வளநீர்ப் பண்ணையும் வாவியும்


”சின்னச் சின்னக் குற்றங்கள்” என்னும் தலைப்பைத்தான் முதலில் தேர்ந்தெடுத்திருந்தேன். அது எதிர்மறை என்பதால் வேறு தலைப்பிற்கு மாறிவிட்டேன். ஏன் அந்தத் தலைப்பை முன்வைக்க நினைத்தேன்? ஏன் அப்படிப்பட்ட அனுபவத்தை முன்னிலையாக்க எண்ணினேன்?

நான் ஓர் அக்மார்க் இண்ட்ரோவெர்ட். விக்சனரி பாஷையில் சொல்வதானால் “தன்னைப் பற்றியே எண்ணுபவன்”. எனவே முகாமிற்கு வந்த ஒவ்வொருவரைப் பற்றிய சிறுகுறிப்புடன் தொடங்குவது சாலச் சிறந்தது.

முதற்கண்ணாக ஏற்கனவே அறிமுகமானவர்கள். அவர்களில் முதன்மையாகத் தெரிந்தது பழனி ஜோதியும் மகேஸ்வரியும். எனக்குப் பெயர்கள் மறந்து விடும். முகங்கள் நினைவில் தங்கும். மகேஸ்வரியை ஓட்டுநர் என்று அறிந்து வைத்திருந்தேன். நியூ ஹாம்ப்ஷைருக்கு ஜெயமோகன் உடன் சென்றபோது கும்மிருட்டில் அலுங்காது குலுங்காது தூங்காது கொண்டு சேர்த்தவர். அவரின் சாரதித்தன்மை தெரிந்திருந்தாலும் எங்கு பார்த்தோம் என்று தடுமாறி ஓரளவு சமாளித்து மீண்டும் அறிமுகம் செய்து கொண்டேன். இவர்கள் இருவரும் பாடல் பெற்ற வாசகர்கள். அவர்களை ஜெயமோகன்.இன் தளத்திலேயே அறியலாம்.

அடுத்தவர் சிஜோ. இவர் இன்றைய சாரதி. கஷ்டமான மொழியாக்கம் என்றால் “கூப்பிடு சிஜோவை!” என்று சொல்வனம் பதிப்புக் குழுவினால் பரிந்துரைக்கப்படுபவர். இந்த பூன் முகாமிற்கு வெளியூரில் இருந்து வந்தவர்களை பத்திரமாகக் கொண்டு சேர்த்தவர்களில் ஒருவர்.

இன்னொரு ஓட்டுனர் தாமோ எனப்படும் தாமோதரன். இவரும் அட்லாண்டாக்காரர். தன் காரை இசை-ரதமாக ஆக்கியவர். சிஜோ-வையும், விபி எனப்படும் வெங்கட் பிரசாத்தின் அழைப்புகளையும் கவனித்துக் கொண்டே பின்னால் நடக்கும் தாளக் கச்சேரியையும் ஒருங்கிணைத்த மேஸ்ட்ரோ.

நிறைய வெங்கட்கள் இருப்பதாலோ விஐபி என்பதன் சுருக்கமாகவோ, வி.பி. என்று அழைக்கப்படும் வெங்கட்பிரசாத் வீட்டில் நளபாக உணவு கிடைத்தது. இதை கொண்டாட்டத்தின் துவக்கம் எனலாம். முதன் முதலாக சக பயணிகளின் அறிமுகமும் உரையாடலும் கூடவே அமர்க்களமான விருந்தும் கிடைத்தது. சின்ன வெங்காயம் போட்ட கார குழம்பு, பூசணிக்காய் கிடைக்கும் அரைத்து விட்ட சாம்பார், மிளகும் தக்காளியும் போட்டி போட்ட சூடான ரசம், சிறிது சிறிதாக வெட்டப்பட்ட உருளைக் கறி, சுரைக்காய் கூட்டு, கெட்டித் தயிர், ஊறுகாய் என அனைத்தையும் கபளீகரம் செய்த பிறகு இரண்டு டம்ளர் பருப்பு பாயாசம் என்று கனஜோரான வீட்டுச் சமையல் போஜனத்தில் விழாவைத் துவக்கி களைகட்ட வைத்தனர் விபி தம்பதியினர். விபி ஒரு கவிஞர்.

