Tag Archives: தானியம்

ஆக்கிரமிப்பு – அணில் – அழகு

Squirrel_Eating_Bird_Feeder

வீட்டின் கொல்லைப்புறத்தில் நிறைய மரங்கள். அப்படியே கொஞ்சம் பின்னோக்கி பார்த்தால் நீர்நிலை. அற்ற குளமாக இல்லாததால் அறுநீர்ப் பறவைகள் எக்கச்சக்கம். குயில், வாத்து, வாலாடி என்று கலவையாக என்னுடைய முற்றத்தில் எட்டிப் பார்க்கும். பழுப்பு நிறத்தில் மரத்தோடு மரமாக கலந்திருக்கும் முன்றிலை அடர் சிவப்பிலும் வெளிர் நீலத்திலும் வண்ணமயமாக்கும். எங்கள் இடத்தில் வீடு அமைத்திருப்பதற்கு பரோபகராமாக கொஞ்சமாவது தானியம் இடலாமே என்று கேட்பது போல் கீச்சிடும்.

நானும் காஸ்கோ சென்று இருப்பதற்குள் பெரிய மூட்டையாக பறவை உணவு வாங்கி வந்தேன். அதை நாள்தோறும் இட்டு வந்தேன். இப்பொழுது புதிய விருந்தினர்கள் வந்தார்கள். மொட்டைச் சுவரில் போவோர் வருவோரை வம்புக்கு இழுக்கும் வேலையற்ற தமிழக இளைஞர்கள் போல் அணில்கள் அமர்ந்திருந்தன. மூன்று பேர் திண்ணைப் பரணில் உட்கார்ந்து கொண்டு கிட்ட நெருங்கும் தேன்சிட்டுகளையும் நாகணவாய்களையும் விரட்டி விட்டு, சூரியகாந்தி விதைகளை மொக்கிக் கொண்டிருந்தன.

இந்த அணில்களின் முதுகில் இராமர் போட்ட கோடுகள் இல்லை. சேதுத் திட்டத்திற்கு உதவாததால் கோடுகள் இல்லாத பெரிய இராட்சதர்கள். கிட்டப் போனால் ஓடி விடும். தள்ளிப் போனபின், தீனிக் கலத்தில் குடி கொள்ளும். எனவே, பறவைகளுக்கு… மன்னிக்க அணிற்குஞ்சுகளுக்கு சாப்பாடு போடுவதை நிறுத்தி வைத்தேன்.

அந்தப் பெரிய பை நிறைய பறவை தானியம் அம்போவென்று கார் நிறுத்தும் கொட்டகையில் இறுக்கிக் கட்டப்பட்டு தூங்கிக் கொண்டிருந்தது. பட்சிகளுக்காக நல்லதொரு கலயம் கிடைக்கும்வரை, அணிற்பிள்ளைகள் திருடமுடியாத கலயம் கிடைக்கும்வரை, தானியத்தை அங்கேயே வைத்திருப்பதாக திட்டம்.

நேற்று காரை நிறுத்த கொட்டகைக்குள் நுழையும்போது அணிலை பார்த்த மாதிரி சம்சயம். நடுநிசியில் கண்ணாடி பார்த்தால் ஆவி தெரிவது போல், மனைவியின் கைப்பக்குவத்தில் ருசி தெரிவது போல், நிரலி சரிபார்ப்பவருக்கு பிழை தெரிவது போல், இதுவும் இல்லாத ஒன்று. நம் மனப்பிரமை என ஒதுக்கினேன்.

மனம் ஒப்பவில்லை. தீவிர ஆராய்ந்ததில், மூலத்தையே கண்டுபிடித்து விட்டிருந்தது அணில்கள். ஆதார மூட்டைக்குள்ளேயே சென்று சாப்பிட்டு திரும்ப ஆரம்பித்திருக்கின்றன. கார் கொட்டகை திறக்கும்போது நுழைவது; அதன் பின் இரண்டு காரும் செல்வதற்குள் தப்பிச் செல்வது. முழு தானியங்களும் கிட்டத்தட்ட அம்பேல்.

மனிதனுக்கு ஆறறிவு என்று கண்டுபிடித்த தமிழர், அணிலுக்கு எத்தனை அறிவு என்று அறிந்திருக்கிறார்கள்?

நெல்லுக்கு மோட்டார்சைக்கிள்

ட்விட்டர் நடைக் குறிப்புகள்:

1. மூதுரையில் ஔவையார்:

நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் – தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.

நெல்லுக்கோட்டிய ஸ்கூட்டர் நச்சுப் புகையோடிப்
புல்லுக்கும் ஆங்கே பாய்ஸனாம் – கலி உலகில்
சாருநிவேதிதா ஒருவர் உளறேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் அபானமாகும் வாயு.

2. ஆர்கானிக் பயிர் என்பது நேச்சுரல் எத்தனாலில் இயங்கும் ஸ்கூட்டரில் பரப்பியது.

3. வேலை பார்க்கிறவங்க எல்லாம் கால் சென்டருக்குப் போயிட்டா, ரைஸ் மில்லை கவனிக்க யார் இருப்பார் என்று ‘வெற்றி கொடி கட்டு’ சேரன் படம் எடுப்பாரா?

4. மாடு கட்டிப் போரடித் தால் மாளாது செந்நெல் என்று யானை கட்டி போரடித்ததும் போதாத பாளையக்காரர்கள் பாரம்பரியம் இது.

5. இலவச தொலைக்காட்சி, சல்லிசான அரிசி என்று தமிழர் மழுங்கிப் போய் கலைஞர் டிவி பார்த்துக் காலம் தள்ளுவதன் கோலம்.

6. #TNFishermen எல்லோரும் டுனீசீயா, எகிப்து, தமிழ்நாடு மீனவர் #TNFisherWoman டிவிட்டர் போராட்டம்னு போய்ட்டாங்க #tnfisherman

7. மக்கள் தொலைக்காட்சியின் “மலரும் பூமி” இந்த இரு சக்கர இயந்திர உந்து ஊர்தி புரட்சி குறித்து நிகழ்ச்சி நடத்தும்.

8. முடத்தாமக் கண்ணியார் பாடிய பொருநராற்றுப்படையில் ‘சாலி நெல்லின் சிறை கொள் வேலி ஆயிரம் விளை உட்டாக காவிரி புரக்கும் நாடு கிழவோனே’ – அதாவது ஒரு ஹெக்டேருக்கு 12,800 கிலோ நெல். ஏக்கருக்கு 4,886 கிலோ. இவ்வளவையும் இயற்கை வேளாண் விஞ்ஞான முறையில் பயிரிட்டால் விலைவாசி ஏன் ஏறாது? (உணவுப் பொருளின் புரட்சிதானே டூனிசியாவில் வெடித்தது?)

9. உழைப்பாளிகளை அமர்த்தாத இவர் மீது மருதையன் தலைமையில் மாக்சிஸ்ட்களும் கம்யூனிஸ்ட்களும் உண்ணாநோன்பு போராட்டம் துவங்குகின்றனர்.

10. நேற்றுவரை நதிநீருக்காக, பருவமழைக்காக, உரத்துக்காக, இலவச மின்சாரத்துக்காக, பயிர்க்கடனுக்காக, பயிர்க்காப்பீட்டின் இழப்பீட்டுக்காக, மரபணு மாற்று விதை நிறுவனங்களால் விதைக்காகவும் காத்துக் கிடந்த நமது விவசாயிகள், இனி பெட்ரோலுக்காகவும் டீசலூக்காகவும் காத்துக் கிடக்கிற நிலை உருவாகிறதே!

அவலநிலை