Tag Archives: கருத்து

சங்கதி கேளீர்

சங்கதி கேளீர் ஒரு வாரம் நடந்ததோர்
சேதியைப் பாரீர்

தனலஷ்மியும் முனுசாமியும் சென்ற வார நிகழ்வுகளை அசை போடுகிறார்கள்.

தனலஷ்மி: என்னப் படிச்சே?

முனுசாமி: இன்னும் ஒரு மண்டலத்திற்குள் மலையேறப் போகும் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் சொன்ன கருத்தை அடிப்படையாகக் கொண்ட நியூ யார்க்கர் கதையொன்றைப் படித்தேன். ஒரு மணமாகிய ஆணும், மனைவியல்லாத பெண்ணும் ஒருத்தருடன் ஒருத்தர் சந்தித்துக் கொள்ளக் கூடாது — என்னும் கொள்கை கொண்டவர் அவர். அந்த மாதிரி மனைவியையும் துணைக்கு வைத்துக் கொள்ளாமல் சந்தித்தால் — வேறு மாதிரி அர்த்தமாகி விடும் என்கிறார் பென்ஸ். அதை தரவுகள் மூலம் பதிவாக்கி, உறுதி செய்யக் கிளம்பும் கதாநாயகியின் அனுபவங்களைப் புனைகிறார் கர்டிஸ் சிட்டன்ஃபீல்ட் (Curtis Sittenfeld)

தனலஷ்மி: அதையொட்டி நல்லதொரு உரையாடலையும் செய்திருக்கிறார்கள்.

முனுசாமி: கதை எழுதுவது எப்படி என்று அதன் மூலம் சில துப்புகள் கிடைக்கின்றன. கதாபாத்திரங்கள் குறித்த முக்கியமான தகவல்களை உரையாடலில் தரக்கூடாதாம். இது எனக்குத் தெரியாது. யோசித்துப் பார்த்தால் கதைசொல்லி இந்த மாதிரி, பேச்சு வழக்கில், குணச்சித்திரங்களையும் அதன் வாழ்க்கை பின்னணிகளையும் தருவதில்லை என்று புரிகிறது.

தனலஷ்மி: இந்தக் கதையில் எனக்குப் பிடித்த விஷயம், நிஜத்தில் கதைசொல்லி – மைக் பென்ஸ் கூறியது போல் அந்நிய ஆணுடன் தனியாகச் சுற்றுவதனால் கற்பொன்றும் பறிபோய் விடாது என்னும் திடமான நம்பிக்கை கொண்டவர். அது ஒரு அன்றாட பரபரப்பு செய்தியும் கூட. அனுராதா ரமணன் சொல்வார்: “என்னிடம் ஆயிரம் பேப்பர் க்ளிப்பிங்ஸ் இருக்கு. அதையெல்லாம் கதையாக்கப் போறேன்!” என்று. அது போல் தினசரியின் தலைப்பைக் கொண்டு கதை எழுதுகிறார். இருண்மை எனப்படும் இப்படியும் நடக்கலாம், அப்படியும் நடக்கலாம் என்பதை சொல்லிப் போகிறார். செய்தித்தாள் விஷயங்களை எப்படி இலக்கியமாக்குவது என்பது சற்றே பிரமிக்க வைக்கிறது. அதை விட பிரமிப்பு, தனக்கு ஒவ்வாத கொள்கையைக் குறித்து அறம் என்று வகுப்போ நீதிப் பாடமோ கொடுக்காமல் சொல்லிச் செல்வது.

முனுசாமி: நியு யார்க்கரில் கதையைப் படிக்கிறேனோ இல்லியோ… அந்தந்த வாரம் கதாசிரியருடன் நடக்கும் சம்பாஷணையை நான் தவறவிடுவது இல்லை. தமிழிலும் இது மாதிரி விரிவான உரையாடலை ஒவ்வொரு இதழும் நிகழ்த்தணும்.

தனலஷ்மி: இந்தக் கதையின் நீளம் கிட்டத்தட்ட பத்தாயிரம் வார்த்தைகள். இணைய இலக்கிய இதழ்களில் கூட ஆயிரம் வார்த்தைகளைத் தாண்டி சிறுகதை எழுத மாட்டார்கள். தமிழில் அந்த மாதிரி நவீன இதழ்களான சொல்வனம், தமிழினி, கனலி எல்லாம் செய்வதில்லையோ?

முனுசாமி: அவர்களின் குரு சன்னிதானமும் அதற்கு பாதை வகுக்க வேண்டும். ஜெயமோகன் நூறு கதை எழுதினார். பாராட்டி வரும் விமர்சனங்களைத்தான் பதிவு செய்தார். இறும்பூது எய்தி, காணாததையெல்லாம் கண்ட ஒலிகளைக் கேட்டார். கதை குறித்த வாசகர் வட்ட கூட்டங்களிலும் குறியீடுகளையும் உள்ளர்த்தங்களையும் உணர்த்தல்களையும் மட்டுமே முன்வைப்பார்கள்.

தனலஷ்மி: உனக்கு அவரை குத்தம் சொல்லலேன்னா தூக்கம் வராதே!

முனுசாமி: அவருடைய சமீபத்திய தாக்குதல் திருவிளையாடல் பார்த்தியா?

தனலஷ்மி: செத்துப் போனா எப்படி எழுதலாம்னு ஒவ்வொரு பத்திரிகையும் ஒரு அஞ்சலிக் குறிப்பு தயாரா வச்சிருக்கும். பில் கேட்ஸ் சடாரென்று மறைந்தால், அவருக்கு அடுத்த நாளே கட்டுரை அச்சாகணுமே… அதுவும் கோவிட் காலத்தில்! அந்த மாதிரி ஆசான் எல்லோருக்கும் இகழ்பதம் வைத்திருப்பார் என நினைக்கிறேன்.

முனுசாமி: க்ரியா ராமகிருஷ்ணன் குறித்து பாராட்ட வேண்டாம். மீரா குறித்து பேச, ஒருத்தரைத் தூக்கி விட இன்னொருவரை இறக்கிப் பேசணுங்கிறது ரொம்ப அசிங்கமான முன்னுதாரணம்.

தனலஷ்மி: ஜெமோ.வை ஏன் போய் படிக்கிறே? ஃபேஸ்புக்கில் கூடத்தான் ஆயிரக்கணக்கானோர் விதவிதமாய் அங்கலாய்க்கின்றனர்.

முனுசாமி: அவரைப் போன்ற கவனிக்கத்தக்கோர்; அதாவது உதாரண மாந்தராய் இருப்போர் இப்படி நேம் ட்ராப்பிங்கும் மட்டந்தட்டலும் செய்வது மற்றவர்களுக்கு முன்னுதாரணமாய் அமையும். சிஷ்யர்களும் அவ்வாறே செய்லபடுவார்களே என்னும் வருத்தம்தான் அப்படி சொல்ல வைக்கிறது.

தனலஷ்மி: இலக்கியத்தை விடு. என்ன பார்த்தே?

முனுசாமி: அமேசான் ப்ரைம் நிறைய குப்பைகளை வச்சிருக்கு. எல்லா மஹேஷ் பாபு படம். டப்பிங் செய்த ஹிந்தி சீரியல். டப்பிங் செய்யாத “வெள்ள ராஜா”.

தனலஷ்மி: நீ சொல்லும்போதே கூகுள் பண்ணினேன்: “வெள்ள ராஜா’ சீரிஸ் முழுவதும் கேங்க்ஸ்டர் வகையா, வெறும் க்ரைம் வகையா என்பதற்கு மத்தியிலேயே பயணிக்கிறது. நார்கோஸ்',ப்ரேக்கிங் பேட்’, ஆரண்ய காண்டம்',சேக்ரட் கேம்ஸ்’, அருவி', இந்த சீரிஸின் கதாசிரியரான லோகேஷ் கனகராஜ் இயக்கியமாநகரம்’ முதலானவற்றின் சாயலை மொத்தமாக `வெள்ள ராஜா’வில் பார்க்க முடிகிறது.”

முனுசாமி: பாதி பார்த்திருக்கேன். நன்றாக பொழுது போனது. நீ என்ன பார்த்தே?

தனலஷ்மி: ”லூடோ” பார்த்தேன். தமிழில் சூர்யா எல்லாம் சூரரைப் போற்று என்று மட்டுமே நடிக்கும்போது இந்த மாதிரி அபிஷேக் பச்சானைப் பார்ப்பது மகிழ்வளித்தது. ஜாலியாகப் போன படம். நீ லுடொ விளையாடி இருக்கியா?

முனுசாமி: இல்லை. ஆனால், ஐ.பி.எல். போட்டிகளில் சூது நிறைய விளையாடுதுனு சொன்ன பொக்கிஷம் விக்கியைக் கேட்டிருக்கேன். அவரோடது “செர்டிஃபைய்ட் ராஸ்கல்ஸ்”க்கு நல்ல மருந்து.

தனலஷ்மி: தீபாவளி மருந்து சாப்பிட்டியா?

முனுசாமி: இந்தியாவில் இருந்து வரவழைச்சு சாப்பிட்டேன். ஆனால், அடுத்த தடவை இன்னும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும். பேபால் கணக்கில் ஒருத்தருக்கு பணம் போட்டால், வங்கிக் கணக்கில் இருந்தே பரிமாற்றவும். இல்லையென்றால், அதற்கு தவணை அட்டைகாரர்கள் வட்டியும் முதலும் தண்டம் வசூலிப்பார்கள் எனத் தெரிந்து கொண்டேன். நீயாவது ஜாக்கிரதையா இருந்துக்க…

தனலஷ்மி: நான் எல்லாம் வெண்மோ

முனுசாமி: இந்த வெண்மோ நடத்துற ஆளு ஜெமோ வெண்முரசு விசிறியோ?

தனலஷ்மி: மீண்டும் அங்கேயே வந்துட்டியா. சிவானந்தம் நீலகண்டன் எழுதிய கி.அ. சச்சிதானந்தம் கட்டுரையை படிச்சேன். அந்த மாதிரி எழுதுபவர்களைத் திரட்டி, பரிந்துரைப்பதற்கு ஆங்கிலத்தில் பல இடங்கள் இருக்கின்றன. தமிழில் கூட கில்லி, மாற்று எல்லாம் இருந்தது. இன்னொண்ணுத் துவங்கலாமா?

முனுசாமி: ட்விட்டரோ பார்லரோ இதற்கு மேல். ஆண்டி முகர்ஜி கஷ்டப்பட்டு பத்து பக்கம் எழுதுவார். வெறும் இரண்டே வரியில் கதம் பண்ணிருவாங்க நம்மவர்கள்.

தனலஷ்மி: இந்த மாதிரி மத்தவங்க சொல்லுறத வாய் பார்க்காம, நீயே முழுசாப் படி, பின்னால போய் ஆராய்ந்து பார் என்று அலுவலில் மட்டும் வாய் கிழியப் பேசு.

முனுசாமி: நாளைக்கு திங்கள்கிழமை. ஜோலியப் பார்ப்போம்.