இவ்வளவு முக்கியமான சாரதிகளைச் சொல்லிவிட்டு, சாரதியைச் சொல்லாவிட்டால் எப்படி? “நீங்க கிஷோர்தானே?” என்று அவரிடம் அறிமுகம் செய்து கொண்டேன். அவர் சாந்தமாக புன்னகையுடன் “நான் சாரதி.” என்றார். வழக்கம் போல் எதற்கும் உதவாத “மன்னிக்கவும்.” உதிர்த்துவிட்டு என் ஆர்பாட்டப் பேச்சைத் தொடர்ந்தேன். இந்த சாரதி என் பெட்டியை விமான நிலையம் முழுக்க சுமந்தவர். கலிஃபோர்னியாக்காரர். தலபுராணங்கள் எதன்பொருட்டு?, ஓநாய்குலச் சின்னம் என கடிதங்கள் எழுதியவர்.

சாரதியின் பேட்டைக்கு பக்கத்திலேயே வசிப்பவர் சாரதா. விவாதங்களில் பங்கெடுத்தவர். தன் கருத்தை வெளிப்படையாக பதிவு செய்தவர். அமெரிக்க பண்பாட்டையும் இந்தியாவில் வாழாவிட்டாலும் பட்டிக்காட்டான் போல் குட்டி பாரத்தை உருவாக்கி அதில் மட்டும் பவனிவரும் தேஸி கலாச்சாரத்தையும் அவர்களுக்குப் பிறந்த இந்திய-அமெரிக்க குழந்தைகளின் குழப்பங்களையும் வினாக்களாகத் தொடுத்தவர்.

முக அடையாளம் நன்றாக ஞாபகம் இருக்கும் எனச் சொல்லிக் குழப்பிக் கொண்ட கிஷோர் – கனெக்டிகட் வாசி. சாரதிக்கும் இவருக்கும் ஆறு வித்தியாசத்திற்கும் மேல் இருக்கும். ஒற்றுமைகள் எனப் பார்த்தால் இருவரும் கண்ணாடி அணிந்திருந்தனர். இருவரும் கவனிப்பவர்கள். உள்வாங்குபவர்கள். அமைதியானவர்கள்.

சிஜோ அழைத்து வந்த பட்டாளத்தில் எங்களுடன் இணைந்தவர் கண்ணப்பன். துடிப்பானவர். நான்கைந்து கார்கள் சார்லட் நகரத்தில் பூன் மலைவாசஸ்தலத்திற்கு கிளம்பின. இதில் பயணித்த இருபதிற்கும் மேற்பற்பட்டவர்களின் விண்ணப்பங்கள். ”ஸ்டார்பக்ஸ் போகலாம்!”, “குடிநீர் வாங்கலாம்!”, “அவசரமாக ஒன்றுக்கு வருகிறது”, என்னும் கோரிக்கைகளை காதில் வாங்கிக் கொண்டு செல்பேசியையும் இன்னொரு காதில் வைத்து பேசிக் கொண்டு அதே செல்பேசியில் செல்லுமிடத்திற்கான வழித்தடத்தையும் காண்பித்தவர். நிறைய வினாக்களுடன் உண்மையான மாணவராக ஆசான் முன் கைகட்டி நின்று கவனித்தவர்.

டாலஸ் பாலாஜி. இவர் ஏ.டபிள்யூ.எஸ். (AWS) கஞ்சுகம் அணிந்திருந்தார். என்னுடன் தன் படுக்கையை பாதியாக விட்டுக் கொடுத்துப் பகிர்ந்தவர். என் குறட்டையை பொருட்படுத்தாது இன்முகத்தோடு அடுத்த நாளும் சிரித்து, மீண்டும் என்னுடன் துணிந்து உறங்கிய தைரியசாலி.

இசையமைப்பாளர் ராஜன். முதல் இரு ஜெயமோகன் வருகைகளை முன்னின்று கவனித்தவன் நான் என்றால், சமீபத்திய இரு வருகைகளை செவ்வனே செய்பவர் ராஜன். விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தின் அமைப்பாளர்களில் ஒருவர். வெண்முரசு பிள்ளைத்தமிழுக்கு சங்கீதம் இயற்றியவர்.

