
அரியணை என்பார்கள் சில பேர்கள்; கொல்லைக்கு என்பார்கள் அந்தக் காலத்தவர்கள்; ‘எக்ஸ்யூம் மீ‘ கேட்டுப் போவார்கள் நவநாகரிகர்கள். எல்லாத்துக்கும் ஒன்றுதான் இலக்கு – ‘காலைக்கடனை மாலையில் செய்தாலும் காலைக்கடனா?’ என்று செந்தில் கவுண்டமணியிடம் கேட்டால் நகைச்சுவை. இனி ‘ரெண்டுக்கின் கதை‘.
காலைக்கடனையும் வலையில் மேய்வதையும் சரிசமமாகக் கழிக்க கருத வேண்டும்.
- இரண்டுமே அளவோடு இருத்தல் முக்கியம். நேரங்காலம் தெரியாமல் போய்க்கொண்டிருக்க கூடாது.
- கண்ட இடத்தில் சென்றால் ஜாக்கிரதையாக கிருமிநாசினிகளை தெளித்து பயன்படுத்த வேண்டும். பாதுகாப்பாக செல்லாவிட்டால் தொற்று வியாதி பீடிக்கும் அபாயம் உண்டு.
- வேலையை முடித்த பிறகு, சென்ற சுவடே இல்லாமல் தனிப்பட்ட விஷயங்களை ஒழுங்காக சுத்தம் செய்தல் அவசியம்.
- திறந்தவற்றையெல்லாம் மூடிவைத்துவிட்டு வெளியேற வேண்டும். அடுத்தவர் எட்டிப் பார்த்தால் எதுவும் தெரியக்கூடாது.
- சிக்கலாக இறங்கிக் கொண்டிருந்தால், செரிமானத்தில் போதிய நடவடிக்கை தேவை. இங்கே காய்கறிகளை வெட்டவும்; அங்கே வீடீயோக்களை வெட்டி விடும்.
- ரொம்ப உட்கொண்டால் அஜீரணமாகி ஒவ்வாமை ஏற்பட்டு, எங்கும் துர்நாற்றம் எழவைக்கலாம்.
- இரண்டுமே வர வேண்டிய நேரத்தில் வராவிட்டால், நித்திரை நிர்மூலமாகி அவஸ்தை கொடுக்கும்.
- இரண்டும் இடங்களிலும் செல்லும் இடத்திலெல்லாம் அனானியாக கிறுக்கி வைக்கலாம்.
வலைவலத்திற்கும் மலஜலத்திற்கும் பாக்கி உள்ள ஆறு வித்தியாசங்களை ஆற அமர அங்கே இருக்கும்போது யோசிக்குமாறு வீட்டுப் பாடம் தந்துவிட்டு சொந்தக் கதைக்கு போவோம்.
பாட்டி ரொம்ப ரொம்ப ஆசாரமானவள். ‘கோமாதாடா… மஹாலஷ்மியே குடியிருக்கா’ என்றவுடன் பெசன்ட் நகருக்கு செல்லாமலேயே தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியுடன் தொட்டு கும்பிட சென்றது நினைவில் இருக்கிறது.
‘உதயம்’ படத்தில் அமலாவைக் கடத்தி செல்லும் காட்சி நினைவிருக்கிறதா? சத்தவஹனா எக்ஸ்பிரெஸ் போன்ற ஏதோ ஒரு வண்டி செல்வதற்காக லெவல் கிராசிங்கில் காத்திருந்தால், ட்ரெயின் சென்றவுடன் அந்தப் பக்கம் நாகார்ஜுனா இருப்பார். அந்த மாதிரி, நான் பசுவை தொட்டு வணங்க சென்றவுடன் எனக்கு கோமிய அபிஷேகம் லபித்தது. ராம் கோபால் வர்மாவுக்கும் இந்த மாதிரி தடாலடி டைமிங் கிடைத்திருக்க வேண்டும். அதை உருவி உதயமாக்கிவிட்டார்.
கோடைகாலத்துக்கு ஏற்ற சூடான அருவி. இன்றளவில் சூடான விசயம் ஒகேனக்கல்.
‘எப்பா… இவ்வளவு மூத்திரம் அடிக்குதே இயற்கை? இதற்கும் நியுசன்ஸ் கேசு போடுவதே அண்ணன் கை!’ என்று கவிப்பேரரசர் வைரமுத்து விஜயகாந்த்துக்கு பாட்டெழுதினால் பன்ச் பறக்கும்.
காவேரி பொங்கி வந்தால்தான் பிரச்சினை இல்லை. பிரயாணத்தின்போது பொங்கி வந்தால் மிகக் கொடுமை. அதுவும் நிகழ்ந்திருக்கிறது.
புது தில்லிக்குள் புகுந்திருந்த புதுசு.
