Tag Archives: குடியரசு

பராக் ஒபாமா ஏன் ஜெயிக்க வேண்டும்?

நான்கு வருடம் முன்பு ஒபாமாவின் தாரக மந்திரம் ‘மாற்றம்’. இன்றைக்கு மிட் ராம்னியின் மந்திரம் ‘அசல் மாற்றம்’.

சின்ன வயதில் சோறு ஊட்டும்போது அம்மா சொன்ன கதை நினைவுக்கு வருகிறது. பண்ணையார் வீட்டின் செல்லப் பிள்ளையை பாதுகாக்க கீரியை வளர்க்கிறார்கள். அப்பா வயலுக்கு வேலையாகப் போய்விட்டார். அம்மாவோ முற்றத்தில் பிசி. சமயம் பார்த்து நல்ல பாம்பு உள்ளே நுழைகிறது.

பாம்பைக் கண்ட கீரி, அதனுடன் சண்டை போட்டு குழந்தையைக் காப்பாற்றுகிறது. இந்த விஷயத்தை தன் எஜமானர்களுக்கு சொல்வதற்காக வாசலில் காத்திருக்கிறது.

இரத்தம் வழியும் வாயைப் பார்த்தவுடன் ஆத்திரம் கொண்ட தாயார், கீரியின் தலையில் தன் கையில் உள்ள குழவியைப் போட்டுக் கொல்கிறாள். குழந்தைக்கு என்னாச்சோ என்று பதறிக் கொண்டு வீட்டிற்குள் ஓடுகிறாள். அப்பொழுதுதான் உண்மை விளங்குகிறது.

குழந்தை பத்திரமாக தூளியில் உறங்குகிறது. தூளியின் அடியில் பாம்பு செத்துக் கிடக்கிறது. தன் மக்களை பாதுகாத்த பாதுகாவலனை தானே கொன்று விட்டோமே என்று அந்த அன்னை கதறுகிறாள்.

கீரியைப் போல் வாயில்லா ஜீவனாக ஒபாமா அமெரிக்க மக்களை பணக்கார வால் ஸ்ட்ரீட் பாம்புகளிடமிருந்து காக்க திட்டங்கள் இட்டு, சட்டமாக்கி வருகிறார். அதை அறியாமல், அமெரிக்க மக்கள் அவருக்கு எதிராக வாக்களித்து, அதன் பின்னர் வருத்தம் கொள்வாரோ என்னும் பதைபதைப்பு இருக்கத்தான் செய்கிறது.

கடந்த ஆட்சிக் காலத்தில் ஒபாமா என்ன சாதித்தார்?

முதல் கையெழுத்து எப்பொழுதுமே முக்கியமானது. அமெரிக்க ஜனாதிபதி ஆனதும் பராக் ஒபாமா பெண்களுக்கும் சம சம்பளம் கிடைக்க வழிவகுக்கும் திட்டத்தை தன்னுடைய முதல் கையெழுத்தின் மூலம் சட்டமாக்கினார்.

’இவன் திவாலாகிப் போவான். அவள் மஞ்சக் கடுதாசி கொடுப்பாள்’ என்று பின்னணியில் ஏலம் விட்டுக் கொண்டே, முகப்பூச்சில் அவர்களுக்கு கடும் நிதிச்சுமையைக் கொடுத்த பொருளாதார நிறுவனங்களைக் கட்டுக்குள் கொண்டு வரும் கண்காணிப்பு சட்டத்தை அடுத்து நிறைவேற்றினார்.

ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் புரிந்தால், வேலை போகும்; எந்தவித காப்பீடும் கிடைக்காது போன்ற ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதற்கான திறப்புகளை இயற்றினார்.

கல்லூரிகளில் படிப்பதற்கான கடன் கிடைப்பதில் இடைத் தரகர்கள் இல்லாமல் ஆக்கினார்.

இளைஞர்களுக்கும் வசதியானோருக்கும் மட்டும் உடல்நல மருத்துவம். முதியவர்களுக்கும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் முதுகு திருப்பல் என்பது போய் அனைவருக்கும் சுகாதாரம், எல்லோருக்கும் காப்பீடு, எவருக்கும் இன்சூரன்ஸ் என்பதை நிஜமாக்கினார்.

சுதந்திர சிந்தனையை எதிர்த்த ஒசாமா பின் லாடனை வீழ்த்தினார். முந்தைய ஆட்சியில் துவங்கிய இராக் போருக்கு முற்றும் போட்டார். முடிவில்லாத ஆப்கானிஸ்தான் சண்டையை எப்படி கைமாற்றி, சுயாட்சிக்கு கொணரலாம் என்பதற்கு வடிவம் கொடுத்தார்.

அராபிய நாடுகளில் கத்தியின்றி, ரத்தமின்றி, சத்தமின்றி மாற்றங்கள் கொண்டு வந்தார். அமெரிக்க படை வந்து இறங்க வில்லை. போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து பொதுமக்கள் சாகவில்லை. குடிமக்களே போராடினர். விடுதலை கேட்டனர். சர்வாதிகாரிகள் வீழ்ந்தனர். காந்தி என்ற சாந்த மூர்த்தி கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.

எகிப்து, லிபியா, டுனிசியா… வீழ்ந்தது மன்னராட்சி. தொடரும் மக்களாட்சி சகாப்தங்கள்.

அமைதிக்கான நோபல் பரிசை சும்மாவா ஒபாமாவிற்கு கொடுத்தார்கள்!

இதெல்லாம் காலாகாலத்திற்கும் நின்று பேசும் சாதனைகள்.

ஆனால், கடந்த இரண்டு ஆண்டு காலமாக நடந்தவைதான் மக்கள் மனதில் ஆழமாக பதிந்து இருக்கிறது. கையாலாகாத, ஒன்றுக்கும் உதவாத தலைவர் என்னும் பிம்பத்தை ‘டீ பார்ட்டி’ ரிபப்ளிகன்களும் செல்வந்த மிட் ராம்னியின் தோழர்களும் அமெரிக்க வாக்காளர் மத்தியில் ஆழமாக நிலைநிறுத்தி இருக்கிறார்கள்.

ஒபாமா முன்னிறுத்தும் எந்த திட்டத்தையும் எதிர்ப்பது என்பது மட்டுமே குடியரசுக் கட்சியின் ’ஓர் அம்ச திட்டம்’.

முக்கிய நகரங்கள் அனைத்தையும் இரயில் பாதை மூலம் இணைக்கும் திட்டமா… முடியாது.

சரி… காரில்தான் செல்வோம் என்கிறீர்கள். அதற்கான எரிவாயு கக்கும் விஷத்தை கரியமில வாயுவைக் குறைத்து, குறைவான பெட்ரோலுக்கு நிறைவான தூரம் செல்லும் அதி-திறன் கார் தயாரிக்கும் திட்டமா… முடியாது.

வேண்டாம்… பள்ளிகளில் ஆசிரியர்களை அதிகரிப்போம். ஒரு வாத்தியாருக்கு இருபது மாணவர்கள் மட்டும் என்று வைத்துக் கொள்வோம். குழந்தைகளுக்கு அறிவியல் கற்பிப்போம் திட்டமா… முடியாது.

வலதுசாரிகளின் செல்லப்பிள்ளையான வரிக்குறைப்பு செய்வோம். குறைந்தபட்ச ஊதியத்தில் வாழ்பவர்களுக்கு வருமான வரியை நீக்குவோம்… முடியாது.

குறைந்த பட்சமாக… சாலைகளை பழுது பார்ப்போம். பாலங்களை சீர்படுத்துவோம்… முடியாது.

எதை எடுத்தாலும் முட்டுக்கட்டை. எந்த ஐடியா சொன்னாலும் ஒத்துழையாமை. இது மட்டுமே மிட் ராம்னி கட்சியின் செயல்பாடு.

இதற்கு நடுவிலும் சொங்கிப் போன அமெரிக்காவை தலை நிமிர வைத்திருக்கிறார் பராக் ஒபாமா. பங்குச் சந்தை குறியீடு முன்னேறுகிறது. வேலை தேடுபவர்கள் எண்ணிக்கை குறைகிறது. புதிதாக வேலை கிடைத்தோர்களின் சதவிகிதம் நாளொரு ஃபேர் அண்ட் லவ்லியும் பொழுதொரு பூஸ்ட்டுமாக வெற்றிக் கொடி கட்டுகிறது.

இவ்வளவு முட்டுக்கட்டை இட்டும் ஒபாமா தேர் ஸ்டெடியாக வீறுநடை போடுகிறது.

இதெல்லாம் ஒஹாயொ வாக்காளருக்கும் ஃபுளோரிடா பெருசுகளுக்கும் புரிந்ததா என்பது நாளைக்கு தெரிந்து விடும்.

’ராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் நமக்கென்ன போச்சு? மிட் ராம்னி வந்தால் என்ன குறை?’

ராம்னிக்கு ஸ்திரமான கொள்கை இல்லை. எங்க ஊர் கவர்னராக இருந்தபோது நிறைவேற்றிய திட்டங்களை இப்பொழுது அவரே எதிர்க்கிறார். கிட்டத்தட்ட அன்னியன் அம்பி போல் நடந்து கொள்கிறார்.

ஒரு சமயம் ரோமியோவாக பெண்களுக்கு ஆதரவு தருகிறார். அடுத்த நிமிடம் அன்னியனாக மாறி, பெண்களை வன்புணர்ந்தால் கூட கருக்கலைப்பு கூடாது என்கிறா. அடுத்த நிமிடம் அம்பியாக மாறி ஜீஸஸ் என்ன சொல்லி இருக்கார்னா என்று கருட புராணம் பாடுகிறார்.

வந்த முதல் நாளே பழைய குருடி கதவைத் திறடி என்று ஒபாமாவின் ‘எல்லோருக்கும் உடல்நலக் காப்பீடு’ திட்டத்தை ரத்து செய்வேன் என வாக்குறுதி தந்திருக்கிறார்.

ஏற்கனவே பதினாறு ட்ரில்லியன் (கடைசி கணக்கின்படி $16,015,769,788,215.80) பட்ஜெட் பற்றாக்குறை. இதன் தலையில் இன்னும் இராணுவ செல்வழிப்பு என்கிறார். மில்லியனர்களுக்கு வருமான வரியை வாரி வழங்குவேன் என்கிறார்.

கூடிய சீக்கிரமே சீனாவும் ஜெர்மனியும் அகில உலகத்தின் முடிசூடா மன்னர்களாக கோலோச்ச வேண்டும் என்று நினைப்பவர்கள் நிச்சயம் ராம்னிக்கு வாக்களிப்பார்கள்.

What I fear is genuinely worthy falling into the abyss; What I hate is ignorantly hopeful pushing them!

அமெரிக்காவில் எகிப்து வருமா? சூடான் ஆகுமா?

இது ரொம்ப பழைய கதை. நவம்பரில் நடந்து முடிந்த தேர்தல் கதை

ஒரு ஊரில் ஒருத்தி இருந்தாள். அவள் ஒரு கோழியும் ஒரு சேவலும் வளர்த்தாள். அது நாளொரு முட்டையும் இட்டு வந்தது. சிறு சிக்கன் பல பணம் என்பதற்கேற்ப, ஒன்றை இரண்டாக்கி, இரண்டை பன்மடங்காகப் பெருக்கினாள்.

அவளுக்கு பக்கத்து வீடு மாளிகையாக இருந்தது. அதில் இருந்தவளுக்கு பத்து கோழி இருந்தது. தினந்தோறும் ஆறுமுகனின் கைக்கு ஒன்றாக டஜன் ஈண்டது.

திடீரென்று ஒரு நாள் மாளிகைக்காரிக்கு முட்டை வரத்து குறையத் துவங்கியது. அவள் பக்கத்துவீட்டுக்காரியை சந்தேகப்பட்டாள்.

அரசனிடம் முறையிட்டாள். ஒற்றைக் கோழி வைத்திருப்பவளோ ‘நான் எடுக்கவில்லை’ என மறுக்கிறாள்.

‘அவள் ஏழை. அதனால்தான் எடுக்கிறாள்’ என்கிறாள் பணக்காரி.

குழம்பிப்போன ராஜா, அடுத்த நாளுக்கு ஒத்திவைத்து அனுப்பித்துவிட்டான். விடிந்தது. அரண்மனை வாயிலில் சேறும் சகதியும் ஆக்கிவைக்க சொன்னான். வாயிலைக் கடந்ததும் ஒரு சிறிய கப்பும், இரண்டு வாளி நிறைய தண்ணீரும் வைத்தான்.

இருவரும் வந்தார்கள். ஒத்தை கோழிக்காரி ஒரேயொரு குடுவையளவு நீரை வைத்து, இரண்டு கால்களையும் சுத்தமாக அலம்பிக் கொண்டுவிட்டாள்.

பத்து மாட்டுக்காரிக்கு ஒரு வாளி போதவில்லை. பருத்த கால்கள். கவனம் சிதறிய நடை. சறுக்கி விடக் கூடாதென்ற பயம். எல்லாம் சேர்ந்து முட்டி வரை கரை. முன்னவள் பாக்கி வைத்திருந்த வாளித் தண்ணீரையும் தாராளமாக தாரை வார்த்தாள்.

மரியாதைராமன் பார்த்துக் கொண்டிருந்தார். தன் முட்டை போதாதென்று அடுத்தவர் முட்டையையும் சுடும் பழக்கம் கொண்ட பணக்காரியை கண்டித்து, அபராதம் விதித்தார்.

அங்கே சாட்சியம் இல்லை. அமெரிக்காவில் மீடியம் இருந்தாலும் மக்கள் மருண்டதில் ஒபாமாவின் பிடி தளர்ந்து முட்டை சிதறிவிட்டது.

