Tag Archives: டிப்ஸ்

Idly Vadai 9 Year Greetings

இட்லி வடை ஆரம்பித்து பத்தாவது ஆண்டு துவங்கப் போகிறது.

பத்தாண்டுகளாக தமிழ்ப்பதிவுகள் எப்படி இருக்கிறது என்று ரிப்போர்ட் கார்ட் போடலாம். பேருந்து விபத்தில் சென்னை நகரத்தின் பள்ளி சிறுவர்கள் இறப்பது போல் அது அடிக்கடி நடப்பது.

பத்தாண்டுகளில் இட்லி வடை எழுதியதில் பெஸ்ட் எது என்று பார்க்கலாம். டெண்டுல்கர் சதம் அடிப்பது போல் ஆயிரக்கணக்கான பதிவுகளில் நூறு திக்கி திணறி தேறலாம்.

சமகால ஜாம்பவான்களான பேயோன், மனுஷ்யபுத்திரன் போன்ற புனைப்பெயர்களோடு ஒப்பிட்டு அலசலாம். கோகுலாஷ்டமிக்கு கிருஷ்ணர் வேடம் அணிவது பொருத்தம் என்பது போல் இட்லி வடையில் அசுரர்களுக்கு இடம் இல்லை.

அப்படியானால் என்ன செய்யலாம்?

நீங்களும் இட்லி வடையாக ஒன்பது யோசனைகள் கொடுக்கலாம்:

1. தற்பெருமை, சுய அங்கீகாரத்தின் வெளிப்பாடாக அகங்காரம், தவறு செய்தாலும் மன்னிப்பு கேட்காத தன்மை, காதல் மன்னர்களின் வசீகரம் என்று அரசியல்வாதிக்கும் வலைப்பதிவருக்கும் உள்ள ஒற்றுமைகள் நிறைய. ஆனால், அரசியலில் வாக்கு கேட்டு வெற்றி பெற்றால்தான் மதிப்பு. வலையில் எழுதினாலே குவியும் வாக்கு.

2. இட்லி-வடை என்பது வாரிசு அரசியல் மாதிரி. முன்னுமொரு மூதாதையர் காலத்தில் இருந்து தியாகி பென்சன் பெற தகுதி பெற்றவர். நேற்றைய பினாமி பாலிடிக்சில் மில்லியனரானது போல் புதிதாக முளைத்தவர் இந்த பூமியில் காலூன்றுவது எப்படி? திண்ணை, சொல்வனம், உயிரோசை எதையும் விட வேண்டாம். ட்விட்டர், பேஸ்புக், பிண்டெரஸ்ட் எங்கும் தோன்றவும்.

3. எனக்கு ரொம்ப பிடித்தமான வினா: ‘எல்லோரும் இப்படி செஞ்சா என்ன ஆகும்?’ – அஞ்சு பைசா அன்னியன் ஆகட்டும்; எனக்கு காரியம் ஆனால் போதும் என்று கூடங்குளத்தை மூடச்சொல்லும் உதயகுமார் ஆகட்டும். உலகில் உள்ள அனைவரும் எனக்கு மட்டும் இது நடந்தால் போதும் என்று நம்பும் மனநிலையை உடைக்கலாம்.

4. எனக்கு நிரலி எழுதத் தெரியும். ஆனால், கணினி ப்ரொகிராமிங் குறித்து எழுதியது ரொம்பக் குறைவு. மொத்தம் ஏழெட்டு பதிவுகளில் இரண்டாயிரம் வார்த்தைகளை தாண்டாது. இந்த மாதிரி நம் துறை சார்ந்து எழுதலாம்.

5. சுவைக்காக தண்ணியடிப்பது ஒரு ரகம். பழக்கத்திற்காக சரக்கடிப்பது ஒரு ரகம். தூக்கத்திற்காக குவார்ட்டர் அடிப்பது இன்னொரு ரகம். எப்பொழுதாவது கம்பெனிக்காக குடிப்பது என் ரகம். நீங்கள் பதிவதில் எந்த ரகம்?

