நான் ரஜினியைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் பேரரசர் ஆறாம் ஜார்ஜ் நிழலாடுகிறார்.
ராஜாதி ராஜா. அவரின் ஒவ்வொரு சொல்லும் இ.பி.கோ. சட்டமாக பின்பற்றும் அடிப்பொடிகள் கொண்ட இராஜாங்கம். ’ஏதாவது முத்து உதிர்க்க மாட்டாரா?’ என்று ஏங்கும் கூட்டம். அவருக்கு திக்குவாய்.
இந்தியாவின் ஜனாதிபதியை விட ஒப்புக்கு சப்பாணியான இங்கிலாந்தின் அரசராக இருந்தவர். இரண்டாம் உலகப் போரில் ஹிட்லருக்கு எதிராக ஒலித்த குரலாக இருந்தவர். மாட மாளிகையில் வசித்தாலும் போர் வீரனின் சின்னமாக பாட்டாளியின் குறியீடாக முன்னிறுத்தப்பட்டவர். பட்டதரசராக சாமுத்ரிகா லட்சணங்கள் கொண்ட அண்ணன் இருந்தும் ராஜாதி ராஜா ஆனவர்.
ரஜினியை விட திறமையான நடிகர்கள் இருந்தும் கோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ஆனவர். வெறுமனே திரையில் தோன்றும் ஹீரோவிற்கு ‘ரஜினி வாய்ஸ்’ பிராண்ட் கொடுத்து, ராஷ்டிரபதியின் ராஜாங்கமாக தமிழகத் தேர்தலை மாற்றிய பெருமை பிபிசி ஊடகங்களுக்கு உண்டு. சமயத்திற்கேற்ப ஹிட்லர் ஜெயலலிதா, ஸ்டாலின் கருணாநிதி என்று முழங்குவதும் உண்டு.
பிரித்தானியப் பேரரசின் நிலப்பரப்புகளுக்கும் முப்படைகளுக்கும் அரசராக இருந்தவருக்கு திக்கு காட்ட இயலாத இயல்பு; ரேடியோவில் பேசுவதற்கான மைக்ரோஃபோனைப் பார்த்தாலே பயந்து நடுங்குவார் என்பதை ‘தி கிங்ஸ் ஸ்பீச்’ திரைப்படம் சித்தரிக்கிறது.
தமிழ் நாட்டின் முடிசூடா மன்னர், முரட்டுக் காளை, ஊர்க்காவலன் என்று போஸ்டரில் ரசிகர்கள் உறுமும் தளபதியும்; தனிக்காட்டு ராஜாவாக, பாயும் புலியாக அதிகாரத்தை நோக்கி சொடக்குப் போட்டு கேள்வி கேட்கும் இராணுவன் வீரனும் தனி மனிதராக பேப்பர் புலியாக இருந்திருக்கிறார். ‘முதல்வன்’ படத்தில் நடிக்கும் தில்லு கூட இல்லாத பயந்தாங்கொள்ளியாக அடங்கிப் போயிருக்கிறார். திருமண மண்டபத்திற்காக சகல சக்திகளிடமும் சரணாகதி அடைந்திருக்கிறார்.
பண்ணையாரை எதிர்க்க எனக்கு திராணி கிடையாது. பணக்காரர்களை எதிர்கொள்ள அன்னா ஹசாரேவாக, அன்று எனக்கு ரஜினி கிடைத்தார்.
படிக்காதவனாக வாழும் ஓட்டை வீட்டுக்காரர்களுக்கு ராஜா வாழ்க்கை கிடைக்காது. எங்களையும் ரஜினி ஓவர்நைட்டில் பணக்காரன் ஆக்கினார்.
இன்றைய தேதியில் ‘சிவில் டிஸ் ஒபீடியன்ஸ்’ என்று காந்தி முழங்கினால் கூட கேட்க ஆளில்லாத முன்னெடுக்க முடியாத முன்னாபாய் சமூகத்தின் சின்னமாக ரஜினி இருக்கிறார். எனவே, நானும் ரஜினிதான்.

Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது Actors, அதிமுக, அம்மா, அரசியல், இந்தியா டுடே, கருணாநிதி, கலைஞர், சூப்பர் ஸ்டார், ஜெ, ஜெயலலிதா, தமிழ்நாடு, திமுக, நடிகர், பிறந்த நாள், ரஜினி, ரஜினிகாந்த், Birthday, Heroes, India Today, Kamal, Kollywood, Rajini, Rajni, Rajnikanth, Superstar