Tag Archives: எழுத்தாளர்

ஜெயமோகனின் “குமிழிகள்” சிறுகதை

எழுத்தாளரைப் பற்றி சற்றே தெரிந்திருப்பது சிறுகதை வாசிப்பிற்கு சற்றே இடைஞ்சல். சுஜாதாவைக் குறித்தும் புதுமைப்பித்தன் குறித்தும் எதுவும் தெரியாது. என்ன ஜாதி, எந்த ஊர், எவ்வளவு வயது, இருக்காரா, போயிட்டாரா, ஆணா, பெண்ணா, நாலைந்து பேர் ஒரே பேரில் எழுதுகிறார்களா, நாலைந்து பேரில் எழுதுகிறாரா…

எதுவும் தெரியாது. எனவே, இந்தக் கதை பிடித்திருந்தது; இந்தக் கதை எரிச்சலூட்டுகிறது; இந்த கதையை கால்வாசியோடு நிறுத்திக் கொள்ளலாம் என்று முடிவெடுப்பதில் தர்மசங்கடங்களோ முன்முடிவுகளோ எதிர்பார்ப்புகளோ கிடையாது.

சௌகரியமாக வாசித்த காலம். மீண்டும் அவ்வாறு கண்ணைக் கட்டிக் கொண்டு வாசிக்க வேண்டும்.

ஒரு கதையை எதற்காக நான் வாசிக்கிறேன்? அதில் இருந்து புதிய வாசல்கள் ஏதேனும் திறக்கிறதா என்னும் சுயநலம்; புரியாத விஷயங்கள், அறியாத மனிதர்கள், புலப்படாத தீர்மானங்கள் என்று விடை கிடைக்காத புதிர்கள் அவிழ்கிறதா என்னும் ஆர்வம்; சுவாரசியம், வாசிப்பின்பம், மகிழ்ச்சி போன்ற வேற்றுலகப் பிரவேசத்திற்கான சந்தோஷம்.

இந்தக் கதையில் அப்படி எதுவும் கிடைக்கவில்லை.

அறிந்த மனிதர்கள்; தேய்வழக்கான உரையாடல்கள்; போரடிக்கும் வாக்குவாதங்கள்; நானே இதை அறிவார்ந்து எழுதியிருந்தால் கூட கொஞ்சம் தர்க்கபூர்வமாக எழுதியிருப்பேனோ என்னும் அலட்சியம் கலந்த ஊக்கத்தைக் கொடுக்கும் நகர்வுகள்.

எடுத்த களம் – பாலச்சந்தர் காலத்து பெண்ணியம். சொல்லிய விதமாவது பாலு மகேந்திரா பாணியில் கவர்ச்சியாக இருந்ததா என்றால் அதுவும் இல்லை.

சரி… வாசகர் கடிதங்களைப் பார்ப்போம்…

கதையை விட கடிதங்கள் மோசம். இந்தப் படைப்பில் எந்த விஷயங்களை ஆசிரியர் கையில் எடுத்திருக்கலாம்? நிஜ வாழ்வில் இந்த மாதிரி சம்பாஷணைகள் எத்தனை நாள் நீடிக்கும்? சுயம்புவாக ஒருவர் மட்டுமே முடிவெடுத்தால் அது எத்தகைய எதிர்வினைகளை உருவாக்கும்? இந்த மாதிரி பெரும்பாலும் அமைவதில்லை.

இதில் “விக்னேஷ் ஹரிஹரன்” கடிதம் தேவலாம். ஓரளவிற்கு மேல் சர்க்கரை திகட்டிப் போகிறது. அதையேத் தொடர்ந்து வாசகர் எதிர்வினையாகப் படித்துக் கொண்டிருந்தால்… அயர்ச்சி ஏற்பட்டு, கடிதங்கள் பிரிவையே ஒதுக்க நேரிடுகிறது.

கதை விமர்சனத்திற்கே வந்து விடுகிறேன்: https://www.jeyamohan.in/142864/

கதையை வாசித்துவிடுங்கள்.

தமிழில் இவ்வாறு ஆங்கில்ப் பேச்சுகளை பாவனைகளை இயல்பாக எழுதும் பலரை இப்போதைய காலகட்டத்தில் நான் அதிகம் பார்க்க / படிக்கவில்லை. எனவே, அது “பேஷ்”.

இந்த மாதிரி விஷயங்களைக் கையிலெடுக்க அனேகர் கூசுவார்கள். சாரு நிவேதிதா இந்தக் கதையை வேறு மாதிரி பலான பாதையில் கொண்டு சென்று ஜிகினாத் தோரணமாக்கியிருப்பார். எடுத்த சப்ஜெக்ட் மற்றும் சொல்ல நினைத்த விதம் – “பேஷ்”.

விவாதங்கள், உரையாடல்கள், வாதங்கள் – விடலைத்தனமாக முதிர்ச்சியடையாமல் வந்திருக்கிறது. போர்ட் ஆஃப் டைரக்டரில் இருப்பவர்கள் இவ்வளவு சின்னபிள்ளைத்தனமாக விவாதிக்க மாட்டார்கள். நம்பகத்தன்மை இல்லாததால் – ”அழுகல்”.

கடைசியில் வரும் ஒயின் அருந்தல் இன்னும் சோகமானது. ஒரு குடிகாரன் இதை எழுதியிருந்தால் அமர்க்களமாகி இருக்கும். இங்கே நீர்த்துப் போன காக்டெயிலாகவும் இல்லாமல், காத்திரமான விஸ்கி போல் குடலையும் எரிக்காமல் உப்பு சப்பற்ற பார்லி தண்ணீராக – “உவ்வே”.

கையடித்தல், முஷ்டிகைமைதுத்தனம் என்று பலவகையில் இன்னும் உள்ளே சென்று உளவியல் சிக்கலையும் ஆராயவில்லை. அவர்களின் வாழ்க்கைத் தேர்வுகளுக்கான காரணங்களையும் மேலோட்டமாகவே பார்க்கிறது “குமிழிகள்”. அரைகுறைப் படமாகவே முடிந்தும் விடுகிறது.

ஒரு நாட்குறிப்பில் நாலு வார்த்தை எழுதும்போது பாதி சித்திரத்தைத் தீட்டி விட்டு ஓய்ந்து விடலாம். ஒரு சிறுகதைக்கு தன்னளவில் முழுமை தேவை. ஒரு படைப்பு அதன் கர்த்தாக்களின் காரியங்களுக்கான நியாயத்தை ஆராய வேண்டும். அவர்களின் முடிவுகளுக்கான பாதையை வரைபடமாக்க வேண்டும். புதிர் போல் ஒருங்கிணைந்து பூர்த்தியாக வேண்டும்.

தகவல்களும் வித்துகளும் புனைவிற்கு முக்கியம். ஆனால், புனைவாக நினைவில் தங்க அது மட்டும் போதாது.

சங்கதி கேளீர்

சங்கதி கேளீர் ஒரு வாரம் நடந்ததோர்
சேதியைப் பாரீர்

தனலஷ்மியும் முனுசாமியும் சென்ற வார நிகழ்வுகளை அசை போடுகிறார்கள்.

தனலஷ்மி: என்னப் படிச்சே?

முனுசாமி: இன்னும் ஒரு மண்டலத்திற்குள் மலையேறப் போகும் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் சொன்ன கருத்தை அடிப்படையாகக் கொண்ட நியூ யார்க்கர் கதையொன்றைப் படித்தேன். ஒரு மணமாகிய ஆணும், மனைவியல்லாத பெண்ணும் ஒருத்தருடன் ஒருத்தர் சந்தித்துக் கொள்ளக் கூடாது — என்னும் கொள்கை கொண்டவர் அவர். அந்த மாதிரி மனைவியையும் துணைக்கு வைத்துக் கொள்ளாமல் சந்தித்தால் — வேறு மாதிரி அர்த்தமாகி விடும் என்கிறார் பென்ஸ். அதை தரவுகள் மூலம் பதிவாக்கி, உறுதி செய்யக் கிளம்பும் கதாநாயகியின் அனுபவங்களைப் புனைகிறார் கர்டிஸ் சிட்டன்ஃபீல்ட் (Curtis Sittenfeld)

தனலஷ்மி: அதையொட்டி நல்லதொரு உரையாடலையும் செய்திருக்கிறார்கள்.

முனுசாமி: கதை எழுதுவது எப்படி என்று அதன் மூலம் சில துப்புகள் கிடைக்கின்றன. கதாபாத்திரங்கள் குறித்த முக்கியமான தகவல்களை உரையாடலில் தரக்கூடாதாம். இது எனக்குத் தெரியாது. யோசித்துப் பார்த்தால் கதைசொல்லி இந்த மாதிரி, பேச்சு வழக்கில், குணச்சித்திரங்களையும் அதன் வாழ்க்கை பின்னணிகளையும் தருவதில்லை என்று புரிகிறது.