6. சண்டைக் காட்சிகளில் வாத்தியார் மூன்று அடி வாங்கிய பிறகுதான் நிமிர்ந்து திரும்பக் கொடுப்பார். பாவப்பட்ட ஹீரோவிற்கு மவுசு அதிகம். சிண்ட்ரெல்லாவிற்குத்தான் அனுதாப அலை அடிக்கும். எனவே, அவ்வப்போது உங்களை மனிதராக காட்டிக் கொள்ளுங்கள். அடக்கம் அமரருள் உய்க்கும்

7. ஒரே விஷயத்தையே கட்டி அழாதீர்கள். சங்க இலக்கியமாக இருக்கட்டும்; அரசியல் குழாயடிகளாக இருக்கட்டும். கொஞ்சம் உலகம்; நிறைய உள்நாடு; அப்படியே உங்களால் மட்டுமே எழுதக்கூடிய தனியாள் அனுபவங்கள். எல்லாம் கலந்து கட்டி அவியல் மணக்கட்டும்.

8. நாய் என்றால் கரண்ட் கம்பம் பார்த்து ஒன்றுக்கிருக்கும். வலைப்பதிவர் என்றால் மூக்கை நுழைத்து சண்டை போடுவார்.

9. என் மூளை ஔவையார் மூளை. இடது சாரியாக எல்லாவற்றையும் ஒன்று, இரண்டு, மூன்று என பட்டியல் போட்டு அழகு பார்க்கும். ஆனால், இலக்கியவாதிகளுக்கு வலப்பக்க மூளை புனைந்து கவி பாடும். வைரமுத்துவாக இரண்டையும் நன்றாக குழைத்து கருப்பு மை போட்டு வாழ்க! வளர்க!!

சமூக வலைப்பின்னல் தளங்களில் தனிமனிதர்கள் தங்கள் பொறுப்பினை உணர்ந்து செயல்படுவதற்கான வழிகாட்டுதல்கள்

புதிய தலைமுறை இதழுக்காக எழுதியது:

விவகாரம் இல்லாமல் விவகாரத்தை முன்னிறுத்துவது எப்படி?

தமிழில் மிகவும் புகழ்பெற்ற பழமொழி இருக்கிறது. ‘அரசன் எவ்வழி; மக்கள் அவ்வழி!’ இது பாஸ்டனுக்கும் பொருந்தும். பம்பாய்க்கும் பொருந்தும்.

வேகமாக வண்டியை ஓட்டினால் மாட்டிக்குவோம். அரை அங்குலாம் அதிகமாக வீட்டைக் கட்டினால் தரைமட்டமாக்கப் படுவோம் என்று பயந்து வாழ்க்கையை சட்டதிட்டத்திற்கு உட்பட்டு அமெரிக்காவில் வாழ்கிறேன். அஞ்சி அஞ்சி வாழும் வாழ்வு இந்தியாவில் கிடையாது. இணையத்தில் அந்த அச்சம் சுத்தமாக நீங்கி, டார்ஜான் போல் சுதந்திரமாக சுற்றித் திரிய முடிகிறது.

என்னுடைய வாழ்க்கையே இணையத்தில் என்றாகி விட்டது. உன் நண்பர்களைச் சொல்… உன்னைப் பற்றி சொல்கிறேன் என்பது அந்தக் காலம். உன் மின்னஞ்சல் முகவரியைச் சொல்… உன் சரித்திரத்தை அப்பட்டமாக்குகிறேன் என்பது இந்தக் காலம்.

இப்பொழுதெல்லாம் நேர்காணலுக்குச் சென்றால், ‘உங்கள் பொழுதுபோக்கு என்ன?’ என்றெல்லாம் கேட்பதில்லை. நமது ஃபேஸ்புக், டுவிட்டர் பழக்க வழக்கத்தை உளவு கண்டு அவர்களே அறிந்து வைத்திருக்கிறார்கள். ரொம்ப நேர்மையாக ‘நமக்கு அந்த மாதிரி சமூகத்தளங்களில் எல்லாம் ஐடி கிடையாதுங்க’ என்றால் அதை விட மிகப் பெரிய பிரச்சினை. எல்லாக் குரங்கும் நான்கு கால் கொண்டு தாவும்பொழுது, நாம் மட்டும் இரண்டு கால் கொண்டு நடந்தால்… பிரச்சினைதான். எனவே, சமூக வலைத்தளங்களில் நம் முகவரியும் இருக்க வேண்டும். இயங்கவும் வேண்டும். அதே சமயம் உங்களின் உண்மையான விருப்பங்களில் ஈடுபாட்டோடு செயல்பட வேண்டும்.

