி ப்ராம்ப்டரைப் பார்த்து படிக்கும் மிஷ்கினால் ஓவர் ஆக்ட் செய்யப்படுகிறது. கொடுமைடா சாமீ.
3. ‘முகமூடி’ எடுத்தவரின் அடுத்தகட்ட வீழ்ச்சியாக இந்தப் படத்தைப் பார்க்கலாம்.
4. ஒரு இயக்குனருக்கு தன் போதாமைகளும், அடுத்தவரின் திறமையை சிறப்பாக வெளிக்கொணரும் ஆளுமையும் இருக்கவேண்டும். இத்தனை திறமையான பட்டாளத்தை வைத்துக் கொண்டிருக்கும் மிஷ்கின் தான் மட்டுமே போதும் என்னும் அகங்காரத்தில் இந்தப் படத்தில் சறுக்கியிருக்கிறார்.
5. ரேப் சீன் வைத்தால் அதில் காமம் தலைதூக்கக் கூடாது. எண்பதுகள் வரை வந்த பெரும்பாலான தமிழ்ப்படங்களில் வல்லுறவு காட்சிகள் காதல் காட்சிகள் போல் படமாக்கப் பட்டிருக்கும். அந்த மாதிரி அந்த பிச்சைக்காரியின் லட்சணமான முகம் கூட இந்தப் படத்தில் பாவப்பட வைக்காமல், ‘குழந்தை விவாகம் செய்து கொண்டாளோ?’ என பிற எண்ணங்களில் பார்வையாளரை மூழ்கடிக்கிறது.
6. தயவுசெய்து இதை திரைப்பட விழாக்களிலோ, வெளிநாட்டினருக்கு தமிழ்ப்பட அறிமுகமாகவோ சொல்லிவிட வேண்டாம். டாகேஷி கிட்டானோ, டாரன்டினோ என்றெல்லாம் டகால்டி விட்டு என்ரான் போல் மோசடியாக சீட்டுக்கட்டு ராஜாக்களைக் கொண்ட கோலிவுட் என்று தப்பாகக் கருதி, மொத்த தமிழ் சினிமாவையும் எள்ளி நகையாடிவிடுவார்கள்
7. அரிதான விஷயங்களைப் பாராட்டினால் மட்டுமே நாம் நினைவில் நிற்போம். பலரும் தூற்றும் விஷயங்களை, நாமும் கிண்டலடித்து கீழே தள்ளினால், இலக்கிய விமர்சகராக மாட்டோம். ஜாய்ஸ் குறித்தும் எலியட் குறித்தும் ஹெமிங்வே குறித்தும் அறிய நாம் எட்மண்ட் வில்சனை நாடுகிறோம்; காஃப்காவைக் குறித்து ஆராயவேண்டுமானால் வில்சனைத் தொட மாட்டோம். என்றாலும், நாம் அனுபவித்த நரகத்தை இன்னொருவரும் அனுபவிக்கக்கூடாது என்பதால், இந்தப் படத்தைப் பாராட்டாதீர்கள் என்கிறேன்.
8. போரடிக்கும் படம் என்பதால் மட்டும் விமர்சிக்கவில்லை. வித்தியாசமான காட்சியமைப்புகள் என்பதால் மட்டும் நிலைக்கூடிய படமில்லை. மேஜிக் நிகழவேண்டும். ராஜா இருக்கிறார். பூடகமான சங்கதி இருக்கிறது. ஒளிப்பதிவாளர் அசத்துகிறார். ஆனால், அவியலில் அவியல் சுவைக்க வேண்டும். இது லட்டுவும் பாகற்காயும் பீட்சாவும் போட்ட அவியல். சகிக்கவில்லை.
9. பாடல்கள் இல்லை. ஐட்டம் சாங் இல்லை. பஞ்ச் வசனங்கள் இல்லை. கூடவே படமும் படமாகவில்லை.
