நியு யார்க்கரில் டேனியல் அலர்க்கான் (Daniel Alarcón) எழுதிய Collectors வாசித்தேன்.
தற்கால தலைமுறையில் டேனியல் முக்கியமான எழுத்தாளர். கிரந்தா போன்ற ஆங்கில சிறுபத்திரிகைகளால் கண்டெடுக்கப்பட்டு, ஹார்ப்பர்ஸ் போன்ற நடுவாந்தர சஞ்சிகைகளுக்கு முன்னேறி, இப்பொழுது வெகுஜன இதழ்களுக்கு வந்தடைந்திருக்கிறார். தெற்கு அமெரிக்க நாடான பெரு-வில் பிறந்திருந்தாலும், பெரும்பாலும் அமெரிக்காவில் வளர்ந்தவர். லத்தீன் அமெரிக்க படைப்பாளியின் இரத்தமும் சதையும் கொண்டு அமெரிக்கர்களுக்கு உவந்த மாதிரி கதை புனைகிறார்.
கொட்டடிக்காரர்கள் (Collectors) கதை இருவரைப் பற்றியது. இருவரும் சிறைக்கு எப்படி வந்தார்கள் என்பதைப் பற்றியது. சிறைக்கைதிகளானவர்களின் வாழ்க்கையை பற்றியது. சிறைக்கு வரக் காரணமானவர்களைப் பற்றியது. கூண்டுக்குளே போவதற்கு முன் இருந்த குடும்ப சூழலைப் பற்றியது.
ரொஜீலியோ (Rogelio) பிறப்பிலே ஏழை. மாற்றுத் திறனாளி. அதனால், பள்ளியில் ஏச்சுக்குள்ளாகுபவன். அண்ணன் வழியில் சில்லறைக் கடத்தலில் ஈடுபடுகிறான். லஞ்சம் தராமல் மாட்டிக் கொள்கிறான். வெளி உலகில் ஜீவனம் நடத்தத் தெரியாதவன், ஜெயிலில் பிழைக்கக் கற்றுக் கொள்கிறான்.
காவற்கூடத்தில் அவனுடைய நண்பனாக ஹென்றி அறிமுகமாகிறான். புரட்சிக்காரன். இடதுசாரி. ’அசட்டு ஜனாதிபதி’ நாடகம் போடுகிறான். தீவிரவாதி என குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளே வைக்கப்படுகிறான். அவனை வெளியே எடுப்பதில் அக்காகாரி உட்பட ஊடகங்களும் பங்கு வகிக்கின்றன.
சிறைவாசிகளை மனிதர்களாக உலவவிடுகிறார் டேனியல். அச்சமுறும் செய்கை புரிந்தவர்களின் குணாதிசயங்களையும் நடவடிக்கைகளையும் விவரிக்கிறார். கதாநாயகர்களுக்கிடையே நட்பினால் விளைந்த காமத்தையும் சொல்கிறார். இலட்சியவாதியின் சமரசங்களையும் சாமானியனின் இலட்சியங்களையும் போகிற போக்கில் உணர்த்துவது பிடித்திருந்தது. கிராமத்துக்காரனின் எல்லைகளில்லா பயணமும் கொள்கைவாதியின் குறுகல்களும் பிரச்சாரமாக நெடி அடிக்காதது பிடித்திருந்தது. இருபதிற்கு மேற்பட்ட பக்கங்களை இலயிக்க வைத்தது பிடித்திருந்தது.