ஹிண்டுவில் ‘லெட்டர்ஸ் டு தி எடிட்டர்’ எழுதி நான்கு நாள் தேவுடு காத்து, அதன் பின் அது வெளியாகாத கோபத்தில் ஹிந்து மீது கோபம் கொண்டு திட்டுவது எல்லாம் மலையேறிப் போயாச்சு. சன் டிவியிலோ, குமுதத்திலோ தவறான தகவல் வந்தால், அதை உடனுக்குடன் கிழித்துத் தொங்க விட்டு, நண்பர்களைக் கொண்டு பரபரப்பாக்கி, அந்தந்த மீடியாவின் போட்டியாளர்களின் பார்வைக்கு கொண்டு செல்கிறார்கள். நாளடைவில் இந்தப் பிழை அப்படியே அமுங்கிப் போகாமல், கவனத்தில் இருக்குமாறு வைத்திருக்கிறார்கள்.

இதே போன்ற சுமைதாங்கியை எந்த வலைப்பதிவர் மீதும் சாத்தலாம். இது நம் பக்கமும் வரலாம். ஒரு விஷயத்தை வலையில் பகிருமுன் சரி பாருங்கள். இதை நம் அப்பா படித்தால்… நம் மகள் படித்தால்… எப்படி இருக்கும் என்று யோசியுங்கள். அவர்களுக்கு தகுந்த மொழியில் எழுதுங்கள்.

நம் மகளோ மனைவியோ படித்தால் நம்மை எளிதில் தொடர்பு கொண்டு அவர்கள் தரப்பு கருத்தை சொல்லலாம். மற்றவர்களுக்கு என்ன வழி? உங்களைத் தொடர்பு கொள்ளும் முகவரியை பிரதானமாகப் போடுங்கள். மறுமொழிப் பெட்டியை வைத்திருங்கள். பதில் போட பல வழிகள் கொடுங்கள்.

அதற்காக, அனாமதேயமாக வருபவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். முகங்காட்டாமல் வருபவர்கள், உங்களின் இடத்தை உபயோகப்படுத்தி பிறரை தூற்றலாம். அதற்கு இடம் கொடுக்க வேண்டாம். என் வீட்டில் நடக்கும் விருந்தில் அனைவருக்கும் இடமுண்டு. அதற்காக என் முகத்தில் குத்துபவருக்கும் இலவச இடம் தரமாட்டேன். முக்கியமாக சாப்பிட வந்திருக்கும் சக விருந்தினரை குத்த நிச்சயம் அனுமதி கிடையாது.

நீங்களும் முகமூடி போட்டு போலி மின்னஞ்சல் கொண்டு எங்காவது கருத்து சொல்லும்போது கவனமாக இருக்கவும். எந்த மாதிரி முகத்திரை போட்டாலும் அது அழுந்து தொங்கும். அது விக்கிலீக்ஸ் ஜூலியன் அசாஞ்சேயாகவே இருந்தாலும் சரி. நிச்சயம் பல நாள் போலி ஒரு நாள் அகப்படுவான்.

தகவலை பகிரும் ஆசையில் எங்கிருந்து இந்தத் தகவல் கிடைத்தது என்பதை போட மறந்து விடுவோம். இன்னாரைப் பற்றி இன்னார் என்னா சொன்ன்னார் என்று தெளிவாக இடஞ்சுட்டி விடுங்கள். இது காப்பிரைட் தகராறுகளில் இருந்து நம்மைக் காப்பாற்றும். நாளைக்கே எவறாவது அவதூறு என்று கிளம்பினாலும், ‘அந்த உடுப்பி பவன் சாம்பார்தான் இங்கே ஊற்றப்பட்டது. இது நான் சொந்தமாக சமைத்தது அல்ல!’ என்று கைகாட்டி தப்பித்து விடலாம்.

ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் யூடியூபிலும் கருத்து வந்து விழுந்தவுடன் வேகமாக எதிர்வினை செய்வது அவசியம். என்னைப் பற்றி பேசுகிறார் என்றால் சும்மா ஒட்டு மட்டும் கேட்டால் போதும். என்னைக் குறித்து தப்பான பிரச்சாரம் நடக்கிறது என்றால் அதை நிச்சயம் தட்டிக் கேட்க வேண்டும். தவறு நம் பக்கம் இருந்தால் மன்னிப்பு கேட்டு விடுங்கள். இல்லாவிட்டால், எதிராளி மன்னிப்பு கேட்கும்வரை விடாதீர்கள்.

சட்டென்று செயல்படுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.

