Tag Archives: கணினி

ஏன் ஐ.பி.எம். வாட்ஸன் ஹெல்த் பின்னடைவு பெற்றுத் தோற்றுப் போனது?

வாட்சன் ஹெல்த் நிறுவனத்தை ஐபிஎம் விற்கப்போகிறது. ஏன் இது தோற்றுப் போனது? மக்கள் தங்கள் செயற்கை நுண்ணறிவு (ஆர்டிஃபிஷியல் இண்டெல்லிஜென்ஸ்) கனவுகளிலிருந்து எழுந்திருக்க வேண்டுமா? இந்தத் தோல்வியிலிருந்து என்ன பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம்?

ஐபிஎம் நிறுவனம் தன்னுடைய சிகிச்சை (ஹெல்கேர்) பிரிவைக் கைவிட்டுவிட்டது. இவர்கள் இரு முக்கிய சந்தைகளில் செயல்பட எத்தனித்தார்கள். முதலாவது செயற்கை நுண்ணறிவு நோயறிதல் ஆகும். இரண்டாவது சிகிச்சை ஆராய்ச்சி மற்றும் அந்த சிகிச்சைக்கான மருந்து தயாரிப்பு மேம்பாடு ஆகும். பத்து ஆண்டுகளாக வாட்ஸன் பிரிவு பணம் சம்பாதிக்கவில்லை. இப்போது, இறுதியாக விற்பதற்காக ஓராண்டிற்கும் மேலாக சந்தையில் உள்ளது. வாட்சன் ஹெல்த் யூனிட் என்பது ஐ.பி.எம் நோயறிதல் மற்றும் சிகிச்சை உரையாடல் பெட்டிகளின் (சாட் செய்யும் ரோபாட்) பகுத்தறிவு அமைப்பாகும். மருத்துவமனைக்கு வரும் வெளிநோயாளிகளுக்கும், வாகன காப்பீட்டு நிறுவனங்களுக்கும் மருந்து நிறுவனங்களுக்கும் தரவு தகவல்களை நிர்வகிப்பதிலும் நோயறிதலுக்கு உதவவும் முக்கியமாகும்.

மனிதரையும் அந்த மனித உடலின் வினோதங்களையும் உடல்நலத்தில் உள்ள இடியாப்ப சிக்கல்களையும் புரியாமல் கால்விட்டதால் – இந்தத் தோல்வி என்று இந்தத் தோல்வியை எளிமையாகச் சொல்ல நினைப்பவர்கள் எளிமையாக்கலாம். ஆனால், இந்த வீழ்ச்சிக்கான காரணங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு எங்கு செல்லுபடியாகும், எப்படி உபயோகிக்கலாம், எவ்வாறு பயன்படும் என்பதைத் தெரிந்து கொண்டு, அங்கு அந்த நுட்பத்தை பிரயோகிப்போம்.

ஐபிஎம் ஹெல்த் துவங்கியபோது இரு இலட்சியங்களை முன்வைத்தது:

  1. புற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் வைத்தியம்
  2. தீராத வியாதிகளுக்கு மருந்து கண்டுபிடித்துக் கொடுப்பது.

வாட்ஸன் ஹெல்த்தின் தோல்விக்கு இந்த மாதிரி அகலக்கால் லட்சியங்களே காரணம் என்று வாதிடுவோர் ஒரு தரப்பு இருக்கிறார்கள். ஏற்கனவே இந்தத் துறையில் பல்லாண்டு காலம் பழம் தின்று கொட்டைப் போட்ட ஜாம்பவான்கள் இருக்கிறார்கள். அவர்களுடன் கை கோர்த்துக் கொண்டிருக்க வேண்டும். அவர்களின் முந்தைய சறுக்கல்களை அடையாளம் கண்டுகொண்டு, அதற்கு பதிலகளைக் கண்டுபிடித்திருக்க வேண்டும். கடந்த பத்தாண்டுகளில் நிறைய முன்னேற்றங்களை ஐ.பி.எம். ஹெல்த் சாதித்திருக்கிறது. எனினும், பொன் முட்டையிடும் வாத்து ஒன்றைக் கூடக் கொணரவில்லை. ஆயிரம் வாத்துகள் சாகலாம்; அல்லது சாதாரண முட்டைகளைப் பொரிக்கலாம்; ஆனால், ஒரேயொரு பொன்முட்டை வாத்தாவது இருந்தால்தான் இந்த மாதிரி நிறுவனங்கள் செழிக்கும்.

என்னுடைய வேலையில் வருடந்தோறும் அடையவேண்டிய இலக்குகள் இருக்கும். அது தவிர மாதா மாதம், வாரா வாரம் இலக்குகள் வைத்துக் கொள்வோம். ஐ.பி.எம். ஹெல்த் மாதிரி அல்சைமருக்கு ஒரு மாத்திரை, புற்றுநோய்க்கு இன்னொரு மாத்திரை என்று பெரிய இலக்குகள் கிடையாது. புற்றுநோய் ஆராய்ச்சிக்கு உதவுவோம்; புற்றுநோய் எவ்வாறு உருவாகிறது என ஆராய்வோருக்கு கைகொடுப்போம் என்று சின்னஞ்சிறிய இலக்குகள் ஆக வைத்துக் கொள்வோம். ஆனால், இந்த மாதிரி குட்டிக் குட்டியான சிகரங்களை மட்டுமே மனத்தில் வைத்துக் கொண்டால் இமாலய எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறி உலகத்திற்கே உச்சாணிக் கொம்பாக முடியாது.

ஐ.பி.எம். சியீஓ ஜின்னி (வர்ஜீனியா) ரொமெட்டி (IBM CEO Virginia Rometty) இதைத் தெளிவாகவே சொன்னார். இது முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படுவது போல். மூன் ஷாட் – பூமியில் இருந்து கொண்டு ஆகாசத்தில் இருக்கும் நட்சத்திரத்தைக் குறி வைத்து கில்லி அடிப்பது போல்.

ஏன்?

செயற்கை அறிவைக் கொண்டு வெறுமனே மருத்துவ மொழியாக்கங்களையும் மருந்து ஆராய்ச்சிகளையும் எல்லோருக்கும் எளிதில் கொண்டு போவது எல்லோரும் செய்யக் கூடிய வித்தை. அது எங்களுக்குப் போதுமானது அல்ல. அதன் மேற்சென்று, நோயாளிகளுக்கு என்ன நோய் வந்திருக்கும், அவருக்கு எந்த மருந்து எப்பொழுது, எப்படி கொடுக்கவேண்டும்; என்று முழுமையாகக் குணப்படுத்துவதும், அந்த நோயே மீண்டும் ஜென்ம ஜென்மத்திற்கும் தலையெடுக்காமல், அடியோடு அழிப்பது – எங்கள் குறிக்கோள் என்கிறார்.

இது அபாரமான முயற்சி. குறிப்பிடத்தக்கக் குறிக்கோள். எங்கே சறுக்கினார்கள்? பிற்காலத்தில் இதே இலட்சியத்தை கையில் எடுக்கும் செயற்கை நுண்ணறிவு ஆய்வாளர்கள் எதை கவனத்தில் கொள்ள வேண்டும்?

