மயிலாப்பூர் டி.எஸ்.வி கோவில் தெருவில் ஒரு சின்ன அறையில் அவரின் பார்வையறை இருக்கும். அந்தத் தெருவிற்கு ஏன் “டாக்டர் நாகேஸ்வரன் தெரு” என்று பெயர் வைக்கவில்லை என்று நினைத்திருக்கிறேன்.
அவர் குழந்தை நல மருத்துவர்.
அவர் ஒரு மனநல மருத்துவரும் கூட.
அவரை குருஜி என்றும் சொல்ல வேண்டும்.
பலர் அவரை தங்களின் ஆலோசகர் + வழிகாட்டுனர் ஆகவே பார்த்தார்கள்.
சுருக்கமாக நல்ல மனிதர். பழகுவதற்கு எளிமையானவர். வாழ்க்கை சிக்கல்கள் ஆகட்டும்; உடல்நலக் குறைபாடுகள் ஆகட்டும்; பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் எண்ணற்றோருக்கு சுருக்கமான தீர்வுகளை ஐந்து ரூபாயில் தந்தவர்.
மயிலையில் நிறைய விஷயங்களுக்கு கூட்டம் அலை மோதும். வருடத்திற்கொரு முறை அறுபத்து மூவர். ஆண்டிற்கொரு முறை வைந்த ஏகாதசியின் போது ஸ்ரீனிவாசப் பெருமாள். கிறிஸ்துமஸ் இரவின் போதும் புனித வெள்ளி காலத்தின் போதும் சாந்தோம் சர்ச். ஆனால், நாகேஸ்வரன் எப்பொழுதெல்லாம் அவர் க்ளினிக்கில் இருக்கிறாரோ, அப்பெழுதெல்லாம் அந்தத் தெருவே ரொம்பி வழியும்.
சாதாரண பொது சந்திப்பு, சிறப்பு வழி, ஐநூறு ரூபாய் வழி, பின் வழி, வி.ஐ.பி. வழி என்பதெல்லாம் திருப்பதி பெருமாளுக்கு மட்டும் உரியதல்ல. டாகடர் நாகேஸ்வரனுக்கும் உரியது. சொல்லப் போனால், திருமலை தேவஸ்தானத்திற்கு இவர்தான் வழிகாட்டி.
மருத்துவமனையை நடத்தும் நேரம் போக, தன் நோயாளிகளின் நல்ல / கெட்ட விஷயங்களுக்கும் தவறாமல் ஆஜர் ஆவார். காதுகுத்து, கல்யாணம் என்று பத்திரிகை வைத்தால், அவரின் அக்மார்க் சிரிப்புடன் வருவார். ஓரமாக உட்கார்ந்திருப்பார். சகஜமாகப் பேசுவார். உங்களை இயல்பாக்குவார்.
நான்கைந்து முறை அவரைப் பார்க்க நான் சென்றிருக்கிறேன். கடுமையான ஜுரம், வாந்தி / பேதி, உடல்கட்டிகள் என்று விதவிதமான உடலியல் சிக்கல்களுடன் போயிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அதற்குரிய கவனிப்பையும் மருந்தையும் கொடுத்துவிட்டு, அவர் என்னிடம் பல்வேறு முக்கியமான விஷயங்களைப் பற்றி உரையாடியிருக்கிறார்.
- ‘நீ ஏன் மதராஸ் மொழியில் பேசுகிறாய்? நல்ல தமிழில் உரையாட வருமா?’; என் அம்மாவைப் பார்த்து, “இந்தப் பையனுக்கு சுத்தமா பிராமண பாஷையே வருவதில்லை… இல்லியா?” – வந்த சிக்கல் போயேவிடும். உண்மையான சிக்கல் உரைக்கும்.
- “வடக்கிந்தியா வாசம் எப்படி இருக்கிறது? வீட்டை விட்டு தொலைதூராம் இருக்கிறாயே… பிரிவை எவ்வாறு சமாளிக்கிறாய்?”
- “ஆளைப் பார்த்தால் மூன்று வேளை சாப்பிடற மாதிரியே தெரியலியே! பூஞ்சான் மாதிரி இருக்கே… புரதச் சத்து சேர்த்துக்கோ; கார்த்தாலே சாப்பிடாம இருக்கியோ?”
அவரைப் போல் உழைக்க வேண்டும்.
சக உயிர்கள் மீது கரிசனமும் பரிவும் வேண்டும்.
சரியான கவலைகளை நோக்கி நமக்குத் தெரிந்தவர்களை முன் செலுத்த வேண்டும்.
வாழும் காலத்தில் ஆரவாரமின்றி மருத்துவர் நாகேஸ்வரன் போல் சுற்றத்தினாரின் மகிழ்ச்சிக்காவும் ஆரோக்கியத்துக்காகவும் அர்ப்பணிப்புடன் ஆர்வத்துடன் இயங்க வேண்டும்.
GOOD TO READ