4. வெற்றிபெற்ற அடுத்த அமெரிக்க ஜனாதிபதி உங்களை ஆலோசகராக நியமிக்கிறார். என்ன அட்வைஸ் கொடுப்பீர்கள்?
அமெரிக்காவின் உள்விவகாரங்களிலெல்லாம் என்னை ஆலோசனை கேட்கமாட்டார்கள் என்பது சர்வநிச்சயம். எனவே பொதுவில் அமெரிக்காவின் நடப்பு குறித்தும் உலகில் அமெரிக்காவின் பங்கு குறித்துக் கொஞ்சம் சொல்லலாம். இறுதியாக அறிவியல் தொழில் நுட்ப ஆலோசனை கொஞ்சம்.
அரசியல், மதம், ராணுவம், அறிவியலில் பொதுவாக அரை நூற்றாண்டுக்கு முந்தைய சிந்தனையில் தேங்கிப் போகிறார்கள் அமெரிக்கர்கள் என்ற வருத்தம் கலந்த மதிப்பீடு இருக்கிறது எனக்கு.
யுத்தங்கள்
இரண்டாம் உலகப்போருக்குப் பிறகான உலகில் பரவலாக அமெரிக்காவிற்கு உன்னத பிம்பம் இருக்கிறது. அமெரிக்காவின் வெற்றிகளை (போர் வெற்றிகளையல்ல, ஈடுபட்ட போர்கள் எதிலுமே அமெரிக்கா தீர்மானமான வெற்றியடையவில்லை, இதில் வியட்நாம், குவைத், ஈராக், ஆப்கானிஸ்தான் இன்னும் ராணுவத் தலையீடுகளைக் கொண்ட க்யூபா, சிலி, நிகராகுவா, போன்ற பல விஷயங்களிலும் அமெரிக்கா பெரிதாகச் சாதிக்கவில்லை. ஆனால் சோகமான உண்மை, சரியாகப் பாதி அமெரிக்கர்கள் இந்தத் தோல்விகளையே வெற்றியாகக் கொண்டாடும் மயக்கத்திலிருக்கிறார்கள்).
போர்வீரர்களை முன்னிருத்தும் நிலை அமெரிக்காவில் ஒழிந்தாலேயொழிய அமெரிக்காவிற்கு உலகில் மதிப்பு கூடப்போவதில்லை, உலகிற்கும் அமெரிக்காவின் தொல்லை குறையப்போவதில்லை. எல்லாவற்றையுமே இராணுவத்தால் தீர்த்துவிட முடியும் என்ற அசட்டுத்தனத்தை அமெரிக்கா கைவிட்டாக வேண்டும். ஆனால் ஜார்ஜியாவை நேட்டோவில் கொண்டுவர ரஷ்யாவின் மீது போர் தொடுக்கலாம், அதன் மூலம் ரஷ்யாவிற்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்று உளறும் ரிவால்வார் ரீட்டா ஸேரா பேலின் போன்றவர் துனை ஜனாதிபதியாக வந்தால் இதற்கெல்லாம் சந்தப்பம் குறைவுதான்.
புவி சூடேற்றம்
எண்ணைய்க்குத் துளையிடுவதன் மூலம் அமெரிக்கப் பொருளாதாரத்தை வளர்த்துவிட முடியும் என்பது அபத்தமானது. அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கும் உலகளாவியச் சூடேற்றத்திற்குச் செவிமடுப்பதன் மூலம் ஒரு புதிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும். சூடேற்றத்தின் அச்சுறுத்தலையே ஒரு புதிய துவக்கத்திற்கான வாய்ப்பாக மாற்றும் தீர்க்கம் வரவிருக்கும் அமெரிக்க அதிபருக்கு வரவேண்டும் என்று விரும்புகிறேன்.
