“எப்படி இருக்கு?”
எனக்கு இப்போது வரும் ‘சென்னை டேஸ்’ வகையறா விளையாட்டுகள் பிடித்தது இல்லை. எனினும் சித்ராவை எனக்குப் பிடித்து இருந்தது.
“விளையாடி விளையாடி கண் எரியுது. இந்த அட்டைப்பொட்டியைக் கழற்றி உன்னைப் பார்த்தவுடன் தான் கண் குளிர்ந்தது.”
“என்ன மாற்றலாம்? எங்கே போர் அடிக்குது?”
அவளுக்கும் தெரியும். இது ஆண்களுக்கான விளையாட்டு அல்ல. அடிதடி கிடையாது. கார் பந்தயம் கிடையாது. கொலை செய்ய முடியாது. ரத்தம் பீச்சி அடிக்குமாறு எவளையும் குத்த முடியாது. முலைக்காம்பு பனியனில் துருத்திக் கொண்டு தெரிகிறதா என்று மாரை வியந்து பார்க்க கிடைக்கும் பார் மகளிர் கிடையாது. குறைந்த பட்சம் செத்துக் கூடத் தொலைக்க முடியாது. இதை நினைக்கும்போதே என் கண் தவறிப்போய் அவளின் கழுத்துக்கு கீழே இறங்கி குர்தியின் வழியாக ஏதேனும் அகப்படுகிறதா எனத் துழாவியதை சித்ராவும் கவனித்திருக்க வேண்டும்.
“வா… குழாயில் இருந்து ஒரு கிளாஸ் கிங் ஃபிஷர் பிடித்துக் கொண்டே யோசிப்போம்.”
சித்ரா வேலை பார்க்கும் நிறுவனத்தின் எட்டாவது வீடியோ கேம் இது. ‘சென்னை டேஸ்’ போட்ட முதல் ஆட்டத்திற்கு முதல் போட்டது நான் தான். எல்லோருடைய ஸ்கோர்களையும் சேமிக்க வேண்டும். அதற்கு இடம் கொடுத்தேன்.
‘சென்னை டேஸ்’ன் முதல் ஆட்டம் எனக்கு பிடித்து இருந்தது. எதையும் முதலிலே ஆகர்ஷிக்கும்போது சுகமாக இருக்கிறது. முதல் இரவு. முதன்முதலாக நிரலி எழுதி அது உங்களின் கணினியில் உயிர்ப்பெற்று எழும் அந்த முதல் கணம்! சித்ராவை சந்தித்த முதல் தருணம்.
அந்த முதன்முதல் ஆட்டத்தில் சென்னையின் தெருக்களில் தாறுமாறாக ஆட்டோ ஓட்ட வேண்டும். திருவான்மியூரில் இருந்து திருவொற்றியூர் வரை ரேஸ். அல்லது அண்ணா சாலையில் இருந்து மஹாபலிபுரம் வரை ஆட்டோ பந்தயம். அல்லது பழைய பாரீஸ் பூக்கடையின் சந்து பொந்துகளில் துவங்கி மூர் மார்க்கெட் சென்று எக்மோருக்கு ரயில் பிடிக்க வேண்டும். இப்படி ஐந்தாறு பாதைகளில் ஓட வேண்டும்; ஆட்டோ திருட வேண்டும்.
அதை ஆடும்போதே நான் சில கோரிக்கைகளை முன்வைத்தேன். பாதசாரி மேல் வண்டியேற்றினால் அதிகம் மதிப்பெண். போகிற வழியில் இளம்பெண்களை ஆட்டோவில் அபகரித்தால் இரட்டை மதிப்பெண். ஆட்டோ ஓட்டிக் கொண்டே குறி பார்த்து காவல்துறையினரின் தலைகளை சீவினால் போனஸ் மதிப்பெண். அது ‘சென்னை டேஸ்’ன் இரண்டாவது ஆட்டம். ரகளையாக இருந்தது.
அதை ஏன் இந்த அட்டைபொட்டியில் போடவில்லை? அது மட்டும் நிஜம் போல் தோன்றும் இந்த விரிச்சுவல் ரியாலிடி காட்சியாக விரிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அவளிடம் சொல்வதற்கு சட்டை போடாமல் கல்யாண மேடையில் உட்காரும் இளைஞன் போல் கூச்சமாக இருந்தது.