தனலஷ்மி: இந்தக் கதையில் எனக்குப் பிடித்த விஷயம், நிஜத்தில் கதைசொல்லி – மைக் பென்ஸ் கூறியது போல் அந்நிய ஆணுடன் தனியாகச் சுற்றுவதனால் கற்பொன்றும் பறிபோய் விடாது என்னும் திடமான நம்பிக்கை கொண்டவர். அது ஒரு அன்றாட பரபரப்பு செய்தியும் கூட. அனுராதா ரமணன் சொல்வார்: “என்னிடம் ஆயிரம் பேப்பர் க்ளிப்பிங்ஸ் இருக்கு. அதையெல்லாம் கதையாக்கப் போறேன்!” என்று. அது போல் தினசரியின் தலைப்பைக் கொண்டு கதை எழுதுகிறார். இருண்மை எனப்படும் இப்படியும் நடக்கலாம், அப்படியும் நடக்கலாம் என்பதை சொல்லிப் போகிறார். செய்தித்தாள் விஷயங்களை எப்படி இலக்கியமாக்குவது என்பது சற்றே பிரமிக்க வைக்கிறது. அதை விட பிரமிப்பு, தனக்கு ஒவ்வாத கொள்கையைக் குறித்து அறம் என்று வகுப்போ நீதிப் பாடமோ கொடுக்காமல் சொல்லிச் செல்வது.

முனுசாமி: நியு யார்க்கரில் கதையைப் படிக்கிறேனோ இல்லியோ… அந்தந்த வாரம் கதாசிரியருடன் நடக்கும் சம்பாஷணையை நான் தவறவிடுவது இல்லை. தமிழிலும் இது மாதிரி விரிவான உரையாடலை ஒவ்வொரு இதழும் நிகழ்த்தணும்.

தனலஷ்மி: இந்தக் கதையின் நீளம் கிட்டத்தட்ட பத்தாயிரம் வார்த்தைகள். இணைய இலக்கிய இதழ்களில் கூட ஆயிரம் வார்த்தைகளைத் தாண்டி சிறுகதை எழுத மாட்டார்கள். தமிழில் அந்த மாதிரி நவீன இதழ்களான சொல்வனம், தமிழினி, கனலி எல்லாம் செய்வதில்லையோ?

முனுசாமி: அவர்களின் குரு சன்னிதானமும் அதற்கு பாதை வகுக்க வேண்டும். ஜெயமோகன் நூறு கதை எழுதினார். பாராட்டி வரும் விமர்சனங்களைத்தான் பதிவு செய்தார். இறும்பூது எய்தி, காணாததையெல்லாம் கண்ட ஒலிகளைக் கேட்டார். கதை குறித்த வாசகர் வட்ட கூட்டங்களிலும் குறியீடுகளையும் உள்ளர்த்தங்களையும் உணர்த்தல்களையும் மட்டுமே முன்வைப்பார்கள்.

தனலஷ்மி: உனக்கு அவரை குத்தம் சொல்லலேன்னா தூக்கம் வராதே!

முனுசாமி: அவருடைய சமீபத்திய தாக்குதல் திருவிளையாடல் பார்த்தியா?

தனலஷ்மி: செத்துப் போனா எப்படி எழுதலாம்னு ஒவ்வொரு பத்திரிகையும் ஒரு அஞ்சலிக் குறிப்பு தயாரா வச்சிருக்கும். பில் கேட்ஸ் சடாரென்று மறைந்தால், அவருக்கு அடுத்த நாளே கட்டுரை அச்சாகணுமே… அதுவும் கோவிட் காலத்தில்! அந்த மாதிரி ஆசான் எல்லோருக்கும் இகழ்பதம் வைத்திருப்பார் என நினைக்கிறேன்.

முனுசாமி: க்ரியா ராமகிருஷ்ணன் குறித்து பாராட்ட வேண்டாம். மீரா குறித்து பேச, ஒருத்தரைத் தூக்கி விட இன்னொருவரை இறக்கிப் பேசணுங்கிறது ரொம்ப அசிங்கமான முன்னுதாரணம்.

தனலஷ்மி: ஜெமோ.வை ஏன் போய் படிக்கிறே? ஃபேஸ்புக்கில் கூடத்தான் ஆயிரக்கணக்கானோர் விதவிதமாய் அங்கலாய்க்கின்றனர்.

முனுசாமி: அவரைப் போன்ற கவனிக்கத்தக்கோர்; அதாவது உதாரண மாந்தராய் இருப்போர் இப்படி நேம் ட்ராப்பிங்கும் மட்டந்தட்டலும் செய்வது மற்றவர்களுக்கு முன்னுதாரணமாய் அமையும். சிஷ்யர்களும் அவ்வாறே செய்லபடுவார்களே என்னும் வருத்தம்தான் அப்படி சொல்ல வைக்கிறது.

தனலஷ்மி: இலக்கியத்தை விடு. என்ன பார்த்தே?

முனுசாமி: அமேசான் ப்ரைம் நிறைய குப்பைகளை வச்சிருக்கு. எல்லா மஹேஷ் பாபு படம். டப்பிங் செய்த ஹிந்தி சீரியல். டப்பிங் செய்யாத “வெள்ள ராஜா”.

தனலஷ்மி: நீ சொல்லும்போதே கூகுள் பண்ணினேன்: “வெள்ள ராஜா’ சீரிஸ் முழுவதும் கேங்க்ஸ்டர் வகையா, வெறும் க்ரைம் வகையா என்பதற்கு மத்தியிலேயே பயணிக்கிறது. நார்கோஸ்',ப்ரேக்கிங் பேட்’, ஆரண்ய காண்டம்',சேக்ரட் கேம்ஸ்’, அருவி', இந்த சீரிஸின் கதாசிரியரான லோகேஷ் கனகராஜ் இயக்கியமாநகரம்’ முதலானவற்றின் சாயலை மொத்தமாக `வெள்ள ராஜா’வில் பார்க்க முடிகிறது.”

முனுசாமி: பாதி பார்த்திருக்கேன். நன்றாக பொழுது போனது. நீ என்ன பார்த்தே?

தனலஷ்மி: ”லூடோ” பார்த்தேன். தமிழில் சூர்யா எல்லாம் சூரரைப் போற்று என்று மட்டுமே நடிக்கும்போது இந்த மாதிரி அபிஷேக் பச்சானைப் பார்ப்பது மகிழ்வளித்தது. ஜாலியாகப் போன படம். நீ லுடொ விளையாடி இருக்கியா?

முனுசாமி: இல்லை. ஆனால், ஐ.பி.எல். போட்டிகளில் சூது நிறைய விளையாடுதுனு சொன்ன பொக்கிஷம் விக்கியைக் கேட்டிருக்கேன். அவரோடது “செர்டிஃபைய்ட் ராஸ்கல்ஸ்”க்கு நல்ல மருந்து.

தனலஷ்மி: தீபாவளி மருந்து சாப்பிட்டியா?

முனுசாமி: இந்தியாவில் இருந்து வரவழைச்சு சாப்பிட்டேன். ஆனால், அடுத்த தடவை இன்னும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும். பேபால் கணக்கில் ஒருத்தருக்கு பணம் போட்டால், வங்கிக் கணக்கில் இருந்தே பரிமாற்றவும். இல்லையென்றால், அதற்கு தவணை அட்டைகாரர்கள் வட்டியும் முதலும் தண்டம் வசூலிப்பார்கள் எனத் தெரிந்து கொண்டேன். நீயாவது ஜாக்கிரதையா இருந்துக்க…

தனலஷ்மி: நான் எல்லாம் வெண்மோ

முனுசாமி: இந்த வெண்மோ நடத்துற ஆளு ஜெமோ வெண்முரசு விசிறியோ?

தனலஷ்மி: மீண்டும் அங்கேயே வந்துட்டியா. சிவானந்தம் நீலகண்டன் எழுதிய கி.அ. சச்சிதானந்தம் கட்டுரையை படிச்சேன். அந்த மாதிரி எழுதுபவர்களைத் திரட்டி, பரிந்துரைப்பதற்கு ஆங்கிலத்தில் பல இடங்கள் இருக்கின்றன. தமிழில் கூட கில்லி, மாற்று எல்லாம் இருந்தது. இன்னொண்ணுத் துவங்கலாமா?

முனுசாமி: ட்விட்டரோ பார்லரோ இதற்கு மேல். ஆண்டி முகர்ஜி கஷ்டப்பட்டு பத்து பக்கம் எழுதுவார். வெறும் இரண்டே வரியில் கதம் பண்ணிருவாங்க நம்மவர்கள்.

தனலஷ்மி: இந்த மாதிரி மத்தவங்க சொல்லுறத வாய் பார்க்காம, நீயே முழுசாப் படி, பின்னால போய் ஆராய்ந்து பார் என்று அலுவலில் மட்டும் வாய் கிழியப் பேசு.

முனுசாமி: நாளைக்கு திங்கள்கிழமை. ஜோலியப் பார்ப்போம்.

டபிள்யூ ஜி செபால்ட் – இறந்த காலத்தை மறக்கக் கூடுமோ?

I suppose it is submerged memories that give to our dreams their curious air of hyper-reality. But perhaps there is something else as well, something nebulous, gauze-like, through which everything one sees in a dream seems, paradoxically, much clearer. A pond becomes a lake, a breeze becomes a storm, a handful of dust is a desert, a grain of sulfur in the blood is a volcanic inferno.                    —W. G. Sebald, The Rings of Saturn

செபால்ட் எழுத்துக்களின் அடிநாதம் நினைவுகள். பழைய விஷயங்களை நினைவில் வைத்திருப்பதால் சித்திரவதைக்குள்ளாவோம். அதனால், பழையதை மறக்க எத்தனிக்கிறோம். ஆனால், நடந்ததை மறப்பதால் எவ்வளவு பெரிய கொடூரத்தை அரங்கேற்றுகிறோம்?

