Tag Archives: அச்சு

ஓவாது கூஉநின் உடற்றியோர் நாடே

அமெரிக்கா அசல் நாட்டாமை. உலகெங்கும் அதன் ஊடகம். அதன் சந்தையாக்கம். அதன் கேளிக்கை. அதன் இன்ஸ்டாகிராம். அதன் டிவிட்டர். அதன் ஃபேஸ்புக்.

மேற்குலகம் சொல்வதை வேதவாக்காக பிரச்சாரம் செய்து பரப்ப தேவதூதர்கள் நிறைய உண்டு. பிபிசி ஒரு பக்கம் ஓதும். இன்னொரு புறம் சி.என்.என்.

கத்தார் நாட்டிற்கு என்று அல்ஜஸீரா. ருஷியா தேசத்திற்கு ஆர்.டி. எல்லாம் கொஞ்சம் போல் ஆங்கிலத்தில் பரப்புரைத்தாலும், ஆப்பிளும், ஆண்டிராயிடும் டைம்ஸ் நாளிதழையும் என்.பி.ஆர். வானொலியையும் மட்டுமே உங்கள் செய்தியோடையில் காட்டும்.

இந்த வித்தையை சைனா சிறப்பாக கற்றுத் தேர்ந்திருக்கிறது. டிக் டாக் துவங்கி கண்ணுக்குத் தெரியாத பிக்ஸல் வரை வியாபித்தது.

சீனா வானொலி தமிழ்ப் பிரிவு நாள்தோறும் ஒலிபரப்புச் சேவையை வழங்குகிறது.
தாய்லாந்து நாட்டின் புகழ்பெற்ற முக்கிய ஊடகமானது, சீன அரசு ஊடகத்திடமிருந்து அவர்களின் செய்தியை விநியோகம் செய்ய ஒப்பந்தம் செய்திருக்கிறது.
மலேசியாவில் கம்யூனிசம் தழைத்தோங்க சீன மொழியில் செய்திகளை வழங்க அந்த நாட்டின் நான்கில் ஒரு குடிமகனைக் கவர சீனா இன்னொரு ஒப்பந்தம் கையெழுத்திட்டிக்கிறது.

கடைசியாக, அமெரிக்க கல்வி ஸ்தாபனங்களைக் குறி வைத்திருக்கிறது. தங்களின் தாய்நாட்டையோ பீஜிங் அரசையோ சற்றேனும் மாற்றுப் பார்வை பார்க்கும் ஆசிரியரோ, பாடத்திட்டமோ இருந்தால் அரிவாளையும் சுத்தியலையும் கையில் எடுத்து அவர்களை பதவி விலக்கி கரும்புள்ளி செம்புள்ளி குத்தி விடுகிறார்கள்.

ஹாங்காங் குறித்தும் சிஞ்சியாங் உய்குர் முஸ்லிம்கள் குறித்தும் சீன நாட்டின் அதிகாரபூர்வ அடக்குமுறையை விதந்தோத இவை உதவும்.

தென் கிழக்கு ஆசியாவில் நிரம்பி வழியும் இந்த கண்கட்டி அந்தகராக்கும் நிலையை அகற்றி பரந்துபட்ட பன்முகப் பார்வையைப் போக்க #சொல்வனம் துவங்கிய காலத்தில் இருந்து முயல்கிறது.

அந்த வகையில் இரு கட்டுரைகள் இந்த இதழில் #solvanam இதழில் வெளியாகி இருக்கின்றன. அவற்றை வாசித்து செய்திகளையும் கொள்கைகளையும் பொதுவுடைமை ஆக்குங்கள்.

கட்டுரை 1 – நேபாளமும் சீனாவும் இந்தியாவை எவ்வாறு அச்சுறுத்துகின்றன?

கட்டுரை 2 – தாய்வானை நோக்கி தொடர்ச்சியாக தாக்குதல் நடத்துவதால் போர் பயத்தில் எவ்வாறு இந்த பிரதேசத்தை பதற்றத்தில் வைத்து பொருளாதார வளர்ச்சியை முடக்குகிறார்கள்?

தாயில்  தூவாக்   குழவி   போல –
தாயில்லாத உண்ணாக் குழவி போல;  ஓவாது  கூஉம் ஒழியாது
கூப்பிடும்;  நின்    உடற்றியோர்    நாடு    –    நின்னைச்
சினப்பித்தவருடைய நாடு

புறநானூறு – 4: சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி

சுண்டோகு அல்லது குறையறிவு உணரும் கலை

“இந்தப் புத்தகத்தை படிக்க உங்களுக்கு நேரம் இருக்குமா?”

ஒவ்வொரு புதிய புத்தகத்தை வாங்கும்போதும், நம்மை நோக்கி பிறரால் கேட்கப்படும் கேள்வி. வீட்டில் புத்தக அலமாரி நிரம்பி வழிந்து புத்தக அறையாக வளர்ந்தது. இப்பொழுது புத்தக மாடி என்று புதிய ராட்சஸ உருவம் கொண்டிருக்கிறது. அங்கிருப்பதில் எதெது, எங்கெங்கே இருக்கிறது என்னும் வரைபடம் மனதில் பதிந்திருந்தாலும் செந்நூல்களைப் பெற்று வரும் போதெல்லாம், “இருப்பதைப் படிக்கவே காலம் இல்லை. அது தவிர கிண்டில், அன்றாடச் செய்திகள், பிடிஎஃப் கோப்புகள் என்று எல்லாவிடத்திலும் எதையாவது சேமித்திருக்கிறாய். உனக்கு இது தேவையா?” என்னும் எண்ணம் எழுந்து புது(த்)தகங்களைப் புறக்கணித்து கடையிலேயே விடச் செய்யும்.

அப்பொழுதுதான் சுண்டோகு என்னும் ஜப்பானிய வார்த்தைப் பிரயோகத்தைக் கண்டேன். கட்டு கட்டாக, அடுக்கு அடுக்காக குவிந்திருக்கும் படிக்காத புத்தகங்களை சுண்டோகு என்கிறார்கள்.

“கற்றது கையளவு; கல்லாதது உலகளவு!” என்பாள் சரஸ்வதி. “எதைக் கற்க வேண்டும் என்று தெரியும்; அதை கற்க வேண்டிய விதம் இவ்வாறு!” என்பது சுண்டோகு.

அறியாத விஷயங்கள் என்னென்ன என்று அறிந்திருப்பதோடு மட்டுமல்லாமல், அவற்றை எப்படி கற்று அறிய வேண்டும் என்று உணர இந்த மலை போன்ற குவியல் நினைவூட்டி தரையில் இறங்கி புரட்ட வைக்கும்.

The Japanese call this practice tsundoku, and it may provide lasting benefits – Big Think

Maria Popova, whose post at Brain Pickings summarizes Taleb’s argument beautifully, notes that our tendency is to overestimate the value of what we know, while underestimating the value of what we don’t know. Taleb’s antilibrary flips this tendency on its head.

Eco’s library wasn’t voluminous because he had read so much; it was voluminous because he desired to read so much more.

Eco stated as much. Doing a back-of-the-envelope calculation, he found he could only read about 25,200 books if he read one book a day, every day, between the ages of ten and eighty. 

Jessica Stillman calls this realization intellectual humility.

முதல் நாவல்

ஒவ்வொரு மொழியிலும் “தலைச்சன் குழந்தை” என்று பெயர் பெறும் முதல் நாவல்களின் பட்டியல் கீழே:

  • தமிழ்: வேதநாயகம் பிள்ளையின், “பிரதாப முதலியார் சரித்திரம்” (Prathapa Mudaliar Charitram by Samuel Vedanayagam Pillai. Written in 1857, it was published only in 1879)
  • அசாம்: ஹேம் சந்திர பாருவாவின், “பாகிரே ராங்-சாங்-வித் தாரே கோவபத்தூரி” (Padmanath Gohain Baruah’s Bhanumoti, published in 1890)
  • வங்காளம்: பாங்கிம் சந்திரரின், “ஆனந்த மடம்” (Bankim Chandra Chatterjee, Bengali novel, Durgeshnandini in 1865)
  • குஜராத்தி: கோவர்த்தன் ராமின், “சரஸ்வதி சந்திரர்” (அல்லது Nandshankar Mehta’s Karan Ghelo (1866))
  • இந்தி: பிரேம் சந்தின், “சேவாசதன்” (or Pariksha Guru by Srinivas Das, published in 1882 or popular novel in Hindi was Chandrakantha by Devaki Nandan Khatri, published in 1888)
  • கன்னடம்: கெம்பு நாராயணாவின், “முத்ரா மஞ்சூசா.” (or Kannada, Indira Bai by Gulvadi Venkata Rao, was published in 1899)
  • மலையாளம்: அப்பு நெடுங்காடியின், “குண்டலதா” (Kundalatha (1887) by Appu Nedungadi.)
  • மராத்தி: யமுனா, “பர்யாதன்” (Yamuna Paryatan (1857) written in Marathi by Baba Padamji)
  • ஓரியா: பிரஜநாத் பாட்ஜேனாவின் “சதுர்பினோத்” (or Saudamani, written by Ramashankar Ray in 1878 or Chaa Mana Atha Gunta written by Fakir Mohan Senapati and published in 1897)
  • சிந்தி: மீர்சாகலிச் பெக்கின் “திலாராம்”
  • தெலுங்கு: கண்துகூரி வீரேசலிங்கம் பந்துலுவின் “ராஜசேகர சரித்திரா” (Sri Rangaraju Charitra, written by civil servant Narahari Gopalakrishnama Setty and written in 1867)
  • பஞ்சாபி: பாய் வீர் சிங் எழுதிய “சுந்தரி” (Sundari (1898) by Bhai Vir Singh has the distinction of being Punjabi)
  • மணிப்புரி: லமம்பம் கமல் சிங் எழுதிய “மாதவி” (Lamabam Kamal Singh’s Madhavi (1930))
  • காஷ்மீரி: அக்தர் மொயுதீன் எழுதிய “டாட் டாக்” (நோயும் வலியும்) (Kashmiri, Dod Dag (Sickness and Pain) written by Akhtar Mohi-ud-din, was published in 1957)
  • உருது: நசீர் அகமது எழுதிய “மிரட்-அல்-உருஸ்” (Mirat-al-Urus (The Bride’s Mirror, 1868-69) by Deputy Nazeer Ahmed)
  • ஆங்கிலம்: பங்கிம் சந்திர சாடர்ஜி எழுதிய “ராஜ்மோஹனின் மனைவி” (1864, English Rajmohan’s Wife was written Bankim Chandra Chatterjee)

தெளிவு + துல்லியம் + கொஞ்சம் உல்லாசம் = நியு யார்க்கர்

நூலின் பெயர்: Cast of Characters: Wolcott Gibbs, E. B. White, James Thurber, and the Golden Age of the New Yorker
எழுதியவர்: Thomas Vinciguerra

வெளியான தேதி: நவம்பர் 9, 2015
ISBN: 978-0393240030
பக்கங்கள்: 464
பதிப்பாளர்: நார்டன்

Cast-of-Characters

பத்திரிகையில் என்ன எழுதினார்கள் என்பதை விட, பத்திரிகையை யார் நடத்துகிறார்கள் என்பதில் எப்போதுமே எனக்கு ஆர்வம் அதிகம். ஆனந்த விகடனில் நடந்த பிணக்குகள் காரணமாக கல்கி தனியாக வாராந்தரி துவங்கியது எல்லாம் ரொம்பவே பிற்பாடுதான் தெரிய வந்தது. அதற்கு முன்பாகவே சாவி பத்திரிகையும் இதயம் பேசுகிறது மணியனும் விகடனில் இருந்துதான் கிளை பரப்பினார்கள் என்பதில் இந்த என்னுடைய வம்பார்வம் துவங்கியிருக்க வேண்டும். நிஜத்தில் முதன் முதலில் ஆர்வத்தைத் தூண்டியது ‘அரசு பதில்கள்’ எனப்படும் குமுதத்தின் மும்மூர்த்திகள் – எஸ்.எ.பி. அண்ணாமலை, ரா.கி. ரங்கராஜன், துமிலன், புனிதன், ஜ.ரா.சுந்தரேசன் – சமயத்திற்கேற்றபடி மாறிக்கொண்டிருந்தார்கள்.