மரியாதைராமன் போல் குடிமகன்களுக்கும் குழப்பம். நிறைய வைத்திருப்பவர் சிரத்தையாக மேய்த்தால், எதற்காக வளர்ச்சியில் பின் தங்க வேண்டும்? ஒழுங்காக கணக்கு போட்டு, கண்ணுங்கருத்துமாக நிர்வகித்தால், ஏழை பக்கத்துவீட்டுக்கார இந்தியா/சீனா போல் நாமும் முன்னேறலாமே?

இப்போதைக்கு அமெரிக்காவின் விஜயகாந்த் ஆன ‘டீ பார்ட்டி‘யிடம் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள்.

தலைப்புக்கும் இந்தக் கதைக்கும் என்ன சம்பந்தம்?

முதலில் புள்ளிவிவரம்:

கி.பி. 1980: அமெரிக்காவின் மொத்த வருவாயின் பத்து சதவீதத்தை ஒரு சதவீத பெரும்பணக்காரர் ஈட்டுகிறார்கள்.

2007: வெறும் பத்து சதவிகித பெரும்பணக்காரர்கள் 50% (சரி பாதி) வருவாயை வைத்திருக்கிறார்கள்.

2007: நான்கு லட்சம் டாலருக்கு மேல் ஈட்டும் மிகப்பெரும் செல்வந்தர்களிடம் 25% பணம் அடைந்திருக்கிறது.

1973 முதல் இப்போது வரை, பாக்கி 99% சதவிகித சராசரி அமெரிக்கரின் வருவாய் 8.5% உயர்ந்திருக்கிறது.

அதே காலகட்டத்தில் 1% செல்வந்தர்களின் சம்பளம் 190% வளருகிறது.

இப்போது விஜய்காந்த்தின் மதிப்பை உணர்ந்திருப்பீர்கள்.

  • இந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்க யாருமே இல்லையா?
  • இப்படி பணங்குவிப்பவர்கள் ஆட்சியில் இருக்க வேண்டுமா?
  • எட்டு மில்லியன் அமெரிக்கர்களை வேலையில்லாமல் தவிப்பது குற்றமில்லையா?

முழங்கினார்கள்; ‘தேநீர் கட்சி‘ வென்றது.

இப்பொழுது நிகழ்காலம். முதலில் டுனீசியா; நேற்று எகிப்து; நாளை யேமன்? ஜோர்டான்?

Unrest in Arab countries

Political crisis in Egypt

எங்கெல்லாம் புரட்சி வெடிக்கிறது… எப்படி வெடித்தது! ஏன் உருவானது… இதுதான் ஊடகங்களின் பேசு பொருள்.

1848 -இல் ஃப்ரெஞ்சு போராட்டத்திற்கும் அரபு நாடுகளின் எழுச்சிக்கும் முடிச்சுப் போடுகிறது ‘தி வோர்ல்ட்’.

இந்தோனேஷியாவில் 1998 பொங்கி எழுந்த ஏழை வறியோரின் கோபத்தையும் எகிப்தின் போராட்டமும் ஒரு விதத்தில் சரி நிகர் என்கிறது என்.பி.ஆர்.

1989களில் சோவியத் ருஷியா துண்டாடியதும், செக்கோஸ்லோவேகியா பிரிந்ததும், பில் கிளின்டனின் போஸ்னியா போரும் ஒப்பிடத் தக்கது. – அல் ஜஸீரா.

தலைப்புக்கு நிஜமாகவே வந்து விடலாம்.

இனப் போராட்டத்திற்குள்ளான சூடான் இரண்டாகப் பிரிகிறது. அமெரிக்கா இரண்டாகப் பிரியுமா?

சவூதி அரேபியா போல் இஸ்லாமிய நாடாகவும் பிரஸ்தாபிக்காமல், லெபனான் போல் சுதந்திரமும் புழங்காமல் இருக்கும் எகிப்தில் படித்தவர்கள் போராட்டத்தை முன்வைக்க, வறியோர்கள் பின்னெடுத்து செல்கிறார்கள். அமெரிக்காவிலும் ஜீஸஸ் அருளுடன், வீடற்றோர் பொங்கியெழும் ‘டீ பார்ட்டி’ புரட்சி எழுமா?

இந்தியாவைப் பாருங்கள்… உங்கள் வேலையை எடுத்துக் கொண்டு விட்டார்கள்.
சீனாவைப் பாருங்கள்… நீங்கள் உபயோகிப்பவை அனைத்தும் அங்கேதான் தயாராகிறது.

இந்தியனை… வெளியேற்று; சீனாவை… தூக்கியெறி!

பணக்கார ஆசியர் பி.எ.டபில்யூவிலும் லெக்சசிலும் பவனி வரும்போது, அண்டியிருக்க ஓலைக்குடிசைக்கு கூட வக்கிலாதவர்களுக்கு கோபம் வரும். அதுவும், வேற்று நிறத்தவனாகவும் இருந்துவிட்டால்…

உகாண்டாவில் நடந்தது; ஃபீஜியில் நடக்கும்; ஏன் நடக்காது என்பது இன்னொரு நாளைக்கான மேட்டர்.

தொடர்புள்ள நூல்கள்:

1. The Mendacity of Hope: Barack Obama and the Betrayal of American Liberalism by Roger D. Hodge

2. Ill Fares the Land by Tony Judt

அமெரிக்க அரசியல் :: இடைத்தேர்தல்

ஆளுங்கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்ததாக சரித்திரம் உண்டா?

உண்மையான ஜனநாயகத்தில் சாத்தியமில்லை. அதுவும் வறுமை தாண்டவமாடும், வேலையில்லாத் திண்டாட்டம் கொடிகட்டி பறக்கும் நாட்டில் தம்பிடிக் காசு கூட பெட்டு கட்ட முடியாது.

இரண்டாண்டுகளுக்கு முன்பு எதிர்க்கட்சி. கேள்வி கேட்டார்; குற்றஞ்சாட்டினார்.

இன்றோ ஆளுங்கட்சி. காங்கிரஸ், செனேட், ஜனாதிபதி… சகலமும் டெமோக்ராட் வசம். மார்தா கோக்லி ஒரு பதம் என்றால், முழு வெண்கலப் பானையும் நாளை பொங்குகிறது.

அதிபர் ஆகிய பிறகு எதிர்கொள்ளும் முதல் தேர்தலை பில் க்ளின்டன் முதற்கொண்டு பெரும்பாலானோர் தோற்றே துவங்கியுள்ளனர். ஒபாமாவும் படுதோல்வியுடன் துவங்குவார்.

அதற்கான முக்கிய காரணங்கள் என்ன?

  1. சேமநலம், உடல்நலம் என்று எல்லோரின் செலவையும் இன்ஷூரன்ஸ் நிறுவன நலனுக்காக கூட்டி கொடுத்தது
  2. கடைநிலை ஊழியர்களுக்கு வேண்டிய கட்டுமானத் தொழில் தலைநிமிராதது
  3. வருமான வரி அதிகமாகிப் போகும் அபாயம்

இதனால் ஒபாமாவிற்கு கிடைக்கப் போகும் முக்கிய நன்மைகள் என்ன?

  1. ஆப்கானிஸ்தானில் இருந்து போர்படைகளை விலக்குவதை தாமதிக்க ஆர்வம் காட்டும் மேல்சபை + சட்டசபை
  2. தீவிர இடதுசாரி கொள்கை கொண்ட நிதிக் கொளகை & தொழிற்துறை சார்புநிலையைத் தளர்த்திக் கொள்ள நிர்ப்பந்திக்கப்படுவதாக காட்டிக் கொள்ளுதல்
  3. அதன் மூலம் சாரா பேலின் போன்ற ஒப்புக்கு சப்பாணியை தன் போட்டியாளராக 2012 தேர்தலில் நியமிக்க வைத்தல்

அதெல்லாம் இருக்கட்டும். உள்ளூர் அரசியலுக்கு வருவோம்.

மாசசூஸெட்ஸ்

சென்றமுறையே தெவால் பேட்ரிக் மெதுவாகத்தான் துவங்கினார். இந்த முறையும் செம ஆமை ஆரம்பம். ஆனால், முயல்களை விட முன்னிலையில் இருக்கிறார்.

விஜயகாந்த் போல் ரெண்டுங்கெட்டான் கஹில். குடியரசு வாக்குகளை சிதறடிப்பதில் சுதந்திரக் கட்சியின் பொருளாளர் கஹில் பெரும்பங்கு வகிக்கிறார்.

வாக்குச்சீட்டில் மூன்று கேள்விகளில் இரு கேள்விகள் ஜீவாதார முக்கியத்துவம் வாய்ந்தவை.

1. சாராயத்திற்கு வரிவிலக்கு தரலாமா? வேண்டாமா?

2. உங்கள் வருமான வரியை குறைக்கலாமா? வேண்டாமா?

இந்தக் கேள்விகளை Jeopardy போல் தலையைச் சுற்றி வினா எழுப்பியுள்ளனர்.

கலிஃபோர்னியா

மாசசூஸட்ஸ் எல்லாம் ‘ஐயோ… பாவம்’ ரகம். கலிபோர்னியாவில் கஞ்சாவை சட்டபூர்வமாக வளர்க்கலாமா/ வேண்டாமா என்று வினவுகிறார்கள்.

சட்டத்திற்கு அப்பால் போதைப் பொருள் ஏற்றுமதி (கடத்தல் என்று கூட இதற்கு சங்ககாலத்தில் பெயர் நிலவியது) செய்யும் நாடுகளான மெக்சிகோ, கொலம்பியா, கார்சாய் போன்றவை இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.

பல்கலை மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றிருக்கும் இந்த சட்டவரைவுக்கான பதிலை நாலை அறியலாம்.

கலிபோர்னியாவில் கஞ்சா தவிர இன்னும் இரு முக்கிய போட்டிகள்.

1. ஹியுலெட் – பக்கர்ட் முன்னாள் தலைவி கார்லி ஃபியோரினா

2. ‘பொருட்கள் எலத்தில் விற்க/வாங்க’ உலகப் புகழ்பெற்ற வலைத்தளமான ‘ஈ பே‘ தலைவி மெக் விட்மன்.

செமொக்ரட் கட்சித் தலைவர் ஹாரி ரீட் :: செனேட்

ஆறு வருடத்திற்கொரு முறைதான் செனேட்டருக்கு மறுதேர்தல் நடக்கிறது. (அமெரிக்க காங்கிரசுக்கு இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை). போயும் போயும் இந்தாண்டுதானா அந்தப் போதாத காலம் வரவேண்டும்?

அந்த ஆறாண்டு காலம் நிறைந்து, இந்த முறை இன்னொரு வாய்ப்பு கோருகிறார் ஆளுங்கட்சி தலைவர் ஹாரி ரீட்.

கட்டிடங்கட்டுவோர், சாலை போடுவோர் என்று தினகூலிக்கு சொற்ப சம்பளம் பெறுவோர் தெருவில் தள்ளப்பட்ட நிலை. அப்படி தள்ளாடும் அமெரிக்கருக்கு போட்டியாக, பக்கத்து நாடான மெக்ஸிகோவில் இருந்து மிகக் குறைந்த ஊழியத்திற்கு கள்ளத்தோணியில் குடிபுகல்வோர்களை கண்டு கொள்ளாத சுதந்திர கட்சி சீட்டை தக்கவைத்துக் கொள்ளுமா?

கதாநாயகி கிறிஸ்டின் ஓடானல்

சென்ற தேர்தலில் நாயகி அந்தஸ்தை சாரா பலின் பெற்றார். இந்தாண்டு அந்தப் பெருமை டெலாவேர் மாகாண செனட்டராக போட்டியிடும் க்ரிஸ்டீன் ஒடானலைச் சேரும்.

ஜோ பைடன் துணை ஜனாதிபதி ஆனதால் காலியான இடத்திற்கான போட்டி என்பது கூடுதல் மகிமை.

கிரிஸ்டீன் ஒடானல் பொன்மொழிகளில் சில:

  1. “பிறன்மனை நோக்குவது தவறு; அதனினும் தவறென்பது கையடித்தல். கைவேலை செய்வது முறை பிழற்ந்த செய்கை.”
  2. “கிறித்துவத்தை பள்ளிப் பாடநூல் திட்டத்தில் இருந்து எடுத்துவிட்டோம்; அதன் செய்வினையால்தான் வாரந்தோறும் வகுப்பறைகளில் துப்பாக்கிச்சூடு நடக்கிறது.”
  3. “தீராநோயை இறைவன் தீற்று வைக்கிறார். புற்றுநோயை கடவுள் குணம் செய்வித்தலை கருத்தில் கொள்ளாமல், பணங்கட்ட சொல்லுகிறார்கள்.”
  4. “எனக்கு நீங்கள் வாக்களிக்க, காரணஞ்சொல்ல தேவையில்லை.” (கேள்வி: நீச்சலுடை புகைப்படத்தைக் காண்பித்து வாக்கு சேகரிப்பீர்களா?)
  5. “பரிணாம வளர்ச்சி என்னும் அறிவியல் கொள்கை வெறும் பம்மாத்து. அது மட்டும் உண்மையென்றால் குரங்குகளெல்லாம் மனிதர்களாகி இருக்குமே?”
  6. 1999ல்: ‘நான் பில்லி, சூனியம் வைக்க முயன்றேன்.’
  7. இன்று: “நான் சூனியக்காரி அல்ல!”