அவரின் ஆஸ்டர்லிட்ஸ் நாவல் முழுக்க ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைகிறது. இடங்களும் மனிதர்களும் மனிதர்களின் வாழ்க்கைக் கதைகளும் அவர்களின் அனுபவங்களும் இடறி, அகஸ்மாத்தாகவோ அல்லது வலிந்தோ தட்டுப்பட்டு உரசிக் கொண்டேயிருக்கின்றன. அதுவும் எனக்கு இது நடந்ததாக நான் சொல்லும்போது, அந்த சம்பவத்தின் மாந்தர்கள் கிடைக்கிறார்கள். நான் சொல்லும் வார்த்தை என்னும்போது அந்த நிகழ்வின் உண்மைத்தன்மை உணரப்பட்டு ஆவணப்படம் போல் உரைக்கிறது.

செபால்ட் எழுத்துக்களைக் குறித்த அறிமுகத்தையும் சீபால்ட் குறித்த விமர்சனங்களின் மொழிபெயர்ப்புகளையும் தாங்கி இந்த சொல்வனம் இதழ் வெளியாகி இருக்கிறது.

“It seems to me then as if all the moments of our life occupy the same space, as if future events already existed and were only waiting for us to find our way to them at last, just as when we have accepted an invitation we duly arrive in a certain house at a given time.” 

WG Sebald, Austerlitz

  • ஸெபால்டின் நடையை சுருக்கமாகச் சொன்னால்
    • மனப்பதிவு கலந்த பயணக்குறிப்புகள்
    • புனைவில் கொஞ்சம் சரித்திரமும் தொன்மமும்
    • கதைசொல்லி என்பவர் சில சமயம் செபால்ட்; பல சமயங்களில் செபால்டுக்கே கதை சொல்லுபவர்
    • அந்தக் கதைசொல்லி அலைபாயும் தன்மை கொண்டவர்; மற்றவரின் அந்தரங்கங்களை அனுசரணை கலந்த பரிவுடன் அணுகுபவர்.
    • நாவலில் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குத் தாவிக் கொண்டேயிருக்கும் போக்கு
    • ஸெபால்டின் கதைக்களன் அனைத்தும் ஐரோப்பாவையும் அதன் வரலாற்றையும் மட்டுமே சுற்றி வருபவை.
    • அவரின் எழுத்தில் பத்திப் பிரிவினைகள் எதிர்பார்க்கக் கூடாது.
    • ஒப்புமைகள், உருவகங்கள், உவமானங்கள் கிடையாது. வெறும் நேரடி.
    • புகைப்படங்கள் நிறைந்திருக்கும்; கருப்பு-வெள்ளை நிழற்படங்கள் அவை; அந்தப் படங்களுக்கு எந்த அடிக்குறிப்பும் இராது; அவை தோற்ற மயக்கத்தை ஏற்படுத்தும்.
    • யோர்ஹே லூயி ஃபோர்ஹே (Jorge Luis Borges) அவரின் ஆதர்சம்

செபால்ட் படிக்கும்போது கோணங்கியின் கல்குதிரை படிப்பது போல் இருக்கலாம். அவரின் வாசகங்கள் சுழல்பவை; ஆரம்பித்த இடத்திற்கு திரும்ப வருபவை; பிரதிபலிக்கும் கண்ணாடி போல் நிகழ்வை சொல்பவை. கதை கொஞ்சம் முன்னே நகர்வது போல் தோன்றினாலும் நடந்த அந்தக் கால விஷயத்திற்கே கவனத்தைக் கோரி திரும்பத் திரும்ப பழைய காலத்திற்கு கொண்டு நிறுத்துபவை.

“We learn from history as much as a rabbit learns from an experiment that’s performed upon it.” 

― W.G. Sebald

பொட்டு வைத்த சிறுத்தை

சொல்வனத்தின் இந்த இதழ் எழுத்தாளர் அம்பை குறித்த விமர்சனங்களையும் அவரின் சமீபத்திய கட்டுரைகளையும் தாங்கி வந்திருக்கிறது. இந்த இதழ் தயாரிப்பில் சற்றே பங்கு கொள்ள முடிந்தது.

அம்பையின் ஆக்கங்களைக் குறித்தும் அவருடன் பழகிய சில நாள்கள் குறித்தும் எழுத நினைத்திருந்தேன். எனக்கு மறதி அதிகம். ஒருவரை சந்தித்த உடன் அவரைப் பற்றி எழுதி விட வேண்டும். இல்லையென்றால் மொத்த கருத்தும் உருமாறி, பட்டாம்பூச்சி ஆகி பறந்து போய் விடும். பட்டாம்பூச்சி என்னும் எழுத்தாளர்களை ஏன் என் பார்வையில் புழுவாகக் குறுக்க வேண்டும் என்றும் யோசிக்க ஆரம்பித்ததால், இந்த மாதிரி குறுக்குவெட்டுத் தோற்ற மதிப்பீடுகளைக் குறைத்துவிட்டேன்.

எனினும், மற்றவர்கள் எழுதும் கட்டுரைகள் உதவியாக இருக்கின்றன. அவற்றை எங்கிருந்தாலும் (நியு யார்க் ரிவ்யூ ஆஃப் புக்ஸ் முதல் ஜெயமோகன் வரை) வாசிக்கிறேன். இந்த இதழில் அம்பை குறித்த மதிப்பீடுகள் வந்திருக்கின்றன.


In hot dry summer, the grass becomes drier, some part of the grass get burned. When grasshoppers feel the fire (more than warm), they begin to sweat, which can make the environment so wet that can effectively damp the prorogation of the fire

The Turing Guide
By Jack Copeland, Jonathan Bowen, Mark Sprevak, Robin Wilson

பெரியதொரு சோலை இருக்கிறது. அந்த சோலையின் தரை முழுக்க பச்சை பசேலென்று புல் முளைத்து கணுக்கால் காணாமல் போகுமளவு உயர்ந்திருக்கிறது. அங்கே நெருப்பு பற்றிக் கொள்கிறது. சோலை முழுக்க எரிந்து சாம்பலாக வேண்டியதுதான் பாக்கி. அந்த இடத்தில் வெட்டுக்கிளிகளும் இருக்கின்றன. அது வரை அங்கும் இங்கும் தாவி மண்ணில் கிடைத்த புழுக்களையும் காட்டு மலரின் அரும்பையும் சாப்பிட்டு பரவலாக ஓடித் திரிகின்றன.

பெருகும் நெருப்பின் வெம்மை வெட்டுக்கிளிகளையும் தாக்குகின்றன. அந்த வெட்டுக்கிளிகள் ஆங்காங்கே ஒன்று சேர்கின்றன. சிறு சிறு கூட்டங்களாக அமைத்துக் கொள்கின்றன. தீயினால் வெட்டுக்கிளிகளுக்கு வேர்க்கிறது. வியர்வையையும் பதற்றத்தையும் கட்டுப்படுத்த இறக்கைகளை அடித்துக் கொள்கின்றன. வியர்வைத் துளிகள் மண்ணை அடைகின்றன. படபடவென்று அடித்துக் கொள்ளும் இறக்கைகள் புல்வெளியின் பிரதேசங்களைக் குளிர்விக்கின்றன.

சோலை பெரும்பாலும் வெந்து எரிந்து சாம்பல் மட்டுமே எஞ்சி நிற்கின்றன. அப்போது, அதில் ஆங்காங்கே பசும்புல் இன்னும் தெரிகிறது. அது எப்படி சாத்தியம்?

மொத்த சோலையும் அல்லவா எரிந்து போயிருக்க வேண்டும்? எப்படி அந்த பாலைவனச் சோலைகள் உருவாகின?

அதற்கு அந்த வெட்டுக்கிளி கூட்டம்தான் காரணம். அவை ஒன்றாக ஒற்றுமையாக சேர்ந்து அருகருகில் நின்று கொண்டன. தங்களின் அச்சத்தை உழைப்பை வியர்வையாக சிந்தின. தங்கள் குட்டி சிறகுகளைக் கொண்டு விசிறி வீசின. அதில் பூமி குளிர்ந்தது. அந்தக் குளிர்ச்சி பசுமை எச்சத்தை விட்டு வைத்தது.

இந்த சொல்வனம் இதழ் அப்படி பல பெண்களின் பங்களிப்போடு உருவாகி இருக்கிறது.

சிறுத்தைப்புலியின் உடலைப் பார்த்தால் ஆங்காங்கே கரும்புள்ளிகள் தென்படும். அந்த மாதிரி ஆங்காங்கேதான் பெண்களின் பங்களிப்பு இந்த இதழில் தென்படுகிறது. எண்ணக்கூடிய அளவில்தான் இருக்கிறது.

வரிக்குதிரையின் முதுகைப் பார்த்தால் பத்து வெள்ளைக் கோடு இருக்கிறது என கணக்கிட மாட்டேன். சற்றே ஏறக்குறைய கருப்பும் வெண்மையும் சமமாக இருப்பதை உணர்வேன். ஆண்களும் பெண்களும் சமமாக மக்கள்தொகை கொண்ட நிலையில் இப்படி ஒரு கணக்கு போட்டு பட்டியல் போடுதல் அஞ்சத்தக்க நிலையே.

