Tag Archives: தமிழ்ப்பதிவுகள்

Tamilmanam

‘தமிழ்மணம்’ காசி உரையாடல்

1. இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்கள் தேவையான அளவுக்கு உள்ளன என்று எண்ணுகிறீர்களா?

எதைத் தேடினாலும் கிடைக்கிறது. எப்படித் தேட வேண்டும்

  • (ஒருங்குறி எழுத்துக்களை அடிப்பது,
  • தூய தமிழ்ப்பதங்கள் x ஒத்த தமிங்கிலம்,
  • ஆங்கிலத்தில் தட்டச்சினால் தமிழில் வரும் முடிவுகள்)

போன்றவற்றில் சிக்கல் இருந்தாலும், தமிழிணையத்தில் இல்லாத தலைப்பு என்பது அரிதாகவே அமைகிறது.

கணினியும் இணையமும் கிடைக்க வசதியுள்ள தமிழர் இன்னும் இவற்றில் அதிகமாகத் தமிழில் புழங்கவேண்டுமானால் என்னவெல்லாம்
செய்யவேண்டும்?

கணினிக் கிடைக்கப் பெற்றவர்களை

  1. அயலகத் தமிழர்,
  2. தமிழ்நாட்டினர்

என்று இரண்டாகப் பிரிக்கலாம். முந்தையவருக்கு இணைய நேரம் அதிகம்.

தமிழகத்தில் இருந்து உபயோகிப்போருக்கு தொலைக்காட்சி, பத்திரிகை தாண்டி கேளிக்கைக்கு செலவிட இணைய நேரம் குறைச்சல்.

இவர்களை மூன்று குழுக்களாக வைத்துக் கொள்ளலாம்.

  1. ஓய்வுபெற்றவர்களுக்கான குழுமங்கள் (mello.in போல்) பிரபலமாக வேண்டும்.
  2. நடுத்தரவயதினர் தட்டுத் தடுமாறி வெப்2.0 நுட்பங்களைப் பிடித்து, வலைப்பதிவு குழாம்களுக்குள் வெற்றிகரமாக நுழைந்து விடுகிறார்கள்.
  3. இளசுகளுக்கு ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவற்றில் அறிமுகம் அதிகம். இவர்கள் வலைப்பதிவுகளுக்குள் இருக்கும் பெருசுகளின் உட்குழுக்கள் பக்கம் தலைவைத்தும் படுப்பதில்லை.

Digital divide போக்க ஊர்ப்புற கிராமங்களுக்கு குறைந்த விலை கணினியும் வலையும் எளிதில் சாத்தியப்ப்பட வேண்டும். நாட்டாமை குடும்பம் தவிர கடைநிலை குடும்பங்களுக்கும் அது, செல்பேசி போல் சென்றடைய வேண்டும். அதில் தமிழ் இடைமுகம், தட்டச்சு போன்ற சமாச்சாரங்கள் தொடக்கம் முதலே அறிமுகமாக வேண்டும். அது மட்டுமே முக்கியம்.

2. தகவல்-நுட்பப் புரட்சியின் முழுப் பயனையும் தமிழர் சமூகம் அனுபவிக்கிறதா? உ.ம். ஊடாடுதல் (மின்னஞ்சல், குறுஞ்செய்தி, மின்னரட்டை போன்றவை தமிழ் மூலமாக); மின்வணிகம் (வங்கி, இணையக்கடை, கட்டணம் செலுத்தல் போன்றவை தமிழில்); அரசாளுமை (வரிவிதிப்பு, அரசாணை, அரசின் அங்கங்களிடம் தமிழில் சேவை பெறுதல்) இதழ்கள் (செய்தி,இலக்கியம் வாசித்தல், வலைப்பதிவு, குறும்பதிவு, போன்ற வெப் 2.0 ஊடகங்கள் தமிழில்).

நான் அஸ்காவும் க்ரௌனிங் க்ளோரியும் வாங்கிய அண்ணாச்சி கடையில் துண்டு சீட்டில் ரசீது கொடுத்தல் வழக்கம். (வணிகம்)

மின் கட்டணத்திற்கு ஆங்கிலம் உபயோகித்த சென்னை வாசம். (அரசாளுமை)

பள்ளியில் ஊடாடியதெல்லாம் கிரிக்கெட்டின் மிட் ஆன், சில்லி பாயின்ட்ஸ்; கல்லூரியில் அரட்டை அடித்தால் க்ரூப் டிஸ்கசனுக்கு உதவும் ஆங்கிலம்.

நல்ல கேள்வி. தவறான ஆளிடம் கேட்கப்பட்டுவிட்டது.

3. தன்னார்வலர்களின் பங்களிப்பும் விக்கிப்பீடியா போன்ற குழுக்களின் பங்களிப்பும் இணையத்தில், கணினியில், தமிழின் பயன்பாடு அதிகரிக்க எந்த அளவுக்கு உதவியுள்ளன? உங்கள் பார்வையில் முக்கியமானவை, மேலும் முன்னெடுத்துச் செல்லவேண்டியவை என எவற்றைக்குறிப்பிடுவீர்கள்?

விஜய்காந்த்துக்கு தொலைபேசி இருக்கலாம். லியாகத் அலி கானிடம் கேட்டாவது என்னுடைய கீழ்க்கண்ட கேள்விகளுக்கு பதில் தந்திருப்பார்.

தமிழகத்தில் எத்தனை பல்கலைக்கழகங்கள் இருக்கு? இந்தியாவின் செம்மொழிக்கு எத்தனை நகரங்களில் துறை இருக்கு? உலகம் முழுக்க எவ்வளவு கல்லூரிகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது? என்றெல்லாம் புள்ளிவிவரம் அடுக்கியிருப்பார்.

அவர்களில் பயிலும் எம்.ஃபில்களும் முதுகலைகளும் முனைவர் பட்டதாரிகளும் தங்கள் ஆய்வை இணையத்தி(லும்) வெளியாகும் peer reviewed journalஇல் சமர்ப்பித்து (பின்னூட்டங்களுக்கும்) பதிலளித்தால் மட்டும் டிகிரி கிடைக்க வைக்கலாம்.

காப்பியடித்து டாக்டரேட் வாங்கும் கனவான்களும், காசு கொடுத்து கரெக்ட் செய்யும் பேராசிரியர்களுக்கு கொடுக்கும் சம்பளத்திற்கு வேலை வாங்க முடியும்.

இந்தியாவில் எங்கு சென்றாலும் மாடு இருக்கும்; அடி பம்பு காற்று வாங்கும்; கணேசர்ருள்பாலிப்பார் என்பதெல்லாம் so 1950கள். செல்பேசிகள் நீக்கமற இரண்டு கைகளிலும் குடியிருக்கும் ஒளிர்காலம் இது. எளிய முறையில், செல்பேசியில் தமிழ் கொண்டு புழங்குவது எங்ஙனம்?

பேசுவதை தானியங்கியாக தமிழில் தட்டச்சி (முடிந்தால் ஆங்கில மொழிபெயர்ப்பும்) மைக்ரோசாஃப்ட் வோர்ட் கோப்பாக சேமிப்பது; ‘தேங்கா மண்டி ராசேந்திரனை வீட்டில கூப்புடு’ என்றால் உடனடியாக அழைப்பது; ‘ப்ரெசில் மிளகா நேத்து என்ன விலை’ என்று கேட்டால் விடை கொடுப்பது — சாத்தியம் ஏராளம்.

4. நாளையே அரசின் தகவல்-நுட்பத்துறைக்கு உங்களைத் தலைமையேற்கச் சொன்னால் மேற்சொன்னவகையிலான தமிழ்ப் பயன்பாட்டு விரிவாக்கத்துக்கான செயல்களாக எவற்றை உடனடியாக மேற்கொள்வீர்கள்?

அ) தமிழக கிராமங்களில் நூலகத்தில் இலவச கணினி மையமும், இணைய வசதியும் கிடைக்க செய்வது. அங்கு வருவோருக்கான தேவைகளை அறிந்து பூர்த்து செய்ய, சிறப்பு பயிற்சி அளிப்பது.

ஆ) ஆங்கில நிரலி ஏதாவது போட்டால் கண்டுபிடிக்கும் ‘கிருமி’ கொண்ட, தமிழில் மட்டும் ஊடாடும் வசதி கொண்ட செல்பேசிக்கு வரிவிலக்கு தருவது.

இ) சிறப்பான முறையில், திறமூல மென்பொருளாக தமிழ் OCR செய்பவருக்கு உரிய மானியத் தொகை தரப்படும் என்னும் தண்டோரா.

5. தமிழ் வலைப்பதிவுகளை பற்றிய உங்கள் பொதுவான கருத்து என்ன? புதிதாக வலைப்பதிக்க வருவோருக்கான யோசனைகளாக எவற்றைக் கூறுவீர்கள்?

தமிழ்ப்பதிவுகள் ஜோராக இருக்கின்றன. எதிர்பார்த்த விதத்தில், அபரிமிதமான வளர்ச்சி அடைந்திருக்கிறது. குறிப்பிட்ட வகையினரே (கல்லூரி முடித்து முப்ப்பத்தைந்து வயதுக்குள்ளான கணினி வல்லுநர்) பெரும்பாலும் நிறைந்திருப்பது காலப்போகில் சமனாகும்.

புதிய பதிவர்களுக்கு சில துப்புகள்:

அ) தமிழ்மணம், தமிலீஷ், திரட்டி, ப்ளாகுட், தமிழ்வெளி போன்ற எந்தத் திரட்டியும் விட வேண்டாம். எல்லாவற்றிலும் இணைந்துவிடுங்கள்.

ஆ) திண்ணை, தமிழோவியம், நிலாச்சாரல், அந்திமழை, சொல்வனம், தமிழ் ஹிந்து, கீற்று, என எல்லா இணைய சஞ்சிகைக்கும் உங்கள் ஆக்கங்களை அனுப்புங்கள். ஒவ்வொன்றுக்கும் எல்லாவற்றையும் அனுப்பாமல், ஒருவருக்கு அனுப்பியதையே இன்னொருத்தருக்கும் மீண்டும் பார்சல் செய்யாமல், அனுப்பிப் பாருங்கள். அவர்கள் அங்கீகரித்தால், உங்கள் எழுத்துக்கு பலம் கூடும்.

இ) குறிச்சொல் (லேபிள் அல்லது tag) நிறைய கொடுங்கள். ஓரிரண்டு பகுப்பு (category) வைத்துக் கொள்ளுங்கள். கவர்ச்சியான தலைப்பை விட பொருத்தமான தலைப்பாக வைக்கவும். தடித்த எழுத்துக்களை ஆங்காங்கே பயன்படுத்தவும். சம்பந்தமுள்ள புகைப்படம் ஒன்றாவது இடம்பெறுமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

கடைசியாக, அவியல், குவியல், மிக்சர் என்று எல்லாவற்றையும் கலந்து கட்டி அடிக்காமல், ஒரு விஷயத்தைக் குறித்து மட்டும் ஒரு பதிவு இடவும். கூகிளுக்கு அதுதான் பிடிக்கும். நான்கு மேட்டரை ஒன்றாக குவிக்காமல், one thing at a time என்று எழுதுவது நிறைய பதிவுகளை, எண்ணிக்கையையும் தரும்.

