கல்கி – மணி ரத்னம் dichotomy: இரண்டு பொன்னியின் செல்வன்கள்


மணி ரத்தினம் ஏன் பொன்னியின் செல்வன் சரித்திர புதினத்தைப் படமாக்கினார்? மூன்றாவது காரணம்: பாசிசம் அதன் வேர்களை அறிவொளியில் காண்கிறது.

யோஹான் வொல்ஃப்காங் வொன் கோயத் (Johann Wolfgang von Goethe) அமர்ந்த மரத்தடி ஜெர்மனியில் புகழ்பெற்றது. ஜெர்மானிய இலக்கியத்தில் இந்த கோயத் புலவருக்கு பெரிய இடம் கொடுத்திருக்கிறார்கள்.

யூதர்களைக் கொன்று குவிக்க பல வதை முகாம்களை நாஜிக்கள் கட்டினார்கள். அந்தக் கட்டிடங்களுக்கு அங்குள்ள பகுதிகளில் உள்ள எல்லா மரங்களையும் வெட்டி சாய்த்தார்கள். ஒரேயொரு மரத்தை மட்டும் விட்டு வைத்தார்கள். அந்த மரத்தின் நிழலில் அமர்ந்துதான் கோயத் தன்னுடைய கவிதைகளையும் காவியங்களையும் இயற்றினார். கோயத் என்ன எழுதினார் என்பதை நாஜிக்கள் மறந்து விட்டார்கள். கோயத் எழுத்தின் அர்த்தத்தை உணராமல் வெறும் நினைவுச்சின்னத்தை – கொலைகூடத்திற்கு நடுவாந்தரமாக குலப்பெருமையாக வைத்துக் கொண்டார்கள்.

இது போல் பொன்னியின் செல்வன் நாவல் என்ன சொல்கிறது என்பதைத் திரையில் கொணராமல், “சோழர்கள் நம் பெருமிதம்!” என்று நினைக்க வைக்க மணிரத்னம் கல்கியின் வரலாற்றுப் புனைவை சினிமாவாக மாற்றுகிறார். – இது மூன்றாவது காரணம்.

புஷென்வல்ட் (Buchenwald) கிராமத்தின் எல்லா மரங்களையும் வெட்டிச் சாய்த்திருந்தால் கோயத் அமர்ந்த மரமும் பத்தோடு பதினொன்றாகப் போயிருக்கும். சுஜாதாவின் “கரையெல்லாம் செண்பகப்பூ” மாதிரி… எந்த இயக்குநருக்கும் இலக்கிய கதையை வெள்ளித்திரைக்குக் கொணரத் தெரியாது என்று போயிருக்கும். ஆனால், லட்சக்கணக்கில் மக்களை அடைத்து வைக்க பயன்பட்ட முகாமின் முக்கிய இடத்தில் — கோயத் என்னும் பெரும்புள்ளியைக் கொண்டாட அந்தப் புலவரின் கருவாலி மரத்தை கூட்டாக இணைக்கிறார்கள். நாஜிக்களைப் பொறுத்தமட்டில், மரம் அழிக்க முடியாத அளவுக்கு மதிப்புமிக்கதாக இருந்தது.

இரண்டாம் உலகப் போரில் நடந்த குண்டு வெடிப்பில் அந்த மரம் இறக்கிறது. பட்டுப் போகிறது. தங்களின் பாரம்பரியத்தில் தாங்களே மண் வாரிப் போட்டுக் கொண்டதை இது உணர்த்துகிறது.

இந்த மரத்தைக் குறித்து கர்ண பரம்பரைக் கதை ஒன்றைச் சொல்லுகிறார்கள். இது இலையுதிர்க்கும் மரம். ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதத்தில் தன் இலைகள் அனைத்தையும் உதிர்த்து மொட்டை மரம் ஆகி விடும். அதன் பிறகு ஏப்ரல் மாதத்தில் துளிர்விட்டு பூப்பூக்கும். இந்த மரத்தை பார்க்கும் யூதக் கைதிகள், “இந்த மரத்தில் எந்த இளவேனிற்காலத்திலாவது மீண்டும் மொட்டுக்கள் மலராமல் இருக்கிறதோ, அப்பொழுதுதான் நமக்கு விடுதலை!” என விளையாட்டாகச் சொல்லிக் கொள்வார்கள். அதாவது, எப்போதும் நமக்கு சுதந்திரம் கிடைக்காது. வருடா வருடம் அது மீண்டும் மீண்டும் இலை உதிர்க்கும்; மீண்டும் மீண்டும் இலை மலரும்.

கை கூடா கனவு ஒரு நாள் நிறைவேறியது. விமானத்தில் போட்ட குண்டுத் தாக்குதலில் அந்த மரம் தீப்பிடித்து எரிந்தது. அதனால், அந்த வசந்த காலத்தில் மரத்தில் இலைகள் மீண்டும் மலரவேயில்லை. அது போல், பொன்னியின் செல்வன் கதையும் சிறைக்குள் பூட்டுண்டு இருந்தது. இன்று வெளியே வந்து சோழ வரலாறு பலரைச் சென்றடைந்துள்ளது.

“பொன்னியின் செல்வன்” கதை வாசித்து #PS1 பார்த்தவர்களை அந்த வதை முகாமில் சித்திரவதைக்குள்ளானவர்களாகப் பார்க்கலாம்.
பொ.செ.1 படம் எடுத்தவர்களை – நினைவுகூறப் பட வேண்டிய சரித்திரக் கதையைப் படமாக்குகிறோம் என்று சொல்லி புலவரின் பெருமையாக கருவாலி மரத்தை நடுக்கூடத்தில் கும்பிட்டவர்களாகப் பார்க்கலாம்.

அந்த மரம் போரின் இறுதியில் வெட்டப்பட்டது.
இந்தக் கதை படத்தின் இறுதியில் சமாதி ஆகிறது.

இந்த மாதிரி நம் பாரம்பரியத்தை தமிழரின் பெருமையை இனத்தின் கலாச்சாரத்தை பல்லிளிக்க வைப்பது – – 3ர்ட் ரீசன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.