அமெரிக்க காங்கிரஸ் – சட்டசபை

மொத்த இடங்களான 435- இல் நூறு இடங்களில் சரியான போட்டி. நூறு இடங்கள் கொண்ட செனேட்டில் 37க்கு தேர்தல் நடக்கிறது.

ஒபாமாவிடம் எப்பொழுதுமே பணப்புழக்கம் அதிகம். இப்பொழுது ஆளுங்கட்சி வேறு! டெமொகிரேட் கட்சி 145 மில்லியன் டாலர்கள் செலவழித்திருக்கிறது.

அதற்கு சற்றும் சளைக்காத ரிபப்ளிகன் கட்சி 121 மில்லியன் கரைத்திருக்கிறது. அதற்கான வருவாயாக குறைந்தபட்சம் நாற்பது இடங்களாவது கைமாறும் என்று எதிர்பார்க்கிறது.

சீனாவும் கேபிடலிசமும்

இது தவிர கார்ல் ரோவ் போன்ற சுப்பிரமணிய சாமிகள் கைங்கர்யமும் இந்தத் தேர்தலில் நிறையவே உண்டு. இந்த மாதிரி அறுபது மில்லியன் குடியரசுக் கட்சிக்கு கிடைத்திருக்கிறது. அதற்கான அமைப்பாக U.S. Chamber of Commerce செயல்படுகிறது. சீனா போன்ற வெளிநாட்டில் இருக்கும் அன்பர்களின் உபயத்தில் வளர்கிறது.

சைனாவின் பணத்தை மதிப்பீடு செய்வதில் சுணக்கம் ஏற்படுத்துவது, டாலருக்கும் மற்ற நாணயங்களுக்கும் நிலவும் ஏற்றத்தாழ்வை அப்படியே விட்டுவைப்பதன் மூலம் ஏற்றுமதியின் லாபவிகிதத்தை மெயின்டெயின் செய்வது போன்றவை சீன அரசின் விருப்பம்.

ஜார்ஜ் புஷ் செய்ததை குடியரசு கட்சி தொடருமென்னும் நம்பிக்கையில் அயநாட்டு செல்வாணியும் உள்நாட்டுத் தேர்தலில் விளையாடுகிறது.

ஆளுநர் – கவர்னர் பதவி

37 இடங்களில் ஆளுநருக்கான போட்டியும் நாளை தேர்தலில் இடம்பிடித்துள்ளது.

இதில் தெற்கு கரோலினா மாகாணத்தின் கவர்னர் வேட்பாளராக அமெரிக்க இந்தியப் பெண்ணான நிக்கி ஹேலி முன்னணியில் இருக்கிறார்.

ஆர்னால்ட் ஸ்வார்ஸனீகர் கட்சியை சேர்ந்த மெக் விட்மேன் வெல்வாரா? நிரந்தரமாக டெமோக்ரட் வெல்லும் மாநிலத்தில் முன்னாள் கவர்னர் ஜெரி பிரவுன் வெல்வாரா?

எவர் வென்றாலும் கஞ்சாவில் மட்டுமே அகில உலகமும் கவனம் செலுத்தும்.

மேலும்:

  1. Key House Races in the 2010 Elections – Interactive Feature – NYTimes.com
  2. A Banner Year for Political Spending – Interactive Graphic – NYTimes.com
  3. Campaigns: Campaign and Election News & Analysis – washingtonpost.com
  4. Basics about Midterm Election – Election Center 2010 – Elections & Politics from CNN.com

olla podrida

ரெண்டு மாசம் இருக்கும் போல் தோன்றியது. ஆனால், ஒரு மாசம் மட்டுமே ஆகியிருக்கிறது. தமிழ்மணம் பக்கம் சென்று ரெண்டு மாசம் இருக்கும் போல் தோன்றியது.

நித்தியானந்தாவிற்கு டாப் 10 போட கொள்ளை ஆசை. நேரம் அமையவில்லை. இப்பொழுதும் போடலாம். அட்லீஸ்ட் ட்விட்டரில் கிடைத்த சம்பாஷணைகளில் கவர்ந்ததைத் தொகுக்கலாம்.

ரோமன் கத்தோலிக்க மதகுருமாரால் மேற்கொள்ளப்பட்ட சிறார் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு வணக்கத்துக்குரிய பிதா, பாப்பரசர் பெனடிக்ட்டும் உறுதுணை நின்றிருக்கிறார். திருச்சபையின் திரைமறை திருப்பலி களப்பணி.

அரசியல்வாதிக்கு அடுத்த தேர்தலில் நிற்க வேண்டாம் என்றால் துணிச்சல் வரும். ஒபாமா போன்றவருக்கு அதுவே அபயம் என்றால் ஜிம் பன்னிங் (Jim Bunning) போன்ற சிலருக்கு அசட்டுத் துணிச்சல். மறுமுறை வாக்கு கோரினால் நிச்சயம் தோல்வி என்பதால் அதீத நிலைப்பாடா? அல்லது டெமொக்ரடிக் ஆளுங்கட்சியே காசு கொடுத்து கூவச் சொல்லியதா?

கிறித்துவிற்கு முன் பிறந்த போப்பை விமர்சிக்கும் இந்தப் பதிவில் 1907ல் இயற்றப்பட்டது நீங்குவது பாராட்டுவதுதானே பொருத்தம்?

இல்லை… தேர்தல் நிதிக்கு தரப்படும் பணம் எப்படி வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும், கொடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

ஒபாமாவிற்கும் ஹில்லரிக்கும் இதனால் பெரும்பாதிப்பு இருக்காது. ஆனால், அமெரிக்காவில் பென்ச் நீதிபதிகளுக்கும் தேர்தல் உண்டு. அவர்கள் உள்ளூர் வழக்கொன்றில், நிறுவனத்திற்கு எதிராக தீர்ப்பளித்திருப்பார். அவர், மறுபடி வாக்காளரை சந்திக்கும்போது, அதே நிறுவனம் அசுர பலத்துடன் மீடியாவில் எதிர்மறை விளம்பரத்தை சுழலடிக்கும். போட்டி வேட்பாளருக்கு பற்றுடன் வரவு வைக்கும்.

இதே போல் மாநில சட்டமன்றத்திலும், பெருவணிகர்களைப் பகைத்துக் கொள்ளும் சட்ட மசோதாக்களை ஆதரிக்க அரசியல்வாதிகள் அஞ்சும் சூழல் தோன்றும். இன்று வணிக ஸ்தாபனத்திற்குப் பிடிக்காத சட்ட வரைவை நிறைவேற்றினால், நாளைய பொழுதில் பில்லியன் டாலர் கணக்கில் தீர்த்துக் கட்டப்படுவோம் என்பது அவருடைய லிபிதம்.

ஒவ்வொரு அரசியல்வாதியாக, ஒவ்வொரு நீதிபதியாக, ஒவ்வொரு தேர்தலாக இந்த மாதிரி செலவழிக்க வேண்டாம். வணிக நிறுவனத்தின் பலம் என்பது அல் க்வெய்தாவின் ஆள்சேர்ப்பு மாதிரி. எங்கேயாவது ஒரு வெடிகுண்டு போதும். பூரா பாகிஸ்தானும் தீவிரவாதிகளின் தேசம் மாதிரி தோன்றும். அதே போல், எங்காவது ஒரு சாம்பிள் போதும். ‘அவனுக்கு நேர்ந்த கதி, உனக்கும் ஆவணுமா?’ என்றே மிரட்டி, அனைவரையும் வழிக்குக் கொணரலாம்.

தொடர்புள்ள இடுகை: ஒரு பில்லியனைத் தாண்டிய 2008 தேர்தல் வசூல்! « US President 08

Democrats Far Outspend Republicans On Field Operations, Staff Expenditures – WSJ.com

In 2004, the Democratic Party spent nearly $120 million on advertising in support of then-nominee John Kerry, compared to only $500,000 this fall

தலைப்புக்கு என்ன அர்த்தம்?

1. An incongruous mixture.
2. A spicy stew of seasoned meat, vegetables, chickpeas, etc.

ETYMOLOGY: From Spanish olla podrida (literally, rotten pot), from olla (pot) + feminine of podrido (rotten).

USAGE: “Alice Randall’s collection of cookbooks is formidable, an olla podrida of Junior League and soul food cookbooks and classics like The Joy of Cooking.”
– Penelope Green; What Matters Most; The New York Times; Sep 16, 2009.

துவக்கத்தில் எதற்கு தமிழ்மணம் பேச்சு? அன்றாடம் வராவிட்டால், கவர்ந்திழுக்கிற மாதிரி தமிழ்மணத்தில் எதுவுமேயில்லை. திடீரென்று வந்து விழுபவருக்கு சென்னைக்குப் போன அமெரிக்கன், சேனல்களைத் தாண்டிய கதையாக, டிவியை அணைக்கவைக்கிறது. ‘சூப்பர் சிங்கர்’ எங்கே, துணையெழுத்தோடு ‘ராமாயணம்’ அங்கே என்று காட்ட வேண்டாமோ?

மார்தா கோக்லி x ஸ்காட் ப்ரௌன் – மாஸசூஸெட்ஸ் செனேட் தேர்தல்

சென்னையை திமுக-வின் கோட்டை எனலாம். பாஸ்டனை தலைநகரமாகக் கொண்ட மாஸசூஸட்ஸ் டெமோக்ரட்ஸின் கோட்டை.

ஒரேயொரு விதிவிலக்கு உண்டு.

பெண் வேட்பாளர் நிற்கும்போது கட்சி மாறும்.

சுதந்திரம் வாங்கி 222 ஆண்டு கழித்து முதன்முதலாக ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்தனர். அதுவும் மாநிலத்தின் முக்கிய பதவிக்கு அல்ல. பொருளாளர்.

அதன் பிறகு முன்னேறியவர் மார்த்தா கோக்லி. அட்டர்னி ஜெனரலுக்கு போட்டியிட்டு வென்றார்.

இவர் தவிர துணை கவர்னராக இரண்டு பேர் தொற்றிக் கொண்டு வென்றுள்ளனர். அவர்கள், அடுத்த கட்டமாக கவர்னருக்கு நின்றபோது மண்ணைக் கவ்வினர்.

கட்சி பாகுபாடின்றி பெண்களை நிராகரிக்கின்றனர். ரிபப்ளிகன் ஆகட்டும்; சுதந்திரக் கட்சி ஆகட்டும். பெண் வேட்பாளரா? தோற்கடித்து விடு!

‘கோக்லியை கற்பழி!’

‘கோக்லியின் சூத்தில் ஏத்து!’ (“shove a curling iron up her butt”)

இதெல்லாம் எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி அரங்குகளின் வெளியான கோபம்.

உள்கட்சியிலேயே கடும் எதிர்ப்பு அலை இருந்ததாக யூனியன் தலைவர் சொல்கிறார்: “I’m not voting for the broad” – Teamster leader Robert Cullinane

சரி… மார்த்தா தோற்றதற்கு பெண்ணாகப் பிறந்தது மட்டுமா காரணம்?

1. வாக்காளர்களுக்கு இரத்தமும் சதையுமான தலைவர் வேண்டும். பற்றற்ற, விஷயம் மட்டும் பேசுகிற வழக்கறிஞர் தேவையில்லை. கொஞ்சம் நகைச்சுவை, நிறைய கோஷம், குடும்பஸ்தர் தோற்றம்: எல்லாம் ப்ரவுனிடம் இருந்தது.

2. தீவிர வலதுசாரி முழக்கங்களை பிரவுன் தவிர்த்தார். ரஷ் லிம்பா, சாரா பேலின் போன்ற துருவங்களை விட்டுவிட்டு, முன்னாள் நியு யார்க் மேயர் ரூடி ஜியூலியானி போன்ற அனைவருக்கும் கவர்ச்சியான ஆதர்சங்களை அழைத்தார்.

3. ஒபாமாவின் மோகம் முப்பது நாள் முடிந்தது. ஒரு வருடம் முடிந்தவுடன் ஜனாதிபதிக்கு மண்டகப்படி துவங்கும். அது இப்போது ஸ்டார்டிங்.

4. பொருளாதாரம்: முதலீட்டாளர்களுக்கு செம வருவாய். வங்கி முதலைகளுக்கு இரட்டிப்பு போனஸ். பங்குச்சந்தைக்காரர்களுக்கு கொண்டாட்டம். அன்றாடங்காய்ச்சிக்கு பஞ்சப்படி கூட கொடுப்பது நிறுத்தம். இப்படிப்பட்ட வேலையே இல்லாத சூழலில், வேலை தேடி சலித்தவர்களை வோட்டு போட சொன்னால்…

5. பணங்காய்ச்சி மரம்: மிட் ராம்னி கொணர்ந்தார். தலைநகரத்தில் லீபர்மனின் அழிச்சாட்டியத்தை விரும்பாதவர்கள் தந்தனர். குடியரசுக் கட்சி கொட்டியது. கையில காசு… பெட்டியில வாக்கு.

6. படுத்துக் கொண்டே ஜெயிப்போம்: ஆண்டிப்பட்டிக்கு வேட்பாளர் வராமலே ஜெயிக்கக் கூடிய கட்சி அ.இ.அதிமுக. அது மாதிரி கால் நகம் தேயாமல் வெல்லக்கூடிய இடம். இருந்தாலும், சுகவனங்கள் தோன்றிக் கொண்டேதானே இருக்கின்றனர்?

7. மாயை: ‘அவர்கள்தான் எல்லாம் செய்கிறார்கள். அறுபது போக்கிரிகளின் அழிச்சாட்டியம்! தங்களுக்கு என்ன வேண்டுமோ நிறைவேற்றிக் கொள்கிறார்கள்’ – இது குடியரசு கட்சியின் பிரச்சாரம். நாற்பது பேரை வைத்துக் கொண்டு எந்தவித மசோதாவையும் இம்மியளவு கூட நகரவிடாத கட்சியின் கூக்குரல்.