நான்கு படிப்பினைகள்

1. சந்தையாக்கம் முக்கியம்தான்; ஆனால், அறிவியல் அஸ்திவாரம் அதைவிட வெகு முக்கியம்

2011ல் ஜெப்பர்டி என்னும் நிகழ்ச்சியில் ஐ.பி.எம். வாட்ஸன் பங்கெடுக்கிறது. அந்தப் போட்டியில் தில்லாலங்கடியான இருவரை வீழ்த்தி வெற்றிவாகை சூடுகிறது. அது ஒரு பொது அறிவுப் போட்டி. விஸ்வநாதன் ஆனந்த் எத்தனை வாரங்கள் கிராண்ட்மாஸ்டராக விளங்கினார், எத்தனை சாமி படங்களை ஹரி எடுத்தார் போன்ற கேள்விகள் கேட்கப்படும். அதில் ஞாபக சக்தியும் கொஞ்சம் சூட்சும புத்தியும் இருந்தால் போதும்.

அதே மாதிரி மருத்துவத் துறையிலும் நுழைந்து டாக்டர்களையும் ஓரங்கட்டுவோம் என்று ஐ.பி.எம். விளம்பரம் செய்கிறார்கள். இனிமேல் பெரிய மருத்துவமனைகளும் தொடர் சோதனைகளும் தேவையே இல்லை. வீட்டுக்கொரு எந்திரன் கணினி. அந்த வாட்சன் கணினியிடம் உங்கள் ரத்தத்தையும் சரித்திரத்தையும் கொடுத்தால் போதும். எல்லாவற்றையும் கணித்து ஆருடம் சொல்வது போல் பூரண நலனையும் அலசி ஆராயும். என்ன சிக்கல், எப்படி தீர்வு என்று சொல்லிவிடும்.

இந்த மாதிரி விளம்பரம் செய்யும்போது நோய் சிகிச்சை ஆராய்ச்சியும் ஆரம்பமாகவில்லை. மருத்துவர்களுடனுடம் கலந்தாலோசிக்கவில்லை. சிகிச்சை மையங்களுடனும் தொடர்பில் இல்லை. வெறுமனே ஒரு க்விஸ் போட்டியில் வென்றதை வைத்து காதில் பூ சுற்ற ஆரம்பிக்கிறார்கள். சட்டியில் ஏதாவது இருந்தால்தானே அகப்பையில் வரும்?

புற்றுநோய் ஆராய்ச்சியைப் பொருத்தவரை வாட்சன் திறன்படவே செயல்பட்டது. ஆனால், புற்றுநோய் என்பது ஒரு கடல். மூளை, மார்பகம் என்று ஆயிரக்கணக்கான நோய் அறிகுறிகளும் சிகிச்சை மாறுபாடுகளும் இருக்கின்றன. மார்பகப் புற்றுநோய் என்பது எளிமையாக சுருக்கினால் கூட, அதில் கூட மரபியல் மாற்றம் பொருத்து பல்வேறு காரணிகள் தோற்றுவாயாக உள்ளன. (மேலும்: IBM’s Watson supercomputer recommended ‘unsafe and incorrect’ cancer treatments, internal documents show)

2016ல் டெக்சாஸ் பல்கலைக்கழகம் இந்தத் தோல்விக்கான காரணங்களை முழுமையாக ஆராய்ந்து ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது (The University of Texas System Administration: Special Review of Procurement Procedures Related to the M.D. Anderson Cancer Center Oncology Expert Advisor Project). அறுபத்தி இரண்டு மில்லியன் டாலர் (கிட்டத்தட்ட 450 கோடி ரூபாய்) செல்வழித்த பின் அந்தத் திட்டத்தைக் கைவிட்டு இருக்கிறார்கள். எந்திர தற்கற்றலுக்கும் (மெஷின் லெர்னிங்) மருத்துவ நலனுக்கும் சம்பந்தமேயில்லாமல் இருந்தது முதல் பிரச்சினை. மருத்துவர்களின் தேவைகளுக்கும் எந்திரம் சொல்லும் விஷயங்களுக்கும் சம்பந்தமேயில்லாமல் இருந்தது இரண்டாவது பிரச்சினை.

அதாவது புற்றுநோய் நோயாளிகளின் தகவல்களை வாட்சன் உள்ளிழுத்துக் கொண்டது. இதுவரை கண்டுபிடித்த, ஆராய்வு முடிவுகளை உள்ளிழுத்துக் கொண்டது. இந்த இரண்டையும் வைத்து நல்லதொரு வழிமுறையைச் சொல்லும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால், நோயாளியின் வயது, அவரின் சொந்த ஊர், இனம், மொழி, அவருடைய நோய்க்கட்டியின் அளவு, இதுவரை எந்த சிகிச்சைகளைக் கையாண்டிருக்கிறார்கள், அதன் பக்கவிளைவுகள் – என எல்லா விஷயத்தையும் கருத்தில் கொள்ளவில்லை வாட்சன். ஒரு தடவை ஒரு டாக்டர் பிழையைச் சொல்கிறார்; பல டாக்டர்கள் எத்தனை தடவை அதே கணினியிடம் மன்றாடுவார்கள?

பயன்படுத்துவதை விட்டுவிட்டனர்.

செயற்கை நுண்ணறிவும் கணினி செயலிகளும் சட்டுபுட்டென்று உங்களின் திடம், மணம், குணம், நிறத்திற்கேற்ப மாறாது. அதற்கென்று உள்ள விதிமுறைகளை அது பின்பற்றும், இன்று நீங்கள் ஒரு மாற்றத்தைக் கேட்டீர்கள் என்றால், அதை செய்து முடிக்க எனக்கு (ஒரு நிறுவனத்திற்கு) ஆறேழு வாரங்கள் பிடிக்கும். அதன் பின் களத்தில் சோதனை. அதை செய்து முடிக்க ஒன்னொரு ஆறேழு மாதங்கள். அதன் பின் அந்த டாக்டர் இன்னொரு பிழையைக் கண்டுபிடிப்பார். அதை கணினி நிரலியில் சரி செய்து, சோதித்து முடிக்க இன்னொரு ஆறு மாதம். அதற்குள் வைத்தியக்காரரை தேடி வந்தவர்கள் எல்லோரும் பரலோகம் போய் சேர்ந்திருப்பார்கள்.

எனவே, முதலில் சரியான நிரலியை எழுதி முடியுங்கள். ஓரளவாவது ஒழுங்காக வேலை செய்யட்டும். அதன் பின் அதை விற்கும் வேலையைத் துவங்குங்கள்.

உங்களுக்கு அத்யந்தமான சிலரிடம் உங்களின் செயலியைக் கொடுங்கள். பரிசோதனையில் விடுங்கள். அவர்களின் மறுமொழியைக் காதுகொடுத்துக் கேளுங்கள். அவர்கள் சொல்வதை நிறைவேற்றுங்கள்.

எடுத்தோமா… கவிழ்த்தோமா… என்றில்லாமல் களத்தில் கால் வைப்பதற்கும் முன் புடமிட்ட பொன் ஆக்குங்கள்

2. ஒரு சிக்கலைத் தேர்ந்தெடுங்கள்; சரியான சிக்கலாகத் தேர்ந்தெடுங்கள்

அர்ச்சுனர் கதை தெரிந்திருக்கும். எதையும் நீங்கள் எவ்வளவு கவனமாக பார்க்கிறீர்கள் என்பதையும், எவ்வளவு தூரம் உங்கள் கவனத்தை தொடர்ந்து அதிலேயே தக்க வைத்துக் கொள்ள முடிகிறது என்பதையும் பொறுத்திருக்கிறது.

துரோணர் பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களின் வில்வித்தை திறனை பரிசோதித்து பார்க்க விரும்பினார். எனவே ஒரு மரத்தின் உச்சியில் மரத்தாலான கிளி பொம்மையை தொங்கவிட்டார்.