மாசுகட்டுப்பாடுகளுக்குத் தடை விதிப்பதன் மூலம் பொருளாதாரம் சரியும் என்பது பொய்க்கூற்று. (குறிப்பிடத்தக் அமெரிக்க முதலாளிகளின் பொருளாதராம அச்சுறுத்தப்படும் என்பதே உண்மை). கடந்த இருபது வருடங்களாகத் தொடர்ச்சியாக மாசுக்கட்டுப்பாட்டை ஸ்வீடன், பின்லாந்து, டென்மார்க், போன்ற நார்டிக் நாடுகள் அதிகரித்து வருகின்றன. ஆனால் அவர்களின் பொருளாதாரமும் வாழ்க்கைத் தரமும் பிரமிக்கத்தக்க அளவிற்கு முன்னேறியிருக்கிறது.
ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் புதுப் பொருளாதாரத்திற்குத் தங்களைத் தயார் செய்துவருகின்றன. ஆனால் அமெரிக்கா தேக்கநிலையை அடைந்திருக்கிறது. ஹைட் ரோ கார்பன் பொருளாதாரத்தில் விடிவில்லை என்பதை அமெரிக்க அதிபர் உணரவேண்டும். தவிர்க்க முடியாத பொருளாதாரச் சரிவிலிருக்கும் ஜப்பான் கூட இன்றைய பொருளாதார இறக்கத்தை மறுக்காமல் அதேசமயத்தில் வரவிருக்கும் புதுப் பொருளாதாரத்திற்குத் தன்னைத் தயார் செய்துகொள்கிறது.
வளர்நிலையிலிருக்கும் சீனா சில வியக்கத்தக்க முடிவுகளை எடுத்து வருகிறது. இவற்றுடன் ஒப்பிட அமெரிக்கா தேக்கச் சிந்தனையில் இருக்கிறது.
பொருளாதாரம்
வலதுசாரி பொருளாதாரக் கொள்கைகளில் எனக்கு ஓரளவுக்கு நம்பிக்கை உண்டு. ஆனால், இலக்கற்ற வலதுசாரித்தனம் அழிவிற்குக் கொண்டுசெல்லும் என்பதற்கு சமீபத்தில் சரிந்துகொண்டிருக்கும் வீட்டுச் சந்தை உதாரணம். ஃபானி மே, ஃப்ரெட்டி மாக் போன்ற ‘மொதலாளிகள்’ நேர்மையாக இருப்பார் என்று கருதி அவர்களுக்கு முழுச்சுதந்திரம் கொடுத்ததால் வந்த வினை இது. சந்தை தன்னைத்தானே சரி செய்துகொள்ளும் என்பது பெருமளவுக்கு உண்மை என்றாலும் அதற்கான காலத் தேவை மிக அதிகம், அந்த இடைவெளிகளில் பெரும்பாலும் அழிந்துபோகிறவர்கள் ஏழைகளாகத்தான் இருக்கிறார்கள்.
இடது சாய்வுள்ள சந்தைப் பொருளாதாரம் எப்படி சிறப்பாக நடக்க முடியும் என்பதற்கு , ஸ்விட்ஸர்லாந்து, ஃபின்லாந்து, ஸ்வீடனிலிருந்து உதாரணங்களைப் பெறமுடியும். உலகிலேயே இந்த நாடுகளில்தான் வரிகள் மிக அதிகம்; பொருளாதார வளர்ச்சியில் முதல் ஐந்து இடங்களில் இந்த நாடுகள் இருக்கின்றன.
அப்படியான அரசுகள் இரும்புக்கரத்துடன் உலக வல்லரசாக இருப்பது இயலாததுதான், ஆனால் உலக நண்பனாக, ஆதர்சமாக இருப்பது சாத்தியம். குறைகள் இல்லாத மனிதர்களே கிடையாது, எனவே தீர்மானமான வலது/இடது சாரி சிந்தனைகள் ஒருக்காலத்திலும் வெல்லமுடியாது. எப்படி தீர்மானமான கம்யூனிசம் படிப்பதற்குக் கவர்ச்சியாக, நடைமுறையில் சாத்தியமில்லாமல் இருக்கின்றதோ அதே போல முற்றான மூலதனவாதமும் வறட்டுக் கற்பனைதான்.