‘ஜட்ஜை நியமிக்க வேண்டுமா?’

‘முடியாது! போடுவோம் ஃபிலிபஸ்டர்.’

‘எங்க தல ஒபாமா நியமிப்பவர் என்றாலும்… ஜட்ஜ் உங்களுடைய குடியரசுக் கட்சிய சேர்ந்தவரப்பா… உங்காளுதான் என்பது தெரியுமில்லையா?’

‘இருந்தாலும் தர்ணா செய்வோம்! சட்டசபையை நடக்க விடமாட்டோம்! எங்க கட்சித் தல மெகயின் தோத்துட்டார்…’

இப்படியாக அரசாங்கத்திற்கு முட்டுக்கட்டையிட்டு, அந்தப் பழியை ஒபாமா தலையிலும், டெமோக்ரட்ஸ் மெஜாரிட்டி என்றும் தள்ளிவிடும் தந்திரம். (GOP Opposition Slows Obama’s Judicial Nominees : NPR)

8. விட்டுக்கொடுக்கும் மந்திரம்: சென்றதுடன் தொடர்புடையது. என் வீட்டில் ‘மதுரை’ ஆட்சிதான். இருந்தாலும், மீனாட்சி என்னவோ, ‘சிதம்பரம்’ என்று நடராஜனையே சொல்லவைக்கும் மேனேஜரின் சூட்சுமத்துடன் செயல்படுவார். ஒபாமாவிற்கு இந்த மாதிரி ராஜதந்திரம் போதவில்லை. போதிய பெரும்பான்மை இல்லாமலேயே காரியத்தை சாதித்துக் கொண்ட ஜார்ஜ் புஷ்ஷின் சாமர்த்தியத்தைப் பார்த்தால் கடுப்பு கலந்த ஆச்சரியம் வரவே செய்கிறது.

9. கோஷ உச்சாடனம்: ஆள்குறைப்பை முடித்தவுடன், ‘இதுதான் கடைசி வேலைநீக்கம். இனிமேல் சென்மாந்திரத்திற்கும் எவரையும் வீட்டுக்கு அனுப்ப மாட்டோம்!’ என்று வாய்கூசாமல் பொய் சொல்லும் மேலாளரின் திறமைக்கொப்ப, தன்னுடைய சொந்த விருப்பு வெறுப்புகளைப் பற்றி பேசாமல், வாக்காளரின் கவலையை பேசுவது நல்ல வேட்பாளரின் லட்சணம். குழந்தைகளுக்கும் ஏகே 47; அதே குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே குழந்தை பெறும் திட்டம் என்பதெல்லாம் மனதோடு வைத்துக் கொண்டு, புறத்தே பிறிதொன்று பகர்வது வெற்றிக்கனியை சித்திக்கும்.

10. அதுதான் இந்தப் பதிவில் துவக்கத்தில் சொல்லியாகி விட்டதே. ‘ஏன் பெண்ணென்று பிறந்தாய்?’


அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகை: 307,006,550

மிகக் குறைந்த வாக்காளர் கொண்ட 20 மாகாணங்களின் மக்கள் தொகை: 31,434,822

அதாவது 10%

ஓரு மாகாணத்திற்கு இரு செனேட்டர்கள்.

20 * 2 = 40 செனேட்டர்.

அமெரிக்காவில் மொத்த மாநிலங்கள்: 50; எனவே, மொத்த செனேட்டர்கள் எண்ணிக்கை: 50 * 2 = 100

அதாவது, வெறும் 10 சதவிகிதம், 40 சதவீதத்திற்கு வழிவகுத்தது.

இப்பொழுது நடுநிலையான தேர்தலில் அமெரிக்காவின் குறுக்குவெட்டு சித்திரமான மாநிலத்தில் இருந்து உண்மையாகவே தேர்ந்தெடுக்கப்பட்ட செனேட்டர் – ஸ்காட் ப்ரௌன்.

வாழ்த்துகள்.

கவர்ச்சிப்புயல் பேலினும் அமெரிக்க அதிபர் தேர்தலும் – தமிழக செய்தித் தொகுப்பு

ஜி- 8ல் இந்தியாவுக்கு இடம்: மெக்கைன் விருப்பம்

யாஹு

ஜி- 8 அமைப்பில் இந்தியாவுக்கு இடம் அளிக்க வேண்டும் என்று, ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜான் மெக்கைன் விருப்பம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், உலக அளவில் இத்தேர்தல் ஏற்படுத்தும் தாக்கத்தை அறிந்து கொள்வதற்காக, ஜான் மெக்கைனின் தேர்தல் பிரச்சார ஆலோசகர் ரிச்சர்ட் ஆர் பர்ட், பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் இந்தியாவுக்கும் சென்று வந்துள்ளார்.


வேட்பாளர்கள் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டை: ஒபாமாவுக்கு வெற்றி வாய்ப்பு

தினத்தந்தி

அமெரிக்க அதிபர் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அதன்படி, கடந்த 2004-ம் ஆண்டுக்கு பிறகு, புதிய அதிபர் தேர்தல் நாளை நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் தற்போதைய ஆளுங்கட்சியான குடியரசு கட்சி சார்பில் அரிசோனா மாநிலத்தைச் சேர்ந்த செனட் உறுப்பினர் ஜான் மெக்கைனும், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் இலினாய்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த செனட் உறுப்பினர் பாரக் ஒபாமாவும் போட்டியிடுகிறார்கள்.

இவர்களைத் தவிர, லிபரேஷன் கட்சி சார்பில் முன்னாள் எம்.பி. பாப் பார், கான்ஸ்டிடியூசன் கட்சி சார்பில் ரேடியோ தொகுப்பாளர் சக் பால்ட்வின், கிரீன் கட்சி சார்பில் முன்னாள் பெண் எம்.பி. சிந்தியா மெக்கினி, சுயேச்சையாக ரால்ப் நடேர் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்.

அதிபர் தேர்தலுடன் துணை அதிபர் தேர்தலும் நாளை நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் அலாஸ்கா மாநில கவர்னர் சாரா பாலின் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.

தேர்தல் நெருங்கும் வேளையில், ஒபாமாவுக்கு ஆதரவாக அவரது கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் கிளிண்டன் பிரசாரம் செய்தார். ஆனால் ஜான் மெக்கைனுக்கு ஆதரவாக, அதிபர் புஷ் பிரசாரம் செய்யவில்லை. புஷ்சின் செல்வாக்கு சரிந்து விட்டதாக கருதப்படுவதால், அவரை யாரும் பிரசாரத்துக்கு அழைக்கவில்லை என்று தெரிகிறது.

இரு வேட்பாளர்களின் ஆதரவாளர்களும், வீடு வீடாக போய் வாக்கு சேகரித்தல், தொலைபேசி மூலம் ஓட்டு கேட்டல் போன்ற வழிமுறைகளில் ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

இந்த தேர்தலில் ஒபாமாவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக, இதுவரை எடுக்கப்பட்ட அனைத்து கருத்து கணிப்புகளும் தெரிவிக்கின்றன. அவர் அதிபர் ஆனால், அமெரிக்காவின் முதலாவது கறுப்பின அதிபர் என்ற பெருமையை பெறுவார். அவர் ஹவாய் தீவில் பிறந்த ஆப்பிரிக்க அமெரிக்கர் ஆவார்.

கவர்ச்சி புயல் என்ற அடைமொழியுடன் பிரபலம் ஆகிவிட்ட சாரா பாலின், துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிகிறது. அவர் வெற்றி பெற்றால், முதலாவது பெண் துணை அதிபர் என்ற பெருமையை பெறுவார்.

அமெரிக்க அதிபர் தேர்தலுடன், பதவிக்காலம் முடிவடைந்த 11 மாநில கவர்னர் பதவிக்கான தேர்தலும், 33 மாநிலங்களில் செனட் தேர்தலும், அனைத்து மாநிலங்களிலும் பிரதிநிதிகள் சபை தேர்தலும் நாளை நடக்கிறது.


அதிபர் தேர்தலில் கவர்ச்சி புயல்

தினத்தந்தி

அமெரிக்க அதிபர் தேர்தலுடன், துணை அதிபர் தேர்தலும் நடத்தப்படுகிறது.

சமீபத்தில் அமெரிக்காவின் பல மாகாணங்களை புரட்டிப்போட்ட சூறாவளிகளையே குப்புறத் தள்ளிவிடும் புயலாக புறப்பட்டு வந்து இருக்கும், சாரா பாலின், குடியரசு கட்சி சார்பாக துணை அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

’44 வயதானவர், 5 பிள்ளைகளை பெற்றவர்’ என்று யாராவது சொன்னால், அது அப்பட்டமான பொய் என்று அடித்துச் சொல்லலாம். அந்த அளவுக்கு அனைவரையும் கட்டிப்போட வைக்கும் கவர்ச்சிக்கு சொந்தக்காரரான சாரா பாலின், அமெரிக்க அதிபர் தேர்தலை கலக்கப் போகும் கதாநாயகி.

முன்னாள் அழகியான சாரா பாலின் பெயரைக் கேட்டதுமே வாக்காளர்கள் மட்டுமல்ல உலக நாடுகளின் தலைவர்கள் கூட ‘கள் குடித்த வண்டு’ போல மயங்கி விட்டனர். சமீபத்தில் அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, குட்டையான ஸ்கர்ட் அணிந்த சாரா பாலின் கையைப் பற்றியபடி விட்ட ‘ஜொள்ளு’ பாகிஸ்தான் வரை வழிந்து ஓடியது. சாரா சம்மதித்தால், அவரை கட்டி அணைக்கவும் தயாராக இருக்கிறேன் என்றார், மனைவி பெனாசிரை இழந்த சர்தாரி.

அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மாகாணத்தின் கவர்னராக இருக்கும் சாரா பாலின் முகத்தில், பிரம்ம தேவனால் அச்சடிக்கப்பட்ட புன்னகை எப்போதுமே ஒட்டிக் கொண்டு இருப்பதே கொள்ளை அழகு. அதிலும் அவரது காந்த கண்களை சிறைவைக்க முயற்சிக்கும் கண்ணாடி தனி அழகு.

அழகை மட்டுமே மூலதனமாகக் கொண்ட சாரா, 1984-ம் ஆண்டு அலாஸ்கா மாகாணத்தில் நடந்த அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தை தட்டிச் சென்றதில் வியப்பு ஏதும் இல்லை.

வாளிப்பான கால்களுடன் மினி ஸ்கர்ட்டில் வலம் வரும் சாரா, முன்னாள் கூடைப்பந்து வீராங்கனை என்பது கூடுதல் ஆச்சரியம்.

கல்லூரி நாட்களிலேயே அரசியலில் ஆர்வம் ஏற்பட்டு குடியரசு கட்சியில் சேர்ந்தார். அவருடைய அரசியல் பணிக்கு பரிசாக, 1992-ம் ஆண்டில் வாஸில்லா நகர கவுன்சில் உறுப்பினர் பதவியும், 1996-ம் ஆண்டில் வாஸில்லா நகர மேயர் பதவியும் கிடைத்தது.

வாஸில்லா நகர மேயராக 2002-ம் ஆண்டு வரை பதவியில் இருந்த சாராவுக்கு மூன்றாவது முறையாக போட்டியிட கட்சியில் ‘சீட்’ கிடைக்கவில்லை. எனினும், அலாஸ்கா மாகாணத்தின் எண்ணை மற்றும் எரிவாயு கமிஷன் தலைவர் பதவியில் நியமிக்கப்பட்டார்.

அதன் பிறகு தனது 42-வது வயதில் (2006-ம் ஆண்டு) அலாஸ்கா மாகாண கவர்னராக வெற்றி பெற்று தற்போதும் அந்த பதவியில் இருக்கிறார்.

சாரா பாலின் என்னும் அழகுப் புயலின் அரசியல் வாழ்க்கை ஏறுமுகத்தில் இருந்த அதே நேரத்தில், அவரைச் சுற்றிலும் பரபரப்பான சர்ச்சைகளுக்கும் குறைவில்லை. சாரா பாலினுக்கு பிடிக்காத வார்த்தை உண்டென்றால், அது ‘கருக்கலைப்பு’ தான்.

சாரா பாலின் பற்றி இன்னொரு தகவல். 2006-ம் ஆண்டுதான் முதன் முதலாக பாஸ்போர்ட் பெற்றிருக்கிறார், சாரா பாலின். அவர் சென்றுள்ள ஒரே வெளிநாடு எது தெரியுமா? குவைத்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி ஆகிய பெரிய கட்சிகள் சார்பாக பெண் வேட்பாளர்களை நிறுத்துவது மிகவும் அபூர்வம். அந்த வகையில், இரண்டாவது பெண் வேட்பாளர் என்ற பெருமை சாராவுக்கு கிடைத்துள்ளது. முன்னதாக கடந்த 1984-ம் ஆண்டில் ஜொரால்டின் பெரைரா என்ற பெண்மணி ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்டார்.


அமெரிக்க அதிபர் தேர்தல் : ஜான்மெக்கேனுக்காக அர்னால்டு பிரசாரம்

மாலை மலர்

முன்னாள் அதிரடி ஆக்ஷன் நடிகரும் கலபோர்னியா கவர்னரும் ஆன அர்னால்டு தேர்தல் பிரசாரத்தில் குதித்துள்ளார். அர்னால்டு குடியரசு கட்சியை சேர்ந்தவர்.