இருந்தாலும் காலங்கார்த்தாலே எழுந்து இன்று என்ன ஸ்டேட்டஸ் போடலாம் என்று இருபாலாரும் இன்று சமமாகவே யோசிக்கிறார்கள். நிலைத்தகவலுக்கு அடுத்த நிலைக்குச் செல்ல ஊக்கமும் எழுச்சியும் கிடைத்து வெட்டுக்கிளிகளும் பருந்தெனப் பறக்க வேண்டும்

Top 10 Indians of 2018 – Gnani Sankaran

என் கணக்கில் இந்த வருடத்தின் தலை பத்து இந்தியர்கள் யார் என்பதை பட்டியலிட எண்ணம். அந்தப் பட்டியலை ஞாநி சங்கரன் கொண்டு துவக்குகிறேன்.

அவரைப் போன்ற மிதமான குரலில் தீர்க்கமாக பிரச்சினையை அணுகி, சுயசிந்தனையுடன் இயங்குபவர் குறைவு. அதுவும் தொலைக்காட்சியும், சமூக ஊடகங்களும், அரசியல் பிரச்சார கோஷங்களும் ஆக்கிரமித்திருக்கும் தமிழ் வெளியில் தொடர்ச்சியாக தன் குரலை வாதங்களுடன் முன்னிறுத்தி செயலிலும் கூட்டு செயல்பாடுகளிலும் முன்னெடுப்பவர் அதனினும் குறைவு. சினிமா மயக்கம், பதவி ஆசை, பண லட்சியங்கள் என்று சமரசம் செய்து கொள்ளாமல், சொந்த வாழ்விலும் அறவிழுமியங்களை பின்பற்றுபவர் ஓரிருவர் மட்டுமே நான் அறிவேன்.

அவர் சென்ற வருடம் மறைந்தார்.

Gnani Sankaran - ஞாநி (ஞானி) - Jnani (Njaani Sangaran)

சில காரணங்கள்

  1. ஆம் ஆத்மி ஆகட்டும்; நோட்டா – 49 ஓ போடு ஆகட்டும் – ஏதாவது சிக்கலான விஷயம் என்றால் தலை பதுங்கும் கூட்டத்தினுள், தன் குரலை தீர்க்கமாக முன்வத்தவர்
  2. மூத்திர சட்டி தூக்க இன்னொருவரின் உதவி தேவைப்படும் வயதில் திறமையாக தலைமைப் பதவியை செயலாற்ற முடியுமா என்று கருணாநிதியின் முதல் மந்திரி பேராசையை போட்டுடைத்தவர் – ஓ பக்கங்கள்
  3. எளிமையானவர்; அழைக்கும் போதெல்லாம் நெருக்கமாக உரையாடியவர்; எசகு பிசகான கேள்வியானாலும் வெளிப்படையாக பதிலுரைத்தவர் – மனிதன் பதில்கள்
  4. கேணி
  5. சிந்தனையாளர்
  6. பரிக்ஷா
  7. நேர்மையான கொம்பன்
  8. “கண்டதைச் சொல்கிறேன்” என்றவர்
  9. ‘அறிந்தும் அறியாமலும்’
  10. தீம்தரிகிட
  11. ஜூனியர் போஸ்ட்
  12. ராமசாமியையும் விடவில்லை (அய்யா – EVR)

ஞாநி குறித்த என்னுடைய பதிவுகள்

அச்சன் செருக்கு

A Father’s Pride | The Moth

நீல் கெமன் எழுத்துக்கள் சுவாரசியமானவை. இங்கே தந்தைமை குணத்தைப் பற்றி பேசுகிறார். உருக்கமான சொற்பொழிவில் சிரிப்பும் வருகிறது. நகைச்சுவைக்கு நடுவே அழுகைத்துளிக் கூட வந்துவிடலாம்.

அவர் சொல்லும் சமபவங்களில் சில என் வாழ்வில் நடந்திருக்கிறது. கிரிக்கெட் விளையாடும்போது, இரு அணிகளுக்கு ஆள் எடுப்பார்கள். புளியங்கொட்டை போல் உள்ளங்கைக்குள் அடங்கும் சிறிய விஷயத்தை இரு அணியின் கப்தான்களும் எடுத்துக் கொள்வார்கள். அதை ஒருவர், ‘எந்தக் கை’யில் வைத்திருக்கிறார் என்று இன்னொரு அணித்தலைவர் சொல்ல வேண்டும். சரியாகச் சொன்னால், முதலில் அழைக்க ஆரம்பிக்கலாம். தன் அணியில் எவர் விளையாடுவார் என்று ஒவ்வொருவராகக் கூப்பிடுவார்.

அவன் அந்த அணி; இவன் அந்த அணி என்று இரு பக்கமும் எல்லோரும் போய்விடுவார்கள். கடைசியில் இருவர் இருப்பார்கள். ஒரு பக்கம் சோடா பாட்டில் கண்ணாடியுடன் நான். இன்னொரு பக்கம், என்னைவிட நாலு வயது இளையவளான எதிர்வீட்டு இலச்சுமி. அப்போது, அவளைத் தேர்ந்தெடுத்து, என்னை விட்டுக் கொடுக்கும் பெருந்தன்மையாகச் சொல்வார் எதிரணியின் கேப்டன்.

கையில் திறன்பேசி இல்லாமலே, கற்பனைக் கோட்டையாக நகவிரலில் நகாசு செதுக்கி சிந்தனைவயப்பட்டிருக்கும்போது, ‘மொட்டை…. மொட்டை’ என்று எவரோ கதறுவது — கிணற்றுக்குள் இருந்து கூவுவது போல் அரசல்புரசலாகக் காதில் விழும். நிமிர்ந்து பார்த்தால், டென்னிஸ் பந்து என்னை நோக்கி விரையும். அதை அவதானித்து, கீழே விழுந்தபின் தூர்தர்ஷனில் பார்த்த அவார்டுப் படத்தில் வாசலில் கோமூத்திரமும் சாணமும் போடும்வரை காத்திருந்து, பின் ‘பஷூ’ என்று அழைக்கும் மலையாளக்காரர் போல், ‘பந்து’ என்று சொல்லும்போது, “ஏண்டா… உன்னை எனக்குக் கொடுத்தாங்க” என்று திட்டும் அணித் தலைவரை நினைவுகூறும் சமபவம், இவருக்கும் நிகழ்ந்திருக்கிறது.

அவர்… பெரிய, முக்கியமான, புகழ்பெற்ற, விருதுகள் குவிக்கும் எழுத்தாளர். நான் இன்னும் உங்களுடன் பதிவில் பேசிக் கொண்டிருக்கிறேன்.

Neil_Gaiman-Freelancer

A Blogger, a Writer and a Tamil Sangam

New_Yorker_Cartoons_Moses_NOT_Thou_Ten_Commandments_Negative_Positive_Do_Jews

“Now, how about some affirmations to balance all this negativity?”

“Appreciation is a wonderful thing: It makes what is excellent in others belong to us as well.” – Voltaire

சமீபத்தில் ஒரு சர்ச்சை. சர்ச்சையில் சிக்கிய மூன்று தரப்பினருமே விளம்பரப் பிரியர்கள்.

அதில் முதல் தரப்பினர் ஒரு நகரத்தின் மேயர் போன்றவர். தொழிற்சங்கத்திற்கும் அனுதாபி. தொழிலாளிகளை உறிஞ்சும் முதலாளிகளின் ஆதரவும் அவர்க்குத் தேவை.

இரண்டாம் தரப்போ சங்கம் வைத்து தங்கள் சொற்ப ஊதியத்தில் தங்களுக்கு முக்கியமாகப்பட்டதை முன் செலுத்துகிறவர்கள்.

கடைசியாக நம்முடைய பார்வையாளர், வாக்காளர் தரப்பு வருகிறது. அவர் ஓட்டுச்சாவடிக்கு செல்லமாட்டார். எதை எடுத்தாலும் நொட்டை சொல்வார். ஆயிரம் குற்றங்களை அம்பாக திசையெட்டும் எறிந்தால், அவற்றில் பத்தாவது சரியாக குறியை அடிப்பதால் ”நிபுணர்” என்னும் பட்டம் பெற்றிருப்பார். நாளிதழை தினசரி வாசிப்பார். ஆனால், அதை ஆராய மாட்டார். மாதந்தோறும் பத்து புத்தகங்களை நூறு சினிமாக்களை பார்ப்பார். ஆனால், அவற்றைப் புரிந்து கொள்ள முயலமாட்டார்.

மேயருக்கு இந்த இருவருமே முக்கியமானவர்கள். தொழிற்சங்கத்தில் இருந்து சந்தா வர வேண்டும். பார்வையாளரிடமிருந்து வாக்கு வர வேண்டும். முதலாளிகளிடமிருந்து வாழ்க்கை ஆதாரம் வேண்டும். யாராவது ஒருவரின் கை ஓங்கினால் எங்காவது ஒரு mockingbirdஐ போட்டுத்தள்ளுவார்.

mockingbirdஐ கொல்வது என்றால் என்ன? To Kill a Mockingbird நூலில் வருவது போல் mockingbirdஐ கொல்வது என்றால் அப்பாவியாக இருப்பவரை வில்லத்தனம் செய்து மோசமானவராக மாற்றுவது.

“Mockingbirds don’t do one thing but . . . sing their hearts out for us. That’s why it’s a sin to kill a mockingbird.”

தமிழ் மின் இதழ்: ஒரு பார்வை

தமிழ் மின்னிதழ் பிடிஎஃப் வடிவில் வருகிறது. இது போன்ற முயற்சிகளுக்கு 2003ல் தமிழோவியம் தீபாவளி, பொங்கல், ஆண்டு விழா சிறப்பிதழ் மலர்களையும் ஸ்ரீதர் நாராயணன் தயாரித்த பண்புடன் மடலாடற் குழும சிறப்பிதழ்களையும் முன்னோடியாகப் பார்க்கிறேன்.