பத்து பேரை கேட்காமல், புத்தகங்களை நாலு மணி நேரம் புரட்டாமல் கீபோர்ட் துணையோடு கூகிள் வேகம் பிடித்திருக்கிறது. கால்பந்தாட்டத்தின் கடைசி நிமிடத்தில் குறுக்கே பாய்ந்து கோல் போடும் விறுவிறுப்பான ஆட்டம் ரசிக்கிறது. திறமைக்கும் இளமைக்கும் அடையாளமாக வேகம் திகழ்கிறது. ’வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்பது போல் நான் ஈயாக இருந்தாலும் இக்கட்டான சூழ்நிலையிலும் உடனடி பாய்ச்சல் அனைவரையும் வசீகரிக்கிறது.

இந்த அபார வேகம் சமூக வலைப்பின்னல் தளங்களில் இயங்க மிகவும் தேவை. இந்த வேகத்தை நிதானம் இழக்காமல் இயக்க அசுர நிதானம் அதைவிட அத்தியாவசியமான தேவை.

டென்னிஸ் வீரரையே எடுத்துக் கொள்வோம். எதிராளி பந்து போட்டவுடன் அவசரப்படுபவரை விட அனுமானித்து ஆடுபவரே வெற்றி அடைகிறார். பந்து எங்கே விழும், எப்படி சுழலும், பந்தை எங்கே இருந்து எப்படி போடுகிறார், என்றெல்லாம் கணித்து ஆடுபவரால் மட்டுமே வேகமான பந்தை சரியாக ஆட முடிகிறது. சொல்லப்போனால் விரைவாக அடிப்பதை விட பந்தைக் குறித்த தகவல்களை சேமிப்பதே முக்கியமாகி விடுகிறது.

ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் யூடியூபிலும் கருத்து வந்து விழுந்தவுடன் வேகமாக எதிர்வினை செய்வது அவசியம். நாம் சார்ந்திருக்கும் நிறுவனம் குறித்த அவதூறையோ, நம்முடைய உயரிய விழுமியத்திரற்கு எதிரான பிரச்சாரத்தையோ தோன்றிய புதிதில் தடுத்தாட்கொள்ளுதல் மிகவும் முக்கியம்.

ஆனால், டென்னிஸ் வீரரின் கணிப்பு போல் இந்தக் விவாதம் எவ்வாறு மாறும், எங்ஙனம் உருப்பெறும் என்று யோசிக்கவும் வேண்டும்.

இதற்கு மூன்று கட்டமாக திட்டம் வகுக்கலாம்.

1) பத்தியம் – சாதாரணமாகச் சொன்னால் கவனமாக இருத்தல்; பத்தியமாக இருப்பது என்றால் பாதுகாப்பாக இருத்தல். தகவல்களையும் நண்பர்களையும் உசாத்துணைகளையும் சேர்த்தல்.

2) செயற்பாங்கு – திரும்ப திரும்ப ஒன்றை செய்வதன் மூலமே நம் வேகம் அதிகரிக்கிறது. ’எனக்கு பத்தாயிரம் வித்தை தெரிந்தவனைக் குறித்து கவலையில்லை; ஆனால், ஒரே வித்தையை பத்தாயிரம் தடவை பயிற்சி செய்தவனை நினைத்துதான் அஞ்சுகிறேன்’ என்று ப்ரூஸ்லீ சொன்ன மாதிரி பயின்ற செயல்முறையில் இருந்து ஒன்றைத் தேர்ந்தெடுத்தல்.

3) கூத்து – நடவடிக்கையை செவ்வனே நிறைவேற்றுவது.

வாரத்திற்கு ஒரு முறை என்பதற்கு பதில் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் என்றோ, ஒரு மணி நேரத்திற்கு ஐந்து நிமிடம் என்றோ தொடர்ந்த கவனிப்பில் இருக்க வேண்டும். கெட்ட பழக்கங்களை நீக்க கடும் பிரயத்தனத்தில் இறங்க வேண்டாம்; சிறப்பான நடவடிக்கைகளை அன்றாட செயல்பாடாக ஆக்கவும். அன்றாட செயல்களை தொடர்பயிற்சியின் மூலம் கூராக்கவும்.

தோட்டக்காரனைப் போல் யோசித்து, தச்சனைப் போல் செயல்படவும்.