10. திரைப்படங்களில் லாஜிக் பார்ப்பவன் நானில்லை. ஆனால், அந்தந்தப் படங்களில் நம்பவியலாத விஷயங்கள் நம்பக்கூடிய முறையில் உருவாக்கப்பட வேண்டும். ’ஜோக்கர்’ படம் தலைப்பில் ஜோக்கடித்தாலும் படு சீரியசாக செல்லும்; ஆனால், இந்தப் படம் முழுக்க காமெடியாக எடுக்கப்பட்டிருக்கிறது. படத்தின் ஆதார முடிச்சான — மிஷ்கின்-ஸ்ரீ சந்திப்பு ஏன் தேவை?
ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
பதிப்பாளர்: பேசாமொழி பதிப்பகம்
எழுதியவர்: திரைப்படத்தின் இயக்குநர் மிஷ்கின்
விலை: ரூ.600.00
சின்ன வயதில் தூர்தர்ஷனில் மட்டும்தான் இந்தப் படங்களைப் பார்த்து இருக்கிறேன்.
சாவித்ரி – எனக்குத் தோன்றிய பிம்பம்: எப்போது பார்த்தாலும் அழுகை; மூக்கு சிந்தல்; ஜோடியாக பொருந்தா கதாபாத்திரங்கள் (miscast)
சாரதா – அய்யஹோ… துலாபாரம்… இப்பொழுது என் பெண்ணிடம் தனுஷ் நடித்த ‘தங்கமகன்’ பார்க்கச் சொன்னாலே, அரண்டு ஓடுகிறாள்.
பானுமதி – bearable; அதுவும் ‘தொட்டு நடிக்கக் கூடாது’ என்னும் பிரஸ்தாபம், பிராண்ட் நன்கு முன் வைக்கப்பட்டதால், கொஞ்சம் போல் intrigue
இந்த சமயத்தில் ஸ்ரீவித்யாவும் அபூர்வ ராகங்களும் நிஜமாகவே கொஞ்சம் ஆசுவாசம் கொடுத்தது. மற்றவர்கள் எல்லாம் சோக சாகரத்தில் மூழ்கடித்து வாழ்க்கையையே எதிர்மறையாக, ஏமாற்றமாக, தோல்விகளாக உணர்த்திய போது, இவரைப் பார்த்தால் புத்துணர்ச்சியும் நம்பிக்கையும் வந்தது. அந்தத் தலைமுறையின் குறியீட்டின் எச்சமாக இந்தக் கட்டுரையைப் பார்க்கிறேன்.
நிறைய பேரை விட்டிருக்கிறேன். இருந்தாலும், டக்கென்று பார்த்தால், இவர்கள் எல்லோருமே மெரில் ஸ்ட்ரீப் போல் உருகி நடிப்பவர்கள். அதாவது, சிரமதசையில் இருக்கும் கதாபாத்திரங்களுக்கு மட்டுமே மதிப்பு. விக்ரம் கண் தெரியாதவராக, சிவாஜி கால் முடியாதவராக நடிப்பது போன்று ஏழை பிச்சைக்காரராக திரையில் தோன்றினால் விருது கிடைக்கும், நல்ல நடிகர் என்று மதிப்பு உயரும். இவர்களுக்கு நடுவில் அச்சுபிச்சுத்தனமாக நடிக்கும் மோகன், துள்ளலாக வந்துபோகும் நதியா போன்றோர செல்லுபடியாவதில்லை.
அஜீத் நடிப்பில் ‘வேதாளம்’ வெளியான தீபாவளி அன்றே கமலின் ‘தூங்காவன’மும் வெளியாகி இருப்பது, காக்டெயில் விற்கும் இடத்தில் மாக்டெயில் அருந்துவது போல் அமைந்திருக்கிறது. விசைப்பலகை இடுக்குகளில் ஒளிந்திருக்க வேண்டிய துகள்கள், விஸ்வரூபமெடுத்து தமிழ் சினிமாவை ’வேதாளம்’ மாதிரி நிரப்பினால், அந்த பாலவனத்தில், கொஞ்சம் போல் துளிர்க்கும் சோலைவனமாக தூங்காவனம் இருக்கிறது.