அவர்களைக் குறித்து உயிர்மைக் கட்டுரையில் பிரபஞ்சன் எழுதியது:

Prabanchan_brabhanjan-1அண்ணாமலை அரசர், வள்ளல் அழகப்பர் ஆகியோரின் குடும்பப் பின்னணியிலிருந்து வந்த ஒரு செட்டியார் குடும்பத்து இளைஞர், ஒரு ஐயங்கார் நண்பரைத் துணைக்கு வைத்துக்கொண்டு தொடங்கிய பத்திரிகையாக, நிலம் தோயாமல் அந்தரத்தில் நின்றது குமுதம்.

பள்ளி, கல்லூரிக் காலங்களில் வாசிப்பில் ஈடுபாடு கொண்ட அண்ணாமலை என்கிற இளைஞர், படிக்கும் பழக்கம் தந்த உற்சாகத்தில் கதைகள் எழுதத் தொடங்கி இருக்கிறார். அவர் கதையை அக்காலத்திய புகழ்பெற்ற எழுத்தாளரும் பத்திரிகையாளருமான நாரண துரைக்கண்ணன் (ஜீவா), தன் பத்திரிகையில் பிரசுரம் செய்திருக்கிறார். எம்.எ.பி.எல். படித்த, பணக்காரக் குடும்ப இளைஞர், இன்னொரு முதலாளியிடம் சென்று பணியாற்றிச் சம்பளம் பெற விருப்பம் இன்றி, வள்ளல் அழகப்ப செட்டியார் துணையோடு தானே பத்திரிகை தொடங்கிச் சொந்த வியாபாரியாகவும், முதலாளியும் ஆனார், எஸ்.ஏ.பி. அண்ணாமலை என்கிற இளைஞர். கல்லூரி நண்பராக இருந்த கூரிய மூளையும் உழைப்பும் மிகுந்த பார்த்தசாரதியைப் பிரசுரிப்பாளராகக் கொண்டு குமுதத்தைத் தொடங்கினார் எஸ்.ஏ.பி.

Kumudam_Arasu_Parthasarathy_Jawahar_Palaniappan_Sundaresan_Pundihan_PRABANJAN

இன்னொரு கட்டுரை – பகவத் கீதை பாடமும் பலான படங்களும்

SAP_Annamalai_Kumudham_Kumudam_Kumuthamஆசிரியர் அறைக்கு அடுத்த அறை துணை ஆசிரியர்களுடையது. வலது பக்கத்தில் நுழைவாயிலையொட்டி முதல் இருக்கை சண்முக சுந்தரத்துடையது. அடுத்த இருக்கை ஜ.ரா. சுந்தரேசனுடையது. இந்த இருக்கைகளுக்குப் பின் பலகைத் தடுப்புக்கு உள்ளே ரா.கி.ரங்கராஜன். சுந்தரேசனுக்குப் பக்கத்தில் என் இருக்கை.

சரியாகப் பத்து ஐந்துக்கு ஆசிரியர் வருகை புரிந்தார். கதவைத் திறந்துகொண்டு எட்டிப் பார்த்தார். நாங்கள் உள்ளே வரலாம் என்பதன் சமிக்ஞை அது. அறையின் உள்ளே நுழைவதையும் ஒரு ஒழுங்கோடு செய்ய நேர்ந்தது. முதலில் சீனியரான ரா.கி.ரங்கராஜன். அதன்பிறகு சின்ன சீனியரான சுந்தரேசன். அதன்பிறகு சின்னச் சின்ன சீனியரான சண்முக சுந்தரம். அதன்பிறகே படு சின்னப் புதுமுகமான நான். ஆசிரியர் இருக்கைக்குமுன் எங்கள் நாற்காலிகள். அதிலும் ஒரு ஒழுங்கு கடைப்பிடிக்கப்பட வேண்டும். முதல் நாற்காலி சீனியருடையது. அடுத்து அடுத்து உள் நுழைந்த வரிசைப்படி அமரவேண்டும். என் நாற்காலியில் நான் மட்டும் அமரலாம். ஒழுங்கு. ஒழுங்கு. ஒழுங்கு உயிரினும் மேலானது.

குமுதம் குறித்து இவ்வளவு பெரிய ஆலாபனை எதற்கு?

அமெரிக்கா வந்தபிற்கு அதே போல் உளம்கவர் கள்வனாக ‘நியு யார்க்கர்’ இதழ் அமைந்து இருந்திருந்தது. சின்ன வயதில் வெள்ளிக்கிழமைக்காகக் காத்திருந்தது போல், இங்கேயும் நியு யார்க்கர் இதழுக்காக காத்திருத்தலும், நூலகத்தில் கிடைத்தவுடன் எடுத்து வாசிப்பதும் சுகம் தந்தது. இசையைப் பற்றி வார்த்தையால் விளக்க முடியாது என்பார்கள். அது போல் நியு யார்க்கர் வாசிப்பனுபவர்த்தைச் சொல்லி புரியவைப்பதும் சற்றே சிரமமே.

தொடர்புள்ள பதிவு: Love The Music Of Coen Brothers Films? You Can Thank Carter Burwell : NPR — Unlike the Coens, Burwell says, Haynes loves to dig into the subtext and meaning of the music. “Not everyone, including musicians, is good at discussing music in verbal terms — but Todd is.” Burwell says. “He’s actually very good at listening to a piece of music and saying in words what that music is doing to the scene, or to the characters, or to the film.” For Carol, Burwell and Haynes agreed that even though the music was critical in communicating those unexpressed feelings and desires, less was more.

நியு யார்க்கர் நல்ல பத்திரிகைதான்… அது தெரிந்த விஷயம்தானே. அதற்கும் இந்தப் பதிவிற்கும், மேலே சொல்லப்பட்டிருக்கும் புத்தகத்திற்கும் என்ன தொடர்பு?

1925ல் நியு யார்க்கர் பிறக்கிறது. அன்று தொடங்கிய பாரம்பரியம் இன்றும் மிகச் சிறப்பாக செயல்படுகிறது. கொஞ்சம் கேலி, நிறைய விமர்சனம், ஆதாரம் சார்ந்த செய்திக் கட்டுரைகள், ஒவ்வொரு இதழுக்கும் முத்து முத்தாக ஒரேயொரு கதை, சற்றே சிலேடையாக இருந்தாலும் பஸ் டிக்கெட் பின்னாடி எழுதப்படும் காதல் பாக்கள் போல் இல்லாமல் நெஞ்சைத் துளைக்கும் கவிதைகள், நியு யார்க் நகர சங்கதிகள், அரசல் புரசலாகப் பேசப்படும் மாநகர வம்பு விஷயங்கள் என்று சுவாரசியமாகவும், ஆழமாகவும், கவன ஈர்ப்பைத் தக்க வைத்துக் கொண்டிருக்கின்றது. நியூ யார்க்கரில் இடம்பெற வேண்டும் என்பதற்காக தங்கள் படைப்புகளை அனுப்பிவிட்டு பல்கலைக்கழக பேராசிரியர்களும் புலிட்சர் பரிசு வென்றவர்களும் காத்திருக்கின்றனர்.

இப்பொழுது எச்.பி.ஓ.வில் வெளியாகும் ’வினைல்’ தொடரின் முதல் எபிசோடை ஹாலிவுட் இயக்குநர் மார்ட்டின் ஸ்கார்சிஸீ இயக்குகிறார். முதலில் துவங்கியவர்கள் எப்படி செய்கிறார்களோ, அதை அப்படியே பின் தொடரும் கலையை டிவி முதல் நியு யார்க்கர் வரை பின்பற்றுகிறார்கள். கால்கோள் இட்டவர்கள் செலுத்திய பாதையில் அடியெடுத்துச் செல்கிறார்கள். சொல்வனத்தில் ’மேற்கில் சின்னத்திரை’ கட்டுரையில் சத்தியமூர்த்தி இவ்வாறு சொல்கிறார்:

இந்தத் திரைக்கதையை இயக்குவதற்கான இயக்குனர்கள் தேர்வும் வித்தியாசமானது. முதல் எபிசோட் மட்டும், திரையுலகத்தின் பிரபலமான இயக்குனரை வைத்து இயக்குவார்கள். பிறகு அவர் பயன்படுத்திய அதே வழிமுறையை வைத்துகொண்டு, அதாவது காட்சி அமைப்பு, ஒளிப்பதிவுக் கோணங்கள், நடிக்கும் முறை ஆகியவற்றை பின்பற்றி வெவ்வேறு இயக்குனர்களை வைத்து இயக்குவார்கள். இந்த தொடர்களைப் பார்க்கும் போது எனக்கு ஏற்படும் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் இவற்றில் முதல் ஸீசனின் முதல் பகுதியில் இருந்து கடைசி ஸீசன், கடைசிக் காட்சி வரை ஒரே முறை, பாணி (Pattern) பயன்படுத்தப் படும். ஒரு சிறு மாற்றம் கூட இருக்காது.

அது போல் அன்று ஆரம்பித்து வைத்தவர்களின் வழிமுறையை நியு யார்க்கர் இன்றளவும் பயன்படுத்தி வருகிறது. துவக்கியவர்களின் பங்கு எவ்வாறு முக்கியம் என்பதை உணரவைக்கிறது. இந்தப் புத்தகம் நியு யார்க்கர் பத்திரிகையைத் துவக்கியவர்களின் வரலாறு. யார் ஆரம்பித்தார்கள், என்ன வழிமுறையைப் பின்பற்றினார்கள், எவ்வாறு எடிட்டிங் செய்தார்கள், எங்ஙனம் தரத்தை நிலைநாட்டினார்கள், எப்படியெல்லாம் பதில் போட்டு கட்டுரையாளர்களையும் படைப்பாளிகளையும் தட்டிக்கொடுத்து வேலை வாங்கினார்கள், எங்கே ஓய்வெடுத்தார்கள், எப்படி பணியில் மூழ்கினார்கள், எப்பொழுது வேறு புத்தகங்களை எழுதினார்கள், வேலையை விட்டு எப்போது விலகினார்கள் என்று சரித்திரத்தை சுவாரசியமாகச் சொல்கிறது.

நாலைந்து பேரைப் பற்றி, அதுவும் ஒரேயொரு வார இதழில் பணியாற்றிய ஆசிரியர் குழுவைப் பற்றி, எழுதிய புத்தகத்தை நான் ஏன் விரும்பி வாசித்தேன்?

சொல்வனம் ஆசிரியருக்கு என்னுடைய கட்டுரைகளைக் கொடுக்கும்போது அவர்களிடமிருந்து கறாரான பதில் வரும். பதாகை எடிட்டருக்கு என்னுடைய படைப்புகளைக் கொடுத்தால் கட் அண்ட் ரைட்டான ஆக்கபூர்வமான ஆலோசனைகளைத் தாங்கிய மறுமொழி மடல் வந்து சேரும். இது போன்ற பதிப்பாசிரியர் + பத்திரிகையாசிரியர் தொடர்புகள்தான் எனக்கு இந்தப் புத்தகத்தின் மீதான சுவாரசியத்தைக் கூட்டியது.