அன்றாட செய்திகளுக்கு விமர்சனம், சமூக அவலங்களுக்கு எதிராக ஆமீர் கான் போல் அரட்டை கோஷம் என இவை எல்லாவற்றையும் விட உங்களுக்கு லட்சியமான ஒரு விஷயத்தை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். அது கனடாவின் கரடிகளைக் காப்பாற்றும் பிரச்சாரமாக இருக்கலாம்; போபால் விஷவாயுவிற்கான நஷ்டஈடாக இருக்கலாம். உங்கள் பெயரைச் சொன்னால், அனைவருக்கும் அந்த சிக்கல்தான் நினைவிற்கு வரவேண்டும்.

சிக்கல் இல்லாமல் வலையில் உலா வாருங்கள்.

இறுதியாக புத்தகத்தைப் பயில வேண்டுமானால், படித்த புத்தகத்தை மூட வேண்டும். அதே போல் சமூக நட்புகளை நிஜமாக்க வேண்டுமானால், அவர்களோடு சமூக வலைப்பின்னல் தளம் தாண்டியும் நட்பு பயில வேண்டும். அவ்வாறு தோழமைக்கு உருவமும் உயிரும் இருந்தால்தான் நம்மைக் குறித்து அவர்களுக்கு அக்கறையும் அவர்களைக் குறித்து நமக்கு பொறுப்பும் இயல்பாக உருவாகும்.

குடுகுடுவென்று காரியத்தில் இறங்காதே! காலத்தே பயிர் செய்யாமலும் இராதே!!

தொடர்புள்ள பதிவு: BBC News – Need a job? Learn to impress the robots

புத்தாண்டு வாழ்த்து

  1. வெறுமனே புத்தாண்டு வாழ்த்தாக பதிவிடாமல், படிப்பவருக்கு ஏதாவது பிரயோசனப்படுமா என்றும் யோசித்து பதிவிடவும். (உதாரணம்: பத்ரி: புத்தாண்டு உறுதிமொழி
  2. நிறைய வாசிக்கவும். (உ.: How to be picky with blog posts? – Primer for selective reading)
  3. டிப்ஸ் கொடுக்கவும். (உ.: பா ராகவன்: திருவிழாவுக்குத் தயாராகுங்கள்!)
  4. blog-stats-2008-visitor-graphs-tamil-jeyamohan

