Tag Archives: சுற்றுலா

வனபோசனம்

சென்ற மாதம் லண்டன் சென்ற வர நேரம் வாய்த்தது.
போன சமயத்தில் பத்தாண்டுகளுக்கு மேலாக #சொல்வனம் பதிப்புக் குழுவில் அங்கம் வகிக்கும் பிரபுவையும் கிரியையும் சந்திக்க வாய்ப்பும் அமைந்தது.
அலுவல் நெருக்கடியினாலும் கடைசி நிமிட திட்டமிடலினாலும் சிவாவினால் தலை காட்ட இயலவில்லை.
அவருக்காக இன்னொரு தடவை இங்கிலாந்து போக வேண்டும்.

வழக்கம் போல் சுவாரசியப் பேச்சு.
நிறைய இலக்கிய அரட்டை.
கொஞ்சம் போல் சொந்தக் கதை.

ஒரு தசாப்தம் முன்று சென்றிருந்தபோது ரதசாரதியாக கையில் குழலுக்கு பதில் ஸ்டியரிங் வளையத்தைப் பிடித்து விமானதளத்தில் இருந்து அழைத்துச் சென்ற கிரியின் வீட்டிற்கு சென்று சுவையான தமிழக சிற்றுண்டிகளை வெட்ட முடிந்தது.
இந்த தடவை பிரபுவின் வீட்டிற்கு செல்ல முடிந்தது. இரு வால் பெண்கள். படு சுட்டி. இங்கிலீஷ் டீ. வாயில் கரையும் இனிப்புகள்.

Jeyamohan’s Stories of the True : Translated from the Tamil கொண்டு வந்திருந்தார் கிரி.

Solvanam முன்னூறாவது இதழ் குறித்து ஆக்கபூர்வமான ஆலோசனையை முன்வைத்தார்.

நாள் முழுதும் உழைத்து, பேசிக் களைத்த சோர்வு தெரியாமல் உற்சாகமாக விவாதித்து, ஆரோக்கியமான விஷயங்களை முன்னெடுத்து, நான்கு மணி நேரத்திற்கும் மேல் என் தர்க்கங்களுக்கு செவி மடுத்த பிரபுவிற்கும் கிரிக்கும் நன்றி!

பூன் கேம்பிற்கு உள்ளாவது ஆங்கிலக் கதைகளை வாசித்து விட வேண்டும்.

எழுத்தாளர் + சிந்தனையாளர் + குரு = இயக்கம்?

எந்தவொரு எழுத்தாளருக்கும் இல்லாத தலைமைப் பண்பு ஜெயமோகனிடம் இருக்கிறது. வெறுமனே ஃபேஸ்புக் குழு, மின்னஞ்சல் அரட்டை என்று இல்லாமல் செறிவான விவாதம், பண்பட்ட மாற்றுக்கருத்துகளுக்கு இடம், பரஸ்பர அறிமுகம், செல்ல சீண்டல், கடுமையான எதிர்வினை எல்லாவற்றுக்கும் தளம் அமைத்துக் கொடுத்திருக்கிறார். மடல்கள் தொய்யும்போது தானே நுழைந்து உரையாடலை மேம்படுத்துகிறார்.

அந்தக் குழுவில் அங்கத்தினராக இருப்பது மிகுந்த மனநிறைவைத் தருகிறது. மனநிறைவை மட்டுமல்லாது, சுற்றுலா செல்லும்போது அவர்களை நேரடியாகப் பார்த்து உரையாடும் வாய்ப்பையும் தருகிறது.

ஜெயமோகனின் சொல்புதிது குழும நண்பர்களை லண்டனில் சந்தித்தேன். விமான நிலையத்திற்கே வந்து பெட்டி படுக்கைகளை எடுக்க உதவிய கிரி, காடு நாவலுடன் காணக் கிடைத்த எஸ்ஸெக்ஸ் சிவா, படு பாந்தமாக பேசிக் கொண்டிருந்த பிரபு என்று சுவாரசியமான பேச்சு. சிறில் அலெக்ஸும் வந்திருந்தால் இன்னும் கனஜோராக இருந்திருக்கும் என்பது தவிர வேறெந்த குறையும் இல்லாத மாலைப்பொழுது.

தமிழில் எழுதும் எல்லாரையும் தெரியும்னு சொல்லலாம்தான்… ஆனால், அவர்களுக்கு என்னைத் தெரியுமா : )

மேலும், இங்கே நான் சொல்வது தலைமை தாங்கி வழிநடத்தும் குணாதிசயத்தைக் குறித்தது…

ஒருவர் நல்ல சுவாரசியமான/முக்கியமான படைப்பு எழுத்தாளராக இருப்பது வேறு விஷயம். அந்த நல்ல எழுத்தாளரே வழிகாட்டியாக இருந்து, பலரை ஒருங்கிணைத்து, மக்களிடம் செல்வாக்கும் நிறைந்து, அவர்களிடம் செயலாற்றலையும் தோற்றுவித்து, தன்னுடைய வாசிப்பாளர்களுக்கு தன்னிறைவையும் தந்து, அவர்களின் கிரியாஊக்கியாகவும் விளங்குவதை குறிப்பிட நினைக்கிறேன்.

நன்றி ஜெயமோகன்.

லண்டன் சுற்றுலா

victoria-railway-station-london-david-french
லண்டன் அசப்பில் பார்த்தால் தேர்ந்த அமெரிக்க நகரம் போல் இருக்கிறது. சொல்லப் போனால் நியு யார்க்கின் ஒன்று விட்ட தம்பி போல் தெரிந்தது. ஆங்காங்கே சூதாட்ட மையங்கள்; இரயில்வே ஸ்டேஷனிலேயே ’வை ராஜா வை’ விளையாடலாம் எல்லாம் பார்த்தால் கோட் சூட் போட்ட லாஸ் வேகாஸ் வந்துவிட்டோமோ என்னும் சந்தேகத்தைக் கொடுக்கும்.

காய்கறி மார்க்கெட்டுக்கு செல்வோர் கையில் பை இருக்கும். அது மாதிரி லண்டனில் வேலை முடிந்து வீடு திரும்புபவர் கையில் பியர் இருக்கும். பொதுவில் பியர்சாந்தி செய்வதை லாஸ் வேகாஸ் மட்டுமே தரிசனம் செய்திருக்கிறேன். லண்டனில் குடி கொண்டாட்டமாக இல்லாமல் உதிரமாக இணைந்திருக்கிறது.

கண்காணிப்பு கேமிராக்களின் அணிவரிசை, நிஜமாகவே ’The Truman Show’ படப்பிடிப்பில் அங்கம் வகிக்கிறோமோ என சினிமாவை வாழ்க்கையோடு இணைத்தது. நட்ட நடு பாரிஸ் நாட்டர்டாம் தேவாலயத்தின் எதிரேயே ஒன்றுக்கிருப்பவர்கள் போல் எல்லாம் இல்லாமல் லண்டனில் சந்து பொந்துகளில் எங்காவது எச்சில் துப்பினால் கூட தபாலிலே சம்மன் அனுப்புவார்கள் என இங்கிலாந்துக்காரர்களை மிரட்டி உருட்டி வைத்திருக்கிறார்கள்.