நெகிழ்ச்சியற்ற பொருளாதாரக் கொள்கைகளால் எந்தப் பயனுமில்லை என்பதை உணர்ந்து அமெரிக்க அதிபர் வறட்டுச் சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்டவராக இருப்பது அமெரிக்காவுக்கும், பொதுவில் உலகிற்கும் நல்லது.
அறிவியல்
ஊனமுற்றோர், வறியோர், முதியோர், வேலையிழந்தோர், போன்றவர்களைக் காலில் போட்டு நசுக்குவது வலதுசாரிகளின் பொழுதுபோக்கு. ஆனால், தமக்கென்று வரும்பொழுது தற்பால் நாட்டம் கொண்ட மகளை நெருக்கி அணைத்துக் கொள்வார்கள் (டிக் செய்னி), கரு ஆதாரச் செல்களில் (Embryonic Stem Cell) ஆராய்ச்சி நடத்தியாவது அல்ஸைமருக்கு மருந்து காணலாம் (நான்ஸி ரேகன்) என்பார்கள்.
தலைவலியும் திருகுவலியும் தனக்கென வரும்பொழுது தங்கள் குடும்பத்திற்கு மாத்திரம் இடதுசாரிகளாக மாறுவது இவர்கள் வழக்கம். தனிநபர் செல்வத்தாலும், ராணுவ பலத்தாலும் பணக்கார நாடாகவும், வல்லரசாகவும் இருக்கலாம், ஆனால் முழுக்க ஏழ்மையற்ற, அவலங்களற்ற, பயங்களற்ற நல்லரசாக இருப்பது சாத்தியமில்லை. வரப்போகும் அமெரிக்க அதிபர் உன்னதத்தை நாடுபவராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
அயல்நாட்டுக் கொள்கை
இராக்கில் அமெரிக்கப் படைகளின் இருப்பை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. எனவே அதைவிட்டு விரைவில் வெளிவருவது அமெரிக்காவிற்கும் உலகிற்கும் நல்லது. ஆப்கானிஸ்தானில் படிப்படியாக வெளியேவர முயற்சிக்க வேண்டும்.
சீனாவைப் பற்றிய மயக்கங்கள் நிறைந்த தோற்றம்தான் அமெரிக்காவிலும் உலகிலும் இருக்கிறது; இது பொதுவில் யாருக்குமே நல்லதில்லை. தோழமைகாட்டி சீனாவை வெளியே அழைத்துவர முயற்சிக்க வேண்டும்.
வெனிசூலா, ஈரான் போன்ற நாடுகளிடம் மீசையை முறுக்குவதில் எந்த வீரமும் இல்லை. ஒன்றும் பேசாமலிருந்தாலே போதுமானது. இப்பொழுது இருக்கும் அரசாங்கம் மாறாக அவர்களை உசுப்பேற்றிவிடுவதிலேயே குறியாக இருக்கிறது.
பாரம்பரியம் (பழமைவாதம்)
சிறுவயது முதலிருந்தே அமெரிக்காவில் எனக்கு ஆர்வம் இருந்தது அறிவியல், நுட்பத்தில் அவர்களின் அபார சாதனைகள் வாயிலாகத்தான். தடைகளற்ற ஆர்வம் பெருகும் சிந்தனைகளினால் அமெரிக்கா அறிவியல் உலகிற்கு அளப்பரிய பங்காற்றியிருக்கிறது. கடந்த பத்து/பதினைந்து வருடங்களில் தொடர்ச்சியாக அமெரிக்காவில் அறிவியலுக்கு எதிரான அணுகுமுறை வளர்ந்து வருகிறது (இது ரீகன் காலத்தில் தொடங்கியது; புஷ் இளையர் காலத்தில் உச்சத்தை எட்டியிருக்கிறது).