  5. பதிவொன்றுக்கு படமொன்று இடவும்.
  6. மொக்கையோ, கருத்தோ, அனுபவத்தை அணு அணுவாகப் பகிர்தலோ: 250 வார்த்தைகளுக்கு மிக வேண்டாம். (உ.: வேர் இஸ் தி பார்ட்டி – பொழிப்புரை)
  7. 250 வார்த்தைக் கோட்டைத் தாண்டுபவர், உயிரோசைக்கோ திண்ணை போன்றவற்றுக்கோ எழுதி எழுத்தைக் கூர்மையாக்கிக் கொள்ளவும். இரண்டிலும் உன் எழுத்து வெளியாகாவிட்டால், மனுஷ்யபுத்திரனை நேரில் சந்தித்து நட்பு கொள்ளலாம் (அ) அடுத்த புல்லட் பாயின்ட்டை படிக்க.
  8. இந்தப் பதிவைப் போல் புள்ளி புள்ளியாகப் பிரித்து 1,2,3 என்று இடுக.
  9. அப்படியே 250ஐத் தாண்டுமென்றால் அடுத்தவரைக் குறித்த ருசிகரத் தகவலோ, லாவகமான மொழிப்பிரவாகமோ, ஏதோவென்று உள்ளேயிருந்து கிச்சுகிச்சு மூட்ட வேண்டும். (உ.: ஜெயஸ்ரீ: பரித்ரானாய ஸாதூனாம்… – Part 2)
  10. புத்தகமெழுதிய மனிதரெல்லாம் பதிவரில்லை; பதிவு வைத்திருக்கும் மனிதரெல்லாம் புத்தகம் எழுதத் தகுதியானவரில்லை. பதிவு நடை என்பது வேறு; புத்தக ஆக்கம் என்பது வேறு. (இரட்டை குதிரை சவாரிக்கு உ.: முகில்: அகம் – புறம் – அந்தப்புரம்)
  11. முன்பே எழுதியதைத் திரும்ப திரும்ப வேறு வேறு விதமாக சொல்ல அஞ்ச வேண்டாம். (உ.: வலைப்பதிவருக்கு டிப்ஸ், புதிதாய் பதிபவர்களுக்கு வழிகாட்டி)
  12. புதிய வாசகர் தினந்தோறும் சேரும் காலமிது. எனவே, பழம்பாடல் ரீமிக்ஸாக (பதிவுக்குள்ளேயே) சொன்னதை சுவைபட மாற்றி மாற்றி எழுதிப் பதிவாக்கு. (உ.: லக்கிலுக்/யுவகிருஷ்ணா: தமிழ் வலையுலக மார்க்கெட்டிங் உத்திகள்!)
  13. அதற்காக, ஒரே சப்ஜெக்டில் அடுத்தடுத்து தொடர்ந்து எழுத வேண்டாம். (உ.: 2008ன் கலக்கல் பதிவர்)
  14. சிவனின் அடிமுடி கொண்டவராக ஒரு சப்ஜெக்டில் ஆழமான அறிவு இருப்பின், அதை மட்டும் முன்னிலை நிறுத்த தனிப்பதிவு துவங்கலாம். (உ.: தமிழில் புகைப்படக்கலை: PiT Photography in Tamil)
  15. எளிமையான வார்ப்புரு வைத்திரு. உன் பதிவுக்கு எவ்வளவு பேர் எப்படி வந்தார் என்பது எனக்குத் தேவையில்லாத தகவல். உலாவியில் சீக்கிரம் வருகிறதா என்பது மட்டுமே முக்கியம்.(டெம்பிளேட் உ.: கூடுதுறை)
  16. பாட்டு கேட்க வேண்டுமானால், எனக்கு விருப்பமானதை மனதிற்கு உவந்த முறையில் (ரேடியோ, எம்பி3, ஐபாட்) என்று கேட்டுக் கொள்வேன். தானியங்கியாக சத்தத்தை அலற விடாதீர்.(காதுக்கு கேடு உ.: தமிழ்த்துளி)
  17. பதிவின் நடுவில் பொருத்தமாக அடுத்தவருக்கு சுட்டுவதை பெருக்கவும்: chrisbrogan.com: 27 Blogging Secrets to Power Your Community
  18. உன் பதிவிற்கும் பொருத்தமான இடங்களில் தாராளமாக உரல் இடவும். (உ.: வலைப்பதிவரின் வாழ்க்கைச்சுழல் & வலைப்பூ வைரஸ்)
  19. பதிய நினைத்தால் பதியலாம்; வழியா இல்லை பூமியில்? (உ.: இராயர் காப்பி கிளப்: வலைப்பதிவுகளிலும் என்ன எழுதலாம்?
  20. அரசியல், சினிமா, சமூகம் ஆகியவை குறித்து மட்டுமே தொடர்ந்து அரியணையில் இருந்து முத்து உதிர்க்கப் போவதாக இருந்தால் ட்விட்டர் மட்டுமே உங்களுக்குப் போதுமானது. (உ.: ட்விட்டர்: எளிய அறிமுகம்)
  21. 250 ஆகிவிட்டது. முற்றும்.

ஆரோக்கியம் | பாரா-பேப்பர்

  • எந்தக் கீரையானாலும் சரி. மணத்தக்காளி, பொன்னாங்கன்னி, அரை, முளை, முருங்கை என்று கிடைத்ததையெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு சாப்பிடலாம். ஒரு வேளை சோற்றுக்கு பதில் கீரை மட்டுமே சாப்பிட்டால்கூடத் தவறில்லை.
  • எதைச் சாப்பிடலாம், எது கூடாது என்பது ஒரு விஷயமே இல்லை. எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதுதான் முக்கியம்.
  • உடல் பருமனுக்கு வித்திடும் உணவுப்பொருள்களை மட்டும் தவிர்த்துவிட்டு, நார்ச்சத்து மிக்க உணவுகளை நிறைய உட்கொள்வதன்மூலம் பசியின்றி இருக்கவேண்டியதுதான் டயட்டின் முதல் விதி.
  • மாறாக வயிற்றை காலியாகவே எப்போதும் வைத்துக்கொள்வதன்மூலம் வாயுத்தொல்லைக்கும் வேறு பல பக்கவிளைவுகளுக்கும் ஆட்பட நேரிடும்.
  • டயட்டில் இருப்பவர்கள் தூக்கத்தைக் குறைத்துக்கொள்ளக்கூடாது
  • தவறிக்கூட எண்ணெய் ஐட்டங்களைத் தொடாதீர்.

