சங்கதி கேளீர் ஒரு வாரம் நடந்ததோர்
தனலஷ்மியும் முனுசாமியும் சென்ற வார நிகழ்வுகளை அசை போடுகிறார்கள்.
சேதியைப் பாரீர்
தனலஷ்மி: என்னப் படிச்சே?
முனுசாமி: இன்னும் ஒரு மண்டலத்திற்குள் மலையேறப் போகும் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் சொன்ன கருத்தை அடிப்படையாகக் கொண்ட நியூ யார்க்கர் கதையொன்றைப் படித்தேன். ஒரு மணமாகிய ஆணும், மனைவியல்லாத பெண்ணும் ஒருத்தருடன் ஒருத்தர் சந்தித்துக் கொள்ளக் கூடாது — என்னும் கொள்கை கொண்டவர் அவர். அந்த மாதிரி மனைவியையும் துணைக்கு வைத்துக் கொள்ளாமல் சந்தித்தால் — வேறு மாதிரி அர்த்தமாகி விடும் என்கிறார் பென்ஸ். அதை தரவுகள் மூலம் பதிவாக்கி, உறுதி செய்யக் கிளம்பும் கதாநாயகியின் அனுபவங்களைப் புனைகிறார் கர்டிஸ் சிட்டன்ஃபீல்ட் (Curtis Sittenfeld)
தனலஷ்மி: அதையொட்டி நல்லதொரு உரையாடலையும் செய்திருக்கிறார்கள்.
முனுசாமி: கதை எழுதுவது எப்படி என்று அதன் மூலம் சில துப்புகள் கிடைக்கின்றன. கதாபாத்திரங்கள் குறித்த முக்கியமான தகவல்களை உரையாடலில் தரக்கூடாதாம். இது எனக்குத் தெரியாது. யோசித்துப் பார்த்தால் கதைசொல்லி இந்த மாதிரி, பேச்சு வழக்கில், குணச்சித்திரங்களையும் அதன் வாழ்க்கை பின்னணிகளையும் தருவதில்லை என்று புரிகிறது.
தனலஷ்மி: இந்தக் கதையில் எனக்குப் பிடித்த விஷயம், நிஜத்தில் கதைசொல்லி – மைக் பென்ஸ் கூறியது போல் அந்நிய ஆணுடன் தனியாகச் சுற்றுவதனால் கற்பொன்றும் பறிபோய் விடாது என்னும் திடமான நம்பிக்கை கொண்டவர். அது ஒரு அன்றாட பரபரப்பு செய்தியும் கூட. அனுராதா ரமணன் சொல்வார்: “என்னிடம் ஆயிரம் பேப்பர் க்ளிப்பிங்ஸ் இருக்கு. அதையெல்லாம் கதையாக்கப் போறேன்!” என்று. அது போல் தினசரியின் தலைப்பைக் கொண்டு கதை எழுதுகிறார். இருண்மை எனப்படும் இப்படியும் நடக்கலாம், அப்படியும் நடக்கலாம் என்பதை சொல்லிப் போகிறார். செய்தித்தாள் விஷயங்களை எப்படி இலக்கியமாக்குவது என்பது சற்றே பிரமிக்க வைக்கிறது. அதை விட பிரமிப்பு, தனக்கு ஒவ்வாத கொள்கையைக் குறித்து அறம் என்று வகுப்போ நீதிப் பாடமோ கொடுக்காமல் சொல்லிச் செல்வது.
முனுசாமி: நியு யார்க்கரில் கதையைப் படிக்கிறேனோ இல்லியோ… அந்தந்த வாரம் கதாசிரியருடன் நடக்கும் சம்பாஷணையை நான் தவறவிடுவது இல்லை. தமிழிலும் இது மாதிரி விரிவான உரையாடலை ஒவ்வொரு இதழும் நிகழ்த்தணும்.
தனலஷ்மி: இந்தக் கதையின் நீளம் கிட்டத்தட்ட பத்தாயிரம் வார்த்தைகள். இணைய இலக்கிய இதழ்களில் கூட ஆயிரம் வார்த்தைகளைத் தாண்டி சிறுகதை எழுத மாட்டார்கள். தமிழில் அந்த மாதிரி நவீன இதழ்களான சொல்வனம், தமிழினி, கனலி எல்லாம் செய்வதில்லையோ?
முனுசாமி: அவர்களின் குரு சன்னிதானமும் அதற்கு பாதை வகுக்க வேண்டும். ஜெயமோகன் நூறு கதை எழுதினார். பாராட்டி வரும் விமர்சனங்களைத்தான் பதிவு செய்தார். இறும்பூது எய்தி, காணாததையெல்லாம் கண்ட ஒலிகளைக் கேட்டார். கதை குறித்த வாசகர் வட்ட கூட்டங்களிலும் குறியீடுகளையும் உள்ளர்த்தங்களையும் உணர்த்தல்களையும் மட்டுமே முன்வைப்பார்கள்.
தனலஷ்மி: உனக்கு அவரை குத்தம் சொல்லலேன்னா தூக்கம் வராதே!
முனுசாமி: அவருடைய சமீபத்திய தாக்குதல் திருவிளையாடல் பார்த்தியா?
தனலஷ்மி: செத்துப் போனா எப்படி எழுதலாம்னு ஒவ்வொரு பத்திரிகையும் ஒரு அஞ்சலிக் குறிப்பு தயாரா வச்சிருக்கும். பில் கேட்ஸ் சடாரென்று மறைந்தால், அவருக்கு அடுத்த நாளே கட்டுரை அச்சாகணுமே… அதுவும் கோவிட் காலத்தில்! அந்த மாதிரி ஆசான் எல்லோருக்கும் இகழ்பதம் வைத்திருப்பார் என நினைக்கிறேன்.