நிலையியற் பொருளும் இயங்கியற் பொருளும்

சொல்வனம் கலைமகள் நடனம் காண… – சொல்வனம் பதிவைப் படித்த பின்…

Pigeons_Food_Humans_Ants_Pick_Eat_Throw_Snacks_LeftOvers_Animals_Birds

இதில் அஜிதன் என்பதற்கு பதில் மனதின் குரல் அல்லது alter-ego என்று வைத்துக் கொள்ளுங்கள். ஏரியை மனிதனின் புத்தி. அதில் மின்னும் நட்சத்திர பிரதிபலிப்புகள் அண்டம். அதன் அருகே உள்ள மின்விளக்கு நகரம் ரத்தக்கொதி நிலை. நீலம் என்பது இரவில் கருமையில் தெரியாத பகலின் நீலவெளி. ஜெயம் (வெற்றி) என்பது இருட்டிலும் நீலத்தைப் புணரும் அண்டம்.

மேற்கண்டவாறு பலவிதங்களில் இந்தக் கதையை ஆராயலாம்.

இந்தக் கதையில் பல உச்சநிலைகள் இருந்தாலும், இரண்டு பிரயோகங்களை மட்டும் பார்ப்போம்:

1. ”ஹீரோக்கு கறி வாங்கப் போவோம். பெரும்பாலும் இளம் கன்று. அது ஆண் என்பதால் கறிக்கு விற்கப்படும். அதன் கறியே கிடைக்கும்.”

இங்கே ரஜினி, விஜய், அஜீத் போன்ற ஹீரோக்களுக்கு ரசிகர்கள் எப்படி அடிமையாகிறார்கள் என்பது இங்கே சுட்டப்படுகிறது. ஹாலிவுட்டில் கறுப்பர்களுக்கு எந்த விருதும் தராமல், அவர்களின் பணத்தை மட்டும் குறிவைக்கும் ஆஸ்கார் விருதுகளை சுட்டுகிறார். அம்மாவும் கலைஞர் கருணாநிதியும் கேப்டன் விஜய்காந்த்தும் நடத்தும் அரசியலைச் சாடுகிறார்!

2. “கூகை. ஆந்தை இனத்தைச் சேர்ந்தது. ” என்றுவிட்டுத் தொடர்ந்தான்.” அதன் எடையைப் பாருங்கள் ஆனால் அது பறக்கும் போது, காற்று கூட அசையாது, சிறகுகள் எந்த ஒலியும் எழுப்பாது”

இதற்கு முந்தையப் பத்தியில்தான் குல தெய்வ வழிப்பாட்டில் இருக்கும் தத்துவப் பார்வை அற்ற வெற்றுச் சடங்கில் மெய்மை தேடும் பயணம் பற்றி சொல்லியிருந்தார். அதாவது நாம் ஆந்தை போல் இரவில் விழித்திருக்கிறோம். ஃபேஸ்புக் பார்க்கிறோம். செய்தியைக் கேட்கிறோம். எல்லாம் எடையில்லாதவை. அவற்றை அனுபவிக்கும்போது நிஜவுலகின் புரிதல் எட்டாது. விஷயம் தெரியாமல், விளைவுகள் ஏற்படுத்தாமல் பறக்கிறோம்!

ஜெயமோகனின் எழுத்துக்களுக்குத்தான் இப்படி வியாக்கியானம் எழுத முடியும். ஆனால், அவர் சம்பந்தமேயில்லாத பதிவொன்றுக்கு இவ்வாறு எழுதமுடிவது எழுத்தாளரின் சாதனை.

Kutti Revathi: குட்டி ரேவதி

Kutti_Revathi

சித்த மருத்துவராய்ப் பணியாற்றும் இவர், சென்னையில் வசிக்கிறார். சில செய்திப் படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். 15-6-1974-இல் திருவெறும்பூரில் பிறந்தவர். இனவரை மருந்தியல் துறையில் (சித்த மருத்துவத் துறையில்) முனைவர் பட்ட ஆராய்ச்சி. இவர் 90களில் எழுதத் தொடங்கினார். ‘பனிக்குடம்’ எனும் இலக்கிய இதழின் ஆசிரியராக இருந்தார், பெண்சார் திரைப்படங்கள் குறித்துத் திறனாய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார். பெண்சார் திரைப்பட இயக்கமான ‘கண்ணாடி’யில் முனைப்பாகப் பங்கு கொண்டுள்ளார். சில செய்திப் படங்களின் இணை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். தற்போது துணை இயக்குநராக இருக்கிறார். ஆங்கிலக் கவிதைகளை மொழிபெயர்த்துள்ளார்.

அவர் சிறந்ததொரு புகைப்படக் கலைஞர். காந்திக்கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையும் பாரதியார் ஆய்வகமும் நடத்திய “பாரதிக்குப் பின் : பெண்ணும் கவிதையும்” கருத்தரங்கில் “பெண்ணியக் கவிதை : அதன் கலைச்செயல்பாடும் சமூகப் பயன்பாடும்” தலைப்பில் பேசினார். இடிந்தகரை அணு உலைப் போராட்டத்தில் ஈடுபட்டார். 2011ல் Audi Ritz Icon விருது பெற்றார். சிவகாமியின், ‘கதவடைப்பு’ கவிதை நூலுக்கு முன்னுரை எழுதியிருக்கிறார்.

இவர் கவிதைகளில் பிரமிளை நினைவூட்டும் உணர்வுத் தீவிரம் தெரிகிறது. தேவதேவனின் இயற்கை ஈடுபாடு ஆகிய பாதிப்பும் உண்டு. இருவரும் இவருக்கு ஆதர்சங்கள். K.M. இசை நிறுவனத்தின், ‘பெண் எழுச்சியை’ மையமாகக் கொண்ட “இரசாயன ரோஜாக்கள்” ஆல்பத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இஷ்ரத், ரிஹானாவின் குரல்களில் ‘என்னிலே மகா ஒளியோ!’ என்றொரு பாடல் எழுதியிருக்கிறார். இவருடைய கவிதைகளை கல்யாணராமனும் லஷ்மி ஹோம்ஸ்ட்ரமும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்கள்.

பரதவர்களின் வாழ்வியலை ‘ஆழி சூழ் உலகு’ புதினத்தில் பதிவு செய்த ஜோ.டி. குரூஸ் வசனகர்த்தாவாகப் பணியாற்றியுள்ள ‘மரியான்’ திரைப்படத்தில், இரண்டாண்டுகளுக்கு மேலாக கவிஞர் குட்டி ரேவதியும் இணை இயக்குநராகப் பணியாற்றியதோடு ஒரு பாடலையும் எழுதியுள்ளார். இயக்குநர்களுக்கு திரைக்கதையை எழுதும் பணியைச் செய்து வருகிறார். சில திரைப்படங்களுக்கும், ஆல்பங்களுக்கும் பாடல்கள் எழுதுகிறார். மெல்ல, தான் இயக்கவிரும்பும் திரைப்படத்திற்கான பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வேன் என்கிறார்.

பெண் இயக்குநர்களுடன் இணைத்து, ‘விறலி விடு தூது’ என்னும் திரைத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். மூலக்கதை ஆசிரியர், திரைக்கதை ஆசிரியர், திரை இயக்குநர், திரைத் தயாரிப்பாளர் இவர்களை ஒருங்கிணைத்துத் திரைப் படைப்புகளைத் தயாரிக்கும் பணியில் ஈடுபடுவதுதான் இந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் முதன்மையான நோக்கம். ’விறலி’ என்றால் கலைகளை வளர்ப்பவள் என்பது பொருள்.

கடவுள் நம்பிக்கை இல்லாத இவர், கௌதம புத்தரின் ‘விபாஸனா’ என்ற யோகக்கலையின் மீது விருப்பம்கொண்டு அதைக் கடைப்பிடித்து வருகிறார்.

Aan_Kuri_Maiya_Punaivai_Sithaitha_Pradhigal_kutti revathi

அவரின் குரலில், அவரைப் பற்றி:

” மலைகள் சூழ்ந்த இயற்கை சூழலில்தான் நான் வளர்ந்தேன். பதினைந்து வயது வரையில் எனக்கு திருவெறும்பூர் தவிர்த்து வேறு எந்த ஊருடனும் பெரிதாகத் தொடர்பு இல்லை. என்னுடைய அந்தக் காலகட்டங்களை முழுக்க முழுக்க திருவெறும்பூர்தான் ஆக்கிரமித்து இருந்தது. அங்குதான் நான் எட்டாம் வகுப்புவரை ஒய்.டபிள்யூ.சி.ஏ. எனும் தமிழ்ப் பயிற்றுப் பள்ளியில் படித்தேன். என்னுடைய இளமைப் பருவத்தில் எனக்குத் தேவையான நம்பிக்கையையும் தெம்பையும் அந்தப் பள்ளிதான் வழங்கியது. அங்கு இருந்த ஆசிரியர்கள் பள்ளிக் குழந்தைகளை தங்கள் குழந்தைகளாகப் பாவித்துக் கல்வி கற்பித்தனர். எங்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே அப்படி ஓர் இணக்கமான சூழல் நிலவியது. கட்டுரை, பேச்சு என அனைத்து போட்டிகளிலுமே நான் பங்கெடுத்துப் பரிசுகள் பெற்றிருக்கிறேன். இன்றுகூட என்னால் 1,330 திருக்குறளையும் முழுதாகச் சொல்ல முடியும். இதற்கெல்லாம் காரணம், என் பள்ளி ஆசிரியர்கள்தான்.

திருவெறும்பூரில் எறும்பீஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்திப் பெற்றது. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் ஆதிச்சசோழன் காலத்தில் அவன் பெற்ற வெற்றிகளைத் தொடர்ந்து காவிரிக் கரையோரம் வரிசையாகக் கட்டிய பல கோயில்களில் இதுவும் ஒன்று. மாலை நேரங்களில் பள்ளி முடித்துவந்து உடை மாற்றிவிட்டு எறும்பீஸ்வரர் கோயில் வளாகத்தில் எங்கள் அப்பாவோடு நானும் என் தம்பி தங்கையும் நடப்பதை வழக்கமாகவே வைத்து இருந்தோம். அப்போது என் தந்தை எனக்கு சொல்லிக்கொடுத்த தேவாரமும் திருவாசகமும் அப்படியே என் மனதில் பதிந்துள்ளது. பொதுவாக எனக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால், அந்த இலக்கியங்களில் இருந்த மொழிநடை என்னை மிகவும் ஈர்த்தது. எறும்பீஸ்வரர் கோயில் பற்றிப் பேசும் இந்த நேரம் எனக்குக் கோயில் பிரகாரத்தில் வீசும் காற்றின் சுகந்தம் நினைவுக்கு வருகிறது.

பி.ஹெச்.எல். டவுன்ஷிப்பில் இருந்த நூலகம் எனக்கு இன்றியமையாத ஒன்று. பள்ளியில் படிக்கும்போது பேச்சு, கட்டுரை போட்டிகளுக்குத் தேவையான தகவல்களைச் சேகரிக்கச் சென்றபோதுதான் அந்த நூலகம் அறிமுகம் ஆனது. கூடவே எழுத்தின் வழி சுஜாதாவும் பாலகுமாரனும் அறிமுகமானார்கள். சங்க இலக்கியங்களைத் தேடித்தேடி படிக்க ஆரம்பித்தேன்.

