குருதி – மலையாளப் படம்: மூன்று பார்வைகள்


நன்றி: ஃபேஸ்புக்

Gokul Prasad

குருதி- சில எண்ணங்கள்.

இந்தப் படத்தின் திரைக்கதையில் ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கின்றன. தர்க்கப் பிழைகள் இருக்கின்றன. இதன் க்ளைமாக்ஸ் ஓர் உதாரணம். அதன் காரணமாக படம் நன்றாக இல்லை.

இப்படம் இஸ்லாமியர்களை ‘மட்டும்’ மோசமாகச் சித்தரித்திருப்பதாகவும் அவர்களது தீவினைகளுக்கு எதிர்வினையாகவே இந்துத்வர்கள் செயல்படுவது போலக் கட்டமைக்கப் பிரயத்தனப்படுகிறது என்றும் பலரும் அபிப்ராயப்படுவதை நான் ஏற்கவில்லை.

முதல் விஷயம், பிருத்விராஜ் சொல்கிற ஃப்ளாஷ்பேக். ஃபிரான்சின் நவீன மனநிலையுடன் ஒப்பிடும்போது, அவர்களது முற்போக்குத்தனத்துடன் ஒப்பிடும்போது, இஸ்லாமியர்கள் அங்கே நிகழ்த்திய வன்முறை – நேரடியாகவும் கருத்தியல் ரீதியிலும் – சகித்துக்கொள்ள முடியாதது. சார்லி ஹெப்டோ பத்திரிகையில் முகமது நபியின் கேலிச் சித்திரத்தை வரைந்ததற்காக குண்டு வைத்த இஸ்லாமியர்களைக் கண்டு ஐரோப்பியர்கள் அஞ்சுவது நியாயமானதே. புரிந்துகொள்ளக்கூடியதே. அவர்கள் முந்நூறு ஆண்டுகளாக இரத்தம் சிந்தி அந்தக் கருத்துச் சுதந்திரத்தை அடைந்தவர்கள். அவர்களுக்கு அதன் மதிப்பு தெரியும்.

இந்தப் படம் இஸ்லாமியக் குடியேறிகள் ஃப்ரான்ஸில் செய்த அட்டூழியங்களையும் அவர்கள் ஈடுபட்ட ஜனநாயக விரோத நடவடிக்கைகளையும் தன்னுடைய கதாபாத்திரத்தின் மனநிலையை வகுப்பதற்கான reference-ஆக எடுத்துக்கொள்கிறது. இதில் எந்தத் தவறுமில்லை.

நான் இப்படிப் புரிந்துகொள்கிறேன்.

இரண்டு விதமான இஸ்லாமியர்களை இப்படம் சித்தரிக்க முயல்கிறது.

1. தங்களது மதவெறி காரணமாக கொலைவெறிச் செயல்களில் ஈடுபடுபவர்கள்.

2. இஸ்லாமிய மதநெறியின் பொருட்டு தங்களது நன்னம்பிக்கை வழுவாது வாழ்பவர்கள். யாருடைய பார்வை சரி, எந்தத் தரப்பு தவறு என்பதற்குள் விரிவாகச் செல்லாமல் சுருக்கமாக இப்படி வரையறுக்கலாம். இந்த இரண்டு தரப்பு இஸ்லாமியர்களுமே தங்களது நம்பிக்கை மீது மிகுந்த பிடிப்புடனும் பற்றுடனும் வாழ்கிறார்கள். அதில் பாவனை இல்லை, நாடகம் இல்லை, போலித்தனம் இல்லை. சரியோ தவறோ தாங்கள் தீர்க்கமாக நம்புவதைக் கடைபிடிப்பதில் தயக்கங்கள் இல்லை. இதில் அவரவர்க்கு அவரவர் நியாயம் இருக்கிறது.