மதிய உணவிற்கான இடைவேளையை கர்ம சிரத்தையாக பின்பற்றுகிறார்கள். அமெரிக்க நகரங்களின் அலுவல் வாழ்க்கையில் பெரும்பாலானோர் ஓடிக்கொண்டேதான் சாப்பிடுவார்கள். ஒரு கவளம் சாப்பாடு; நாலு வரி நிரலி. அல்லது ஒரு கடி சாண்ட்விச்; எட்டு வரி பதிவு… இப்படி வேலையும் கையுமாக உண்ணாமல் ஆற அமர புல்தரையில் ஜோடி ஜோடியாக அமர்ந்து போஜனம் புசிப்பதையும் இங்கேக் கொட்டிக் கொள்வதையும் பார்த்தாலே டம்ஸ் கேட்டது என்னுடைய அமெரிக்க வயிறு.

குப்பை போல் ஒதுக்கித்தள்ளும் குடிசைவாசிகளின் ஒதுக்குப்புறங்களும், காடுகளுக்குள் வீடு அமைக்கும் புறநகர் கலாச்சாரங்களும், அடுக்குமாடி கட்டிடங்களும், அவற்றில் கோடானு கோடிகளை அள்ளும் வங்கிக்கூலிகளும், அறிமுகமில்லாதவர்களுக்கு உள்ளீடற்ற ஷோ கேஸ் சிரிப்பு முகமும், தவறுதலாக இடித்தால் கண்டிப்பு நிறைந்த போலி மன்னிப்புகளும், மேற்கத்திய நாகரிகமாகக் கருதும் புறப்பூச்சு நாசூக்குகளும், இன்னொரு அமெரிக்காவையே எனக்கு இங்கிலாந்தில் காட்டிக் கொண்டிருந்தது.
TrainView_Slums_Ghetto_London_England_UK_Victoria_Station-Railways_Poor

சுற்றுலா நகைச்சுவை

பாரிஸ் நகர வாயிலில் வருகையாளர்களுக்கான தகவல் மையம் அமைத்திருந்தார்கள். முதலாவதாக ஒருத்தன் விசாரிக்க வந்தான்.

“நான் நாலு மாசம் இங்கேயே இருக்கப் போறேன். முழுப் பாரிஸையும் சுத்திப் பாத்துடலாம் இல்லியா?”. கவுண்ட்டருக்கு அந்தப் பக்கத்தில் இருந்து பதில் வந்தது: “பத்து சதவிகிதம் கூட பார்த்து முடிக்க முடியாது!”

வரிசையில் அடுத்தவர் வந்தார்: “நான் நாலு வாரம் இங்கேயே இருக்கப் போறேன். சொஞ்சமாவது பாரிஸையும் சுத்திப் பாத்துடலாம் இல்லியா?”. பரிமாற்றகர் கொஞ்சம் பிரகாசமடைந்து “ஐம்பது சதவிகத சுற்றுலாத் தலங்களை பார்த்துடலாம்!”

இரண்டையும் கேட்ட மூன்றாமவர் கேட்கிறார்: “நான் நாலு மணி நேரம்தான் இங்கே இருக்கப் போறேன். எவ்வளவு பாரிஸைப் பார்க்கலாம்?”. கல்லாகாரர் தீர்க்கமாக சொல்கிறார். “உங்களால் அனைத்து நகரத்தையும் முழுமையாகப் ரசித்து சுற்ற முடியும்.”

நானும் அடுத்த வாரம் முதல் பாரிஸ் பக்கம் செல்கிறேன். பாரிஸில் ஒரு ட்வீட் அப் போடணும். நீங்க சந்திப்புக்கு வர விருப்பம் என்றால் தொடர்பு கொள்ளுங்களேன்

திமிங்கிலமும் எழுத்தாளரும்: பயணச் சிக்கல்

New_England_Aquarium_Whale_Watch

கோடை காலத்தில் பாஸ்டனின் அட்லாண்டிக் கடலில் நிறைய திமிங்கிலங்களைக் காணலாம். ஒரு மணி நேர அளவில் கப்பலில் கடலுக்குள் பயணித்தால், குட்டியுடன் விளையாடும் தாய், கூட்டமாக இரை பிடிக்கும் இளைஞர் கூட்டம் என விதவிதமாகப் பார்க்கலாம். அடைத்து வைக்கப்பட்ட மீன்காட்சியகத்தில் தரிசிக்காமல், பரந்த வெளியில் சுதந்திரமாக நீந்தும் திமிங்கிலங்களை இயற்கையான பரப்பில் காணலாம்.

பி.ஏ.கே. பசிஃபிக் சமுத்திரத்தில் விதவிதமான திமிங்கிலங்களைப் பார்த்த காட்சிகளை ஒளிப்படமாக இட்டிருந்தார். பாஸ்டனுக்கு வரும் பிரபலங்களுடன் இந்தப் பயணம் செல்வது குதூகலமான நிகழ்வு. ஆசுவாசமாக மூன்று மணி நேரம் உரையாடலாம். வெளியே விரிந்திருக்கும் எல்லையற்ற நீர்ப்பரப்பின் அமைதியோடும், வெயில் கொளுத்தினாலும் கடலின் குளுமையாலும், செல்பேசி இடைவேளிகளும் இடையூறுகள் தவிர்க்கப்பட்டதாலும் ரம்மியமான உல்லாசமான நேரம். சூரியவொளி புகாத ஆழ்க்கடலில், தன்னுடைய இரையின் இருப்பிடத்தைத் துல்லியமாக அறிந்து அவற்றைப் பிடிக்க எதிரொலி உத்தியை திமிங்கலங்கள் பயன்படுத்தும். அதே போல், வந்திருக்கும் எழுத்தாளர்களும் தங்களுடைய எழுத்துக்கான ’குரலை’ எவ்வாரு அறிந்து கொண்டார்கள் என்று அறிந்துகொள்ள ஏற்ற தருணமாக இந்தப் பயணங்கள் அமையும்.

திமிங்கிலம் காணச்செல்லும் இந்தக் கடல் பயணத்தின் முதல் சிக்கல் – எல்லோரும் வாந்தி எடுப்பது. அலைகளைக் கிழித்துக் கொண்டு எதிர்க்காற்றில் கப்பல் செல்லும். அது எதுக்களிக்கும். கோபம் எழும்போது தேவையில்லாத கதைகளை எப்பொழுதோ வாசித்திருந்த இலக்கியப் புத்தகங்களில் இருந்து நினைவுகூர்வேன். அதற்கொப்ப, எப்பொழுதோ உட்கொண்ட உணவை வெளிக்கொணரும். கப்பல் எங்கும் ஓக்காள உமிழ்வுகள்.

இன்னொரு சிக்கல் திமிங்கிலத்தின் அபான வாயு. கருவாட்டு வாயால் மூச்சுவிட்டால் கூட பொறுத்துக் கொள்ள முடியாத மீன்வாடை. திமிங்கிலத்தின் நாக்கில் ஐம்பது பேர் அமர்ந்து செல்லலாம். ஐம்பது பேரும் ஒரே சமயத்தில் குசு விட்டால் எப்படி இருக்கும்?