புத்தகத்திற்குள் செல்வதற்கு முன் நியு யார்க்கரின் 90 வருட பாரம்பரியத்தைப் பற்றி மட்டும் அறிந்து கொள்ள விரும்பினால், அவர்களின் இந்த சமீபத்தியப் பதிவுகள் உங்களுக்கு உதவும்:

  1. Ninety Years of The New Yorker – The New Yorker
  2. Out Loud: Ninety Years of The New Yorker – The New Yorker

இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றோர் யார்?

1. வால்காட் கிப்ஸ் (Wolcott Gibbs)

தியேட்டர் விமர்சகர்; நியு யார்க்கில் பிராட்வேயில் நடக்கும் இசை நாடகங்களை அறிமுகம் செய்து ஆராய்பவர். கடுமையான உழைப்பாளி. புனைகதை எழுத்தாளர். இரக்கமின்றி வெட்டித் தள்ளி, — வரும் விஷயங்களை நேர்த்தி ஆக்குபவர். குசும்பு பிடித்தவர். ஹெமிங்வே எழுதும் ஆர்ப்பாட்டங்களை ஜெயமோகன் தொப்பி, திலகம் என்று நக்கலடித்தது போல் இயல்பாக சுட்டுகிறார்.

’இந்தியா டுடே’ போல் இரண்டுங்கெட்டானாக அமெரிக்காவில் டைம் (Time) பத்திரிகை பல்லாண்டுகாலமாக வெளியாகிறது. செக்ஸ் கருத்துக் கணிப்பு, ரஜினி-50 சிறப்பிதழ் என்று வெகு தீவிரமாக இயங்கும் வாராந்தரி. அந்த இதழை நக்கலடித்து 1936ல் ‘நியு யார்க்கர்’ இதழொன்றைக் கொணர்கிறார். அதன் மூலம் காலாகலத்திற்கும் சாஸ்வதமான சிம்மாசனத்தில் ஏறுகிறார்.

New_Yorker_Time_Wolcott_Gibbs_Luce_Profile_Nov_28_1936_Backward_Run_Sentences

இவருடைய எடிட்டிங் கருத்துகள் பயமுறுத்துபவை. “இவ்வளவு தப்பும் தவறுமா எழுதித் தருவதற்கு பதில் உங்க வீட்டு குப்பைத் தொட்டியை சுத்தம் செய்யலாமே” என்னும் ரீதியில் கறாராக செயல்பட்டிருக்கிறார். அச்சுப்பிழைகள், தகவல்பிழைகள், ப்ரூஃப் பார்த்தல் என்று கர்மசிரத்தையாக செயல்பட்டவர். பள்ளியில் படிக்கும் மகன் எழுதும் தபால்களைக் கூட வெகு சீரியஸாக சரி பார்த்து, பிழை திருத்தி, எவ்வாறு தூய ஆங்கிலத்தில் இலக்கணச்சுத்தமாய் எழுதுவது என்று பதில் போட்டவர். (நிஜமாகவே… அதீதமாகச் சொல்லவில்லை)

ஒரு கட்டுரை ரொம்பவே வேலை வாங்குகிறது என்றால், பக்கத்தில் உள்ள ஹோட்டலில் ரூம் போடுகிறார் கிப்ஸ். அந்தக் கட்டுரையின் ஒவ்வொரு பக்கத்தையும் தரையில் பரப்புகிறார். ஒவ்வொரு பத்தியையும் கத்திரிக்கோலால் வெட்டுகிறார். இப்போது நூற்றுக்கணக்கான பத்திகளை கலைத்துப் போட்டு ஒவ்வொன்றாக ஒருங்கிணைக்கிறார். நடு நடுவே விடுபட்ட பத்திகளைக் குறித்து புதிய பக்கங்களில் தட்டச்சுகிறார். அதை ஆங்காங்கேக் கோர்க்கிறார். இப்போது அசல் ஆசிரியர் எழுதிய பத்திகளின் போதாமையும் தொடர்பின்மையும் தேவையான விளக்கங்களும் புலப்படுகிறது.

ஒரு உதாரணத்திற்கு டுல்ஸா பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியாகும் நிம்ராட் சஞ்சிகையை எவ்வாறு கோர்க்கிறார்கள் என்பதை நேற்று இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருந்தார்கள்:
Nimrod_Journal_Magazine_Print_Media_Publisher_Books_Magz_Layout_Papers

ஒரு வார்த்தை எங்காவது தவறான பொருளில் வந்தால் குடிமுழுகிப் போனதாகவேக் கருதுகிறார். “கொஞ்சம் தாமதமாக தவணையை செலுத்தினார் என்பது நேர்மையின்மையைக் குறிக்காதே?” என ஒரு கட்டுரையாளருக்கு வினா எழுப்புகிறார். “அதற்கு வறுமை என்று பெயர் என்றே நினைக்கிறேன்” எனக் குறிப்பிடுகிறார்.

2. ஹாரொல்டு ராஸ் (Harold Ross)

நியு யார்க்கரைத் துவக்கியவர்; மற்றவர்களிடமிருந்து வேலையைக் கறப்பதில் கெட்டி. கொண்ட பதிப்புக் கொள்கையில் இம்மியும் விட்டுக் கொடுக்காதவர். இவருடைய புகழ்பெற்ற மேற்கோள்: “நீ மேதையாக இல்லாமல் இருப்பதால்தான், நான் உன்னை வேலையை விட்டுத் தூக்குகிறேன்!”

What was at stake in the spat between Henry Luce and Harold Ross?

What was at stake in the spat between Henry Luce and Harold Ross?

எஸ்.ஏ.பி. (குமுதம் இதழின் முதலாளி அண்ணாமலை) போல் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமாக ராஸ் தெரிந்திருக்கிறார்.

’அறிமுகமான சில நிமிஷங்களிலேயே உங்களை இயல்பிற்குக் கொணர்ந்து நெருங்குபவர்’: ஹார்ப்போ மார்க்ஸ்
– ‘முகஞ்சுளிக்கவைக்கும் முட்டாள்தனம் கலந்து கொடுரமான வில்லத்தனமான செய்கைகளையும் நிகழ்த்துபவர்’: எட்மண்ட் வில்ஸன்
– ‘அன்பானவர்’: ஹாரியத் வால்டன்
– ’மற்றவர்களிடம் முழுமையாக அன்பு செலுத்த கஷ்டப்பட்டவர்’: ஏ. ஜே. லைபிளிங்
– ’விவேகம் ததும்பும் புத்திசாலி மனிதர்’: ஜானெட் ஃப்ளானெர்
– ‘அவரை மாதிரி சமரசம் செய்து கொள்ளாத காட்டுவாசி மண்ணாந்தை அராஜகவாதியை நான் பார்த்ததே கிடையாது’: டேவிட் கொர்ட்

அலுவலில் நடைபாதையில் எவராவது பேச்சுக் கொடுத்தால் அலறியடித்துக் கொண்டு கண்டும் காணாத மாதிரி அவர்களை புழு போல் ஒதுக்கிவிட்டு ஓடுகிறார். நிறைய கெட்ட வார்த்தை பேசுகிறார். ”வெளிப்படையாக நேர்பட எழுது” என்பதில் உறுதியாக இருந்தவர். வழவழா கொழகொழா என்றில்லாமல் கூறியதையேத் திரும்பக் கூறாமல் எழுது என்று சித்தாந்தம் வைத்தவர். செய்தியாசிரியராக வாழ்வைத் துவக்குகிறார். ’ஒரு இடத்தில் இரண்டு வாரத்திற்கு மேல் இருந்தால் அது நரகம்’ என்று நினைத்தவர்.

ஆனால், ராஸ் தனக்கென்று சில பதிப்பாசிரிய தர்மம் வைத்திருந்தார். அவரைப் பார்த்துதான் மற்ற நால்வரும் கண்கொத்திப் பாம்பாகப் பிழைகளைக் கண்டுபிடித்து, எழுதியவருக்கு விளக்கம் கேட்டு, அதற்கு பதில் விளக்கம் கேட்டு, பிரதியை செம்மையாக்கினார்கள். ‘இதற்கு என்ன ஆதாரம்?’, ‘இவர் எப்போது பிறந்தார்?’, ‘ஏன் இந்தப் பிரயோகம்?’, ‘இது தேய்வழக்கு’, ‘இது சரியான சொலவடை அல்ல’, ‘இதை கொஞ்சம் வாசகர் படிக்கும்படி மாற்றலாமா?’, ‘இது அருவருக்கத்தக்க முறையில் சொல்லப்படுகிறதே’ என வினா மேல் வினா போட்டு, மறுபடி திருத்தி எழுத வைக்கும் முறையை நடைமுறையாக்கினவர்.

பிரதியை அனுப்பியவர்களுக்கு மின்னஞ்சல் இல்லாத அந்தக் காலத்தில் இவர் எழுதிய அஞ்சல்கள் பிரசித்தி பெற்றவை: “தேறாது”, “இது வேண்டாம்”, “இது எங்களுக்கானது இல்லை”, “ரொம்ப லேசாக இருக்கிறது”, “இந்த முறை பிரகாசிக்கவில்லை”, “இப்படி எழுதினால் போதாது”.

இந்த ஐவரைத் தாண்டி தேர்ந்தெடுக்கப்படும் நிலைக்கு ஏதாவதொரு கட்டுரை அடுத்த கட்டத்திற்குச் சென்றால், — புகழ்பெற்ற, நிலையான, சாஸ்வதமான எழுத்தாளருக்கு இருபது முதல் முப்பது பதில் கேள்விகளும் சந்தேக விளக்கங்களும் அனுப்பப்படும். 20/30 மட்டுமே அனுப்பிவைக்கப்பட்டால், அந்தக் கட்டுரை மிகச் சிறப்பாக வந்திருக்கிறது என்று அர்த்தம்.

ஒரு சமயம் ஹாரிமன் என்பவர் பன்னிரெண்டு பக்க கட்டுரையை நியு யார்க்கருக்கு சமர்ப்பிக்கிறார். அவருக்கு ஆறு பக்கத்திற்கு விளக்கம் கேட்டு பதில் அனுப்பப்பட்டிருக்கிறது; நொந்துபோய்விட்டார். ஜாஃப்ரி டி ஹெல்மன் என்பவர் மெட்ரோபாலிடன் அரும்பொருளகம் குறித்து அபுனைவு அனுப்பியிருக்கிறார். அவருக்கு 147 கேள்விகள் விளக்கமாக கேட்டு அனுப்பப்பட்டதாம். ”அதெல்லாம் ரெகார்டே இல்லீங்க”, என்கிறார் ஹெல்மன்.

இது வெறும் முதல் கட்டம். அதன் அடுத்த கட்டமாக தகவல் சோதனை; அதன் பின் விஷயங்கள் குறித்து சம்பந்தப்பட்டவர்களுடன் சரிபார்த்தல். அதன் பின் சம்பவங்களின் உண்மைத்தனம் குறித்த ஆராய்ச்சி. அதன் பின் ப்ரூஃப் பிழை பார்த்தல்; அச்சுக்கோர்த்தல் இன்ன பிற விஷயங்கள் நடக்கும்.

இவ்வளவிற்குப் பிறகும் சில பிழைகள் நுழைந்து விடும். இப்படித்தான் ஒருமுறை குத்துச்சண்டை வீரரான Joe Louis (ஜோ லூயிஸ்) என்னும் பெயர் Joe Lewis (ஜோ லூவிஸ்) என்று தான் எழுத்துக் கோர்க்கும் நியூ யார்க்கரில் அச்சாகிவிட்டதைப் பார்த்து, பலருடன் பயணிக்கும் பேருந்தில், அதிர்ச்சியில் பேப்பரைக் கீழே தவறவிட்டு, கதறிக் கதறி அழுதவர்களை வேலைக்கு வைத்திருந்தவர்.