பி.ஹெச்.எல். போகும் அந்தப் பிரதான சாலையை என்னால் மறக்கவே முடியாது. ஏனெனில், அங்குதான் நான் முதன்முதலாக சைக்கிள் ஓட்ட கற்றுக்கொண்டேன். இன்றும் அந்த இடத்தைப் பார்க்கும்போது என்னால் அந்த நினைவுகளை மீட்க முடிகிறது.

எனக்கு அப்போது வசந்தி, ஜோதி, மீனா என மூன்று நெருங்கிய தோழிகள் இருந்தனர். நாங்கள் மூவரும் திருச்சியின் அழகை முழுதாக ரசித்தோம். 80-களின் இறுதியில் அப்படி எல்லாம் பெண் பிள்ளைகள் சுதந்திரமாக இருப்பது சாதாரண விஷயம் இல்லை. அந்த விஷயத்தில் என் அப்பா எனக்கு முழு சுதந்திரத்தை அளித்திருந்தார்.

என் அப்பா சுயம்புலிங்கம் பி.ஹெச்.எல். நிறுவனத்தில் ஒரு சாதாரண கடைநிலை ஊழியராகப் பணியாற்றியவர். இருப்பினும் குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க மிகவும் பாடுபட்டவர். அப்படிப்பட்ட என் தந்தையை நான் கடைசியாகப் பார்த்தது திருவெறும்பூர் ரயில் நிலையத்தில்தான். நான் சென்னையில் இருந்தபோது அவர் மாரடைப்பால் இறந்துபோனார். அதன் பிறகு நான்கு வருடங்கள் திருவெறும்பூருக்கு வரவே இல்லை. ஏனெனில், அவருடைய ஞாபகங்கள் என்னை மிகவும் பாதித்து இருந்தது. நான் மிகவும் நேசித்த திருவெறும்பூரை அந்தக் காலகட்டத்தில் கொஞ்சம் வெறுத்திருந்தேன் எனச் சொல்லலாம்.

இன்றும் திருவெறும்பூர் திருவேங்கட நகரில் எங்களுடைய சொந்த வீடு இருக்கிறது. வேலை காரணமாக அடிக்கடி ஊருக்கு வரமுடியவில்லை என்றாலும், வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் தவறாமல் இங்குவந்து திருவெறும்பூரின் அழகை ரசிக்க நான் மறப்பதில்லை!”

150256_525948294105568_268739038_n

2012 புத்தகக் கண்காட்சி

1. மாமத யானை – புதிய கவிதைத் தொகுப்பு (வம்சி வெளியீடு)
இது என்னுடைய ஆறாவது கவிதைத் தொகுப்பு! எத்தனை நூல்கள் வந்தாலும் கவிதை நூல் தரும் களிப்பை வேறு ஏதும் தர முடிவதில்லை!
கவிதைக்குள் தான், நான் என் முழு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் நிறைத்துத் தரமுடிகிறது! பல சமயங்களில், நான் கவிஞரின்றி வேறு யாருமல்ல என்று கூடத் தோன்றுகிறது! மற்ற எனது ஆளுமைகள் எல்லாம் அதை ஒட்டியிருக்கும் பிசிறுகள் தாம்! அடுத்தடுத்தக் கட்டத்திற்கான முந்தைய கட்டமாக ஒரு கவிதை நூல் மாறி, என் அகவெளியை உறுதிசெய்கிறது! உரமூட்டுகிறது! சகப் படைப்பாளிகளினும், வாசகர்கள் தாம் என்றும் என் ஊக்கமாயிருந்திருக்கிறார்கள்! எனக்கு நிழலாயிருந்திருக்கிறார்கள்! இந்தப் படைப்பும் அவர்களால் தான் சாத்தியமாயிற்று என்று நம்புகிறேன்!

2. ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப்பிரதிகள் – தம் உடலரசியலால் தமிழ் எழுத்தின் மரபை மாற்றியமைத்த தமிழ்ப்பெண் கவிதைகள் பற்றிய கட்டுரைத் தொகுப்பு (நாதன் வெளியீடு)

3. இந்தக் கோடைக்காலத்தை உனக்காகவே அழைத்துவந்தேன் – காதல் கவிதைகள் தொகுப்பு (ஆழி பப்ளிஷர்ஸ்)

4. முதல் காதல் அனுபவங்கள் – வெவ்வேறு படைப்பாளிகளின் உணர்ச்சிப்பூர்வமான முதல் காதல் அனுபவங்களின் தொகுப்பு (ஆழி பப்ளிஷர்ஸ்)

5. நிழல் வலைக்கண்ணிகள் – பெண்ணிய அரசியல் கட்டுரைகள் (வம்சி வெளியீடு)
– Book of feminist essays, predominantly discuss caste, gender and body.
பெண்ணியக் கட்டுரைகளளின் பெருந்தொகுப்பு. தமிழகத்தில் பெண் உரிமை கோரும் இயக்கங்கள், நிறுவனங்கள், தளங்கள், உரையாடல்கள் பலமுறை எழுந்தும் அவை முழுமையான வடிவம் எடுக்காதபடிக்கு, தனி நபர் அல்லது குழுவினரின் ஆதிக்கத்தால் தீவிரமாக ஒடுக்கப்பட்டிருக்கின்றன. பெரும்பாலும் அது சுயநலம், சுயலாபம் பொருட்டாகவே இருந்திருக்கிறது. இன்று அதற்கான விளைவுகளைப் பெருவாரியாக நாம் அனுபவித்தும் இறுக்கமான மெளனம் கடைபிடிக்கப்படுகிறது. அந்நிழல் வலைக்கண்ணிகளை எழுத்தின் வழியாக என் இடத்திலிருந்து பார்த்திருக்கிறேன். அவ்வலைக்கண்ணிகளை நாம் இனம் காண இந்நூல் ஒரு கையேடாக இருப்பின் மகிழ்வேன்!

புத்தகத்திற்கான முன்னுரை

Idintha_Karai_Kutty_Revathy_Kadal_Penngal_Kavidhaigal

6. யானுமிட்ட தீ – கவிதைத் தொகுப்பு (அடையாளம் வெளியீடு) (2010)
சாதியப்படுத்தப்பட்ட மூடுண்ட மனித உடலை இக்கவிதைகள் இயல்பூக்கத்துடன் திறக்கின்றன. உடலையே இயக்கமாக்கி அதை அதன் ஆதி நிலைக்குத் திருப்புகின்றன. தொல் அறத்தை மீட்டெடுக்கின்றன. வரலாற்றிலிருந்து உடலின் விடுதலை என்பது மோதலில் மட்டுமே நிகழ முடியும். அத்தகைய மோதலின் உக்கிரமான ஒரு புள்ளியில் இக்கவிதைகள் பீறிடுகின்றன. இதுவே இக்கவிதைகளை உயிர்த்துடிப்புடன் இயங்க வைக்கிறது.

7. ‘பூனையைப் போல அலையும் வெளிச்சம்’ (2000)
தொண்ணூறுகளில் கவனம் பெற்ற முக்கியமான கவிதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. இக்கவிதைகள் கோபம் கொள்கின்றன; காதல் வயப்படுகின்றன; காமம் துய்க்கின்றன.. வாழ்வின் வெம்மை பொறுக்க முடியாமல் போகும்போது நிழலைத் தேடும் மன நிலை, ஜீவிதத்தின் உயிர்த்துடிப்பு, பேரனுபவத்தை சுட்டிக் காட்டும் தன்மை; இருமை எதிர்வுகளை வெகு இயல்பாகப் படிமமாக்கிக் காட்டும் அழகியல் ஆகியவற்றுடன் இயங்கும் இக்கவிதைகள் தங்கள் அளவில் தனித்து நிற்கின்றன. ஆணால் வடிவமைக்கப்பட்டு பெண்ணுக்கு வழங்கப்பட்ட பெண் சிந்தனையைப் பார்த்து கெக்கலி கொட்டிச் சிரிக்கின்றன. புதிய சொல்லாட்சிகளும், புதுப்புது சொல்லிணைகளும், மின் தெறிப்பாய் தெரிந்து மறையும் படிமங்களும் இக்கவிதைகளை நினைவுகூறுமாறு செய்கின்றன.

8. ‘முலைகள்‘ (2002)
பெண்ணின் உடலரசியலைப் பேசும் இந்தப் பிரதி முலைகள் துடைத்தகற்ற முடியாத இரு கண்ணீர்த்துளிகள் என்று அறிவித்து பெண்ணை நுகரும் உடலாகப் பார்க்கும் ஆணாதிக்கப் பொதுப்புத்தியைத் தகர்க்கிறது. இத்தொகுப்பில் இயங்கும் கவிதை மனம் வாழ்க்கையின் முட்களில் சிராய்த்துக் கொண்டு கண்ணீர் வடிக்கிறது. அதே சமயத்தில் வாழ்வின் அதீதமான தருணங்களை போகிற போக்கில் தரிசிக்கவும் செய்கிறது. உத்வேகத்துடன் அலைவுறும் கவிதை மனம் விடுதலை வேட்கையுடன் இயங்கும் இக்கவிதைகளில் படிமங்கள் அழகாகக் கைகோர்க்கின்றன. இயல்பான தன்மையுடன் நடனமாடுகின்றன.

9. ‘தனிமையின் ஆயிரம் இறக்கைகள்’
நவீன தமிழ்க்கவிதை வெளியில் பெண் குரல், பெண் உடல், உடலரசியல் போன்ற தளங்களில் ஒலிக்கும் ஒரு குரலை இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் பதிவு செய்திருக்கின்றன. ஏக்கம், நிராசை,காமம், மரணம் போன்ற அனுபூதிகள் இக்கவிதை வரிகளில் சாகாவரம் பெற்று இயங்குகின்றன. இயற்கையின் மீதான அவதானிப்பு இக்கவிதைகளில் பெண்ணியத்தின் குறியீடுகளாக மிளிர்கிறது. பெண்ணிடமிருந்து விலக்கப்பட்ட சொற்களை இவை துணிந்து உச்சரிக்கின்றன. அந்தச் சொற்கள் ஆணாதிக்க மனத்தின் செவிப்பறைகளில் போய் மோதி அதிர்கின்றன. இதுவே இத்தொகுப்பை பிற கவிதைத் தொகுப்புகளிலிருந்து வித்தியாசப்படுத்திக்காட்டுகிறது.