ஒகியோ பகுதியில் அவரும் ஜான் மெக்கேனும் கூட்டாக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இரு வரும் ஒன்றாக பஸ்சில் ஒகியோ முழுவதும் சுற்றுப் பயணம் செய்து ஓட்டு வேட் டையாடி வருகிறார்கள்.

பஸ்சை விட்டு இறங்கி ரோட்டில் சென்று செல்ப வர்களுடன் கைகுலுக்கி ஓட்டு சேகரித்தனர். கொலம்பஸ் பகுதியில் நடந்த பேரணியிலும் இரு வரும் கலந்து கொண்டு பேசினார்கள்.

அர்னால்டு பேசும் போது “நான் சினிமாவில் தான் அக்ஷன்ஹீரோ ஆனால் ஜான் மெக்கேன் உண்மையிலேயே ஹீரோ. வியட்நாம் போரில் 5 ஆண்டுகளுக்கு மேலாக போர் கைதியாக சிறையில் அடைப்பட்டு கிடந்தவர் அவர். மெக்கேனுக்கு நீங்கள் ஓட்டு போடுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.


அதிபர் தேர்தலில் வெற்றி: மெக்கைன் நம்பிக்கை

நியூஸ் ஒ நியூஸ்

“அமெரிக்க அதிபர் தேர்தலில்,கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி, உறுதியுடன் வெற்றி பெறுவேன்” என்று, குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கைன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


அதிபர் தேர்தல்: ஜான் மெக்கனுக்கு வாக்களித்தார் புஷ்!

யாஹு & மாலை மலர்

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில், தற்போதைய அதிபர் புஷ் குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கனுக்கு தபால் ஓட்டுமூலம் வாக்களித்தார்.

4-ந் தேதி ஓட்டுப்பதிவு நடந்தாலும் அன்று ஓட்டுப்பதிவு செய்ய முடியாதவர்களும், வெளியூர்களில் இருப்பவர்களும் முன் கூட்டியே தங்கள் ஓட்டுக்களை பதிவு செய்து அனுப்பி வைக்கும் ஏற்பாடுகளும் அங்கு உள்ளது. அந்த ஓட்டுக்கள் தபால் மூலம் சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

அதிபர் ஜார்ஜ் புஷ்சும், அவரது மனைவி லாரா புஷ்சும் தங்களது ஓட்டுக்களை பதிவு செய்து, புஷ்சின் சொந்த மாகாணமான டெக்சாசுக்கு தபால் மூலம் அனுப்பி வைத்தனர்.

தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது, ‘அமெரிக்காவின் தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கு புஷ்சே காரணம்’ என்று குற்றம் சாட்டியவர் மெக்கலைன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜான் மெக்கேன் தனது தேர்தல் பிரசாரத்தின் போது அமெரிக்காவில் தற்போ தைய பொருளாதார நெருக் கடிக்கு ஜார்ஜ்புஷ் தான் காரணம் என்றும், ஈராக் போரில் ஜார்ஜ்புஷ்சின் நடவடிக்கைகள் தவறானவை. 8 ஆண்டு ஆட்சி காலத்தில் அமெரிக்க நிர்வாகம் சீர் குலைந்து விட்டது என்றும் நான் அதிபர் பதவிக்கு வந்தால் இவற்றை சரி செய்து விடுவேன் என்றும் கூறி இருந்தார்.

அதிபரை அதே கட்சி வேட்பாளரே குற்றம் காட்டியது அங்கு பரபரப்பை ஏற் படுத்தியது. ஆனாலும் தன் மீது புகார்களை அள்ளி வீசிய ஜான்மெக்கேனுக்குத் தான் ஜார்ஜ் புஷ் ஓட்டு போட்டார்.


அயல் அலுவக பணியை நிறுத்துவேன் – ஒபாமா!

வெப்துனியா

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், குறிப்பாக பி.பி.ஓ. நிறுவனங்கள் பெரும்பாலும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருந்து கிடைக்கும் அயல் அலுவலக பணிகளையே செய்து வருகின்றன.

இந்த நிறுவனங்கள் பட்டப்படிப்பு முடித்த ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றன.

அமெரிக்காவில், அமெரிக்கர்களுக்கு கொடுக்கும் சம்பளத்தில், இந்தியர்கள் பாதி சம்பளத்தில் வேலை செய்கின்றனர். இதனால் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்களின் நிர்வாக செலவுகள் குறைந்து, அதிக இலாபம் கிடைக்கின்றது.

அமெரிக்க நிறுவனங்கள், அயல் நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களிடம் பணிகளை ஒப்படைப்பதால், அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு பாதிக்கப்படுகிறது. இதனை முற்றிலுமாக நிறுத்த வேண்டும், அல்லது கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்காவில் அவ்வப்போது பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழும்.

இப்போது ஏற்பட்டுள்ள பொருளாதாக சிக்கலால், அமெரிக்க பொருளாதாரம் நிலை குலைந்துள்ளது. அத்துடன் வேலை இல்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தன்னை அதிபராக தேர்ந்தெடுத்தால், முதல் வேலையாக அமெரிக்க நிறுவனங்கள், அயல் நாடுகளில் கொடுக்கும் அயல் அலுவலக பணிகளை (அவுட் சோர்சிங்) குறைத்து, உள் நாட்டில் வேலை வாய்ப்பை பெருக்க நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார்.


‘ஒபாமா வாக்குறுதியைக் கண்டு பயப்பட தேவையில்லை’ – கலாம்

தினமலர்

இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) சார்பில், ‘யங் மைண்ட்ஸ்’ என்ற தலைப்பில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுடன் மாணவர், பொதுமக்கள், தொழில் துறையினர் திருச்சி புனித வளனார் கல்லூரியில் சந்தித்த நிகழ்ச்சியில் கலாம் அளித்த பதில்:

கேள்வி: அமெரிக்க அதிபர் தேர்தலில் நிற்கும் ஒபாமா ஐ.டி., துறையில் இருக்கும் இந்தியர்களின் வேலையை பறிப்பதாக கூறியுள்ளாரே?

பதில்: நூறு கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் ஐ.டி., துறையில் ஆண்டுக்கு 7,000 கோடி டாலர் மதிப்பில் உற்பத்தி நடக்கிறது. அதில் 40,000 கோடி டாலர் இந்தியாவுக்குள்ளே நடக்கிறது. மீதியுள்ள 3,000 கோடி டாலர் மட்டும் வெளிநாடுகளில் நடக்கிறது. ஆகையால், அதுகுறித்து கவலைப்பட தேவையில்லை.


பின்லேடனை ஒழிக்கும்வரை போர் நீடிக்கும் :பாகிஸ்தானுக்கு இந்தியாவால் ஆபத்து இல்லை – ஒபாமா பேட்டி

நியூஸ் ஒ நியூஸ்

பாகிஸ்தானில் அனுபவம் இல்லாத அரசு பதவியில் உள்ளது. அங்கு ஜனநாயகம் திரும்ப அந்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு நாம் ஆதரவு அளிக்க வேண்டும். அதற்கு ராணுவ உதவி அளிக்க வேண்டும் என்பது மட்டும் அர்த்தம் அல்ல. அங்கு நிலவும் வறுமை,கல்வி அறிவின்மை போன்றவற்றுக்கு தீர்வு காண உதவ வேண்டும் என்று அர்த்தம்.

எனவே, நான் அதிபர் ஆனால், பாகிஸ்தானுக்கு ராணுவம் சாராத உதவிகளை அதிகரிப்பேன்.

அதே சமயத்தில்,பாகிஸ்தானுக்கு பெரிய அச்சுறுத்தல் இந்தியாவால் அல்ல,அந்நாட்டு தீவிரவாதிகளால்தான் என்பதை பாகிஸ்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.


அரசியல் ஆழிப்பேரலை: மணி மு. மணிவண்ணன்

  • பொருளாதார வீழ்ச்சி.
  • பெட்ரோல் விலை எகிறல்.
  • ஜெனரல் மோட்டார்ஸ் தடுமாற்றம்.
  • அமெரிக்காவின் எதிரிகளின் ஏற்றம்.
  • மத்திய கிழக்கில் அமெரிக்கப் படையினரின் வலுவின்மை.
  • வருங்காலத்தைப் பற்றிய நம்பிக்கையின்மை.
  • அமெரிக்க அதிபரின் மீது ஏமாற்றம்.

இத்தனையும் இருந்தும் தேர்தல் நாள்வரை ஆளுங்கட்சியின் வேட்பாளர் தாக்குப் பிடித்துக் கொண்டிருந்தார். எதிர்க்கட்சியின் வேட்பாளர் மக்களின் முழுநம்பிக்கையைப் பெறவில்லை.

இது மெக்கேன் ஒபாமா போட்டியைப் பற்றிய செய்தியல்ல.

28 ஆண்டுகளுக்கு முன்னர், 1980இல் அதிபர் கார்ட்டர் – ஆளுநர் ரேகன் போட்டியின் கடைசிவாரச் செய்தி.
“நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் இருந்ததை விட இப்போது நல்ல நிலையில் இருக்கிறீர்களா? நல்ல நிலையில் இருக்கிறீர்கள் என்றால் ஆளுங்கட்சிக்கு வாக்களியுங்கள். இல்லை என்றால் எனக்கு வாய்ப்பளியுங்கள்.” இது குடியரசுக் கட்சி வேட்பாளர் ரோனால்டு ரேகனின் அறைகூவல்.

எதிர்க்கட்சி வேட்பாளர் உலக அரசியல் அனுபவமில்லாதவர். அவரைத் தேர்ந்தெடுத்தால், அணுவாயுதங்கள் வெடிக்கும் மூன்றாம் உலகப் போருக்கு ஆயத்தமாகுங்கள். இது ஆளுங்கட்சியான மக்களாட்சிக் கட்சியினரின் மிரட்டல்.

தேர்தல் நாளான நவம்பர் முதல் செவ்வாய்க்கு மூன்று நாள் முன்னர் வரை மக்கள் வேண்டா வெறுப்புடன் அதிபர் கார்ட்டரைத்தான் ஆதரித்தார்கள். ஈரானில் சிக்கியிருந்த அமெரிக்கப் பிணைக்கைதிகளை மீட்கும் முயற்சியில் கார்ட்டரின் தோல்வி, 23% அடமான வட்டி வீதம், வேலையில்லாத் திண்டாட்டம், பெட்ரோல் விலையேற்றம், பெட்ரோல் சிக்கனப் படுத்தும் சின்ன கார் உற்பத்தியில் அமெரிக்க நிறுவனங்களின் தடுமாற்றம் இவை எல்லாவற்றையும் விட மூன்றாம் உலகப் போரை முடுக்கி விடுவதைப் போல சோவியத் யூனியனை மிரட்டிக் கொண்டிருந்த ரோனால்டு ரேகனைத் தேர்ந்தெடுக்க பயமாகத்தான் இருந்தது. ஆனாலும், அவர் போர் வெறியை விட அமெரிக்காவின் ஏற்றத்தைப் பற்றிய அவரது நம்பிக்கையும், உறுதியும் மக்களை ஈர்த்தது.

தேர்தலுக்கு முந்திய மூன்று நாட்களில் ஓர் அரசியல் பேரலை எழும்பியது. அந்த அலையின் தாக்கத்தில்தான் அரசாங்கம் என்பது மக்களின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை என்ற கொள்கை அமெரிக்க அரசியலின் தாரக மந்திரமாயிற்று. தனி மனிதர்கள், அவர்களது நிறுவனங்கள், அவர்கள் பொருளாதாரச் சந்தை, இவை அரசாங்கத்தின் சங்கிலிகளிலிருந்து விடுவிக்கப் பட்டால் மாபெரும் பொருளாதார வளர்ச்சியைச் சாதிக்க முடியும் என்ற ஏயின் ரேண்ட் கொள்கைகளில் ஆழமான நம்பிக்கை கொண்டவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். அப்படி வந்தவர்களில் முன்னாள் கூட்டுக் கருவூலக் குழுமத் தலைவர் ஆலன் கிரீன்ஸ்பேனும் ஒருவர்.

1929இல் பொருளாதாரப் பெருவீழ்ச்சிக்குப் பின்னர் அரசாங்கம் கொண்டு வந்த எல்லாக் கட்டுக்கோப்புகளையும் உடைத்தெறியும் முயற்சியில் இவர்கள் ஈடு பட்டனர். அரசு விதிக்கும் வரி மக்களின் பொருளாதார வளர்ச்சிக்குத் துணை போகும் முதலீட்டைப் பறித்து சோம்பேறிகள் சுகமாக வாழ வழிவகுக்கும் போதைப் பொருள் என்பது இவர்கள் வாதம். ஏழ்மைக்குக் காரணம் சோம்பல் என்பது இவர்கள் கூற்று. எதிரி நாட்டுகளைக் கட்டுப் படுத்தவும் அமெரிக்க நிறுவனங்களுக்கு உதவவும் மட்டுமே அரசாங்கம் தேவை என்ற பொருளாதார அடிப்படை வாதம் இவர்கள் அடிநாதம்.

1932-ல் அதிபர் பிராங்க்ளின் டெலினோ ரூசவெல்ட் உருவாக்கிய முற்போக்குக் கூட்டணியை உடைத்தெறிய இவர்கள் அதிபர் நிக்சன் தந்திரங்களைப் பயன்படுத்திப் பிற்போக்குச் சக்திகளைத் திரட்டி மாபெரும் கூட்டணி ஒன்றை அமைத்தார்கள்.