முழுவதும் வாசிக்க: ஆரோக்கியம் | பாரா-பேப்பர்

முந்தைய பதிவு: உடல் பருமன் « Snap Judgment

இன்னும் சில துப்புகள்:

  1. தங்களின் தட்டை மூன்றாக வகிர்ந்து கொள்ளுங்கள். புரதம் நிறைந்த சாப்பாடு ஒரு பாகம்; உள்ளங்கை சைஸைத் தாண்டாமல் இருக்கட்டும்; சிக்கன், மஞ்சக்கரு நீக்கிய முட்டை, தானிய வகை… ஏதாவது; பாக்கி இரு பாகத்தில் காய்கறி + பழம்; எண்ணெய் பேக்கு என்றால் ஆலிவ் ஆயிலில் வதக்கிய வெண்டைக்காய் கறி மாதிரி சிலது மட்டும் ஒக்கே!
  2. இரவில் லேட்டாக சாப்பிடாதீர்கள். சாயங்காலம் ஏழு மணிக்குள் சாப்பிட்டு விட்டு, ஒன்பது மணிக்கு மேல் தூங்கும் வரை கொறிக்காமல் இருக்கவும். காலையில் எழுந்தவுடன் கபகபன்னு பசி வயித்தைக் கிள்ளணும். நான்கு மணி நேரத்துக்கொருமுறை மினி மீல்ஸ் – தியேட்டர் போல் 7 மணி காலை; 11 மணி பகல் காட்சி; மூன்று மணி மேட்டினி; கடைசியாக 7 மணி இரவு.
  3. காலையில் 25 தோப்புக்கரணம் – இருமுறை; காரி பார்க்கிங் என்றால் தள்ளி நிறுத்துவது; என்னை மாதிரி ட்ரெயின்/பஸ் பயணம் என்றால், முந்தின நிறுத்தத்திலேயே இறங்கி, லொங்கு லொங்கென்று விறுவிறு ஓட்ட நடை. ஒரு மணி நேரத்துக்கொருமுறை அலுவலில் ரவுண்ட்ஸ் செல்வது; நிறைய தண்ணீர் அருந்திக் கொண்டே இருப்பது (வறுமையின் நிறம் சிவப்பு கமல் போல் 😦
  4. ஆயிரம் டாலருக்கு சோபா வாங்கிப் போட்டிருப்பது அடுத்தவருக்காக. உங்களுக்கு சொகுசாக உட்கார்ந்து கொள்ள அல்ல. நிமிர்ந்த தோள்களுடன் கூன் விழாத posture தொப்பையை நீக்குவதற்கு அவசியம். முதுகு வலி வராத மாதிரி ஆனால் அனந்த சயன போஸ் கொடுக்காமல் உட்காருங்கள்.

கடைசியாக பாரா பன்ச்:

இது ஒரு புறமிருக்க, என்னுடைய எடைக்குறைப்புப் பிரதாபங்களை அடுத்தவருக்கு விளக்குவதில் விரைவில் பெரிய ஆர்வம் வந்துவிட்டது. என்னைக் கண்டாலே பின்னங்கால் பிடறியில் பட கதறி ஓடும் மக்கள்கூட்டம் அதிகரித்தது. மாட்னா மவன செத்த. டயட் பத்தி பேசியே சாவடிச்சிடுவான்.

31st Chennai Book Fair 2008 – Small biz vs Big box Retailers

பதிப்பாளர் ஒருவர், அரங்குகள் நான்கா?

இந்த ஆண்டு ஒரு பதிப்பகத்தைச் சேர்ந்தவர்களே ஒன்றுக்கும் மேற்பட்ட அரங்குகளை எடுத்து தங்களுடைய புத்தகங்களை விற்பனைக்கு வைத்துள்ளனர். இதனால் சிறுபதிப்பாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். பதிப்பாளர் சங்கத் தலைமையிடம் செல்வாக்கு உள்ளவர்களுக்கு இவ்வாறு இடம் ஒதுக்கப்படுகிறதோ என்று சந்தேகம் ஏற்படுகிறது.

அடுத்த ஆண்டு சரி செய்யப்பட்டுவிடும்…’

ஒருவர் தனது பெயரில் ஒரு பதிப்பகமும், மனைவி பெயரில் இன்னொரு பதிப்பகமும், உறவினர் பெயரில் மற்றொரு பதிப்பகமும் வைத்திருந்தால் மூவரும் சங்கத்தில் உறுப்பினர் ஆக முடியும். இந்த மூவர் பெயரிலும் அரங்குகள் வேண்டும் என்று கேட்கிறபோது நாங்கள் சங்கத்தின் சட்டதிட்டங்களுக்கும் விதிகளுக்கும் உட்பட்டு அரங்குகள் ஒதுக்க வேண்டியதாக உள்ளது.