Tamil_Magazine_Specials_issues

எழுத்தாளர்களுக்கு சிறப்பிதழ் கொண்டு வருவது நல்ல விஷயம். ஆனால், கருப்பொருள் சார்ந்து, ஒரே ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு இரு பக்க எண்ணங்களையும் மாற்றுக் கருத்துக்களையும் ஆழமாக அலசுவது அதனினும் சாலச் சிறந்தது.

அந்த மாதிரி ஏன் — தமிழ் மேகசின், பதாகை போன்ற தமிழில் வரும் சிற்றிதழ்கள் செய்வதில்லை?

இதழை வெளியிட்ட ‘காலச்சுவடு’ கண்ணன் இவ்வாறு சொல்லி இருக்கிறார்:

பெருமாள் முருகன் சிறப்பிதழாக, அவர் படைப்புகளை விவாதித்து இந்த இதழ் வெளிவருவது பெரு மகிழ்ச்சி.

நிஜமாகவே பெருமாள் முருகனை அலசி ஆராய்ந்து இருக்கிறார்களா அல்லது

  • புத்தக அறிமுகம்,
  • அவர் எழுதிய நாவலை விதந்தோதுதல்,
  • ஏற்கனவே இணையத்தில் கிடைப்பதை வைத்து வாந்தியெடுத்தல்,
  • கதைச் சுருக்கத்தை மட்டும் சொல்லி விமர்சனம் என்று பஜனை செய்யுதல்,

போன்றவை மட்டுமே செய்துவிட்டு

  • சம காலத்தின் மற்ற ஒப்புமையான படைப்புகளுடன் சீர்தூக்கி அலசுதல்,
  • எழுத்தாளனின் வளர்ச்சி: துவக்க காலப் படைப்புகளுக்கும் பிற்கால ஆக்கங்களுக்கும் இடையே உள்ள ஒப்பீடு,
  • எழுத்தாளரின் சிறுகதைகளுக்கும் நெடுங்கதைகளுக்கும் உள்ள வித்தியாசங்கள் / ஒற்றுமைகள்,
  • எழுதியவரின் நடை, கதைக்கரு, களன், உத்தி போன்றவை சார்ந்த குறுக்குவெட்டுத் தோற்றம்,

போன்றவையும் அலசப்பட்டிருக்கிறதா என்று இனிதான் ஆராய வேண்டும்.

இப்போதைக்கு புறத்தோற்றம் பற்றிய குறிப்புகள். புறத்தோற்றம் ஏன் முக்கியம் ஆகிறது?

மத நம்பிக்கையாளருக்கு அந்த மதத்தின் சின்னங்கள் முக்கியம். இஸ்லாமியருக்கு தொப்பியும் தாடியும். வைணவருக்கு திருமண். பௌத்தருக்கு அவர்களின் சிவப்பும் ஆரஞ்சும் கலந்த வஸ்திரம். இறைவரை பின்பற்றுவர்களுக்கும் இலக்கியத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று விட்டுவிட்டாலும், கல்யாணம் / காட்சி என்றால் ஒவ்வொருவருக்கும் ஒரு உடை பாவனை இருக்கிறது. மோதிரம் மாற்றிக் கொள்வது, வேட்டி கட்டுவது என்று ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு அலங்காரம் தேவைப்படுகிறது.

இவ்வளவு ஏன்? கோட்டு சூட்டு போட்டுக் கொண்டு கோடைகாலத்தில் கடற்கரைக்கு சென்றால், எப்படி எடுத்துக் கொள்ளப்படும்? ஒன்று அங்கிருக்கும் பிகினி அழகர்களை தரிசிக்க வந்த பரதேசி என நினைத்து தர்ம அடி வழங்கப்படும். இரண்டாவது, அத்தனை வெயில் அடிக்கும் அந்தச் சூழலுக்கு, அவ்வளவு தடிமனான மேலாடை தேவை கிடையாது.

“தமிழ் பத்திரிகை”யின் வடிவமைப்பும் சோபையாக இருக்கிறது. அட்டைப்படம் எடுப்பாக இருப்பது போல், பிடிஎஃப் கோப்பின் உள்ளே, சுவாரசியமான, கவர்ச்சியான, பக்க அமைப்பு கிடைக்கவில்லை.

Layout_woes_Thamizh_Magazine_Pages_Titles_Headings_Headers

– தலைப்புகளுக்கு சிறிய எழுத்துரு, அதே தடிமனில் எழுத்தாளரின் எழுத்துரு என்று ஏனோ தானோ என்று அவசரகதியில் போட்டிருக்கிறார்கள்.

– ஒவ்வொரு கட்டுரையும் தனித் தனிப் பக்கங்களில் துவங்காமல், முந்தைய கட்டுரை முடிந்த சடுதியில், அடுத்த கட்டுரை, முக்கால் பக்கத்தின் இறுதியில் உட்கார்ந்து இருக்கிறது.

– கவிதா முரளிதரனுக்கு பெருமாள் முருகனை விட மிகப் பெரிய புகைப்படம் போட்டு இருக்கிறார்கள். சுரேஷ்கண்ணன் போன்ற ஆண்களுக்கு தபால்தலை அளவு ஒளிப்படம் கூட கிடையாது.

– திடீரென்று @iAgarshana எல்லாம் வருகிறது. அது ஃபேஸ்புக் முகவரியா, எல்லோருக்கும் இது போல் சுட்டல் உண்டா, எந்த வலையகத்தின் உரல் இது என்று எந்தக் குறிப்பும் கிடைக்கவில்லை. இந்த மாதிரி இடங்களில் இந்தப் படைப்பு குறித்த சிறு முன்னோட்டத்தையும் அது எந்த மாதிரி ஆக்கம் (புனைவு, கட்டுரை, டிவிட் தொகுப்பு) என்பது குறித்த அறிமுகமும் அவசியம். அவை போன்ற எதுவும் இல்லாமல், அந்தப் படைப்பும் மேலெழுந்தவாரியாக சேமிக்கப்பட்டிருக்கிறது. கண்டதையும் கண்ட மேனிக்குத் தொகுக்க, இது நோட்டு புத்தகம் அல்ல. காலாண்டுக்கு ஒரு முறை வரும் அச்சிதழ். அதற்குரிய சிரத்தையும் பொறுப்புமில்லாமல் வெளியாவது உள்ளடக்கத்தையே ஏளனம் செய்கிறது.

No_Author_Notes_Who_Is_This

– மேலே இருக்கும் பக்கத்தின் இறுதியில் ஒருவரின் ஒளிப்படம் இருக்கிறது. அவர் யார்? அவரின் கதையை எப்படி இந்த இதழுக்குத் தேர்ந்தெடுத்தார்கள்? எழுதியவரே அந்தக் கதையை ‘தமிழ்’ மின்னிதழுக்காக மொழிபெயர்த்தாரா? ஏன் இந்தப் புனைவை மொழிபெயர்த்தார்? இப்படி எதுவும் இல்லாமல், ‘எடுத்தோமா… சிரைத்தோமா!’ என்பதற்கும் வலைப்பதிவில் கண்டதையும் கிறுக்குவதற்கும் என்ன வித்தியாசம்?

How_was_This_Created

– அதே போல் இந்தப் படத்தையும் எடுத்துக் கொள்ளலாம். நாகராஜ் இதை எவ்வாறு உருவாக்கினார்? அவரே வரைந்தததா? எந்த வகை உத்திகளை வைத்து எத்தனை கால அவகாசத்தில் இந்தப் படத்தை உருவாக்கினார்? ஃபோட்டோஷாப் போன்ற கருவிகளை உபயோகித்தாரா? தாளில் வரைந்தாரா? நாகராஜின் மற்ற படைப்புகள் எங்கே கிடைக்கும்?

– சுதந்திரம் என்று பக்கத்திற்கு பக்கம் அடிக்குறிப்பு இட்டிருக்கிறார்களே… எது சுதந்திரம், எப்பொழுது சுதந்திரம், யாருக்கு சுதந்திரம், எதற்கு சுதந்திரம் என்று ஒரு குவிமையம் கிடைக்காமல், தமிழ் சினிமாவிற்கு தமிழில் தலைப்பு வைப்பது போல், இந்த இதழுக்கும் ஏதோவொரு தலைப்பு வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இரண்டாவது இதழை வெளியிட்டிருக்கும் மனுஷ்யபுத்திரன் இவ்வாறு சொல்கிறார்:

சமீபத்தில் ஒரு நேர்காணலில் தமிழில் சிற்றிதழ் இயக்கதிற்கு எதிர்காலம் இருக்கிறதா? என்று என்னிடம் கேட்டார்கள். நான் அதற்கு ‘நிச்சயம் இருக்கிறது. ஆனால் அச்சு வடிவிலான சிற்றிதககள் பெருமளவு மறைந்து அவை இணைய இதழ்களாக நீடித்திருக்கும்’ என்று சொன்னேன். இந்த இதழை பார்க்கும்போது அந்த எண்ணம் வலுப்படுகிறது. பத்திரிகை நடத்துவதன் லெளகீக கஷ்டங்கள் இல்லாமல் படைப்பு சார்ந்து மட்டும் ஒரு இதழாளன் முக்கிய கவனம் செலுத்த இந்த தளம் பெரிதும் பயன்படும்.