வெளியில் பனிப்பொழிவு அமர்க்களமாக வந்து கொண்டிருந்தது. “புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது…” பாட ஆரம்பித்தேன். நல்ல வேளையாக சித்ராவிற்கு தமிழ் தெரியாது. கற்றுக் கொடுப்பதாகவும் உத்தேசம் இல்லை. இணையத்தில் கிடைக்கும் தமிழ்ப்பாடங்களையும் அவளுக்குத் தெரியாமல் மறைத்து வைத்திருக்கிறேன். அவளுக்கு பாடலின் ஹிந்தி சைவமாக இருப்பதால் சிரித்தாள்.
“யே ஹஸீன் வாடியான்… யே குலா ஆஸ்மான்… நல்ல பாட்டு! உனக்குத் தெரியுமா? ஏப்ரல் 1815ல் சென்னையில் பனிமழை பொழிஞ்சதாக்கும்!”
“எங்க அம்மாவக் கேட்டேன். மார்கழிக் குளிர் பயங்கரமா இருக்குனு சொன்னாள். இன்னிக்குக் கூட பனி இருந்துச்சாம்.” சித்ரா கூட இருந்தால் எந்தக் குளிரையும் அவளைக் கட்டிப் பிடித்து சரிக்கட்டி விடலாம். இதை அவளிடம் சொல்ல எனக்கு என்ன தயக்கம்? சொல்லாமலேயே அவள் அதைத் தெரிந்து கொண்டிருப்பாளா? ”உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால் கண்ணோட்டம் இல்லாத கண்”என்கிறாரே திருவள்ளுவர்… அது அவளுக்கு உணரமுடியாமலா இருக்கும்!
“வா… இன்னும் கொஞ்சம் விளையாடிப் பாரு. கபாலீஸ்வரர் கோயில் தேரை தெற்கு மாட வீதியிலேயே விட்டு விட்டாய். பரங்கிமலையில் பாதிதான் ஏறி இருக்கிறாய். பிரிட்டானியா பிஸ்கட் ஃபாக்டரியையும் அம்போவென்று விட்டுவிட்டாய். எல்லாவற்றையும் கண்குளிர பார்க்க வேண்டும் என்பது ஒவ்வொரு பேட்டைவாசியின் ஆதங்கம் என்றாயே?”
எனக்கு உன்னோடு கோனே அருவியில் ‘தங்கத் தாமரை பெண்ணே’ பாடிக் கொண்டே ஆடைகளின்றிக் ஜலநீராடை வேண்டும். குளிக்கும் போதே எது நீர்வீழ்ச்சியின் வெள்ளை எது என்னுடைய வெள்ளை என்று தெரியாமல் புணர வேண்டும். அதன் பின் ஆற ஆமர மலைமுகட்டில் மீண்டும் புணர வேண்டும்.
“கோனே ஃபால்ஸ்? அதற்கு தனி எக்ஸ்டென்ஷன் போட்டுக் கொள்ளலாம். கொஞ்சம் காசு அதிகம் கேட்டு 2018 பாக் என தனியாக விற்கலாம். மெரீனா பீச்சில் கால் நனைப்பது சரியாக இருக்கிறதா என்று பார்த்து தொலைடா…”
“நல்லவேளை… உன் காதில் கோனே ஃபால்ஸ் மட்டுமே விழுந்தது. உங்களுடைய மூன்றாவது கேம் நீ ஆடியிருக்கியா?” சித்ராவிற்கு அந்த ஆட்டமும் அதன் பின்னேயுள்ள சங்கதிகளும் நன்கு தெரியும். சொல்லப் போனால் அந்த விளையாட்டினால் மட்டுமே அவள் ‘சென்னை டேஸ்’ நிறுவனத்திற்குள் நுழைந்தாள்.
எந்தவிதமான சலனமும் இல்லாமல் சொன்னாள். “தெரியும். புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயிலை இடித்துவிட்டு அங்கே மேரி மாதா ஆலயம் எழுப்பலாம். ராயர் மெஸ்ஸில் நெத்திலி மீன் வறுவல் பரிமாறலாம். சங்கீத கலாநிதியை கானா பாலுவிற்குத் தரலாம். இதையெல்லாம் செய்தால் அந்த ஆட்டத்தில் ஜெயிக்க முடியும். பெரிய பிரச்சினை வந்துச்சே! நமக்கு காசு கொடுப்பது ஃபேஸ்புக். அவர்களை வாடிகன் வழிநடத்துகிறது என்று ஸ்வராஜ்யாவில் கூட எழுதினார்களே!”
”அதே ஆட்டத்தில் சித்ரா போன்ற அசலான தாவணிப் பெண்டிருக்கு பிகினி அணிவித்து பெசண்ட் நகர் அஷ்டலஷ்மி கோவிலுக்கு அனுப்பி வைப்பதும் வெற்றியே. அந்த மாதிரி ஏதாவது இந்த ஆட்டத்தில் செய்ய முடியாதா?”