சில பதிப்பகங்கள் தங்களுடைய அரங்கில் மட்டும் தங்கள் பதிப்பகத்தின் புத்தகங்களை விற்காமல் பிற அரங்குகளிலும் விற்பனைக்கென கொடுத்து விடுகிறார்கள். இதனால் எங்கு பார்த்தாலும் ஒரு சில பதிப்பகங்களின் புத்தகங்களே இருக்கின்ற சூழ்நிலை உருவாகிவிட்டது…சிறுபதிப்பாளர்களின் புத்தக விற்பனை குறையும் வாய்ப்பும் உள்ளது.

தினமணி: இந்த ஆண்டு மொத்தம் வந்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 49 ஆயிரம்.

நடுவில் என்னுடைய மறுமொழி:

ஒருவரே பல பெயரில் பதிப்பகம் நடத்துவது ரொம்ப காலமாக நடந்து வருகிற விஷயம். கிழக்கு போன்றவர்கள் அதை வெளிப்படையாக செய்கிறார்கள். வானதி பதிப்பகத்தார் போன்ற பழம்பெரியவர்கள் இதையே கமுக்கமாக நீன்ட நெடுங்காலமாக நடத்துகிறார்கள். ‘நாலு ஸ்டால் போட்டு இருக்காங்களே’ என்பது வளர்ந்தவரைப் பார்த்து பொறாமை பாராட்டும் குணம்.

‘சிவாஜி’ படம் ஊரில் அகப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் வெளியாவது போல், குறிப்பிட்ட பதிப்பகத்தின் புத்தகங்கள் அனைத்து விற்பனை அரங்குகளிலும் கிடைக்க செய்வது வியாபார சூட்சுமம். ‘கமிஷன் தண்டம் அழ வேண்டுமே’ என்றால் விற்பனையாகும் அளவு குறைந்து போனாலும், நிகர லாபம் கூட்டிக் கழித்துப் பார்த்தால் சரிசமமாகும்.

உள்ளே இருப்பவர்களுக்குத்தான் இது உண்மையா என்று தெரியும்.

பாதி கடந்த நிலையில் பத்ரியின் எண்ணங்கள்:

சிறு பதிப்பாளர்களுக்கு ஏதோ ஒரு வகையில் மான்யம்… அதாவது அவர்களுக்கு மட்டும் குறைந்த விலையில் ஸ்டால் கொடுக்க ஏற்பாடு செய்யலாம். அப்படியானால் யார் சிறு பதிப்பாளர்கள் என்ற வரைமுறையும் (ஆண்டுக்கு என்ன டர்ன் ஓவர் என்பதைக் கொண்டு இருக்கலாம்) அதற்கான ஆடிட் சான்றும் இருந்தால் இதனைச் செய்யலாம்.

பி.கே. சிவகுமார்:

புத்தகக் கண்காட்சி இல்லாதபோது விற்பனைக்குப் புத்தகக் கடைகளைச் சார்ந்து வாழ்கிற பதிப்பகங்கள், ஒன்று புத்தகக் கண்காட்சியிலும் புத்தக விற்பனை நிலையங்களுக்கு இப்போது போலவே Equal இடம் கொடுக்க வேண்டும் அல்லது அவர்களுக்குப் புத்தகக் கண்காட்சியில் இடமே இல்லை என்று சொல்ல வேண்டும். இடமே இல்லை என்று சொல்ல முடியாது. சொல்லிவிட்டால், வருடத்தில் பதினோரு மாதங்கள் இந்த விற்பனையாளர்களின் தயவு இல்லாமல் புத்தகங்கள் விற்காது.

ஆதலால், ஒரு புத்தகம் பல கடைகளில் கிடைப்பது ஜனநாயகம்.

இந்தக் கடையில் மட்டுமே இந்தப் புத்தகம் இருக்க வேண்டும் என்கிற குறுகியகால லாபங்களை மனதில் கொள்ளாது செயற்படுவதே நல்லது. பல கடைகளில் ஒரு புத்தகம் கிடைத்தாலும் பதிப்பாளருக்கு நஷ்டமில்லை. 30%-லிருந்து 40% கமிஷன் கொடுக்க வேண்டியிருந்தாலும் அது லாபமே. அந்த கமிஷன் லாபமும் தனக்கே வரவேண்டும் என்று நினைப்பது என்னைப் பொருத்தவரை நிச்சயம் சரியில்லை.