ஞாநி இவ்வாறு எழுதுகிறார்:

மின்னிதழ்களையும் படைப்பாளிக்கும் வாசகருக்கும் இடையே இருக்கக்கூடிய அச்சிடுபவர், விநியோகஸ்தர், கடைக்காரர் என்ற சக்திகளைத் தவிர்த்து நேரடியாக உறவு கொள்ள உதவும் முக்கிய வடிவமாகவே நான் பார்க்கிறேன். இந்த முயற்சியில் எந்த வணிக சமரசமும் ஊடுருவாமல் இயங்கும் வசதி படைப்பாளிகளுக்குக் கிட்டுவது என்பது மிக முக்கியமான மாற்றமாகும். நவீன தொழில்நுட்பம் என்பது வணிக நுகர்வுக் கலாசாரத்துக்குத்தான் பயன்படும் என்ற புரிதலையும் இது மாற்றியமைக்கிறது. இதழ் நடத்துதல், படம் எடுத்தல் ஆக்கியவற்றையெல்லாம் மேலும் ஜனநாயகப்படுத்துகிறது. எனவே இதை நாம் எல்லாரும் வரவேற்கவேண்டும்.

– எல்லாமே தெரிந்த, புழக்கமான பெயர்கள், இணையப் பிரமுகர்கள். இந்த மாதிரி பிரபலங்களை மட்டும் வைத்து மின்னிதழ் எதற்காக நடத்த வேண்டும்? அறியாத எழுத்துக்களை, புகழ் பெறாத எழுத்தாளர்களை, தெரியாத ஆக்கங்களை முன்னிறுத்துவதற்கு சிற்றிதழ் வாயிலாக இருக்க வேண்டும். அச்சிதழ்கள் போல், நாலாயிரம் ஃபாலோயர்ஸும் நாற்பது வலைப்பக்க வாயிலும் கொண்டவர்களை வைத்து வாந்தி எடுக்கக் கூடாது.

சம காலத்தில் ஆங்கிலத்தில் வெளிவரும் சில பத்திரிகைகளை இங்கு ஒப்பிட்டு பார்க்கலாம். கீழே ஆறு பத்திரிகைகளின் சமீபத்திய இதழ்களின் முகப்பும் அமைப்பும் பார்க்கலாம்:

PN_Review_Literary_Quarterly_Essay_Weekly_Issues_Magz_Magazines

தமிழ் மின்னதழின் ஆசிரியர் சரவணகார்த்திகேயன் இவ்வாறு சொல்கிறார்:

அச்சிதழில் ஒவ்வொரு பக்கமாய்ப் புரட்டித்தான் குறிப்பிட்ட படைப்பை அடைவோம். ஒருவேளை உள்ளடக்கம் கொடுக்கப்பட்டிருந்தால் அதன் மூலம் பக்க எண்ணை அறிந்து கொண்டு குறிப்பிட்ட படைப்புக்குத் தாவலாம். இது வரை தமிழ் இதழிலும் சாத்தியம். உள்ளடக்கம் கண்டு, பக்க எண் அறிந்து, நீங்கள் பயன்படுத்தும் PDF reader-ல் பக்க எண் கொடுத்தால் அழைத்துச் சென்று விடும். ஹைப்பர்லிங்க் கிடையாது! (சேர்ப்பது சுலபமெனினும் தவிர்த்தேன்.)

சுருங்கச் சொன்னால் ஓர் அச்சு இதழை நீங்கள் எப்படிக் கையாள முடியுமோ அப்படியே இதையும் கையாள வேண்டும்.

இந்தக் கருத்து ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல. ஓலைச்சுவடியில் ஒற்றெழுத்து இல்லாமல் எழுதினோம், நாலு வரி மட்டுமே எழுதினோம் என்று இன்றும் தொங்கிக் கொண்டிருக்கவில்லை. நவீன சாதனங்களை, புதிய நுட்பங்களை, வசதியான வடிவங்களை கையாள்கிறோம். கியாஸ் அடுப்பு வந்தபிறகும் கரி அடுப்பில்தான் சமைப்பேன் என்று அடம்பிடிப்பது முட்டாள்தனமானது.

எழுதுபவர்களுக்கு காசும் தரமாட்டேன்; எழுதியவற்றை வெளியிடுவதிலும் புதுமை செய்ய மாட்டேன்; எழுதுபவர்களிலும் புதியவர்களை அடையாளம் காட்ட மாட்டேன்; எழுதப்படும் கருத்திலும் சிதறலாக, கிடைப்பதை வைத்து ஒப்பேற்றுவேன் – என்ற முன்முடிபை இதன் தயாரிப்பாளர்கள் கைவிட வேண்டும்.

அன்பர்களுக்கு நான் மீண்டும் நினைவூட்ட விரும்புவது ஒன்றைத் தான். தற்போதைக்கு தமிழ் தீவிர இலக்கிய இதழ் அல்ல; போலவே வெகுஜன இதழும் அல்ல. இடைப்பட்டது. ஆனால் இதன் எதிர்காலப் பயணம் தீவிர இலக்கிய இதழ் என்பதை நோக்கியதாகவே இருக்கும். அதுவரை கசியவிருக்கும் சுஜாதாத்தனங்களை தீவிரர்கள் பொறுத்தருளலாம்.

இந்த இதழில் எழுதியவர்களில் பார்த்தவுடன் பரிச்சயமான வலை / அச்சுப் பத்திரிகைப் பெயர்கள் சிலவற்றை இங்கு சொல்லிப் பார்க்கிறேன்
– கவிதா முரளிதரன்
– சுரேஷ் கண்ணன்
– கிருஷ்ண பிரபு
– லேகா
– கவின் மலர்
– நர்சிம்
– யுவகிருஷ்ணா
– அதிஷா
– என் சொக்கன்
– முரளிகண்ணன்
– எஸ்.கே.பி. கருணா
– ஜிரா

இதழ் பெரும்பாலும் என் உழைப்பில் மட்டுமே வெளியாகப் போகிறது என்பதால் லேஅவுட் எளிமையானதாகவே அமையும். படைப்பிற்குப் பொருத்தமான‌ ஓவியம், புகைப்படம் சேர்த்திருக்கலாம் எனக் குறைப்பட வேண்டாம்.

‘செய்வன திருந்தச் செய்’ என்பது ஆத்திச்சூடி. வேலையை எடுத்துக் கொண்டால் அதில் நம்முடைய 100% மின்ன வேண்டும். சால்ஜாப்பு சொல்வதை விட்டுவிட்டு, பொருத்தமான நபர்களிடம் பொறுப்புகளை பகிர்ந்தளித்தல், ஆக்கங்களில் மேலும் செப்பனிடுதலை — அதே இதழில் வெளியாகும் சக படைப்பாளிகளிடம் கருத்து கேட்டு செதுக்குதல் என்று இந்த விஷயம் மேன்மையுற வேண்டும்.

ஜெயமோகன் இவ்வாறு எழுதுகிறார்:

இணையத்தில் உதிரி குறிப்புகளாக வெளியாகிக்கொண்டிருக்கும் எழுத்துக்களை ஒரே இடத்தில் பிரசுரிப்பது இதன் நோக்கம். பொதுவாக இணையதளம் என்பதே இணையஇதழாக இங்கே கொள்ளப்படுகிறது. ஆனால் இவ்விதழ் இணையம் மூலம் வாசிக்கக் கிடைக்கும் இதழ். தரவிறக்கம் செய்தோ நேராகவோ வாசிக்கலாம்.

இணையத்தில் கிடைக்கும் வலைப்பதிவு ஒருங்கிணைப்பாளர்களையும் திரட்டிகளையும் இணையப் பத்திரிகைகளையும் பார்க்கலாம்:

இவை எல்லாம் விகடன் மாதிரி ஒரே தரத்தில், கொள்கையோடு இயங்காவிட்டாலும், அட்டையில் ஏமி ஜாக்ஸனின் கவர்ச்சிப்படம் போட்டுவிட்டு, நடிகையின் பாகங்களை மறைக்குமாறு ‘மதுவருந்தி சீரழியும் தமிழன்’ என்று போலி பம்மாத்துகளில் ஈடுபடுவதில்லை.

கீழே விகடனின் ஃபேஸ்புக் பக்க உரையாடலும் சாம்பிள் அட்டைப்படமும்:

AV_Tamil_Magazine_Porn_Anandha_Vikadan_Timepass_Online_Vikatan_Com

ஆனந்த விகடன் மாதிரி இதழ்களுக்கு அகம் போன்ற மின்னிதழ்கள் நல்ல மாற்று என்பதில் விகடன் குழுமத்திற்கே சந்தேகம் இருக்காது. ’தமிழ்’ இதழை விட, வடிவமைப்பில் ‘அகம்’ போன்ற மின்னிதழ்கள் மிளிர்கின்றன என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து கிடையாது

மீண்டும் பெருமாள் முருகன் + சுதந்திரம் + தமிழ் மின்னிதழ் விமர்சனத்திற்கே வருவோம்.