கட்டாங்கடைசியாக, உங்கள் பதிவு ஒவ்வொன்றிலும், நீங்களே self referenceஆக சுட்டி தரவேண்டும்:

1. பதிவர் டிப்ஸ்

2. புதிதாய் பதிபவர்களுக்கு வழிகாட்டிகள்

6. தமிழ்மணம் வரும் ஆகஸ்ட் 23ஆம் நாள் தன் சேவையின் ஐந்து ஆண்டுகளை நிறைவுசெய்கிறது. இந்த 5 ஆண்டுகளில் தமிழ்மணத்தின் சேவையைப் பற்றிய உங்கள் கருத்துகள் என்ன? வரும் ஆண்டுகளில் தமிழ்மணம் செய்யவேண்டியவை எவை?

ட்விட்டரைக் குறித்து நக்கலடிப்பவர்கள், குறை சொல்லுபவர்கள் எல்லோருமே, ட்விட்டருக்குள் இருந்துகொண்டேதான் அதை செய்து வந்திருக்கிறார்கள். தமிழ்மணமும் அதே போல் அதனை விமர்சித்தவர்களையும், சேறு அப்பினவர்களையும், DDoS செய்தவர்களையும் வைத்துக் கொண்டே இயங்கி வந்திருக்கிறது; இயங்குகிறது; இயங்கும்!

ஈழப்பிரச்சினை குறித்த தகவல்களையும் கட்டுரைகளையும் முன்னிறுத்தியது வேறு எந்த தமிழ் ஊடகமும் செய்யாத விஷயம். அதற்காக சிறப்பு நன்றிகள்.

ஆலோசனை சொல்வது எளிது என்பதை அறிவேன். எனவே, இன்று போல் என்றும் தமிழ்மணம் தொடர்ந்தாலே போதுமானது என்றாலும்…

1) சூடான இடுகைகள் இல்லாத தமிழ்மணம், பாடல் இல்லாத படம் போல் சோபிக்கவில்லை. பாட்டு ஹிட்டானால்தான், படம் ஜெயிக்கும் என்றில்லைதான். இருந்தாலும், ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம். அதிகம் சுட்டப்பட்ட பதிவுகள் மீண்டும் வேண்டும்.

2) அகரவரிசைப்படி அழைக்கும் வகுப்பு போல், நேரப்படி காட்டும் முறை மாற்றியமைக்க வேண்டும். வாசகர் பரிந்துரை பெரிதாக்கப்பட்டு, முகப்பில் இன்னும் பிரதானமாக்கலாம். அந்தக்கால ‘பூங்கா’ போல் தமிழ்மண ஆசிரியர் குழுவினரின் ‘பெட்டக’த் தெரிவுகளும் முன்வைக்கலாம்.

3) சாரு, எஸ் ராமகிருஷ்ணன், பா ராகவன், ஜெயமோகன் என்று பெரிய எழுத்தாளர் கும்பலே இருக்கிறது. இந்த மாதிரி செய்தியோடை வழங்குபவர்களை தமிழ்மணத்தின் ஓரத்திலாவது தொடுப்பு காட்டுவது, காலத்தின் கட்டாயம்.

4) விளம்பரம். என் பதிவுக்கு நான் காசு தந்து 24 மணி நேரம் முகப்பில் வைத்திருக்க தயார் என்றால், அதற்கு திரட்டி இடம் கொடுக்கலாம். புத்தக விளம்பரங்களுக்கு காலச்சுவடு முதல் வார்த்தை போன்ற பத்திரிகைகள் வரை 50% தள்ளுபடி தரும். அந்த மாதிரி, விளம்பரப் பதிவுகளுக்கு ஆடித் தள்ளுபடி கொடுக்கலாம்.

5) ‘அண்மையில் இணைக்கப்பட்ட பதிவுகள்’, ‘நீங்கள் உறங்கியபோது எழுதப்பட்ட பதிவுகள்’, ‘நேற்று சூடான இடுகைகள்’ என்றெல்லாம் கலந்துகட்டி ஆங்காங்கே தூவப்பட்டோ, தனியாக tabஇடப் பட்டோ வந்தால் சுவாரசியம் அதிகரிக்கும். இப்பொழுது செத்தவன் கையில் வெத்தலை பாக்காக, ரொம்ப சைவமாக இருக்கிறது.

இளையராஜா போல் ‘உலகம் இப்போ எங்கோ போவுது; எனக்கு இந்த சொந்த நாடு போதும்!’ என்றில்லாமல், திக்கெட்டும் சென்று பன்மொழிகளிலும் கால் பதித்து, மேன்மேலும் உயரும். அடிச்சு தூள் கெளப்புங்க!

ஈழப் படுகொலை: முத்துக்குமார் பத்திரிகை ஊழியர் தீக்குளித்து தற்கொலை: பதிவுத் தொகுப்பு

-/பெயரிலி.
அவர்களின் நல்லெண்ணத்துக்கு மதிப்பளித்தாலும், தம்மைத்தாமே கொளுத்திக்கொள்வது பயங்கரமான மடமைத்தனம்.

தம்மைத்தாமே கொன்று கொல்வது ஒரு பரபரப்பை ஏற்படுத்தும். அதற்குப் பின்னால், எல்லாப்பரபரப்பும் மடிந்தபின்னால், சார்ந்திருக்கும் குடும்பத்தினை ஒரு நாயும் அணுகிப் பார்க்காது.

ஈழத்திலே எத்தனையோ இவர்களின் வயதினை ஒத்தவர்கள் உயிர்வாழ இன்னொரு வழிமுறை கிட்டாதா என்று எறிகணைவீச்சிலே செத்துப்போக, இத்தனை வழிமுறைகளிருக்கும் இவர்கள் இப்படியாக இங்கே செத்துப்போவது அநியாயம்.

தமிழகத்திலே கொளுத்திக்கொள்ளவேண்டியவர்களும் முத்துக்குமாரர்களல்ல; கொளுத்திக்கொல்லவேண்டியவர்களும் முத்துக்குமாரர்களல்ல.

நடைவண்டி: ‍‍இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக‌ இன்னொரு இளைஞர் தீக்குளிப்பு.: ஆழியூரான்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே பள்ளப்பட்டியைச் சேர்ந்த ரவி என்ற 30 வயது கூலித் தொழிலாளி இன்று காலை இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக தீக்குளித்துள்ளார். அவர் விடுதலை சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்தவர் என்றும், தமிழர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்தவர் என்றும் இருவிதமாகவும் சொல்லப்படுகின்றன.


தீக்குளிக்கும் முன்னர் முத்துகுமாரின் இறுதி அறிக்கை!
வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது.
:::
பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே… உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம்.
:::
ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை…
அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே…


நர்சிம்
என்ன எழுதுவது?
நெகிழ்ச்சியாக இருக்கிறது என்று எழுதினால் நான் கோழை.. ஏனெனில் நான் நெகிழும் நிகழ்வில் உடன்கட்டை ஏறியிருக்க வேண்டும்
மகிழ்ச்சியாக உணர்கிறேன் என்றால்.. நான் ஒரு சாடிஸ்ட்.. உன் முடிவில் என்ன மகிழ்ச்சி?
:::
14 பக்க கடிதம் எழுதும் அளவு அவகாசம் இருந்த உனக்கு ஒரு நிமிடம் சிந்திக்க கிடைக்காததை எண்ணித்தான் வருத்தமாக இருக்கிறது.
யார் யாது சொன்னாலும் இது வீரம் அல்ல முத்துக்குமார்.
:::
உன் மரணச்செய்திகள் இன்னும் 3 நாட்களுக்கு உன் உடலை எரித்த தீயை விட பலமடங்கு எரியும்..அதற்கு பிறகு உன் அஸ்தியை போல இந்த நிகழ்வும் கரைந்து மறைந்து மறந்து போகும். என்ன பலன்?
யாவரும் கேளிர்!!…


இட்லிவடை
இவ்வளவு வாய்கிழிய பேசும் தமிழக தலைவர்கள் திருமங்கலம் இடைத்தேர்தலில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு பற்றி ஏன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை ?
:::
இலங்கையில் விடுதலைப்புலிகள் வீழ்ச்சி அடைந்தால் தான் இவர்களுக்கு ஈழ தமிழர்கள் மீது பரிவு ஏற்படுமா ? இரண்டு வருஷம் முன்பு எங்கே போனது இந்த பாசம் ?

நடிகர் சத்யராஜ், இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, போன்றவர்கள் செங்கல்பட்டு மணவர்களின் உண்ணாவிரத பந்தலில் மாணவர்களை உசுப்பிவிடுகிறார்கள். ஏன் இவர் பையன் “ஸ்டுடண்ட் நம்பர் ஒன்” சிபி இதில் கலந்துக்கொள்ள கூடாது ?
முத்துக்குமரன் தீக்குளிக்க யார் காரணம்?


உண்மைத் தமிழன்
“செத்தாவது தொலைவோம்.. அப்போதாவது இந்தப் பிரச்சினை விஸ்வரூபமெடுக்கிறதா என்று பார்ப்போம்..” என்று அவர் நினைத்து அதனையே செயல்படுத்தியிருக்கிறார்.
:::
இதில் அசிங்கப்படுத்தும்விதமாக சரத்குமார் ஏதோ ஒரு கல்யாண வீட்டில் கையெடுத்துக் கும்பிடுவதைப் போன்ற போஸில் ஒரு தட்டியை அவரது கட்சிக்காரர்கள் வைத்து கொடுமைப்படுத்தியிருக்கிறார்கள்.
:::
அஞ்சலி செலுத்த வந்தவர்கள் அனைவருமே அந்த இடத்தில் அங்கிருப்பவர்களிடம் “முத்துக்குமார் செய்தது சரியானது அல்ல.” என்று சொன்னால் திரும்பி உயிருடன் போவார்களா என்பது சந்தேகமே. அந்த அளவுக்கு கூடியிருக்கும் இளையோர் பட்டாளம் கொதிப்புடன் காட்சியளிக்கிறது.
:::
மதியம்வரைக்கும் இது தமிழ் உணர்வாளர்களுக்கான போராட்டமாக சென்று கொண்டிருந்தது. மதியத்திற்குப் பிறகு முழுக்க, முழுக்க அரசியலாக மாறிவிட்டது. மாலையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவுக் கூட்டமாக மாறிவிட்டது. மாலையில் வைகோ தனது பேச்சை முடித்தபோது “பிரபாகரன் வாழ்க..” என்று முழுக்கமிட..
:::
ஜெயா டிவி செய்திகளில் மதியம்வரை முதல் விளம்பரம் முடிந்து அடுத்த segment-ல் முத்துக்குமார் விஷயத்தைச் சொன்னார்கள். மதியத்திற்கு மேல் சட்டமன்ற உறுப்பினர் பாபு தாக்கப்பட்ட சம்பவத்திற்குப் பின்பு இது ஒன்றையே திரும்பத் திரும்ப இப்போதுவரையிலும் காட்டி வருகிறார்கள்.