  • மதவாதப் பிற்போக்கு சக்திகள்,
  • இனவாதப் பிற்போக்கு சக்திகள்,
  • பொருளாதாரப் பிற்போக்கு சக்திகள்

இவை அனைத்தும் ஒரே கூடாரத்தில் ரேகன் தலைமையில் கூடின. ரூசவெல்ட் தலைமையில் உருவான முற்போக்கு அரசு அமைப்புகள் மக்களின் வரிப்பணத்தை அட்டை போல் உறிஞ்சிக் கொண்டு ஊழலில் ஊறியிருந்தது இவர்களுக்குச் சாதகமாக இருந்தது.

உழைப்பவர்களுக்கு வரி, சோம்பேறிகளுக்கு அரசு சலுகையா? என்ற இவர்கள் அறைகூவல் வரிகளை நம்பியிருந்த அரசாங்கத்தின் அடித்தளத்தையே ஆட்டம் காண வைத்தது. “வரி விதி, செலவு செய்” என்பதுதான் மக்களாட்சிக் கட்சியின் கொள்கை என்று இவர்கள் கட்டிய பட்டம் இன்று வரை மக்களாட்சிக் கட்சியை மிரள வைத்துக் கொண்டிருக்கிறது. 1992-ல் அதிபரான பில் கிளின்டனும் கூட இந்தப் பேரலையின் தாக்கத்தை எதிர் கொள்ள முடியாமல் இவர்களோடு ஒட்டி உறவாடிக் கொண்டே முற்போக்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது.

ரேகனின் பேரலையை வானளாவ உயர்த்தும் முயற்சியில் எழுந்தவர்தாம் இன்றைய அதிபர் ஜோர்ஜ் டப்யா புஷ். ரேகனைப் போன்ற பேரலையில் ஆட்சிக்கு வராமல், தட்டுத் தடுமாறி ஆட்சிக்கு வந்தாலும் தன்னை ரேகனின் மறு அவதாரமாகக் கருதிக் கொண்டவர் டப்யா புஷ். ரேகனைப் போலவே அரசு அமைப்புகளைச் சற்றும் நம்பாதவர் இவர். வாஷிங்டன் மக்கள் வரிப்பணத்தில் வாழும் அட்டைகள் நிரம்பிய குட்டை என்பது இவர் கொள்கை.

ரேகன் கொள்கைகளின் அடித்தளமே ஆடத் தொடங்கியது இவரது ஆட்சியில்தான்.

“கடன் வாங்கு, செலவு செய்” என்ற இவரது பொறுப்பற்ற கொள்கையின் விளைவுகளப் பார்க்கும்போது “வரி விதி, செலவு செய்” என்பது மிகவும் பொறுப்பான செயல் என்றே தோன்றுகிறது. மக்கள் வங்கிக்கணக்குகளைப் பாதுகாக்கத் தனியார் நிதி நிறுவனங்களின் மீது ரூசவெல்ட் ஆட்சி விதித்திருந்த கட்டுப் பாடுகளை வெகுவாகத் தளர்த்தியதில் முன்னணியில் இருந்தவர்கள் டப்யா புஷ், குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கேன், மற்றும் முன்னாள் கூட்டுக் கருவூலக் குழுமத் தலைவர் ஆலன் கிரீன்ஸ்பேன்.

என்னென்ன காரணங்களால் 1929 பங்குச் சந்தை வீழ்ச்சி பொருளாதாரப் பெருவீழ்ச்சிக்கு வழி வகுத்ததோ அதே காரணங்கள் மீண்டும் மேலெழுவதைப் பற்றிக் கவலைப் படாமல் கிளிப்பிள்ளை போல் அரசுக் கட்டுப்பாடுகள் தளர்ச்சி, செல்வந்தர்கள் வரி குறைப்பு என்ற மந்திரங்களை ஓதிக் கொண்டிருந்தவர்கள் இவர்கள். இதில் உண்மையிலேயே பொருளாதார நிபுணரான ஆலன் கிரீன்ஸ்பான் அண்மையில் தனது கொள்கைகளால் அமெரிக்க, மற்றும் உலகப் பொருளாதார அமைப்புகள் அனைத்துமே நொறுங்கும் நிலைக்குத் தள்ளப் பட்டிருப்பதை உணர்ந்து, தன் கொள்கைகள் இந்த வீழ்ச்சிக்கு வழி வகுக்கும் என்பதை உணராமல் போய் விட்டதைப் பற்றி வருத்தம் தெரிவித்தார்.

ஆனால், டப்யா புஷ்ஷோ, ஜான் மெக்கேனோ இதைப் பற்றிப் புரிந்து கொண்டிருப்பதாகவோ, வருந்துவதாகவோ தெரியவில்லை. ஒபாமாவைப் பற்றிய மெக்கேனின் குற்றச்சாட்டு என்ன – “ஒபாமாவின் கொள்கை ‘வரி விதி, செலவு செய்’ – ஒபாமாவைத் தேர்ந்தெடுத்தால் உங்கள் வரி கூடும்” என்பதே. புஷ் – மெக்கேனின் ‘கடன் வாங்கு, செலவு செய்’ கொள்கையால் மக்களின் 401(k) ஓய்வுநிதிக் கணக்குகள் பேரிழப்புக்கு ஆளாகிக் கொண்டிருப்பதைப் பற்றி இவர்கள் வாயைத் திறக்க மாட்டார்கள்.

செப்டம்பர் 11 தாக்குதல் இவர்கள் கண்காணிப்பில்தான் நடந்தது. நியூ ஆர்லியன்ஸ் நகர் இவர்கள் ஆட்சியின் கீழ்தான் மூழ்கியது. ஓசாமா பின் லாடனின் முடியைத் தொடக்கூட இவர்கள் வக்கற்றவர்கள். ஈராக், ஆப்கானிஸ்தான் போர்களிலும் இவர்கள் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் ஆட்சியின் கீழ்தான் பங்குச் சந்தையின் பெரு வீழ்ச்சியும், பொருளாதாரப் பெருவீழ்ச்சியும் தொடங்கியுள்ளன. இவை அனைத்துக்கும் அடிப்படைக் காரணம் அரசாங்கக் கட்டுப்பாட்டைத் தளர்த்துவதற்குப் பதிலாக அரசாங்கத்தையே தளர்த்தும் மனப்பான்மை.

இதை மாற்ற வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆனால் எத்தைகைய மாற்றம்? மெக்கேனுக்கும், டப்யாவுக்கும் அரசாங்கத்தைப் பற்றிய கொள்கைகளில் வேறுபாடு இல்லை. கடன் வாங்கிச் செலவு செய்யும் கொள்கையிலும் வேறுபாடு இல்லை. புஷ்ஷுக்குப் பதிலாக மெக்கேன் வந்தால் மட்டும் பெரிதாக என்ன மாற்றம் இருக்க முடியும்?

ஆனால், மக்களாட்சிக் கட்சியின் கொண்டு வரும் மாற்றம் என்ன?

அதற்கு எடுத்துக்காட்டு ஒன்றைப் பார்ப்போம்.

1989-ல் டப்யா புஷ்ஷின் தந்தை ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் ஆட்சியின் கீழ் சான் ஃபிரான்சிஸ்கோ நகரம் நிலநடுக்கத்தால் விளைந்த சேதங்களால் திணறியது. முக்கியமான பல மேம்பாலங்கள் சுக்கு நூறாகின. அவற்றை மீண்டும் கட்டி முடிக்கப் பல ஆண்டுகளாகின. நகரத்தின் வளர்ச்சி மட்டுப் பட்டது. பின்னர் 1992-ல் லாஸ் ஏஞ்சலஸ் நகரம் இனக் கலவரத்தால் பற்றி எரிந்தது. நாட்டின் அதிபர் புஷ்ஷும் சரி, கலிஃபோர்னியா மாநில ஆளுநர் வில்சனும் சரி நகரத்தைக் காப்பாற்ற முன் வரவில்லை. லாஸ் ஏஞ்சலஸ் நாதியற்றுத் தவித்தது.

1994-ல் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்குள்ளே நார்த்ரிட்ஜில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கத்தால் மிகுந்த சேதம் அடைந்தது. நிலநடுக்கத்தின் சேதம் தெரிந்த சில மணி நேரத்துக்குள் அதிபர் பில் கிளின்டன் லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தின் மீட்சித் திட்டத்துக்கு வழி வகுத்தார். அவரது அமைச்சரவை உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், மாநில அரசு அதிகாரிகள் இவர்கள் அனைவரும் நிலநடுக்கங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும்போதும் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு விரைந்து மீட்சிப் பணிகளைத் தொடங்கினார்கள். சில மாதங்களுக்குள் நகரத்தின் உடைந்த மேம்பாலங்கள் மீண்டும் கட்டப் பட்டன. பெருவீதிகள் சீரமைக்கப் பட்டன. நில நடுக்கத்தின் அடையாளமே தெரியாத அளவுக்கு நகரமும் புத்துணர்ச்சி பெற்று வளரத் தொடங்கியது. நல்ல அரசாட்சி என்பதற்கு இலக்கணம் வகுத்தார் பில் கிளின்டன். அவரது ஆட்சியின் கீழ் அமெரிக்கப் பொருளாதாரம் பெரு வளர்ச்சி நிலையை எட்டியது. ஏனென்றால், அரசாங்கத்தின் தேவையை முற்றும் உணர்ந்தவர் அவர்.

2008 தேர்தலின் முக்கியக் கொள்கைப் போராட்டம் இதுதான். அரசாங்கத்தின் தன்மை என்ன? அதன் தேவை என்ன?

குடியரசுக் கட்சிக்காரர்கள், அரசாங்கத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்தித் தங்கள் அரசியல் எதிரிகளைப் பழி தீர்த்துக் கொள்வார்கள். தங்கள் மத நம்பிக்கைகளை மேம்படுத்துவார்கள். ஊழல் செய்யும் பெரு நிறுவனங்களைச் செல்லமாகத் தட்டி அனுப்பி விடுவார்கள். ஆனால், வெளிநாட்டுக் கொள்கைகளிலும், பொருளாதாரக் கொள்கைகளிலும் கெட்டிக்காரர்கள் என்று எடுத்த பெயரைக் கெடுத்துக் கொண்டுவிட்டார்கள்.

மக்களாட்சிக் கட்சிக்காரர்கள், மக்களின் தனி வாழ்க்கையில் அரசாங்கம் குறுக்கிடுவதை விரும்ப மாட்டார்கள். ஆனால் வசதியுள்ளவர்கள் மீது வரி விதித்து வசதியற்றவர்களுக்கு வாழ்வு கொடுப்பது அரசாங்கத்தின் அடிப்படைக் கடமை என்று நம்புபவர்கள்.

பொருளாதார வீழ்ச்சி சமயத்தில் இவர்கள் இருவரில் எவர் கொள்கை மக்களுக்கு ஆறுதலாக இருக்கும்?

1980-ல் கார்ட்டர் காட்டிய பூச்சாண்டிகளையும் மீறி மக்கள் ரேகனை வாக்குப் பேரலை மூலம் தேர்ந்தெடுத்தார்கள். 2008-ல் ரேகன் பேரலை வடியும்போது மெக்கேன் காட்டும் பூச்சாண்டிகளையும் மீறி ஒபாமா பேரலை எழுந்து கொண்டிருப்பது புலப்படுகிறது.

அமெரிக்க வரலாற்றிலேயே முக்கியமான தேர்தல் இது என்று பலர் கருதுகிறார்கள். ஆனால், அமெரிக்க வரலாற்றிலேயே மிக முக்கியமான தேர்தல் எட்டாண்டுகளுக்கு முன்னர் நடந்தது. புதிய ஆயிரத்தாண்டு தொடங்கும்போது தேர்ந்தெடுக்கப் பட்ட ஜார்ஜ் டப்யா புஷ்ஷின் திறமையின்மை அமெரிக்க வல்லரசின் சறுக்கலுக்கு வித்திட்டு விட்டது. கடந்த எட்டாண்டுகளில் அவர் செய்தவற்றின் பின் விளைவுகளில் இருந்து மீளப் பெரு முயற்சி தேவைப்படும்.

ஒபாமா அதிபராகத் தேர்தெடுக்கப் பட்டால் குறைந்தது அமெரிக்கச் சறுக்கல் நிதானப் படலாம். புஷ்ஷின் கொடுங்கோலாட்சியின் கடுமையான விளைவுகளால் வாடும் அமெரிக்கா மட்டுமல்ல உலகமே ஒபாமாவின் வெற்றியை வரவேற்கும்.

மணி மு. மணிவண்ணன், சென்னை, இந்தியா.

மெகயினிடம் எனக்குப் பிடித்தது என்ன? – சொ. சங்கரபாண்டி

சென்ற பதிவு

2. ஒபாமாவின் எந்தக் கொள்கை உங்களை அதிகம் கவர்ந்திழுத்து ஒத்திசைவாக தலையாட்ட வைக்கிறது?

ஒபாமா-பைடனின் வெளியுறவுக்கொள்கை. அதுவும் கூட புஷ் கொள்கைகளை ஆதரிக்கும்/தொடரவிருக்கும் மெக்கெய்ன்-பேலின் வந்துவிடக்கூடாதென்ற பயத்தில்தான்.

3. மெகயினின் பிரச்சாரத்தில் எந்த நிலைப்பாடு உங்களுக்கு உவப்பானதாக அமைந்திருக்கிறது?

இப்பொழுது எதுவுமில்லை.

2000 குடியரசுக் கட்சி முன்னோட்டத் தேர்தலின் போது புஷ்சுக்கு எதிராகப் போட்டியிட்ட காலத்தில் எனக்கு மெக்கெய்னைப் பிடிக்கும். ஒரு சில விசயங்களாவது இருந்தன அப்பொழுது. இப்பொழுது புஷ்சை ஆதரிப்பவர்களைப் பற்றி நினைக்கவே எரிச்சலாக இருக்கிறது.