10. ‘உடலின் கதவு’ கவிதை நூல் அடையாளம் பதிப்பகத்தால் மறு பதிப்பும் பெற்றுள்ளன.
ஆணாதிக்கச் சமூகத்துக்கெதிரான ஒரு பெண் மனத்தின் சீற்றம் இக்கவிதைகளில் தெறிக்கிறது.காமம், புணர்ச்சி,கருவுறுதல் என்று விரியும் குறியீடுகள் இந்தப் பிரபஞ்சத்தையே ஒரு பெண்ணின் உடலாகவும், ஒரு பெண்ணின் உடலையே பிரபஞ்சமாகவும் உருவகித்துக் காட்டுகின்றன. கவிதை வரிகள் தோறும் படிமங்களும், தொடர் உருவகங்களும் காட்டாற்று வெள்ளம் போல் பிரவகித்துப் பாய்கின்றன. சில தருணங்களில் வெள்ளம் வடிந்த பின் படியும் நுரையாய் மனத்தில் ஒட்டிக் கொள்கின்றன. கவிதையில் உற்பவிக்கும் உணர்ச்சிப் பெருக்கு கவிஞரிடமிருந்து வாசகனையும் தொற்றிக் கொள்ளும் அதிசயம் இந்தத் தொகுப்பில் சாத்தியப்பட்டிருக்கிறது.

11. கட்டுரை நூல் – காலத்தைச் செரிக்கும் வித்தை (2009)

12. முத்தத்தின் அலகு

ஆழி பதிப்பகத்தின் செந்தில்நாதன், என் காதல் கவிதைகளை நூலாக வெளியிட தொகுத்துத் தரக் கேட்டபோது, உண்மையில் அது ஒரு விநோதமான அனுபவமாகவே இருந்தது. ‘காதல்’ பற்றிய நமது சமூகத்தின் குரல்களும் தனிமனிதக் குரல்களும் எப்போதுமே முரண்பட்டிருக்கின்றன. நுணுகிப் பார்த்தால், ஒடுக்குமுறையை ஆதரிக்குமொரு மனம் தான் காதலை எதிர்க்கிறது! அல்லது, தன்னளவில் உருவான ‘காதல் உணர்வை’ எதிர் நபருக்குச் சரியான முறையில் தெரிவித்து, அதைச் சாத்தியப்படுத்திக் கொள்ள முடியாமல் போனவர்கள் தாம் காதலை எதிர்த்திருக்கிறார்கள்! இன்னொரு மனிதருடன் என்றால், அம்மனிதரின் குடும்பம், வர்க்கம், சாதி, மதம், மனம், உடல், நிறம் என எல்லா பேதங்களுடனும் மோத வேண்டியிருக்கிறது, இல்லையா! ஆனால், இதையெல்லாம் தாண்டி காதல் என்பது தனிமனித அளவில் மிகவும் தூய்மையா கவும் நேர்மையுடனும் உணர்ச்சிப்பூர்வமாகவும் இருக்கிறது!

என்னளவில் காதல் இன்னும் இன்றும் அழகானதாகவே இருக்கிறது! என் காதல் கவிதைத் தொகுப்பிற்கு, ‘முத்தத்தின் அலகு’ என்று பெயரிட்டிருக்கிறேன்.

13. ‘இடிந்த கரை’ நூல் – கடல், பெண்கள், கவிதைகள்

14. ‘முள்ளிவாய்க்காலுக்குப் பின்’ என்ற பெயரில் ஈழத்து இனப்படுகொலையை வைத்து புலம்பெயர்ந்த ஈழப் படைப்பாளிகள் எழுதிய கவிதைகளின் தொகுப்பு நூல் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

Tamil_poetess_Little_Revathy

 

காதல் குறித்து:

நான் எப்பொழுதும் காதலின் பக்கம்.

எல்லா ஆண்களும் ஒரே மாதிரி தான் என்பதே என்னுடைய கருத்து என்றாலும், பெண்ணிடம் காதலை வெளிப்படுத்துவதில் மட்டும் தான் ஒருவரிடமிருந்து மற்றவர் வேறுபடுகிறார் என்பது என் முடிந்த முடிபு.

வீட்டில் ‘தந்தை அன்பின்’ போதாமையால், ‘சகோதர அன்பின்’ போதாமையால், ‘ஆண் அன்பின்’ போதாமையால் மகளின் காதல் வேகம் பெறுகிறது, வீர்யம் பெறுகிறது. காதல் வழியாக எல்லா ஆண்களிடமும், மகள் தந்தையைத் தான் தேடுகிறாள். தவறாகி, பிழையாகி, பின் ஏதோ ஒரு மட்டில் காதல் நிறைவாகும் வழிகளைத் தேடிக் கொள்கிறாள். தந்தையின் முழுமையான அன்பைப் பெறும் மகளும் காதலில் தன் தந்தையைத் தான் தேடிக் கொண்டிருப்பாள், ஆண்களில் காதலைத் தேடுவதற்குப் பதிலாக.

நான் எப்பொழுதும் காதலின் பக்கம். இன்னும் மானுடம் வெல்ல நம்மிடம் இருக்கும் ஒரே அறிவு காதலே. இதே வார்த்தைகளில் அம்பேத்கர் சொல்லவில்லை என்றாலும், சாதியை வெல்லவும் நம்மிடம் இருக்கும் ஒரே வெளிப்பாடு காதலே.

Kutty_Revathy

அ) நேர்காணல்: கவிஞர் குட்டி ரேவதி-பகுதி-1
http://tamilnathy.blogspot.com/2007/03/blog-post_959.html
– இந்த நேர்காணல் இலங்கையில் வீரகேசரியின் வார வெளியீட்டில் தொடராக வந்தது.

பகுதி-2
http://tamilnathy.blogspot.com/2007/03/blog-post_05.html
– ”’நல்ல எழுத்துத்தான் கடைசிவரை நிக்கும்… அக்கப்போர்களைக் கண்டுகொள்ளாதீர்கள்’”

மறுமொழிகளில் இருந்து:

///ஆண்கள் எப்படி பெண்களைக் கொச்சைப்படுத்துகிறார்களோ பாலியல் உறுப்புகள் குறித்து எழுதுகிறார்களோ அதைப் போலத்தானே இவர்களும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்… இவர்கள் எப்படிப் பெண்ணியவாதிகளாக இருக்க முடியும் என்று குற்றஞ்சாட்டுகிறார்கள். அதற்கு என்னுடைய பதில் என்னவென்றால் ‘நாங்கள் முன்வைக்கும் அரசியல் வேறு’என்பதாகும்.///

இதற்கு கவிஞர் சரியான பதிலை சொல்ல வில்லையோ என்று தோன்றுகிறது.

நிறைவுப்பகுதி
http://tamilnathy.blogspot.com/2007/03/blog-post_06.html
– திராவிட இயக்கங்கள் வந்த பிறகு இந்த அழகியல் என்பது அற்றுப்போய்விட்டது என்று சொல்லலாம்

ஆ) எஸ்.ஆர்.எம். எம்.ஏ. பாடப் புத்தகம்

http://www.srmuniv.ac.in/tamilperayam/tamil_courses/Lessons/MA_Tamil/I_Year/matt01/html/mat01007pp2b.htm
‘ஒளி சொட்டச் சொட்டக் குளித்து வந்தாய், பாதங்களில் வழிந்து பாதையெல்லாம் தீக்காயங்கள்’, ‘சுண்ணாம்பு வெயில்.. தன் ஒற்றைக் காலால் என் முகத்தின் மீது நடந்து சென்றது வெயில்’ என்பனபோன்ற அழகும் தீவிரமும் கொண்ட படிமங்களை இவர் கவிதைகளில் காணலாம். காலவெளி, பிரபஞ்ச ஓவியம், பாழ்விண், உட்குகை இருள், இருட்சுவர், காலாதீதம், உதிரநதி, புவனம் போன்ற சொல்லாட்சிகளும் படிமங்களும் பிரமிளின் செல்வாக்கைத் தெளிவாகக் காட்டுவன.

‘ஆண்டாள் தன் காதல்நோய் பற்றிப் பேசியதன் உணர்வுத் தொடர்ச்சியைப் பல நூற்றாண்டுகள் கழித்து ரேவதியிடம் கேட்கிறோம்’ என்கிறார் க.மோகனரங்கன். கவிதை சொல்லியின் பாலியல் அடையாளங்களுடன் தனித்துவமும் தீவிரமும் கூடிய பெண்குரலாக வருவது குட்டி ரேவதி கவிதை என்கிறார். சமூகத் தணிக்கைக்கு உட்படாத சுதந்திரமான ரேவதியின் மொழி, விமர்சனத்திற்கு உள்ளாகலாம் எனவும் அவர் குறிப்பிடுகிறார் (சொல் பொருள் மௌனம், ப.187)

இ) பிறவழிப் பாதைகள் : அன்புள்ள குட்டி ரேவதி
http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20601202&edition_id=20060120&format=html
– கோபால் ராஜாராம்

ஈ) பெண்கவிகள் சந்திப்பு – 2002 இடம்-புதுவை நாள்-11.9.02
http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60209171&edition_id=20020917&format=html
– இச்சந்திப்பில் பேசப்பட்ட பகிர்வுகளில் மிக முக்கியமாக கருதுகின்ற சில விவாதங்கள் அல்லது கேள்விகள்

உ) உடலின் மொழியும் மொழியின் உடலும் – குட்டி ரேவதியின் கவிதைகள் குறித்து
http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60308224&edition_id=20030822&format=html
– எச் பீர்முகம்மது

ஊ) தலித்துகளைக் காப்பாற்றும் பொறுப்பு – கண்ணன்
http://www.kalachuvadu.com/issue-91/kannottam.asp
உத்தரப் பிரதேசத்தில் மாயாவதி தலைமையிலான பெரும் பான்மை ஆட்சி, தலித்-உயர்சாதிச் சமூகக் கூட்டணியால் ஏற்பட்டுள்ள பின்னணியில் ‘அவுட்லுக்’ ஜூன் 24, 2007 இதழ், தெற்கில் மேற்படி நிகழ்வு ஏற்படுத்தியுள்ள எதிர்வினைகளைச் செய்திக் கட்டுரையாக வெளியிட்டுள்ளது. இக்கட்டுரையில் கவிஞர் குட்டி ரேவதி மேற்கோள்காட்டப்பட்டுள்ளார். அவரது கருத்து இது:
”பிராமணர்கள் உத்தரப் பிரதேசத்தில் ஆதிக்கம் செய்யத் தொடங்கிவிடுவார்கள். அவர்கள் தலித்துகளை விழுங்கிவிடுவார்கள் . . . இது பற்றி கருத்துக் கூறும் நேரம் வரவில்லை.”

எ) SEA, OH SEA YOU ARE MY BODY – documentary PMANE

in the background of the evocative song Kadale, Kadale by famous Tamil Poetess Kutti Revathi set to tune by S. Sreekumar of M.B.S.Youth Choir.
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்திற்கு மக்களின் குரலாய் எழுதிய பாடல் இது. கேரளத்து நண்பர்கள் சதீஷ், அனிதா மற்றும் நண்பர்கள் இணைந்து இதற்கு பாடல் வடிவம் கொடுத்துள்ளனர். இசையமைப்பாளர் எஸ். ஶ்ரீகுமார் அவர்கள் இசை அமைத்துள்ளார்

ஏ) interview to Vani Viswanathan of the Spark magazine:
http://www.sparkthemagazine.com/?p=4399
Language is the One Tool that can Liberate Women’s Bodies: Kutti Revathi

ஐ) உதிர்த்த வார்த்தைகளைத் திரும்பப் பெற இயலாது! சிவகாமி அவர்கள் கருத்தின் மீதான விவாதத்தை முன்வைத்து….
http://www.kuttyrevathy.blogspot.in/2013/09/blog-post_15.html

ஒ) பிடித்த புத்தகம்
http://www.amazon.com/dp/0571172865/ref=cm_sw_r_fa_dp_P20zpb0GH377Q/187-8838555-9646736
A graphic novel. The story can differ with each reader and each reading. The central imagery deals with winged dream-people, whose wings are opened books rather than feather and flesh.