மதத்தீவிரவாதம் கொஞ்சம் கொஞ்சமாக கட்டற்ற சிந்தனை என்ற அமெரிக்க வாழ்முறையை பாறையிடை வேராகப் பிளந்து வருகிறது. வலதுசாரி அரசியல் முழுக்க முழுக்க இதையே நம்பியிருக்கிறது. முன்னெப்போதுமில்லாத அளவிற்கு அறிவியல் சிந்தனைகள் மீது, கற்பித்தல் மீது, அறிவியல் நிர்வாகத்தின் மீது என்று பல முனைகளிலும் அறிவியல் தொடர்ச்சியாகத் தாக்கப்பட்டு வருகிறது.
நானோநுட்பம், உயிர்நுட்பம், மரபியல் தொடங்கி சூடேற்றம், மருத்துவ ஆய்வு என்று பல துறைகளில் இன்றைய ஆட்சியாளர் கேட்க விரும்புவதை மாத்திரமே அறிஞர்கள் சொல்ல வேண்டும் என்று வற்புத்தப்படுகிறார்கள். இந்தப் புற்று நோய் முற்றுமுன் இதிலிருந்து அமெரிக்கச் சிந்தனையை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயம் வரவிருக்கும் அதிபருக்கு இருக்கின்றது. அடிப்படை அறிவியலுக்கான ஆதரவு அமெரிக்காவில் வெகுவாகக் குறைந்து வருகிறது (மறுபுறத்தில் ஜப்பான், சீனா, ஜெர்மனி போன்ற நாடுகளில் இது அதிகரித்து வருகிறது).
அறிவியலுக்கு எதிராகத் திரும்பிவரும் அமெரிக்க சமூகத்தை ஒழுங்கமைக்க வேண்டியது வளமையான அமெரிக்க எதிர்காலத்திற்கு முக்கியம்.
5. ஜான் எட்வர்ட்ஸிடம் உங்களுக்கு மதிப்பு இருந்தது. திருமணத்திற்கு அப்பால் உறவு கொண்டதால் அது சரிந்துள்ளதா? அவரின் கொள்கைகள் அப்படியே இருக்கும் பட்சத்தில், பில் க்ளின்டன் பாதம் பணியும் ஒட்டுமொத்த ஜனநாயகக் கட்சியும் — அவரை நிராகரித்து ஒதுக்குவது எப்படி சரியாகும்?
நாளையுடன் முடியும்
பொறியியல் – கல்விக்கு அப்பால்: வாசகர் மறுவினை
பொறியியல் – கல்விக்கு அப்பால் கட்டுரை வாசித்தேன். தமிழ் பதிப்புலகில் அதிகம் பேசப்படும் சினிமாவும் அரசியலும் தவிர்த்த கட்டுரை என்ற அளவிலேயே கட்டுரை எடுத்துக் கொண்ட பேசுபொருளும், அதன் தொடர்பான எண்ணங்களும் முக்கியமானவை. மதிப்பெண்களைத் துரத்தும் கல்விமுறை குறித்தும் அசலான ஆய்வுகளை ஊக்குவிக்கும் வழிமுறைகள் குறித்த ஆசிரியரின் கருத்தோடு பெரும்பாலும் ஒத்துப் போகிறேன்.
எனினும், கட்டுரையில் ஆங்காங்கே தடாலடி பொதுமையாக்கங்கள் இருக்கின்றன. தான் அறிந்த சூழலை வைத்து, அதை இந்தியா முழுக்க நீட்டும் சூத்திரங்களும் இருக்கின்றன. இவை இரண்டும் கட்டுரை சொல்லும் கருவிற்கு பங்கம் உண்டாக்குகின்றன. பின்குறிப்பின் மூலம், இந்த வாதத்தை நிராகரித்து முற்றுப்புள்ளியும் வைக்கிறார்.
இப்பொழுது கேள்விகள்:
1. ஆராய்ச்சியைத் தூண்டும் கல்வியை ஊக்குவிக்க மூன்று காரணிகள் இருக்கின்றன: புதிய கண்டுபிடிப்புகளினால் ’செல்வம்’ சேர்க்கும் வாய்ப்பு; தேடலின் முடிவில் கிடைக்கும் சமூக ’அந்தஸ்து’; நாம் வாழும் உலகை மாற்றியமைக்கும் நாகரிகத்தை முன்னெடுத்தோம் என்னும் ஆத்ம ’திருப்தி’. இவற்றை இந்திய அமைப்புகள் தரும் சூழல் நிலவுகிறதா?