அனைத்து மாணவர்களையும் பார்த்து, “இளவரசர்களே, ஒரு வீரனுக்கு தேவையான பல்வேறு வித்தைகளை நீங்கள் கற்றுக்கொண்டு விட்டீர்கள். இப்போது பரீட்ச்சைக்கான நேரம் வந்து விட்டது. உங்கள் திறன்களை எனக்கு காண்பிக்கும் நேரம் வந்து விட்டது. இப்போது, வில்வித்தையில் உங்களது திறனை எனக்கு நீங்கள் காட்ட வேண்டும். அதோ, அந்த மரத்தின் மீது கண்களுக்கு மட்டும் வர்ணம் பூசப்பட்ட ஒரு மர பறவையை வைத்துள்ளேன். அதை குறி வைத்து, அதன் கண்ணை தாக்க வேண்டும்” என கூறினார்.

முதலில் அழைக்கப்பட்டது யுதிஷ்டர். பறவையை குறி வைக்கும் படி அவனிடம் துரோணாச்சாரியார் கூறினார். ஆனால் அம்பை விடுவதற்கு முன் தன் கேள்விக்கு பதிலளிக்க கூறினார். யுதிஷ்டர் தயாரான போது, “யுதிஷ்டிரா, உன் கண்களுக்கு என்ன தெரிகிறது என கூற முடியுமா”, என துரோணாச்சாரியா கேட்டார். “எனக்கு பறவை, மரம், மரத்தில் உள்ள பழங்கள் மற்றும் இன்னும் அதிகமான பறவைகள் தெரிகிறது.” என யுதிஷ்டிரா துரோணாச்சாரியாரிடம் கூறினான். வில்லையும் அம்பையும் வைத்து விட்டு போக சொன்னார். ஆச்சரியமடைந்த யுதிஷ்டர் குருவின் சொல்லை மதித்து அவர் சொன்னபடி செய்தான்.

அடுத்தது துரியோதனின் முறை. அவனிடமும் அதே கேள்வியை கேட்டார். அதற்கு அவனோ, “குருதேவா, எனக்கு பறவை, மரம், இலைகள், பழங்கள், மற்றொரு பறவை தெரிகிறது” என கூறினான். ஆனால் அவன் வாக்கியத்தை அவன் முடிப்பதற்குள்ளேயே, “நீ போகலாம்” என துரோணாச்சாரியா கூறினார். கோபமடைந்த துரியோதனன் அம்பையும் வில்லையும் தரையில் தூக்கிப்போட்டு விட்டு சென்றான்.

அடுத்தது பீமனின் முறை. மறுபடியும் அவனிடம் அதே கேள்வியை கேட்டார் துரோணாச்சாரியார். “குருதேவா, எனக்கும் பறவை, மரம், பழங்கள்…” என அவன் கூறிக்கொண்டிருக்கும் போதே அவனை தடுத்து நிறுத்தி ஓரமாக நிறக் சொன்னார்.

அடுத்தது இரட்டையர்களின் முறை. அவர்களுக்கும் அதே கேள்வி கேட்கப்பட்ட போது, “எனக்கு மக்கள், மரங்கள் மற்றும் பறவை தெரிகிறது” என நகுலன் கூறினான். சகாதேவனோ “எனக்கு பறவை, பழங்கள் மற்றும் மரம் தெரிகிறது” என கூறினான்.

கடைசியாக வந்தது அர்ஜுனன். அர்ஜுனன் தயாரான போது “அர்ஜுனா, உனக்கு என்ன தெரிகிறது?” என அவனிடம் துரோணாச்சாரியார் கேட்டார். “குருதேவா, எனக்கு பறவையின் கண்கள் மட்டுமே தெரிகிறது. வேறு எதுவும் தெரியவில்லை.” என கூறினார். “அம்பை விடு!” என புன்னகையுடன் துரோணாச்சாரியார் கூறினார். குறியைப் பார்த்த அர்ஜுனன் அம்பை செலுத்தினான்.

மற்ற இளவரசர்களிடம் திரும்பிய துரோணாச்சாரியா, “இந்த சோதனையின் நோக்கம் உங்களுக்கு புரிந்ததா? ஒன்றை குறி வைக்கும் போது, குறியை தவிர நீங்கள் வேறு எதையும் கவனிக்க கூடாது. தீவிரமான கவனம் இருந்தால் மட்டுமே உங்களால் குறியை தவற விட முடியாது. உங்களுக்கு மரம், இலைகள் மற்றும் மக்கள் மட்டுமே தெரிந்தனர். அதற்கு காரணம் உங்களுக்கு கொடுத்த வேலையில் உங்களுக்கு கவனம் இல்லை. அர்ஜுனன் மட்டுமே சரியாக கவனம் செலுத்தினான். இப்போது புரிகிறதா, அர்ஜுனன் ஏன் சிறந்த மாணவன் என்று?” என கேட்டார்.

இவ்வளவு நீட்டி முழக்கி இந்தக் கதையை மீண்டும் சொல்வது எதற்காக?

வாட்சன் எல்லாவற்றிலும் கால் வைத்தார். மரபணுத்தொகுதியியல் ஆராய்ச்சி; நம் மரபணுத் தொகுதி எவ்வாறு வகுக்கப்பட்டிருக்கிறது என்று பட்டியல் போட்டு வரிசைமுறைப்படுத்தல் செய்தல் எல்லாம் ஒரு பக்கம் சென்று கொண்டிருந்தது.

இன்னொரு பக்கம் சேமநல நிறுவனங்களில் மோசடியை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதற்கான நிரலியும் விற்கப்பட்டது. காப்பீடு தருவோரை ஏமாற்றும் பல காரியங்கள் நடக்கும். போலியாக உடம்பு சரியில்லாதது போல் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, அந்த சிகிச்சைக்கு ஆயிரக்கணக்கில் பணம் செல்வழித்ததாகக் காண்பிக்கும் மருத்துவமனைகளும் மருத்துவர்களும் அதிகம். அவர்களை அடையாளம் கண்டு, காட்டிக் கொடுக்கும் செயலிகளையும் ஐபிஎம் கணினி செயற்கை நுண்ணறிவு கொண்டு செயல்பாட்டில் விட்டு வருகிறது.

இதெல்லாம் உள்ளே, நிஜமாகவே பணம் ஈட்டும் செயற்பாடுகள். ஆனால், வெளியில், பொது அரங்கில் இன்னொரு முகத்தை ஐ.பி.எம் வாட்ஸன் காண்பித்து வந்தார். அது புற்று நோய் சிகிச்சை.

புற்று நோய் சிகிச்சையில் கூட குறிப்பிட்ட இடங்களில் செயற்கை நுண்ணறிவு கைகொடுத்து, மருத்துவர்களுடன் கை கோர்க்கும் விஷயங்கள் இருக்கின்றன. உதாரணமாக ஆயிரக்கணக்கான முலை ஊடுகதிர்ப்படம் சோதனைப்படங்களும் எக்ஸ்ரேக்களும் குவிந்திருக்கும். அதில் இருந்து தனித்துத் தெரிபவர்களை, அபாயத்தில் சிக்கியிருக்கக் கூடியவர்களை மட்டும் கண்டுபிடிக்கலாம். அவர்களை மட்டும் அடுத்த கட்ட சோதனைகளுக்கு பரிந்துரைக்கலாம்.

