Tag Archives: அறிவிப்பு

Invitation: Articles for Solvanam

சொல்வனம் பத்திரிகை இதழ் எப்பொழுதும் புது எழுத்துகளைச் சிறப்பிக்கும் இதழாக அமையும். புதியவர்களையும் இளையவர்களையும் பற்றிய கட்டுரைகளை வரவேற்கிறோம். ஆர்வமுள்ள வாசகர்கள், தங்கள் என்ன தலைப்பில், எதைக் குறித்து எழுதப் போகிறோம் என்பதை எங்களுக்கு solvanam.editor@gmail.com தெரிவியுங்கள்.

அனைத்து இதழிலும் பிரபலமடைந்த எழுத்தாளர்கள் சிலரோடு, அத்தனை பிரபலமாகாத பல எழுத்தாளர்களையும் வாசக கவனத்திற்குக் கொண்டு வர முனைய வேண்டும். என்னவெல்லாம் எழுதலாம் என்று யோசித்தவுடன் தோன்றிய எண்ணங்கள் இவை:

அ) இரண்டு குழுக்களாக வயதையொட்டிப் பிரித்துக் கொண்டு அவர்களின் படைப்புகளை மொத்தமாக அணுகலாம். இருபது வயது முதல் முப்பது வயது வரையிலானவர்கள்; முப்பதில் இருந்து நாற்பது வயதை எட்டியவர் வரை – இந்த இரு தலைமுறையினரில் எவரெவரை நீங்கள் வாசித்து இருக்கிறீர்கள்? அவர்களுக்கு இடையேயான ஒற்றுமைகள் என்ன? அந்தப் புனைவுகளை எவ்வாறு விமர்சனப் பூர்வமாக அணுகுகிறீர்கள்?

ஆ) கடந்த பத்தாண்டுகளில் உங்களைக் கவர்ந்த மூன்று முக்கியமான நூல்கள் என்ன? கட்டுரையில் வித்தியாசமான முறையில் அணுகுகிறார் என்று எவரைச் சொல்வீர்கள்? சிறுகதைத் தொகுப்பில் எதையெல்லாம் விரும்பி வாசித்தீர்கள்?

இ) முகப் புத்தகம் (ஃபேஸ்புக்), உடனடி எழுத்து (ஃப்ளாஷ் ஃபிக்ஷன்), குறுங்கதை என்றெல்லாம் எழுதித் தள்ளுபவர் எவர்? அவற்றில் எது நெஞ்சில் நிற்கின்றன?

ஈ) கவிதைகள்: ஹைக்கூ, திரைப்பாடல், யாப்பு இலக்கணத்திற்கு உட்பட்ட வெண்பா, டிவிட்டர் குறுமொழிகள் என்று பல வகைகளில் ஒவ்வொன்றிலும் உங்களைக் கவர்ந்த ஆக்கங்கள் என்ன? ஏன் அந்தக் கவிதைகள் உங்களுக்கு நெருக்கமாகின?

உ) தினசரி எவரை வாசிக்கிறீர்கள்? எப்பொழுதாவது மட்டுமே ஒருவர் எழுதினாலும், எவர் எழுதியதை தவறவிடாமல் வாசிக்கிறீர்கள்? அத்தி பூத்தது போல் எழுதுபவர்கள் யார்? காட்டுமல்லியாகப் பூத்துக் குலுங்குவது யார்?

ஊ) எந்த முன்னணி எழுத்தாளர்கள் எவரைப் பரிந்துரைக்கிறார்கள்? அவர்களின் முக்கியமானப் படைப்புகள் என்ன? எவர் அச்சுலகில் புத்தகங்கள் நிறைய வெளியிட்டிருக்கிறார்? அவற்றில் எது இலக்கியத் தரமானது?

எ) யுவ புரஸ்கார், இளம் எழுத்தாளர் விருது போன்ற பட்டியல்களில் இருந்து நீங்கள் நாவல்களையும் கதைகளையும் தேர்ந்தெடுத்து வாசித்து, உங்கள் பார்வைகளை முன்வைக்கலாம்.