மியாமியில் இருந்து இன்னொரு ராஜன். ஜெயமோகனுக்காக… ஆசானை சந்திப்பதற்காக மட்டும்… பிரத்தியேகமாக குருவின் குரலைக் கேட்பதற்காக… என வந்தவர்கள் பெரும்பாலானோர். அவர்களின் பிரதிநித்துவம் இவரைப் போன்றோர்.

விபி வீட்டில் ஸ்ரீகாந்த் அறிமுகமானாலும் அவரின் புல்லாங்குழல் திறமை பின்னரே தெரியவந்தது. சினிமாப் பாட்டு, கர்னாடக சங்கீதம், பஜன்கள் என்று எல்லாவற்றிற்கும் வளைந்து கொடுக்கும் விரல்களும் பான்சூரியும் நிகழ்வின் ஒவ்வொரு பகுதியின் துவக்கத்தில் ஒலிக்கும் பாடலுக்கும் சூழலுக்கும் இனிமையைக் கொணர்ந்தது.

இனி சற்றே கொத்து கொத்தாக வந்தவர்களைப் பார்க்கலாம்.

வெண்முரசு ஆவணப்பட மொழிபெயர்ப்பில் பெரும் பங்காற்றியவர் என நான் அறிந்திருந்த ரெமிதா சதீஷ். ஜெயமோகன் தளத்தை சற்றே தேடிய பிறகு, பல்வேறு மொழியாக்கங்களை ரமிதா சிறப்பாக செய்து வெளியிடுவது தெரிய வந்தது. சிரித்த முகமும் மோனப் புன்னகையும் தவழவிட்ட ராலே ரவி. விழா ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக நடத்திய முத்து காளிமுத்து. ஏற்கனவே செய்த சொல்வன மொழிபெயர்ப்புகள் மூலமாகவும் நன்கு அறிமுகமானவர் முத்து. பூன் முகாமில் உணவும் உபசரிப்பும் சிறக்க இன்னொரு முக்கிய காரணமான விவேக்கும் வட கரோலினாகாரர்.

இவர்கள் உள்ளூர் படை என்றால், தமிழ்.விக்கி திறப்புவிழாவைத் தொடர்ந்து வந்த வாஷிங்டன் டிசி, மேரிலாந்து மாகாணம் மற்றும் வர்ஜினியா மாநிலக்காரர்கள் பெரும்சேனை. ஆசான் முதன் முறை அமெரிக்கா வந்தபோது வரவேற்று விருந்தோபியவர்கள் வேல்முருகன் பெரியசாமியும் நிர்மல் பிச்சையும். இருவரும் பல தசாப்தங்களாக ஜெயமோகனை வாசித்து பின் தொடர்பவர்கள். பாசக்கார மகேந்திரன் பெரியசாமி. யோகா குறித்து கட்டுரை மட்டுமல்ல காலையில் யோகம் செய்து காண்பித்த விஜய் சத்தியா. ரவியும் அவரின் மனைவி ஸ்வர்ணலதாவும் தத்தமது அறிமுகத்தில் ஆழமாக அசத்தினார்கள். என் வாசிப்பெல்லாம் ஒன்றுமேயில்லை என எண்ணவைக்குமளவு நேர்த்தியான வாசகர்கள் நிறைந்த சபை என்பதை உணர்த்தினார்கள்.

வந்தவர்களை நிறுத்திவைத்துவிட்டு, கொஞ்சம் மூச்சு வாங்கி தமிழ்.விக்கி குறித்து பார்ப்போம். ஒரு பக்கம் கூகுள் தேடுபொறியில் எதைத் தேடினாலும் முதல் முடிவாக வரும் தமிழ் விக்கிப்பீடியா. இன்னொரு பக்கம் காலச்சுவடு, உயிர்மை, சொல்வனம் போன்ற அதிகாரமையங்கள். இவர்களுக்கு நடுவாந்தரமாக திரிசங்கு சொர்க்கம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