Helen_Hayes_What_Every_Woman_Knows_1934

ஹெலன் ஹெய்ஸ் என்னும் நடிகையைக் குறித்து ஹாரிமன் இவ்வாறு எழுதுகிறார்: “சாஸ்திரோப்தமாகப் பார்த்தால் அழகில்லைதான்”. ராஸ் பொங்கியெழுந்துவிடுகிறார். “அவள் எப்பேர்ப்பட்ட அழகு! நளினமும் ஒயிலும் சிருங்காரமும் கலந்த அவளின் அழகை ஒழுங்காகச் சொல்லத் தெரியாதவன் எல்லாம் நிருபன் என்று சொல்லிக்கொள்ளவே லாயக்கில்லாதவர்கள்”, என பதில் போடுகிறார். ஏழு நாட்கள், மூன்று கலந்துரையாடல்கள் கழித்து ஒரு ஒப்பந்தத்திற்கு வந்து சேர்கிறார்கள். அச்சில் இவ்வாறு செல்கிறது: “அவள் திரும்பிப் பார்க்கவைக்கும் அழகு அல்ல”.

3. ஜேம்ஸ் தர்பர் (James Thurber)

கடைசிக் காலத்தில் கண் தெரியாமல் போனாலும் மூளை மழுங்காமல் கார்ட்டூன் வரைந்தவர். பதிப்பாளர் ராஸ் சொல்வது போல் ‘ஒரே குரல்; ஒரே நடை; ஒரே விதமான கட்டுரைப் பாங்கு!’ என்னும் ஒழுங்கு தாங்கவியலாமல் அலுத்துப் போகிறார். நியு யார்க்கரில் எழுதுவது, எடிட்டுவது எல்லாம் போரடித்துப் போய்விட, பிராட்வே நாடகம் போடச் சென்றிருக்கிறார். எங்கே இருக்கிறார் எனும் அடிச்சுவடே தெரியாமல் போகுமாறு பெர்முடாவில் போய் இரண்டு மாதம் காணாமல் போக்கிக் கொண்டிருக்கிறார்.

james thurber_Secret_Life_Of_Walter_Mitty_new_Yorker_Mind

‘இவர்கள் என்ன ஆனார்கள்?’ என்று தர்பர் எழுதிய பகுதி பெரும் புகழ்பெற்றது. சின்னவயதிலேயே சாதித்தவர்கள், வயதான பிறகு என்னவாக இருக்கிறார்கள் என்பதையும், பத்தாண்டுகள் முன்பு புகழின் உச்சியில் இருந்தவர்கள், இப்பொழுது என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று துப்புதுலக்கி ஆராய்ந்து அவர்களின் வாழ்க்கையை விவரிப்பதும் வாசகர்களைக் கவர்ந்தது. அதனால், சில பல சட்டப் பிரச்சினைகளும் அவதூறு வழக்குகளும் தனி மனிதர்களின் அந்தரங்கத்தில் அத்துமீறி எட்டிப்பார்ப்பதாகக் குற்றச்சாட்டும் வந்துசேர்ந்தது.

அந்தக் காலத்தில் நியு யார்க்கரின் சில பகுதிகளை எவர் எழுதினார் என்று தெரியாமல், பெயர் போடாமல் வெளியானது இவருக்கு உவக்கவில்லை. தன்னுடைய முத்திரை பதிக்கும் துணுக்குகளிலும் நகரம் குறித்த நடப்புக் கட்டுரைகளிலும் தன் பெயர் வரவேண்டும் என தர்பர் எதிர்பார்த்தார். ஆனால், முதலாளி ராஸ் அதற்கு ஒப்பவில்லை.

ராஸ் என்பவருக்கு பயணத்தின் முடிவில் எங்கே செல்ல வேண்டும் என்னும் இறுதி குறித்த தூரப்பார்வை இருந்தது. தர்பர் என்பவருக்கு அதற்கான செயல்முறை திட்டமும், வழியில் அமைக்கவேண்டிய கூடாரங்களும், ஒவ்வொன்றையும் எவர் செய்வார் என்பது குறித்த பணிப் பகிர்தல்களும் முக்கியமாக இருந்தது. யாருடன் எப்பொழுது தொலைபேசுவது, எவரைத் தொடர்பு கொண்டால் எது கிட்டும், யார் எதைத் திருத்துவார்கள், எப்பொழுதுக்குள் வேலையை முடிக்க வேண்டும் என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டாகச் சொல்லிச் சென்றார்.

4. ஈ.பி. வொயிட் (E.B. White)

இவரை இவரின் குழந்தைகளுக்கான புத்தகங்களால் அறிந்திருப்பீர்கள். நால்வரில் அமைதியானவர்; ஆனால், பதிப்பாசிரியர் ஹாரொல்டின் செல்லப்பிள்ளை. மனைவியையும் (கேத்தரின்) நியு யார்க்கரில் கண்டுபிடித்து, ஆசிரியர் குழுவை ஆற்றுப்படுத்தியவர். இன்றளவும் நியு யார்க்கரில் அலங்கார வார்த்தைகளோ, ஆடம்பரமான சொல்ஜாலங்களோ பெரிய சிலம்பாட்ட உருவகத்தோரணங்களோக் கிடைக்காது. இதற்கு தோற்றுவாயாக ஈபி ஒயிட் இருக்கிறார். நேரடித்தன்மை; அதன் பிரதிபலிப்பு – அம்புட்டுதானே விஷயம் என்பதை விவரிக்கும் நடையைத் தந்திருக்கிறார்.

E_B_White_Books_Stuart_Little_Charlottes_Web_Trumpet_Swan_New_Yorker_Kids_Children

5. காத்தரின் வொயிட் (Katharine White)

ஒன்றரை பக்க நாளேடாக வந்து கொண்டிருந்த துண்டுப் பத்திரிகையை ”நியூ யார்க்கர்டா!” எனச் சொல்ல வைத்தவர். நியு யார்க்கருக்கு வாழ்க்கையை அர்ப்பணித்த ஈபி. ஓயிட்டை மணந்தவர்.

American_Humor_Classics_New_Yorker_Katharine_White_EB_Books

ஹிரோஷிமா

Hiroshima_New_Yorker_1946_Issue

இந்த நூலின் 12ஆம் அத்தியாயம் நியு யார்க்கரின் சில அதிரடி இதழ்களையும் கருத்துக்களையும் குறித்துப் பேசுகிறது.

நியூ யார்க்கர் இதழோ கிண்டல் கொண்ட கருத்துப் படங்களும் கேலிச்சித்திரங்களும் கொண்டது. ஊரில் நடக்கும் டிராமா, சினிமா, இசைக் கச்சேரி, ஓவியக் கண்காட்சி, அருங்காட்சியகத்தின் நிகழ்வுகள், நல்ல உணவு, புதிய கலைகள் என்று வாழ்க்கையைக் கொண்டாடித் தீர்ப்பதைக் கொள்கையாகக் கொண்டது. அது போன்ற இதழில் இரண்டாம் உலகப் போரின் தீவிரத்தை எப்படிக் கொணர்வது?

ஒரு நாட்டின் அரசன் கொலையுண்டால் அதைக் குறித்து செய்திக் கட்டுரை வெளியிடலாம். அமெரிக்காவின் பொம்மலாட்ட ராஜாங்கமான இராக் அரசரின் ஆட்சி கவிழ்ந்தால் அதை ஆராயலாம். லெபனானுக்கு அமெரிக்க இராணுவத்தை அனுப்புவதையும் கியூபாவில் காஸ்ட்ரோ அரியணையை நெருங்குவதையும் அலசலாம். ஹங்கேரியின் தலைவரான இம்ரே நகி வெட்டவெளியில் வெட்டப்படுவதை விவரிக்கலாம். ஸ்புட்னிக் விண்வெளிக்கோளும் எக்ஸ்ப்ளோரர் விண்கலங்களும் ஏவப்படுவதை அறிவியல் தகவல் கட்டுரைகளாக்கலாம். தலைக்கு மேலே சுற்றும் செயற்கைகோள்கள் எல்லாம் அணுஆயுதங்களாகச் சுழலும் அபாயத்தை சங்கு கொண்டு முழங்கலாம்.

அதே ரீதியில் எண்பது மில்லியன் அமெரிக்கர்கள் இறந்த கொடுமையை எப்படி உரைப்பது? ஒரு நாட்டின் மீது குண்டு போட்டு மேலும் பல கோடி மக்களைக் கொன்று குவித்ததை எவ்வாறு எடுத்துரைப்பது. ஆகஸ்ட் 31, 1946ஆம் ஹிரோஷிமா இதழாக வெளியானது: 1946-08-31 – The New Yorker

இதழ் முழுக்க ஒரேயொரு கட்டுரைதான். 31,347 வார்த்தைகள் கொண்டு நேரடியாக ஜப்பான் சென்று வந்தவரின் அனுனவப் பகிர்வு. அது மட்டுமே ஒரு இதழ் முழுக்க ஓடுகிறது.

சமீபத்தில் நியு யார்க் வந்திருந்தபோது 911 நினைவுச்சின்னம் சென்று வந்தேன். அங்கே எல்லா சம்பவங்களையும் காலவாரியாக நிகழ்வுவாரியாக தெளிவாக புகைப்படங்களுடன் போட்டிருந்தார்கள். அதில் ஒரு இடத்தில் ரொனால்டு ரேகனும் அப்பா புஷ்ஷும் தாலிபான் தலைவர்களுடன் சமபந்தி பேச்சுவார்த்தை நடத்துவதைச் சொல்லும். அதை ஒட்டி அப்போதே ஈ.பி. ஒயிட் எழுதுகிறார்:

Build the museum, O builders! Have it ready for me when I come.
Then, when the radioactivity has been dissipated and the rays no longer threaten my white corpuscles,
Letter the proper sign and let me in. And don’t forget
To give the date. I like dates.
July 16, 1945.
Give the hour, the minute, the very second of the blast.
Exactly five-thirty A.M. “Beginning of the atomic age.”
Alamogordo, Alamogordo — my last pilgrimage. Earliest bomb crater in the atomic world. Most famous deathsite [sic].
Note, ladies and gentlemen, how the effect radiates in all directions,
With color and shading gradually growing darker like the petals of a flower.
Those who are hungry will find an appetizing, moderately priced
Meal in the Nuclear Snack Bar, just outside the gate, and
Clean rest rooms.
Take home a souvenir of atomiste [sic] for the children.

oOo

முதலாளி ராஸ் காலமான பிறகு நியு யார்க்கருக்கு என்னவாகும் என்று எல்லோரும் பயந்த போது, நியூ யார்க்கரின் அடுத்த எடிட்டர் சொல்கிறார்: ”சிக்மண்ட் பிராயிட் இறந்த பிறகும் மனோவியல் ஆராய்ச்சித் தொடர்கிறது அல்லவா…”. இன்றும் நியு யார்க்கர் அன்றைய தரமும் விழுமியங்களும் வழுவாமல் வெளியாகிறது.

அப்படி என்ன சித்தாந்தம்?

அவருடன் பழகியவரைக் கேட்டால், “ராஸுக்கு இரண்டு தெய்வங்கள் இருந்தார்கள்: பெரிய எழுத்து மற்றும் சிற்றெழுத்து (uppercase and lower case)”.

கொஞ்சம் வெளியில் இருந்து நோக்கினால், ‘பொய்மையை அம்பலப்படுத்துவோம். போலித்தனத்தை வெளிக்கொணர்வோம்!’

வில்லியம் சரோயன் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர். ‘தி புயூடிஃபுல் பீப்பிள்’ வெளியிடுகிறார். நியு யார்க்கர் விமர்சனத்தில் ‘சுத்த நான்சென்ஸ்’ என்று போட்டுடைக்கிறார்கள்.

சாமர்செட் மாம் குறித்து: “நம்முடைய தரம் எவ்வளவு தாழ்ந்து போயிருக்கிறது என்பதற்கு இவர் ஒரு குறிப்பிடத்தக்க வெளிப்படையான அடையாளம்.”

