சித்திரா நதி = அழகிய நதி என்பது வடமொழிப் பெயர்; சிற்றாறு என்பது இதன் தமிழ்ப் பெயர்,
சிற்றாறென்பது பெற்றாலும் ஒரு
(முக்கூடற் பள்ளு – ருக)
சிறியவர் மனப் பெருமைபோல்
சித்ரா நன்னதி பெருகி வாற
சித்ரம் பாரும்…
கோதண்டராம நதி என்பது, கழுகுமலைப் பிரதேசத்தில் உற்பத்தியாகும் சிறு வாய்க்கால். இதன் நீர் சிறிது உப்பாயிருப்பதால் உப்போடையென்றும் வழங்கப் பெறும்.
இந்த நதியைப் பற்றி கதையொன்று உண்டு. மானைத் தேடி வந்த இராமபிரான், தாக மிகுதியினால் பக்கத்திலிருந்த ஆனைமலையில் இருந்து ஆனைநதி (கஜநதி – கயத்தாறு) வருமாறு பணித்தார். இதில் வந்த நீர் உப்பாயிருக்கவே, தம் கோதண்டத்தைப் பூமியில் ஊன்றிக் கங்கையை வரவழைத்துத் தாகத்தைத் தீர்த்துக் கொண்டார்.
முக்கூடல் என்பது திருநெல்வேலி ஜில்லாவில் தாமிரவருணி நதியின் வடகரையிலுள்ள சிறு கிராமம், மூன்று ஆறுகள் கூடுமிடத்தில் இருப்பதால் முக்கூடலாயிற்று. முன் காலத்தில் சித்திரா நதியும் கோதண்டராம நதியும் இவ்வூரில் வந்து பொருநையில் கலந்தமையால், இவ்வூருக்கு இப்பெயர் வந்தது.
இந்த மாதிரி மூவுலகின் சங்கமமாக வண்ணநிலவன் எழுதும் அடுத்த நாவலின் முதல் அத்தியாயம் வெளியாகி இருக்கிறது.
நடுத்தர வர்க்கம். சென்னைக்கு இடப்பெயர்வு. வானொலிப் பாடல் என அந்த நாள் நினைவும் நெல்லையும் கலந்துகட்டி வந்திருக்கிறது.
திருநெல்வேலி அல்வாவை விழுங்குவது போல எளிதாக எழுதுகிறார் வ.நி. அது வாசிப்பிற்கு நல்ல சௌகரியம்.
என் அம்மாவிற்கு சொந்த ஊர் கல்லிடைக்குறிச்சி. அது எழில் மிக்க சிற்றுார். கனடியன் வாய்க்கால் பற்றி கதை கதையாகச் சொல்வார். அதை எழுத வேண்டும் என்று நினைத்தேன். இங்கே வண்ணநிலவன் அமர்க்களமாகத் துவங்கியிருக்கிறார்.