அறிவியலை மனப்பாடம் செய்து மதிப்பெண் வாங்கியிருக்கிறேன். அப்புறம் புரிந்தோ, புரியாமலோ கணக்கிட்டு அறிவியலில் பட்டமும் பெற்றேன். இப்பொழுது இந்த மாதிரி கவித்துமான நூல்களில் அறிவியலின் பிரும்மாண்டமும் சாத்தியங்களும் சற்றே புலப்படுகிறது:
Eating the Sun: Small Musings on a Vast Universe
by Ella Frances Sanders
160 பக்கங்கள்
ஏப்ரல் 2019 வெளியீடு

இந்த அண்டம் பேரதிசயங்கள் கொண்டது. கோடானுகோடியில் நீ ஒரு துகள். நீதான் அந்த மிக மிகச் சிறிய துகள். அந்தத் துகளுக்குள் கோடானுகோடி ஜீவராசிகள் வசிக்கின்றன. அவையே உன்னை வழிநடத்துகின்றன. அந்த நுண்கிருமிகளில் சில மறைந்து போனால் வாழ்க்கையே முடிந்துவிடும். எந்தக் கிருமியை வரவழைத்துக் கொள்கிறோமோ அதற்கேற்றது போல் கிரக மாற்றம் ஏற்பட்டு புத்தி மாறும்; உடல்நிலை ஆட்டம் காணும். இதெல்லாம் திருமூலர் போல் சித்தாந்த சித்துப் பாடலாகச் சொல்லலாம். ஸ்டீஃபன் ஹாகிங் போல் விதி வகுத்து பாடமாகச் சொல்லலாம். அல்லது இந்தப் புத்தகத்தை எழுதிய எல்லா ஃப்ரான்சஸ் சாண்டர்ஸ் போல் சுவாரசியமாகச் சொல்லலாம்.
சென்னையில் இரண்டே இரண்டு பருவகாலம் மட்டும்தான் இருக்கிறது. மழைக்காலம் & வெயில் காலம். ஆனால், பாடப்புத்தகத்தில் நான்கு காலம் இருப்பதாக சொல்வார்கள். தமிழ் முன்னோர்களும் ஒரு ஆண்டின் பன்னிரெண்டு மாதங்களை ஆறு பருவங்களாகப் பிரிக்கிறார்கள்:
- பின்பனி காலம் – தை, மாசி மாதங்கள்
- இளவேனில் காலம் – பங்குனி, சித்திரை
- கோடை, முதுவேனில் காலம் – வைகாசி, ஆனி
- கார் (மழை) காலம் – ஆடி, ஆவணி
- இலையுதிர்காலம் – புரட்டாசி, ஐப்பசி
- முன் பனிக்காலம் -கார்த்திகை, மார்கழி
ஏன் இந்தக் காலங்கள் உருவாகின? எப்படி ஒவ்வொரு ஆண்டும் இது அப்படியே தொடர்கிறது? இரவில் தெரியும் நிலா, சில சமயம் காலையிலும் எப்படி தென்படுகிறது?
நான் உட்கார்ந்திருக்கும் அறையில் சில சமயங்களில் மட்டும் வெயில் சுள்ளென்று கணினியின் மேல் அடித்து சிரமப்படுத்தும். எல்லாக் காலங்களிலும் இவ்வாறு நிகழாது. அது எப்படி குறிப்பிட்ட மாதங்களில் மட்டும் பூமி சாய்ந்து விடுகிறதா?
மேகங்களில் வரைபடங்கள் பார்த்தவன் நான். சில சமயம் பசு மாடு போல் மேகம் தென்படும்; சில மேகங்கள் குண்டுப் பூனைகள்; மற்றும் சில ஒன்றோடன்று சண்டையிட்டுக் கொள்ளும் அசுரர்கள்! கொடைக்கானலில் காலுக்குக் கீழே மேகம். பனிக்காலத்தில் குளமெல்லாம் மேகம். ஏன்? எதற்கு?? எப்படி???

குறிப்பிட்ட காலத்தில் பூப்பூக்கும்; இப்போதைய நவம்பர் காலகட்டத்தில் எல்லா இலைகளையும் மரங்கள் இழக்கும். பாக்யராஜின் சுந்தரகாண்டத்தில் வரும் பாடல் நினைவிற்கு வருகிறது:
பட்டு பூச்சி வாழ்க்கையது
எட்டு நாள் தானே
பறந்து வரும் ஈசலுக்கு
ஒருநாள் தானே
அவை பறக்கலையா
சிறகு விரிக்கலையா
வாழ்வை ரசிக்கலையாவாழ்க்கையே ஒரு வரவு செலவு
வந்ததே ஒரு வரவு தான்
பூமியில் வந்த கணக்கு முடிஞ்சு
போகிறோம் அது செலவு தான்கண்ணிமைக்கும் வேளை
வானவில்லின் வாழ்க்கை
அதையெண்ணி வானவில் அழலாமா
அழகியகோலம் கெடலாமாபூப்பதொரு காலம்
காய்ப்பதொரு காலம்
இலையுதிர்காலமும் ஓர் காலம்
என்றும் இல்லையே கார்காலம்நடப்பது காலத்தின் ராஜாங்கம்
மீறிட யாருக்கு அதிகாரம்
மெய்யிலா உடல் ஒன்றையே
இங்கு மெய்யென்கிறோம்
கானலை ஒரு கங்கையாய்
தினம் நாம் காண்கிறோம்
குட்டி குட்டியாக எண்பது அத்தியாயங்கள். ஒவ்வொரு அத்தியாயத்தின் முக்கிய கொள்கையை தெளிதாகக் காட்சிப்படுத்தி ஓவியமாக மனதில் பதிக்கிறார். ஓரிரு பக்கங்கள் ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் கொடுத்து ஒரு தத்துவப் பின்னணியில் அறிவியல் கோட்பாட்டை திறன் பட விளக்குகிறார். குழந்தைகளுக்கும் என்னைப் போன்ற பெரியவர்களுக்கும் உகந்த நூல்.

“[A] lyrical and luminous celebration of science…” — Brainpickings
“Feeds the curiosity of anyone interested in exploring the universe that we exist in.” — Scientific American
“With this pairing of witty illustrations and an open-weave narrative—strong on science but just this side of poetry—Ella Frances Sanders has penned a pocket-sized book vast in ambition.” — Nature
“[Eating the Sun] blends grand scientific principles with an everyday perspective, juxtaposing the cosmic with the quotidian.” — Read it Forward