ஒவ்வொருவரைப் பற்றியும் அறிமுகக் குறிப்பு வேண்டும். ஒவ்வொரு படைப்பாளியுடனும் உசாவ வேண்டும். அனைத்து சமகால இலக்கியகர்த்தாக்களுடனும் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

அருங்காட்சியகங்கள் சென்றிருப்பீர்கள். அதில் ஒவ்வொரு ஓவியத்தின் பக்கத்திலும் ஒரு குறிப்பு இருக்கும். எந்த வருடம் வரையப்பட்டது; எவர் வரைந்தார்; எந்த மாதிரிச் சூழலில் வரைந்தார்; அதற்கு முன் அவருடைய முக்கிய படைப்புகள் என்னென்ன? அதற்குப் பின் அவருடைய ஆக்கங்கள் எவ்வாறு உருமாறின? யாரைப் பற்றி அல்லது எதைப் பற்றி இந்த ஓவியத்தைப் படைத்தார்?
இன்னும் கொஞ்சம் ஆராய்ந்தால், அந்தத் தளத்தின் ஈசானிய மூலையில், அந்தத் தளத்தில் இடம் பெற்ற ஓவியர்களைக் குறித்தும் கண்டெடுக்கப்பட்ட காலகட்டங்களைக் குறித்தும் அரும்பொருட்களைக் குறித்தும் விரிவான வெளியீடு இருக்கும். அதில் ஓவியரின் பேட்டிகள், தற்கால ஆய்வாளர்களின் விமர்சனங்கள், முந்தைய ஆய்வுகள் குறித்த மேற்கோள்கள் – இன்ன பிற தாங்கிய நூலோ புத்தகமோக் காணக்கிடைக்கும்.
பேட்டிகளும் நேர்காணல்களும் முக்கியமானவை. முன்னுமொரு காலத்தில் காலச்சுவட்டின் ஒவ்வொரு இதழிலும் பாரிஸ் ரிவ்யூ போல் விரிவான சந்திப்புகள் காணக்கிடைத்தன. இன்றையச் சூழலில் படைப்பாளிகளும் இலக்கிய ஆளுமைகளும் பெருகி விட்ட காலத்தில் இந்த மாதிரி ஆழமான உரையாடல்கள் பன்மடங்கு அதிகரித்திருக்க வேண்டும். இதை இக்காலத்தில் அருண்பிரசாத் சற்றே சமரசங்களுடன் செய்கிறார். ஹிந்து நாளிதழின் தமிழ்ப் பதிப்பில் வெளியாவதால், அச்சுப் பதிப்புகளுக்கே உரித்தான இட நெருக்கடியுடன் அவர் செயல்படுகிறார்.
ஆனால், இப்பொழுது இந்த மாதிரி தீவிர வாசிப்பும் அதன் தொடர்ச்சியான விரிவான பேச்சும், அதன் இறுதியில் அவற்றை வரிவடிவத்தில் பதிவாக்குவதும் அருகியேக் காணப்படுகிறது.
இருபதாண்டுகள் முன்பு நண்பர் பா ராகவனும் நேசமுடன் / கல்கி ஆர் வெங்கடேஷும் எனக்கொரு ஆலோசனையை முன்வைத்தார்கள். ஒருவரின் எல்லாப் புத்தகங்களையும் எடுங்கள். தி ஜானகிராமனோ அகிலனோ ஃபிலிப் ராத்தோ – அவரின் ஆக்கங்கள் அனைத்தையும் வாசியுங்கள். எதையும் விடாதீர்கள். கட்டுரைகள், துணுக்குகள், வாழ்க்கை வரலாறுகள், நினைவுக் குறிப்புகள், சண்டைகள், சச்சரவுக் கடிதங்கள், அறிவியல் புனைவுகள், துப்பறியும் கதைகள், சமூகக் கதைகள், அபுனைவுகள், ஓவியங்கள், கிறுக்கல்கள், கவிதைகள், மொழியாக்கங்கள், புனைப்பெயரில் எழுதியவை, அவர் எழுதியிருக்கக் கூடியதாக நம்பப்படும் கர்ண பரம்பரைக் கட்டுக்கதைகள் – எல்லாமும், எதையும் வாசியுங்கள்.
ஒரு வாரமோ / ஒரு மாதமோ கெடு வைத்துக் கொள்ளவும். அதன் பின் அவற்றைப் பற்றி நீங்கள் எடுத்தக் குறிப்புகளைத் தொகுங்கள். அவரிடம் என்ன கேள்வி கேட்க வேண்டுமோ, அவரின் படைப்பு குறித்த சந்தேகங்களைப் பற்றியோ, அவர் எழுத்து குறித்த விமர்சனங்களை முன் வையுங்கள். சும்மா, ஒரேயொரு சிறுகதையையோ, ஓரிரு நாவலையோ வாசித்துவிட்டு – எந்தக் கேள்வியையும் முன்வைக்காதீர்கள்.
நான் வி எஸ் நைபாலை கையில் எடுத்தேன். நான் கேள்விகளைத் தொகுப்பதற்குள் அவர் போய் சேர்ந்துவிட்டார்.
எனவே, இனிமேலும் இவ்வாறு முழுக்கக் காத்திருக்கப் போவதில்லை. ஒருவரின் அனைத்துப் படைப்புகளையும் முழுக்க வாசித்து, ஜீரணமான பின்பே – அவரிடம் கேள்விகளைக் கேட்கப் போவதில்லை. அந்த முடிவின் தொடக்கமாக கிரிதரன் அவர்களை #சொல்வனம் இதழுக்காக பேட்டி கண்டேன்.
அதை #solvanam இதழில் வாசிக்கலாம்.