மதுரையில் தங்களது அலுவலகம் தாக்கப்பட்டபோது அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு ரவுடி பட்டம் சூட்டி பரபரப்பை ஏற்படுத்திய சன் டிவி போனால் போகிறதென்று நினைத்து பத்தோடு பதினோறாவது செய்தியாக இதனைச் சொன்னார்கள்.

கலைஞர் டிவியில் நேற்றே ஒரு கொடுமை நடந்தது. பத்திரிகையாளர் என்ற செய்தியைக்கூட போடாமல் “ஈழப் பிரச்சினைக்காக சென்னையில் ஒருவர் தீக்குளிப்பு..” என்று ஒரு வரி செய்தியை மட்டுமே ஓடவிட்டார்கள். பத்திரிகையாளர் என்பதையும், ஈழப் பிரச்சினைக்காக என்பதையும் செய்திகளில் அதிகம் இடம் பெறாமல் கவனமாகப் பார்த்துக் கொண்டார்கள் இதன் செய்திப் பிரிவு ஆசிரியர்கள்.

மக்கள் டிவியில் ராமதாஸ் மாலை போடுவதை மட்டுமே திரும்பத் திரும்ப காட்டி அதனை சாதாரணமான ஒரு அஞ்சலி செய்தியாக்கி தன்னைக் காப்பாற்றிக் கொண்டுவிட்டார்.
முத்துக்குமார் எதிர்பார்த்தது நடக்கிறதா..?


கொழுவி
எத்தனை ஈழத் தமிழருக்கு 95 இல் யாழ்பாண இடப்பெயர்வின் போது தீக்குளித்து மாண்ட தமிழக உறவின் பெயர் தெரியும்?
முத்துகுமரன்கள் வேண்டாம்


superlinks
த‌ற்கொலைகள் செய்துகொள்வது கோழைத்தனமான முடிவா ?
ஈழ‌த்தில் இந்திய‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ அர‌சு ந‌ட‌த்தும் இன‌ப்ப‌டுகொலை போர்


அசுரன்:
“என்னைவிட புத்திசாலியான குழந்தைகள், சிறுவர்கள், வாலிபர்கள், பெண்கள் அனைவரும் இலங்கையில் கொல்லப்படுகிறார்கள். போர் முனையில் சிக்கித் தவிக்கிறார்கள். அவர்களை காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்திதான் நான் தீக்குளித்தேன்” என முத்துக்குமரன் தெரிவித்தார்.
நக்கீரன்: உயிரை கொடுத்து உணர்வை வளர்த்தாய், நீ இட்ட தீ எரிந்து சமைக்கும் முத்துக்குமரா!!


நாக.இளங்கோவன்
வெறுமனே, “எனக்கு இதில் உடன்பாடு இல்லை, நான் தற்கொலையை வெறுக்கிறேன் – இது கோழைத்தனம்…” என்றெல்லாம் நினைப்பதை விட்டு விட்டு, அவன் உணர்வினைப் போற்றவேண்டும். அதனை மதிக்க வேண்டும். நாமும் உணர்வு கொள்ள வேண்டும். அதுவே அந்த ஆன்மாவுக்கு நாம் செய்ய வேண்டிய மரியாதை.
நயனம் – nayanam: முத்துக்குமரனின் தீக்குளிப்பும் சில கருத்துகளும்!


வினவு
வேலைக்காக தட்டச்சு செய்து வாழும் முத்துக்குமாரின் கைகள் தனது 2000 வார்த்தைகள் அடங்கிய மரண சாசனத்தை ஒரு அரசியல்
கட்டுரையாக நிதானம் தவறாமல் அடித்திருக்கிறது. முத்துக்குமாருக்கு பல தலைவர்கள் அஞ்சலி செலுத்தியிருந்தாலும் அவர் இந்த தலைவர்களின் மோசடி நாடகத்தை புரிந்தே எழுதுகிறார். குறிப்பாக தி.மு.கவின் உணர்ச்சிப் பசப்பல்கள் வடிவேலு காமடியைவிட கீழாக இருப்பதாக கேலி செய்கிறார்
ஈழமும் முத்துக்குமாரின் தியாகமும் – நமது கடமை என்ன?


வினவு
முத்துக்குமார் எனும் வீரனின் உயிரைத் துறக்கத் துணிந்த தியாகம் கொழும்பில் இந்திய- இலங்கை கிரிக்கெட் ஆட்டத்தை ரசிக்கும் அற்பங்களின் இழிவை எள்ளி நகையாடட்டும். முத்துக்குமார் எனும் இளைஞனின் தியாகம் ஈழத்தில் கொத்துக் கொத்தாய் செத்து விழும் ஈழத்தமிழனின் பிணங்களைக் கண்டு உவகை கொள்ளும் சுப்பிரமணிய சுவாமி, ஜெயலலிதா, இந்து ராம், தமிழக காங்கிரசு நரிகள் முதலான ஒநாய்களின் வெறியை தமிழக மக்கள் அறுப்பதற்கு உதவட்டும். முத்துக்குமார் எனும் அந்தத் தொழிலாளியின் மரணம் புலம்பெயர்ந்த நாடுகளில் வில்லு படத்தை ரசித்துக் கொண்டிருக்கும் ஈழத்தமிழனின் மரத்துப் போன சுரணையை மீட்டுக் கொண்டு வரட்டும். முத்துக்குமாரின் தீக்குளிப்பு பதிவுலகில் அக்கப்போரையும், அரட்டையையும், வாடிக்கையாகக் கொண்டிருக்கும் சில பதிவர்களுக்கு சமூக அக்கறை என்றால் என்ன என்பதைக் கற்றுக் கொடுக்கட்டும். முத்துக்குமார் எனும் அந்த வார்த்தை இதுவரை ஈழத்திற்காக இது வரை ஒரு துரும்பையும் எடுத்துப் போடாதவர்களின் மனச்சாட்சியை கிளறி எழுப்பட்டும்.
ஈழம்: முத்துக்குமாரை கொன்ற தீ சுரணையற்ற மனங்களை சுடட்டும்!


வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன்
குடியரசு தினத்தன்று, இந்திய அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டம் என்பதால் பரபரப்புடன் வந்திருந்த காவல்துறையினர், தோழர் கோவனின் இனஉணர்வுமிகுந்த, கணீரென்ற பாடல்களுக்கு மெய்மறந்து நின்றதைக் காணமுடிந்தது.
அங்கூ…. அங்கூ…: ஈழத்திற்காக ஓர் ஆர்ப்பாட்டம்…


பி.இரயாகரன்
புலிப்பாசிசம் எப்படி தனிநபர் பயங்கரவாதத்தை அடிப்படையாக கொண்டு, சமூகத்தை தனக்கு எதிராக நிறுத்தி சீரழிந்து அரசியல் ரீதியாக தற்கொலை செய்கின்றதோ, அப்படித்தான் தனிநபர் தற்கொலையும்;. இந்த வகையில் முத்துக்குமாரனின் தற்கொலையும், புலியிச அரசியல் எல்லைக்கு உட்பட்டதுடன், அதுஎதான் வழிகாட்டியுள்ளது. மக்கள் விடுதலைக்கு வழிகாட்டாத புலிப்போராட்டமோ, தற்கொலையை தேர்ந்தெடுத்தது. அதையே தன் தோல்வியிலும் மற்றவர்களுக்கும் வழிகாட்டுகின்றது.

சமூகத்தின் மீது நம்பிக்கை இழந்து, அவர்களைச் சார்ந்து போராட முடியாது போன நிலையில் தான், புலியிசம் மனித அவலத்தை தன் அரசியலாக உற்பத்தி செய்கின்றது.
முத்துக்குமாரன் தற்கொலையும், தனிநபர் பயங்கரவாதமும்


கலகம் / தமிழ் அரங்கம்
உண்ணாவிரதங்களும் ஆர்ப்பாட்டங்களும் தொடர்கின்றன, இவற்றுக்கு சளைக்காமல் திரையரங்குகளில் படங்களோ வெற்றிகளை குவித்து ஓடிக்கொண்டிருக்கின்றன. டாஸ்மாக்கில் கூட்டம் அலை மோதுகிறது,மெரினாவில் சுற்றிபார்க்க வருபவர்களும், தீம் பார்க்கில் கூத்தடிக்க போவோரின் எண்ணிக்கையும் குறையவில்லை. தங்க கடற்கரையில் சிலு சிலு காத்து வாங்க கூட்டமோ முண்டியடிக்கிறது.
சுடாத நெருப்பும்,சுடுகிற கண்ணீரும்


வாசு
நிஜமாகவே இலங்கை தமிழருக்காக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது பணம் கொடுத்து அரசியல் கட்சிகள் எதாவது இதை செய்ய சொன்னதா என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் முத்துக்குமார் எடுத்த முடிவு பைத்தியக்காரத்தனமானது.
Our Thoughts: உயிர் இத்தனை மலிவா?


சக்கடத்தார் சக்(ங்)கடத்தார்
எங்கட பாசத்திற்குரிய உறவுகளே! உங்கள் உள்ளத்தில் இருக்கும் ஆதரவு எங்களுக்கு நன்றாகத் தெரியும். உங்கள் ஆட்சியாளர்கள் எலும்புத் துண்டுக்காக வாலாட்டுவதற்கு நீங்கள் ஏன் இப்படியான வழியில் உங்கள் உயிரை மாய்க்க வேண்டும்?? உங்கள் ஆதரவை, உங்கள் உணர்வைப் புரிந்து கொண்டவராய்த் தானே நாங்கள் இருக்கின்றோம்.. பிறகு ஏன் உறவுகளே இப்படியான வழி முறைகளைக் கைக் கொள்ள வேண்டும்?? இனிமேல் இப்படியான உயிரை மாய்க்கின்ற வேலைகளில் ஈடுபட வேண்டாம் எம் அன்புக்குரிய உறவுகளே??
கிழவனின் கிறுக்கல்கள்…: தீ கொழுத்தத் தணல் கொடுக்கும் நாட்டில் தீக் குளிப்பா???


சுபானு
நாள்தோறும் வருகின்ற வன்னிச் செய்திகளின் கனதி இங்கே மனங்களில் உறுத்தலைக் கூட்டிக் கொண்டிருக்கின்றது. அதைவிடவும் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கம் இருக்கின்றதே அது அதைவிடக் கொடுமை. ஒரு இரும்புக் கூட்டுக்குள் விலங்கிடப்பட்டு உணர்வுகளைக் கூட சுதந்திரமாக வெளியிடக் கூட முடியாத மனித மனங்களைக் கொண்டு வாழ வேண்டிய கட்டாயம்.

அதைவிட வருத்தம் என்னவென்றால் எனக்கேன் இந்த வேண்டாப் பொல்லாப்பு என்று என் பல்கலைக்கழக நண்பர்கள் சிலபேர் மனம் விட்டுக் கதைக்கூட பயப்பட்டு ஓடுகின்றார்களே அவர்களை என்னவென்று சொல்வது. வெறுமனே நண்பர் வட்டாரங்களுக்கிடையில் தமது வீரவசனம் பேசிக்கொண்டும், சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் காதல் கதைகளில் தம்மை ஈடுபடுத்திக் கதைத்துக் கொண்டும், நாம் உண்டு எம் வேலையுண்டு என்னும் என இருக்கும் நாம் எங்கே, ஈழத்தமிழர்க்காக தன் இன்னுயிரை தமிழர்க்காக அர்ப்பணித்த அந்த முத்துக்குமார் எனும் இளைஞர் எங்கே.

