நன்றி: குழந்தை இலக்கியங்களுக்கு நூலகங்களில் இடம் கிடைக்குமா? – தினமலர்

ஆன்மிகம், வரலாறு, அறிவியல், கணிதம் என, எல்லாவற்றையும், கதைகள் மூலம், குழந்தைகளிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கியமானவர், குழந்தை இலக்கிய எழுத்தாளர் ஆர்.பொன்னம்மாள்.
கடவுளின் கருணை, மகாபாரதம், மரியாதைராமன், தெனாலிராமன் கதைகள், ராஜராஜ சோழன் வரலாறு, திருக்குறள், மூதுரை, நன்னெறி கதைகள், பறவைகள் பலவிதம், எண்கள் எனும் பொக்கிஷம் என, இவரின் குழந்தை நுால்கள் நுாற்றுக்கும் மேல் உள்ளன. தற்போது, சிறுவர்களுக்கான தொடர்களை தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதி வரும் இவர், குழந்தை இலக்கியம் குறித்து கூறியதாவது:
இங்கு, தற்போது, எல்லா துறைகளுக்கும், நிறைய பருவ இதழ்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால், குழந்தைகளுக்கான இதழ்கள் விரல்விட்டு எண்ணும் அளவிலேயே உள்ளன.
குழந்தைகளிடம், கதைகள் மூலமாகவே, நன்னெறிகளையும், ஒழுக்கத்தையும், பண்பாட்டையும் கொண்டு செல்ல முடியும். நீதிக்கதைகள்,புராண கதைகள் மூலம், வாழ்வின் நோக்கத்தையும், தீமைகளின் முடிவையும் சொல்ல முடியும். அரச கதைகள் மூலம், அரசியல் குறித்த எண்ணங்களை சொல்ல முடியும். அறிவியலையும், கணிதத்தையும், கதைகள் மூலம் சொல்லி, எளிதாக புரிய வைக்க முடியும்.
ஆனால், கதை கேட்கும் ஆர்வத்தையும், கதை சொல்லும் ஆர்வத்தையும், குழந்தைகளிடம் நாம் தான் உண்டாக்க வேண்டும். அதற்கு, பள்ளிகளில், நீதிநெறி சார்ந்த தலைப்புகளில், பேச்சு, எழுத்து போட்டிகளை நடத்த வேண்டும். அப்போது தான், குழந்தைகள், வித்தியாசமான புத்தகங்களை தேடுவர். நுாலகங்களுக்கு செல்லும் பழக்கம் ஏற்படும். அதனால், தேடுதலும், திறனறிதலும் மேம்படும். ஆனால், இங்கு உள்ள நிலைமை வேறு. பாடப்புத்தகங்களை தவிர மற்ற புத்தகங்களை வாங்க, பள்ளிகள் ஊக்குவிப்பதில்லை. அரசு நுாலகங்களில், குழந்தை இலக்கியங்களை, வாங்குவதில்லை. அப்படி இருக்கும் போது, எப்படி, பதிப்பாளர்கள், குழந்தை இலக்கியங் களை பதிப்பிக்க முன்வருவர்? எழுத்தாளர்கள், எழுத முன்வருவர்?
குழந்தைகளிடம், படிக்கும் ஆர்வமும், படைக்கும் ஆர்வமும் அதிகமாக உள்ளது என்பதற்கு, பருவ இதழ்களுக்கு வரும் கடிதங்களும், படைப்பு களுமே சான்றுகளாக இருக்கின்றன.
கடந்த 15 ஆண்டுகளாக, நான், ஆன்மிகம் மற்றும் குடும்பப்பாங்கான சிறுகதைகளை எழுதி வந்தாலும், குழந்தைகளுக்காக எழுதும் போது தான், மனதில், திருப்தி ஏற்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.