2. டிப்லோமா படிப்புகள் – இவை செயல்முறையை முன்னிறுத்தும் கல்வி. அவற்றை பொறியியல் படிப்போடு ஒப்பிட்டுப் பார்க்க இயலுமா?
3. மேற்குலகில் பொறியியல் படிக்காதவர்களும் பொறியியல் சார்ந்த வேலைகளில் ஈடுபடுகிறார்கள். இந்தியச் சூழலில் பொறியியல் பட்டயம் என்பது ”இவர் பொறுப்பானவர்; ஒழுங்காக வேலை செய்வார்; எதைக் கொடுத்தாலும் கற்றுக் கொள்வார்.” என்பதற்கான சான்றாதாரமாக விளங்குகிறதா?
4. கணிமொழியியல் – அமெரிக்காவில் கணித்துறை சார்ந்த வேலைக்கு பொறியியல் படிப்பு தேவையாக இருப்பதில்லை. பத்தாவது படித்தவரை வேலைக்கு அமர்த்துகிறார்கள். கணிவிளையாட்டுகளைக் கொண்டு பரிசோதித்து, அதில் திறம் வாய்ந்தவராக இருந்தால் கணினித்துறையில் நல்ல பதவியில் அமர்த்துகிறார்கள். இந்த நிலை இந்தியாவில் உருவாகுமா? (அதாவது பத்தாம் வகுப்புத் தேர்வு முடிந்து, ஓரளவு பக்குவம் வந்தவுடனேயே, டிசிஎஸ் போன்ற நிறுவனங்கள், மாணவர்களைப் பயிற்சிக்கு அழைத்துச் சென்றுவிடும். மூன்று வருடக் கால வேலை+பயிற்சிக்குப் பின் அசல் வேலையில் அமர்த்திக் கொள்வார்கள்.)
5. ஆராய்ச்சிக் கல்வி – இதற்கான சமூக அந்தஸ்து இந்தியாவில் எப்படி இருக்கிறது? நிறுவனத்தில் டைரக்டர், வைஸ் பிரசிடெண்ட் என்றால் அதிக மதிப்பு கிடைக்கிறதே! அதே சமயம் கண்டுபிடிப்புகளை காசாக்கும் சூழல் இந்தியாவில் எப்படி நிலவுகிறது?
6. மேற்குலகில் mentor எனப்படும் வழிகாட்டியை வாழ்நாள் முழுக்க துணையாக வைத்துக் கொள்கிறார்கள். இந்தியச் சூழலில், இதை மாமா, சித்தப்பா போன்ற குடும்ப உறவுகளும் கிராம சமூகங்களும் நிரப்பின. இன்றைய நகரமயமாக்கப்பட்ட நிலையில் உற்றாரின் ஆலோசனைகளும் கேட்பதில்லை. அண்டை வீட்டாரும் சொந்த விஷயங்களில் கருத்துச் சொல்வதை அந்தரங்கத்தின் குறுக்கீடாகவே எடுத்துக் கொள்கிறோம். இந்த வழித்துணைகளின்ம் உதவி கிடைத்தால் ஒவ்வொருவரின் தனித்தன்மையும் ஆர்வமும் தூண்டப் பெற்று ஆராய்ச்சிப் பாதைகளில் தெளிவு கிடைக்குமோ?
7. இதன் தொடர்ச்சியாக பத்ரி சேஷாத்ரி எழுதிய ”தமிழகத்தின் பல பொறியியல் கல்லூரிகளில் ஐ.டி என்ற பாடப்பிரிவை நீக்கியிருக்கிறார்கள்”, த.நி. ரிஷிகேஷ் ராகவேந்திரன் எழுதிய “தரகர், அலுவலர்,வேலை பெற்றுத் தருபவர் தேவை- ஆசிரியர்கள் தேவையில்லை” வாசிக்கப் பெற்றேன். தங்கள் கட்டுரையைப் போன்றே பெங்களூரூ சாணக்கியன் எழுதிய ‘வேலை’ கடிதம் வாசித்தீர்களா?