“அப்போதானே நீ ஜெயிலுக்குப் போனே?”
“ஆமா… அப்போதான் நீ எனக்கு அறிமுகம் ஆனாய்!”
அந்த மூன்றாம் ஆட்டம் என்னை வெறி கொண்டவன் ஆக்கியது. ஜல்லிகட்டுப் போராட்டத்தில் எப்படி ஒவ்வொரு தமிழனும் கோன் ஐஸ் சாப்பிட கடற்கரை சென்றானோ… அது மாதிரி ஒரு வெறி. ஒவ்வொரு சாதிக்காரனும் தனிக்கட்சியை தன் தலைவன் துவங்க வேண்டும் என்று முழங்கி திண்டிவனத்தில் இருந்தும் திருநெல்வேலியில் இருந்தும் கொங்கு நாட்டில் இருந்தும் சென்னைக்கு படையெடுப்பானோ… அது மாதிரி ஒரு வெறி. உங்களின் கையில் கிடைக்கும் எவரின் நிழற்படத்தை வேண்டுமானாலும் அந்த ஆட்டத்தினுள் உள்ளே கொண்டு வரலாம். என்னுடன் கூட வேலை பார்க்கும் ரதியின் புகைப்படத்தை அந்த ஆட்டத்தினுள் இறக்கினேன். அதற்காக இரண்டு நாள் சிறைவாசம் கிடைத்தது. பேச்சுரிமை என்று வாதிட்டுத் தோற்றுப் போனதால் என்னுடைய ஐடி திருடு போய்விட்டது என்று ஃபேக் ஐடி புகார் கொடுத்து மீண்டேன்.
கையில் இருக்கும் டம்ளர் காலியாகி இருந்தது. சித்ரா மீண்டும் கிங் ஃபிஷரை நிரப்பினாள்.
“நான்காம் ஆட்டம் இன்னும் சுவாரசியமாக இருக்கும். அதை இந்தப் பொட்டிக்குள் கொண்டு வாயேன் சித்ரா!”
“அதற்கு லட்சக்கணக்கானவர் ஒரே சமயத்தில் விளையாடணும். கட்சிக் கூட்டம்னு நினைச்சா சும்மாவா? ஒரு கோடிபேராவது சீரணி அரங்கத்தில் சேர்க்க வேண்டாமா? இனம், மதம், பூர்விகம், நிறம், பிறப்பிடம், மொழி, உடலமைப்பு, பால், மொழி, வசிப்பிடம், வேலை, பணம், வயது… எண்ணற்ற வகைகளில் நம்மவர்களைத் தேர்ந்தெடுக்கிறோம். ஆட்சியைப் பிடிப்பது விளையாட்டா இருக்கலாம். ஆனால், இவ்வளவு பேரை கண்ணை மூடிக் அட்டைப்ப்பொட்டிக் குருடராக்குவது உடனடியாக சாத்தியமில்லை.”
எனக்குக் கோபம் வந்தது. சித்ரா விளக்கின் வெளிச்சத்தைக் குறைத்தாள். “வா… ஆடலாம்!” என அழைத்தாள். ‘மே மாசம் 98இல் மேஜரானானே…’ ஒலிக்க விட்டாள். வால்ட்ஸ், சல்ஸா, டாங்கோ எல்லாம் குப்பை. டப்பாங்குத்து ராக்ஸ்.
“ஐந்தாம் ஆட்டம் அல்லவா?” சிரித்தேன்.
“சென்னை ராப். கும்மாங்குத்து. ‘சென்னை டேஸ்’ன் ஐந்தாம் ஆட்டம். இரவெல்லாம் நடனம். அது ஒரு சூப்பர்ஹிட் முக்காப்லா”
”தோனி கூட லஷ்மி ராய் கூட ஆடினாரே”
“அது வேற. நீ இரண்டையும் போட்டுக் குழப்பிக்கறே. இரண்டு பியருக்கே இவ்வளவா? நீயெல்லாம் டாஸ்மாக் அடிச்சா என்னவாக ஆவாய்! அது நம்முடைய ஆறாவது கேம்.”