இப்படி எல்லாம் நேர்மையாக எழுதினாலும் எல்லாவற்றையும் விளையாட்டாக, அனைத்திலும் குழந்தைத்தன்மையோடு அணுகுவது நியு யார்க்கரின் சித்தாந்தம் எனலாம். மெரிட் நெல்சன் என்னும் பள்ளி மாணவன் நியு யார்க்கருக்கு கடிதம் எழுதிக் கேட்கிறான்: “உங்களின் நோக்கமும் குறிக்கோளும் என்னவென்று சொல்ல முடியுமா?”. அவனுக்கு பதில் தபால் வந்தது: “எங்களுக்கு எந்த இலட்சியமும் கிடையாது.”

நூலை எழுதிய தாமஸ் வின்சிகுவேரா (Thomas Vinciguerra) நாற்பத்தியேழு பக்கங்களுக்கு அனுபந்தமாக அடிக்குறிப்புகளையும் தொடர்பான கட்டுரைகளையும் சுட்டுகிறார். மேலும் பத்து பக்கங்களுக்கு இந்த ஆராய்ச்சித் தொடர்பான புத்தகங்களையும் இந்த நால்வர் (ஐவர்?) எழுதிய ஆக்கங்களையும் குறிப்பிடுகிறார். தொண்ணூறு வருட நியு யார்க்கர்களைப் படிப்பது மட்டுமில்லாமல் கிப்ஸ் குடும்பம், அவரின் பல மனைவிகள், மகன்கள், மகள்கள் என்று ஊர் ஊராக வாழ்ந்த இடங்களையும் மனிதர்களையும் தேடித் தேடி பேட்டியெடுத்து நூலை எழுதியிருக்கிறார். இதே மாதிரி மணியனுக்கும் ‘ஜெமினி’ வாசனின் மகனான விகடன் எஸ். பாலசுப்ரமணியத்திற்கும் இடையே உள்ள பிணக்குகளையும் சாவிக்கும் அசோகமித்திரனுக்கும் இடையே உள்ள நட்பையும் காலச்சுவடு கண்ணனுக்கும் உயிர்மை எஸ். அப்துல் ஹமீது (மனுஷ்யபுத்திரனுக்கும்) நடுவே உள்ள பரஸ்பர புரிதல்களையும் தொகுக்க வேண்டும்.

தமிழ் மின் இதழ்: ஒரு பார்வை

தமிழ் மின்னிதழ் பிடிஎஃப் வடிவில் வருகிறது. இது போன்ற முயற்சிகளுக்கு 2003ல் தமிழோவியம் தீபாவளி, பொங்கல், ஆண்டு விழா சிறப்பிதழ் மலர்களையும் ஸ்ரீதர் நாராயணன் தயாரித்த பண்புடன் மடலாடற் குழும சிறப்பிதழ்களையும் முன்னோடியாகப் பார்க்கிறேன்.

Tamil_Magazine_Specials_issues

எழுத்தாளர்களுக்கு சிறப்பிதழ் கொண்டு வருவது நல்ல விஷயம். ஆனால், கருப்பொருள் சார்ந்து, ஒரே ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு இரு பக்க எண்ணங்களையும் மாற்றுக் கருத்துக்களையும் ஆழமாக அலசுவது அதனினும் சாலச் சிறந்தது.

அந்த மாதிரி ஏன் — தமிழ் மேகசின், பதாகை போன்ற தமிழில் வரும் சிற்றிதழ்கள் செய்வதில்லை?

இதழை வெளியிட்ட ‘காலச்சுவடு’ கண்ணன் இவ்வாறு சொல்லி இருக்கிறார்:

பெருமாள் முருகன் சிறப்பிதழாக, அவர் படைப்புகளை விவாதித்து இந்த இதழ் வெளிவருவது பெரு மகிழ்ச்சி.

நிஜமாகவே பெருமாள் முருகனை அலசி ஆராய்ந்து இருக்கிறார்களா அல்லது

  • புத்தக அறிமுகம்,
  • அவர் எழுதிய நாவலை விதந்தோதுதல்,
  • ஏற்கனவே இணையத்தில் கிடைப்பதை வைத்து வாந்தியெடுத்தல்,
  • கதைச் சுருக்கத்தை மட்டும் சொல்லி விமர்சனம் என்று பஜனை செய்யுதல்,

போன்றவை மட்டுமே செய்துவிட்டு

  • சம காலத்தின் மற்ற ஒப்புமையான படைப்புகளுடன் சீர்தூக்கி அலசுதல்,
  • எழுத்தாளனின் வளர்ச்சி: துவக்க காலப் படைப்புகளுக்கும் பிற்கால ஆக்கங்களுக்கும் இடையே உள்ள ஒப்பீடு,
  • எழுத்தாளரின் சிறுகதைகளுக்கும் நெடுங்கதைகளுக்கும் உள்ள வித்தியாசங்கள் / ஒற்றுமைகள்,
  • எழுதியவரின் நடை, கதைக்கரு, களன், உத்தி போன்றவை சார்ந்த குறுக்குவெட்டுத் தோற்றம்,

போன்றவையும் அலசப்பட்டிருக்கிறதா என்று இனிதான் ஆராய வேண்டும்.

இப்போதைக்கு புறத்தோற்றம் பற்றிய குறிப்புகள். புறத்தோற்றம் ஏன் முக்கியம் ஆகிறது?

மத நம்பிக்கையாளருக்கு அந்த மதத்தின் சின்னங்கள் முக்கியம். இஸ்லாமியருக்கு தொப்பியும் தாடியும். வைணவருக்கு திருமண். பௌத்தருக்கு அவர்களின் சிவப்பும் ஆரஞ்சும் கலந்த வஸ்திரம். இறைவரை பின்பற்றுவர்களுக்கும் இலக்கியத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று விட்டுவிட்டாலும், கல்யாணம் / காட்சி என்றால் ஒவ்வொருவருக்கும் ஒரு உடை பாவனை இருக்கிறது. மோதிரம் மாற்றிக் கொள்வது, வேட்டி கட்டுவது என்று ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு அலங்காரம் தேவைப்படுகிறது.

இவ்வளவு ஏன்? கோட்டு சூட்டு போட்டுக் கொண்டு கோடைகாலத்தில் கடற்கரைக்கு சென்றால், எப்படி எடுத்துக் கொள்ளப்படும்? ஒன்று அங்கிருக்கும் பிகினி அழகர்களை தரிசிக்க வந்த பரதேசி என நினைத்து தர்ம அடி வழங்கப்படும். இரண்டாவது, அத்தனை வெயில் அடிக்கும் அந்தச் சூழலுக்கு, அவ்வளவு தடிமனான மேலாடை தேவை கிடையாது.

“தமிழ் பத்திரிகை”யின் வடிவமைப்பும் சோபையாக இருக்கிறது. அட்டைப்படம் எடுப்பாக இருப்பது போல், பிடிஎஃப் கோப்பின் உள்ளே, சுவாரசியமான, கவர்ச்சியான, பக்க அமைப்பு கிடைக்கவில்லை.

Layout_woes_Thamizh_Magazine_Pages_Titles_Headings_Headers

– தலைப்புகளுக்கு சிறிய எழுத்துரு, அதே தடிமனில் எழுத்தாளரின் எழுத்துரு என்று ஏனோ தானோ என்று அவசரகதியில் போட்டிருக்கிறார்கள்.

– ஒவ்வொரு கட்டுரையும் தனித் தனிப் பக்கங்களில் துவங்காமல், முந்தைய கட்டுரை முடிந்த சடுதியில், அடுத்த கட்டுரை, முக்கால் பக்கத்தின் இறுதியில் உட்கார்ந்து இருக்கிறது.

– கவிதா முரளிதரனுக்கு பெருமாள் முருகனை விட மிகப் பெரிய புகைப்படம் போட்டு இருக்கிறார்கள். சுரேஷ்கண்ணன் போன்ற ஆண்களுக்கு தபால்தலை அளவு ஒளிப்படம் கூட கிடையாது.

– திடீரென்று @iAgarshana எல்லாம் வருகிறது. அது ஃபேஸ்புக் முகவரியா, எல்லோருக்கும் இது போல் சுட்டல் உண்டா, எந்த வலையகத்தின் உரல் இது என்று எந்தக் குறிப்பும் கிடைக்கவில்லை. இந்த மாதிரி இடங்களில் இந்தப் படைப்பு குறித்த சிறு முன்னோட்டத்தையும் அது எந்த மாதிரி ஆக்கம் (புனைவு, கட்டுரை, டிவிட் தொகுப்பு) என்பது குறித்த அறிமுகமும் அவசியம். அவை போன்ற எதுவும் இல்லாமல், அந்தப் படைப்பும் மேலெழுந்தவாரியாக சேமிக்கப்பட்டிருக்கிறது. கண்டதையும் கண்ட மேனிக்குத் தொகுக்க, இது நோட்டு புத்தகம் அல்ல. காலாண்டுக்கு ஒரு முறை வரும் அச்சிதழ். அதற்குரிய சிரத்தையும் பொறுப்புமில்லாமல் வெளியாவது உள்ளடக்கத்தையே ஏளனம் செய்கிறது.

No_Author_Notes_Who_Is_This

– மேலே இருக்கும் பக்கத்தின் இறுதியில் ஒருவரின் ஒளிப்படம் இருக்கிறது. அவர் யார்? அவரின் கதையை எப்படி இந்த இதழுக்குத் தேர்ந்தெடுத்தார்கள்? எழுதியவரே அந்தக் கதையை ‘தமிழ்’ மின்னிதழுக்காக மொழிபெயர்த்தாரா? ஏன் இந்தப் புனைவை மொழிபெயர்த்தார்? இப்படி எதுவும் இல்லாமல், ‘எடுத்தோமா… சிரைத்தோமா!’ என்பதற்கும் வலைப்பதிவில் கண்டதையும் கிறுக்குவதற்கும் என்ன வித்தியாசம்?

How_was_This_Created

– அதே போல் இந்தப் படத்தையும் எடுத்துக் கொள்ளலாம். நாகராஜ் இதை எவ்வாறு உருவாக்கினார்? அவரே வரைந்தததா? எந்த வகை உத்திகளை வைத்து எத்தனை கால அவகாசத்தில் இந்தப் படத்தை உருவாக்கினார்? ஃபோட்டோஷாப் போன்ற கருவிகளை உபயோகித்தாரா? தாளில் வரைந்தாரா? நாகராஜின் மற்ற படைப்புகள் எங்கே கிடைக்கும்?

– சுதந்திரம் என்று பக்கத்திற்கு பக்கம் அடிக்குறிப்பு இட்டிருக்கிறார்களே… எது சுதந்திரம், எப்பொழுது சுதந்திரம், யாருக்கு சுதந்திரம், எதற்கு சுதந்திரம் என்று ஒரு குவிமையம் கிடைக்காமல், தமிழ் சினிமாவிற்கு தமிழில் தலைப்பு வைப்பது போல், இந்த இதழுக்கும் ஏதோவொரு தலைப்பு வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இரண்டாவது இதழை வெளியிட்டிருக்கும் மனுஷ்யபுத்திரன் இவ்வாறு சொல்கிறார்:

சமீபத்தில் ஒரு நேர்காணலில் தமிழில் சிற்றிதழ் இயக்கதிற்கு எதிர்காலம் இருக்கிறதா? என்று என்னிடம் கேட்டார்கள். நான் அதற்கு ‘நிச்சயம் இருக்கிறது. ஆனால் அச்சு வடிவிலான சிற்றிதககள் பெருமளவு மறைந்து அவை இணைய இதழ்களாக நீடித்திருக்கும்’ என்று சொன்னேன். இந்த இதழை பார்க்கும்போது அந்த எண்ணம் வலுப்படுகிறது. பத்திரிகை நடத்துவதன் லெளகீக கஷ்டங்கள் இல்லாமல் படைப்பு சார்ந்து மட்டும் ஒரு இதழாளன் முக்கிய கவனம் செலுத்த இந்த தளம் பெரிதும் பயன்படும்.