சின்னத் தீச் சுடர் ஒன்று கையில் பட்டாலே வலியில் துடித்துப் போய்விடுவோம். ஆனால் முத்துக்குமார் தன் உடலையே மண்ணெண்னையூற்றித் ஈழத் தழிழர்களுக்காக தீக்கிரையாக்கினான்
ஊஞ்சல் – Unchal: கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்


யுவகிருஷ்ணா
கடந்த வாரம் பெண்ணே நீ அலுவலகத்துக்கு சென்றபோது கூட முத்துக்குமாரை சந்திக்க நேர்ந்தது. அவர் கூகிளில் தேடிப்பார்க்கும் விஷயங்கள் வித்தியாசமானதாக இருக்கும். நான் சென்றபோது..
மடிப்பாக்கம் லக்கிலுக்: ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு


Stop the Vanni Genocide / படுகொலைகளை நிறுத்து
எனது பெயர் முத்துக்குமார், எனது சொந்த ஊர் திருச்செந்தூர் அருகில் உள்ள ஆத்தூர் கொழுவை நல்லூர் ஆகும். எனது தந்தை தாம்பரத்தில் பழைய இரும்புக்கடை வைத்துள்ளார். எனக்கும் அவருக்கும் பேச்சுவார்த்தை கிடையாது.
முத்துக்குமாருக்கு அஞ்சலிகள்


மணிகண்டன்
முத்துகுமரனின் இந்த செயல் அசாதாரணமானது. மக்களின் மெத்தனபோக்கை சற்றே மாற்றும் அளவிற்கு சக்தி வாய்ந்தது. இந்த சூழ்நிலையில் அவரின் மையக்கருத்தான “ஈழ மக்களின் துயர் துடைப்போம்” என்பதே முன்னிறுத்த படவேண்டும். அவரது முழு அறிக்கை தமிழகத்தில் உள்ள ஒருமித்த கருத்துள்ள கட்சிகளையும் ஒன்று சேரவிடாது. முத்துகுமரன் உணர்ச்சி கொந்தளிப்பில் எழுதப்பட்ட / பேசப்பட்ட கருத்தை எல்லாம் நம்பிய நல்ல மனிதர்.

பான் கி மூன் சீனர் என்றும், ராஜிவ் காந்தியின் கொலை இன்டெர்போல் விசாரணைக்கு செல்ல வேண்டும் என்று அவர் கூறிய கருத்தை முன்னிறுத்த வேண்டிய அவசியம் இல்லை.


தமிழ் சசி / Tamil SASI

தீக்குளிப்பு போன்றவற்றை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தமிழகத்தில் இது போன்ற செயல்களுக்கு எந்த அர்த்தமும் இல்லை. இன்று பேசி விட்டு நாளை எல்லோரும் அவரவர் வேலைகளை பார்க்க சென்று விடுவார்கள். ஆனால் “நீண்ட” துன்பத்தில் சிக்க போவது அந்த இளைஞரை நம்பி இருக்கும் குடும்பம் தான்.

இத்தகைய போராட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டும்

இனி பல முத்துகுமரன்கள் உருவாகுவார்கள் போன்ற அரசியல்வாதிகளின் பேச்சு பொறுப்பில்லதது. ஒரு முத்துகுமார் போதும்.

ஹிந்தி திணிப்பிற்காக இது போன்று பல இளைஞர்கள் தீக்குளித்த சாம்பலில் இருந்து தான் திமுக ஆட்சியை பிடித்தது. அப்படி ஆட்சியை பிடித்த திமுகவின் இன்றைய தலைவர் திருக்குவளை முத்துவேல் கருணாநிதி தன்னுடைய வாரிசுகளை தான் ஆட்சியில் அமர்த்த முயலுகிறார். நடுவண் அரசில் அவர் கட்சியின் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தமிழக நெடுஞ்சாலைகளில் ஹிந்தி எழுத்துக்களை நிறுவிய பொழுது அதனை அவரால் தடுக்க முடியாமல் போனது. இது தான் வரலாற்று நிகழ்வு. இதனை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தீக்குளிப்பு போன்ற அர்த்தமற்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.


முத்து தமிழினி
கருணாநிதி இலங்கை பிரச்சினையினால் ஆட்சியை இழந்ததே இல்லை என்று லேட்டஸ்ட்டாக வரும் தகவல்கள் நல்ல காமெடி.1989 ஆட்சி எதனால் போச்சு என்று யாராவது சொன்னால் தேவலை.எனக்கு தெரிந்த அரைகுறை அரசியலும் மறந்து விட்டது.

நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை. இருக்கவே இருக்கார் கலைஞர் என்று நாமெல்லாம் அவரை கும்முவதாக சில காலம் முன்பு சொல்லியிருந்தேன்.அதே தான் இப்பவும். கலைஞர் ராஜினாமா செய்தால் ஈழம் மலருமா? கருணாநிதியும் இதை நாசூக்காக கேட்டார். யாரும் கண்டுக்கலை.
ஒரு தமிழனின் பார்வை:ஈழ பிரச்சினை – கருணாநிதியை கும்முவது தீர்வாகாது


வெற்றி

அது தெற்காசிய பேட்டை தாதா என்ற கோதாவில் இந்தியா எடுத்துள்ள நிலை. எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் இதுதான் நடக்கும்

முத்து, நீங்கள் மேற்கூறியுள்ள கருத்துடன் எனக்கு உடன்பாடில்லை. காரணம், பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சியில் இருந்த போது காங்கிரசுக் கட்சி போல கண்மூடித்தனமாக தமிழின அழிப்புக்குத் துணை போகவில்லை.

2000ம் ஆண்டில் நோர்வே மூலம் முன்னெடுக்கப்பட்ட சமாதான முயற்சிகளில் பாரதிய ஜனாதாக் கட்சி மறைமுகமாக பெரும் பங்காற்றி இருந்தது என நான் அறிந்தேன்.

அதுமட்டுமல்ல, அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் ஈழ விடயத்தில் தமிழக மக்களினதும் தமிழகத் தலைவர்களினதும் கருத்துக்கும் உணர்வுகளுக்கும் ஓரளவுக்கேனும் மதிப்பளித்துச் செயற்பட்டார்.

பா.ஜ.க தனித் தமிழீழத்தை ஆதரிக்கவில்லையெனினும், ஈழத்தமிழர்களின் சிக்கல் பேச்சுவார்த்தை மூலம் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வை நோக்கியே இருந்தது.

ஆனால் காங்கிரசுக் கட்சி, தமிழின அழிப்புக்கு சிங்கள அரசுக்கு உதவியளித்து வருகிறது.


We The People

நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை. இருக்கவே இருக்கார் கலைஞர் என்று நாமெல்லாம் அவரை கும்முவதாக சில காலம் முன்பு சொல்லியிருந்தேன்.அதே தான் இப்பவும். கலைஞர் ராஜினாமா செய்தால் ஈழம் மலருமா? கருணாநிதியும் இதை நாசூக்காக கேட்டார்.யாரும் கண்டுக்கலை.

அப்புறம் எதுக்கு உண்ணாவிரதம், மனிதசங்கிலி, எம்.பிக்கள் ராஜினாமா என்று டெய்லி நாடகம் போட்டார் என்று அவரிடமோ! இல்லை நீங்களாவோ சொன்னால் தேவலை??!!

1989 தி.மு.க ஆட்சி போனதுக்கு காரணம் ஜெ-ராஜீவ் கூட்டணியே தான் அது தான் அரசியல், நீங்க சொல்லறத பார்த்தா 1980 எம்.ஜி.ஆர் ஆட்சி கலைப்பு ஈழப்பிரச்சனைக்காக என்று சொல்லுவீங்க போல… என்னங்க உங்கள ஒரு அரசியல் புலின்னு நினைச்சா, இப்படி காமெடி பண்ணறீங்க!!?


ராஜ நடராஜன்
கருணா, அனந்தசங்கரி, பிள்ளையான் போன்றவர்கள் இடம் மாறியும் கூட உங்களை புதுப்பித்துக் காட்டும் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் நிகழ்வுகளை நீங்கள் உருவாக்காததே தமிழக தமிழர்களின் நம்பிக்கையின்மைக்கான காரணமும், இருப்பதை உறுதியாகப் பற்றிக் கொண்டாவது சுய கவுரவத்துடன் வாழலாம் என்ற நம்பிக்கைதான் ஈழத்தமிழனுக்கு இத்தனை அவலங்களுக்கும் மத்தியிலும் இன்னும் மக்களை விடுதலைப்புலிகளின் பக்கம் இழுக்கிறதெனலாம்.

இலங்கை அரசு புலம் பெயர்ந்த தமிழனை மீண்டும் சம உரிமையோடு அணைத்துக்கொள்வதும், அல்லது இரண்டாம்தரக் குடிமகனாக வரவேற்பதும்,அல்லது அகதியாக உலகம் முழுவதும் ஊர்சுற்றவிடுவதும் போன்ற முக்கியமான நிகழ்வுகள் எதிர்காலத்தில் காத்துக் கிடக்கின்றன.மண்வாசனை காரணமாகவோ இயலாமையினாலேயோ தன் மண்ணை விட்டு நகராத உயிரோடிக்கும் உண்மை தமிழர்களின் எதிர்காலம் நிலைக்கவேண்டும்.
பார்வையில்: தமிழகம்,ஈழம், இலங்கை-ஓர் பார்வை


பத்ரி சேஷாத்ரி
விடுதலைப் புலிகளை இலங்கை ராணுவத்தால் அழித்தொழிக்க முடியும் என்று நான் நம்பவில்லை. அப்படியே அது நடந்தாலும், அதையொட்டி, ராஜபக்‌ஷேவும் இலங்கை அரசும் தமிழர்களுக்கு எதையும் அள்ளிக்கொடுத்துவிடப் போவதில்லை. தமிழர்களின் நிலை இப்போது இருப்பதைவிட மிக மோசமாகத்தான் போகும்.

விடுதலைப் புலிகள் அமைப்பால் இலங்கையைத் துண்டாக்கி, தனி ஈழத்தைப் பெறுவது சாத்தியம் என்றும் எனக்குத் தோன்றவில்லை.
எண்ணங்கள்: இலங்கைப் பிரச்னையும் தீக்குளித்தலும்


யட்சன்
தமிழுணர்வாளர்களின் வெறும் வாய்க்கு அவலாய் போனதை தவிர அந்த இளைஞனால் எதை சாதிக்கமுடிந்ததென தெரியவில்லை. இயலாமையின் உச்சத்தில் கவன ஈர்ப்பாய் செய்ததை தியாகமென சொல்வதை காட்டிலும் தற்கொலையென்றே வரையறுக்கலாம்.
:::
விடுதலைப்புலிகளின் செயல்களையெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு நியாயப்படுத்தும் போக்கினை யார் துவங்கினார்களென தெரியவில்லை.
:::
விமர்சனங்களை தாங்கிக்கொள்ளும் பக்குவமில்லாதவர்களின் எதிர்வினைக்கு பயந்து முப்பது வருடங்களுக்கு மேலாய் புனிதபதாகையினை புலிகளுக்கு தந்த என் தமிழினமும் குற்றவாளிதான்.
முட்டாள் குமரனும் சில முழு பூசனிக்காய்களும்….