ஹிந்தியைத் தமிழில் கூட படிக்கமாட்டோம் என்ற இறுமாப்புடன் வளர்ந்த நண்பர்கள், என்னுடைய வடமொழி புலமையை மெச்சி, ‘மாம்ஸ்… இந்த வண்டி டிஃபன்ஸ் காலனி போகுமான்னு விசாரி’ என்று அனுப்பி வைத்தார்கள். ‘ஏ பஸ் கைஸே சல்தே ஹைன்?’ என்று நான் வினவ, நடத்துனர் சொன்ன ‘பெட்ரோல்’ பதில் எல்லாருக்கும் புரிந்து என்னுடைய மொழி ஆளுமையை இன்றும் சந்தேகாஸ்தபமாகப் பார்ப்பது தனிக்கதை.
இப்படிப்பட்ட ஹிந்தியை வைத்துக் கொண்டு, ராஜஸ்தான்-ஜெய்ப்பூர் சுற்றுலாவில் அர்த்த ராத்திரி அரைத் தூக்கத்தில் ஓட்டிக்கொண்டிருந்த ஓட்டுனரிடம் பிரச்சினையை விளக்கிய சோகக் காவியத்தை சொல்ல ஆசைதான். ஆனால், அதைவிட சட்டென்று நினைவுக்கு வந்த ஒன்றைக் கூறி இந்த அமர்வை பூர்த்தி செய்யலாம். சாஸ்திரீய ஹிந்துஸ்தானி முறை கக்கூசையும் மேற்கத்திய நாகரிக டாய்லெட்டையும் ஒப்பிட்டு நிறைய நகைச்சுவை குஷ்வந்த் சிங் துவங்கி குழும மடல் வரை மணம் வீசும்.
மிஸ்டர் எக்சுக்கு அதுதான் முதல் விமான பயணம். அமிஞ்சிகரையைத் தாண்டாதவருக்கு ஏரோபிளேன் சுற்றுலா. விமானத்தில் கொடுத்ததெல்லாம் சாப்பிட்டதில் வயிறு கலக்குகிறது. இவரைப் போல் இன்னும் பலரும் பெரிய வரிசையாகக் காத்திருக்க, தன் அவஸ்தையை அழகான விமானப் பணிப்பெண்ணிடம் நாணிக் கோணிக் கொண்டு அவசரமாக உணரவைக்கிறார்.
“அவசரத்துக்கு பாவமில்ல. மகளிர் கழிவறையை உபயோகிச்சுக்குங்க. ஆனால், அங்கே மூணு பொத்தான் இருக்கும்! அதை மட்டும் தொடாம இருக்கணும்! புரிஞ்சுதா?” என்று கண்டிப்புடன் அனுப்பி வைக்கப் படுகிறார்.
வந்த காரியம் ஸ்வஸ்தமாக நிறைவேறுகிறது. சொன்ன மாதிரியே மூணு பட்டன் இருக்கிறது. மஞ்சள், சிவப்பு, பச்சை நிறங்களில் அழுத்த அழைக்கிறது.
ஆர்வம் தாங்காமல் மஞ்சள் பொத்தானை தட்டுகிறார். என்ன ஆச்சரியம்! வேகமாகவும் பீய்ச்சாமல், வென்னீராகவும் ஊற்றாமல், சில்லென்று விறைக்காத இளஞ்சூட்டோடு தண்ணீர் கழுவி விட்டுவிடுகிறது. ‘இதைப் போய் அமுக்கக் கூடாதுன்னு சொல்லிட்டாளே’ என்று ஆப்பிள் விழுந்த நியூட்டனாக அடுத்து சிவப்பை தட்டிவிடுகிறார்.
முடி வெட்டியவுடன் ஷாம்பூ போட்டு தலை துவட்டுவது போல் தாலாட்டாக தசைகளை பிடித்து விட்டு, உலர்த்திவிடுகிறது. ‘இதுவல்லவா சொர்க்கம்’ என்று பச்சை விசையை முடுக்குகிறார்.
மூர்ச்சையடைந்து, ‘நான் எங்கிருக்கிறேன்’ என்னும் வசனத்துடன் மருத்துவமனையில் துயில் களைகிறார். அருகே பரிவு கலந்த கோபத்துடன் அதே அழகுடன் விமான சிப்பந்தி.
“நான் எத்தனை தடவை சொன்னேன்? கேட்காம அந்த பச்சை பட்டனை அமுக்கியிருக்கே… மாதவிடாய் வரும் சமயம் வச்சுக்கும் தக்கை அடைப்பானை எடுக்கிறது அது! உன்னோட ஆணுறுப்பு தலைகாணிக்கடியில் பத்திரமா இருக்கு”
கடைசியில் கருத்து சொல்லாமல் போக இது கமல் படம் அல்ல என்பதால்…
அந்தக் காலத்தில் பஞ்சகவ்வியம் புனிதப்பசு என்றால் இன்று சிறுநீர் நிறைந்த இலக்கியம் புனிதப்பசு.
வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் இரண்டாமாண்டு விழா போட்டிக்கான இடுகை: சங்கம்னா ரெண்டு