அநுமானத்திலடங்கும் பிரமாணங்கள்


சொகுசான இடங்களில் வாழ்பவருக்கு வறுமையும் தெரியாது. அங்கிருப்போரின் கதைக்களனும் ரம்மியமாக உளச்சிக்கல்களைக் கொண்டிருக்கும்.

இது பெரும்பாலானோருக்கு உவப்பானது. பெரும்பாலானோர் கதை எழுதுவதில்லை. அவர் நிம்மதியை நாடுபவர்.

அமெரிக்காவாக இருக்கட்டும். பணத்தில் புரளும் மேற்குலகம் ஆகட்டும். ஒவ்வொரு நியு யார்க் லண்டனிலும் நுழையக்கூடாத பிரதேசங்கள் உண்டு. அது வரைபடத்தில் இருந்தாலும் கூகிள் மேப்ஸ் அனுப்பாத சாலையைக் கொண்ட அரணாக இருக்கும். அங்கு போதை வஸ்துவும் கிடைக்கும். ராப்பிசாசாக அலைபவருக்கு வேண்டியவையும் விற்கப்படும்.

இது பெரும்பாலானோர் விரும்புவது. நல்லவர் எல்லாம் சொர்க்கத்தில் மிதப்பது வசதி. அல்லவர் எல்லாம் நரகத்தில் கண் காணாமல் இருப்பது தெரியாது.

நல்ல உணவு; கொண்டாட்டமான கேளிக்கை; நடந்தால் வரும் சுகந்தம் – இது சொர்க்கவாசி.

சாலை நடுவில் திக்கற்ற பார்வதி; பச்சை குத்திய தடிமாடு; சாயம் போன கார்; பேட்டையில் நுழைந்தாலே வரும் பயம் – இது சுவர்க்கவிரும்பி ஹாலிவுட் படத்தில் மட்டும் பார்க்கும் அக்ரஹாரம்.

இவ்வளவு முன்னுரையும் எதற்கு?

அமெரிக்காவில் கருப்பினத்தவரை பிச்சை எடுத்து பார்த்திருக்கிறேன். வயதானவரை சாலையோரமாக தட்டி வைத்துக் கொண்டு உண்டியல் குலுக்குவதைக் கண்டு அவசரமாக நகர்ந்திருக்கிறேன்.

சிலர், “இந்த தானம் எனக்காக இல்லை! எங்கள் அமைப்புக்காக!!” என்று சொல்வார். சிலர், “நானும் என் குடும்பமும் சாப்பிட்டு ஆறு வேளை, மூன்று நாள் ஆகி விட்டது. இந்தக் கடுங்குளிரில் ஒரு வாய் கவளத்துக்காவது காணிக்கை கொடுக்கவும்.” என்பார். சிலர், “உனக்காக நான் இராக் சண்டைக்குப் போனேன்! அப்படிப்பட்டவனை இப்படியா நடு ரோடில் விடுவது?” எனக் கேட்பார்.

அவருக்கு உருக்குலைந்த தோற்றம் இருக்கும். வெறித்த பார்வை இருக்கும். போருக்குச் சென்று திரும்பியவர் என்றோ சமீபத்திய பொருளாதராச் சரிவில் வேலை இழந்தேன் என்றோ எழுதியிருக்கும். புகைக்கு அடிமையானவர் என்பது முக அடையாளம்.

கருப்பர்; நோஞ்சான்; எலும்புருக்கி; கிழவி; வெடவெடக்கும் கை; பதற்றமான நடை; இறைஞ்சும் பார்வை – இதைக் கடந்து போக மனதை சிந்தையின் நியாயம் கொண்டு அடக்குவேன்.

ஆனால்… இன்று…

சாலையின் இந்தப் பக்கம் இந்தியப் பெண்மணி. அசப்பில் மணிரத்னம் கதாநாயகி போல் இருந்தார். சாலையின் இன்னொரு பக்கம் போஷாக்கான பூசியத் தோற்றம் கொண்ட பழுப்பு நிற தெற்காசியன். தமிழனோ? தெலுங்காக இருக்குமோ? வட இந்தியராகவும் இருக்கலாம். பக்கத்தில் மூன்றோ, நான்கு வயதோ மதிக்கத்தக்க குழந்தை. அதற்கான தள்ளுவண்டி.

பிற இரப்பாளர் இடத்தில் பார்த்தது போன்றே அழுக்கான கம்பளி. உடைமையைக் கொண்ட தரைவிரிப்பு. நம்மவர் ஏன் இப்படி வருவோர், போவோரிடம் கையேந்த வேண்டும்?