இதையும் கூட தனியாக விற்றிருக்கலாம். அதுவும் வாட்ஸன் செய்யவில்லை. மருத்துவர்களுக்கும் அவர்களின் உதவியாளர்களுக்கும் ஒவ்வொருத்தராக சோதிப்பது, ஒவ்வொருவரின் சோதனைக்குப் பின்பும் செவியுணரா ஒலி சோதனையா அல்லது அதீத ஒலிப்படப் பரிசோதனையா என்று முடிவெடுப்பது – என்று இது மீண்டும் மீண்டும் செய்யவேண்டிய அலுப்பூட்டும் வேலை. இதை மட்டும் வாட்சன் ஹெல்த் பரிபூரணமாக செய்திருந்தால் கூட வெற்றி பெற்றிருக்கும்.

ஆனால், வாட்ஸன் ஹெல்த் அவ்வாறு செயல்படவில்லை. என்ன நோயானாலும் எங்கிட்ட வாங்க… அத்தனையும் எனக்குத் தெரியும் என்று முழங்கிக் கோட்டை விட்டது.

ஒரு வில்! ஒரு சொல்!! ஒரு இல்!!!

3. தரவுகளை சேகரிப்பதும் சேமித்த விஷயங்களை ஒருங்கிணைப்பதும் அத்தனை சுளுவான காரியமல்ல

உங்கள் நிறுவனம் எப்படி வேகமாக வளர முடியும்? புதிய உத்திகள், புதிய வாடிக்கையாளர்கள், புதிய சந்தைகள் – எல்லாவற்றிலும் டக் டக்கென்று கால்வைப்பது எப்படி?

உங்களின் போட்டியாளர்களை, மற்ற நிறுவனங்களை லபக் லபக்கென்று சாப்பிடுவதன் மூலம் இதெல்லாம் சாத்தியம். ஐபிஎம் ஹெல்த்தும் இதைச் செய்கிறது – ட்ரூவென், எக்ஸ்ப்ளோரிஸ், ஃபைடெல், மெர்ஜ் ஹெல்த்கேர் போன்ற நிறுவனங்களை விழுங்குகிறது.

விலை கொடுத்து வாங்குவது எளிது. வாங்கிய பொருளை கட்டி மேய்ப்பதும் அதை உங்களின் பிற சந்தையாக்கப்பட்ட நிரலிகளுடன் இணைப்பதும் சிரமம்.

புதியதாக ஒரு நிறுவனத்தை வாங்கிப் போடுவது என்பதை பல்வேறு காரணங்களுக்காகச் செய்வோம். பல சமயம் அந்த நிறுவனத்தை மொத்தமாக சந்தையில் இருந்து நீக்குவதற்காக மட்டுமே இதைச் செய்வோம். ஆனால், ஐ.பி.எம். ஹெல்த் – அந்தக் காரணங்களுக்காக இந்த நான்கு நிறுவனங்களை வாங்கவில்லை. அந்த நிறுவனங்களின் மென்பொருள்கள் நன்றாக செயல்பட்டது. அந்த நிறுவனங்களின் தரவு சேமிப்பு ஒன்றையொன்று மாறுபட்டு இருந்தது. இந்த நான்கு நிறுவனங்களையும் ஒருங்கிணைத்தால் ஒரு புதிரின் நான்கு பாகங்களை ஒருங்கிணைப்பது போல் சிறப்பாக கைகோர்க்கும். எனினும், இந்த மாதிரி புதிரை சட்டென்று விடுவிப்பது எளிதேயல்ல.

ஒரு நிறுவனம் விண்டொஸ் இயங்குதளம் கொண்டிருக்கும். இன்னொருவர் எல்லாவற்றையும் அமேசான் கிளவுட் கொண்டு சேகரிப்பார். ஒரு நிறுவனத்தின் சந்தாதாரர் எந்தத் தகவலையும் கொடுக்கக் கூடாது / பகிரக் கூடாது என்று மிரட்டி வழக்கு தொடுப்பார். இதற்கு அமெரிக்க சட்டமான ஹிப்பா (HIPAA) கை கொடுக்கும். அனைத்தையும் ஒரு இடத்தில், ஒரே மூலமாக ஆக்குவது என்பது வருடக்கணக்கான வேலை.

மெர்ஜ் ஹெல்கேர் நிறுவனம் படங்களையும் இயல்நிலை வரைவுகளையும் கொணர்ந்தது. காப்பீட்டு நிறுவனங்களின் விவரங்களையும் காப்புறுதி இழப்பீட்டுக் கோருரிமைகளையும் ட்ரூவென் கொணர்ந்தது. பிணி சார்ந்த தகவல்களையும் முந்தைய பிணியாளர்களின் சரித்திரங்களையும் ஃபைடெல் நிறுவனமும் எக்ஸ்ப்ளோரிஸ் நிறுவனமும் கொணர்ந்தது.

ஒன்று ஏ.டபிள்யூ.எஸ். கிள்வுட் எஸ்3 (AWS S3). இன்னொன்று என்.எஃப்.எஸ். எனப்படும் Network File System. ஒவ்வொன்றும் ஒரு இடத்தில் இருக்கும். ஒவ்வொன்றும் விதவிதமாக சேமிக்கப்பட்டிருக்கும். ஒன்றில் பிணியின் பெயர் ; மற்றொன்றில் நோய்ப்பெயர் எனப்பட்டிருக்கும்; இன்னொன்றில் நோயின் பெயர்; இன்னொன்றில் வெறும் பெயர் என நாமகரணம் சூடப்பட்டிருக்கும்.

வாங்கிப்போடுவது எல்லோராலும் முடியும். ஒரே கீதமாக, ஒரே நாதமாக ஒலிக்கச் செய்வது ஒரு சிலரால மட்டுமே முடியும்.

வாங்கி மட்டும் போடக்கூடாது. வாங்குவதற்கு முன் ஆயிரம் முறை யோசிக்க வேண்டும்; அலச வேண்டும்; திட்டமிட்டு ஒருங்கிணைக்க வேண்டும்.

4. ஒவ்வொரு மாதமும் லாபம் காட்டுவது என்பது சாத்தியமேயல்ல; இது தொலைதூரப் பயணம்

ஐ.பி.எம். போன்ற நிறுவங்கள் பங்குச் சந்தையில் இயங்குகின்றன. வால் ஸ்ட்ரீட்டுக்கு ஒரேயொரு கேள்விதான் – நேற்றைய தினத்தில் எவ்வளவு லாபம் சம்பாதித்தாய்?

ஒரு வருடத்திற்கு நான்கு காலாண்டுகள். அந்தந்தக் காலாண்டில் எவ்வளவு வரவு? எவ்வளவு செலவு? எத்தனை புதிய நுகர்வோர்? எம்புட்டு வருமானம்? சென்ற காலாண்டோடு ஒப்பிட்டால், இந்தக் காலாண்டில் இரட்டிப்பு இலாபம் கிடைத்ததா? அல்லது மூன்று பங்கு வருமானமா?

ஏதாவது சறுக்கினால், உடனடியாக தலைமைப் பதவியில் இருப்பவர்களை நீக்கு என்று முதலீட்டாளர்களின் கோஷம் கூரையைப் பிய்க்கும். அந்தப் பகுதியையே இழுத்து மூட வேண்டி வரும்.

அரச மரத்தைச் சுற்றி வந்தவுடன் அடிவயிற்றை ஸ்கேன் செய்து “ஆணா? பெண்ணா?” என்று கேட்கும் நிறுவனமாக இயங்கினால், ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜென்சில் ஜெயிக்க முடியாது.

வாட்சன் எவ்வாறு வேலை செய்கிறது: மருத்துவத்துறையில் ஐ.பி.எம்.

புத்தியுள்ள செயலி எல்லாம் வெற்றி காண்பதில்லை

வெற்றி பெற்ற செயலி எல்லாம் புத்திசாலி இல்லை என்றும் சொல்லலாம்.