மாலன்
இந்த நெருப்பை மீண்டும் ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கி அது இன்னும் பல தற்கொலைகளுக்கு இட்டுச் செல்லக் கூடாதே என்பதுதான். மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏற்பதாக வெளியான அறிவிப்பை அடுத்து ராஜீவ் கோஸ்வாமி தீக்குளித்த போது ஊடகங்கள் அதைப் பற்றி எழுதி விசிறிவிட விளம்பர வெளிச்சத்திற்கு ஆசைப்பட்டு 18லிருந்து 24 வயதுள்ள 159 இளைஞர்கள் தீக்குளித்தார்கள்.(அன்று தொலைகாட்சி இந்தளவிற்கு பரவியிருக்கவில்லை, கடவுளுக்கு நன்றி )
:::
விடுதலைப் புலிகள், சிங்கள அரசு இரண்டுமே தங்களது அதிகார எல்லைகளை விரிவுபடுத்திக் கொள்ள, விரிவுபடுத்திக் கொண்ட எல்லைகளைத் தக்க வைத்துக் கொள்ள மோதுகின்றன. இதற்கான வழி போர் என அவை தேர்ந்தெடுத்திருக்கின்றன. கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்று வரும் போரில் இந்த இரண்டு தரப்புமே நிரந்தரமான வெற்றிகளைப் பெற்றதில்லை என்று அறிந்தும் அவை இந்த வழியைத் தேர்ந்தெடுத்திருக்கின்றன.
:::
இலங்கைத் தமிழர்கள் அதிகாரம் பெற வேண்டும் என்பதுதான் அவர்களது இலட்சியமாக இருந்திருக்குமானால், அவர்கள் ராஜீவ் – ஜெயவர்த்தன ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டிருப்பார்கள். (அது உறுதியளித்த மாநிலக் கவுன்சில்களின் அதிகாரத்தைப் பின், இந்தப் 18 ஆண்டுகளில், மாநில சுயாட்சிப் போராட்டங்கள் போன்ற அரசியல் விவாதங்கள் (political discourse) நடவடிக்கைகள் (political processes) மூலம் விரிவுபடுத்தியிருக்கமுடியும்.அதை அவர்கள் ஏற்க மறுத்ததற்குக் காரணம் ராஜீவ் – ஜெயவர்த்தன திட்டத்தில் (scheme) தங்களுக்கு முக்கியத்துவம் இல்லை என்பதே. பின்னர் ரணில் விக்ரமசிங்கேயோடு ‘தேனிலவு’ கொண்டாடிய நாட்களில் கூட அவர்கள் ஓர் அதிகாரப் பகிர்வினை எட்டியிருக்க முடியும். ஆனால் விடுதலைப் புலிகளின் இலட்சியம் தமிழர்கள் அதிகாரம் பெற வேண்டும் என்பது அல்ல;

தாங்கள் அதிகாரம் பெற வேண்டும் என்பதே.
என் ஜன்னலுக்கு வெளியே…: முத்துக்குமார்

புத்தாண்டு வாழ்த்து

  1. வெறுமனே புத்தாண்டு வாழ்த்தாக பதிவிடாமல், படிப்பவருக்கு ஏதாவது பிரயோசனப்படுமா என்றும் யோசித்து பதிவிடவும். (உதாரணம்: பத்ரி: புத்தாண்டு உறுதிமொழி
  2. நிறைய வாசிக்கவும். (உ.: How to be picky with blog posts? – Primer for selective reading)
  3. டிப்ஸ் கொடுக்கவும். (உ.: பா ராகவன்: திருவிழாவுக்குத் தயாராகுங்கள்!)
  4. blog-stats-2008-visitor-graphs-tamil-jeyamohan

  5. பதிவொன்றுக்கு படமொன்று இடவும்.
  6. மொக்கையோ, கருத்தோ, அனுபவத்தை அணு அணுவாகப் பகிர்தலோ: 250 வார்த்தைகளுக்கு மிக வேண்டாம். (உ.: வேர் இஸ் தி பார்ட்டி – பொழிப்புரை)
  7. 250 வார்த்தைக் கோட்டைத் தாண்டுபவர், உயிரோசைக்கோ திண்ணை போன்றவற்றுக்கோ எழுதி எழுத்தைக் கூர்மையாக்கிக் கொள்ளவும். இரண்டிலும் உன் எழுத்து வெளியாகாவிட்டால், மனுஷ்யபுத்திரனை நேரில் சந்தித்து நட்பு கொள்ளலாம் (அ) அடுத்த புல்லட் பாயின்ட்டை படிக்க.
  8. இந்தப் பதிவைப் போல் புள்ளி புள்ளியாகப் பிரித்து 1,2,3 என்று இடுக.
  9. அப்படியே 250ஐத் தாண்டுமென்றால் அடுத்தவரைக் குறித்த ருசிகரத் தகவலோ, லாவகமான மொழிப்பிரவாகமோ, ஏதோவென்று உள்ளேயிருந்து கிச்சுகிச்சு மூட்ட வேண்டும். (உ.: ஜெயஸ்ரீ: பரித்ரானாய ஸாதூனாம்… – Part 2)
  10. புத்தகமெழுதிய மனிதரெல்லாம் பதிவரில்லை; பதிவு வைத்திருக்கும் மனிதரெல்லாம் புத்தகம் எழுதத் தகுதியானவரில்லை. பதிவு நடை என்பது வேறு; புத்தக ஆக்கம் என்பது வேறு. (இரட்டை குதிரை சவாரிக்கு உ.: முகில்: அகம் – புறம் – அந்தப்புரம்)
  11. முன்பே எழுதியதைத் திரும்ப திரும்ப வேறு வேறு விதமாக சொல்ல அஞ்ச வேண்டாம். (உ.: வலைப்பதிவருக்கு டிப்ஸ், புதிதாய் பதிபவர்களுக்கு வழிகாட்டி)
  12. புதிய வாசகர் தினந்தோறும் சேரும் காலமிது. எனவே, பழம்பாடல் ரீமிக்ஸாக (பதிவுக்குள்ளேயே) சொன்னதை சுவைபட மாற்றி மாற்றி எழுதிப் பதிவாக்கு. (உ.: லக்கிலுக்/யுவகிருஷ்ணா: தமிழ் வலையுலக மார்க்கெட்டிங் உத்திகள்!)
  13. அதற்காக, ஒரே சப்ஜெக்டில் அடுத்தடுத்து தொடர்ந்து எழுத வேண்டாம். (உ.: 2008ன் கலக்கல் பதிவர்)
  14. சிவனின் அடிமுடி கொண்டவராக ஒரு சப்ஜெக்டில் ஆழமான அறிவு இருப்பின், அதை மட்டும் முன்னிலை நிறுத்த தனிப்பதிவு துவங்கலாம். (உ.: தமிழில் புகைப்படக்கலை: PiT Photography in Tamil)
  15. எளிமையான வார்ப்புரு வைத்திரு. உன் பதிவுக்கு எவ்வளவு பேர் எப்படி வந்தார் என்பது எனக்குத் தேவையில்லாத தகவல். உலாவியில் சீக்கிரம் வருகிறதா என்பது மட்டுமே முக்கியம்.(டெம்பிளேட் உ.: கூடுதுறை)
  16. பாட்டு கேட்க வேண்டுமானால், எனக்கு விருப்பமானதை மனதிற்கு உவந்த முறையில் (ரேடியோ, எம்பி3, ஐபாட்) என்று கேட்டுக் கொள்வேன். தானியங்கியாக சத்தத்தை அலற விடாதீர்.(காதுக்கு கேடு உ.: தமிழ்த்துளி)
  17. பதிவின் நடுவில் பொருத்தமாக அடுத்தவருக்கு சுட்டுவதை பெருக்கவும்: chrisbrogan.com: 27 Blogging Secrets to Power Your Community
  18. உன் பதிவிற்கும் பொருத்தமான இடங்களில் தாராளமாக உரல் இடவும். (உ.: வலைப்பதிவரின் வாழ்க்கைச்சுழல் & வலைப்பூ வைரஸ்)
  19. பதிய நினைத்தால் பதியலாம்; வழியா இல்லை பூமியில்? (உ.: இராயர் காப்பி கிளப்: வலைப்பதிவுகளிலும் என்ன எழுதலாம்?
  20. அரசியல், சினிமா, சமூகம் ஆகியவை குறித்து மட்டுமே தொடர்ந்து அரியணையில் இருந்து முத்து உதிர்க்கப் போவதாக இருந்தால் ட்விட்டர் மட்டுமே உங்களுக்குப் போதுமானது. (உ.: ட்விட்டர்: எளிய அறிமுகம்)
  21. 250 ஆகிவிட்டது. முற்றும்.

Top Tamil Bloggers in 2008

சென்ற வருடத்தில் தமிழ்ப்பதிவுகளைக் கலக்கியது யார்?

கடந்த வருடத்தில் 1500+ பதிவுகள் தமிழ்மணத்தில் இணைந்துள்ளன. (துவக்கம் – 2008 இறுதி)

குறிப்பிடத் தகுந்த பதிவுகளை சேமித்து வைக்கும் முயற்சியில் இறங்காவிட்டால், இந்தத் தகவல் எனக்கு தெரிந்திருக்காது. இத்தனை புதியவர்களில் நான் வாசிக்க ஆரம்பித்தது மிகமிகக் குறைவு. முதல் நான்கு வருடத்தில் 2500 பதிவுகளும், கடந்த வருடம் மட்டும் 60% வளர்ச்சி கண்டிருப்பதும் மிக ஆரோக்கியமான சூழல்.

கவனிக்க மறந்திருப்பீர். தமிழ்ப்பதிவும் பதிவரும் கடந்த வருடத்தில் 60+ சதவீதம் (1500 new Tamil Blogs) எண்ணிக்கையில் அதிகரித்துள்ளது.

எனவே, நான் புலம்பியதை வாபஸ் வாங்க வேண்டிய நிலை?!

இதே போல், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளின் புள்ளிவிவரம் என்ன? எத்தனை ஜாஸ்தி ஆகியிருக்கும்? மொத்தம் எவ்வளவு?

புதிய வலைப்பூ ஒவ்வொருவரையும் சொடுக்கி, மேலோட்டமாகவாது மேய்ந்து, தலை பத்து பட்டியலிடுவது என்னும் முடிவில் மாற்றம். 1500+ஐயும் படித்து முடிக்க மூன்று மாதமாவது ஆகும். அதற்குள் ‘சூடான இடுகை’, சீமான், பாலஸ்தீனம், தமிழ்மண விருது எல்லாமே ஆறிப் போகும்.