பூமியிலிருந்து சொர்க்கத்துக்கு தன்னுடைய உடலுடனேயே போக முயற்சித்தானாம் திரிசங்கு என்கிற மன்னன். ராஜா திரிசங்குவை தமிழர் என வைத்துக் கொள்ளுங்கள். சொர்க்கத்துக்கான யாத்திரையில் பாதிவழியிலேயே அவனுக்கு விசா கொடுக்காமல் நிறுத்தி விட்டாராம் சொர்க்கத்தின் அதிபர் இந்திரன். இந்திரனை கூகிள் எனக் கொள்ளவும். பூமியை விட்டு வெளியேறி விட்டதால் மீண்டும் பூமிக்கும் திரும்ப முடியவில்லையாம் திரிசங்குவால். அந்தரத்திலேயே இருந்த அவனுக்கு தன் தவ வலிமையால் தனி சொர்க்கத்தை விஸ்வாமித்திரர் உருவாக்கிக் கொடுத்தாராம். விசுவாமித்திரரை ஜெயமோகன் எனலாம். இதைத்தான் திரிசங்கு சொர்க்கம் என்கிறது புராணக் கதை. இந்தக் காலத்தில் தமிழ்.விக்கி. அந்தத் திரிசங்கு சொர்க்கத்தில் கரப்பான் பூச்சிகளைத் தோற்றுவிக்கிறார் கௌசிகர். அங்கே எலிகளையும் பல்லிகளையும் உருவாக்குகிறார் பிரும்மரிஷி. இந்த திரிசங்கு போல் இங்குமில்லாமல் அங்குமில்லாமல் நடுவில் இருக்கிறது தமிழ்.விக்கி என்பது என் எண்ணம்.

சாதாரண மக்கள் தங்களுக்கானத் தேடல் முடிவுகளைச் சென்றடைய கூகிள் உதவுகிறது. கூகுள் தளத்திற்கு அதிகாரபூர்வ விக்கிப்பீடியா மிகவும் பிடித்திருக்கிறது. எனவே, கூகிளில் எதைத் தேடினாலும் முதன்முதல் முடிவாக விக்கிப்பிடியாவை வரவைக்கிறது. அந்த கூகிள் உதவியில்லாமல் தமிழ்.விக்கி முதல் பக்கத்தில் சாதாரணத் தமிழரின் கவனத்திற்கு வரவே வராது. கூகுள் தளமே க்னால் (knol), கீன் (keen) என்று பல்வேறு முயற்சிகளில் சோதனை செய்கிறது. அவர்களின் ஆசி, அதாவது அசல் ப்ரம்மரிஷியான வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பெறாவிட்டால் தமிழ்.விக்கி தளத்திற்கு சொர்க்கலோகம் கிட்டாது.

ஏன் வசிஷ்டர் கூகுள், புதிய தமிழ்.விக்கியை கைகொடுத்து வரவேற்க மாட்டேன் என்கிறது? நவீன விருட்சம் அழகியசிங்கர் தினசரியைத் துவங்குவார். கௌதம சித்தார்த்தன் ஆலா என்னும் நிரலியை புழக்கத்தில் விடுகிறார். 25க்கும் மேற்பட்ட இலக்கிய பத்திரிகைகள் இணையத்தில் தீவிரமாக இயங்குகின்றன. இவற்றில் எது கொந்தர்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு உங்களின் கணினியை பாதிக்காது என்பதையும் கூகுள் கண்காணிக்க வேண்டும். இந்தத் தளங்களில் எதில் உள்ளடக்கம் சீரழிந்து சற்றே மோசமான ஆக்கங்களை உள்ளீடு செய்கிறார்கள் என்னும் தரக்கட்டுப்பாடும் தேவை. அதே சமயம் தினசரி புதுசு புதுசாக, வித விதமாக, வெவ்வேறுத் தலைப்புகளில் தனித்துவமான விஷயங்களைக் கொடுக்கிறார்களா என்றும் பார்க்க வேண்டும். பணத்திற்காக விளம்பரங்களை விஷயங்கள் என்று விற்கிறார்களா என்றும் யோசிக்க வேண்டும். இப்படியெல்லாம் நாள்தோறும் எல்லாவற்றையும் மேய்த்து தன் சக்தியை வீணடிப்பதற்கு பதிலாக விக்கிப்பிடியாவிற்கு தன் முடிவுகளை குத்தகைக்கு விட்டிருக்கிறது கூகுள்.