ஞாநி இவ்வாறு எழுதுகிறார்:

மின்னிதழ்களையும் படைப்பாளிக்கும் வாசகருக்கும் இடையே இருக்கக்கூடிய அச்சிடுபவர், விநியோகஸ்தர், கடைக்காரர் என்ற சக்திகளைத் தவிர்த்து நேரடியாக உறவு கொள்ள உதவும் முக்கிய வடிவமாகவே நான் பார்க்கிறேன். இந்த முயற்சியில் எந்த வணிக சமரசமும் ஊடுருவாமல் இயங்கும் வசதி படைப்பாளிகளுக்குக் கிட்டுவது என்பது மிக முக்கியமான மாற்றமாகும். நவீன தொழில்நுட்பம் என்பது வணிக நுகர்வுக் கலாசாரத்துக்குத்தான் பயன்படும் என்ற புரிதலையும் இது மாற்றியமைக்கிறது. இதழ் நடத்துதல், படம் எடுத்தல் ஆக்கியவற்றையெல்லாம் மேலும் ஜனநாயகப்படுத்துகிறது. எனவே இதை நாம் எல்லாரும் வரவேற்கவேண்டும்.

– எல்லாமே தெரிந்த, புழக்கமான பெயர்கள், இணையப் பிரமுகர்கள். இந்த மாதிரி பிரபலங்களை மட்டும் வைத்து மின்னிதழ் எதற்காக நடத்த வேண்டும்? அறியாத எழுத்துக்களை, புகழ் பெறாத எழுத்தாளர்களை, தெரியாத ஆக்கங்களை முன்னிறுத்துவதற்கு சிற்றிதழ் வாயிலாக இருக்க வேண்டும். அச்சிதழ்கள் போல், நாலாயிரம் ஃபாலோயர்ஸும் நாற்பது வலைப்பக்க வாயிலும் கொண்டவர்களை வைத்து வாந்தி எடுக்கக் கூடாது.

சம காலத்தில் ஆங்கிலத்தில் வெளிவரும் சில பத்திரிகைகளை இங்கு ஒப்பிட்டு பார்க்கலாம். கீழே ஆறு பத்திரிகைகளின் சமீபத்திய இதழ்களின் முகப்பும் அமைப்பும் பார்க்கலாம்:

PN_Review_Literary_Quarterly_Essay_Weekly_Issues_Magz_Magazines

தமிழ் மின்னதழின் ஆசிரியர் சரவணகார்த்திகேயன் இவ்வாறு சொல்கிறார்:

அச்சிதழில் ஒவ்வொரு பக்கமாய்ப் புரட்டித்தான் குறிப்பிட்ட படைப்பை அடைவோம். ஒருவேளை உள்ளடக்கம் கொடுக்கப்பட்டிருந்தால் அதன் மூலம் பக்க எண்ணை அறிந்து கொண்டு குறிப்பிட்ட படைப்புக்குத் தாவலாம். இது வரை தமிழ் இதழிலும் சாத்தியம். உள்ளடக்கம் கண்டு, பக்க எண் அறிந்து, நீங்கள் பயன்படுத்தும் PDF reader-ல் பக்க எண் கொடுத்தால் அழைத்துச் சென்று விடும். ஹைப்பர்லிங்க் கிடையாது! (சேர்ப்பது சுலபமெனினும் தவிர்த்தேன்.)

சுருங்கச் சொன்னால் ஓர் அச்சு இதழை நீங்கள் எப்படிக் கையாள முடியுமோ அப்படியே இதையும் கையாள வேண்டும்.

இந்தக் கருத்து ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல. ஓலைச்சுவடியில் ஒற்றெழுத்து இல்லாமல் எழுதினோம், நாலு வரி மட்டுமே எழுதினோம் என்று இன்றும் தொங்கிக் கொண்டிருக்கவில்லை. நவீன சாதனங்களை, புதிய நுட்பங்களை, வசதியான வடிவங்களை கையாள்கிறோம். கியாஸ் அடுப்பு வந்தபிறகும் கரி அடுப்பில்தான் சமைப்பேன் என்று அடம்பிடிப்பது முட்டாள்தனமானது.

எழுதுபவர்களுக்கு காசும் தரமாட்டேன்; எழுதியவற்றை வெளியிடுவதிலும் புதுமை செய்ய மாட்டேன்; எழுதுபவர்களிலும் புதியவர்களை அடையாளம் காட்ட மாட்டேன்; எழுதப்படும் கருத்திலும் சிதறலாக, கிடைப்பதை வைத்து ஒப்பேற்றுவேன் – என்ற முன்முடிபை இதன் தயாரிப்பாளர்கள் கைவிட வேண்டும்.

அன்பர்களுக்கு நான் மீண்டும் நினைவூட்ட விரும்புவது ஒன்றைத் தான். தற்போதைக்கு தமிழ் தீவிர இலக்கிய இதழ் அல்ல; போலவே வெகுஜன இதழும் அல்ல. இடைப்பட்டது. ஆனால் இதன் எதிர்காலப் பயணம் தீவிர இலக்கிய இதழ் என்பதை நோக்கியதாகவே இருக்கும். அதுவரை கசியவிருக்கும் சுஜாதாத்தனங்களை தீவிரர்கள் பொறுத்தருளலாம்.

இந்த இதழில் எழுதியவர்களில் பார்த்தவுடன் பரிச்சயமான வலை / அச்சுப் பத்திரிகைப் பெயர்கள் சிலவற்றை இங்கு சொல்லிப் பார்க்கிறேன்
– கவிதா முரளிதரன்
– சுரேஷ் கண்ணன்
– கிருஷ்ண பிரபு
– லேகா
– கவின் மலர்
– நர்சிம்
– யுவகிருஷ்ணா
– அதிஷா
– என் சொக்கன்
– முரளிகண்ணன்
– எஸ்.கே.பி. கருணா
– ஜிரா

இதழ் பெரும்பாலும் என் உழைப்பில் மட்டுமே வெளியாகப் போகிறது என்பதால் லேஅவுட் எளிமையானதாகவே அமையும். படைப்பிற்குப் பொருத்தமான‌ ஓவியம், புகைப்படம் சேர்த்திருக்கலாம் எனக் குறைப்பட வேண்டாம்.

‘செய்வன திருந்தச் செய்’ என்பது ஆத்திச்சூடி. வேலையை எடுத்துக் கொண்டால் அதில் நம்முடைய 100% மின்ன வேண்டும். சால்ஜாப்பு சொல்வதை விட்டுவிட்டு, பொருத்தமான நபர்களிடம் பொறுப்புகளை பகிர்ந்தளித்தல், ஆக்கங்களில் மேலும் செப்பனிடுதலை — அதே இதழில் வெளியாகும் சக படைப்பாளிகளிடம் கருத்து கேட்டு செதுக்குதல் என்று இந்த விஷயம் மேன்மையுற வேண்டும்.

ஜெயமோகன் இவ்வாறு எழுதுகிறார்:

இணையத்தில் உதிரி குறிப்புகளாக வெளியாகிக்கொண்டிருக்கும் எழுத்துக்களை ஒரே இடத்தில் பிரசுரிப்பது இதன் நோக்கம். பொதுவாக இணையதளம் என்பதே இணையஇதழாக இங்கே கொள்ளப்படுகிறது. ஆனால் இவ்விதழ் இணையம் மூலம் வாசிக்கக் கிடைக்கும் இதழ். தரவிறக்கம் செய்தோ நேராகவோ வாசிக்கலாம்.

இணையத்தில் கிடைக்கும் வலைப்பதிவு ஒருங்கிணைப்பாளர்களையும் திரட்டிகளையும் இணையப் பத்திரிகைகளையும் பார்க்கலாம்:

இவை எல்லாம் விகடன் மாதிரி ஒரே தரத்தில், கொள்கையோடு இயங்காவிட்டாலும், அட்டையில் ஏமி ஜாக்ஸனின் கவர்ச்சிப்படம் போட்டுவிட்டு, நடிகையின் பாகங்களை மறைக்குமாறு ‘மதுவருந்தி சீரழியும் தமிழன்’ என்று போலி பம்மாத்துகளில் ஈடுபடுவதில்லை.

கீழே விகடனின் ஃபேஸ்புக் பக்க உரையாடலும் சாம்பிள் அட்டைப்படமும்:

AV_Tamil_Magazine_Porn_Anandha_Vikadan_Timepass_Online_Vikatan_Com

ஆனந்த விகடன் மாதிரி இதழ்களுக்கு அகம் போன்ற மின்னிதழ்கள் நல்ல மாற்று என்பதில் விகடன் குழுமத்திற்கே சந்தேகம் இருக்காது. ’தமிழ்’ இதழை விட, வடிவமைப்பில் ‘அகம்’ போன்ற மின்னிதழ்கள் மிளிர்கின்றன என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து கிடையாது

மீண்டும் பெருமாள் முருகன் + சுதந்திரம் + தமிழ் மின்னிதழ் விமர்சனத்திற்கே வருவோம்.

தமிழில் வரும் சிற்றிதழ்கள் என்று தமிழ் ஸ்டூடியோ பக்கத்தில் இவற்றைச் சொல்லி இருக்கிறார்கள்:

  1. அணங்கு
  2. அணி
  3. அதிர்வு
  4. அநிச்ச
  5. அம்ருதா
  6. ஆக்காட்டி | aakkaddi.com
  7. ஆயுத எழுத்து
  8. இனிய நந்தவனம்
  9. இனிய ஹைக்கூ
  10. உங்கள் நூலகம்
  11. உயிர்மை
  12. உழைப்பவர் ஆயுதம்
  13. உன்னதம்
  14. கணையாழி
  15. கதை சொல்லி
  16. கலை
  17. கல்வெட்டு பேசுகிறது
  18. கவிதாசரண்
  19. கனவு
  20. காலச்சுவடு
  21. காலம்
  22. கிழக்குவாசல்
  23. குழலோசை
  24. கூட்டாஞ்சோறு
  25. சமரசம்
  26. சோலைக்குயில்
  27. சௌந்தரசுகன்
  28. தச்சன்
  29. தமிழ் நேயம்
  30. தமிழ் பணி
  31. தலித்முரசு
  32. தாமரை
  33. தாய்மண்
  34. திரை
  35. தீராநதி
  36. தை
  37. நடவு
  38. நம் உரத்த சிந்தனை
  39. நவீன விருட்சம்
  40. நறுமுகை
  41. நிழல்
  42. படப்பெட்டி
  43. பன்முகம்
  44. புதிய பார்வை
  45. புதிய புத்தகம் பேசுது
  46. புதுகைத் தென்றல்
  47. புதுவிசை
  48. பெண்ணியம்
  49. மண்மொழி
  50. மலர்
  51. மீண்டும் கவிக்கொண்டல்
  52. முகம்
  53. மெய்யறிவு
  54. யாதும் ஊரேமது
  55. வடக்கு வாசல்
  56. வல்லினம்
  57. விழிப்புணர்வு

இவற்றில் பல – இன்று வெளியாகவில்லை. இவற்றில் சில பெரும் குழுமங்களான குமுதம் போன்றவற்றில் இருந்து அதற்கான நிதியாதாரங்களுடன் வெளியாகின்றன. இவற்றில் – மனுஷ்யபுத்திரன் வெளியிடும் உயிர்மை போல் சில பத்திரிகைகள் அரசியல் கட்சி சார்பானவை. அவற்றின் கொள்கைகளை, தலைவர்களை, சித்தாந்தங்களை – விமர்சன நோக்கு இல்லாமல் முன்னிறுத்தி வெளியிடப்படுபவை.

