அமெரிக்காவில் குழந்தைகளுக்கு பேன் வந்திருந்தால் பள்ளிக்கு செல்ல முடியாது. ஆனால், துப்பாக்கி வைத்திருந்தால் செல்ல முடியும். இந்தக் காலத்தில் பேன் வந்த தலைகளை பார்ப்பது அரிது. ஆனாலும், பேன் கொண்டு வந்த தொற்று நோய்களையும் கொள்ளை நோய்களையும் எண்ணிப் பார்த்தால் மனித வர்க்கத்தின் மீதான அதன் வீரியத்தை அறிய முடியும்.
காதிற்கு அருகேதான் பேன்களுக்கு விருப்பமான இடம். உறவு மேற்கொண்டவுடன் தன் முட்டைகளை நல்ல கோந்து போட்டு ஒட்டி வைக்கும். அவை குஞ்சு பொரித்து பன்மடங்காக பெருகும். எதுவுமே நமக்குத் தெரியாது. அது பாட்டுக்கு குடும்பம் நடத்தி வளரும். பேன்களினால் பறக்க முடியாது. எனவே, நேரடியான நெருக்கமான சந்திப்புகளில் தொற்றிக் கொள்ளும்.
பேன்கள் போலத்தான் வெள்ளை மேட்டிமையுணர்வாளர்கள். அந்தக் காலத்தில் இராணுவ கூடாரங்களிலும் போர் நடக்கும் இடங்களிலும் பேன் செழித்தது. முதலாம் உலகப் போரில் கால் பங்கு போர் வீரர்கள் நோய்வாய்ப்பட்டதற்கு பேன் மூலமாகப் பரவிய சுரங்களே காரணம்.
பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் ‘ஜெயில் ஜுரம்’ என்ற பெயரில் ஐரோப்பவிலும் வட அமெரிக்காவிலும் தலை விரித்தாடியது. நீதிபதிகளையும் பீடித்து கொன்று குவித்தது. நான் பேன்களைப் பற்றித்தான் சொல்லுகிறேன். வெள்ளை நிறத்தின் மீதான மீயுணர்விற்குள்ளேயே போகவில்லை.
ஆண்டி பயாடிக் போல் மார்டின் லூதர் கிங் வந்தாலும் இன்னும் பேன் நடமாட்டம் உண்டு.

அமெரிக்காவில் துப்பாக்கி வாங்குதல் எளிது. அதனினும் எளிது, அந்தத் துப்பாக்கிக்கு ஜோடியாக ஏகே47 வகை தானியங்கி துப்பாக்கிகள் சேர்த்து வாங்குவது. அதனினும் மிக எளிது, அந்தத் துப்பாக்கிகளுக்கான தோட்டாக்கள்.
இந்த மாதிரி சல்லிசான விலையில் தோட்டாக்களும் துப்பாக்கிகளும் வாங்கியவர்கள், அதை பயன்படுத்த இடம் தேடுகிறார்கள். வீடீயோ கேம்ஸில் பொய்யாக சுட்டு அலுத்துப் போனவர்கள், இரு கைகளிலும் ஆயுதம் ஏந்தி நிஜ மனிதர்களை சாகடிக்க விரும்புகிறார்கள்.
சிலருக்கு பள்ளிக்கூட வளாகம்.
சிலருக்கு கல்லூரி கேம்பஸ்.
சிலருக்கு நாடாளுமன்ற உறுப்பினரின் சொற்பொழிவு கூட்டம்.
புதியதாக இந்திய வழிபாட்டு ஆலயங்களும் இந்தப் பட்டியலில் சேர்ந்திருக்கிறது.
சாதாரணமாக வகுப்புகளில் எல்லோரும் கேலி செய்வதைப் பொறுக்காதவர்கள், துப்பாக்கி தாங்கி, கிண்டல் செய்தவர்களையும் நடுவில் தென்படுபவர்களையும் கொன்று குவிப்பார். ஆராய்ச்சி மாணவர், மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று இந்த மாதிரி மனச்சிதைவுக்கு உள்ளானோர் கொல்வது சகஜம்.
பத்தாவது படிக்கும் பள்ளிக்கூடமும் பி.எச்டி. செய்யும் பல்கலைக்கழகமும் பிணக்கிடங்காக ஆவது அமெரிக்காவில் மாதம் ஒரு முறையோ அல்லது இரு முறையோ நடக்கிறது.
ஆனால், இந்தியர்களை குறிவைத்து தாக்குவது இதுவே முதல் முறை.