ஜெயமோகனின் நண்பரான வேதசகாயகுமார் விட்டுவிட்டதை ஜெயமோகன் கையில் எடுத்திருக்கிறார்:

தமிழ் விமார்சனக் கலைக் களஞ்சியம், தமிழ்ப் புனைகதைக் களஞ்சியம், சங்க இலக்கியக் கலைக் களஞ்சியம் என்ற மூன்று கலைக் களஞ்சியங்களை உருவாக்கத் திட்டமிட்டார் குமார். தமிழ் விமர்சனக் கலைக் களஞ்சியம் பல்கலைக்கழக மானியக் குழு நிதி உதவியுடன் நிறைவு பெற்றது. அவருடைய கல்விப் பணியில் இது முக்கியமானது.

பொன்னீலன்

அது வேறு சிக்கல். இன்னொரு தடவை விரிவாக அரசியலும் சமூகப் போரும் தனித் தமிழ்ப் போராளிகளின் நிலையையும் பல்கலைக்கழகப் பதவி போட்டியும் கலந்து ஆலோசிக்க வேண்டிய ஒன்று. அதற்குள் இன்னொரு நாள் செல்லலாம்.

மீண்டும்… பூன் காவிய முகாமிற்குள்ளும் அங்கே பங்கு பெற்றவர்களுக்குள்ளும் செல்லலாம்…

டெக்சாஸில் இருந்து வந்தவர்கள் தனித்தனியாக வந்ததாலோ என்னவோ தனித்துவம் கொண்டிருந்தார்கள். கிதார் வாங்கபோவதாக மிரட்டி கைக்கு அடக்கமான வாத்தியப் பொட்டி வாங்கி அதை வாசித்தும் அசத்திய ஸ்கந்தநாராயணன். இரண்டாம் நாள் புகைப்படங்களில் ஒவ்வொருவரையும் தனித்தனியே அழகழகாக சுட்டுத் தள்ளிய கோபி. பண்பட்ட ஆங்கில மொழிபெயர்ப்பாளராக நன்கு அறிமுகமான ஹூஸ்டன் சிவா.

டெட்ராயிட்டில் இருந்து வந்தவர்கள் இன்னொரு இனிய குழுமம். திருச்செந்தாழையின் கதையான ஆபரணத்தை அறிமுகம் செய்த மதுநிகா. எல்லோருடனும் இயல்பாக கலந்து பழகி வாய் நிறையப் பேசிய மேனகா. ஒளி ஓவியரும் மண்டலா கலைஞரும் இனிய குரல் கொண்ட பாடகருமான டெட்ராயிட் சங்கர்.

கலிஃபோர்னியாவில் இருந்து வந்த பெருங்கூட்டத்தில் பெரும்பாலானோரை ஏற்கனவே அறிமுகம் செய்து கொண்டோம். அவர்களைப் போலவே புத்தரைப் போன்ற சாந்தத்துடனும் அதே ஆனந்தர் போல் ஆழமான அவதானிப்புகளுடன் பழகிய சன்னிவேல் விஜய்.

அடுத்து தம்பதி சமேதராக வந்தவர்களைப் பார்க்கலாம்.

விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தின் அமைப்பாளர்களில் ஒருவரான ஆஸ்டின் சௌந்தரும் அவரின் மனைவி ராதாவும். காற்றின்நிழல் மூலமாகவும் வெண்முரசு ஆவணப்படம் மூலமாகவும் நன்கு அறிமுகமானவர்கள். முதல் முறையாக நேரில் பார்க்கிறேன்.

ஜெகதீஷ் குமாரும் அவரின் மனைவி அனுஷாவும். ஆங்கிலத்தில் பல கதைகளை மொழிபெயர்த்து அவற்றை பல்வேறு பத்திரிகைகளில் வெளியிட்டவர் என ஜெகதீஷை அறிந்து வைத்திருந்தேன். அனுஷா அவர்கள் முதல் நாள் புகைப்படங்களை சுட்டுத் தள்ளினார். இருவரும் கல்யாணத்திற்கு வந்தது போல் பாரம்பரிய ஆடைகளில் வளைய வந்தது முகாமிற்கு திருவிழா கோலத்தைக் கொடுத்தது.