தமிழில் வரும் சிற்றிதழ்கள் என்று தமிழ் ஸ்டூடியோ பக்கத்தில் இவற்றைச் சொல்லி இருக்கிறார்கள்:

  1. அணங்கு
  2. அணி
  3. அதிர்வு
  4. அநிச்ச
  5. அம்ருதா
  6. ஆக்காட்டி | aakkaddi.com
  7. ஆயுத எழுத்து
  8. இனிய நந்தவனம்
  9. இனிய ஹைக்கூ
  10. உங்கள் நூலகம்
  11. உயிர்மை
  12. உழைப்பவர் ஆயுதம்
  13. உன்னதம்
  14. கணையாழி
  15. கதை சொல்லி
  16. கலை
  17. கல்வெட்டு பேசுகிறது
  18. கவிதாசரண்
  19. கனவு
  20. காலச்சுவடு
  21. காலம்
  22. கிழக்குவாசல்
  23. குழலோசை
  24. கூட்டாஞ்சோறு
  25. சமரசம்
  26. சோலைக்குயில்
  27. சௌந்தரசுகன்
  28. தச்சன்
  29. தமிழ் நேயம்
  30. தமிழ் பணி
  31. தலித்முரசு
  32. தாமரை
  33. தாய்மண்
  34. திரை
  35. தீராநதி
  36. தை
  37. நடவு
  38. நம் உரத்த சிந்தனை
  39. நவீன விருட்சம்
  40. நறுமுகை
  41. நிழல்
  42. படப்பெட்டி
  43. பன்முகம்
  44. புதிய பார்வை
  45. புதிய புத்தகம் பேசுது
  46. புதுகைத் தென்றல்
  47. புதுவிசை
  48. பெண்ணியம்
  49. மண்மொழி
  50. மலர்
  51. மீண்டும் கவிக்கொண்டல்
  52. முகம்
  53. மெய்யறிவு
  54. யாதும் ஊரேமது
  55. வடக்கு வாசல்
  56. வல்லினம்
  57. விழிப்புணர்வு

இவற்றில் பல – இன்று வெளியாகவில்லை. இவற்றில் சில பெரும் குழுமங்களான குமுதம் போன்றவற்றில் இருந்து அதற்கான நிதியாதாரங்களுடன் வெளியாகின்றன. இவற்றில் – மனுஷ்யபுத்திரன் வெளியிடும் உயிர்மை போல் சில பத்திரிகைகள் அரசியல் கட்சி சார்பானவை. அவற்றின் கொள்கைகளை, தலைவர்களை, சித்தாந்தங்களை – விமர்சன நோக்கு இல்லாமல் முன்னிறுத்தி வெளியிடப்படுபவை.

ஆனால், பலவும் தனி மனிதரின் விருப்பத்தால் உண்டாகுபவை. அவற்றில் காணக் கிடைக்காத நேர்த்தியும் வெரைட்டியும் இணைய இதழ்களில் கிடைக்க வேண்டும். அச்சுக்குரிய நிர்ப்பந்தந்தங்களும் பொருட்செலவும், வலைவெளியில் கிடையாது.

No_Images_where_they_are_required_No_Notes_All_Caps_Wiki_Style_Entry

– விக்கிப்பிடியா போன்ற இந்தப் பக்கத்தின் அவசியம் என்ன? ஆங்கில எழுத்துக்களை எல்லாம் பெரிய அப்பர்கேஸ் எழுத்துக்களாகவே போடுதல் போன்றவை சிறிய பிழைகள். காலச்சுவடு ஆசிரியர் குழுவில் எப்போது இணைந்தார் போன்ற தகவல் விடுபடுதல்கள் இன்னும் ஆபத்தானவை. எளிதில் தவிர்க்கக்கூடியவை.

– மோசமான புற உருவத்தை வைத்து அகத்தை மதிப்பிட முடியாது. முழுக்க படித்துவிட்டு, உள்ளடக்கத்தின் செறிவை தனியாக எழுத முயல்கிறேன்.

நான் எழுத நினைப்பதை எல்லாம், ஜெயமோகன் எண்ணியும் எழுதியும் வைத்திருக்கிறார்:

பெரும்பாலான இணைய இதழ்களில் எதுவும் வெளியாகும் என்ற நிலை உள்ளது. அதை அதன் ஆசிரியர்களே வாசிப்பதில்லை. அதில் ஒரு தேர்வு இல்லை. விளைவாக ஏராளமான தரமற்ற பக்கங்கள் முன்வைக்கப்படும்போது வாசகன் காலப்போக்கில் சலித்து விலகிவிடுகிறான்

சமீபத்தில் வாசித்த ஆங்கில சிறு பத்திரிகைகள், குறுகிய வட்டத்திற்குள் வெளியாகும் சஞ்சிகைகள் குறித்த என்னுடைய பதிவு: நூலகம் – 2015 புத்தகங்கள்

இயல் விருது – 2015: கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்

ரவிச்சந்திரிகா

Jeyamohan_Writers_A_Muttulingam_Iyal_Awards_Tamil_Literary_Garden

கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் பதினைந்தாவது இயல் விருது விழா வழமைபோல ரொறொன்ரோவில் யூன் 13ம் தேதி ராடிஸன் ஹொட்டலில் நடைபெற்றது. இவ்விழாவுக்கு கனடிய எழுத்தாளரும் திரைப்பட இயக்குனருமான திரு டேவிட் பெஸ்மொஸ்கிஸ் கலந்து கொண்டு சிறப்பித்தார். இம்முறை வாழ்நாள் இலக்கிய சாதனைக்கான இயல் விருது பா. ஜெயமோகன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. நவீனத் தமிழின் முக்கிய அடையாளங்களில் ஒருவராகத் திகழும் திரு ஜெயமோகன் அவர்கள் நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் விமர்சனங்கள், நாடகங்கள், சினிமா என பல தளங்களில் இயங்கிக் கொண்டிருக்கிறார்.

திரு ஜெயமோகன் தன்னைத் தீவிரமாகப் பாதித்த தனது பெற்றோர்களின் மரணங்களை நினவு கூர்ந்து, அதில் இருந்து தனது உரையை “வாழ்க்கையை ஒரு கணமேனும் வீணாக்காது வாழ்வது எப்படி?” என்று விரித்தெடுத்து பேசினார்.

கடுமையான மனக் கொந்தளிப்புக்கு ஆளாகி, தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் ரயில் தண்டவாளங்களில் நடந்து செல்கிறார். அற்புதமான சூரிய ஒளி பரவுகிறது. புதர்களில் ஒரு புழுவைக் காண்கிறார். ஒளி ஊடுருவும் உடல் கொண்ட புழு அது. அந்தத் தருணம் அதன் முழு உடலே ஒளியாக அதன் உச்சத்தை அவர் அறிகிறார். “உச்சகட்ட நெருக்கடியில் இயற்கை புன்னகைக்கும்” என்றுணர்ந்து “இனி ஒருபோதும் வாழ்வில் சோர்வடைவதில்லை. ஒரு கணத்தையேனும் வீணாக்குவதில்லை.” என்று அந்த நிமிடம் முடிவெடுக்கிறார். இன்று வரை பயணமும் எழுதுவதுமாக என் வாழ்க்கையை சோர்வின்றி வாழ்கிறேன் என்று குறிப்பிட்டார்.

. 1981 இல் உயர்கல்வியைப் பாதியில் நிறுத்தி இரண்டு வருடங்கள் துறவியாக அலைந்ததைக் கூறினார். காசியில் இருந்து டேராடூன் செல்லும் ரயிலில் தூங்கிக் கொண்டிருந்தபோது யாத்ரீகர்கள் பத்துப் பேர் ஏறுகிறார்கள். ஏறின கணம் தொடக்கம் கிருஷ்ணனைப் பாடுகிறார்கள். ரிஷிகேஷ் சென்று அடையும் வரை பாடிக் கொண்டே இருக்கிறார்கள்.

அவர்கள் அனைவரும் தம்மை ராதைகளாக உணர்கிறார்கள் என்று இவர் புரிந்து கொள்கிறார். எப்போதும் ஆடலும் பாடலும் கொண்டாட்டமுமாக இருக்கிறது அவர்கள் வாழ்க்கை. “தங்கத் தட்டில்தானே கிருஷ்ணமதுரம் வைக்க முடியும்” என்று அவர்கள் சொல்வது இவரிடம் ஒரு பெரிய மாற்றத்தை உண்டாக்கியதாக கூறினார். அன்றிலிருந்து சோர்வில்லாத, துக்கமில்லாத வாழ்க்கையை வாழுகிறேன். எப்போதும் பயணம் செய்வதும், எழுதுவதுமான வாழ்க்கை என்னுடையது என்று கூறினார்.

இயல் விருதைத் தொடர்ந்து மற்றைய விருதுகளும் வழங்கப்பட்டன:

  • புனைவு இலக்கியப் பிரிவில் “கனவுச்சிறை” நாவலுக்காக தேவகாந்தனுக்கும்
  • “நஞ்சுண்டகாடு” நாவலுக்காக குணா கவியழகனுக்கும்
    அபுனைவு இலக்கியப் பிரிவில் ‘கூலித்தமிழ்” நூலுக்காக முத்தையா நித்தியானந்தனுக்கும்,
  • “ஜாதியற்றவளின் குரல்” நூலுக்காக ஜெயராணிக்கும் விருதுகள் வழங்கப் பட்டன.
  • சிறந்த கவிதைத் தொகுப்புக்கான விருதை “மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்” நூலுக்காக கதிர்பாரதி பெற்றுக் கொண்டார்.
  • மொழிபெயர்ப்பு பிரிவில் “யாருக்கும் வேண்டாத கண்” நூலை மலையாளத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்த கே வி சைலஜாவும்,
  • “Madras Studios – Narrative Genre and Idelogy in Tamil Cinema” நூலுக்காக சுவர்ணவேல் ஈஸ்வரன் பிள்ளையும் விருதுகள் பெற்றனர்.
  • மாணவர் கட்டுரைப் போட்டியில் சிறந்த கட்டுரைகள் இரண்டு தேர்ந்தெடுக்கப் பட்டு, வாசுகி கைலாசம், யுகேந்திரா ரகுநாதன் விருது பெற்றார்கள்.
  • சுந்தர ராமசாமி நினைவாக நிறுவப்பட்ட ’கணிமை விருது’ முத்தையா அண்ணாமலைக்கு வழங்கப் பட்டது.