எல்லா தேஸி மக்களும் சுந்தர் பிச்சை மாதிரி அந்தஸ்துடன் சௌக்கியமாக இருப்பவர்கள் அல்லவா? நல்ல சம்பளம். சொகுசான கார். வீட்டு வேலை உதவிக்கு பெற்றோர். ஞாயிறு ஆனால் ஊர்சுற்றல். இப்படிப்பட்ட குடிபுகுந்தவரை மட்டுமே பார்த்தவனுக்கு அறிவு இயங்க மறுத்தது.

யாசகத்துக்கு என்ன காரணமாக இருக்கும்?

மனைவியை விற்கும் அன்னக்காவடியோ?

குழந்தையை வைத்து மிரட்டுகிறானோ?

இந்த ஆண்களே இப்படித்தான். எருதாண்டிமாடு ஆண்வர்க்கம்.

தன் வீடு, வாசல் எல்லாம் கொள்ளையடிக்கப்பட்டு ஓட்டாண்டியானவரோ?

சாஃப்ட்வேர் இல்லாத உணவக வேலை போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவரோ?

ஆடலுடன் பாடல் கச்சேரி நிகழ்ச்சிக்கு வருவோர் ஓரிருவரை தொலைத்துவிட்டுச் சென்றுவிடுவார். அந்த மாதிரி அனாதையாக்கப்பட்டோரோ?

ஆள்குறைப்பு, வேலையிழந்து நெடுங்காலம் காத்திருத்தல் போன்ற திடீர் தரித்திரத்தால் இந்த மாதிரி இறங்கினாரா?

கலிஃபோர்னியா போன்ற வேறு ஊரில் இருந்து வந்து கொள்ளையடிக்கப்பட்டு அனைத்து விஷயங்களையும் இழந்தவரோ?

பேருந்து நிலையத்தில் பயணத்திற்கு சொந்த ஊருக்குத் திரும்பிப் போக காசு வேண்டும் என்று இறைஞ்சுவாரே… அவரோ?

செய்வதறியாது திகைத்து கையறு நிலையில் இந்த இறுதி மார்க்கத்தில் இழங்கியவரோ?

சீவகராக பிஷை எடுத்து உண்ணவேண்டும் என்பது ஜாதகப் பரிகாரமாக சொல்லப்பட்டதால் அதற்காக இந்த மாதிரி பொன்னம்பலத்தார் ஆனாரோ?

பிட்காயின், டாஜ்காய்ன், எதிரீயம் என்று பணத்தை சூதாடி அழித்தவரோ?

அந்தப் பெண்ணின் அறிவிப்புத் தட்டியைப் படிக்க எத்தனித்தேன். அந்த அட்டை என்ன சொல்கிறது என்று பார்ப்பதற்குள் பச்சை விழ சாலையை விரைந்து விட்டேன்.

கூட வந்த நண்பர் செந்தில் சொன்னார்: “ரொம்ப யோசிக்காதீங்க பாலா… குறும்பட ஷுட்டிங் ஆக இருக்கும்!”

பின்புறம் காவலர் வருவது தெரிந்தது. அந்தத் தம்பதியரையும் சிறுவனையும் போலிஸ் ஜீப்பில் ஏற்றியனுப்புவது தூரப்புள்ளியாக மறைந்தது.

One response to “அநுமானத்திலடங்கும் பிரமாணங்கள்

  1. முன்னுரை:

    சொந்தப் பதிவில் எழுதுவது போன்ற சுதந்திரம் வேறெங்கும் கிடைப்பதில்லை.

    சென்ற வாரம் தெருவோரமாக காவடியேந்திய காரிகையையும் அவளுடைய பதிவிரதனையும் தனந்தயனையும் பார்த்தேன். கண்டவுடன் மனம் அலைபாய்ந்தது. நானும் இப்படி நடுத்தெருவிற்கு வந்துவிடுவேனோ என்னும் பயமும் சுயபரிசோதனையும் எட்டிப் பார்த்தது.

    எழுதிப் பார்த்தால் மட்டுமே தீரக் கூடிய மன அழுத்தம் நிறைந்த சோகம். ஐந்து டாலர் உண்டியலிட்டதால் மட்டும் நிறைவு கொண்டு விடாத பதைபதைப்பு. படபடப்பைப் போக்க பதிவிட்டேன்.

    போட்டிக்கெல்லாம் அனுப்ப திராணி இல்லை. இணையத்தில் கொட்டிக் கிடக்கும் பத்திரிகைகளுக்கு அனுப்ப தில்லும் இல்லை.

    எனவே, மேலே உள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.