Neraiya_Araigal_Ulla_Veedu

ஓ) ஒரு மேற்கோள்
“In writing about a woman’s body and its sexuality, one is also writing about the political history of the human body!”.

கொசுறு:

எழுத்தாளர் நிலையிலிருந்து, கட்சி அரசியல் நிலைக்கு நகர்ந்தது என்பது பெரும்பாலும் பெண் எழுத்தாளர்களுக்குத் தான் நடந்திருக்கிறது! சமூக அசைவின் ஒரு பகுதியாகவே இது பார்க்கப்படவேண்டும்! ஆனால், சமூகத்தின் அரசியல் ஊக்கத்தை மதிக்காத அப்பெண்கள், தன் சுயநிலைகளை மட்டுமே பொருட்படுத்தியவர்களாக இருந்த நிலை உள்ளங்கை நெல்லிக்கனி போல இன்று! எல்லா அரசியல் ஆதாயங்களையும் தன் தனிமனித கோபுரங்களை எழுப்பிக் கொள்ளவே பயன்படுத்தினர்! தி.மு. க. அரசியலின் அடித்தளம் ஆட்டம் கண்டிருக்கும் இந்நேரத்தில், அதில் ஈடுபட்டு முதுகெலும்பு இழந்தவர்கள், சமூகத்தின் பிற ஒடுக்கப்பட்டப் பெண்களின் குரலாய் மாறாத இந்த அரசியல் பெண்கள் இனி எப்படி தம் சமூகக் குரலை அடையாளப்படுத்துவார்கள்? ’அவர்கள் அறச்சீற்றம் கொண்டால் எத்தகையதொரு கேலிக்கூத்தாகிறது என்று சொல்லத்தேவையில்லை!”

கொசுறுக்கு கொசுறு:

‘தனித்த’ தமிழ்த்தேசியம் பேசுவோர் கொஞ்சம் எல்லாவற்றிலும் மிகையான உணர்ச்சிகளுடன் கொந்தளிப்பது, நடக்க இருப்பதையும் நடக்கவிடாமல் செய்துவிடுகிறது என்பதைப் பலமுறைப் பார்த்திருக்கிறேன். ‘தலித்தியம்’, அல்லது ‘சாதி மறுப்பியம்’ என்பதே தமிழ்த்தேசியம் என்று ஆகிவிடக்கூடாதே என்ற பதற்றம் தான் இந்தக் கொந்தளிப்பின் ரகசியம் என்பதையும் பலமுறைகள் உணரமுடிந்திருக்கிறது.

‘காமம் தாண்டி காதல்’ என்பதே கடுமையானதொரு சாதிய மனப்பான்மை. உடலை அவமதிக்கும் செயல். எப்படி தீண்டாமை உடலை அவமதிக்கிறதோ அதையே பின்பற்றும் ஒரு சாதிய மனநிலை தான் இது. காலங்காலமாக நம்மில் ஊறிய சாதிய மனநிலையே, ‘காமம் தாண்டிய காதல்’ என்ற கண்டுபிடிப்புகளை நிகழ்த்தத்தூண்டுகிறது.

தமிழ் இனம் – சாதி மறுப்பு = தமிழ்த்தேசியம், என்பதை பலரும் பல சமயங்களில் வலியுறுத்திக் கொண்டே இருக்கின்றனர்.

யாருக்கு இதனால் நட்டம்? நம்மைப் பிளவு படுத்திக் குளிர்காயும் சனாதனிகளுக்கு இது மிகுந்த மகிழ்ச்சியையும், கொண்டாட்டத்தையும் கொடுக்கும். தமிழகம் என்று தனியே ஒரு நாடு உருவானால் கூட, பின் இருக்கப்போகும் ஒரே பிரச்சனை நீங்கள் தாம்: தீண்டாமையின் புதிய வடிவமைப்பை, பெண் பாலியல் ஒடுக்குமுறையின் புதிய வழிமுறையை நீங்கள் செயல்படுத்துவீர்கள்!

இந்தியா சுதந்திரமடைந்து 67 ஆண்டுகளுக்குப்பின்னும் சாதிய வன்முறை பகிரங்கமாக, காட்டுமிராண்டித்தனத்தின் அடையாளமாக நடக்கிறது. தொடர்கிறது. சக மனிதனை மலம் அள்ள வைக்கிறோம். இசுலாமியர்கள் மீதான வன்முறைகளும் பாரபட்சமும் தொடர்கின்றன. பெண்கள் மீதான பாலியல் வன்முறை முன்னெப்பொழுதையும் விட தற்பொழுது அதிகமாயிருக்கிறது.

6400 சாதிப்பிரிவுகளையும் அதற்கான ஏற்றத்தாழ்வுகளையும் அது ஏற்படுத்தும் ஊழலையும் வைத்துக் கொண்டு ஒருமித்த இந்தியா என்று போற்றுவதும் பாராட்டுவதும் உணர்ச்சிப் பெருக்கெடுப்பதும் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது இல்லையா? இது கண்டிப்பாக சுதந்திர இந்தியா இல்லை. இன்னொரு சுதந்திரத்திற்காக நாம் எல்லோரும் போராடவேண்டியிருக்கும் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்கிறேன்.

Nizhal_Valai_Kannigal_Book

ஔ) குட்டி ரேவதி – தீராநதி நேர்காணல்
http://ntmani.wordpress.com/2006/02/22/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF8/

க) கோவில்கள், சிற்பங்கள், ஓவியங்கள் – ஸ்ரீனிவாசனுடன் உரையாடல்
http://www.yaavarum.com/archives/2590

ங) ’இந்தியா டுடே’யின் ரஜினி சிறப்பிதழ் கட்டுரை
http://kuttyrevathy.blogspot.com/2011/12/blog-post.html
– ‘நான் நம்பர் ஒன், என் புருஷன் நம்பர் டூ’ என்ற வசனமும் ரஜினி என்ற கதாநாயகனும்’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை, ரஜினி என்ற கதாநாயகனின் ஆணாதிக்க வசனங்களைப் பற்றிய சிறிய அலசல்!

Breasts: (original ‘Mulaigal’ by Kutti Revathi), translated by N. Kalyan Raman

Breasts are bubbles, rising
In wet marshlands
I wondrously watched- and guarded-
Their gradual swell and blooming
At the edges of my youth’s season
Saying nothing to anyone else,
They sing along
With me alone, always:
Of Love,
Rapture,
Heartbreak
To the nurseries of my turning seasons,
They never once failed or forgot
To bring arousal
During penance, they swell, as if
straining
To break free; and in the fierce tug of
lust,
They soar, recalling the ecstasy of music
From the crush of embrace, they distil
The essence of love; and in the shock
Of childbirth, milk from coursing blood
Like two teardrops from an unfulfilled
love
That cannot ever be wiped away,
They well up, as if in grief, and spill over

Ref: Literery review, The Hindu, January 1st 2006

Wild_Girls_Wicked_Words_Lakshmi_Holmstrom

ச) ‘புறனடை’ இதழில் வெளியான என் நேர்காணல்

இத்தகைய நிதானமான நேர்காணலை எடுக்கும் பணிக்கு நண்பர்கள் ரவிச்சந்திரன், பிரவீண், ராஜ், கஜேந்திரன், ஜே. ஜெய்கணேஷ் தங்களின் நிறைய நேரத்தைச் செலவழித்தார்கள். நான் முன்வைக்கும் அரசியல் நிலைப்பாடு குறித்தும், அதை நோக்கிய என் எழுத்துப் பயணம் குறித்துமான நேரடியான பதிலை திருத்தமானதோர் உரையாடல் வழியாக என்னிடமிருந்து பெற்றார்கள்! வழக்கத்திற்கு மாறாக, நிறைய நண்பர்கள் இந்நேர்காணலை வாசித்துவிட்டு தங்கள் வாழ்த்துகளையும் கருத்துக்களையும் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் வழியாகப் பகிர்ந்து கொண்டார்கள்.

என்னை ஒரு தனிமனிதராகப் பார்க்காமல், எழுத்து இயக்கத்தின் ஒரு பகுதியாகவே என்னைப்புரிந்து கொண்டு, இதைத் தன் இணையத்தளத்தில் பதிப்பித்த, ‘தமிழ் ஸ்டுடியோ’ அருண் அவர்களுக்கும் என் நன்றி!

குட்டி ரேவதி (Kutti Revathi) கவிதை படைப்புகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
http://eluthu.com/kavignar/Kutti-Revathi.php

அவரின் வலைப்பதிவு: http://www.kuttyrevathy.blogspot.com/

 

 

டிஜிட்டல் கொலையாளிகள்: 66A – ITAct

இன்றைய தேதியில் கசாப்களை விட இணையத்தில் கொலை செய்பவர்கள்தான் அதிகம்.

சின்மயிக்கு @ போட்டு ராகிங் செய்பவர்கள், கார்த்தி சிதம்பரத்தை கிண்டல் அடித்து வெறுப்பேற்றுபவர்கள், பெங்களூர் பிகாரி வன்முறை, ரோஜா செல்வமணி கருத்து காவலர்கள், பால் தாக்கரே என்று யாரை விமர்சித்தாலும் காவல்துறையும் சட்டம்+ஒழுங்கும் துள்ளி எழுகிறதே… ஏன்?

இந்த மாதிரி கோபக்கார புரபசர்களுக்கும் பகிடி புரொகிராமர்களுக்கும் யார் முன்னோடி?

கென்னடியை சுட்டது யார் என்று தெரியும். ஆனால், எதற்காக என்பது அமெரிக்கர்களுக்கு புரியாத புதிர். மூன்று திரைப்படங்கள், பதினேழு புத்தகங்களாவது ஜே.எஃப்.கே. கொலைவழக்கு குறித்து அலசி ஆராய்ந்திருக்கிறது. இதெல்லாம் நடந்து முடிந்த மே 2005, நாஷ்வில் நகரத்தில் இருந்து விக்கிப்பீடியாவில் ஒருவன் எழுதுகிறான்:

1960களில் அட்டர்னி ஜெனரலாக இருந்த கென்னடியின் உதவியளாராக ஜான் செய்காந்தளர் பணியாற்றினார். ஜான் எஃப் கென்னடியும் அவரின் சகோதரர் பாபி கென்னடியும் கொலை செய்யப்பட்டதில் அவருக்கு நேரடி தொடர்பு இருந்ததாக அவர் மேல் சில காலம் சந்தேகம் இருந்தது. ஆனால், அவை நிரூபிக்கப்படவில்லை. 1971ல் ஜான் செய்காந்தார் சோவியத் ருசியாவிற்கு இடம் மாறினார். 1984ல் மீண்டும் அமெரிக்கா திரும்பினார்.