இப்பொழுது நேற்று நடந்த புதிய பிரச்சினை. வழக்கம் போல் அந்தப் பயணமும் கடலுக்குக் கிளம்பி இருக்கிறது. ஆனால், கார்னிவல் நிறுவனத்தின் கப்பல் பயணங்கள் போல் நடுக்கடலில் சிக்கிக் கொண்டுவிட்டது. சேராத இடம் சேர்ந்து கப்பலின் வடம் பாஸ்டனுக்கு எரிவாயு கொண்டு செல்லும் குழாய்களுடன் மாட்டிக் கொண்டது. ”அரை மணி நேரத்தில் சரியாகிவிடும்; ஒரு மணி நேரத்தில் கரை திரும்பிடுவோம்” என்று சால்ஜாப்பு சொல்லியவர்கள், கடைசியாக இரவு முழுக்க முழுக்க கடலிலேயே தத்தளித்து இருக்கிறார்கள்.

இந்தப் பதிவில் எந்தக் குறியீடும் எல்லை.

Vaishnavist Thiruppathy Tour Guide: 108 Divya Desam Book by Ponnammal

Thanks: Kalki Book Reviews

லாஸ் வேகாஸ் குறிப்புகள்

தமிழ்நாட்டில் தினமும் ஒரு பழைய கேசினோ (தியேட்டர்) இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் புதிய ஷாப்பிங் மால் உருவாகிறது. லாஸ் வேகாசில் வருடந்தோறும் ஒரு பழைய கேசினோ (சூதாட்ட மையம் + விடுதி) இடிக்கப்பட்டு, அங்கே ஒரு புதிய ரிசார்ட் (கடை, கண்ணி, சூதாட்டம், கேளிக்கை, விடுதி) அமைக்கப்படுகிறது.

இந்த தடவை பெங்களூரை பார்த்தபோது மலைப்பு ஏற்பட்டது. வெளிச்சுற்றுச்சாலை, வொயிட்ஃபீல்ட் நகர மையம், விமான நிலையம் என பல மாற்றங்கள். ஆனால், வேகாசில் ஐந்தாண்டு முன்பு வந்ததற்கும், தற்போதைய நிலைக்கும் பெரிய அளவில் மாறுதல் இல்லை. அதே புகழ் பெற்ற கேசினோக்கள். இப்பொழுது இன்னும் பெரிய பார்க்கிங் கட்டிடங்கள். அலிபாபா போன்ற பெயர் மாற்றங்கள்.

வேகாசுக்கும் திருப்பதி திருமலைக்கும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. இரண்டும் இடமுமே கம்யூனிஸ்ட்களுக்கு ஒத்துக்காது என்பது தவிர…

திருமலை திருப்பதி

லாஸ் வேகாஸ்

1. அங்கே எல்லாவிடத்திலும் பெருமாளும் தாயாரும் போட்டோவிலாவது காட்சி கொடுப்பர். இங்கே ஸ்லாட் மெஷின்கள்.
2. உறங்கா நகரம். 24 மணி நேரம்; ஏழு நாள்; 365 நாள்; கிறிஸ்துமசுக்குக் கூட விடுமுறை இல்லை.
3. அசல் மொட்டை. ஒட்ட சுரண்டும் மொட்டை.
4. ஏகாந்த சேவை ரொம்பவே பிரபலமானது. சயனிக்கும் நேரத்திற்கான revue காட்சிகளுக்குப் புகழ்பெற்றது.
5. நித்ய அன்னதானம். வித விதமான 150 உணவுவகைகளைக் கொண்ட பஃபேக்கள் பிரசித்தம்.
6. உண்டியலில் சில்லறை கொட்டும் சத்தமும், காணிக்கை காசுகளை எண்ணும் ஒலியும் பிரகாரங்களில் ரீங்கரிக்கும். எங்கு திரும்பினாலும் ஸ்லாட் மெஷின்களின் ஓசை.
7. குபேரனுக்குக் கொடுத்த கடனை இன்னும் வெங்கடாசலபதி அடைக்காததாக கேள்வி. கடனில்தான் அமெரிக்காவே ஓடுகிறது; லாஸ் வேகாஸ் எம்மாத்திரம்?
8. பல மணி நேரம் காத்திருந்தால்தான் இலவச தரிசனம் கிடைக்கும். பல மணி நேரம் சூது விளையாடினால்தான் இலவச மது கிடைக்கும்.
9. கடவுளிடம் சொன்னது வெளியில் வராது. வாட் ஹாப்பன்ஸ் இன் வேகஸ், ஸ்டேஸ் ஹியர்.

சஹாரா மூடப்பட்டுவிட்டது. கொஞ்ச காலம் முன்பு வந்தபோது தங்கியிருக்கிறேன். முயல் குட்டி போடுவது போல் சர்க்யூ டீ சொலே, நிகழ்ச்சிகளை பெருக்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு கேசினோவிற்கும் ஒரு சர்க்யு டி சொலில் நிகழ்வு. “ஓ”வின் தண்ணீர் அரங்கை, பலர் பல விதமாக பிரதிபலித்து, தங்கள் தியேட்டரிலும் அரங்கேற்றுகிறார்கள். ஆனால், ஆங்கில விமர்சனத்தைப் படித்துவிட்டு, காப்பியடிக்கும் சாரு நிவேதிதாவாக அவை எல்லாம் நிறையவே பிசிறு தட்டுகின்றன.

குடித்து விட்டு வண்டி ஓட்டுவதாலோ… ஊருக்குப் புதிதாய் லட்சக்கணக்கானோர் சாலைகளை நிறைத்திருப்பதாலோ… தினமும் ஆறேழு விபத்துகளாவது கண்ணில் படுகிறது. இருபது கார்களாவது பலத்த சேதத்தில் காணப்படுகிறது. இந்த ஊருக்கா, இன்பச் சுற்றுலா வந்தோம் என்று மரண பயம் கிலியூட்டுகிறது.

மக்கள் வாழ்வை கண்டு போபோ-வாக பச்சாதபம் ஏற்படாமல் இல்லை. கிறிஸிதுமஸ் அன்று காபி கலந்து கொடுக்கும் ஸ்டார்பக்ஸ் ஊழியரிடம் பூர்ஷ்வா பொஹீமியனாக வருத்தம் ஏற்படுகிறது. ‘நீ 99% சதவீதம்தானே? ஆக்குபை வால் ஸ்ட்ரீட்டில் கலந்து கொண்டாயா? இன்று விடுமுறை தினமல்லவா? பண்டிகை கொண்டாட்டத்தில் நீ ஈடுபடவில்லையா? ஸ்க்ரூஜ் போன்ற முதலாளியா? அவரை சார்லஸ் டிக்கன்ஸ் படிக்க சொல்லவா?’ என்று தத்துவ விசாரத்தில் ஈடுபட மனம் விரைந்தாலும், காபிக்கு, கொழுப்பு நீக்கிய பால் கலக்க சொல்கிறேன்.

நாற்பத்தைந்தாயிரம் டாலருக்கு ஓவியம். எண்பதாயிரத்தி முன்னூறு ரூபாய்க்கு சர்க்கஸ் கோமாளி சிற்பம். பெரும் சூதாடிகளுக்கு மட்டும் திறக்கும் கேசினோ கதவு. எங்கிருந்து நோட்டு அடிக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால், கிருஷ்ணரையோ சகுனியையோ மட்டும் மாமாவாய்க் கொண்டிருந்தால், நிச்சயம் எனக்காக ஆடும் படி அழைத்துச் சென்றிருப்பேன்.

பாஸ்டனும் ஞாநியும்

நன்றி: ஆப்பிள் தேசம் – 9: நாடகத்துக்குக் கூட்டம் அதிகம்! – ஞாநி

பாஸ்டனுக்கு என்னை அழைத்த பாலா கணினித் துறையில் உயர்பதவியில் இருப்பவர். தீவிரமான வாசகர். சென்னை மந்தைவெளிக்காரர். சாந்தோமிலும் பிலானியிலும் படித்தவர். அப்பா சமையற்கலைஞர். அம்மா பக்திக்கட்டுரைகளும் கதைகளும் எழுதுபவர். பாலா தனக்கென்று மூன்று நான்கு வலைப்பூக்கள் வைத்திருப்பது தவிர, அம்மாவின் படைப்புகளை வெளியிடவும் வலைப்பூ வைத்திருக்கிறார்.

பாஸ்டனில் நான் என்ன பார்க்க விரும்புகிறேன் என்று அவர் போனில் கேட்டிருந்தபோது சொன்ன பல விஷயங்களில் ஒன்று நாடகம். எனவே என்னை விமான நிலையத்தில் வரவேற்று அங்கிருந்து நேராக ஒரு நாடக அரங்கிற்கு அழைத்துப் போய்விட்டார்.

அமெரிக்காவில் பள்ளியிலும் கல்லூரியிலும் பல்கலைக்கழகங்களிலும் நாடகம், இசை நாடகம் முதலிய நிகழ் கலைகள் முக்கிய இடம் வகிக்கின்றன. பாஸ்டனில் நான் பார்த்த நாடகம், வால்தாம் பப்ளிக் ஸ்கூல்ஸ் எனப்படும் பள்ளிக்கூட அமைப்பும் ரீகிள் மியூசிக் தியேட்டர் எனும் குழுவும் இணைந்து நடத்தியவை. வால்தாம் பள்ளியின் மாணவர்களும் ஆசிரியர்களுமாக 41 வருடங்களுக்கு முன்னால் உருவாக்கிய குழுதான் ரீகிள். இப்போது அதில் முழு நேரத் தொழில்முறை நடிகர்களுடன் பள்ளி மாணவர்களும் இணைந்து நாடகங்களைத் தயாரிக்கிறார்கள்.

நான் பார்த்த, சிண்ட்ரெல்லா கதையை அடிப்படையாகக் கொண்ட இண்ட்டு தி உட்ஸ் (காட்டுக்குள்ளே) ஓர் இசை நாடகம். நடித்தவர்களில் யார் முழு நேர நடிகர், யார் மாணவர் என்று பிரித்துச் சொல்லமுடியாத ஒரே தரத்தில் உயர்ந்த நடிப்பு. அபாரமான இசை. காட்சி மாற்றங்களும் ஒளி, ஒலி அமைப்புகளும், நம்ம ஊர் ஆர்.எஸ்.மனோகரைப் போல அங்கே ஊருக்கு நாலு பேராவது இருக்கிறார்கள் என்று தோன்றவைத்தன.

நாடக டிக்கட்டுகள் 57 டாலர்கள் முதல் மாணவர்களுக்கு 25 டாலர்கள் என்று வெவ்வேறு விகிதங்களில் இருந்தன. நாடகத்தில் பங்கேற்கும் எல்லாருக்கும்சம்பளம் தரப்படுகிறது. இதை புரவலர்களிடமிருந்து நன்கொடையாகக் கேட்கிறார்கள். பின்மேடைக் கலைஞர்களுக்கு 24 டாலர். பிரதான நடிகருக்கு 500 டாலர். பிரபலமான நடிகரென்றால் 1000 டாலர். இயக்குநருக்கு 5000 டாலர். துணை நடிகர்களுக்கு 100 டாலர். ஒவ்வொரு பாத்திரத்துக்கும் மாற்று நடிகரை தயாராக வைத்திருக்கிறார்கள். இவர்களுக்கு ஊதியம் 50 டாலர்.

காட்டுக்குள்ளே நாடகம் தொடர்ந்து பத்து நாட்களுக்கு நடத்தப்பட்டது. அடுத்த எட்டு நாள் இன்னொரு நாடகம். பிறகு அதே போல இன்னொன்று என்று கோடைக்காலத்தில் தொடர்ந்து நாடகங்கள் நடத்தப்படுகின்றன. நான் சென்ற அன்று அரங்கு நிறைந்து வழிந்தது. எந்திரனுக்கு வருகிற கூட்டம் மாதிரி அங்கே நாடகம் பார்க்க வருகிறார்கள். அந்த அளவுக்கு சினிமாவுக்குக் கூட வருவதில்லை.

அமெரிக்காவில் என் சுற்றுலாவின்போது வேறு நகரங்களிலும் சில நாடகங்களைப் பார்த்தேன். அவற்றைப் பற்றி அந்தந்த நகரங்களுக்குச் செல்லும்போது விரிவாகப் பார்ப்போம்.

நாடகம் பார்த்துவிட்டு பாலா வீட்டுக்கு வெஸ்ட்ஃபோர்டுக்கு சென்று அவருடன் தங்கினேன். இரவு நேரம் பின்பக்கம் தோட்டத்தைப் போய் பார்க்க வேண்டாம். கரடி வந்தாலும் வரும் என்றார். காட்டுக்குள்ளே வீடுகளைக் கட்டியமாதிரி இருந்தது.

பாலா வீடு அருள் வீட்டுக்கு நேர்மாறு. அருள் வீட்டில் பொருட்கள் எல்லாமே கச்சிதமாக ஏறத்தாழ ஒழுங்காக சீராக வைக்கப்பட்ட சூழல் இருந்தது. பாலா வீட்டின் உட்புறம் ஒரு மந்தவெளி ஃபீலிங்கைக் கொடுத்தது. எந்த அறையிலும் எதுவும் இருக்கலாம் என்ற போக்கில் வாழ்வது நமக்கு சகஜமானது. இப்போது கூட என் கட்டில் மீது புத்தகங்கள், நோட்டுகள், சார்ஜர், மருந்துப் பெட்டி, வாட்டர் பாட்டில், டவல், ஜட்டி எல்லாம் இருக்க, அதன்மீது என் லேப்டாப் மினி கணினியை வைத்துக் கொண்டு கட்டிலை மேசையாக்கி நான் தரையில் உட்கார்ந்து எழுதுகிறேன். பாலாவின் வீடு இதே போல இருந்தது.

அவர் மனைவியும் குழந்தைகளும் வெளியூர் சென்றிருந்தார்கள். அதனால் இப்படி இல்லை எப்போதுமே இப்படித்தான் என்றார் பாலா. அவருடைய நூலகம் என்னை பிரமிக்க வைத்தது. தமிழில் கடந்த பல பத்தாண்டுகளில் வந்திருக்கக்கூடிய எந்த முக்கியமான புத்தகமானாலும் அங்கே இருந்தது. எல்லாமே தீவிரமான வாசிப்புக்குரியவை. அதற்கு நிகரான ஓர் ஆங்கில நூலகம்.

வெளிநாட்டில் வாழ்ந்தாலும் வீட்டுக்குள் நம்ம ஊர் மாதிரியே சூழலை ஏற்படுத்திக் கொண்டு இரு உலகங்களிலும் சஞ்சரிக்கும் கலையை நம்மவர்கள் கற்று வைத்திருக்கிறார்கள்.

Njaani visit to US: அமெரிக்காவில் ஞாநி

எழுத்தாளர் ஞாநி Author & columnist O Pakkangal njaaniஅமெரிக்கா பக்கம் எட்டிப் பார்க்கிறார். தற்போதையப் பயணத்திட்டம்:

ஜூன் 17 – வருகை
ஜூன் 24 வரை சிகாகோ, நயாகரா, கொலம்பஸ்
ஜூன் 25 முதல் 28 வரை – பாஸ்டன் / நியு இங்கிலாந்து வாசம்
ஜூன் 29 – ஜூலை 5 வரை: நியு யார்க், ஃபிலடெல்பியா;
ஜூலை 5 – 7: வாஷிங்டன் டிசி.
ஜூலை 11 – ஊர் திரும்புதல்

ஞானி இணையதளம் :: www.gnani.net

சிறு இன்ட்ரோ

தொலைக்காட்சியில் அவரின் ‘கண்ணாடிக் கதைகள்’ தொடருக்கு வெகுசன வரவேற்பு இருந்தது.

விகடன் குழுமத்திலிருந்து வெளியான ‘ஜூனியர் போஸ்ட்’ இதழை அவர்தான் பொறுப்பேற்றுப் பார்த்துக்கொண்டார்.

அவர் விகடனில் எழுதிய ‘தவிப்பு’ தொடர்கதை – புனைகதையா, நிஜ சம்பவத் தொகுப்பா என மயக்கம் தரும் அளவுக்குக் கற்பனையும் உண்மைச் சம்பவங்களும் பின்னிப் பிணைந்திருக்கும்.

கதாசிரியர், கட்டுரையாளர், பத்திரிகையாளர், குறும்பட இயக்குநர், விமர்சகர், நாடகாசிரியர் எனப் பல பரிமாணங்கள் கொண்டவர் ஞாநி.

கலைஞர் ஓய்வு எடுத்து கொள்ளலாம், ஸ்டாலினுக்கு பொறுப்புக்களை வழங்கலாம், ஒரு தந்தையாக கலைஞர், என்பது வயதை தொடும் ஒரு மனிதனாக கலைஞர் ஓய்வு எடுத்து கொள்ளலாம் என்று ஒ பக்கங்களில் எழுதியதால் ஆனந்த விகடன் அரண்டு போய் தொடரை நிறுத்தியது.

சிவாஜி (2007) படத்தில் சரக்கு இல்லை என்பதை ஆணித்தனமாக அடித்து கூறிய அஞ்சாநெஞ்சன். நடிகர் திலகம் சிவாஜியின் இடம் இன்று தமிழ்த்திரையுலகில் காலியாக இருப்பதாகவும் அதை நிரப்புவதற்கு கமலை விட விக்ரமிற்கே அதிக தகுதி இருப்பதாகவும் கூறி இருக்கிறார்.

தைரியமாக தன் கருத்தை வெளியிடுவதில் ஞானிக்கு நிகர் ஞானிதான். ஒரு முறை ஏதோ ஒரு நடிகையின் சர்ச்சையில் எழுத்தாளர் சுஜாதாவே கருத்து சொல்ல பயந்து கொண்டு, நான் என்ன ஞானியா என்று சொன்னதாக நினைவு.


ஜெயமோகன் எழுதிய அறிமுகம்

தமிழில் நான் எப்போதுமே கவனித்து வாசிக்கும் இதழாளர்களில் ஒருவர் ஞாநி. நான் சின்னப்பையனாக இருந்த காலத்தில் நாடகங்கள் அழிகிறதா என்ற ஒரு விவாதம் குமுதத்தில் வந்தது. அதில் ‘ருத்ராட்சப்பூனைகளே !’என்று சீறி ஞாநி எழுதிய குறிப்பு வெளியாகியிருந்தது. அதுதான் நான் அவரைப்பற்றி படித்த முதல் தகவல். அதன் பின் இந்த முப்பது வருடத்தில் அவரை நுட்பமாகக் கூர்ந்து கவனிப்பவனாகவே இருந்திருக்கிறேன். அதன் பின் அவர் சங்கராச்சாரியாரை பேட்டிகண்டு எடுத்து வெளியிட்டது எனக்கு மிகவும் பிடித்த கட்டுரையாக இருந்திருக்கிறது.

ஞானியின் அரசியல் சமூகவியல் கருத்துக்களில் எனக்கு எப்போதுமே முரண்பாடுதான். அவர் தவறாகச் சொல்கிறார் என்று தோன்றுவதில்லை. மாறாக எளிமைப்படுத்திவிடுகிறார் என்று தோன்றும். சமூக இயக்கம் என்பது எப்போதுமே முழுக்கப் புரிந்துகொள்ள முடியாத முரணியக்கத்தின் விளைவு. வன்முறை இல்லாமல் அம்முரணியக்கம் நிகழ்மென்றால் அது வளர்ச்சிப்போக்காகவே இருக்கும் என்பது நான் கொண்டுள்ள இலட்சியவாத நம்பிக்கை. ஞாநி அந்த முரணியக்கத்தை காண்பதில்லை. கறுப்பு வெள்ளைகளில் நிற்கும் தீவிர நோக்கு அவருடையது. அந்த எளிமைநோக்குதான் அவரை ஈவேராவை நோக்கி இழுத்திருக்கிறது.

ஆனால் தன்னளவில் நேர்மை கொண்ட இதழாளர் என நான் அவரை நினைக்கிறேன். தன் கருத்துக்களுக்காக போராடக்கூடியவர். அதன் பொருட்டு எதையும் இழக்க தயாராக இருப்பவர். சலியாத சமூகக் கோபம் கொண்டவர். தமிழில் இன்றைய தலைமுறையில் அப்படி சிலரை மட்டுமே நம்மால் சுட்டிக் காட்ட முடிகிறது. ஞாநி நான் சொல்லும் பெரும்பாலான கருத்துக்களை எதிர்ப்பார். ஆனால் அவர் தமிழில் ஒரு தார்மீக சக்தி என்றே நான் எப்போதும் எண்ணி,சொல்லி வருகிறேன்.

தமிழில் அவ்வாறு சமூகக் கோபம் கொண்டவர்களாக காட்டிக் கொள்பவர்களில் பெரும்பாலானவர்கள் வெறும் தனிநபர்க் காழ்ப்பும் உள்ளடங்கிய சாதிக்காழ்ப்பும் மட்டுமே கொண்டவர்கள் என்பதை நான் பொதுத்தளத்தில் செயல்பட ஆரம்பித்த இந்த முப்பது ஆண்டுகளில் கண்டு சலிபப்டைந்திருக்கிறேன். ஞானி தனிப்பட்ட காழ்ப்புகள் அற்றவர். தனிப்பட்ட கோபங்களுக்கு தாவிச்சென்றாலும் உடனே குளிர்ந்துவிடுபவர்

எனக்கும் ஞாநிக்கும் சில பொது அம்சங்கள் கூட இருக்கின்றன. அவரைப்போலவே நானும் அசோகமித்திரனின் எழுத்துக்களின் தீவிர வாசகன். அவரை போலவே எனக்கும் பழைய போஸ்ட் கார்டு போல உடம்பெல்லாம் முத்திரைகள். ஞாநியை பார்ப்பனர் என்றும் [ இந்துத்துவர் என்றும் கூட !] பிற்போக்குவாதி என்றும் முத்திரை குத்தும் எழுத்துக்களை நான் சென்ற எத்தனையோ வருடங்களாக கண்டுவருகிறேன். அதை முன்வைப்பவர்கள் எவருமே எளிய அடிப்படை நேர்மை கூட இல்லாத அரசியல் ஆத்மாக்கள்

பெரும்பாலான சமயங்களில் ஞாநி முத்திரைகளுக்கு எதிராக அதீதமாக உணர்ச்சிவசப்படுவார். நேரடியாக அவர் எகிறுவதைக்கூட கண்டிருக்கிறேன். என்ன செய்வது, தமிழில் எழுதினால் இது நிகழாமலிருக்காது. நான் சிரிக்கக் கற்றுக் கொண்டுவிட்டேன். அவர் இன்னும் கொஞ்சம் புன்னகையாவது செய்யலாம்.

வாசகர்களுக்கு ஆர்வமூட்டும் அரசியல் சமூகவியல் விவாதங்களுக்காக அதை சிபாரிசு செய்கிறேன்.
www.gnani.net

மேலும்:

ஞாநி அவரது அடையாளமான நீளமான ஜிப்பா போட்டு கிளம்பினார். அந்தக்காலத்தில் அவர் ஜமுக்காளத்தால் ஆன கல்கத்தா ஜிப்பாதான் போட்டுவந்தார். இப்போது சேலைத்துணியால் ஆன வேறுவகை ஜிப்பா. இது இன்னமும் சிறியது, இரண்டு ஞாநிக்களுக்கு தாராளமாக போதும்.

ஞாநி மாதம் ஒருமுறையாவது வந்து அசோகமித்திரனைப் பார்த்துக்கொண்டிருந்தார். ஆனாலும் வழியை துல்லியமாகக் கேட்டு தெரிந்துகொண்டே இருந்தார். பொதுவாக நான் திருப்பங்களுக்கு ஒருமுறை வழி கேட்பவர்களையே கண்டிருக்கிறேன். நேர்கோட்டில்கூட அடையாளம் தேவைப்பட்டது ஞாநிக்கு. முழுக்க வழி கேட்டு சென்றபின் இறுதிப்பகுதி மறந்துவிட்டதனால் மீண்டும் அசோகமித்திரனிடமே வழி கேட்டோம்

ஞாநியை பலகாலமாக அறிந்தும் நெருங்கிப்பழக வாய்க்கவில்லை. ஆகவே ஒரு சந்தர்ப்பமாக அமையட்டுமே என அவரது வீட்டிலேயே தங்க முடிவெடுத்தேன். கே.கே.நகரில் பெரிய வளாகம் கொண்ட அகலமான வீடு அவரது. அதிக மரச்சாமான்கள் இல்லாத கூடத்தை நாடக பயிற்சியறையாகவே வைத்திருக்கிறார் ஞாநி.

ஞாநியின் முன்னாள் மனைவி பத்மா அவருக்கு உடல்நலமில்லை என்பதனால் வந்து தங்கி கவனித்துக்கொண்டிருந்தார்.

அங்கே கே.ஆர்.அதியமானைப் பார்த்தேன். ஞாநியுடன் இப்போது அவர்தான் நெருக்கமாக இருக்கிறார் என்று பட்டது. ஞாநியும் அவரும் கருத்தடிப்படையில் நேரெதிர் புள்ளிகள். அதியமான் தனியார்மயம்-வலதுசாரிப் பொருளியலின் பிரச்சாரத்துப்பாக்கி –பீரங்கியெல்லாம் ரொம்ப பெரிது. நடுவே சோதிடம் பற்றி என்னிடம் கேட்டார். நான் என் பிள்ளைகளுக்கு ஜாதகமே எழுதவில்லை என்றேன். ஏன் என்றார். எங்கள் குலத்தொழிலே ஜாதகம் எழுதுவது என்பதனால்தான் என்றேன்.

ஞாநியின் இல்லத்தில் உற்சாகமாக பேசிக்கொண்டிருந்தோம். ஞாநி உடல்நிலை தேறியிருக்கிறார். அஞ்சியோபிளாஸ்ட் பண்ணப்பட்ட எந்த ஒரு எழுத்தாளரையும் போல உற்சாகமாக அதைப்பற்றிப் பேசினார். அது தன் உடலை நுட்பமானதோர் இயந்திரமாகப் பார்க்கும் பரபரப்பை அவருக்கு அளித்திருக்கிறது என்று தோன்றியது. நன்றாகவே மெலிந்திருந்தார். பலவகையான நோய்கள் வழியாக கடந்துவந்திருந்தார். குடலில் காசநோய் தாக்கி கடுமையான மருந்துகள் வழியாக நலம் மேம்பட்டபோதுதாந் இதய அடைப்பு கண்டடையப்பட்டது.

ஞாநி நான் பார்த்தபோதெல்லாம் சோடாப்புட்டிக் கண்ணாடிதான் போட்டிருந்தார். அவருக்கு ஒரு கோபக்கார இளைஞர் அல்லது இளம்முதியவரின் தோற்றத்தை அது அளித்திருந்தது. இப்போது அந்தக் கண்ணாடி இல்லை. கண்ணில் காடராக்ட் வந்து அறுவை சிகிழ்ச்சை செய்த போது பழைய இயற்கை விழியாடிகளை தூக்கிக் கடாசிவிட்டு புதிய அளவான ஆடிகளை வைத்தார்களாம். ஆச்சரியமாக இருந்தது.

ஆனால் ஞாநி அவருக்கு வழக்கமான அதி உற்சாகத்துடன்தான் இருந்தார். தொட்டுத்தொட்டு அரசியல் இலக்கியம் இலக்கியஅரசியல் என்று பேசிக்கொண்டிருந்தோம். ஞாநி தன்னைப்பற்றிய வம்புகளைப் பேசுவதில்லை என்பதை இரண்டுநாட்களில் கூர்ந்து கவனித்தேன்.இறந்தகாலம் குறித்தும் அதிகமாகப் பேசுவதில்லை. பரீக்ஷாவின் கடந்தகாலம் குறித்தும் மிக அபூர்வமாகவே பேச்சு எழுந்தது. அவருக்கு வெவ்வேறு சமகாலப் பிரச்சினைகளிலேயே தீவிர ஆர்வம் இருந்தது.

மதியம் ஒருமணிவாக்கில் பத்மா சமைத்த விஜிடபிள்பிரியாணியையும் தயிர்சாதத்தையும் வட்டமாக தரையில் அமர்ந்து சாப்பிட்டோம். தனக்கு பொதுவாக தரையில் அமர்வதும் படுப்பதுமே பிடிக்கும் என்றார் ஞாநி. கட்டில்கூட உடல்நலம் மோசமானபிறகு வந்ததுதான். அவரிடமிருந்த ஒரு மரபெஞ்சுக்கு அவருடைய வயதே ஆகிவிட்டது என்றார் – ஆரோக்கியமாக இருந்தது.

நான்குமணிவாக்கில் திரும்பிவந்தபோது ஞாநியின் பரீக்ஷா நண்பர்கள் ஒவ்வொருவராக வந்தார்கள். பெரும்பாலும் எல்லாரும் இளைஞர்கள்.ஞாநிக்கு தலைமுறை தலைமுறையாக நாடகநண்பர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். கல்பற்றா நாராயணன் கவிதை ஞாபகம் வந்தது, குழந்தைகள் எல்லாரும் ஜெயித்துப்போகிறார்கள், சரசம்மா டீச்சர் இப்போதும் ரெண்டாம்கிளாஸில்தான்.

திரும்பவந்தபோது எல்லாரும் சென்றுவிட்டிருந்தார்கள். ஞாநி உங்களை தேடினார் என்றார் பத்மா. உலகிலேயே மனைவியால் ஞானியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரே மனிதர் இவர்தான் என்று நான் சொன்னேன். இல்லல்ல நான் சங்கர்னுதான் சொல்லுவேன். இப்ப அடையாளம் தெரியணும்கிறதுக்காக ஞானீன்னு சொல்றேன் என்றார் பத்மா.

ஞாநி எங்களிடம் சாப்பிட்டாயிற்றா என்றார். தனசேகரும் பிறரும் கிளம்பிச் சென்றார்கள். நான் ஞாநியுடனும் பிறருடனும் ன் இரவு ஒன்றரை மணிவரை பேசிக்கொண்டிருந்தேன். சமகால அரசியல். சமகாலத்தின் பெரும்பண்பாடு என்பது எப்படியோ ஏதோ வழிகளில் சமசரம் செய்துகொள்வதாக ஆகிவிட்டிருப்பதை ஞாநி மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டினார். சமரசமின்மையின் தோல்வி மீதான கவற்சி சமகால இளைஞர்களில் குறைந்துவிட்டது என்றார். பின்னர் கண்ணயரும்போது பத்மாவும் இந்திராவும் பேசிக்கொண்டிருந்த ஒலி கேட்டுக்கொண்டே இருந்தது.


கீற்று :: Dheemtharikida | Gnani

மீண்டும் ‘தீம்தரிகிட ‘ வெளிவருகிறது

1982ல் நான் சில நண்பர்கள் உதவியுடன் தொடங்கி, மூன்று இதழ்களுடன் நின்று போய், பிறகு 1985ல் மீண்டும் வெளியிட்டு ஏழு இதழ்களுடன் நின்று போன ‘தீம்தரிகிட ‘ இதழை மறுபடியும் வெளியிட விரும்புகிறேன்.

சொந்த முயற்சியில் பத்திரிகை நடத்துவது என்ற பரிசோதனையை 1987ல் வெளியிட்ட சென்னை நகரத்துக்கான ‘ஏழு நாட்கள் ‘ என்ற இதழுடன் நான் நிறுத்திக் கொண்டேன். ஒவ்வொரு முறையும் பத்திரிகை நன்றாக விற்பனையானது.(1982ல் முப்பதாயிரம் பிரதிகள் வரை விற்றோம்). கடை விரித்தோம் கொள்வாரில்லை என்ற நிலை இருக்கவில்லை. ஆனால் விற்ற பணத்தை வசூலிக்க முடியாமலும் போதுமான செயல்முறை மூலதனம் இல்லாமலும் முயற்சிகள் முடங்கிப் போயின.

இனி சொந்த முயற்சியில் பத்திரிகை வெளியிடுவது இல்லை என்று தீர்மானித்துக் கொண்டு அந்த முடிவை உறுதியுடன் பதினைந்து ஆண்டுகளாகப் பின்பற்றிவந்திருக்கிறேன். இப்போது ஏன் மறுபடியும் அந்தப் பரிசோதனையில் இறங்க வேண்டியதாகிவிட்டது? சிரங்கு பிடித்தவன் கை போன்ற மன அரிப்புகள் காரணம் அல்ல என்பதை 15 ஆண்டு பிடிவாதமே காட்டும்.

தீம்தரிகிட இருபது ஆண்டுகள் முன்பு தொடங்கப்பட்டபோது அத்தகைய முயற்சிகளுக்கான தேவை இருந்த நிலை இன்றும் மாறிவிடவில்லை என்பது பொதுவான காரணம். அதை விட முக்கியமான காரணம் கடந்த ஓராண்டு காலமாக நான் சந்திக்கும், உணரும் ஒரு மாற்றம். நான் எப்போதும் பெரிய பத்திரிகைகளில் வேலை செய்வதை என் ஜீவிதத்துக்கான வழியாகவும், கருத்து வெளிப்பாட்டுக்கான வழியாகவும் சேர்த்தே செய்துவந்திருக்கிறேன். வருமானத்துக்காக வேறொரு வேலை, கருத்து வெளிப்பாட்டுக்கு இன்னொரு சாதனம் என்ற நிலையில் நான் இருக்கவில்லை.

கடந்த ஓராண்டாக நான் சந்திக்கும் நிலை இதுவரை கடந்த 30 ஆண்டுகளில் நான் சந்தித்திராதது. கருத்துச் சமரசங்கள் செய்துகொள்ளாமல் எனக்கு முழு நேர வேலையோ பகுதி நேர வேலையோ தமிழ் மீடியா சூழலில் கிடைக்கும் வாய்ப்பு இல்லை. தமிழில்தான் இயங்குவது என்று 22 ஆண்டுகள் முன்பு மேற்கொண்ட முடிவை மாற்றிக் கொள்ளவும் எனக்கு விருப்பமில்லை. இதற்கு முன்பு எனக்கு முழுக் கருத்துச் சுதந்திரம் கொடுத்து நான் எழுத அனுமதித்த இதழ்கள் கூட இந்த ஓராண்டில் பல முறை என் கட்டுரைகளை, ஏன், கடிதங்களைக் கூட நிராகரித்தன. வெளியிட்ட ஓரிரு முறையும், சில பகுதிகளை நீக்கிவிட்டு வெளியிட நான் ஒப்புக் கொண்ட பிறகே வெளியிடும் நிலை.

இது பற்றிப் பலருடனும் பல முறை விவாதித்தபோது தெரிய வரும் உண்மை ஒன்றுதான். முன்னெப்போதையும் விட, இன்று மீடியாவில் கருத்துச் சுதந்திரத்துக்கான இடம் சுருங்கிக் கொண்டே வருகிற்து. இதற்குப் பல சமூக, அரசியல் காரணங்கள் உண்டு. சார்புகளை மீறிப் பல்வேறு கருத்துக்களும் குறிப்பாக, பொதுக் கருத்துக்களுடன் முரண்படும் கருத்துக்களும் வாசகர் முன்பு வைக்கப்பட வேண்டும் என்ற பார்வை மங்கிக் கொண்டே வருகிறது.

இந்தச் சூழலில்தான் ‘தீம்தரிகிட ‘ இதழை மறுபடியும் கொண்டு வர விரும்புகிறேன். முதல் இதழ் விழிப்பு உணர்வு தினமான ஏப்ரல் 1 அன்று வெளிவரவேண்டும் என்பது என் அவா. தொடக்கத்தில் இரு மாத இதழாக தீம்தரிகிட ஓராண்டில் ஆறு இதழ்கள் வெளிவரும். ஆண்டு சந்தா: ரூ 100/-.

வெகுஜன இதழ்களின் வாசகர்களின் தீவிரமான அறிவு, ரசனைத் தேடல்களுக்கான உணவாக, உந்துதலாக ‘தீம்தரிகிட ‘ இருக்க வேண்டும் என்ற ஆதி நோக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை. சிற்றிதழ்களின் நோக்கம், செய்ல்பாடுகளிலிருந்து இது வேறுபட்டது என்பதால் முரண்பட்டது அல்ல.எந்த நல்ல விஷயமும் பலரையும் சென்றடைய வேண்டும்; நல்ல விஷயங்களை நாடுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என்பதே என் நிரந்தரமான நோக்கம்.கதை, கவிதை, அரசியல், சமூகம், திரைப்படம், நாடகம், இசை, கலைகள் என்று சகல துறைகளிலும் எப்போதும் போல ‘தீம்தரிகிட ‘ அக்கறை செலுத்தும்.

இதை சாத்தியப்படுத்த, தொடக்கத்திலேயே குறைந்தபட்சம் ‘தீம்தரிகிட ‘ இதழுக்கு ஐநூறு சந்தாதாரர்களாவது தேவை. நீங்களும் உங்கள் முயற்சியினால் இன்னும் சிலரும் சந்தாதாரர்களானால், இது சாத்தியம்தான். ஐநூறு சந்தாதாரர்கள் மார்ச் 15க்குள் கிடைக்காவிட்டால் தீம்தரிகிட இதழை வெளியிடும் என் திட்டம் தளர்ச்சியடையும். அந்த நிலைமை ஏற்படாமல் தவிர்ப்பதில் உங்கள் பங்கை நீங்கள் அவசியம் ஆற்றவேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

என்னுடனும் ‘ தீம்தரிகிட ‘ இதழில் வெளிவரும் கருத்துக்கள், படைப்புகளுடனும் நீங்கள் சில சமயம் உடன்படலாம்; சில சமயம் முரண்படலாம். ஆனால் தமிழின் வெகுஜன வாசகர்களின் தீவிரமான அறிவு, ரசனைத்தேடல்களை ஊக்குவிக்க, வளர்க்க உதவுகிற ஒரு களம் தேவை என்பதை நீங்கள் ஏற்றுக் கொண்டால், தயவு செய்து இந்த முயற்சியை ஆதரியுங்கள்.அடுத்த ஓரிரு வாரங்களில் உங்களுடைய, உங்கள் நண்பர்களுடைய மணியார்டர்கள் வந்து குவியட்டும். அவற்றை அஸ்திவாரக்கற்களாகக் கொண்டு நானும் நண்பர்களும் தீம்தரிகிட இதழை, கோபுரமாக இல்லாவிட்டாலும் சிறு குடிலாகவேனும் கட்டுவோம்.

‘தீம்தரிகிட ‘ இரு-மாத இதழ்.
தனி இதழ் விலை: ரூ 15.
ஆண்டுக்கு ஆறு இதழ்கள்.
ஆண்டு சந்தா:ரூ. நூறு.
வெளிநாடுகளுக்கு: USD 20 (அ) ரூ 1000.


திண்ணை

1. ராஜ் டி.வி Vs தயாநிதி மாறன் : உள் நோக்கம் ?

2. இரண்டு கடிதங்களுக்கு ஞாநியின் பதில்கள் :

a. தலித் பிரச்சினையில் உம் கருத்து என்ன ? – ரெங்கதுரை
b. ஞானம் கெட்டவர்களின் கோணல் பார்வை – மாயவரத்தான்

3. நூலகம்

4. ’எண்’ மகன். நாடகம்- பரீக்‌ஷா

5. மறதி அல்லது வெட்கங்கெட்டவர்கள்

6. வீரப்பன் மட்டும்தான் கிரிமினலா ?

7. எம் எஸ் :அஞ்சலி

8. கண்டதைச் சொல்லுகிறேன்: பேட் பாய்ஸ் :: சுஜாதாவும் ஷங்கரும் – (இந்தியா டுடே செப்.17,2003)

9. பெரியார் 125 (அயோக்கியர்களும் முட்டாள்களும்)

10. காங்கிரஸ் தோல்வி :ஓர் அலசல்

11. என்னைப் போல் ஒருவனா நீ? – சினிமா விமர்சனம் : உன்னைப் போல் ஒருவன்

12. ஒரு காமெடி சாமியாரின் டிராஜெடி நாடகம் :: காஞ்சி சங்கர மடத்தலைவர் ஜயேந்திரர்

13. இலக்கியவாதிகளையெல்லாம் சினிமாவுக்கு வாருங்கள் என்று அழைக்கிறார் கமல்ஹாசன்.

14. கேள்வி -2 தமிழன் அறிவைத் தடுத்தாரா பெரியார் ?

15. கல்பாக்கம்

16. குடந்தை குழந்தைகள் கொலைக்கு யார் பொறுப்பு ?

17. ரஜினிக்கு ஒரு பகிரங்க மடல்

18. அன்புள்ள மனுஷ்யபுத்திரன்

19. தமிழ் அரசியல்

20. உயிர்ப்பலியும் பெரியாரும்

21. டயரி – வி.பி.சிங்

22. பதிப்பகங்களா மிதிப்பகங்களா ?

24. முரசொலி மாறன்

25. பாசமா ? பாசிசமா ? – தி.மு.கவும் பா.ம.கவும்

26. இன்னொரு ரஜினிகாந்த் ? – விஜயகாந்த்

27. மஞ்சுளா நவநீதனுக்கு இறுதியாக.


Quotes

1. கடற்கரையில் கிரிக்கெட் ஆடுவது இளைஞர்களின் பிறப்புரிமை.

கருத்துகள்

1. ஞாநி Vs. சா.நி. – ரவிபிரகாஷ்

2. நித்தியும் ரஞ்சியும் சாருவும் பின்னே ஞாநியும்…

3. பூச்செண்டு – ஞாநி விளக்கம்

4. ‘ஓ பக்கங்கள்’ – பாகம் 3 :: Pa. Raghavan

தனிமை

Chicago-zoo

உச்சாணிக் கொம்பில் ஒருவர் ஏற, நிழல்களில் எத்தனை பேர்?

தமிழில் புகைப்படக்கலை: PIT – ஏப்ரல் போட்டிக்காக