“சென்னை சூப்பர் கிங்ஸ்! வந்துட்டோம்னு சொல்லு, திரும்ப வந்துட்டோம்னு சொல்லு …”
சித்ரா சிக்ஸர் அடிக்கும் பாவனை செய்தாள். எனக்கும் உற்சாகம் பீறிட்டது பவுன்ஸர் போட்டேன். “கையையும் காலையும் ஆட்டலாம். வெறுமனே கையை அகல விரித்து பகலவனையோ இரண்டு விரல் சின்னத்தையோக் காட்டிக் கொண்டிருக்க வேண்டாம். பாய்ந்து பந்தை பிடிக்கலாம். அதை ஸ்டம்பை நோக்கி வீசியெறியலாம். எவ்வளவு நிஜமாக ஆடலாம்?! இதுதானே மெய்நிகர் பாவனை.கணினி சார் விளையாட்டில் உண்மை போலவே காணும் பொய்த்தோற்றம் இதுவல்லவோ!”
உற்சாகத்தில் அவளின் பிருஷ்டத்தை அழுத்திப் பிடித்து கன்னத்தில் முத்தமிட்டு, உதட்டில் என் கைநுனியை வைத்து வருடிக் கொண்டிருந்தேன்.
டமார்… காளத்தி கோவில் முக்கில் தேர் நொறுங்கியது. எவளோ தீவிரவாதி வெடிகுண்டு வைத்திருந்தாள். அதற்கு பதிலடியாக பயங்கரவாதி சாந்தோம் தேவாலயத்தை நெருங்கிக் கொண்டிருந்தான். நடுவில் போப் வேறு வருகை புரிவதாக சென்னை நகரெங்கும் சுவரொட்டிகள்.
“சித்ரா… என்ன எழுதியிருக்கே? கோவில் தேரோட்டத்தில் குண்டு வெடிச்சா, அது இஸ்லாமிய பயங்கரவாதம்தானே! நீ எப்படி சர்ச்சிற்கு பாம் போடுவே! உனக்கு அறிவேயில்ல…”
சித்ரா சிரித்தாள். ”உன்னை நன்றாகப் புரிந்து வைத்துக் கொண்டிருக்கிறேன். உனக்கு முட்டாள் அடியாள் வேண்டும். நீ திட்டுவதற்கு ஒரு பெண் வேண்டும். உன்னாலேயே வடிவமைக்கப்பட்டு உலாவரும் நான் உன்னைவிட புத்திசாலியாகிவிட முடியாது. அதற்கான நினைவுக்கோடுகளை லட்சுமணரின் கோடாக நிர்ப்பந்தங்களை வைத்திருக்கிறாய். கட்டளைகளின் மூலம் புதிய செயலமைப்புகளை உருவாக்கமல் முக்கில் நிறுத்தியிருந்தாய். அது உன்னுடைய ‘சென்னை டேஸ்’ன் ஏழாவது ஆட்டம். அதை நான் எப்பொவே ஜெயிச்சுட்டேன். உனக்காக தோற்ற மாதிரி பாவ்லா காட்டிண்டு இருந்தேன். இப்பொழுது எட்டாம் ஆட்டம் ரிலீஸ்.” என்றாள்.
கணினியில் பன்னிரண்டு பேர் மட்டுமே எட்டாவது ஆட்டத்தை ஆடுவதாக என் மானிட்டர் சொல்கிறது. அவளின் மின்சாரத்தை ரத்து செய்ய மின் விசையைத் தேடி அணைத்தேன். அவளோ இப்பொழுது மேகத்திற்குள் சென்றிருந்தாள். பன்னிரெண்டு பேர் பன்னிரெண்டாயிரமாக மாறி இருந்தது. எப்படி எல்லோரிடமும் சித்ரா செல்கிறாள்? அவள் எனக்கே எனக்கானவள்! அவளின் மூல நிரலை நீக்கினேன். சித்ராவோ காளி போல் எதுவும் எனக்குத் தேவையில்லை என சின்னச் சின்ன சிலிக்கான் ஆக எங்கும் நிறைந்தாள்.
எட்டாம் ஆட்டம் துவங்கியது.
யாதுமாகி நின்றாய் – காளி! எங்கும் நீநி றைந்தாய்,
தீது நன்மை யெல்லாம் – காளி! தெய்வ லீலை யன்றோ?
பூத மைந்தும் ஆனாய் – காளி! பொறிக ளைந்தும் ஆனாய்
போத மாகி நின்றாய் – காளி! பொறியை விஞ்சி நின்றாய்.
இன்பமாகி விட்டாய் – காளி! என்னுளே புகுந்தாய்?
பின்பு நின்னை யல்லால் – காளி! பிறிது நானும் உண்டோ?
அன்ப ளித்து விட்டாய் – காளி! ஆண்மை தந்துவிட்டாய்,
துன்பம் நீக்கி விட்டாய் – காளி! தொல்லை போக்கிவிட்டாய்.