உண்மையில் ஜான் செய்காந்தளர் மார்ட்டின் லூதர் கிங்குடன் போராடியவர். கென்னடிக்காக ஊழியம் செய்தவர். கருப்பின போராட்டத்தில் பங்கு பெற்றவர்.

அவரிடம் இந்த விஷயம் பற்றி விசாரித்தபோது, “என்னப் பற்றி எதற்கு தவறாக எழுதணும்? அதில் எள்ளளவு மட்டுமே உண்மை இருக்கிறது. அவருடைய செயலாளராக இருந்திருக்கிறேன். கென்னடியின் இறுதி ஊர்வலத்தில் அவரை தூக்கும் பாக்கியம் பெற்றிருக்கிறேன். இந்த எழுபத்தெட்டு வயதில் விக்கிப்பிடியாவைக் கற்றுக் கொண்டு, இந்த அவதூறை நீக்குவது எப்படி?” என்று சோர்வும் வருத்தமும் சேறடித்தவர் எவர் என்று கூட தெரியாத அச்சமும் கலந்து பேசியிருக்கிறார்.

கென்னடி குறித்த விக்கி பக்கத்தில் இந்த வடிகட்டின பொய் நூற்றி முப்பத்திரண்டு நாள்கள் நிலைத்து லட்சக்கணக்கானோர் பார்வைக்கு சென்றுள்ளது. வழக்கம் போல் இதை ஆதாரமாகக் கொண்டு ஆன்ஸ்வர்ஸ்.காம், கூகில், ரெபரன்ஸ்.கொம் போன்ற கல்லூரி மாணவர்களும் பள்ளிச் சிறுவர்களும் பயன்படுத்தும் தளங்களும் ததாஸ்து சொல்லி திக்கெட்டும் தகவலைப் பரப்பி இருக்கிறது.

நீங்கள் சுடப்பட்டால் உங்களுக்கே தெரியாது. உங்களின் கேரக்டர் கொலையுண்டதை ஊரார் அறிந்திருப்பார்கள். நம் குணச்சித்திரம் சின்னாபின்னமானது நோர்வே முதல் நமீபியா வரை பரவியிருக்க நமக்கு ரொம்பவே பொறுமையாக அறிவிக்கப்படும். அதுவும் நாமே கண்டுபிடித்தால் மட்டுமே சாத்தியம்.

இந்த மாதிரி இழுக்குகளில் இருந்து சாமானியர்களைக் காப்பாற்றவே சட்டமும் ஒழுங்கும் செகஷன் அறுப்பத்தி ஆறு ஏ-வை உண்டாக்கி இருக்கிறது.

ஆனால், 66ஏ நியாயமாக உபயோகமாகிறதா என்றால், இந்தியாவின் எல்லா சட்டமீறல்கள் போலவே அதுவும் மக்களுக்கு பிரயோசனமின்றி போகும் உபத்திரவ பட்டியலில் +1

Idly Vadai 9 Year Greetings

இட்லி வடை ஆரம்பித்து பத்தாவது ஆண்டு துவங்கப் போகிறது.

பத்தாண்டுகளாக தமிழ்ப்பதிவுகள் எப்படி இருக்கிறது என்று ரிப்போர்ட் கார்ட் போடலாம். பேருந்து விபத்தில் சென்னை நகரத்தின் பள்ளி சிறுவர்கள் இறப்பது போல் அது அடிக்கடி நடப்பது.

பத்தாண்டுகளில் இட்லி வடை எழுதியதில் பெஸ்ட் எது என்று பார்க்கலாம். டெண்டுல்கர் சதம் அடிப்பது போல் ஆயிரக்கணக்கான பதிவுகளில் நூறு திக்கி திணறி தேறலாம்.

சமகால ஜாம்பவான்களான பேயோன், மனுஷ்யபுத்திரன் போன்ற புனைப்பெயர்களோடு ஒப்பிட்டு அலசலாம். கோகுலாஷ்டமிக்கு கிருஷ்ணர் வேடம் அணிவது பொருத்தம் என்பது போல் இட்லி வடையில் அசுரர்களுக்கு இடம் இல்லை.

அப்படியானால் என்ன செய்யலாம்?

நீங்களும் இட்லி வடையாக ஒன்பது யோசனைகள் கொடுக்கலாம்:

1. தற்பெருமை, சுய அங்கீகாரத்தின் வெளிப்பாடாக அகங்காரம், தவறு செய்தாலும் மன்னிப்பு கேட்காத தன்மை, காதல் மன்னர்களின் வசீகரம் என்று அரசியல்வாதிக்கும் வலைப்பதிவருக்கும் உள்ள ஒற்றுமைகள் நிறைய. ஆனால், அரசியலில் வாக்கு கேட்டு வெற்றி பெற்றால்தான் மதிப்பு. வலையில் எழுதினாலே குவியும் வாக்கு.

2. இட்லி-வடை என்பது வாரிசு அரசியல் மாதிரி. முன்னுமொரு மூதாதையர் காலத்தில் இருந்து தியாகி பென்சன் பெற தகுதி பெற்றவர். நேற்றைய பினாமி பாலிடிக்சில் மில்லியனரானது போல் புதிதாக முளைத்தவர் இந்த பூமியில் காலூன்றுவது எப்படி? திண்ணை, சொல்வனம், உயிரோசை எதையும் விட வேண்டாம். ட்விட்டர், பேஸ்புக், பிண்டெரஸ்ட் எங்கும் தோன்றவும்.

3. எனக்கு ரொம்ப பிடித்தமான வினா: ‘எல்லோரும் இப்படி செஞ்சா என்ன ஆகும்?’ – அஞ்சு பைசா அன்னியன் ஆகட்டும்; எனக்கு காரியம் ஆனால் போதும் என்று கூடங்குளத்தை மூடச்சொல்லும் உதயகுமார் ஆகட்டும். உலகில் உள்ள அனைவரும் எனக்கு மட்டும் இது நடந்தால் போதும் என்று நம்பும் மனநிலையை உடைக்கலாம்.

4. எனக்கு நிரலி எழுதத் தெரியும். ஆனால், கணினி ப்ரொகிராமிங் குறித்து எழுதியது ரொம்பக் குறைவு. மொத்தம் ஏழெட்டு பதிவுகளில் இரண்டாயிரம் வார்த்தைகளை தாண்டாது. இந்த மாதிரி நம் துறை சார்ந்து எழுதலாம்.

5. சுவைக்காக தண்ணியடிப்பது ஒரு ரகம். பழக்கத்திற்காக சரக்கடிப்பது ஒரு ரகம். தூக்கத்திற்காக குவார்ட்டர் அடிப்பது இன்னொரு ரகம். எப்பொழுதாவது கம்பெனிக்காக குடிப்பது என் ரகம். நீங்கள் பதிவதில் எந்த ரகம்?

6. சண்டைக் காட்சிகளில் வாத்தியார் மூன்று அடி வாங்கிய பிறகுதான் நிமிர்ந்து திரும்பக் கொடுப்பார். பாவப்பட்ட ஹீரோவிற்கு மவுசு அதிகம். சிண்ட்ரெல்லாவிற்குத்தான் அனுதாப அலை அடிக்கும். எனவே, அவ்வப்போது உங்களை மனிதராக காட்டிக் கொள்ளுங்கள். அடக்கம் அமரருள் உய்க்கும்

7. ஒரே விஷயத்தையே கட்டி அழாதீர்கள். சங்க இலக்கியமாக இருக்கட்டும்; அரசியல் குழாயடிகளாக இருக்கட்டும். கொஞ்சம் உலகம்; நிறைய உள்நாடு; அப்படியே உங்களால் மட்டுமே எழுதக்கூடிய தனியாள் அனுபவங்கள். எல்லாம் கலந்து கட்டி அவியல் மணக்கட்டும்.

8. நாய் என்றால் கரண்ட் கம்பம் பார்த்து ஒன்றுக்கிருக்கும். வலைப்பதிவர் என்றால் மூக்கை நுழைத்து சண்டை போடுவார்.

9. என் மூளை ஔவையார் மூளை. இடது சாரியாக எல்லாவற்றையும் ஒன்று, இரண்டு, மூன்று என பட்டியல் போட்டு அழகு பார்க்கும். ஆனால், இலக்கியவாதிகளுக்கு வலப்பக்க மூளை புனைந்து கவி பாடும். வைரமுத்துவாக இரண்டையும் நன்றாக குழைத்து கருப்பு மை போட்டு வாழ்க! வளர்க!!

சமூக வலைப்பின்னல் தளங்களில் தனிமனிதர்கள் தங்கள் பொறுப்பினை உணர்ந்து செயல்படுவதற்கான வழிகாட்டுதல்கள்

புதிய தலைமுறை இதழுக்காக எழுதியது:

விவகாரம் இல்லாமல் விவகாரத்தை முன்னிறுத்துவது எப்படி?

தமிழில் மிகவும் புகழ்பெற்ற பழமொழி இருக்கிறது. ‘அரசன் எவ்வழி; மக்கள் அவ்வழி!’ இது பாஸ்டனுக்கும் பொருந்தும். பம்பாய்க்கும் பொருந்தும்.

வேகமாக வண்டியை ஓட்டினால் மாட்டிக்குவோம். அரை அங்குலாம் அதிகமாக வீட்டைக் கட்டினால் தரைமட்டமாக்கப் படுவோம் என்று பயந்து வாழ்க்கையை சட்டதிட்டத்திற்கு உட்பட்டு அமெரிக்காவில் வாழ்கிறேன். அஞ்சி அஞ்சி வாழும் வாழ்வு இந்தியாவில் கிடையாது. இணையத்தில் அந்த அச்சம் சுத்தமாக நீங்கி, டார்ஜான் போல் சுதந்திரமாக சுற்றித் திரிய முடிகிறது.

என்னுடைய வாழ்க்கையே இணையத்தில் என்றாகி விட்டது. உன் நண்பர்களைச் சொல்… உன்னைப் பற்றி சொல்கிறேன் என்பது அந்தக் காலம். உன் மின்னஞ்சல் முகவரியைச் சொல்… உன் சரித்திரத்தை அப்பட்டமாக்குகிறேன் என்பது இந்தக் காலம்.

இப்பொழுதெல்லாம் நேர்காணலுக்குச் சென்றால், ‘உங்கள் பொழுதுபோக்கு என்ன?’ என்றெல்லாம் கேட்பதில்லை. நமது ஃபேஸ்புக், டுவிட்டர் பழக்க வழக்கத்தை உளவு கண்டு அவர்களே அறிந்து வைத்திருக்கிறார்கள். ரொம்ப நேர்மையாக ‘நமக்கு அந்த மாதிரி சமூகத்தளங்களில் எல்லாம் ஐடி கிடையாதுங்க’ என்றால் அதை விட மிகப் பெரிய பிரச்சினை. எல்லாக் குரங்கும் நான்கு கால் கொண்டு தாவும்பொழுது, நாம் மட்டும் இரண்டு கால் கொண்டு நடந்தால்… பிரச்சினைதான். எனவே, சமூக வலைத்தளங்களில் நம் முகவரியும் இருக்க வேண்டும். இயங்கவும் வேண்டும். அதே சமயம் உங்களின் உண்மையான விருப்பங்களில் ஈடுபாட்டோடு செயல்பட வேண்டும்.