இந்த விழாவுக்கு பல நாடுகளில் இருந்து எழுத்தாளர்களும், கல்வியாளர்களும் ஆர்வலர்களும் வருகை தந்து சிறப்பித்தார்கள். திருமதி உஷா மதிவாணனின் நன்றியுரையைத் தொடர்ந்து இனிய சிற்றுண்டி வழங்கப் பட்டு அந்தச் சனிக்கிழமை மாலை இனிதே நிறைவடைந்தது.

Jeyamohan_Writers_Author_Event_Iyal_Awards_Tamil_Literary_Garden


B. Jeyamohan who has made significant contributions in the last 28 years. He has written 13 novels, 11 short story collections and 50 essay collections. He has also penned scripts for Tamil and Malaiyalam movies Kasthoori Maan, Angaadith Theru, Naan Kadavul, Neer Paravai, Aaru Melukuvarththikal, Kadal, Kaaviya Thalaivan, Ozhimuri, Kaanchi, that were well received. The award was presented by Mr. David Bezmozgis. The award was sponsored by Bala Cumaresan and Vaithehi from the very inception of the organization.

In addition to the Lifetime Achievement Award, the following awards were also presented. Fiction awards went to Devakanthan for his novel ‘Kanavuchirai” and to Kuna Kaviyalakan for “Nachundakadu”. Nonfiction awards were given to Muthiah Nithiyananthan for his book ‘Kooliththamil” and Jeyarani for “Jaathiyatravalin Kural.” The Poetry award was given to Kathirbharathi for his collection of poems ‘Mesiyavukku moondru machangal”

Award for ‘Information Technology in Tamil’ given in honour of Sundara Ramaswamy was awarded to Muthiah Annamalai and the student essay contest awards were shared by Vasuki Kailasam and Yugendra Ragunathan. The translation awards were given to K. V. Shylaja for ‘Yaarukkum vendatha kan” translated from Malaiyalam to Tamil and Swarnavel Eswaran Pillai for his book “Madras Studios – Narrative Genre and Ideology in Tamil Cinema.”

ஜெயமோகன் அமெரிக்க வருகை

விதுரர்களின் வீடுகள்

மகாபாரதத்தில் புகழ் பெற்ற கதை இது.

கௌரவர்களின் தலைநகரமான ஹஸ்தினாபுர நகரத்திற்கு பகவான் கிருஷ்ணன் வருகிறார். நீண்ட பயணத்திற்கு பின் களைப்போடு காணப்படுகிறார் கிருஷ்ணன். எல்லோரும் அவரவர் வீட்டிற்கு அழைக்கிறார்கள்.

விஷ்ணு சஹஸ்ராமம் அருளிய பிதாமகர் பீஷ்மர் அழைக்கிறார்: “என் வீட்டில் தங்குவாயா கிருஷ்ணா?”

அரசன் துரியோதனன் சொல்கிறான்: “நல்ல விருந்தைத் தயார் செய்திருக்கிறேன். சகல சௌகரியங்களும் செய்திருக்கிறேன். பட்டு மெத்தையோடு, கச்சேரிகளும், நடன நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்திருக்கிறேன். எங்கள் அரணமனைக்கு வா கிருஷ்ணா!”

பிருஹஸ்பதியின் அவதாரமான துரோணாச்சாரியார் சொல்கிறார்: “உன் ஆத்ம நண்பன் அர்ஜுனனின் குருவான என் வீட்டிற்கு வாயேன்… கிருஷ்ணா!”

வேத வியாசர் போன்று சப்தரிஷிகளில் ஒருவரான ஆச்சாரியார் கிருபரும் தன் இல்லத்திற்கு அழைக்கிறார்.

முற்பிறவியில் மகாவிஷ்ணுவின் மிகச்சிறந்த பக்தனான பிரகலாதனாக இருந்த பாலிகன் அழைக்கிறார்.

அந்த வீதியின் மூலையில் இருக்கும் சிறு குடிலைக் காண்பித்து, “அந்த வீடு யாருடையது?” என்று கிருஷ்ணர் கேட்கிறார். ”அது உன்னுடைய வீடு.” என்கிறார் விதுரர். அங்கே தங்கப் போவதாக கண்ணன் அறிவிக்கிறார்.

அங்கே சென்று விதுரரின் மனைவி அளித்த வாழைப்பழத் தோல்களை உண்டதாகக் கதை வளரும். அவ்வாறு பல பெரிய பெரிய அழைப்புகள் இருந்தாலும், அவர்களையெல்லாம் விட்டு விட்டு, எளியவர்களின் வீடுகளில் ஜெயமோகன் தங்கத் திட்டமிட்டு இருக்கிறார்.


JeMo-writer-jayamohan-tamil-authors-Jeyamohan

पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्त्या प्रयच्छति ।
तदहं भक्त्युपहृतमश्नामि प्रयतात्मनः ॥९- २६॥

பத்ரம் புஷ்பம் ப²லம் தோயம் யோ மே ப⁴க்த்யா ப்ரயச்ச²தி |
தத³ஹம் ப⁴க்த்யுபஹ்ருதமஸ்²நாமி ப்ரயதாத்மந: || 9- 26||

ய: ப⁴க்த்யா = எவர் அன்புடனே
பத்ரம் புஷ்பம் ப²லம் தோயம் = இலையேனும், பூவேனும், கனியேனும், நீரேனும்
மே ப்ரயச்ச²தி = எனக்கு அளிப்பவன் ஆயின்
ப்ரயதாத்மந: = முயற்சியுடைய அவர்
ப⁴க்த்யுபஹ்ருதம் = அன்புடன் அளித்த
தத் அஹம் அஸ்²நாமி = அவற்றை நான் அருந்துகிறேன்

இலையேனும், பூவேனும், கனியேனும், நீரேனும் அன்புடனே எனக்கு அளிப்பவன் ஆயின், முயற்சியுடைய அன்னவன் அன்புடன் அளித்ததை உண்பேன் யான்.


இந்த முறை அமெரிக்க வருகையின் போதும் பாஸ்டனிலும் மூன்று நாள் இருப்பதாகச் சொல்லி இருக்கிறார். ஜூன் 23 மாலை முதல் ஜூன் 26 காலை வரை நியு இங்கிலாந்து பகிதியில் இருப்பார். அவரை சந்திக்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்.

மற்ற இடங்களுக்கான முடிவுறாத இறுதி பயணத் திட்டம்:
ஜூன் 26, 27, 28 (வெள்ளி – ஞாயிறு) – வாஷிங்டன் டிசி
ஜூன் 29, 30 & ஜூலை 1 – நியு ஜெர்சி, நியு யார்க்
ஜூலை 2 & 3ஃபிலடெல்ஃபியா, பென்சில்வேனியா
ஜூலை 4கனெக்டிகட்
ஜூலை 5 முதல் 10 – டொலீடோ, டெட்ராய்ட், மிச்சிகன், பிட்ஸ்பர்க்
ஜூலை 11,12,13ராலே, வடக்கு கரோலினா
ஜூலை 14 முதல் சான் ஃபிரான்சிஸ்கோ

தொடர்புடைய பதிவுகள்:

ஜெயமோகன் வலையகம் :: கனடா – அமெரிக்கா பயணம்: இயல் விருது பெறுவதற்காக நான் வரும் ஜூன் 10 அன்று கனடா கிளம்புகிறேன். 11 டொரெண்டோவில். 13 அன்று இயல்விழா. இருபத்தைந்து வரை கனடா.


சென்ற 2009ல் வருகை புரிந்த போது:

1. 9 more Meet the Author Jeyamohan Events: Listings | ஜெயமோகன் நிகழ்ச்சிகள்

2. பாஸ்டனில் ஏழு ஒளிப்படங்கள்: எழுத்தாளர் ஜெயமோகன் | புகைப்படங்கள்

3. ஜெயமோகனின் பன்னிரு முகங்கள் | பயணத்தின் போது எடுத்த படங்கள்

4. அமெரிக்கா: ஜெயமோகன்.இன்

5. அமெரிக்கா திட்டம்..: 2009 புறப்பாடு

6. அமெரிக்கா பயணம்: 2009 – jeyamohan.in

7. Interview with Jeyamohan: Videos & Audio Chat | வீடியோக்கள், ஒலிக்கோப்புகள், நேர்காணல் பதிவுகள்

8. Obla Vishvesh :: Three days with Jayamohan | ஆங்கிலப் பதிவு

9. ஃப்ளோரிடாவில் ஜெயமோகன் | சிறில் அலெக்ஸ் – புகைப்படக் கோப்புகள்

10. ஆல்பெனியில் எழுத்தாளர் ஜெயமோகன் | ஓப்லா விஸ்வேஷ்

JeMo-Fiction_Novelist-jayamohan-tamil-authors-Jeyamohan