2011இல் நல்வாழ்வியல் துறைக்குள் வாட்ஸன் அடியெடுத்து வைக்கிறது. அதன் பிறகு ஐம்பதிற்கும் மேற்பட்ட உடன்படிக்கைகள். எல்லாவற்றிலும் ஒரே குறிக்கோள் – செயற்கை நுண்ணறிவை மருத்துவத்தின் சகல மூலை முடுக்குகளிலும் நுழைப்பது. இவற்றில் சில பயன்பாடுகள் மருத்துவர்களுக்கான கருவிகள்; சில நம்மைப் போன்ற இறுதிகட்ட நுகர்வோருக்கான செயலிகள்; வீட்டில் இருந்தபடியே நம் உடல் உபத்திரவங்களைக் குணப்படுத்திக் கொள்வதற்கான செயல்பாடுகள் (அப்ளிகேஷன்கள்) முனைந்தெடுக்கப்பட்டன. மேலும் பற்பல ஆராய்ச்சிகள், பெருநிறுவனங்களின் துணைகொண்டு வளர்த்தெடுக்கப்பட்டன. அதிலிருந்து முக்கியமான திட்டங்களும், அவற்றின் இன்றைய நிலையையும் கீழேக் காணலாம் (நன்றி ஐஈஈஈ ஸ்பெக்ட்ரெம்):

தேதிஐ.பி.எம். இணையாளர்திட்டம்இப்போதைய நிலை
2011
ஃபெப்.
நுவான்ஸ் (Nuance Communications)Diagnostic tool and clinical-decision support toolsபயன்பாட்டில் எந்த கருவியும் இல்லை
செப்.வெல்பாயிட் / ஆந்தெம் (WellPoint – இப்பொழுது Anthem)Clinical-decision support toolsபயன்பாட்டில் எந்த கருவியும் இல்லை
2012
மார்ச்
Memorial Sloan Kettering Cancer CenterClinical-decision support tool for cancerபுற்றுநோயியலுக்கான வாட்ஸன் (Watson for Oncology)
அக்.க்ளீவ்லாந்து க்ளினிக் (Cleveland Clinic)Training tool for medical students;
clinical-decision support tool
பயன்பாட்டில் எந்த கருவியும் இல்லை
2013
அக்.
MD Anderson Cancer CenterClinical-decision support tool for cancerபயன்பாட்டில் எந்த கருவியும் இல்லை
2014
மார்ச்
New York Genome CenterGenomic-analysis tool for brain cancerபயன்பாட்டில் எந்த கருவியும் இல்லை
ஜூன்GenieMDConsumer app for personalized medical adviceபயன்பாடு எதுவும் கிடைக்கவில்லை.
செப்.மேயோ க்ளினிக் (Mayo Clinic)Clinical-trial matching toolமருத்துவ சோதனை பொருத்தத்திற்கான வாட்ஸன் (Watson for Clinical Trial Matching)
2015
ஏப்.
ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் (Johnson & Johnson)Consumer app for pre- and postoperation coaching; consumer app for managing chronic conditionsபயன்பாடு எதுவும் கிடைக்கவில்லை.
ஏப்.மெட்டிரான்க் (Medtronic)Consumer app for personalized diabetes managementSugar.IQ app
மேஎபிக் (Epic)Clinical-decision support toolபயன்பாட்டில் எந்த கருவியும் இல்லை
மேவட க்ரோலினா பல்கலைக்கழகம் (University of North Carolina, others)Genomic-analysis tool for cancerமரபணுத் தொகுதியியலுக்கான வாட்ஸன் (Watson for Genomics)
ஜூலைசி.வி.எஸ். ஹெல்த் (CVS Health)Care-management tool for chronic conditionsபயன்பாட்டில் எந்த கருவியும் இல்லை
செப்.டெவா ஃபார்மாசியூடிகல்ஸ் (Teva Pharmaceuticals)Drug-development tool; consumer app for managing chronic conditionsபயன்பாட்டில் எந்த கருவியும் இல்லை
செப்.பாஸ்டன் குழந்தைகள் மருத்துவமனை (Boston Children’s Hospital)Clinical-decision support tool for rare pediatric diseasesபயன்பாட்டில் எந்த கருவியும் இல்லை
டிச.நியூட்ரினோ (Nutrino)Consumer app for personalized nutrition
advice during pregnancy
பயன்பாடு எதுவும் கிடைக்கவில்லை
டிச.நோவொ நார்டிஸ்க் (Novo Nordisk)Consumer app for diabetes managementபயன்பாடு எதுவும் கிடைக்கவில்லை
2016
ஜன.
அண்டர் ஆர்மர் (Under Armour)Consumer app for personalized athletic coachingபயன்பாடு எதுவும் கிடைக்கவில்லை
ஃபெப்.அமெரிக்க இதயநலக் கழகம் (American Heart Association)Consumer app for workplace healthபயன்பாடு எதுவும் கிடைக்கவில்லை
ஏப்.அமெரிக்க புற்றுநோய்க் கழகம் (American Cancer Society)Consumer app for personalized guidance during cancer treatmentபயன்பாடு எதுவும் கிடைக்கவில்லை
ஜூன்அமெரிக்க நீரிழிவுக் கழகம் (American Diabetes Association)Consumer app for personalized diabetes managementபயன்பாடு எதுவும் கிடைக்கவில்லை
அக்.க்வெஸ்ட் நோய் நாடல் இயல் (Quest Diagnostics)Genomic-analysis tool for cancerWatson for Genomics from Quest Diagnostics
நவ.செல்க்னி கார்ப். (Celgene Corp.)Drug-safety analysis toolபயன்பாட்டில் எந்த கருவியும் இல்லை
2017
மே
MAP Health ManagementRelapse-prediction tool for substance abuseபயன்பாட்டில் எந்த கருவியும் இல்லை

உசாத்துணை

அனைவரையும் கண்காணிக்கும் அன்பான கிருபை கொண்ட கருவிகள்

நன்றி: Richard Brautigan: All Watched Over By Machines Of Loving Grace

நான் யோசிக்க விரும்புகிறேன் (எவ்வளவு
சீக்கிரமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது!)
தன்னியக்க கட்டுப்பாட்டில் இயங்கும் பசும் புற்றரை
அங்கே பாலூட்டிகளும் கணினிகளும்
ஓருவருக்கொருவர் ஒத்தாசையாக ஒன்றாக
நிரல்நெறி இணக்கத்துடன்
நன்னீர் போல்
நிர்மலமான வான்வெளியைத் தொடும்.

நான் யோசிக்க விரும்புகிறேன்
(தயவு செய்து… இப்போதே!)
தன்னியக்க கட்டுப்பாட்டில் இயங்கும் வனாந்திரம்
கற்பகதரு மரங்களும் கணிப்பொருள்களும் நிரம்பியிருக்க
மனக்கவலையின்றி மான்கள் சஞ்சரிக்க
கணிப்பொறிகளைக் கடந்தால்
அங்கே கான்முகம் போல்
சுழலும் மொட்டுகள் அரும்பும்.

நான் யோசிக்க விரும்புகிறேன்
(அப்படித்தான் இருக்கவேண்டும்!)
தன்னியக்க கட்டுப்பாட்டில் இயங்கும் சுற்றுப்புறச் சூழியல்
நம் பயனில் வேலையில் இருந்து விடுதலை கிட்ட
இயற்கையுடன் மீண்டும் இணைய
நாம் பாலூட்டியாக திரும்ப மாற
சகோதரன்களும் சகோதரிகளுமாய் இருக்க
அன்பான கிருபை கொண்ட கருவிகள்
அனைவரையும் கண்காணிக்கும்.
Nongirrnga_marawili_baratjula_2014_Cybernetics_Forest_Ecology

என் குறிப்புகள்

இந்த ஆக்கம் 1967ல் எழுதப்பட்டது. அப்போது உடோப்பியக் கனவுகள் இருந்தால் சரி. கம்ப்யூட்டரும் காட்டு விலங்குகளும் கைகோர்த்துக் கொண்டு சந்தோஷமாய் வாழுகின்றன என்று எண்ணியிருக்கலாம்.

