டன்னிங்-க்ரூகர் விளைவு (Dunning-Kruger Effect) உங்களுக்குத் தெரிந்திருக்கும். அது சுருக்கமாக:
சராசரிக்கும் மிகக் குறைவான திறமை உள்ளவர்கள் தங்கள் திறமையினை மிகை மதிப்பீடு (over estimated) செய்கின்றனர். இதற்கு காரணம் அவர்களின் அறியாமையே. அறியாமையினால் அவர்களுக்கு தங்கள் குறை தெரிவதில்லை அதனை திருத்தி கொள்ள வேண்டும் என்ற புரிதலும் இல்லை
அதைப் போல் இன்னொரு கருத்தை சில காலமாக பார்த்து வருகிறேன்: ஜெல்-மன் அம்னீசியா (Gell–Mann Amnesia)
காலையில் தினமணியையோ தி ஹிந்துவையோ புரட்ட ஆரம்பிக்கிறீர்கள். அதில் வந்திருக்கும் நடுப்பக்க கட்டுரையிலோ தலையங்கத்திலோ நான் கற்றுத் தேர்ந்து பல்லாண்டுகளாக உழைத்து கரை கண்டவன். எனக்கு கணினி, நிரலி, புத்தக வெளியீடுகள். உங்களுக்கு சரித்திரமோ பூகோளமோ உயிரியலோ இருக்கலாம்.
ஆனால், அந்தக் கட்டுரையின் அச்சு நிர்ப்பந்தங்களினாலோ, எழுதியவரின் அவசரத்தினாலோ, பதிப்பாசிரியரின் கபனக்குறைவினாலோ – கட்டுரையில் போதாமைகளை உணர்கிறீர்கள். அந்த கருத்துப் பத்தியில் தகவல் பிழைகளைக் கண்டுபிடிக்கிறீர்கள். புரிதல்களின் போதாமைகளை உணர்கிறீர்கள். முழு விளக்கத்தையும் சரியான முறையில் விளக்காததைக் கண்டு வெகுண்டெழுகிறீர்கள்.
இந்த மாதிரி கட்டுரை வந்ததால் எந்த லாபமும் இல்லை. சொல்லப் போனால், வாசிப்பவருக்கு குழப்பத்தையும் தவறான சித்திரத்தையும் அது தருகிறது என்று திடமாக நிரூபிக்கக் கூடிய ஆதாரங்களை முன்வைக்கத் தயாராக இருப்பீர்கள்.
“நகரும் காருக்கு கண்ணாடி இருக்கிறது. வீட்டில் கண்ணாடி ஜன்னல் இருந்தாலும் அது நகராது. எனவே, கண்ணாடிக் கதவுகளால் கார் நகரவில்லை!” என்பது போல் எழுதியிருப்பதாக பூரணமாக உங்களுக்குத் தெரிந்திருக்கிறது.
அயர்ச்சியாக இருந்தாலும் நாளிதழின் அடுத்த பக்கத்திற்கு தாவுகிறீர்கள். அதில் வர்த்தகமோ, அரசியலோ, விளையாட்டோ அலசி இருப்பார்கள். பெரு நாட்டின் வன்முறையை கண்டித்து இன்னொரு தலையங்கம் இருக்கும். சூர்யகுமார் யாதவ் எவ்வாறு விளையாட ஆரம்பித்தார் என்பதை நுணுக்கமாக ஆராய்ந்திருப்பார்கள். அதையெல்லாம் வெள்ளந்தியாக நம்புவீர்கள். அவர்கள் சொல்வது எப்படி உண்மை என்பதை ஆராயாமல் ஏற்றுக் கொள்வீர்கள்
– மைக்கேல் கிரிக்டன் (ஜூராஸிக் பார்க் புகழ்)
நம் பத்திரிகைகளும் புத்தகங்களும் அவ்வாறே… சிறிய விவரங்களில் மட்டும் தவறு இருக்காது; அந்த தகவலுக்கான உந்துதல், காரணம், உட்குறிப்பு, அடிப்படை உண்மைகள் … எல்லாவற்றிலும் தவறு இருக்கும். அவரைத் திருத்த நினைப்பீர்கள். பதிவின் அணுகுமுறையையும் பொருளடக்கதையும் சாட எண்ணுவீர்கள். ஆனால், அதே நிறுவனத்தின் பிறிதொரு நூலை எடுத்து விதந்தோதி வாங்கி அடுத்த கடைக்குச் சென்று வீடுவீர்கள்.
இதற்கு பெயர் ஜெல்-மான் அம்னிசியா
இதைப் படித்தவுடன் உங்களுக்குத் தோன்றிய நிறுவனம் / பத்திரிகை / நபர் / புத்தக வெளியீட்டாளர் / வலை சஞ்சிகை என்ன?