முதற்கண் முக்கியஸ்தர் கவனிப்பு

(அதாவது புதிதாக எதுவும் எழுதாமல், வேறெங்கோ இட்டதை மீள்பதிவு செய்யும் பத்து பட்டியல்)

  1. கவிதை & பேட்டி
  2. தமிழச்சி தங்கபாண்டியன்

  3. creations
  4. நீல பத்மநாபன்

  5. Revathy | PassionForCinema
  6. ரேவதி

  7. பேசுகிறார்
  8. பாலகுமாரன்

  9. துணிவே துணை :: கல்கண்டு
  10. லேனா தமிழ்வாணன்

  11. வாழ்க தமிழுடன் !
  12. நெல்லை கண்ணன்

  13. எழுத்துகள்
  14. அ.ராமசாமி

  15. Pamaran
  16. பாமரன்

  17. சாரு ஆன்லைன்
  18. சாருநிவேதிதா

  19. Era murugan
  20. இரா முருகன்

உடனடியாக நினைவுக்கு வருபவர், நண்பரின் பரிந்துரை, சூடான இடுகையில் அடிக்கடி உலா வந்தவர், ட்விட்டரில் என்னைப் பின் தொடர்பவர், துறைசார்ந்து எழுதுபவர், திரட்டி சாராமல் இயங்குபவர், மாற்று(.நெட்) திரட்டியில் தொடர்ந்து கவனிக்கப்பட்டவர், என்னை கவனிப்பவர், கிழக்கு பதிப்பகத்தில் இருந்து கிளம்பிய கூட்டம், வோர்ட்ப்ரெஸ்.காம்-இல் அடிக்கடி தென்பட்டவர் என்றெல்லாம் ரொம்ப யோசித்து என்னுடைய பட்டியல்.

தலை பத்து(+1) 2008

  1. யாழிசை ஓர் இலக்கிய பயணம்
  2. லேகா

  3. பயணங்கள்
  4. மரு. ஜா. மரியானோ அண்டோ புருனோ மஸ்கரனாஸ்

  5. வினவு, வினை செய்!
  6. மக்கள் கலை இலக்கியக் கழகம்

  7. மனம் போன போக்கில்
  8. என். சொக்கன்

  9. ச்சின்னப் பையன் பார்வையில்
  10. பூச்சாண்டி

  11. ஏ ஃபார் Athisha
  12. அதிஷா

  13. பரிசல்காரன்
  14. கிருஷ்ணகுமார்

  15. இந்திய மக்களாகிய நாம்….
  16. சுந்தரராஜன்

  17. Pennin(g) Thoughts
  18. ரம்யா ரமணி

  19. மணியின் பக்கம்
  20. பழமைபேசி

  21. தமிழில்
  22. டாக்டர் ஷாலினி

விஐபி, பழம்பதிவர், நான் அதிகம் வாசிக்காத பத்து(+1) உப பட்டியல்:

  1. R P Rajanayahem
  2. ஆர் பி ராஜநாயஹம்

  3. தங்கள் அன்புள்ள
  4. முரளிகண்ணன்

  5. சிதைவுகள்…
  6. பைத்தியக்காரன்

  7. சூர்யா – மும்பை
  8. சுரேஷ்குமார்

  9. mathimaran
  10. வே. மதிமாறன்

  11. வெட்டிவம்பு
  12. விஜய் குமார்

  13. ஓவியக்கூடம்
  14. ஜீவா

  15. முத்துச்சரம்
  16. ராமலக்ஷ்மி

  17. மொழி விளையாட்டு
  18. ஜ்யோவ்ராம் சுந்தர்

  19. US President 08 :: அமெரிக்க அதிபர் தேர்தல்
  20. குழுப்பதிவு

  21. writerpara.net | பேப்பர்
  22. பா ராகவன்

நிறைய அடிபடுகிறார்

(அ)

இவர்களும் இருக்கிறார் 13

தொடர்புள்ள சில:

1. Happening Tamil Blogs – Must Read 30: Index

2. தமிழ்ப்பதிவுகள் – குறிப்பிடத்தக்க முகமூடிகள்

3. வலைப்பதிவுகள் – அடுத்த கட்டம

State of Tamil Blogs & 2009 Predictions

வருடா வருடம் அறிஞர் அண்ணா சிலைக்கு மாலையிடுவோம். அது போல் இந்த வருடத்திற்கான ஆய்வு:

  1. வரி, விளம்பரம்/க்ரெய்க்ஸ் லிஸ்ட்: தமிழ்ப்பதிவுகளுக்கு பராக் ஒபாமா போன்ற மாயாஜாலக்காரர் தேவைப்படுகிறார். பில் க்ளின்டன் போன்ற தமிழ்மணம் ஹில்லரி போல் ஏதாவது புதுப்பித்துக் கொண்டாலும், புஷ் கூட்டாளிகளுடன் கும்மாளம் போடுவது போல் க்ரூப்கள் மிகுந்திருப்பதால், கடல் வழியாக அத்துமீறும் பாகிஸ்தானிய தீவிரவாதி போல் புதுப் பதிவர் தேக்கநிலையை நீக்கத் தேவைப்படுகிறார்.
  2. வாய்ஸ் கிடையாது/ரஜினி: தமிழ்ப்பதிவர் பரம சாது. சவுண்டு விடுவார். எதிராளி ஏவுகணையோ இளக்காரப் பார்வையோ பார்த்தால் அடங்கி அல்லது ஒதுங்கி விடுவார். இதை விட மோசமாக கடைக்குழு ஒன்று இருக்கிறது. இன்னும் இரண்டு பேர் உங்க பதிவிற்கு வரவைக்குமாறு ஹிட் தருவோம் என்றால் சகல ஸ்க்ரிப்ட்களையும் இணைத்து பச்சோந்தியாய் விளம்பரம் கொடுத்து சமூக ஒருங்கிணைப்பிலோ உள்ளடக்க வீரியத்திலோ ஈடுபாடில்லாத குழு. ஆங்கிலப் பதிவு நிகழ்வு: Abstract: How Twittering Critics Brought Down Motrin Mom Campaign – Digital: “Bloggers Ignite Brush Fire Over Weekend, Forcing J&J to Pull Ads, Issue Apology”
  3. நேரடி கவரேஜ்/தஸ்லீமா நஸ்ரின்: ‘ஐயா! நீங்க மலேசியாவில்தானே இருக்கீங்க? உங்க லோக்கல் விஷயத்தை எழுதுங்களேன்?’ என்றால் ஓடி ஒளிந்துவிட்டு, பத்தாயிரம் மைல் தள்ளி இருக்கும் ‘க்ரீன்லாந்தில் பசுமைப்புரட்சிக்கு வித்திடுவோம்’ என்று சவடால் விடும் பதிவு நிறைந்த வலையுலகில் நுழைந்துள்ளோம். சீன ஒலிம்பிக்ஸ் பற்றி எழுதினால் அரசு வெட்டிடும் என்பதில் துவங்கி சிங்கப்பூர் எதிர்க்கட்சித் தலைவரின் பரிதாப நிலை வரை − ஐந்தாண்டு அனுபவமுள்ள பதிவுலகில் அருகில் இருந்து அவதானிக்க எவரும் இல்லாத உள்ளூர் அனுபவசாலியின் அவல நிலை.
  4. செருப்பு புஷ்/அ – அருந்ததி ராய்: ஜார்ஜ் புஷ் மேல் செருப்படிக்கும் விளையாட்டை ஊக்குவிக்கும் சுதந்திரத்தைத் தரும் அமெரிக்காவை சவூதியில் இருந்து விமர்சிக்கும் வார்ப்புரு எழுத்தாளர். சாரா பேலினின் தொப்புள் படம் கிடைக்குமா என்று தேடிக் கொண்டே பெண்ணுரிமை பேசும் கருத்து சுதந்திரவாதியின் ஸ்டீரியோடைப் எழுத்தை மதிக்கும் சக வாசகர் வட்டம் எனத் தொடரும் infinite recursive loop.
  5. சமூகப் பொறுப்பு/’சத்யம்’ ராஜு: ஐந்து வருடமாக ஒரு whistleblower உருவாகவில்லை. அரசு, பத்திரிகை, நிறுவனம், விளம்பர உலகம் என்று பதிவு பரவவில்லை. டீக்கடை பெஞ்சாகவே ஒதுங்கி பழைய பேப்பரில் உண்டான கருத்தை மறுவாந்தியெடுத்து கொள்கை நம்பிக்கையும் சிருஷ்டி கற்பனையும் படைப்பூக்கமும் இன்றி கிணற்றுவாளியில் சிக்கிய தவளையாக இன்னும் கிணற்றுக்குள்ளே குதிக்கவே சிரமகதியில் வாளிக்குள் துள்ளி விளையாடுகிறது.
  6. ஆனந்த விகடன் டு குமுதம்/ஞாநி: தமிழ்மணம் போனது; தேன்கூடு வந்தது என்று ‘வாலு போச்சு; கத்தி வந்தது’ குரங்கு கதையாக வலைப்பதிவர் ஆரம்பத்தில் மாறினார். பின்னால் தமிழ்வெளி பக்கம் சென்று பார்த்தார். இப்பொழுது தமிழீஷ் புளகாங்கிதம் அடைகிறார். சொவ்வறை குந்துரத்தனாகிய நான் நேரங்காட்டுவதுதான் முக்கியம் → அதனால் தினக்கூலி கிட்டுவது அதை விட முக்கியம் என்பதாக எழுதுவதுதான் முக்கியம்; எழுதுபொருள் குறித்த கவலை இல்லாத இணையம்.
  7. தெரிந்த முகம்/சீனா: தமிழ்நாட்டின் பெட்டிக்கடையிலாவது முன்பின் அறியாதவருடன் வெளிப்படையான கருத்துப் பரிமாற்றம் அகஸ்மாத்தாக அரங்கேறும். தமிழ் வலையுலகோ, சீனாவைப் போன்றது. நாலு சுவருக்குள் நடக்கும் பேச்சில்தான் போதிய சோதனைக்குப் பின் உள்ளத்துக் கிடக்கை வெளியேறும். அரட்டையில் சொன்னால் பொதுவில் போட்டு விடுவார்; தொலைபேசியில் பேசினால் பதிந்துவிடுவார் என்று அச்சம், மடம், நாணுபவர் இங்கு நிறைந்திருப்பர். சைனாவைப் போலவே மக்கள் கூட்டம் நிறைய இருந்தாலும், அவர்களால் எக்கச்சக்கா சாமான்/பதிவு தயாரிக்கப்பட்டாலும், அவற்றால் அவர்களுக்கு எந்தப் பயனும் கிடைக்காது. ‘செம்மொழி’, கூகிள் மொழி என்று பம்மாத்து பல சீனாவைப் போலவே ஒளிர்ந்தாலும் உள்ளுக்குள்ளே ஈறும் பேனும், ஈயும் பீயுமாக மகிழ்ந்திருக்கும்.
  8. அங்கீகாரம்/சு.சுவாமி: “பூங்காவில் இடமுண்டா? தமிழீஷில் எண்ணிக்கை ஏறுமா? தமிழ்மணத்தில் வாக்கு கிடைக்குமா?” என்பது போய் “‘உயிர்மை.காம்’இல் ஒரு எழுத்து வராதா? ‘வார்த்தை‘யில் ஒரு வார்த்தை வெளியாகாதா?” என்பதும் விலகி “ஆனந்த விகடன் வலையகத்தில் பெயர் பெறுவேனா? சன் டிவி பிறந்த நாள் வாழ்த்து உதிர்க்கப்படுவேனா?” என்பதுதான் பதிவரின் அலட்சியமாக, குறியாக இருக்கிறது. எப்பாடு பட்டேனும் அமைச்சர் பதவியை மகனுக்கு வாங்கிக் கொடுக்கும் தந்தையாக வலைஞர் செயல்பட்டு திருப்தியடைகிறார்.
  9. விசங்கக்குபவர்/பாஸ்டன் பாலாஜி: ‘நீ எத்தனை புத்தகம் எழுதி மாற்றத்தை உருவாக்கினாய்? ‘அச்சமுண்டு அச்சமுண்டுஅருண் மாதிரி ஏதாவது படித்து படமாக்கினோம் என்றாவது சொல்லமுடியுமா? கலை தாகம் எவ்வாறு ஆக்கசக்தியானது? தொழில்நுட்பக் கல்வி எவ்வளது தூரம் தமிழானது? தமிழிலக்கியம் எங்ஙனம் உலக மொழிகளில் மொழிபெயர்ப்பானது?’