ஐரோப்பாவில் நடந்தது மாதிரி வெள்ளைத் தோலின் உன்னதத்தை நிலை நாட்ட நடந்த தாக்குதலில் இது அமெரிக்காவின் முறை.
சீக்கியர்களின் கோயிலில் ஒருவர் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில் துப்பாக்கிச்சூடு நடத்திய ஒருவன் உள்பட 7 பேர் பலியாயினர். அமெரிக்காவில் கடந்த இரு வாரங்களுக்கு முன் பேட்மேன் படம் திரையிடப்பட்ட சினிமா தியேட்டரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் படம் பார்த்துக் கொண்டிருந்த 12 பேர் உயிர் இழந்த சுவடு மறைவதற்குள் சீக்கிய கோயிலான குருத்துவாராவில் அடுத்த சம்பவம் நடந்துள்ளது.
இறந்தவர்கள் பாடு தேவலாம். இந்த மாதிரி ஃபையரிங்கில் மாட்டி கை கால் இழந்தவர்களின் பாடு பேஜார். இது வரை நல்ல திடகாத்திரமாக இருந்துவிட்டு, திடீரென்று ஒரு நாளில் டிஸ்ஏபிள்ட் ஆகிறார்கள். சம்பளம் குறைப்பு, வேலையில் பாதிப்பு என்று சீரழிகிறார்கள்.
வெள்ளை மேட்டிமையை நம்புபவர்களுக்கு பல பிரச்சினை.
கருப்பின ஒபாமா தலைவராக இருப்பது சின்ன விஷயம். தங்களின் ராஜ்ஜியத்தில் கறுப்பர்கள் அடிமைகளாக இல்லாதது நிறையவே வருத்தமான விஷயம். அண்டை நாடுகளான மெக்சிகோவில் இருந்து அயல்நாட்டின் லத்தீன் அமெரிக்கர்கள், உள்ளே நுழைவது சினம் தரும் விஷயம். எல்லாவற்றிற்கும் மேலாக இஸ்லாமியர்களையும் அமெரிக்காவில் சுதந்திரமாக உலவ விடுவது உச்சந்தலை வரைக்கும் உசுப்பேற்றி இரத்த நாளங்களை முறுக்கேற்றி உள்ளூர் தீவிரவாதத்தை உருவாக்கும் விஷயம்.
கோபம் தலைக்கேறினால் எந்த மதமும் கண்ணுக்குத் தெரிவதில்லை. டர்பன் கட்டியவர் எல்லாம் முஸ்லீம்; தாடி வளர்த்தவர் எல்லாம் ஒசாமா பின் லாடன்.
எடுத்தார் துப்பாக்கியை… கொன்றார் சீக்கியர்களை!
இந்தியர்கள் மீதான வெறுப்பிற்கும் பல காரணங்களை சொல்லலாம்.
எச்1பி விசாவில் வந்து நூறாயிரத்திற்கு மேல் வாங்க வேண்டிய சம்பளத்திற்கு பதில் பாதி விலையில் நிறைவான வேலை செய்து, மண்ணின் மைந்தருக்கு வேலையில்லாத் திண்டாட்டத்தை உருவாக்குவது…
சொகுசான கார்; ஆசைக்கொரு பையன்; ஆஸ்திக்கொரு பெண் என்று மகிழ்ச்சியாக உலவுவது…
ஆஃப்ஷோரிங், அவிட்சோர்சிங் என்று தினந்தோறும் தொலைக்காட்சி பிரச்சாரத்தை பார்ப்பது…
இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லாம் அகண்ட பாரதமாக நினைப்பது…
தன்னுடைய சர்ச்சில் தென்படாதது…
கடவுளைத் தொழ கோவிலுக்கு சென்றால், இனி கோவிலிலேயே சமாதி ஆகுவோம் என்று பயம் வரும். அதுவும் அந்த திரிசூலத்துடன் மகிஷாசுர மர்த்தினியை பார்க்கும்போது காங்கிரஸ் ஊழலுக்கு எதிராக நின்ற அன்னா ஹசாரே போல் நம்பிக்கையும் வரலாம்.

1945,ஆகஸ்ட் மாதம், 6-ம் தேதி, ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அமெரிக்கா அணுகுண்டு வீசி தாக்குதல் நடத்தியது. மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் எரிந்து சாம்பலாயினர்.மேலும் கதிர்வீச்சால், பல்லாயிரக்கணக்கானோர் நோயால் பாதிக்கப்பட்டனர்.
அன்று உலகப் போர் முடிவிற்கு வந்தது. மேலாதிக்க மனப்பான்மை முடிவிற்கு வருவது எக்காலமோ!