விசுவும் அவரின் மனைவி பிரமோதினியும். இவர்கள் இருவரும் ஜெயமோகனோடும் அருண்மொழியோடும் அமெரிக்கா நெடுக பயணிக்கப் போகிறவர்கள் என்றவுடன் காதில் பெரும்புகை கிளம்பியது.

அதே போல் அந்த தொடர் பயணத்தில் காரில் கூட செல்லப் போகிறவராக ஸ்ரீராம் அறிமுகமானார்.

கடைசி அங்கமாக இந்த கால்கோள் முகாமில் பேசியவர்களில் சிலர்.

மெம்ஃபிஸ் செந்தில் கம்பராமாயணப் பாடல்களை வாசித்து விளக்கினார். கவிதைகள் குறித்து பாலாஜி ராஜு.

இறுதியாக என்னை பூன் முகாமிற்கு கொண்டு சேர்த்த ஷங்கர் பிரதாப். உடன் பயணித்த மதன். மற்றும் திரும்பும் வழியில் அமரிக்கையாக முதன்மையான கேள்விகளைத் தொடுத்து பயணத்தை சுவாரசியமானதாக்கிய ஓவியர் அருண். செல்பேசி உரையாடல்களில் மூலமே அறிமுகமாகியிருந்த பிரகாசம். இவர்கள் மீண்டும் மீண்டும் என்னைத் தரைக்குக் கொணர்ந்தவர்கள். உனக்கும் மேலே உள்ளவர்கள் கோடி… நினைத்துப் பார்த்து நிம்மதியை நாடு என்னும் தத்துவத்தை பூடகமாக தங்களின் வாசிப்பினாலும் (மதன், சியாட்டில் ஷங்கர் ப்ரதாப் போன்றோர்), திறமையினாலும் (ஓவியக்கார அருண், ஓளி ஓவிய கலைஞரான மிச்சிகன் சங்கர நாராயணன் போன்ற படைப்பாளிகள்), ஹூஸ்டன் சிவா போன்ற திறமையான முழுமையான மொழியாக்க வல்லுநர்களும் என் போதாமையையும் போக வேண்டிய தூரத்தையும் தங்களின் செயல்திறமையினால் விளக்கினார்கள்.

விடுபட்டவர்கள் மன்னிக்க வேண்டும். அவர்கள் மட்டுமே ஜெ என்னும் ஆளுமையின் முழுமையான சொற்பொழிவுக்கும் ஈர்க்கும் வசீகரத்திற்கும் உட்பட்டவர்கள்.

மீண்டும் தலைப்பிற்கே வந்துவிடலாம். ஜெயமோகனின் புகழ் பெற்ற பிரிவுகளில் ஒன்று – டால்ஸ்டாயும் தாஸ்தவெய்ஸ்கியும். ஒருவர் நல்லவர்களைப் பார்ப்பவர். இன்னொருவர் எதிலும் எல்லாவற்றிலும் குற்றங்களை நுணுக்கி நுணுக்கி தெரிந்து மகிழ்பவர். அறம் அற்ற இந்தியர்களை எங்கும் காண்கிறேன். குப்பையை அப்படியே வீசுவது. மாற்றுத் திறனாளிக்கான கார் நிறுத்துமிடத்தைத் திருடுபவர். பத்து பைசா அதிகம் கொடுத்தால் தன் விசுவாசத்தை இன்னொருவருக்குத் தந்துவிடும் முதலிய வழிபாட்டாளர். பற்பசை திருடுபவர்.

கூட்டம் என்பது மந்தை. திரள் பொதுசனம். அதில் இருந்து எது ஒருவரை வித்தியாசப்படுத்துகிறது?

அவர்கள் மேற்சென்று தங்கள் திறமையை செயலூக்கமாக்குகிறார்களா? ஒரு renaissance போல் மறுமலர்ச்சி போன்ற குறுகியவட்டத்தில் தளத்தில் கிடைத்த அனுபவங்களைக் கொண்டு ஒரு கூட்டத்தை, ஒரு நாட்டை, ஒரு பிரதேசத்தை, தங்களின் ஈர்ப்பு விசையால் ஆகர்ஷித்து மேற்கொணர்ந்து முன்னகர்த்துகிறார்களா? ஆசானையும் குருவையும் வெறுமனே போஷிக்காமல், அவரின் லட்சியங்களையும் அவரின் குணாதிசயங்களையும் கடைபிடித்து, அவரின் சித்தாந்தங்களை உள்வாங்கிக் கொண்டு சிறப்பாக செயல்படுத்துகிறார்களா?