ஹிண்டுவில் ‘லெட்டர்ஸ் டு தி எடிட்டர்’ எழுதி நான்கு நாள் தேவுடு காத்து, அதன் பின் அது வெளியாகாத கோபத்தில் ஹிந்து மீது கோபம் கொண்டு திட்டுவது எல்லாம் மலையேறிப் போயாச்சு. சன் டிவியிலோ, குமுதத்திலோ தவறான தகவல் வந்தால், அதை உடனுக்குடன் கிழித்துத் தொங்க விட்டு, நண்பர்களைக் கொண்டு பரபரப்பாக்கி, அந்தந்த மீடியாவின் போட்டியாளர்களின் பார்வைக்கு கொண்டு செல்கிறார்கள். நாளடைவில் இந்தப் பிழை அப்படியே அமுங்கிப் போகாமல், கவனத்தில் இருக்குமாறு வைத்திருக்கிறார்கள்.

இதே போன்ற சுமைதாங்கியை எந்த வலைப்பதிவர் மீதும் சாத்தலாம். இது நம் பக்கமும் வரலாம். ஒரு விஷயத்தை வலையில் பகிருமுன் சரி பாருங்கள். இதை நம் அப்பா படித்தால்… நம் மகள் படித்தால்… எப்படி இருக்கும் என்று யோசியுங்கள். அவர்களுக்கு தகுந்த மொழியில் எழுதுங்கள்.

நம் மகளோ மனைவியோ படித்தால் நம்மை எளிதில் தொடர்பு கொண்டு அவர்கள் தரப்பு கருத்தை சொல்லலாம். மற்றவர்களுக்கு என்ன வழி? உங்களைத் தொடர்பு கொள்ளும் முகவரியை பிரதானமாகப் போடுங்கள். மறுமொழிப் பெட்டியை வைத்திருங்கள். பதில் போட பல வழிகள் கொடுங்கள்.

அதற்காக, அனாமதேயமாக வருபவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். முகங்காட்டாமல் வருபவர்கள், உங்களின் இடத்தை உபயோகப்படுத்தி பிறரை தூற்றலாம். அதற்கு இடம் கொடுக்க வேண்டாம். என் வீட்டில் நடக்கும் விருந்தில் அனைவருக்கும் இடமுண்டு. அதற்காக என் முகத்தில் குத்துபவருக்கும் இலவச இடம் தரமாட்டேன். முக்கியமாக சாப்பிட வந்திருக்கும் சக விருந்தினரை குத்த நிச்சயம் அனுமதி கிடையாது.

நீங்களும் முகமூடி போட்டு போலி மின்னஞ்சல் கொண்டு எங்காவது கருத்து சொல்லும்போது கவனமாக இருக்கவும். எந்த மாதிரி முகத்திரை போட்டாலும் அது அழுந்து தொங்கும். அது விக்கிலீக்ஸ் ஜூலியன் அசாஞ்சேயாகவே இருந்தாலும் சரி. நிச்சயம் பல நாள் போலி ஒரு நாள் அகப்படுவான்.

தகவலை பகிரும் ஆசையில் எங்கிருந்து இந்தத் தகவல் கிடைத்தது என்பதை போட மறந்து விடுவோம். இன்னாரைப் பற்றி இன்னார் என்னா சொன்ன்னார் என்று தெளிவாக இடஞ்சுட்டி விடுங்கள். இது காப்பிரைட் தகராறுகளில் இருந்து நம்மைக் காப்பாற்றும். நாளைக்கே எவறாவது அவதூறு என்று கிளம்பினாலும், ‘அந்த உடுப்பி பவன் சாம்பார்தான் இங்கே ஊற்றப்பட்டது. இது நான் சொந்தமாக சமைத்தது அல்ல!’ என்று கைகாட்டி தப்பித்து விடலாம்.

ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் யூடியூபிலும் கருத்து வந்து விழுந்தவுடன் வேகமாக எதிர்வினை செய்வது அவசியம். என்னைப் பற்றி பேசுகிறார் என்றால் சும்மா ஒட்டு மட்டும் கேட்டால் போதும். என்னைக் குறித்து தப்பான பிரச்சாரம் நடக்கிறது என்றால் அதை நிச்சயம் தட்டிக் கேட்க வேண்டும். தவறு நம் பக்கம் இருந்தால் மன்னிப்பு கேட்டு விடுங்கள். இல்லாவிட்டால், எதிராளி மன்னிப்பு கேட்கும்வரை விடாதீர்கள்.

சட்டென்று செயல்படுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.

பத்து பேரை கேட்காமல், புத்தகங்களை நாலு மணி நேரம் புரட்டாமல் கீபோர்ட் துணையோடு கூகிள் வேகம் பிடித்திருக்கிறது. கால்பந்தாட்டத்தின் கடைசி நிமிடத்தில் குறுக்கே பாய்ந்து கோல் போடும் விறுவிறுப்பான ஆட்டம் ரசிக்கிறது. திறமைக்கும் இளமைக்கும் அடையாளமாக வேகம் திகழ்கிறது. ’வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்பது போல் நான் ஈயாக இருந்தாலும் இக்கட்டான சூழ்நிலையிலும் உடனடி பாய்ச்சல் அனைவரையும் வசீகரிக்கிறது.

இந்த அபார வேகம் சமூக வலைப்பின்னல் தளங்களில் இயங்க மிகவும் தேவை. இந்த வேகத்தை நிதானம் இழக்காமல் இயக்க அசுர நிதானம் அதைவிட அத்தியாவசியமான தேவை.

டென்னிஸ் வீரரையே எடுத்துக் கொள்வோம். எதிராளி பந்து போட்டவுடன் அவசரப்படுபவரை விட அனுமானித்து ஆடுபவரே வெற்றி அடைகிறார். பந்து எங்கே விழும், எப்படி சுழலும், பந்தை எங்கே இருந்து எப்படி போடுகிறார், என்றெல்லாம் கணித்து ஆடுபவரால் மட்டுமே வேகமான பந்தை சரியாக ஆட முடிகிறது. சொல்லப்போனால் விரைவாக அடிப்பதை விட பந்தைக் குறித்த தகவல்களை சேமிப்பதே முக்கியமாகி விடுகிறது.

ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் யூடியூபிலும் கருத்து வந்து விழுந்தவுடன் வேகமாக எதிர்வினை செய்வது அவசியம். நாம் சார்ந்திருக்கும் நிறுவனம் குறித்த அவதூறையோ, நம்முடைய உயரிய விழுமியத்திரற்கு எதிரான பிரச்சாரத்தையோ தோன்றிய புதிதில் தடுத்தாட்கொள்ளுதல் மிகவும் முக்கியம்.

ஆனால், டென்னிஸ் வீரரின் கணிப்பு போல் இந்தக் விவாதம் எவ்வாறு மாறும், எங்ஙனம் உருப்பெறும் என்று யோசிக்கவும் வேண்டும்.

இதற்கு மூன்று கட்டமாக திட்டம் வகுக்கலாம்.

1) பத்தியம் – சாதாரணமாகச் சொன்னால் கவனமாக இருத்தல்; பத்தியமாக இருப்பது என்றால் பாதுகாப்பாக இருத்தல். தகவல்களையும் நண்பர்களையும் உசாத்துணைகளையும் சேர்த்தல்.

2) செயற்பாங்கு – திரும்ப திரும்ப ஒன்றை செய்வதன் மூலமே நம் வேகம் அதிகரிக்கிறது. ’எனக்கு பத்தாயிரம் வித்தை தெரிந்தவனைக் குறித்து கவலையில்லை; ஆனால், ஒரே வித்தையை பத்தாயிரம் தடவை பயிற்சி செய்தவனை நினைத்துதான் அஞ்சுகிறேன்’ என்று ப்ரூஸ்லீ சொன்ன மாதிரி பயின்ற செயல்முறையில் இருந்து ஒன்றைத் தேர்ந்தெடுத்தல்.

3) கூத்து – நடவடிக்கையை செவ்வனே நிறைவேற்றுவது.

வாரத்திற்கு ஒரு முறை என்பதற்கு பதில் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் என்றோ, ஒரு மணி நேரத்திற்கு ஐந்து நிமிடம் என்றோ தொடர்ந்த கவனிப்பில் இருக்க வேண்டும். கெட்ட பழக்கங்களை நீக்க கடும் பிரயத்தனத்தில் இறங்க வேண்டாம்; சிறப்பான நடவடிக்கைகளை அன்றாட செயல்பாடாக ஆக்கவும். அன்றாட செயல்களை தொடர்பயிற்சியின் மூலம் கூராக்கவும்.

தோட்டக்காரனைப் போல் யோசித்து, தச்சனைப் போல் செயல்படவும்.

அன்றாட செய்திகளுக்கு விமர்சனம், சமூக அவலங்களுக்கு எதிராக ஆமீர் கான் போல் அரட்டை கோஷம் என இவை எல்லாவற்றையும் விட உங்களுக்கு லட்சியமான ஒரு விஷயத்தை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். அது கனடாவின் கரடிகளைக் காப்பாற்றும் பிரச்சாரமாக இருக்கலாம்; போபால் விஷவாயுவிற்கான நஷ்டஈடாக இருக்கலாம். உங்கள் பெயரைச் சொன்னால், அனைவருக்கும் அந்த சிக்கல்தான் நினைவிற்கு வரவேண்டும்.

சிக்கல் இல்லாமல் வலையில் உலா வாருங்கள்.

இறுதியாக புத்தகத்தைப் பயில வேண்டுமானால், படித்த புத்தகத்தை மூட வேண்டும். அதே போல் சமூக நட்புகளை நிஜமாக்க வேண்டுமானால், அவர்களோடு சமூக வலைப்பின்னல் தளம் தாண்டியும் நட்பு பயில வேண்டும். அவ்வாறு தோழமைக்கு உருவமும் உயிரும் இருந்தால்தான் நம்மைக் குறித்து அவர்களுக்கு அக்கறையும் அவர்களைக் குறித்து நமக்கு பொறுப்பும் இயல்பாக உருவாகும்.

குடுகுடுவென்று காரியத்தில் இறங்காதே! காலத்தே பயிர் செய்யாமலும் இராதே!!

தொடர்புள்ள பதிவு: BBC News – Need a job? Learn to impress the robots

அம்பேத்கார் கார்ட்டூன் – வரைபடங்களும் பாடப்புத்தகங்களும்

ஒரு கார்ட்டூன். மாணவர்களுக்கு அந்தக் கால சூழலை எளிதில் உணர்த்துவதற்காக பாடப்புத்தகத்தில் இருக்கிறது. அதற்கு எதிர்ப்பு.

புத்தகத்தை புரட்டியிருப்பார்களா என்பது சந்தேகம். அந்தப் பக்கத்தையாவது பார்த்திருப்பார்களா என்பது அதனினும் சந்தேகம். இவர்களுக்கு இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் கற்றுக் கொடுக்கும் பொறுப்பு யாரைச் சேரும்?