4. இந்த இருவரும் இல்லாமல், இன்னொருவர் ஜனாதிபதியானால் சரியாக இருக்கும் என்று சொல்ல நினைத்தால் எவரை கைகாட்டுவீர்கள்? எதற்காக?

ஹில்லரி கிளிண்டன்.

(அ) முதல் கேள்வியில் நான் சொன்ன முதல் காரணம் ஹில்லரிக்கும் பொருந்தும். அதற்காக அவரை ஆதரிக்கிறேன்.

மேலும் தனிப்பட்ட அளவில் அவருக்கு நிறைய திறமைகள் இருந்தும் பில் கிளிண்டனின் மனைவி என்பதற்காகவே குடியரசுக் கட்சியினர், கட்சிச் சார்பற்றவர்கள், ஜனநாயகக் கட்சியின் கருப்பினத்தவர், சாதாரண அமெரிக்கக் குடிமக்கள் என அனைவராலும் பின்வரும் வெவ்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப் படிருக்கிறார்.

குடியரசுக் கட்சியினர் அவரையும் கணவர் கிளிண்டனையும் தங்களுக்குச் சிம்ம சொப்பணமாக நினைத்து வெறியோடு எதிர்ப்பவர்கள்.

கட்சி சார்பற்றவர்கள் என்ன வேண்டுமென்று நினைக்கிறார்களென்று அவர்களுக்கே தெரியாது. கேட்டால் எங்களுக்கு மாற்றம் வேண்டுமென்பார்கள் – கிளிண்டனை ஆதரிப்பது நிச்சயம் அவர்களைப் பொருத்தவரை மாற்றமில்லை.

ஜனநாயகக் கட்சி கருப்பினத்தவருக்கு ஒபாமா கிடைத்ததால் ஹில்லரி வேண்டாம்.

சாதாரண அமெரிக்கக் குடிமக்களில் பெரும்பாலோர் தலைவராக வரக்கூடிய பக்குவம் ஒரு பெண்ணுக்கு என்று வெளிப்படையாகச் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

எனக்கு பில் கிளிண்டன் காலத்திலிருந்தே ஹில்லரியை பிடிக்கும்.

குறிப்பாக ரஷ் லிம்பாக் நிகழ்ச்சியைப் பார்க்கும் பொழுதெல்லாம் ஹில்லரி மேல் அளவு கடந்த பற்று வரும். இவர் ஒரு நாள் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு அமெரிக்கர்களின் பெண் சமத்துவக் கோட்பாடு சோதிக்கப் படவேண்டும் என்று நினைப்பதுண்டு.

ஒபாமாவுடனான முன்னோட்டத் தேர்தல் விவாதங்களில் கூட ஹில்லரியைத்தான் அதிகம் பிடித்திருந்தது. மற்றபடி அவர் உள்நாட்டுப் பிரச்னைகளில் சொன்னதைச் செய்வாரா என்ற நம்பிக்கையின்மையும் மற்ற அமெரிக்கர்களைப் போல் உண்டு.

5. தமிழகச் சூழலோடு அமெரிக்க அதிபர் தேர்தலை ஒப்பிட முடியுமா? வாக்கு வங்கி அரசியல்; இனம், மொழி, பால் பேதங்கள்; ஒரு தலைவரை முக்கியஸ்தராக முன்னிறுத்துவது; விகிதாச்சார பிரதிநித்துவம்; வோட்டுச் சாவடி குழப்படி; வாக்கு எண்ணிக்கை சதவிகிதம்… எதில் ஒற்றுமை? எவ்வாறு வேறுபடுகிறது?

ஒப்பிட முடியாது, கூடாது என்றும் நினைக்கிறேன்.

தோழா… தோழா! தோள்கொடு தோழா!

  • இரண்டரை லட்சத்துக்கும் மேலாக லஞ்சம் வாங்கியதாக அலாஸ்காவின் செனேட்டர் டெட் ஸ்டீவன்ஸ் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
  • ‘உங்க ஊர்க்காரர் மேல் இந்த மாதிரி புகார் எழுந்துள்ளதே?’ என்று அலாஸ்காவின் கவர்னர் சாரா பேலினிடம் விசாரித்தபோது, அவரை ஆதரித்தோ, புறந்தள்ளியோ கருத்து சொல்ல மறுத்திருந்தார்.
  • ஜூரி முன் நடந்த வழக்கு தற்போது முடிந்து, இந்தக் குற்றங்கள் உறுதியாகியுள்ளன.
  • டெட் ஸ்டீவன்ஸ் தன்னுடைய வீட்டைப் புதுப்பிக்க $250,000 மதிப்புள்ள பொருள்களை பெற்றுக் கொண்டிருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.
  • இந்த நிலையிலும் துணை ஜனாதிபதி வேட்பாளர் சாரா பேலின் டெட் ஸ்டீவன்ஸை விட்டுக் கொடுக்காமல் பேசி வருகிறார்.

ஏன்?

தொடர்புடைய பதிவுகள்:

1. Alaska Senator Stevens Is Guilty Over His Failures to Disclose Gifts – NYTimes.com: Senator Ted Stevens, the Senate’s longest-serving Republican, was found guilty of violating ethics laws for failing to report gifts and services that he was given by friends.

2. U.S. Senator Sarah Palin

3. John McCain calls for Ted Stevens to quit; Sarah Palin doesn’t go quite that far | Top of the Ticket | Los Angeles Times

4. UPDATE: Sarah Palin joins the push for Ted Stevens to resign | Top of the Ticket | Los Angeles Times

மணிக் கூண்டு சிவாவின் கேள்விக்கு பதில்: கறுப்பு/வெள்ளை: ஏன் மெகயின்?

மணிக் கூண்டு: அமெரிக்காவின் நிறப்பற்று!!! … | மணிக் கூண்டு: ஓபாமாவிற்காக ஓர் நாள்!

நான் வாக்குகள் சேகரிக்க சென்ற பொழுது என் சட்டையில் ஓபாமா பேட்ஜை பார்த்த பொழுது ஓரு சில வெள்ளைகாரர்கள் கதவை சாத்திக் கொண்டார்கள். இதில் துளிக்கூட பொய் இல்லை! என்னைக் கண்டு கதவை சாத்திக் கொண்டார்கள் என்று சொல்லவில்லை! அதாவது நான் ஓபாமா ஆதரவாளன் என்று தெரிந்த காரணத்தாலும், நான் வைத்து இருந்த ஓபாமா சுவர் விளம்பரங்களை பார்த்தவுடன் அதனை நாகரீகமாக மறுக்காமல் அவர்களுடைய அணுகுமுறையில் அவர்கள் ஓபாமாவை ஏற்க மறுக்கிறார்கள் என்பதை உணர முடிந்தது!

என்னுடைய வீட்டுக்கு அவ்வப்போது யாராவது வந்துகொண்டிருப்பார்கள்.

  • ‘நாங்க யூடாவிலிருந்து வருகிறோம்! மார்மன் தேவாலயத்தில் இருந்து இலவச பைபிள் கொடுப்போம்’
  • ‘சில்லறை ஏதாவது இருக்குமா? எனக்கு கஞ்சா அடிக்கணும்’
  • ‘ட்ரிக் ஆர் ட்ரீட்’

இப்போதெல்லாம் வாயில் மணியடித்தால் போய் பார்க்க சிரமப்படுவதேயில்லை.

நான் மார்மன் மதத்திற்கோ, அந்த மதத்தை பிரச்சாரம் செய்பவர்களுக்கோ எதிரானவன் இல்லை. இருந்தும் அவர்களுடன் அளவளாவுவதை வெட்டி நேரமாகவே நினைக்கிறேன். அதே போல், திடமான மாற்று முடிவை எடுத்தவர்கள் உங்களைத் தவிர்த்திருக்கலாம்.

கல்லூரியில் பிரச்சாரம் செய்வதற்காக ஒவ்வொரு மாணவனின் கதவைத் தட்டிய அனுபவமுண்டு. ‘உங்க ஆளுக்குத்தான் அய்யா வாக்கு’ என்று சொல்லாவிட்டால் விடமாட்டோம். அடுத்தவரின் குறைகளை மட்டும் வலியுறுத்தி, அவன் கேட்கும் கேள்விகளை நிராகரித்து, மந்திரித்து விட்டவர்கள் மாதிரி சாமியடிப்போம். அந்த பயமாகவும் இருக்கலாம்.

கடந்த ஒரு ஆண்டுகளில் எனக்கு தெரிந்து அல்லது அலுவலகத்தில் அல்லது வேறு இடங்களில் வெள்ளைக் காரர் வெளிப் படையாக ஓபாமாவை ஆதரித்துப் பார்க்கவில்லை!

நியு ஹாம்ஷைரில் நடந்த கூட்டங்களில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். பல்லாண்டு காலம் முன்பு (போன வருடம்தான்) நடந்த ஐயோவா முதல் நேற்று நடந்த சொற்பொழிவு வரை யூட்யுபிலோ, புகைப்படத்திலோ பார்த்திருப்பீர்கள்.

அமெரிக்காவில் ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் சிறுபான்மையினர். பெரும்பான்மையினரான வெள்ளைக்காரர் ஆதரவின்றி ஜனநாயகக் கட்சியின் முதற்கட்ட வாக்குப்பதிவையும் வென்று, ஒபாமாவால் இவ்வளவு தூரம் வந்திருக்க இயலாது.

  • உங்கள் அலுவலில் எத்தனை பேர் வேலை பார்க்கின்றனர்?
  • அவர்கள் எந்தக் கட்சி சார்ந்தவர்கள்?
  • கடந்த தேர்தல்களில் எவ்வாறு வாக்களித்தார்கள்?
  • எவ்வளவு பேரிடம் விசாரித்தீர்கள்?
  • அலுவல் தாண்டி, பள்ளிக்கூடத்தின் சக பெற்றோர்கள், தாங்கள் சேவை புரியும் அமைப்புகள் போன்ற இன்ன பிற இடங்களிலும் இந்தக் கருத்துக் கணிப்பை மேற்கொண்டீர்களா?

அலுவலில் பேசாப்பொருளாக கருதப்படும் அரசியல் குறித்து வெளிப்படையான எண்ணங்களை எதிர்பார்க்க முடியாது.

இப்படி அமெரிக்க பொருளாதரம் ஏராளமான சரிவை சந்தித்த பொழுதும் வெள்ளைகாரர்கள் கண்மூடிதனமாக ஜான் மெக்கயனை ஆதரிக்க என்ன காரணம்? குறிப்பாக வயதான வெள்ளைக் காரர்கள் ஏன் ஓபாமாவை ஆதரிக்க மறுக்கிறார்கள்?

ஜான் மெகயினை ஆதரிக்க என்ன காரணம்?