சந்தானபாரதி இயக்கிய ‘கடமை… கண்ணியம்… கட்டுப்பாடு’ படத்தில் பாடல்கள் கிடையாது. தூங்காவனத்திலும் பாடல்கள் இல்லை. எனினும், இரண்டுமே பாடல்கள் நிறைந்த படங்களை விட நந்தவனம்.
தீவனம்
நிரலியை சி ஷார்ப்பில் எழுதிக் கொடுத்தால், அதே நிரலியை பைத்தான், ரூபி, ஜாவா போன்ற கணிமொழிகளில் எவ்வாறு எழுதுவது என்று செய்து பார்ப்பது கணி நிரலாளர்களுக்கு உவப்பான விஷயம். கொஞ்சம் சவாலான விஷயமும் கூட. கமல் இந்த மாதிரி உருமாற்றி, அதை தமிழ் மசாலா சேர்த்து நமக்கு தீவனம் ஆக்குகிறார்.
பார்வையாளர்களுக்கு விஷயம் வைக்க வேண்டும் என்று குவிமையம் இல்லாமல், சகல இடங்களுக்கும் பயணித்து குழப்பிக் கொள்ளாமல், எளிமையான பயணத்தில், சுருக்கமான நேரத்தில், பல இடங்களுக்கும் பாய்ந்து பறந்து திக்கின்றி திணறாமல், தீவனம் போடுகிற படம்
சஞ்சீவனம்
சோலையில் சஞ்சீவனம் என்பது உணவகம். இங்கே சாப்பாட்டுக் கடையில் பாதி படம் அரங்கேறுகிறது. சமையல் பொருள்களைக் கொண்டு சண்டைக்காட்சி நடக்கிறது.
சஞ்சீவியாக கமல் இந்தப் படத்திலும் உலாவுகிறார். அசல் படமான ஃபிரெஞ்சு படத்தில் இருந்து சற்றே விலகி, பெண்கள் கமலை மொய்க்கிறார்கள். வயிற்றில் குத்துப்பட்டாலும், சாவடி வாங்கினாலும் நிமிர்ந்து மீண்டெழுகிறார்.
சீவனம்
வேலையில் இருப்பது சம்பாத்தியத்திற்கா? பணியில் அமிழ்ந்து கிடப்பது மணவாழ்வை முறிக்குமா? குடும்பத்தை விட அலுவலில் பெயரெடுப்பது முக்கியமா? போன்ற ஜீவனம் சார்ந்த கேள்விகளை எழுப்பும் படம்.
இன்றைய இளைய தலைமுறை போதைக்கும் மதுவிற்கும் கொண்டாட்டத்திற்கும் அடிமையாகி இருப்பதை அமைதியாக சொல்லிச் செல்கிறது.
கவனம்
கூகுள் கொண்டு சகல தகவல்களையும் அறியும் காலத்தில், முன்னாள் மனைவிக்கு தொலைபேசி போட்டு, மருந்துகளையும் ஊசிகளையும் கேட்டறியும் நாயகன் சி.கே.டி, என்ன சி.ஐ.டி.?
மகனின் திறன்பேசியில், எங்கே இருக்கிறான் என்று கண்டறியும் எளிய ஜி.பி.எஸ். கூட இல்லாமல், என்ன ஐஃபோன்?
பிருந்தாவனம்
பூஜாகுமாரும் ஆண்ட்ரியாவும் இல்லாமல் இருப்பதே பிருந்தாவனம். மது ஷாலினி அளவாக நடிக்கிறார். வெள்ளித்திரைக்கு புத்துணர்ச்சி கொடுக்கிறார். மிடுக்கான த்ரிஷா அதனினும் சிறப்பு.