இந்த மாதிரி கவன ஈர்ப்பு கட்சி எம்.எல்.ஏ., எம்பி.க்களுக்கு ஆழமாக ஆராய, முழுவதுமாக வாசித்து கருத்து சொல்ல எப்பொழுது நேரமும் பொறுமையும் தன்னடக்கமும் கிட்டும்?

சரித்திரத்தை சுவாரசியமாக்குவது பிடிக்கவில்லையா? சமகால சினிமா மூலமாக சிந்திக்க வைப்பதை விரும்பவில்லையா? வரலாற்று நூலை வாசித்து யோசிக்குமாறு அமைத்திருப்பது ரசிக்கவில்லையா?

செய்தி

The school textbook cartoon of BR Ambedkar which created a furore in parliament on Friday was sketched by cartoonist Keshav Shankar Pillai in the 1950s while the Constitution was being framed, said a human resource development ministry official.

The cartoon depicts Nehru as asking Ambedkar to speed up the work on the Constitution.

The issue was raised by Dalit activist Thol Thirumavalavan, the Lok Sabha MP who heads the Viduthalai Chiruthaigal Katchi of Tamil Nadu, where protests were staged over the row.

Shankar, as he was popularly called, later founded the publishing house, Children’s Book Trust, in 1957. He made cartoons for newspapers and his magazine, Shankar’s Weekly, started in 1948. The government of India honoured him with Padma Shri in 1956, Padma Bhushan in 1966 and Padma Vibhushan in 1976.

The controversial cartoon was probably first published in 1948 and has been a part of NCERT’s (National Council Of Educational Research And Training) Class XI textbook in Tamil Nadu since 2006. The cartoon is credited to Children’s Book Trust.

It shows Ambedkar, a Dalit leader and creator of the Indian Constitution, seated on a snail with ‘Constitution’ written on it and India’s first prime minister, Jawaharlal Nehru, whipping the snail. In the background is a crowd.

காந்தியும் பாரத மாதவும் – ஓம் – இந்துத்வா கோஷம்

இந்தக் கார்ட்டூன் அடுத்து கண்டனத்திற்கு உள்ளாகலாம்

Pictures like this reveal how Mahatma Gandhi was perceived by people and represented in popular prints Within the tree of nationalism, Mahatma Gandhi appears as the looming central figure surrounded by small images of other leaders and sages.

அரசியல் பாடம்

பாடத்தை எப்படி விளக்குகிறார்கள்?

எவ்வாறு எளிமையாக்குகிறார்கள்?

செய்தித்தாள் வாசிக்காதே

ஆர் கே லஷ்மண் கார்ட்டூன்கள் இடம் பிடித்திருக்கின்றன:

கருத்துப்படம்

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை நக்கல் அடிக்கிறார்கள் எனலாம்.

படேல்

நேருவின் பேரன்களும் பேத்திகளும் அரியணையில் அம்ர்ந்திருப்பதால், சர்தார் வல்லபாய் படேல் நக்கலடிக்கப் படுவதை கண்டு கொள்ளவில்லை என்று பாரதீய ஜனதா கட்சி சொல்ல வேண்டும்.

இந்திரா காந்தி

போராட்டமும் வளர்ச்சியும் – முரண்

’அமெரிக்கா’ உதயகுமார் கூடங்குளத்தில் நடத்தும் வியாபாரப் போராட்டத்தை குறிப்பால் உணர்த்தி இருப்பதால், அந்த கேலி சித்திரத்தையும் நீக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டம்:

இந்தி எதிர்ப்பு கிளர்ச்சி – இராஜாஜி

கவிதை

Namdeo Dhasal

Turning their backs to the sun, they journeyed through centuries.
Now, now we must refuse to be pilgrims of darkness.
That one, our father, carrying, carrying the darkness is now bent;
Now, now we must lift the burden from his back.
Our blood was spilled for this glorious city
And what we got was the right to eat stones
Now, now we must explode the building that kisses the sky!
After a thousand years we were blessed with sunflower giving fakir;
Now, now, we must like sunflowers turn our faces to the sun.

English translation by Jayant Karve and Eleanor Zelliot of Namdeo Dhasal’s Marathi poem in Golpitha.

கவுண்டமணி – செந்தில்

நகைச்சுவை காமெடி ஜோக்குகள் இடம் பெற்றிருக்கின்றன

A Communist Party bureaucrat drives down from Moscow to a collective farm to register a potato harvest.
“Comrade farmer, how has the harvest been this year?” the official asks.

“Oh, by the grace of God, we had mountains of potatoes,” answers the farmer.

“But there is no God,” counters the official.

“Huh”, says the farmer, “And there are no mountains of potatoes either.”

ஈழம் & இலங்கைப் பிரச்சினை

அடுத்ததாக தொல் திருமா போன்ற தமிழின உணர்வுத்தூண்டிகள் விடுதலைப் புலிகள் குறித்து தி ஹிந்து கார்ட்டூன் எடுத்துக் கொள்வார்கள் என நம்பலாம்

காங்கிரசு அல்லாத பிரதம மந்திரிகள்

ஜனதா கட்சியை தாழ்த்துகிறார்கள் என முழங்க வேண்டும். ‘நிலையான ஆட்சி’ தாரக மந்திரத்தை ஓதும் சாத்தான் படம்!

பத்திரிகை முகப்பு

ஏன் இல்லுஸ்டிரேடட் வீக்லி, சண்டே, சண்டே இந்தியன், தி வீக், போன்றவை இடம் பிடிக்க வில்லை?

அமுல்

விளம்பரம் போடுகிறார்கள். மற்ற பாலாடை கம்பெனிகளும் பட்டர் நிறுவனங்களும் போர்க்கொடி தூக்கலாம்.

ஏன் கார்ட்டூன் தேவை?

சில பகீர் கார்ட்டூன்கள் முடிந்த பின் சிந்தனையைத் தூண்டும் கேள்விகளும் கீழ்க்காணும் வினாக்களும் இருக்கின்றன

1. Suppose you are the Secretary of State in the US (their equivalent of our Minister of External Affairs). How would you react in a press conference to these cartoons?

2. Drawn by well known Indian cartoonist Kutty, these two cartoons depict an Indian view of the Cold War.

3. If you were to draw this, who would you show as waiting in the wings?

4. Why does the cartoonist use the image of the ship Titanic to represent EU?

5. The two cartoons, one from India and the other from Pakistan, interpret the role of two key players who are also interested in the region. Do you notice any commonality between their perspectives?

6. How should the world address issues shown here?

7. Do you agree with this perspective?

இட ஒதுக்கீடு

சமூக நீதியை எப்படி சுருக்கமாக சொல்வது?

சமமாக மக்களை நடத்த வேண்டியதை எவ்வாறு மனதில் நிலைநிறுத்துவது?

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களுக்காக பாபாசாஹேப் அம்பேத்கார் மேற்கோள்:

விவாத சங்கதி: பேசுவதற்கான சமாசாரங்கள்

விவாதிப்பதற்கான விஷயங்கள் உலகெங்கும் எக்கச்சக்கம். ஒரு பட்டியல்.

  1. அன்னா அசாரே: தேர்தல் சீரமைப்பு – எவர் போட்டியிடலாம்? எவ்வளவு செலவழிக்கலாம்?
  2. ஆப்கானிஸ்தான் போர்
  3. ஆர்க்டிக் பிரதேசத்தில் இருந்து எண்ணெய் எடுக்கலாமா? சவூதி கிணறுகளே போதுமானதா?
  4. கார்பன் குறைவாக கக்கும் நாடுகள் கரிமம் அதிகம் உபயோகிப்பவர்களிடமிருந்து பணம் மட்டும் பெற்றுக் கொள்ளலாமா? உலகமே உமிழ்வுகளை ஒட்டுமொத்தமாக குறைக்கவேண்டுமா?
  5. எச்.ஐ.வி (அ) எயிட்ஸ்
  6. எல்லையில் சுவரெழுப்பி பாதுகாப்பதா? உலகமே இணையத்தாலும் பொருளாதாரத்தாலும் சுருங்கிய நிலையில் திறந்தவெளியாக குடிபுகலை அனுமதிப்பதா?
  7. வங்கிகளை திவாலாக்குவதா? மீட்டெடுப்பதா?
  8. வலைப்பதிவுகள்
  9. லட்சாதிபதிகள் கோடீஸ்வரர்கள் ஆவது: பெரு நிறுவனங்களில் முதன்மையான்வர்களின் சம்பளம் பன்மடங்கு அதிகரிப்பது
  10. துப்பாக்கி தோட்டா கட்டுப்படுத்தல்: நுகர்வோர் சந்தையாக அனைவரும் பாதுகாப்புக்கு வைத்திருக்கலாமா? காவல்துறைக்கு மட்டுமே சொந்தமா?
  11. இஸ்ரேலும் இரானும் பாலஸ்தீனமும்
  12. கல்வியறிவு: வாழ்க்கைக்குத் தேவையான படிப்பும் வருவாய்க்கும் உபயோகமான கல்லூரி வாழ்க்கையும்
  13. உடல்நல காப்பீடு: எகிறும் மருத்துவ செலவும் ஏறும் வயோதிகர் மக்கள்தொகையும்
  14. வட கொரியா: போக்கிரி நாடுகளின் கையில் இராணுவ பலம்
  15. அணு ஆயுதம்: மாற்று சக்தி
  16. உடல் பருமன்: மாறும் உணவு கலாச்சாரம்
  17. கடற்கொள்ளையர்: சோமாலியாவை மேற்கத்திய நாடுகள் ஊக்குவிக்கிறதா?
  18. கலவிக் கல்வி: இந்திய நாகரிகம் காமசூத்ராவை கோவிலிலேயே கொண்டிருந்தாலும், வைய விரிவு வலையெங்கும் மிக அதிகமான பலான தேடல் கொண்டிருப்பதன் சூட்சுமம்
  19. அறிவியல் ஆராய்ச்சி: எவாஞ்சலிகல் கிறித்துவத்தின் கட்டுப்பெட்டித் தன்மைகளை எவ்வாறு தடுத்து, ஸ்டெம் செல் போன்ற துறைகளில் மருத்துவத்தை முன்னேற்றலாம்?
  20. தீவிரவாதம்: போரிட்டு அடக்க முடியுமா?
  21. உலக வெம்மையாக்கம்
  22. பள்ளிக்கூட மாணவர் பிரச்சினைகள்: சோசியல் மீடியா அச்சுற்றுத்தல்
  23. மாற்று எரிசக்தி
  24. பொக்கீடுகள்: வரிச்சுமை, பட்ஜெட்
  25. அரிதாகிப் போன ஜீவராசிகள் குறித்து அஞ்ச வேண்டுமா? டைனோசார் போல் போனால் போட்டுமா?

நீயா? நானா 🙂

பாட்டி – கோணங்கித்துவம்

முந்தைய ட்வீட்ஸ்: பராக்கபுரி – தேஸித்துவம்

வலைப்பதிவு – அட்டென்ஷத்துவம்

முந்தைய ட்வீட்ஸ் தொகுப்பு: கோடிங் – நிரலித்துவம்