அமெரிக்காவில் 'ஒபாமாவுக்காக தமிழர்கள்' – அதிபர் தேர்தல் பதிவுகள்

1. சாரா பேலினும் சோனியா காந்தியும் :: முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை

ஏ.பி.ஸி. (ABC) என்னும் டி.வி. நிறுவனம் இவரைப் பேட்டி கண்டபோது என்னென்னவோ உளறியிருக்கிறார். ‘ஜனாதிபதி புஷ்ஷின் கோட்பாடு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என்று நிருபர் கேட்டதற்கு, ‘அவருடைய கொள்கையின் எந்த அம்சம் பற்றிக் கேட்கிறீர்கள்?’ என்று கேட்டு மழுப்பியிருக்கிறார்.

‘ரஷ்யாவுக்கு மிக அருகில் உங்கள் மாநிலம் இருக்கிறதே. ரஷ்யா கடந்த இரண்டு வாரங்களில் நடந்துகொண்டது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என்ற நிருபரின் கேள்விக்கு ‘அலாஸ்காவிலிருந்து ரஷ்யாவைப் பார்க்கலாம்’ என்று விடை அளித்திருக்கிறார் பேலின். அப்படியும் விடாமல் நிருபர் ‘ஜார்ஜியாவில் ரஷ்யா நடந்துகொண்டது பற்றி உங்கள் அனுமானம் என்ன?’ என்று கேட்டதற்கும் சரியான பதில் அளிக்கவில்லை.

இந்தப் பேட்டி நடந்த அன்றே (செப்டம்பர் 11, 2008) பேலினுடைய மகனும் மற்றும் சிலரும் ஈராக்கிற்குக் கிளம்பிய சந்தர்ப்பத்தில் பேலின் பேசிய உரையில் ‘இன்று அமெரிக்கக் கட்டடங்களை வீழ்த்தி ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களின் இறப்பிற்குக் காரணமாக இருந்த நம் எதிரிகளோடு இவர்கள் போர் புரியப் போகிறார்கள்’ என்றார். ஈராக்கிற்கும் ஈராக்கை ஆண்ட சத்தாம் ஹுசேனுக்கும் 2001ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் பதினோராம் தேதி அமெரிக்காவில் நடந்த சம்பவத்திற்கும் சம்பந்தம் எதுவும் இல்லை என்று புஷ்ஷே மறைமுகமாக ஒப்புக்கொண்ட பிறகும் அது பற்றி பேலினுக்குத் தெரியாமல் இருப்பது எவ்வளவு பயங்கரமான விஷயம் என்கிறார்கள்.

சென்ற வருடம்தான் பாஸ்போர்ட் பெற்ற, அமெரிக்க வெளியுறவு பற்றியும் உள்நாட்டுப் பாதுகாப்பு பற்றியும் எதுவும் தெரியாத இந்த பேலினைத் தேர்ந்தெடுத்திருப்பதன் மூலம் குடியரசுக் கட்சி ஓட்டுப் போடும் தகுதி பெற்ற அமெரிக்கக் குடிமக்களை இழிவுபடுத்தியிருக்கிறது என்று நியுயார்க் டைம்ஸ் பத்திரிக்கை அங்கலாய்க்கிறது.


2. வீரகேசரி: பதிவு! – Pathivu.com: “அமெரிக்கத் தேர்தல் மாற்றத்திற்கு வித்திடுமா? – நோர்வேயிலிருந்து வெற்றித் திருமகள்”

செனட்டர் பராக் ஒபாமா 158.5 மில்லியன் அமெரிக்க டொலரையும், செனட்டர் ஹிலரி கிளின்டன் 140.7 மில்லியன் அமெரிக்க டொலரையும், ஜனாதிபதி வேட்பாளர் ஜோன் மக்கெயின் 58.4 மில்லியன் அமெரிக்க டொலரையும் செலவிட்டிருப்பதாக ஓர் அண்ணளவான கணிப்பீடு ஒன்று தெரிவிக்கின்றது.ஆசிய பிராந்தியத்திலே விவசாயத்துறைக்கு அளிக்கப்படாத முக்கியத்துவத்தினால், ஏறத்தாழ 218 மில்லியன் மக்கள் பட்டினிச்சாவை எதிர்கொள்ளும் இவ்வேளையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு இவ்வளவு நிதித்தொகை செலவிடப்படுவது அவசியம்தானா என தமது ஆதங்கங்களையும் விசனங்களையும் பல ஊடகங்கள் எழுப்பி நிற்கின்றன.


3. News view – TamilWin.com:

அமெரிக்காவிலுள்ள தமிழர்களை உள்ளடக்கிய ‘ஒபாமாவுக்கான தமிழர்கள்‘ என்ற அரசியல் செயற்பாட்டுக் குழுவானது ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான பராக் ஒபாமாவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்திருக்கிறது.

‘ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு’ வெளியிட்டுள்ள அறிக்கையில்; “இலங்கைப் பிரச்சினைக்கான தீர்வானது பொஸ்னியாவையோ அல்லது மொன்ரிநிக்ரோ, கிழக்குத்தீமோர், கியூபெக், ஸ்லோவாக்கியா, கொசோவா போன்ற நாடுகளில் ஏற்பட்ட தீர்வைப் போன்று அமைய முடியும். தூதுவர் ரிச்சட் கோல்புக்கின் நிபுணத்துவத்தை பயன்படுத்தக் கூடியதாக இருக்கும் என்று நாம் கருதுகிறோம்” என்று அமைப்பின் பேச்சாளர் கூறியுள்ளார்.


4. மணிக் கூண்டு: அமெரிக்காவின் நிறப்பற்று!!! | மயிலாடுதுறை சிவா: ஓபாமாவிற்காக ஓர் நாள்!

ட்விட்டர்: எளிய அறிமுகம்

1. ட்விட்டர் எங்கே இருக்கு? Twitter.com

2. அது என்ன கேள்வி ‘What are you doing?‘ பெட்-காபி குடிக்கறீங்களா, அம்ருதா ராவ் படங்களைத் தேடறீங்களா, டெஹல்காவில் எதைப் படிக்கறீங்க, என்பனவற்றைக் குறிக்கிறது.

3. பார்ப்பது, முகர்வது, தொடுவது, கேட்பது, பேசுவது மட்டும்தான் ட்விட்டலாமா? சுவைப்பது எதுவாயினும் சொல்லலாம். தினசரி கோல்கேட் கொண்டு பல் தேய்ப்பதை சொல்லிக் கொண்டிருந்தால் எவரும் ஃபாலோ செய்யமாட்டார்கள். “காலியான பற்பசையை இரண்டாக அறுத்து, பிதுக்கி, பாக்கி இருக்கும் க்ளோஸ் – அப்பை ‘நீ பாதி… நான் பாதி’யாக மக்கட்செல்வத்துக்கு பகிர்ந்தளித்தேன்” போன்ற பணவீக்கத்திற்கேற்ற துப்புகள் அளிக்கவேண்டும்.

4. அது என்ன ‘ஃபாலோ’ செய்வது? ஒருவரின் கொள்கையை பின்பற்றுவதா? ஆர்குட்டில் ‘நண்பன்’; ஃபேஸ்புக்கில் ‘விசிறி’; ஃப்ரெண்ட்ஃபீட்டில் ‘சந்தாதாரர்’. தளங்கள் தோறும் வாசகராக சேர்த்துக்கொள்வது வித்தியாசப்படும். அதுபோல், இன்னாரை பின் தொடர்ந்து அவரின் செய்கைகளை, தகவல்களை ட்விட்டர் கொண்டு அறிய விரும்பினால் ‘ஃபாலோ’.

5. ட்விட்டரில் தத்துவம், வாழ்க்கை அவதானிப்பு, பொதுமைப் படுத்துதல் செய்யலாமா? செய்யலாம்.

6. அது தவிர வேறு என்ன செய்யலாம்? நான் தொடரும் சிலர் எழுதியதில் இருந்து உதாரணங்கள். வலைப்பதிவுக்கு முன்னோட்டமாக சில குறிப்புகளை ரத்தின சுருக்கமாக எடுத்து வைக்கலாம். கூகிள் அரட்டைக்கு பதிலாக பயன்படுத்தலாம்.

7. 140 எழுத்துக்களுக்குள் என்ன கருத்து சொல்லிவிட முடியும்? நவீன உலகின் திருக்குறள் எனப் போற்றப்படுவது குறுந்தகவல். மனதில் நினைப்பதை நச்சென்று சுருக்கமாக சொல்லமுடியாவிட்டால், நாகரிக உலக வாசகரின் கவனம் சிதறிப் போகலாம். அப்படி சிதறாது என்றால், இருக்கவே இருக்கிறது வலைப்பதிவு.

8. மௌனமொழியாக புகைப்படங்களை ஏற்றுமதி செய்யலாமா? பத்ரி ஷோஜு (Shozu.com) உபயோகிக்கிறார். ஸ்னாப்ட்வீட் மற்றுமொரு புகழ்பெற்ற சேவை. செல்பேசியில் இருந்தே படங்களை அனுப்ப Twitxr -உம் உண்டு. என்னோட பரிந்துரை: ட்விட்பிக்.

9. இந்தியாவிலும் வேலை செய்யுமா? Vakow உபயோகிக்க பரிந்துரைக்கிறார்கள். நேரடியாகவும் 5566511 அல்லது 5566595 மூலம் குறுஞ்செய்தி அனுப்பலாம் என்றாலும் ‘வாகோவ்‘தான் இந்தியர்களின் இதயத்தை கொள்ளை கொண்டிருக்கிறது.