ஐம்பதாண்டுகள் கழித்துப் பார்த்தால், மனிதன் + முதலியம் ==> முடிந்தவரை குப்பை போடுகிறது. தொழில்நுட்பம் என்பது வேவு பார்ப்பதற்கும், ஒற்றறிவதற்கும், ரகசியமாய் கண்காணிப்பதற்கும், அடுத்தவரின் பொருள்களைத் திருடுவதற்கும், உலகளாவிய உளவுக்கும் நேர்மையாய் இருக்கிறது.

மீண்டும் 1967ல் இருந்த நிலையைப் பார்க்கலாம். இணையம் கிடையாது, உலகளாவிய செல்பேசி பயன்பாடு கிடையாது. ருஷியாவுடன் பிரச்சினைகள் இருந்தாலும், இன்னுமொரு உலகப்போர் மூளும் அபாயம் கிடையாது. ஐஸிஸ் கிடையாது. எல்லோர் கையிலும் ஐபோன் கிடையாது. கணினிக் கழிவுகள் கிடையாது.

அந்தக் காலகட்டத்தில் பறக்கும் கார்கள், சூரியசக்தியில் ஓடும் வீடுகள், பசுமைப் புரட்சி, கூட்டுறவு என நினைத்து எழுதியிருப்பார். இன்று?

முகவிழி சபைகள்: சேட்படுத்துதல்

Meetup_Eventbrite_Mixer_Pizza_Beer_Software_Demo_Pitch_Forums_Events_Talks_Chat_Discussions
சாயங்காலம் ஆனால், கால்கள் தானாக அந்தப் பக்கம் சென்றுவிடுகிறது. மனைவி இல் நானும் இருப்பது ஒரு காரணம். இலவசமாக பீட்சா பரிமாறுகிறார்கள் என்பது இன்னொரு காரணம்.

என்ன இலவசம்? காரை நிறுத்த முப்பது சொச்சம் டாலர் செலவு. அந்தி மயங்கும் வேளையில் வீடு திரும்பும் எண்ணற்ற ஜனத்திரளில் ஊர்ந்து ஊர்ந்து செல்ல பெட்ரோல் செலவு. நியு யார்க்கை விட மோசமாக ஓட்டும் பாஸ்டன் நகர கட்டுமானத்திற்கு இடையே நுழைந்து வளைத்து இடிபடாமல் செல்லும் இதய நோய் உண்டாக்கம் கூட செலவு.

புற்றுநோய் வந்தவர்களுக்கான ஆதரவுக் குழு; மதுவின் பிடிக்குள் சிக்கினவருக்கான வாராந்திர சந்திப்புகள்; பொதுமேடையில் பேசுவதற்கான அச்சம் நீக்கும் டோஸ்ட்மாஸ்டர் கூட்டங்கள்… போல், இதுவும் ஒத்த பயனீட்டாளர்களின் ஊற்றுக்களம். ஒரு சிந்தனையாளரை அழைத்து, அவரைப் பேசவிட்டு, அவரின் வாயும் பவர்பாயின்ட்டும் பார்க்கும் களம்.

செவ்வாய் என்றால் ஜாவா; புதன் அன்று நோ சீக்வல்; வியாழன்தோறும் பத்தாண்டுகளுக்கு மேலாக புத்தம்புதியதாக மிளிரும் அதிவிரைவு மென்பொருள் உருவாக்கம் (agile software development). வாரத்தின் முதல் நாள் என்பதால் திங்கள் கிடையாது; இளவயதினர் ஜோடிப் பொருத்தத்திற்காக கிளப் விட்டு கிளப் மேய்வதால் வெள்ளிக்கிழமையும் விடுமுறை.

வாரயிறுதிகளில் இன்னும் பெரிய ஜமா கூடும். முழுவதுமாக ஆழ்ந்து பயிற்சிப் பெறும் செய்முறை விளக்கக் காட்சிகள் உண்டு; சொந்தக் கணினி எடுத்துக் கொண்டு போனால், புதிய நிரலிகளை உருவாக்குவதில் சரிசமமாக அனைவரும் பங்குப் பெற்று, முழுவதாக தயார் ஆன புத்தம்புதிய பயன்பாட்டை உலகிற்கே உடனடியாக உலவ விட சனியும் ஞாயிறும் போதுமானது.

ஆனால்… உங்களுக்குத்தான் பரிசிலோ பங்கோ சன்மானமோ கிடைக்காது. சொவ்வறை எழுதினோம்; அது நாளைய கூகிளிலோ, வருங்கால யாஹூவிலோ ஒரு அங்கமாக இருக்கக் கூடும் என்னும் மனத்திருப்தி மட்டுமே வாய்க்கப் பெறும்.

ஃபைட் கிளப் போல் இப்படி மன்றம் மன்றமாக சென்று வருவதும் மாலையானால் ‘என்ன கச்சேரி’ என்று தி ஹிந்துவில் எங்கேஜ்மென்ட் பார்ப்பதும் ஒன்றா என்பதை ஆராய தீஸிஸ் பரிந்துரை இட்டிருக்கிறேன்.

கணினி வேலைக்கான நேர்காணல் கேள்விகளும் அனுபவங்களும்

இந்தியாவில் இருந்து வருபவர்கள் சொல்லும் கதைகள் சினிமாப் படங்கள் போல் நம்ப முடியாத காட்சிகள் கொண்டிருக்கின்றன.

இவர் டெல்லி பட்னியில் வேலை பார்த்தவர். வழக்கம்போல் நேர்காணல் எடுக்க சென்றிருக்கிறார். எட்டு விரல்களில் மோதிரம். கழுத்தில் காசு மாலை போல் தங்கச் சங்கிலி. கேட்ட கேள்விகளுக்கு போட்டிருக்கும் இரத்தினாபரங்கள் மாதிரி இல்லாமல் ஒற்றை வார்த்தை பதில்.

“மூன்று எண்களைக் கொடுத்து, அதற்குள் பெரிய எண்ணை கண்டுபிடிக்கச் சொல்லும் நிரலி எழுது.”

“எதற்குங்க எழுதணும்? பார்த்தாலே எது பெருசுனு தெரிஞ்சுடாதா…”

“உங்களுக்கு பிடித்தமான கணினி மொழி எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். சி++, ஜாவாஸ்க்ரிப்ட்… நீங்கள் எப்படி எழுதுவீர்கள்?”

“அதான் சொன்னேன் இல்ல… சின்னக் கணக்கு கூட தெரியாமலா, கோடிங் செய்வாங்க?”

வார்த்தைகள் ஆக்ரோஷமாக வந்து, இண்டர்வ்யூவிற்கு வந்த ஆபரணதாரி கையை ஓங்கி விட்டார். அலறிக் கொண்டு ’ஆதிமூலமே என்னைக் காப்பாற்று’ என்று மனிதவளத்திடம் சரணாகதி அடைகிறார் கதைசொல்லி. அவர்களும் தங்களின் வாயிற்காப்போனை அழைத்து, வில்லனை விரட்டி விடுகிறார்கள்.