  1. அனுபவம்: உங்கள் வீட்டில் குழாய் பழுதாகிறது. சரி பார்க்க யாரை அழைப்பீர்கள்? craigslistஇல் விளம்பரம் தந்திருக்கும் பதின்ம வயது பாலகன். பக்கத்து வீட்டில் இருக்கும் உங்கள் அத்யந்த நண்பனுக்கு ரிப்பேர் செய்த பத்து வருடம் ப்ளம்பராய் கொட்டை போட்டவர்?
  2. புடமிட்டவர்: சோதனை வரும்போது சொந்தமாக முடிவெடுக்க வேண்டும். எடுத்த முடிவில் தடங்கல்கள் வந்தாலும், நல்ல முடிவாக இருக்கும்பட்சத்தில் அசராத மனம் வேண்டும். வியட்நாமில் தான் மட்டும் விடுதலை என்பதால் மறுத்தல் போன்ற எடுத்த முடிவுகளில் பின் வாங்காதவர்.
  3. சுதந்திரமான சிந்தனை: தன்னுடைய கட்சியிட்ட ஆணைப்படி 98% செனேட்டில் வாக்களித்தவர் ஒபாமா. கட்சி என்ன சொல்கிறதோ; அதுவே சித்தாந்தம். கொறடா எப்படி வழிநடத்துகிறாரோ; அதுவே வேதாந்தம். மெகயின் அவ்வாறு கண்மூடித்தனமாக பின்பற்றாமல் தன்னுடைய குடியரசுக் கட்சியை பகிரங்கமாக எதிர்த்தவர்.
  4. நிக்ஸன் எவ்வழி? ஒபாமா அவ்வழி: உங்களுக்கு கடுமையான சோதனை. நண்பர் நிதியுதவி செய்து மீட்பிக்கிறார். கொஞ்ச நாள் கழித்து அந்த நண்பரே உங்களிடம், ‘ஒரு சோபா வாங்கி இருக்கேன். வீட்டுக்குள் தூக்கி வைக்க ஒரு கை கொடுக்க முடியுமா?’ என்று பதில் மரியாதை கோரினால் என்ன செய்வீர்கள்? இன்று ஒபாமா தேர்தல் காணிக்கையாக மில்லியன்களை தன்னுடைய கோடீஸ்வர நண்பர்களிடமிருந்து கோரி செலவழிக்கிறார். நாளைக்கு அவர்கள் ஊழல் செய்ய உதவி கேட்டால்?
  5. வாக்கு சுத்தம் உள்ளவர்: சுத்தமான அரசியல்; எனவே, தேர்தல் விளம்பரங்களுக்கு செலவழிப்பதில் வரைமுறை வேண்டும் என்பதில் ஸ்திரமாய் இருப்பவர் மெகயின். நேற்றுக்கு ஒரு சொல்; நாளைக்கு இன்னொன்று என்று கொடுத்த வாக்குறுதிகளை மீறுபவர் ஒபாமா.
  6. ஊழல் செய்தாலும் அதை ஒத்துக்கொள்ளும் துணிவும் பொறுப்புணர்ச்சியும் கொண்டவர்: கீட்டிங் விவகாரத்தில் அனுபவமின்மையால் தான் நடந்துகொண்ட விதத்திற்காக வாக்குமூலமாக புத்தகம் எழுதியவர் எங்கே? டோனி கொடுத்த பணத்தில் வீடு கட்டிவிட்டு, அதைக் கேள்வி எழுப்பினால் மழுப்புபவர் எங்கே?
  7. இன்னொரு புஷ்ஷாக மாறாதவர்: சுவாரசியமானவர், மனதில் தோன்றியதை பேசுபவர், இளரத்தம், போர்முனைக்கு செல்லாதவர் போன்ற புஷ் குணாதிசயங்கள் ஒபாமாவிடம் உண்டு. பாகிஸ்தானை தாக்குவேன் என்று பகிரங்க ஒண்டிக்கு ஒண்டி அழைப்பவர். மெகயின் ஆழம் பார்த்து காய் நகத்துபவர்.
  8. இன்னொரு கார்ட்டராக மாறாதவர்: வாஷிங்டனுக்கு வெளியாள் என்று சொல்லித்தான் அதே ஜனநாயகக் கட்சியில் இருந்து வந்தார் கார்ட்டர். இரான் விவகாரம் முதல் ஒன்றிலும் காத்திரமான அணுகுமுறை காட்டாமல், ஒபாமா செனேட்டில் அடிக்கடி போடும் ‘ப்ரெஸன்ட் சார்’ ஆக கழுத்தறுக்காதவர் மெகயின்.
  9. அரசு செலவை எக்கச்சக்கமாக்காதவர்: ஜனநாயகக் கட்சிவாசிகளுக்கு எப்போதுமே அகலக்கை. வரவு எட்டணா என்றால் அதற்குள் செலவைக் கட்டுப்படுத்துவது அவசியம்தான், என்றாலும் வரிச்சுமை ஏற்றுவதில் நீண்டகால வரலாறு கொண்டவர்கள். எல்லாவற்றிலும் அரசின் மூக்கை நுழையவைத்து ரெட் டேப் கொண்டு வந்து, திவாலாகிக் கொண்டிருக்கும் சோஷியல் செக்யூரிட்டி, மெடிகேர் போல் நிர்வகிக்கவும் தெரியாமல் நிர்க்கதி ஆக்குபவர் அல்ல மெகயின்.
  10. செனேட், ஜனாதிபதி, ரெப்ரஸேன்டேடிவ் எல்லாவற்றிலும் ஒரே கட்சியின் ஆக்கிரமிப்பு கூடாது: காங்கிரஸ் சபையில் ஏற்கனவே ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை வகிக்கிறார்கள். செனேட்டிலும் மயிரிழையில் அதே நிலை. அதிபரும் ஒபாமாவானால் கொண்டாட்டம்தான். தன்னிச்சையாக ஜார்ஜ் டபிள்யூ புஷ் எடுத்த முடிவுகள் போல் லகான் இல்லாத வெள்ளை மாளிகை ஆபத்தானது.

இந்த பத்தில் வெள்ளைக்காரன், வயசானவன், மகளிரணி என்பதெல்லாம் ஏதுமில்லை. சந்தேகமாக இருந்தால், ஹிப் ஹாப் ரிபப்ளிகன் போன்ற பல்லாயிரக்கணக்கான கறுப்பர்களின், தற்பால் விரும்பிகளின், இளைஞர்களின் குடியரசு சார்பைப் பரப்பும் வலையகம் பக்கம் எட்டிப்பார்க்கவும்.

ஓபாமாவை வரவிடாமல் தடுக்க அவர் கறுப்பர் என்றாலும் பரவாயில்லை, அவரை இஸ்லாம் என்றும் தீவிரவாத தொடர்புகள் கொண்டர் என்றும் சித்தரிக்க முயற்சிப்பதன் பின்புலம் என்ன?

ஒபாமா மட்டுமல்ல. ஜான் கெர்ரியும் இந்த சித்தரிப்புக்குள் ஆணியடித்து மாட்டப்பட்டிருக்கிறார். அதாவது பல்வேறு தலைவர்கள், தங்களுடைய எதிர்க்கட்சிகளால் இவ்வாறு சாயம் பூசப்பட்டிருக்கின்றனர்.

சிறுபான்மையினருக்கு சம உரிமை கோரிய வேட்பாளரை விமர்சிக்கும் விதமாக வெள்ளைக்காரரின் கை — வேலை மறுக்கப்பட்ட கடிதத்தை கசக்குவதாக வந்த விளம்பரம் முதல் சிகப்பழகு களிம்பு வரை எல்லாவிதமான விளம்பரங்களும் மிகை நாடும் கலையே.

ஒபாமாவும் இந்த மாதிரி எதிர்மறை பிரச்சாரத்தில் மெகயினை விட பன்மடங்கு வீரியத்துடனும் பணபலத்துடனும் ஈடுபடுகிறார்.

ஆனால், மெகயின் தன்னுடைய கூட்டங்களில் ‘ஒபாமா இஸ்லாமியன்’ என்றாலோ, ‘தீவிரவாதி’ என்றாலோ, மிகக் கடுமையாக அந்தப் பேச்சை நேரடியாக கண்டிக்கிறார். இங்கே தனித்து நிற்கிறார்.

சாரா பேலின் குறித்து மட்டரகமான வாசகங்களுடன் வரும் டி-ஷர்ட் வாக்காளர்கள் ஒருவரைக் கூட ஒபாமா இவ்வாறு முகத்திற்கு நேராக முகஞ்சுளிக்காதது இங்கு குறிப்பிடத்தக்கது. தனக்கு வோட்டு பெரிதல்ல என்றால், நன்றல்லதை கண்டவுடன் களைய வேண்டும் என்னும் மனப்பக்குவமும் திறமும் தைரியமும் வேண்டும்.

அமெரிக்க தேவாலயங்களில் வெள்ளைக்கார பாதிரியார்கள், ஜான் மெக்கயனுக்கும் ஓட்டளியுங்கள் என்று சொல்லாமல் சொல்வதன் காரணம் என்ன?

போன பதில்தான். கெர்ரிக்கும் இதை செய்தார்கள்.

ஜான் கெரி தற்பால் திருமணத்தை செய்து வைக்கும் மாகாணத்தில் இருந்து வருகிறார். கிறித்துவரே அல்ல என்று பிரச்சாரம் களைகட்டியது. அவர் கறுப்பர் அல்ல.

குடியரசு கட்சிக்கு தேவை வாக்கு. அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.

அதாவது தற்போது நடந்து கொண்டிருக்கும் வீட்டுமனை மதிப்பு சரிவு, நிதிநிலை நெருக்கடி, வங்கி திவால் எல்லாவற்றையும் பில் க்ளின்டன் காலத்தின் கொள்கைகளினால் ஆரம்பித்தது என்று ஒப்புக்கொள்ளாமல், சாமர்த்தியமாக ஜார்ஜ் புஷ் தலையில் மட்டும் கட்டிவிடும் ஜனநாயகக் கட்சி போல்.

கடந்த 10 ஆண்டுகளில் நிறைய கறுப்பு இளைஞர்கள் வெள்ளைக்கார பெண்களுடன் சுற்றுவதை அல்லது காதலிப்பதை நான் பார்த்து இருக்கிறேன், ஆனால் ஒரு வெள்ளைக் கார இளைஞன் கறுப்பு பெண்ணுடன் சுற்றுவதை அல்லது காதலிப்பதை நான் பார்த்தது மிக மிக குறைவு!

இந்தத் தகவல் எல்லாம் அமெரிக்க சென்ஸஸ் வலையகத்தில் விரிவாகக் கிடைக்கிறது. அதன் அடிப்படையில் ஆராய்ந்து அறிந்ததை பகிர வேண்டுகிறேன்.

நான் வேலைப் பார்க்கின்ற நிறுவனத்தில் முடிவுகள் எடுகின்ற அதிகாரத்தில் கறுப்பர்கள் இல்லை! கடந்த 10 ஆண்டுகளில் நான் பார்த்த தினக் கூலி வேலைகளில் நிறைய கறுப்பர்கள் இருக்கிறார்கள். எடுத்து காட்டாக பேருந்து ஓட்டுனர், புகை வண்டி ஓட்டுனர், தபால் அலுவலகத்தில், நிறைய ஷாப்பிங் மால்களில் துப்பரவு தொழிலாளியாக இப்படி பல. சிறிய வேலைகளில் கறுப்பர்கள்! மிகப் பெரிய அதிகார பதவிகளில் வெள்ளைக்கார மக்கள்!

அமெரிக்கன் எக்ஸ்பிரெஸ் போன்ற பல நிறுவனங்களில் ஆப்பிரிக்க – அமெரிக்கர்கள் தலைமை பொறுப்பில் இருக்கிறார்கள்.

உங்கள் ஒரு நிறுவனத்தை வைத்து மட்டும் முடிவெடுக்க முடியாது. அமெரிக்காவில் மொத்தம் எத்தனை நிறுவனங்களில் உள்லன? அவற்றில் எத்தனை கறுப்பர்கள் CxOவாக இருக்கிறார்கள்? எந்தப் பொறுப்பு வரை ‘முடிவு எடுக்கும் அதிகார’மாக கருத்தில் கொள்ளவேண்டும்?

எல்லாவற்றிக்கும் மேலாக நடந்து முடிந்த இரண்டு கலந்துரையாடலில் (Debate) ஜான் மெக்கயன் ஓபாமாவை நேரிடையாக பார்த்து பேசவேயில்லை! கண்களை பார்க்கவே இல்லை! வெள்ளைக் காரன் என்ற திமிரா? ஓபாமா என்ன தீண்ட தகாதவாரா?

கண்ணும் கண்ணும்தான் கலந்தாச்சு என்று பாட்டு பாடவா அங்கு போய் இருந்தார்கள்? வாக்குவாதம் புரியும் இடத்தில் முகத்தைப் பார்த்து பேச வேண்டும் என்பது அமெரிக்க பழக்கவழக்கம்.

அதிபர் தேர்தலை குறிவைத்தே பன்னெடுங்காலமாக இயங்கு வரும் ஒபாமா, இந்தத் தேர்வில் புன்சிரிப்பு சிந்தி மண்ணாந்தையாக நிர்ச்சலன முகம் காட்டுவதால் வென்றவர் ஆக மாட்டார். நான் கூட காதில் பஞ்சு அடைத்துக் கொண்டு, கிளிப்பிள்ளையாக சொல்லிக் கொடுத்ததை ஒப்பித்து காரியத்தில் கண்ணாயிருக்கலாம். இரத்தமும் சதையும் உணர்ச்சியின் பால்பட்ட மெகயினால் பொய்யை பொறுத்துக்கொள்ளமுடியவில்லை.

உங்களிடம் இல்லாத ஒன்றை மட்டும் வைத்து உங்களைப் பார்த்து (நீ புஷ்! நீதான் புஷ்!! உன் இன்னொரு உருவம் புஷ்!!!) என்று சதா எந்தக் கேள்விக்கும் வெறுப்பேற்றிக் கொண்டிருந்ததால் வருத்தம் கலந்த புறக்கணிப்பு வெளிப்பட்டால் அதற்குப் பெயர் திமிரா?

தொடர்புடைய சில இடுகைகள்:

1. ஒபாமா கறுப்பரா ? ஒபாமா கறுப்பர்களின் பிரதிநிதி அல்ல… : தமிழ் சசி

2. கறுப்பர் பிரச்சனைகளை பேச மறுக்கும் ஒபாமா கறுப்பர்களின் வேட்பாளரா ? : தமிழ் சசி

3. ஒபாமா கறுப்பர்களின் வேட்பாளர் அல்ல : வெங்கட்

4. ‘வெள்ளை’ மனதும் வெள்ளை மனதும் : சிறில் அலெக்ஸ்

5.  ஒபாமாவின் ‘இனப்பிரச்சனை’ பேருரை : சிறில் அலெக்ஸ்

விரிவான வாசிப்புக்கு:

1. The Role of Race–Maybe Not So Much – Swampland – TIME

2. David Von Drehle’s cover story has yet another perspective, this one from the ground in Missouri

3. Peter Beinart column in Time about how the McCain campaign are playing the race card in this election–not through the usual methods of stoking fears of black criminality and freeloading, but through insinuations that Barack Obama is a foreigner, not “the American president Americans have been waiting of,” as the McCain campaign artfully says of its candidate, but a Kenyan, a Muslim, something weird and un-American.

4. The New Race Card – The Plank

5. Immigrant Perspectives – News21 Project

6. Gender and Race: The Battle Rages Beneath the Surface – Harvard Business Online’s HBR Editors’ Blog: Why do women leaders provoke more anxiety than men — black or white?

7. The Chronicle: 3/17/2006: Race, Politics, and the Census: looks at how the election will affect America’s conceptions of race. In 2006, David A. Hollinger suggested reforms that would make racial Census categories more meaningful and useful.

8. The End of Race as We Know It – ChronicleReview.com: Where does the Obama campaign leave the black narrative of victimization?

9. Race Will Survive the Obama Phenomenon – ChronicleReview.com: By David R. Roediger – Barack Obama has been presented as the transracial emblem of a postracial era. The realities of inequality and identity politics say otherwise.

10. Hot Air » Obama ad: McCain’s an anti-amnesty Republican racist like Rush Limbaugh