10. அப்படியானால் ட்விட்டரில் செய்தி அனுப்ப செல்பேசி அவசியம் வேண்டுமா? தேவையே இல்லை. நேரடியாக வலையகத்தில் இருந்தே குறுந்தகவல்களை அனுப்பிக் கொண்டே இருக்கலாம்.

11. பதிவுகளைப் படிக்க கூகிள் ரீடர், டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்க ட்யூப்தமிழ், என்பது போல் ட்விட்டர் தகவல்களை வேறு வழியில் படிக்க, கோர்க்க இயலுமா? நீங்களே ஒன்றை தயாரித்துக் கொள்ளலாம் என்பதைப் போன்று ட்விட்டர் API கொடுத்திருக்கிறது. அதை உபயோகித்து பல நிரலிகள் புழகத்தில் இருக்கின்றன

  1. ட்வீட் டெக்: புதுசு கண்ணா புதுசு; தமிழ் வராது; வகைப்படுத்தல் வசதி இருக்கிறது
  2. ட்விட்டர் ஃபாக்ஸ்: ஃபயர் ஃபாக்சுடன் ஒட்டி உறவாடும்; நம்பகமானது இல்லை.
  3. ட்விட்டர் பார்: இனிமேல்தான் உபயோகிக்க வேண்டும். ஃபயர் ஃபாக்ஸ் பயனர்களுக்கானது.
  4. ட்வஹிர்ல்: உச்சரிப்பதற்கு கடினமாக இருந்தாலும், உபயோகத்தில் எளிதானது. பல பயனர் கணக்குகளை ஒருங்கே மேய்க்கலாம். என்னுடைய தேர்வு.

இது தவிர:

12. என்னிடம் ஃபேஸ்புக் கணக்கு இருக்கிறது. அங்கே கேட்கும் ‘What are you doing right now?’க்கு பதில் சொல்லித்தான் வழக்கம்! ஒன்றும் பிரச்சினையில்லை. இணைத்துவிடலாம்.

13. என்னிடம் ‘டைப் பேட்’ வலைப்பதிவு இருக்கிறது. இணைக்க முடியுமா? முடியும்.

14. நான் வோர்ட்பிரெஸ், ப்ளாகர் போன்ற செய்தியோடை தரும் இடங்களில் பதிகிறேன். ஆர்.எஸ்.எஸ்ஸை எவ்வாறு சேர்த்து விடுவது? ட்விட்டர் ஃபீட் பயன்படுத்தலாம்.

15. அங்கே இருந்து ட்விட்டருக்கு வந்தாச்சு. இப்போ, ட்விட்டரில் இருந்து, ப்ளாகர், வோர்ட்பிரெஸ் போன்ற வலைப்பதிவுகளுக்கு கொண்டு செல்வது எவ்வாறு? இப்படி.

16. இது வார்ப்புருவில், பக்கவாட்டில் மட்டுமே இடுகிறது. என்னுடைய பதிவே அன்றாட ட்விட்டர்களில் இருந்து தயாராக்க முடியுமா? உங்களுக்குத் தேவை லவுட் ட்விட்டர்.

17. எனக்கு ‘தசாவதாரம்’ குறித்த தகவல் அனைத்தும் தெரிய வேண்டும். எப்படி அறிந்து கொள்வது? ட்ராக்கிங் வசதியைக் கொண்டு செல்பேசியில் ‘தசாவதாரம்’ வார்த்தை வரும் அனைத்து குறுஞ்செய்திகளையும் பெறலாம். எனக்கு சம்மைஸ் கொண்டு தேடி, தேடல் முடிவுகளின் ஓடையைப் பெற்றுக் கொள்ளுதல் தோதுப்படுகிறது.

18. அட… ட்விட்டரில் தேட முடியுமா? சம்மைஸ் கொண்டு இதுவரை கதைத்ததை தெரிந்து கொள்ளலாம். அதுதான் என்னுடைய பெரும்பாலான தேடல்களுக்கு பயனாகிறது என்றாலும், ட்வீட் ஸ்கான் கூட தேவலாம்தான்.

19. என் நண்பர்கள், எதிரிகள், முன்னாள் காதலிகளைக் கண்டு கொள்வது எப்படி? இவர்களை மட்டுமல்ல. அறியவேண்டிய சகாக்களை ட்வெலோ அடையாளம் காட்டுகிறது.

20. இவர்களை எல்லாம் பின்பற்றி என்ன பிரயோசனம். ஏதாவது சுட்டி மாட்டுமா? விஷயம் புகழ்பெறுவதற்கு முன்பே ட்விட்டரில் உரையாடப்படுகிறது. அதை அடிப்படையாகக் கொண்டு, ட்விட்டரில் அதிகம் சுட்டப்படும் உரல்களைத் தொகுத்து, தகவல் யுகத்தின் நுனிக்கே செல்லலாம்.

21. இம்புட்டு விஷயமா! எவ்வளவு தகவல் கிட்டுகிறது! ‘பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற, செய்யாமை, செய்யாமை நன்று’ என்னும் குறளை படிக்காதவங்க சிலரும் ட்விட்டரில் சுற்றுவதால் கவனம் தேவை. எளிதில் வதந்தி உலாவும் இடம் இது.

22. நான் எல்கியவாதி. ட்விட்டரின் கட்டுப்பாடுகள் எனக்கு ஒத்துவராது! யாராக இருந்தாலும் டக்கென்று பதில் வாங்குவது முதல் சட்டென்று வாசகரை கவர்ந்திழுக்க செல்பேசி புரட்சிக்கு தயாராக இருக்கோணும்.

23. ட்விட்டர் வியாதியாகும் அபாயம் உண்டா? சோதித்துக் கொள்ளவும்.

24. ரொம்பப் பேசறீங்க. இன்னும் சுருக்கமா ஒரு வார்த்தையில் சொல்ல முடியுமா? ஒரேயொரு வார்த்தையா! உங்களுக்கு எடாகு சரிப்படலாம்.

25. என்னோட கேள்வி ஒன்றுக்குக் கூட விடை கிடைக்கவில்லையே!? இங்கு செல்லவும். மேலும் விலாவாரியான பயனர் புத்தகமும் கிடைக்கிறது.

கொசுறு: இன்னும் நிறைய ட்விட்டர் நிரலிகள் இருக்கிறதாமே? அவற்றில் மெச்சக் கூடியவை எவை? பகுதி #5– இல் இட்டிருக்கும் பட்டியல் பார்க்கவும்.

கருத்துப்படம்: டேவிட்

சென்னை பயணம்

ஜூன் இரண்டு முதல் 14 வரை சென்னை வாசம். நண்பர்கள் சந்திக்க தனிமடலிடவும்.

இந்த மாதிரி ட்விட்டரில் எழுதுவது அனிச்சமாகவும் ப்ளாகரில் நெருக்கமாகவும் மீண்டும் மாறினால், அப்பொழுதும் வலைப்பதிவேனா?

தொடர்புள்ள பதிவுகள்:
1. புதசெவி ©: சிம்மக்கல், தெற்குவாசல், தெப்பக்குளம், அண்ணா நிலையம், மாட்டுத் தாவணி : மருத…மருதை

2. Dubukku- The Think Tank: சென்னையில் சந்திக்கலாமா?

சூடான இடுகைகள் – அந்தக் காலம்

முன்னொமொரு காலத்தில், மூன்றாண்டுகளுக்கு முன்பு சூடான இடுகைகளாக எவை இருந்தன/எவர் இருந்தார்கள் என்று நினைத்து பார்த்தபோது…

1. ரோசா வசந்த் :: ஒரு குட்டி பூர்ஷ்வாவின் கல(க்)கமும், எண்ணங்களும் சில நல்லிணக்க முயற்சிகளும்…!: “சிம்புவின் ஆண்குறியை அறுக்கவேண்டும்.”

2. மதி கந்தசாமி :: ஓர் ஆணாதிக்க ஆங்கிலப் பேராசிரியர் என்ன எழுதுவார்?..

3. வெங்கடேஷ் :: கமலுக்குப் பின்… – நேசமுடன்

4. மூக்கு சுந்தர் :: My Nose – நண்பர் சுந்தரவடிவேலுக்கு ஒரு பகிரங்க கடிதம்

5. காசி :: தமிழ்மணம் தள நடவடிக்கைகள் பற்றி சில அறிவிப்புகள் – சித்தூர்க்காரனின் சிந்தனைச்சிதறல்கள்

6. டோண்டு :: Dondus dos and donts: சோ என்னும் சிறந்தப் பத்திரிகையாளர்

7. ஆப்பு :: Aappu: “டமில் நியு இயரு விஷ்ஷீ லிஸ்ட்டு”

8. ரஜினி ராம்கி: Rajni Ramki: “அடுத்த ’10’ படங்கள்!”

9. பொட்”டீ” கடை: நான் இந்தியனா?

10. 31. முகத்திரை களைகிறேன்.. | தருமி: 25. ‘இவர்களும்’…’அவர்களும்’

11. பிகே சிவகுமர்: சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்லுவேன் கேண்மினோ | விமர்சகரும் வாசகரும்

12. முத்து (தமிழினி) :: ஒரு தமிழனின் பார்வை: “மசாலா தமிழ் திரைப்படங்களும் தமிழர்களும்” | ஒரு செய்தியும் சில பின்னூட்டங்களும்

13. சுரேஷ் கண்ணன் :: பிச்சைப்பாத்திரம்: “பிரபல நேர்மையானவர்களின் மற்றொரு முகங்கள்”

14. குழலி பக்கங்கள்: “மருத்துவர் இராமதாசுவின் மீதான சொல்லடிகள் – ஒரு அலசல் – 1”

15. மாலன் :: என் ஜன்னலுக்கு வெளியே…: “ஜேகே என்றொரு நீராவி என்ஜின்”

என்ன எழுதலாம்? எது கூடாது?

கண்ட இடம்: வலைச்சரப் பதிவுகளுக்கான மறுமொழிகள்

வணக்கம்.

வலைச்சரத்தில் நீங்கள் இடும் மறுமொழிகள் வலைச்சர ஆசிரியர்களை ஊக்கப் படுத்தும். எனினும் “என்னுடைய பதிவை தொகுத்ததற்கு நன்றி” அல்லது “இன்னாருடைய பதிவை சேர்க்காமல் விட்டு விட்டீர்கள்” என்பது மாதிரியான மறுமொழிகளை தவிர்க்கவும். இவை வலைச்சர ஆசிரியர்களுக்கு சில தர்மசங்கடங்களை ஏற்படுத்தும். நன்றிகூறல் தனிமடலில் இருக்கலாமே 😉

தொகுப்பு பற்றி பொதுவான பாராட்டு, விமர்சனம், குறைகள் ஆகியவற்றை சுட்டிக் காட்டும் மறுமொழிகளை வரவேற்கிறோம். பாராட்டுகள், வாழ்த்துக்கள், விமர்சனங்கள் அவசியம் தேவை.

பின்குறிப்பு: கும்மிகளுக்கு தடை இல்லை 😉

இந்த பின்னூட்ட நெறிகளை விமர்சிக்க அனுமதி உண்டா என்பதையும் தெளிவாக்கி இருக்கலாம் 😛