ஆனால், பலரும் கருதுவதைப் போல அந்த இந்துத்வ சிறுவனை இப்படம் அப்பாவியாகக் காட்டவில்லை. அவனை ஒரு புழுவைப் போல காட்டுகிறார்கள். அவன் தனது கொள்கைக்கு விரோதமாக மாட்டுக்கறி உண்கிறான். தன்னைக் காப்பாற்றிக்கொள்ள எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கிறான். இதன் மூலம் அவன் எவ்வளவு அற்பமானவன் என்பதை நிறுவிவிடுகிறார்கள்.

‘அவங்க கோவிலை எரிச்சாங்க. இவன் கத்தியை எடுத்துட்டான்’ என இந்துப் பெண் சுமா சொல்லும் காரணம்கூட வெறும் சால்ஜாப்புதான். இஸ்லாமியர்களைப் போல தன்னுடைய செயலுக்கான விளைவுகளை (conviction) ஏற்றுக்கொள்ள அவன் தயாராக இல்லை. தன்னுடைய வயதைக் காரணம் காட்டி அடுத்தவர்கள் மீதோ பழிசுமத்தி தன்னைத் தூய்மையில் நிறுத்திக்கொள்ள அவன் நடிக்கிறான். அதற்கு சுமா துணைபோகிறாள். கடைசியில், தான் உயிர் பிழைப்பதற்காக, தன்னைக் காப்பாற்றிய சுமாவையும் அவளது அண்ணனையும் நடுக்காட்டில் தள்ளிவிட்டு இருவரையும் உயிருக்குப் போராட விட்டுவிடுகிறான். எவ்வளவு சுயநலம்! குள்ளநரித்தனம்! (ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கே மதவெறி/சாதிவெறி அதிகம் எனக் கோடிட்டுக் காட்டுகிறார்கள்.)

பிரச்சினை என வந்துவிட்டால், இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் சளைக்காமல் உதவுகிறார்கள். தங்களது கூட்டாளிகளைப் பாதுகாக்கிறார்கள். ஆனால், இந்துத்வனோ, தான் மட்டும் தப்பிப் பிழைத்தால் போதுமென நினைக்கிறான். ஓர் இந்துத்வனை நம்பி சக இந்துக்கள் அவனுக்கு உதவிசெய்ய நினைப்பதுகூட பேராபத்தில்தான் முடியும் என்பதல்லவா இதன் பொருள்? அவன் கடைசிவரை தன் தவறை ஒப்புக்கொள்வதில்லை, மனம் திருந்துவதில்லை, தனக்காகச் சொந்த மதத்தினரைப் பகைத்துக்கொண்ட ஓர் இஸ்லாமியக் குடும்பத்தின் வேதனை எந்த விதத்திலும் அவனைப் பாதிக்கவில்லை. அவர்களது குருதியை உறிஞ்சிவிட்டு இன்னமும் வெறி அடங்காது வெறுப்புடன் திரிகிறான். இவனை விடவா இப்படத்தின் இஸ்லாமியத் தீவிரவாதிகள் மோசமானவர்கள்?

அதனால், அந்த இந்துத்வனை அப்பாவியாகச் சித்தரித்திருக்கிறார்கள் என்பதைத் தர்க்கரீதியில் ஒப்புக்கொள்ள முடியாது. அவனைத் தீமையின் உருவகமாகக் காட்டியிருக்கிறார்கள் என்கிற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது.


Suresh Kannan

‘மனிதனால் யாரையும் வெறுக்காமல் இருக்க முடியாது’

‘குருதி’ மலையாள திரைப்படம் பார்த்தேன். மேற்கண்ட வாக்கியம்தான் இந்தப் படத்தின் ஆதார மையம் என்று தோன்றுகிறது.

‘இந்த வாக்கியத்தை உங்களால் தாண்டி வர முடியுமா?” என்கிற சவாலான கேள்வியை, மூசா என்கிற ஓர் இஸ்லாமியப் பெரியவரின் வழியாக ஒவ்வொரு பார்வையாளனையும் நோக்கி கேட்கிறது இந்தப் படம்.