இங்கே குழுமியவர்களில் படத் தயாரிப்பாளர்கள் இருந்தார்கள். திறமையான இசைக் கலைஞர்கள் பலரும் பங்கு பெற்றார்கள். நிர்வாகமும் எல்லோரையும் கட்டி மேய்க்கும் அதிகாரமும் கொண்டவர்கள் விழாவை வெகு சிறப்பாக நடத்திக் காட்டினார்கள். ஓவியர்கள், சித்திரக்காரர்கள், கலைநயம் மிக்க புகைப்படக்காரர்கள், என்று தங்கள் பணிபுரியும் அறிவியல், பொறியியல், கணிதம், நிதி நிர்வாகம், மேலாண்மை போன்ற துறைகள் தவிர்த்து பரிமளிக்கும் வித்தகர்கள் இருந்தார்கள். பலரும் பண்பட்ட எழுத்தாளர்கள்.

பொது யுகத்திற்கு முன் நான்காம் நூற்றாண்டில் ஏத்தனியர்கள் என்று கிரேக்கத்தில் ஒரு குழு அமைகிறது. நாம் அறிந்த சாக்ரடீஸ், ப்ளாட்டோ, அரிஸ்டாட்டில், பித்தோகரஸ் போன்ற பல அறிஞர்களும் அவர்களின் வழித்தோன்றல்களும் இன்றளவும் நம் சிந்தையையும் செயலையும் ஆக்கிரமித்திருக்கிறார்கள்.

அதே போல் பொது யுகத்திற்கு பின் பதினைந்தாம் நூற்றாண்டில் ஐரோப்பிய வரலாற்றின் மறுமலர்ச்சி (renaissance) காலம் இத்தாலியில் உதயமாகிறது. அதற்கு ஆதரவு தந்தவர்கள் கலைகளில் அவதானம் செலுத்தக்கூடிய சுதந்திர மனநிலையை உடையோராக இருந்ததுடன் கலைகளை ஆதரிக்கக்கூடிய பணபலமும் அவர்களிடம் இருந்தது.

இத்தாலியில் தாந்தே, இங்கிலாந்தில் வில்லியம் ஷேக்ஸ்பியர், பிரான்சில் இராஸ்மஸ், சித்திரக் கலைஞர்களில் லியானாடோ டாவின்சி, மைக்கல் ஆஞ்சலோ, விஞ்ஞானத் துறையில் போலந்தரான நிக்கலஸ் கொபர்னிகஸ், ஜேர்மனியரான ஜொஹென்ஸ் கெப்லர், இத்தாலியரான கலிலியோ கலிலி, இங்கிலாந்தைச் சேர்ந்த ஐசக் நியுட்டன் என அறிவியல், அரசியல், மருத்துவம், சிற்பம், கட்டிடம், பொருளாதாரம், மொழி, இலக்கியம் என பலவற்றிலும் தங்கள் முத்திரையைப் பதித்து புதிய எழுச்சியை உருவாக்கினார்கள்.

இந்தக் குழு அப்படிப்பட்டகுழு என்றுதான் எண்ணுகிறேன். காலம் விடை சொல்லும்.

வந்தவர்கள் எல்லாம் சரி! விஷயம் என்ன? எதைக் குறித்து விவாதித்தீர்கள்? என்னவெல்லாம் பேசினீர்கள்? யார் உரைத்தார்கள்? அவற்றை இன்னொரு பதிவில் பார்க்கலாம்.