ஃப்ரெஞ்சு அசலில் கொஞ்சம் போல் உங்கள் ஊகத்திற்கு விட்டுச் சென்றிருப்பார்கள். தமிழில் தெள்ளத் தெளிவாக போட்டுடைப்பது, திரையரங்கு வருகையாளரை மட்டம் தட்டும் புவனம்.
யெளவனம்
நேற்று ஓய்வுபெற்ற 61 வயது காவல்துறை அதிகாரி மாதிரி கமல் இல்லாத யெளவனம். முன்னாள் மனைவி ஆஷா ஷரத்தைப் பார்த்தாலும் நாற்பதுகள் போல் தெரியும் யெளவனம். இந்த மாதிரி உடம்பை வைத்துக் கொள்வது தனி உஜ்ஜீவனம்
பாரதியை இன்று படித்தாலும் புத்துயிர் பெறுகிறோம்; மலைக்கள்ளனையும் தூக்கு தூக்கியையும் இன்று பார்த்தாலும் ரசிக்கிறோம். அது போல் பிறமொழிக்காரர்களிடம் போட்டுக் காண்பித்தாலும் காலா காலத்திற்கும் சுவாரசியமாக்கும் சொரூபம் கொண்டிருக்கும் படம்.
தாருகாவனம்
தாருகாவனத்தில் பல முனிவர்கள் வேள்வி செய்து கொண்டும் தவமியற்றியபடியும் வாழ்ந்தார்கள். தங்களது தவத்தின் வலிமையால் முக்தியினை நாடினார்கள். முனிசிரேஷ்டர்களுடைய மோனத்தையும், குருபத்தினிகளது கற்பையும் குலைக்க நாராயணரின் துணையோடு சங்கரன் சதி செய்கிறான். மும்மூர்த்திகளில் இருவரையும் ஒழித்துக் கட்ட அபிசார வேள்வியை நிகழ்த்தினார்கள். திடீரென்று வேள்வியின் அக்னி குண்டத்திலிருந்து மகா பயங்கரமான உருவத்தோடு ஒரு புலி உருமியபடி வெளியே வந்தது. அக்னியிலிருந்து அடுத்தடுத்துத் யானை, மான், பூதங்கள், மழு, முயலகன், கொடிய நாகங்கள் என்று ஏவினார்கள். ஏவப்பட்ட பூதங்கள் சிவனின் பூதகணங்கள் ஆகின. மழு அவருக்கே படைக்கலனாகி விட்டது. முயலகன் சிவனின் காலடியில் சிக்கி நகரவே முடியாதவனானான். நாகங்களுக்கு காளி, காளாங்திரி, யமன், யமதூதன் என்று நான்கு விதமான நச்சுப்பற்கள். அவற்றிலிருந்து விஷத்தைப் பீய்ச்சி அடித்தபடி அவை ஆக்ரோஷமாக சிவன் மீது பாய்ந்தன. ஏற்கெனவே, கருடனுக்கு அஞ்சித் தன்னிடம் சரண் புகுந்த பாம்புகள் அவருக்கு ஆபரணமாக விளங்கி வந்தன. இப்போது வந்த கொடிய நாகங்களையும் தம் கையில் பற்றி ”உம் குலத்தவர் ஏற்கெனவே இங்கே என்னுடன் இருக்கிறார்கள். நீங்களும் அவர்களுடன் கூடி வாழுங்கள்!” என்று கூறி அந்த நாகங்களைத் தமது கரம், திருவடி, திருவரை, திருமார்பு முதலிய இடங்களில் கங்கணம், காலணி, அரைஞாண் போன்ற ஆபரணங்களாக அணிந்து கொண்டார்.