சில மணி நேரம் கழிகிறது. ஜிப்ஸியில் பதினான்கு பேரை அடைக்க முடியுமா? அடியாட்களுடன் வந்த ஆபரணதாரி, இப்பொழுது சோடா பாட்டில் வீசுகிறார். பட்னி சிப்பந்திகள் எல்லோரும் கொல்லைப்புறம் வழியாக பத்திரமாக அனுப்பிவைக்கப் படுகிறார்கள். அதிகாரபூர்வமாக மூன்று நாள் ஓய்வு விடுமுறை எடுத்துக் கொள்ளுமாறு பட்னி பணிக்கிறது.

வாரயிறுதி முடிந்து வந்து பார்த்தால், புதிதாக ஐந்து பேர் வேலையில் இணைந்திருக்கிறார்கள். கஃபேடேரியா பக்கத்தில் உள்ள முக்கு கலந்தாய்வு அறையை அவர்களின் அலுவலகமாக மாற்றி இருக்கிறார்கள். ஆபரணதாரியும் அவனுடன் சோடா பாட்டில் வீசிய பதினால்வரில் நால்வர் மட்டும் அவன் உடன் வேலைவாய்ப்பு பெற்றிருக்கின்றனர்.

விக்கித்துப் போனவனைத் தட்டிக் கொடுத்து மனிதவளம் சொல்கிறது: “இனிமேல் நீ எசகு பிசகாக கேள்வி கேட்டாலும் பிரச்சினையில்லை. நம்ம கிட்டயும் ஆள் இருக்காங்க. கவலைப்படாம இண்டர்வ்யூ செய்!”

மக்கள் தொடர்பில்லாத தனிமை – மூழ்குதலும் மகிழ்தலும்

டொரொண்டோ / நியூ ஜெர்சி இளையராஜா கச்சேரி முதல் சென்னை கிரிக்கெட் மேட்ச் வரை எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். வீட்டில் ஹாயாக இருந்து கொண்டு டிவியில், பல பரிமாணத்தில், கையில் நமக்குப் பிடித்தமான பியருடன், பழக்கமான சோபாவில் சாய்ந்து கொண்டு பார்ப்பது பிடிக்குமா? அல்லது, கூட்டத்தில் முண்டியடித்து, வெப்பமோ, பனியோ பொறுத்துக் கொண்டு ரசிப்பது உங்களுக்கு பிடிக்குமா?

இரண்டாவதுதான் பிடித்திருக்கிறது என்கிறார் யாஹு.காம் தலைவர்.

வீட்டில் இருந்து வேலை பார்க்கக் கூடாது. நான் சொல்லவில்லை. எனக்கு வீட்டில் இருந்து அலுவல் பார்ப்பது பிடிக்கும். கவனச் சிதறல் எல்லாம் இருக்காது. சொல்லப் போனால், அலுவலகம் செல்லாத அன்றுதான் சோறு / தண்ணி மறந்து வேலையில் மூழ்கி இருப்பேன்.

எங்கிருந்தாலும் வேலை என்பதற்கு தடா போட்டவர் யாஹூவின் மெரிஸா மேயர்.

இதற்கு மூன்று காரணங்களை சொல்கிறார்கள். அவர் கூகிள் நிறுவனத்தில் இருந்து மாற்றலாகி யாஹுவிற்கு வந்தவர். கூகிள், மைக்ரோசாஃப்ட், ஆப்பிள், ஃபேஸ்புக் போன்ற கணினி கலாச்சாரத்தில் எப்பொழுதுமே அதிக உழைப்பிற்கு மதிப்பு. எந்நேரமும் ஆபீஸ், எப்பொழுதும் கம்ப்யூட்டர் என்றிருப்பதே கணிப்பொறியாளரின் லட்சணம்.

கூகிள்.காம் ஆரம்பித்தபோது, அங்கிருந்த லாண்டிரி, 24 மணி நேர சாப்பாடு கடை, உறங்குவதற்கான உயர்தர படுக்கைகள் போன்றவை சிலாகித்து கொண்டாடப்பட்டன. அலுவலிலேயே குளித்து, அங்கேயே பல் தேய்த்து, தோய்த்து வாழ்வதை நடைமுறையாக்க கூகுள் நிறையவே சிரமப்பட்டது.

மேற்சொன்ன கூகுல் கலாச்சாரத்திற்கு நேர் எதிராக இரண்டாவது காரணம். மெரிசா மேயர் உங்களுக்கான சொந்த வாழ்க்கையை விரும்புகிறார். வீட்டில் இருந்து வேலை பார்த்தால் சதா சர்வகாலமும் வேலை இடையூறு செய்து கொண்டே இருக்கும். ஆனால், அலுவல் சென்றால் மட்டுமே அலுவல்; வீட்டில் இருக்கும் நேரம் சொந்த விஷயம் என்று வகுத்துக் கொண்டால், நிம்மதி கலந்த உற்சாகம் பிறக்கும்.

கடைசி காரணம் இந்தியா அவுட்சோர்சிங். நீங்கள் அலுவலுக்கு சென்று நேரிடையாக முகத்தைக் காண்பிக்காவிட்டால், எதற்காக அமெரிக்கர்களை வேலைக்கு வைக்க வேண்டும்? எல்லோரையும் பிலிப்பைன்ஸ், கென்யா என்று சல்லிசான தொழிலாளர் கிடைக்கும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விடலாம். பணிமனைக்கான கட்டிட செலவும் பராமரிப்பு பட்ஜெட்டும் மின்சாரமும் கிடையாது. எல்லோரும் வீடியோ கான்ஃபெரன்சிங் மூலமாக பேசிக் கொண்டே வேலையை நடத்தி முடிக்கலாமே… எனவே, ஒழுங்கா வந்து சேருங்க என்கிறார் யாஹுவின் மெரிசா மெயர்.

உங்களுக்கு கல்லூரிக்கு சென்று வகுப்பில் அமர்ந்து வாசிக்க விருப்பமா? அல்லது ஆன்லைன் பல்கலைக்கழகங்களில் விழியம் பார்த்து டிகிரி வாங்க விருப்பமா?

Microsoft Excel நாமாவளி

அசல்: Kandasamy: Ithellaam Dooppu; Kanthasamythaan Taappu

சி ஷார்ப்பு, டாட் நெட்டு, ஏயெஸ்ப்பி, ஜாவா, பீன்சு, அபாச்சி, லீனக்ஸு, சீக்வலு, ஆரக்கிளு, டிபீட்டூ, வெப்ஸ்பியரு, டிப்கோ, சாப்பு, பீப்பிள்சாஃப்டு, பாஸ்கல், பியெச்பி, பெர்ல், ஐஐஎஸ்ஸு, பிஸ்டாக்கு, அஷூரு, கோ, எர்லாங்கு, அடோபு, ப்ளாசு, அஜாக்சு, எச்டியெமலு, எக்செமல்லு, அதா, சி, போர்ட்ரானு, அசெம்பிளி, வோர்டு, யூனிக்சு, கோபாலு, ட்விட்டரு, பேஸ்புக்கு, பயர்பாக்சு, சிப்ளசுபிளஸு, 68330, 8085…

இதெல்லாம் டூப்பு, எக்ஸெல்தான் டாப்பு ஏஏஏ
இதெல்லாம் டூப்பு, எக்ஸெல்தான் டாப்பு

‘ட்விட்டரும் ஃபேஸ்புக்கும் பயன்படுத்தாதே!’

Harry Lewis: “Blown to Bits: Your Life, Liberty, and Happiness After the Digital Explosion.”