ஆனால், பலவும் தனி மனிதரின் விருப்பத்தால் உண்டாகுபவை. அவற்றில் காணக் கிடைக்காத நேர்த்தியும் வெரைட்டியும் இணைய இதழ்களில் கிடைக்க வேண்டும். அச்சுக்குரிய நிர்ப்பந்தந்தங்களும் பொருட்செலவும், வலைவெளியில் கிடையாது.

No_Images_where_they_are_required_No_Notes_All_Caps_Wiki_Style_Entry

– விக்கிப்பிடியா போன்ற இந்தப் பக்கத்தின் அவசியம் என்ன? ஆங்கில எழுத்துக்களை எல்லாம் பெரிய அப்பர்கேஸ் எழுத்துக்களாகவே போடுதல் போன்றவை சிறிய பிழைகள். காலச்சுவடு ஆசிரியர் குழுவில் எப்போது இணைந்தார் போன்ற தகவல் விடுபடுதல்கள் இன்னும் ஆபத்தானவை. எளிதில் தவிர்க்கக்கூடியவை.

– மோசமான புற உருவத்தை வைத்து அகத்தை மதிப்பிட முடியாது. முழுக்க படித்துவிட்டு, உள்ளடக்கத்தின் செறிவை தனியாக எழுத முயல்கிறேன்.

நான் எழுத நினைப்பதை எல்லாம், ஜெயமோகன் எண்ணியும் எழுதியும் வைத்திருக்கிறார்:

பெரும்பாலான இணைய இதழ்களில் எதுவும் வெளியாகும் என்ற நிலை உள்ளது. அதை அதன் ஆசிரியர்களே வாசிப்பதில்லை. அதில் ஒரு தேர்வு இல்லை. விளைவாக ஏராளமான தரமற்ற பக்கங்கள் முன்வைக்கப்படும்போது வாசகன் காலப்போக்கில் சலித்து விலகிவிடுகிறான்

சமீபத்தில் வாசித்த ஆங்கில சிறு பத்திரிகைகள், குறுகிய வட்டத்திற்குள் வெளியாகும் சஞ்சிகைகள் குறித்த என்னுடைய பதிவு: நூலகம் – 2015 புத்தகங்கள்

வலைப்பதிவு – அட்டென்ஷத்துவம்

முந்தைய ட்வீட்ஸ் தொகுப்பு: கோடிங் – நிரலித்துவம்

Sujatha: Printing & Spelling Mistakes

அச்சுப்பிழைகளில் நகைச்சுவை இருக்கிறது.

‘சம்போ கந்தா’ என்பதை ‘சம்போகந் தா’ என்று அச்சடித்தவர் தன்னையறியாமல் நகைச்சுவை நாஸ்திகர் ஆகிறார்.

சென்ற இதழில் சில சுவாரசியமான பிழைகள் இருந்தன. சுவையுள்ள புத்த்கம் சுமையுள்ள புத்த்கம் ஆனது. தன் கட்டுரையில் உள்ள அச்சுப் பிழைகளைக் கணக்கிட்ட பேராசிரியர் அப்படியே அசந்துபோய்விட்டதார் என்று கேள்வி!

“அத்தா! உனை நான் கண்டுகொண்டேன்”, என்ற ஆழ்வார் வரி, ‘அத்தான் எனை நான் கண்டுகொண்டேன்” என்று சினிமாப் பாட்டாக மாறியது!

அப்புறம் அட்டையில் அறிவித்த பி.எஸ். ஐயா என்பவர் எழுதிய சிறுகதையை உள்ளே தேடு தேடு என்று தேடினேன்.

நான் இவைகளை எடுத்துரைப்பதில் என் நோக்கம் இதில் உள்ள ஹாஸ்யத்தைச் சொல்வதற்கே. அச்சகத்தார் மன்னிக்கவும். அவர்கள் தொழிலில் உள்ள கடினத்தை நான் அறிவேன்.

ஜனவரி, 1967

முந்தைய சுஜாதா « 10 Hot

Feedback: Closed group vs Wider societies – Bane of Tamil Blogodom

உரிமை துறப்பு: வெங்கட் பதிவோடு உடன்படுகிறேன்.

மறுமொழி மட்டுறுத்தல், ட்ராக்பேக் தடுத்தல், பூங்கா எடிட்டோரியல் எல்லாமே மச்சியவெல்லித்தனமாக இருக்கிறது என்பது வெளிப்படை. எனினும், அதற்கும் (Garrett Mattingly: The Prince: Political Science or Political Satire?) மாற்றுக்கருத்து இருக்கிறது. அது போல், பின்னூட்டங்களுக்கான கேள்வி…

1. —எனக்கென்னமோ ஞாநி திரைப்படம் என்று எழுதும் இடங்களில் எல்லாம் சிவப்புமசியால் குமுதம் ஆசிரியர் அடிக்கோடிட்டு சினிமா என்று எழுதுவார் என்று நம்பமுடியவில்லை.—

ஏன்? ஆங்கிலத்தில் சிந்தித்து தமிழில் எழுதுபவர், இப்படித்தானே மாற்றிப்போட்டு பதிவெழுதுகிறார்? தமிழ்ச்சொல்லின் அர்த்தம் நேரடியாக (எளிமையாக) விளங்கிக் கொள்ள முடியாமல் போவதினால், அடைப்புக்குறிக்குள் ஆங்கில வார்த்தை சொல்லப்படுகிறது.

குமுதம் ஆசிரியர் சாட்சி சொல்ல வரப்போவதில்லை. Inductive logic படி, இது வரை ஞாநி எப்படி எழுதியிருக்கிறார்? தீம்தரிகிட (Dheemtharikida | Gnani) இதழ்களில் ஸ்டைல், லேட்டஸ்ட் போன்றவை தென்பட்டாலும் குமுதத்தில் வெளியான அளவு நெருடவில்லை.

ஆசிரியர் கைங்கர்யமா, ஞாநியின் விருப்பமா என்பதை எப்படி உறுதிப்படுத்துவது?

2. —வருகின்ற எல்லா பின்னூட்டங்களுக்கும் பதில் எழுதவேண்டும் என்று யாரும் எதிர்பார்ப்பதில்லை.—

நிச்சயம் நான் எதிர்பார்க்கிறேன் 🙂

அதாவது, பொதுமைப்படுத்திவிடமுடியாது.

அதுவும், இன்னொருத்தர் எழுதியதை அனுமதித்தால்

  • ‘இந்தக் கருத்துக்கு மட்டுறுத்தியவர்தான் பொறுப்பேற்க வேண்டும்’ என்னும் குற்றச்சாட்டு;
  • ‘அவதூறாக இருக்குமோ?’ என்று நிறுத்தி வைத்தால், ‘கருத்து சுதந்திரம் பறிபோகிறது!”

இந்தப் பதிவுடன் எப்படியோ சம்பந்தப்படுத்தி, இங்கே என்னைப் பற்றி அவதூறாக அனானியாக ஒருவர் எழுதினால்,

  1. அ) தணிக்கை செய்து வெளியிடுவீர்கள்
  2. ஆ) முழுமையாக நிராகரித்துவிட்டு, ‘மன்னிக்கவும்… உங்கள் மறுமொழி சரியில்லை’ என்று பொதுவில் சொல்வீர்கள்.
  3. இ) முழுமையாக நிராகரித்துவிட்டு, எதுவும் சொல்லமாட்டீர்கள்
  4. ஈ) அப்படியே வெளியிடுவீர்கள்
  5. உ) அதன் பிறகு நான் அதை கண்டித்தால், குறிப்பிட்ட அநாகரிகமான பதிலை நீக்குவீர்கள்
  6. ஊ) மீண்டும் ஒரு மறுமொழி (இது வேறு ஐ.பி.; இன்னொரு தாக்குதல்; மீண்டும் (அ) விற்கு செல்லவும்; ஒவ்வொரு பதிவிலும் இந்த சுழற்சி தொடர்ந்தால்?)

என்னைப் போன்ற அதிகம் அறியப்படாத பதிவர் என்றால், இந்த மாதிரி எங்காவது பேர் வந்தாலே பெருமிதம் அடைந்து மகிழ்வார்.

ஆனால், ரஜினி, அண்ணா, சானியா மிர்சா போன்ற பொருத்தமான புகழ் பெற்றவர்களை நோக்கிய வசவுகளையும் இணையப் பெருசுகளையும் பொருத்திக் கொள்ளலாம்.

சுருக்கமாக… தாவு தீர்ந்துரும்.

இந்த மாதிரி செய்து கொண்டே அலுவலிலும் நாட்டம் பயில இயலுமா?

3. —என், அருள்செல்வன், சன்னாசி, இன்னும் பலரின் வலைப்பதிவுகளில் எத்தனை முறை மட்டுறுத்தி பின்னூட்டங்கள் நீக்கப்படுகின்றன?—

இந்தப் பதிவுகளை எத்தனை பேர் படிக்கிறார்கள் / எவ்வளவு பேருக்கு புரிகிறது?

அருள்செல்வன் கருத்துப்படங்கள் விளங்குவதில்லை; சன்னாசி கவிதைகள் புரியவில்லை. அறிவியல் குறித்து லாஜிக் (தமிழில் என்ன சொல்லோ? விக்சனரி ‘அறிவுப்பூர்வமான’ என்கிறது – எனக்கு இது பொருத்தமாக தெரியவில்லை) உடன் எழுதினால் ஆக்ரோசமாக விவாதம் செய்ய என்ன இருக்கிறது?

ஈழம், பார்ப்பனீயம் போன்றவற்றில் உத்தம நிலையை (பொலிடிகலி கரெக்ட்) முன்வைத்து எழுதினாலோ, முகமிலியாக எழுதினாலோ நீங்கள் சொல்வது பொருத்தம். கலகக்குரலுக்கு எதிர்க்குரல் எழுப்பினால் கல்லடி கிடைப்பது சகஜம்தான் என்று வைத்தியசாலைக்கு பக்கத்தில் வலையகத்தை நடத்துவது சாத்தியமா?


சன்னாசிக்கு—டைம், நியூஸ்வீக் பத்திரிகையாளர்கள் எழுதும் வலைப்பதிவுகளில்கூட மறுமொழிகள் அனுமதிக்கப்பட்டே இருக்கின்றன, என்ன – ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும் யாரும் உட்கார்ந்து பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டிருப்பதில்லை.—

தட்ஸ்தமிழில் கூட மறுமொழி வசதி இருக்கிறது. சினிமா கிசுகிசுவாகட்டும்; அரசியல் செய்தியாகட்டும்; இந்த மறுமொழி ஒவ்வொன்றுமே, Platonic பண்புகளை வலியுறுத்தி சகலவிதமான NC-17 தரச்சான்றிதழுடன் உலா வருகின்றன.

இங்கேல்லாம் பிரச்சினையே இல்லை.

ஆனால், சில நூறு பதிவர்கள். அனைவரின் இடுகைகளும் படிக்காவிட்டாலும் ‘சூடான பதிவு’ படிக்கப்பெறுகிறது; பதில்கள் கண்காணிக்கப்படுகின்றன. (மின்னஞ்சலிலேயே பதிலுக்கு வந்த பதில்கள் வந்துசேருமாறு வோர்ட்பிரெஸ் முதல் ப்ளாக்ஸ்பாட் வரை வசதி இருக்கிறது!)

ஆங்கிலப் பதிவுலகிலும் தட்ஸ்தமிழ் களத்திலும் பாவிக்கும் ‘Stoicism by proxy’ இங்கே சாத்தியமில்லையா? அல்லது அதற்காக ஜென் தத்துவம் பயில வேண்டுமா?