8. ஜெயமோகன் தளத்தில் கல்வியைக் குறித்தும் பாடத்திட்டத்தின் தேர்வுமுறைகள் குறித்தும் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். அவற்றில் அவர் குழந்தைகளுக்குக் கொடுக்கும் சுதந்திரத்தையும் தான் பழகிய ஆசிரியர்களையும் கல்வி குறித்த செய்திகளையும் அலசுகிறார். அதில் குறிப்பாக பெற்றொரின் பங்கு குறித்து நிறைய எழுதியிருக்கிறார். நம்முடைய பெற்றோர் இட்ட கட்டளைக்குப் பணிந்து நடப்பது போல், பொறியியல் கல்விக்கு அப்புறமும் மேலாளரின் கட்டளைக்கு அடிபணிய விழைகிறோமா?
9. வேலைக்குப் புதியதாகச் சேரும் எவரையும் எந்த நிறுவனமும் உடனடியாக பொறுப்புகளை சுமத்துவதில்லை. அதிலும் கல்லூரியில் இருந்து புத்தம்புதிதாக வருபவரை இரண்டு வாரங்களுக்காவது தனிப் பயிற்சிக்கு அனுப்புகிறார்கள். தங்கள் அலுவலில் பயன்படுத்தும் நுட்பங்களையும் வழிமுறைகளையும் விவரமாகக் கற்றுத் தருகிறார்கள். அதன் பிறகு இரண்டு மாதங்களுக்காவது, பரீட்சார்த்தமான வேலைகளில் மட்டுமே ஈடுபடுத்துகிறார்கள். மூன்று மாதம் ஆன் பிற்பாடு, நிஜ வேலைக்குள் நுழையும்போது துணை நிற்க அனுபவசாலி ஒருவரை கூடவே கண்காணிப்பாக வைக்கிறார்கள். இதை முதலீடாகக் கருதுகிறார்கள். இந்தியாவின் ஆய்வுத்துறையில் இவ்வாறு ஒவ்வொரு ஆராய்ச்சியாளருக்கும் தனிப்பட்ட கவனம் வழங்க பொருளும் மனிதவளமும் இருக்கின்றதா?
10. வாழ்க்கை ஆதாரமாக கல்வியும், அந்தக் கல்வியினால் கிடைக்கும் வேலையும் அமைந்திருக்கிறது. மேற்குலகில் இருபதில் இருந்து முப்பது வரை பரீட்சார்த்தமாக வாழ்வதை நடைமுறையாக வைத்திருக்கின்றனர். அதாவது, தனக்குப் பிடித்த விஷயத்தில் இளவயதில் தீவிரமாக இயங்குவது; அதில் வெற்றி பெற்றால் கோடிகளை அள்ளுவது; தோல்வி அடைந்தால் மீண்டும் கல்லூரிக்குச் சென்று வேறொரு பாதையைத் தேர்ந்தெடுப்பது. – ஒரு முறையோ, பல முறையோ கீழே விழுந்தால், அஞ்சாமல், கைதூக்கி ஊக்கமும் மீண்டும் நிதியும் கொடுக்கும் சமூக அமைப்பு இந்தியாவில் வர வேண்டுமா?
பின்னூட்டமொன்றை இடுக
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது Analysis, ஆசிரியர், ஆய்வு, ஆராய்ச்சி, கல்வி, சம்பளம், சொல்வனம், ஜெயமோகன், திறமை, படிப்பு, பதில், பொறியியல், மாணவன், வேலை, Colleges, Comments, Compensation, Education, Employment, Engg, Engineering, Feedback, Jobs, Opportunities, Professors, Reply, Research, salary, Students, Study, Teachers, Tech, Technology, Thesis, University