முனுசாமி: க்ரியா ராமகிருஷ்ணன் குறித்து பாராட்ட வேண்டாம். மீரா குறித்து பேச, ஒருத்தரைத் தூக்கி விட இன்னொருவரை இறக்கிப் பேசணுங்கிறது ரொம்ப அசிங்கமான முன்னுதாரணம்.
தனலஷ்மி: ஜெமோ.வை ஏன் போய் படிக்கிறே? ஃபேஸ்புக்கில் கூடத்தான் ஆயிரக்கணக்கானோர் விதவிதமாய் அங்கலாய்க்கின்றனர்.
முனுசாமி: அவரைப் போன்ற கவனிக்கத்தக்கோர்; அதாவது உதாரண மாந்தராய் இருப்போர் இப்படி நேம் ட்ராப்பிங்கும் மட்டந்தட்டலும் செய்வது மற்றவர்களுக்கு முன்னுதாரணமாய் அமையும். சிஷ்யர்களும் அவ்வாறே செய்லபடுவார்களே என்னும் வருத்தம்தான் அப்படி சொல்ல வைக்கிறது.
தனலஷ்மி: இலக்கியத்தை விடு. என்ன பார்த்தே?
முனுசாமி: அமேசான் ப்ரைம் நிறைய குப்பைகளை வச்சிருக்கு. எல்லா மஹேஷ் பாபு படம். டப்பிங் செய்த ஹிந்தி சீரியல். டப்பிங் செய்யாத “வெள்ள ராஜா”.
தனலஷ்மி: நீ சொல்லும்போதே கூகுள் பண்ணினேன்: “வெள்ள ராஜா’ சீரிஸ் முழுவதும் கேங்க்ஸ்டர் வகையா, வெறும் க்ரைம் வகையா என்பதற்கு மத்தியிலேயே பயணிக்கிறது. நார்கோஸ்',
ப்ரேக்கிங் பேட்’, ஆரண்ய காண்டம்',
சேக்ரட் கேம்ஸ்’, அருவி', இந்த சீரிஸின் கதாசிரியரான லோகேஷ் கனகராஜ் இயக்கிய
மாநகரம்’ முதலானவற்றின் சாயலை மொத்தமாக `வெள்ள ராஜா’வில் பார்க்க முடிகிறது.”
முனுசாமி: பாதி பார்த்திருக்கேன். நன்றாக பொழுது போனது. நீ என்ன பார்த்தே?
தனலஷ்மி: ”லூடோ” பார்த்தேன். தமிழில் சூர்யா எல்லாம் சூரரைப் போற்று என்று மட்டுமே நடிக்கும்போது இந்த மாதிரி அபிஷேக் பச்சானைப் பார்ப்பது மகிழ்வளித்தது. ஜாலியாகப் போன படம். நீ லுடொ விளையாடி இருக்கியா?
முனுசாமி: இல்லை. ஆனால், ஐ.பி.எல். போட்டிகளில் சூது நிறைய விளையாடுதுனு சொன்ன பொக்கிஷம் விக்கியைக் கேட்டிருக்கேன். அவரோடது “செர்டிஃபைய்ட் ராஸ்கல்ஸ்”க்கு நல்ல மருந்து.
தனலஷ்மி: தீபாவளி மருந்து சாப்பிட்டியா?
முனுசாமி: இந்தியாவில் இருந்து வரவழைச்சு சாப்பிட்டேன். ஆனால், அடுத்த தடவை இன்னும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும். பேபால் கணக்கில் ஒருத்தருக்கு பணம் போட்டால், வங்கிக் கணக்கில் இருந்தே பரிமாற்றவும். இல்லையென்றால், அதற்கு தவணை அட்டைகாரர்கள் வட்டியும் முதலும் தண்டம் வசூலிப்பார்கள் எனத் தெரிந்து கொண்டேன். நீயாவது ஜாக்கிரதையா இருந்துக்க…
தனலஷ்மி: நான் எல்லாம் வெண்மோ
முனுசாமி: இந்த வெண்மோ நடத்துற ஆளு ஜெமோ வெண்முரசு விசிறியோ?
தனலஷ்மி: மீண்டும் அங்கேயே வந்துட்டியா. சிவானந்தம் நீலகண்டன் எழுதிய கி.அ. சச்சிதானந்தம் கட்டுரையை படிச்சேன். அந்த மாதிரி எழுதுபவர்களைத் திரட்டி, பரிந்துரைப்பதற்கு ஆங்கிலத்தில் பல இடங்கள் இருக்கின்றன. தமிழில் கூட கில்லி, மாற்று எல்லாம் இருந்தது. இன்னொண்ணுத் துவங்கலாமா?
முனுசாமி: ட்விட்டரோ பார்லரோ இதற்கு மேல். ஆண்டி முகர்ஜி கஷ்டப்பட்டு பத்து பக்கம் எழுதுவார். வெறும் இரண்டே வரியில் கதம் பண்ணிருவாங்க நம்மவர்கள்.
தனலஷ்மி: இந்த மாதிரி மத்தவங்க சொல்லுறத வாய் பார்க்காம, நீயே முழுசாப் படி, பின்னால போய் ஆராய்ந்து பார் என்று அலுவலில் மட்டும் வாய் கிழியப் பேசு.
முனுசாமி: நாளைக்கு திங்கள்கிழமை. ஜோலியப் பார்ப்போம்.