—-டைம், நியூஸ்வீக் பத்திரிகையாளர்கள் எழுதும் வலைப்பதிவுகளில்கூட மறுமொழிகள் அனுமதிக்கப்பட்டே இருக்கின்றன, —-தொழிலுக்கொரு வேலையை வைத்துக் கொண்டு இயங்கும் தமிழ்ப்பதிவுகளையும் லாப நோக்கில் இயங்கும் ஆங்கில இதழ்களையும் எப்படி ஒப்பிடலாம்?

—-என்ன – ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும் யாரும் உட்கார்ந்து பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டிருப்பதில்லை. —-

ஆங்கிலம் போன்ற பரவலாக வலைப்பதிவுகள் இயங்கும் இடங்களில் லட்சக்கணக்கில் வாசகர்கள் இருக்கிறார்கள். ஆயிரக்கணக்கில் மறுமொழிகள்.

கருக்கலைப்பு குறித்த பதிவு என்றால் தீவிர சார்புடைய ஒரு அணியில் இருந்து சில நூறு பேரும், எதிர்த்தரப்பில் இருந்து இன்னொரு நூறு பதில்களும் பதிவுகளும் விழுகிறது. விவாதம் அமைகிறது.

ஜெயமோகன், பாரா போன்றவர்களுக்கும் இந்த மாதிரி பரந்துபட்ட களம் அமைய தற்போதைய சூழல் உகந்ததாக இருக்கிறதா?

இவரின் பதிவின் கருத்தை வலியுறுத்தி பேசினால், ‘அடிப்பொடி’ என்று பட்டமிடும் நிலையும், குறுகிய குழு (எல்லா விவாதத்திலும் பங்குபெறும் நாலைந்து பேர் கொண்ட சபையில் — நூறு பேர் வாசகர்) என்னும் சூழலும் உள்ள இடத்தில் உருப்படியான எழுத்தையும் என்னைப் போன்ற சிலரே திசை திருப்புமாறு அமைந்து விடாதா?

ஆங்கிலப் பதிவுலகிலும் தட்ஸ்தமிழ் களத்திலும் பாவிக்கும் ‘Stoicism by proxy’ இங்கே சாத்தியமில்லையா?

—-நேரடி மனிதத் தொடர்புகளைத் தாண்டிய கருத்து விவாதங்களுக்கு பழம்பெருச்சாளிகள் தயாரில்லை என்பதுதான் இங்கே முக்கியமான விஷயம் —-

இந்த முடிவுக்கு எப்படி வந்தீர்கள்?

—-ஆற்றில் மணல் எடுக்க வரும் லாரிகள் மாதிரி ஒரு பெரிய லாரி ஊர்வலமே வருகிறது!!—-

எப்படி இவ்வாறு ஒப்புமை செய்கிறீர்கள்?

எஸ் ராமகிருஷ்ணன், பா ராகவன் ஏற்கனவே பதிவு வைத்திருந்தார். ‘எதிர்த்த வீட்டுக்காரர் E550 வாங்கியிருக்கார்…’ என்னும் தொற்றுவியாதியாகவோ ஒரு சிலர் வந்திருக்கிறார்கள்.

ஆங்கிலத்தில் வேண்டுமானால், நீங்கள் சொல்வது சரி!

டைம், எகானமிஸ்ட் என்று கண்டங்கள் தோறும்; டைம்ஸ், ப்ராஸ்பெக்ட் என்று தினசரி/வார/மாதாந்தரிகள் தோறும்; முன்னாள் பத்திரிகையாசிரியர், இன்னாள் தொலைக்காட்சி நடத்துனர் என்று எல்லாரும் மொய்க்கிறார்கள்.

தமிழில் உங்கள் லாரி ஊர்வலத்தில் யார் யார் இருக்கிறார்கள்?

—-கோமாளிகளால் எந்த இடத்திலாவது கையெழுத்துப் போடாமல் விட முடிகிறதா?—-

இதைக் கூட விளக்கினால் பயன்பெறுவேன். முகமிலியாக எழுதுவது மட்டும்தான் உயர்ந்ததா? இருபது இடுகைகள் இட்டவுடன் அந்தப் பதிவை மூடிவிட்டு புதியதாக வேறொரு பெயரில் இன்னொன்று துவக்க வேண்டும் என்று இந்தக் கருத்தை புரிந்து கொண்டிருக்கிறேன்.

—-ஹிப்போக்ரஸி தான் பிரச்னையே. பின்னூட்டப் பொட்டியை மூடிவிட்டு எழுதுங்கள் என்று ஒரு அறிவுரை.—-

“A sadist is a masochist who follows the Golden Rule.” என்பது போல் இருக்கிறது.

தன்னைத்தானே அடித்துக் கொள்வது தனக்கு சுவாரசியமாக இருக்கிறது என்பதற்காக அனைவரையும் சவுக்கால் அடிக்க சொன்ன மசாக்கிஸ்ட் கதை போல் இருக்கிறது.


உதவிய புத்தகம்: Joculor, Ergo Sum (May-June 2007)


—பின்னூட்டப் பெட்டி என்றாலே குப்பைக் கூடை என்று எல்லோரும் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதை—நாலைந்து தடவை எழுதிய பிறகு சொன்னதையே திருப்பிச் சொல்லுதல், பொருத்தமற்ற அல்லது அதிர்ச்சியடைய வைக்கும் ஒப்புமைப்படுத்தல் (சாடிஸம் மஸோக்கிஸம்), தடாலடி முடிவுரை (முழுவிதண்டாவதம் என்னும் கணிப்பு) போடுதல், தீர்ப்பு விதித்தல் (ப்ராக்ஸியாகப் பெற) என்று ஆகுவதால் இப்படிப்பட்ட எண்ணம் எழுந்திருக்கலாம் 😉


தேடுபொறிகளில் பக்கத்திற்கான மதிப்பெண் உயர, ‘சுட்டும் உரல்கள்’ மிக மிக அவசியம்.உதாரணத்திற்கு கூகிளின் வரிசைப்பட்டியலில் (PageRank – Wikipedia, the free encyclopedia) சில வலையகங்கள் ஆறு மதிப்பெண் பெற்றிருக்கும். அதே மாதிரி விஷயகனம் கொண்ட இன்னொரு வலையகத்திற்கு, ஐந்துதான் கொடுத்திருப்பார்கள்.SEO சூட்சுமமாகக் கூட இந்த மாதிரி பின்னூட்ட பெட்டி மூடுதலை நோக்கலாம்!

சன் டிவியில் மீண்டும் பார்த்த ‘சபாஷ் மீனா’ இரண்டு தடவை தேய்ந்து போன பேழையாக திரும்ப திரும்ப சொற்றொடர்களை சொல்லிப் படுத்தியது… அந்த மாதிரி ஆகும் ஆபாயம் உணர்ந்தாலும், நான் அறிந்தவரை தொகுப்பு.

—இந்த மாதிரி அவதூறுகளை முன்னே பின்னே பார்த்திராதவர்கள் இங்கே வந்து ஏதோ பச்சைப்பிள்ளை மாதிரி சிரமப்படப்போகிறார்கள் என்று ஏன் முன்னேற்பாடாகச் செய்யவேண்டும்? அதைப் படித்துப் பார்க்காமலே நிராகரித்துவிடமுடிகிறதென்றால், அதற்கும் பின்னூட்டங்களுக்கும் என்ன வித்தியாசம்? —

1. எனக்கு அவசியம் சொல்லவேண்டுமானால், சொல் (தனிமடல்).

உலகத்திற்கு அவசியம் உன்னுடைய கண்டனங்களையும் கருத்துகளையும் சொல்ல வேண்டுமானால், எழுது (தனிப்பதிவு). [என்னுடைய முதுகின் மேல் ஓசி சவாரி கேட்காதே!]

2. ஜெயமோகனுக்கு சிவாஜியும் பத்மினியும் எம்ஜியாரும் அகப்பட்டார் என்றால், வெங்கட்டுக்கு ஜெயமோகனும், பிரபுவிற்கு ஞாநியும் அகப்பட்டார்கள். [வல்லவனுக்கு வில்லி 🙂 ]

நன்றி!


சன்னாசி…
—மேலே சொன்னது உங்கள் கருத்தா? ஆமெனில், உங்கள் பதிவுகளின் பின்னூட்டங்களை முதலில் மூடுங்கள்.—இது எனக்காக சொல்லிக் கொண்டது அல்ல.

இங்கேயே கூட சின்ன வித்தியாசத்தை நீங்கள் பார்த்திருக்கலாம்…

ஜமாலன் – வலையாடலை முன்னெடுத்துச் செல்வதற்கு நன்றிகள்!

என்று ‘பெரிய’ ஆளுக்கு பதில் சொல்லி சுருக்கமாக நன்றியோடு முடித்து கொள்ளும் வெங்கட்

நீங்கள் மேலே எழுதியிருப்பதெல்லாமே முழுவிதண்டாவதம்

என்று எனக்கு மாறிவிடுகிறார்.

மனித இயல்புதான். வெங்கட் தவிர நேற்று புதிதாக ஆரம்பித்த அனானி ‘ஜெமோவும் பாராவும் எஸ்ராவும் இன்ன பிறரும் பிறருக்கு பயந்து பின்னூட்டத்தை மூடியிருக்கிறார்கள்’ என்று அனுமானித்திருந்தால் எனக்கு இவ்வளவு ஆர்வமாக கேள்வி எழுந்திருக்காது.

வெங்கட்டின் பதிவில் கவர்ந்த கருத்துகளில் சில…

  • மின்வடிவத் தகவல்கள் உயிரூட்டமானவை.
  • துரதிருஷ்டவசமாக இன்றைய நிலையில் அப்படி உதாரணம் காட்ட தமிழில் எழுத்தாளர்கள் மிகவும் குறைவு.

அலகிலா விளையாட்டு: “அவரவர் நியாயங்களின் உட்புறச் சுவரைக் குடைந்துபார்க்க எல்லாருக்கும் சாத்தியமில்லை.”

என்பதுதான் என் கட்சி

தென்றல் இதழ்: அமெரிக்க அதிபர் தேர்தல் '08 – சுந்தரேஷ்

தென்றல் (இலவசம்) பதிவு செய்தால், இணையத்தில் படிக்கலாம். முழுக் கட்டுரையில் இருந்து விவாதிக்கத்தக்க கருத்துகள் சில:

  • மைக் ஹக்கபீ சதர்ன் பாப்டிஸ்ட் பிரிவைச் சார்ந்த ஒரு மதத்தொண்டர். (இந்திய வடகிழக்கு மாநிலங்களில் பாப்டிஸ்ட் சர்ச்சின் ஆதரவுடன் பயங்கரவாதிகள் கிறிஸ்தவத் தனிநாடு கேட்டு போராடி வருவது தெரிந்திருக்கலாம்). எவாஞ்சலிகல் கிறிஸ்தவர்களின் ஆதரவைப் பெற்றவர். அதே சமயம் மெக்சிகோவிலிருந்து சட்டவிரோதமாகப் புலம்பெயர்பவர்களுக்கு மிக ஆதரவானவர்.
  • பல பிரச்சினைகளில் தெளிவாகக் கறுப்பின மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதன் மூலம் ஹிலாரி பராக் ஒபாமாவை விடக் கறுப்பின மக்களுக்கு இணக்கமானவராகத் தெரிகிறார்.
  • இந்தியாவைப் பொறுத்தவரை மென்பொருள் தொழில் துறை, அவுட்சோர்சிங், அணுசக்தித் தொழில்நுட்பம் ஆகியவற்றில் ரிபப்ளிகன் கட்சி இந்தியாவுக்கு பாதகமில்லாத நிலையை எடுத்து வந்துள்ளது. டெமக்ராட்டிக் கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்தியாவுடனான அணுசக்தி உடன்பாடு மறுபரிசீலனைக்கு உள்ளாகலாம்.