மேலும்:

  1. பூன் முகாம் முழுநிகழ்வு- ஜெகதீஷ்குமார்
  2. கூடுதல் என்பது களிப்பு
  3. டல்லாஸ், டெக்ஸாஸ் வாசகர் சந்திப்பு – கடிதம்
  4. அமெரிக்கா- கடிதம்
  5. பூன்முகாம், கவிதை -கடிதம்: ஷங்கர் பிரதாப்
  6. அமெரிக்க பயணம் 2022
  7. பூன் இலக்கியக்கூடுகை

2 responses to “வளநீர்ப் பண்ணையும் வாவியும்

  1. இந்தக் கட்டுரை எழுதியவுடன் சொல்வனம் தளத்திற்கு அனுப்பினேன்.

    அவர்கள், “இது என்ன பெரிய பட்டியலாக இருக்கிறது? ஒவ்வொருவராக லைனில் வரிசையாக நிற்கச் சொல்லியிருக்கீங்க… முகாமின் பேசுபொருள் என்ன? இன்னும் ஒரு ஐந்தாண்டு கழித்து இதை வாசித்தால் மனதில் ஒட்டுமா? அல்லது அப்பவும் பட்டியலாக மட்டுமே எஞ்சுமா? இதெல்லாம் ‘பழைய நெனப்புதான் பேராண்டி’ நனவோடை வகையாக வைத்தால், சம்பவங்களேக் காணோமே! சந்திப்பை சரித்திரபூர்வமாகவோ, சமூகவியல் ரீதியாகவோ, கலாச்சாரப் பார்வை கொண்டோ பன்முகமாக சொல்லப் பாருங்கள். இதில் தத்துவம் குறித்து இப்படி பேசினார்கள் என்று சொல்லாமல், ‘ஏன் அவ்வாறு தர்க்கம் செய்தார்கள்? எப்படி அவ்வாறான முடிவுக்கு இன்னார் வந்தார்கள்?’ என்றெல்லாம் ஆராயுங்களேன். விமர்சனபூர்வமாக அணுகுங்கள்.” என பதில் போட்டார்கள்.

    அவ்வளவு ஆழமாகச் சென்றால் வந்தவர்கள் பகிர்ந்த கருத்துகள் கைமா ஆகி கொத்து பரோட்டோ ஆகிவிடும். அதே சமயம் அங்கே முன்வைக்கப்பட்ட பொதுமைப்படுத்தல்களில் பலவற்றில் என் தரப்பு இன்னொரு பக்கம் இருந்தது. இவ்வளவையும் கோர்வையாகவும் விரிவாகவும் உண்மையாகவும் எழுதுவதற்குள் அடுத்த சந்திப்பு முடிந்து விடும். ஆசானும் கேரளா, குமரகுருபரன் என்று முன்னகர்ந்து ஓடிப் போய்க் கொண்டேயிருக்கிறார்.

    ‘தான் உட்கார மாட்டோம் என அறிந்திருந்தும் முதியவர்கள் மரங்களை நட்டால் அந்த சமுதாயம் சிறப்பாக வளரும்!” என்பது கிரேக்கப் பழமொழி. ஜெயமோகன் அந்த ரகம்.

    //பி.கு.: பழமொழியில் முதியவர் என்பதாலும் ஜெமோவிற்கு 60ஆகி விட்டதாலும் அவரை வயசாளி என்று கற்பனை செய்யவேண்டாம். //

    இது அவர் அமெரிக்காவிற்கு வந்து அவ்வப்போது விதைகளைத் தூவி, செடிகளை நீவி, கொடிகளுக்குக் கொம்பு கொடுத்து, குருக்குகளுக்கு தோப்பை அறிமுகம் செய்துவிட்டு போகும் காலம். அந்த மாதிரி சந்திப்பைக் குறித்த அனுபவங்களை என் பதிவில் சேமித்திருக்கிறேன்.

    அது இருக்கட்டும்?

    நீங்கள் ஏன் பிரபலமானவரை சந்திக்கிறீர்கள்?
    பலரும் ஒரே இடத்தில் ஒன்று கூடி கருத்தரங்கு நடத்துவதன் பயன் என்ன?
    புத்தகத்தில் கிடைக்காத எது எழுதியவரை நேரில் பார்த்து உரையாடுவதால் கிடைக்கும்?

  2. பொன்.முத்துக்குமார்

    நன்றி பாலா.

    வாராது வந்த வாய்ப்பு. ச்சே எவ்வளவு மடத்தனமாக தவற விட்டிருக்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.