Insomnia என்னும் கேளிக்கை மையமே தாருகாவனம். அங்கே இளைஞர்களும் இளைஞிகளும் களிவெறிப் பொருள் கொண்டு கூத்தாடி போதையின் துணையோடு முக்தியினை நாடினார்கள். அங்கே நிலவும் மயக்கத்தைப் போக்க காவல்துறை உயரதிகாரியான திவாகர் களமிறங்குகிறார். அவரை எதிர்க்க போதைத்தடுப்பு அதிகாரியான த்ரிஷா தோன்றுகிறார். திரிஷாவின் மேலிடமான கிஷோர் வருகிறார். அவர்களை ஆபரணமாகக் கொண்டு எவ்வாறு வில்லன்களை எதிர்கொள்கிறார் என்பதே திரைக்கதை.
உபசீவனம்
சௌந்தர்யலஹிரியையும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தையும் எம்.எஸ். சுப்புலஷ்மியின் குரலுக்காகவும் அதன் மந்திர உச்சாடனத்திற்காகவும் கேட்பவர்கள் உண்டு. அட்சரம் பிசகாமல் சொல்பவர்களும் உண்டு. ஆனால், அர்த்தம் உணர்ந்து, பொருள் புரிந்து, அனுபவித்து வாழ்க்கையில் கடைபிடிப்பவர்கள் எவ்வளவு பேருண்டு? அதே போல், சுவாரசியமான படங்களை பார்ப்போர் நிறைய உண்டு. அதனை தமிழ் நாயகர் கொண்டு, மொழிமாற்றுவோர் கூட நிறைய உணடு. ஆனால், பொருத்தமான சினிமாவாகத் தேர்ந்தெடுத்து, அதன் கடுமையான வழிமுறைகளை தமதாக்கி, தமிழுக்குக் கொணர்வோர் மிகச் சிலரே உண்டு. அதற்கு, கமலின் தூங்காவனம் ஒரு சான்று.
கிரேசி மோகனின் கத்தி வசனமும் கிடைக்கிறது. காவல்துறையின் தகிடுதத்தங்களும் சத்தமின்றி பூடகமாக வெளிப்படுகிறது. விவாகரத்தான வாழ்க்கையில் மகனின் மேல் செலுத்தும் நேசமும் காணக்கிடைக்கிறது.
தான் மட்டும் தனியே எல்லா சட்டகத்திலும் காணக் கிடைத்தால் செல்ஃபி காலத்தில் புளித்துப் போகும் என்றறிந்த கமல், உமா, ஜெகன், பிரகாஷ்ராஜ், கிஷோர் என எல்லோருக்கும் கதாபாத்திரமும் அவர்களுடைய குணச்சித்திரமும் தனித்துவமாகத் தெரியுமாறு அமைத்திருக்கிறார். தானும் வந்துபோகிறார்.
Reclaiming Power Over One’s Own Story: Aminatta Forna on Abdulrazak Gurnah
Remarks From PEN World Voices Festival… twitter.com/i/web/status/1…1 day ago
The Horror Writers Association (HWA) has announced the winners for the latest Bram Stoker Awards
Superior Achievem… twitter.com/i/web/status/1…1 day ago
A Mini-Russia Gets Squeezed by War
Self-declared republic of Transnistria, on the Ukraine border, has been steered… twitter.com/i/web/status/1…1 day ago
Huge Ancient Forest World Discovered 630 Feet Down Sinkhole In China: contains a load of ancient trees & plants tha… twitter.com/i/web/status/1…2 days ago
Woman Hospitalized After Taking CBD With Herbal Supplement for Months
dangerously irregular heartbeat after taking… twitter.com/i/web/status/1…2 days ago
Disparate sources suggest devotion & power, sex and care, hatred & terror. A knack for combining quirky & mundane,… twitter.com/i/web/status/1…2 days ago
Nick Cave Goes Underground
Artist’s mosaic Soundsuits feel more alive than they often do in the silence of museums… twitter.com/i/web/status/1…2 days ago
The Believer, a Beloved Literary Magazine, Goes Home After a Risqué Detour
The magazine, bought by a marketing co… twitter.com/i/web/status/1…2 days ago
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde