Tag Archives: சம்பவம்

புதிய தமிழ்க் கதைகள் – 293

புத்தம்புதிய சொல்வனம் இதழில் வந்துள்ள கதைகளுக்கான அறிமுகம் + விமர்சனம்:

1. ஜா. ராஜகோபாலன் எழுதிய தெய்வநல்லூர் கதைகள்:
நன்றாக எழுதக் கூடியவர்; கட்டுரைகளில் கவர்ந்தவர் புனைவில் மிளிர்வது கடினம். கட்டுரையாசியராக மிளிர்ந்த ஜாஜா கதாசிரியராகவும் நடத்திக் காட்டுகிறார்.

கதைகளில் அரசியல் சரிநிலை பயங்கள் கூடாது. இன்றைய கதைகளில் உள்ளதை உள்ளபடியே காண்பது அரியதாக உள்ளது. இந்தப் புனைவு சிறப்பான துவக்கம். அந்தக் காலத்திற்கு நம்மை அழைக்கிறது. நீங்கள் பார்த்த, சந்தித்த மனிதர்களைச் சொல்லுகிறது.

எல்லாவற்றையும் விட சுவாரசியமாக இருக்கிறது!


——

2. சாந்தி மாரியப்பன் எழுதிய கொடுக்கு:

முடிவை நோக்கி ஓடும் கதை. “ஆறும் அது ஆழமில்ல…” என, பெண்களுக்குள் இத்தனை விஷயம் இருக்குமா?

நாலு மாதம் கழித்து இந்தப் புனைவின் சமபவங்கள், மனதோரத்தில் கீறலாக நிலைத்திருக்குமா – இல்லை.
படிக்கும்போது திருப்தி கிடைக்கிறதா – ஆம்.

சற்றே சமீபத்திய ‘தப்பட்’, ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’, ‘அம்மு’, ‘ஜெய ஜெய ஜெய ஹே’ – போல் இன்னொரு முடிவு.

கதையின் நடுவே சம்பவங்கள் பலஹீனம். கதையின் உச்சகட்டம் நிறைவு.


——

3. அர்ஸுலா லெ க்வின் எழுதிய உள்ளும் வெளியும்

இதைக் குறித்து தனியாக எழுத வேண்டும். எழுதலாம்


——

4. பத்மகுமாரி எழுதிய அறுவடை

நெகிழ்வான கதை.

இந்த மாதிரி ஆக்கங்களின் ஆகப் பெரிய சிக்கல் என்னவென்றால், ஐம்பதாண்டுகள் முன்பே இதைப் படித்திருக்கிறோமோ என்னும் சந்தேகம் வரவழைக்கும் விஷயங்களைச் சொல்லும்.

இன்றைய காலகட்டத்தில், இக்கால இளைஞர்களுக்கு இந்த மாதிரி செண்டிமெண்ட் பிழிசல்கள் ஒத்து வருமா?


——

5. ந.சிவநேசன் எழுதிய சைக்கிள்

“வானத்தைப் போல”, விக்கிரமன் படம் போல் இன்னும் ஒரு எளிமையான சம்பவம்.

நடக்கக் கூடியதுதான். நல்லா இருக்கிறதுதான்.

இன்னும் நம் தமிழ் சமூகம் தொலைக்காட்சி நெடுந்தொடர் பிடியில் இருந்து வெளிவரவில்லை என்பதை நினைவூட்டிக் கொண்டால், எவ்வாறு இவ்வாறான புனைவுகள் ஹிட் ஆகின்றன என்பது புரியும்.


——

6. ஜாபாலன் எழுதிய இன்வெர்ட்டி-வைரஸ்

Reactance theory கேள்விப் பட்டிருப்பீர்கள். அதனுடன் கொஞ்சம் கோவிட், நிறைய காத்தாடி ராமமூர்த்தி, எஸ்.வி. சேகர், கிரேசி மோகன் நடை.

தத்துவார்த்தமாக “எதனால் ஊக்கம் கொள்கிறோம்?”, ‘எப்படி சொன்ன காரியத்தை, நம் மனம் செய்ய மறுக்கிறது?’ என்று சென்றிருக்கலாம். ஆராய்ச்சி, சிந்தை வளர மனம் மாறும் நிலை போன்றவற்றை உணர்த்தியிருக்கலாம்.

இப்போதைய அளவில் – ஏதோ நகைக்க வைக்க முயல்கிறார்.


——

நன்றி #solvanam

மேற்கத்திய உலகுடன் ஒப்பிட்டால் இந்தக் கதைகள் இன்னும் மூன்று அல்லது நான்கு தலைமுறை பின் தங்கியே இருக்கிறது. தமிழுலகின் தீவிர சிந்தனையாளர்கள் பணத்தைத் துரத்துவதாலோ அல்லது சீரிய முறையில் புனைவுலகை நெறியாண்டு கற்றுத் தரும் ஆசிரியர்களின் போதாமையினாலா?

அநுமானத்திலடங்கும் பிரமாணங்கள்

சொகுசான இடங்களில் வாழ்பவருக்கு வறுமையும் தெரியாது. அங்கிருப்போரின் கதைக்களனும் ரம்மியமாக உளச்சிக்கல்களைக் கொண்டிருக்கும்.

இது பெரும்பாலானோருக்கு உவப்பானது. பெரும்பாலானோர் கதை எழுதுவதில்லை. அவர் நிம்மதியை நாடுபவர்.

அமெரிக்காவாக இருக்கட்டும். பணத்தில் புரளும் மேற்குலகம் ஆகட்டும். ஒவ்வொரு நியு யார்க் லண்டனிலும் நுழையக்கூடாத பிரதேசங்கள் உண்டு. அது வரைபடத்தில் இருந்தாலும் கூகிள் மேப்ஸ் அனுப்பாத சாலையைக் கொண்ட அரணாக இருக்கும். அங்கு போதை வஸ்துவும் கிடைக்கும். ராப்பிசாசாக அலைபவருக்கு வேண்டியவையும் விற்கப்படும்.

இது பெரும்பாலானோர் விரும்புவது. நல்லவர் எல்லாம் சொர்க்கத்தில் மிதப்பது வசதி. அல்லவர் எல்லாம் நரகத்தில் கண் காணாமல் இருப்பது தெரியாது.

நல்ல உணவு; கொண்டாட்டமான கேளிக்கை; நடந்தால் வரும் சுகந்தம் – இது சொர்க்கவாசி.

சாலை நடுவில் திக்கற்ற பார்வதி; பச்சை குத்திய தடிமாடு; சாயம் போன கார்; பேட்டையில் நுழைந்தாலே வரும் பயம் – இது சுவர்க்கவிரும்பி ஹாலிவுட் படத்தில் மட்டும் பார்க்கும் அக்ரஹாரம்.

இவ்வளவு முன்னுரையும் எதற்கு?

அமெரிக்காவில் கருப்பினத்தவரை பிச்சை எடுத்து பார்த்திருக்கிறேன். வயதானவரை சாலையோரமாக தட்டி வைத்துக் கொண்டு உண்டியல் குலுக்குவதைக் கண்டு அவசரமாக நகர்ந்திருக்கிறேன்.

சிலர், “இந்த தானம் எனக்காக இல்லை! எங்கள் அமைப்புக்காக!!” என்று சொல்வார். சிலர், “நானும் என் குடும்பமும் சாப்பிட்டு ஆறு வேளை, மூன்று நாள் ஆகி விட்டது. இந்தக் கடுங்குளிரில் ஒரு வாய் கவளத்துக்காவது காணிக்கை கொடுக்கவும்.” என்பார். சிலர், “உனக்காக நான் இராக் சண்டைக்குப் போனேன்! அப்படிப்பட்டவனை இப்படியா நடு ரோடில் விடுவது?” எனக் கேட்பார்.

அவருக்கு உருக்குலைந்த தோற்றம் இருக்கும். வெறித்த பார்வை இருக்கும். போருக்குச் சென்று திரும்பியவர் என்றோ சமீபத்திய பொருளாதராச் சரிவில் வேலை இழந்தேன் என்றோ எழுதியிருக்கும். புகைக்கு அடிமையானவர் என்பது முக அடையாளம்.

கருப்பர்; நோஞ்சான்; எலும்புருக்கி; கிழவி; வெடவெடக்கும் கை; பதற்றமான நடை; இறைஞ்சும் பார்வை – இதைக் கடந்து போக மனதை சிந்தையின் நியாயம் கொண்டு அடக்குவேன்.

ஆனால்… இன்று…

சாலையின் இந்தப் பக்கம் இந்தியப் பெண்மணி. அசப்பில் மணிரத்னம் கதாநாயகி போல் இருந்தார். சாலையின் இன்னொரு பக்கம் போஷாக்கான பூசியத் தோற்றம் கொண்ட பழுப்பு நிற தெற்காசியன். தமிழனோ? தெலுங்காக இருக்குமோ? வட இந்தியராகவும் இருக்கலாம். பக்கத்தில் மூன்றோ, நான்கு வயதோ மதிக்கத்தக்க குழந்தை. அதற்கான தள்ளுவண்டி.

பிற இரப்பாளர் இடத்தில் பார்த்தது போன்றே அழுக்கான கம்பளி. உடைமையைக் கொண்ட தரைவிரிப்பு. நம்மவர் ஏன் இப்படி வருவோர், போவோரிடம் கையேந்த வேண்டும்?

எல்லா தேஸி மக்களும் சுந்தர் பிச்சை மாதிரி அந்தஸ்துடன் சௌக்கியமாக இருப்பவர்கள் அல்லவா? நல்ல சம்பளம். சொகுசான கார். வீட்டு வேலை உதவிக்கு பெற்றோர். ஞாயிறு ஆனால் ஊர்சுற்றல். இப்படிப்பட்ட குடிபுகுந்தவரை மட்டுமே பார்த்தவனுக்கு அறிவு இயங்க மறுத்தது.

யாசகத்துக்கு என்ன காரணமாக இருக்கும்?

மனைவியை விற்கும் அன்னக்காவடியோ?

குழந்தையை வைத்து மிரட்டுகிறானோ?

இந்த ஆண்களே இப்படித்தான். எருதாண்டிமாடு ஆண்வர்க்கம்.

தன் வீடு, வாசல் எல்லாம் கொள்ளையடிக்கப்பட்டு ஓட்டாண்டியானவரோ?

சாஃப்ட்வேர் இல்லாத உணவக வேலை போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவரோ?

ஆடலுடன் பாடல் கச்சேரி நிகழ்ச்சிக்கு வருவோர் ஓரிருவரை தொலைத்துவிட்டுச் சென்றுவிடுவார். அந்த மாதிரி அனாதையாக்கப்பட்டோரோ?

ஆள்குறைப்பு, வேலையிழந்து நெடுங்காலம் காத்திருத்தல் போன்ற திடீர் தரித்திரத்தால் இந்த மாதிரி இறங்கினாரா?

கலிஃபோர்னியா போன்ற வேறு ஊரில் இருந்து வந்து கொள்ளையடிக்கப்பட்டு அனைத்து விஷயங்களையும் இழந்தவரோ?

பேருந்து நிலையத்தில் பயணத்திற்கு சொந்த ஊருக்குத் திரும்பிப் போக காசு வேண்டும் என்று இறைஞ்சுவாரே… அவரோ?

செய்வதறியாது திகைத்து கையறு நிலையில் இந்த இறுதி மார்க்கத்தில் இழங்கியவரோ?

சீவகராக பிஷை எடுத்து உண்ணவேண்டும் என்பது ஜாதகப் பரிகாரமாக சொல்லப்பட்டதால் அதற்காக இந்த மாதிரி பொன்னம்பலத்தார் ஆனாரோ?

பிட்காயின், டாஜ்காய்ன், எதிரீயம் என்று பணத்தை சூதாடி அழித்தவரோ?

அந்தப் பெண்ணின் அறிவிப்புத் தட்டியைப் படிக்க எத்தனித்தேன். அந்த அட்டை என்ன சொல்கிறது என்று பார்ப்பதற்குள் பச்சை விழ சாலையை விரைந்து விட்டேன்.

கூட வந்த நண்பர் செந்தில் சொன்னார்: “ரொம்ப யோசிக்காதீங்க பாலா… குறும்பட ஷுட்டிங் ஆக இருக்கும்!”

பின்புறம் காவலர் வருவது தெரிந்தது. அந்தத் தம்பதியரையும் சிறுவனையும் போலிஸ் ஜீப்பில் ஏற்றியனுப்புவது தூரப்புள்ளியாக மறைந்தது.