Almost everything we now do on a regular basis, from sending emails, taking photographs, writing text messages, calling on our cell phones, downloading music, typing on our computers, and using our credit and ATM cards, all of it generates information. And every single day the endless information generated by our ever-expanding digital footprints is recorded, tracked, searched through, sold, analyzed, and saved forever.

Some might call this hyper-networked digital explosion and its potential for collaboration and innovation a kind of utopia. But others warn that it also raises important concerns about privacy, identity, freedom of expression, accountability, and the future of democracy.

1. செல்பேசியை அணைத்து விட்டாலும் ஒட்டு கேட்கலாம்.

அந்தக் காலத்தில் வீட்டுக்குள் புகுந்து, வேவு பார்க்கும் கருவியை நிறுவினார்கள். ஆனால், இன்றோ, மிகவும் சுளுவாக சாஃப்ட்வேரை உங்களின் செல்பேசிக்கு அனுப்பி விடுகிறார்கள்.

அதன் பிறகு உங்களின் ஒவ்வொரு பேச்சையும் ஒட்டுக் கேட்கலாம்.

இந்த தொழில்நுட்பத்தைக் கொண்டு மாஃபியா தலைவர்களின் குற்றத்தை நிரூபித்து இருக்கிறார்கள்.

எஸ்.வி சேகருக்கு குளிராடி போட்டது நதியா காலம். எஃப்.பி.ஐ. செல்பேசி மூலம் உங்களைப் பார்ப்பது இந்தக்காலம்!

~oOo~

2. தான்யா ரைடரின் சம்பவம்:

மனைவியைக் காணவில்லை என்று கணவன் போலீசை நாடுகிறார். காவல்துறையோ, ‘உங்கள் மனைவி சுதந்திரத்தை நாடி, பிறிதொரு துணையைத் தேடி சென்றிருக்கலாம். எனவே, அவரைத் தேட மாட்டோம். தேடவும் கூடாது!’ என்று மறுத்து திருப்பியனுப்பி விடுகிறது.

ஒரு வாரம் கழிகிறது.

ஒரு வேளை கணவனே, தன் மனைவியைத் தீர்த்துக் கட்டியிருப்பாரோ என்று காவலர்களுக்கு சந்தேகம் வருகிறது. அதனால் அவரை குற்றஞ்சாட்டுவதற்காக தான்யாவைத் தேடத் துவங்கினார்கள்.

கார் விபத்தில் சிக்கிய தான்யா குற்றுயிரும் குலையுயிருமாக ஒரு வாரப் பட்டினியில் சேதமடைந்த காரில் மயக்க நிலையில் கண்டுபிடிக்கப் பட்டார்.

பெண் சுதந்திரம் வேண்டுந்தான்! குடும்ப வன்முறையிலிருந்து தப்பிக்க வேண்டுந்தான்!!

அதற்காக, கணவன் புகார் தந்தால் எஃப்.ஐ.ஆர். போட மறுக்கலாமா?

~oOo~

3. நீங்கள் நல்ல தந்தையா? பொறுப்பான தாய்?

இது விவாகரத்து கேஸ்.

கடுமையாக உழைக்கும் மனைவி சொல்கிறாள், ‘நான் என் குழந்தையை மிக சிறப்பாக கவனித்துக் கொள்வேன்’.

கணவனின் வக்கீல் தன் பக்க சாட்சியாக சுங்கச்சாவடிகளில் கட்டும் வரி ரசீதுகளை கொண்டு வரலாம். முன்னாளில் நீங்கள் எப்பொழுது அலுவலில் இருந்து வீட்டுக்கு வந்தீர்கள், எத்தனை நேரம் குழந்தையோடு செலவழித்தீர்கள் என்றெல்லாம் கண்டுபிடிக்க இயலாது.

ஆனால், இன்றோ, நாற்சக்கர சாலைகளில் இருக்கும் toll boothகளைக் கொண்டு ஒன்பது மணிக்கு வீட்டுக்கு வருவதை சொல்லி, மகளை தன்னிடம் ஒப்படைக்குமாறு வாதிட்டு வென்றும் விடலாம்.

சௌகரியமாக இருக்கிறது என்பதற்காக EZ-Pass போட்டு வைக்கிறோம். அதைக் கொண்டு, எங்கே, எப்போது, எத்தனை மணி நேரம் செலவழிக்கிறோம் என்பதை நாம் விரும்பாமலே உலகுக்கு சொல்கிறோம்.

~oOo~

4. வாடிக்கையாளர் அட்டை

ஷாப்-ரைட் ஆரம்பித்து சிவியெஸ் வரை எல்லோரும் தங்களின் நுகர்வோருக்கு ‘தள்ளுபடிக்கான அடையாள அட்டை’ தருகிறார்கள்.

என்ன சரக்கு அடிப்பீர்கள், அந்த சரக்கு அடித்தால் என்ன நோய் வருகிறது, நோய் வந்தால் என்ன வாங்குவீர்கள் என்றெல்லாம் இதன் மூலம் அறிய முடியும்.

~oOo~

5. விமான நிலையத்தில் CLEAR முறை

ஒசாமா பின் லாடனின் வேலையை அமெரிக்கா எளிதாக்கி இருக்கிறது. தீவிரவாதி விமானத்திற்குள் நுழைய வேண்டுமா?

வெறும் 80 டாலர் போதும் ஜென்டில்மேன்.

உங்களுக்கு சோதனையில் இருந்து விலக்குத் தரப்படும். பாதுகாப்பாக நீங்கள் ‘பாதுகாப்பு சோதனை’யை தவிர்க்கலாம்.

ஆல் க்ளியர்!

~oOo~

6. கூகிள் சக்தி

உடம்பு சரியில்லை என்றால் என்ன செய்கிறீர்கள்?

“மூக்கொழுகல் AND காதடைப்பு” என்று கூகிள் செய்வோம். உங்களை மாதிரியே பக்கத்து தெரு பங்கஜம், அதே பேட்டையில் வசிக்கும் பேட்ரிக் என்று பன்மடங்காக ஒரே மாதிரியான தேடல் வர ஆரம்பிக்கிறது.

மருத்துவமனைக்கு செல்வதற்கு முன், அரசாங்கத்திற்கு தகவல் போவதற்கு முன், இன்டெலிஜென்ஸ் அறிந்துகொள்வதற்கு முன் கூகிளுக்கு ‘இந்த நோய், இப்படிப்பட்ட இடத்தில்’ பரவ ஆரம்பித்துள்ளது.

நோய் சரியாகாத படசத்தில் ஓரிரண்டு நாள் கழித்துதான் டாக்டரை நாடுவோம். ஆனால், எல்லா தகவலையும் அதற்கு பல மணி நேரம் முன்பே கூகிள் கணித்துவிடுகிறது.

இன்ஃபோர்மேசன் இஸ் பவர்!

சினிமாப் படங்களும் வாக்குப்பெட்டியும்

கலர் டிவியும் கணினியும்: கலைஞருக்கு கருத்து

Computer instead of Free Colour TV by MuKa Kalainjar DMK karunanidhi

செய்தி: ‘பகுத்தறிவு கருத்துகளை வளர்க்க இலவச கலர் டி.வி.யை பயன்படுத்த வேண்டும்’

கருத்து: வண்ணத் தொலைக்காட்சி வழங்கினால் குதூகலம்தான் கிட்டும்; இலவச கணினி கொடுத்திருந்தாலோ குதூகலத்துடன் குடும்பமே பயன்பெற்றிருக்குமே!

தொடர்புள்ள செய்தி: BBC NEWS | Technology | UN debut for $100 laptop for poor

மிஎதொ – என்ன தெரியுமா?

மிகவும் எளிய தொகுத்தளிப்பான் (really simple syndication)