ஆயிரம்தான் இருந்தாலும் மதம் என்பது ஒரு கற்பிதம்தான். அது நம்முள் விதைக்கும் நல்ல விஷயங்களைத் தாண்டி வன்மமாகவும் வெறுப்பரசியலாகவும் பரவும் அபத்தத்தை ரத்தக் கறையோடு விறுவிறுப்பாக சொல்லிச் செல்கிறது இந்தத் திரைப்படம்.

அனைத்து மதத்திலும் சில அடிப்படைவாதிகள் இருப்பார்கள். மத அரசியலின் புகையை ஊதிக் கொண்டே இருப்பார்கள். இந்தச் சாத்தான்களின் குரலை புறக்கணித்து விட்டாலே போதும்.

அப்படியொரு ‘சாத்தானாக’ ருத்ரதாண்டவம் ஆடியிருக்கிறார் பிருத்விராஜ். அவருடைய தயாரிப்பாக இருந்தாலும் இப்படியொரு எதிர்மறைப் பாத்திரத்தை எடுத்ததற்கு பாராட்டு. (ஹேராமில் கமல் ‘அப்யங்கர்’ பாத்திரத்தை எடுத்திருப்பாரா என்கிற கேள்வி இங்கு எழுகிறது).

படம் இழுவையான காட்சிகளுடன் துவங்கினாலும் ஒரு கட்டத்தில் நெருப்பு மாதிரி பற்றிக் கொள்கிறது. பிறகு வேகம். வேகம்தான்..

மதக்காழ்ப்பு என்பது சிலரிடம் அப்பட்டமாகவும் பலரிடம் மறைமுகமாகவும் ஒளிந்திருக்கும் ஆபத்து, ‘நாம்’ ‘அவர்கள்’ போன்ற பிரிவினைவாத சிந்தனைகள் எவ்வாறு உருவாகின்றன என்பது உள்ளிட்ட பல விஷயங்களை சொல்லிச் செல்கிறது, இந்தப்படம்.

திரைக்கதை, ஒளிப்பதிவு, பின்னணி இசை என்று பல தொழில்நுட்ப சமாச்சாரங்கள் சிறப்பாக அமைந்துள்ளன. நிச்சயம் தவற விடக்கூடாத திரைப்படம்.


Devibala Malathi DM

சிறப்பான படத்தை பார்த்த ஒரு திருப்தி. வாழ்வில் நாம் காணும் மனிதர்களின் மேல் அரசியல் , சுயநலம் ,பொறாமை என்ற பெயரில் நாம் செலுத்தும் வெறுப்பை நம் கண் முன்னே ஓர் இரவின் நிகழ்வுகள் பின்னணியில் சொல்லிவிடுவதே இந்த படம்.

மதத்தின் மேல் பலருக்கும் பல கருத்துக்கள் இருக்கும். அந்த கருத்துக்கள் ஒரு பக்கம் இருக்கட்டும் , அதன் இரு வேறு நன்மை தீமைகளை எடுத்துக்கூறும் ஒரு திரைக்காவியம் என்பதாக இந்த படத்தை நாம் காணலாம்.

ஒரு காட்சி என்னை மிகவும் கவர்ந்தது, கொல்வதற்காக வரும் எதிரிகள் வீட்டு மெயின் ஸ்விட்சை அணைக்கிறார்கள் அப்பொழுது அங்கு உள்ளிருக்கும் இருவர் தன்னைத்தான் கொல்ல வருகிறான் என்று நினைத்து இரு மத இளைஞர்கள் எதிர் எதிர் ஒரு ஆயுதத்தை ஏந்தி எதிர்த்து நிற்பார்கள் . அப்பொழுது அங்கிருக்கும் பெரியவர் ” இதுதான் நம் நாட்டின் பிரச்சனையும் ” என்பார். எவ்வளவு நாசூக்காக நம் நாட்டின் மத பிரச்சினையை விளக்கி விட்டார்.

பிருத்விராஜ் சிறப்பான நடிப்பு😊.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.