ஏ) காலச்சுவடு, உயிர்மை, தமிழினி, யாவரும், டிஸ்கவரி, சந்தியா, கிழக்கு, வல்லினம், நற்றிணை, புலம், எதிர், சிக்ஸ்த் சென்ஸ், எழுத்து, ஜீரோ டிகிரி , விடியல், தேநீர், சீர்மை, செங்கனி இன்ன பிற – புதிய எழுத்தாளர்களை எவர்கள் வெளியிடுகிறார்கள்? எந்தப் புனைகதைகளை வாசித்து இருக்கிறீர்கள்?

ஐ) நீங்கள் சிறுகதைகளைப் படிக்கிறீர்களா? கேட்கிறீர்களா? ஒலிப்புத்தக வடிவில் எதை ரசித்து உள்வாங்கினீர்கள்? கிளப்ஹவுஸ், டிவிட்டர் ஸ்பேசஸ் போன்ற தளங்களில் உங்களின் இலக்கிய கருத்துக்களையும் வாசக விமர்சனங்களையும் பதிவிடுவது உண்டா?

ஒ) புனைவு எழுதுவது என்பது செயல்பாடு; ஒரு சார்பு நிலையை எடுப்பது. அதற்கு சமூக ஊடகங்களில் தன் கொள்கை சார்ந்த நிலை எடுத்து பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையைப் பெருக்குதல் அவசியம். இந்த வகையில் பிரபலமாக இரட்டைக் குதிரை சவாரி செய்பவர்கள் யார்? அவர்களின் எழுத்துக்களை எப்படி மதிப்பிடுவீர்கள்?

ஓ) கதை மீறும் கதை, நாடகம், மொழியாக்கம், மாந்திரீக எதார்த்தம், பேய்க்கதை, துப்பறியும் கதை, காதல் கதை, அறிபுனைவுகள், வரலாற்றுப் புனைவு, மர்மக் கதை, தொன்ம மருவுருவாக்கம், திகில் கதை, பதின்ம வய்தினருக்கான ஆக்கம் – இவற்றில் ஒவ்வொரு வகையிலும் எந்தப் புத்தகங்களை பரிந்துரைப்பீர்கள்?

ஔ) கதைகளின் செவ்வியல் மற்றும் நவீன வடிவங்கள், உலக மொழிகளிலும், தமிழிலும் நிகழ்ந்துவரும் பரிசோதனை முயற்சிகள் என்ன?

இணையத்தில் எத்தனை உள்ளடுக்குகள் இருந்தாலும் எதுவொன்று சுழித்து மேலெழுந்து வருகிறதோ, அதுவே பார்வையில் விழுந்து உணர்வைத் தொடுகிறது. ஒரே சமயத்தில் ஒரு பெரும் களஞ்சியமாகவும் பொங்கிப் பெருகும் புதுவெள்ளத்தின் குமிழாகவும் நித்தியத்தையும் நிலையின்மையையும் தன் இயல்பாய்க் கொண்டது இணையம். அச்சுக்கு உரிய நேர்த்தொடர்ச்சி இணையத்தில் இல்லை, அதன் போக்கு சுழன்று விரிவது. உரையாடல்களும் எதிர்வினைகளும் பகிர்தல்களுமே இணையத்தில் உள்ள படைப்புகளுக்கு உயிர் அளிக்கின்றன. எனவே வாசகர்கள் புதிய படைப்புகள் குறித்து தொடர்ந்து பகிர்ந்து உரையாட வேண்டுமென்றும் எழுத்தாள நண்பர்கள் தம் பங்களிப்பை தொடர்ந்து அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

எந்த ஒரு இதழுமே படைப்புகளால்தான் கவனம் பெறுகின்றது. #solvanam அந்தப் படைப்பாளிகளின் மொத்த பங்களிப்பைக் குறித்த அறிமுகத்தையும் விமர்சனத்தையும் வரவேற்கிறது. இந்த இதழுக்குப் பல நண்பர்களும் படைப்பாளிகளும் ஒத்துழைக்க அழைக்கிறோம்.

உங்கள் தொடர்ந்த நல்லாதரவிற்கு மனமார்ந்த நன்றி. உங்கள் எண்ணங்களை எடிட்டருக்கு அனுப்பவும்- அவரது மின் அஞ்சல் முகவரி இது – solvanam.editor@gmail.com