சொல்வனத்தின் இந்த இதழ் எழுத்தாளர் அம்பை குறித்த விமர்சனங்களையும் அவரின் சமீபத்திய கட்டுரைகளையும் தாங்கி வந்திருக்கிறது. இந்த இதழ் தயாரிப்பில் சற்றே பங்கு கொள்ள முடிந்தது.
அம்பையின் ஆக்கங்களைக் குறித்தும் அவருடன் பழகிய சில நாள்கள் குறித்தும் எழுத நினைத்திருந்தேன். எனக்கு மறதி அதிகம். ஒருவரை சந்தித்த உடன் அவரைப் பற்றி எழுதி விட வேண்டும். இல்லையென்றால் மொத்த கருத்தும் உருமாறி, பட்டாம்பூச்சி ஆகி பறந்து போய் விடும். பட்டாம்பூச்சி என்னும் எழுத்தாளர்களை ஏன் என் பார்வையில் புழுவாகக் குறுக்க வேண்டும் என்றும் யோசிக்க ஆரம்பித்ததால், இந்த மாதிரி குறுக்குவெட்டுத் தோற்ற மதிப்பீடுகளைக் குறைத்துவிட்டேன்.
எனினும், மற்றவர்கள் எழுதும் கட்டுரைகள் உதவியாக இருக்கின்றன. அவற்றை எங்கிருந்தாலும் (நியு யார்க் ரிவ்யூ ஆஃப் புக்ஸ் முதல் ஜெயமோகன் வரை) வாசிக்கிறேன். இந்த இதழில் அம்பை குறித்த மதிப்பீடுகள் வந்திருக்கின்றன.

In hot dry summer, the grass becomes drier, some part of the grass get burned. When grasshoppers feel the fire (more than warm), they begin to sweat, which can make the environment so wet that can effectively damp the prorogation of the fire
–
The Turing Guide
By Jack Copeland, Jonathan Bowen, Mark Sprevak, Robin Wilson
பெரியதொரு சோலை இருக்கிறது. அந்த சோலையின் தரை முழுக்க பச்சை பசேலென்று புல் முளைத்து கணுக்கால் காணாமல் போகுமளவு உயர்ந்திருக்கிறது. அங்கே நெருப்பு பற்றிக் கொள்கிறது. சோலை முழுக்க எரிந்து சாம்பலாக வேண்டியதுதான் பாக்கி. அந்த இடத்தில் வெட்டுக்கிளிகளும் இருக்கின்றன. அது வரை அங்கும் இங்கும் தாவி மண்ணில் கிடைத்த புழுக்களையும் காட்டு மலரின் அரும்பையும் சாப்பிட்டு பரவலாக ஓடித் திரிகின்றன.
பெருகும் நெருப்பின் வெம்மை வெட்டுக்கிளிகளையும் தாக்குகின்றன. அந்த வெட்டுக்கிளிகள் ஆங்காங்கே ஒன்று சேர்கின்றன. சிறு சிறு கூட்டங்களாக அமைத்துக் கொள்கின்றன. தீயினால் வெட்டுக்கிளிகளுக்கு வேர்க்கிறது. வியர்வையையும் பதற்றத்தையும் கட்டுப்படுத்த இறக்கைகளை அடித்துக் கொள்கின்றன. வியர்வைத் துளிகள் மண்ணை அடைகின்றன. படபடவென்று அடித்துக் கொள்ளும் இறக்கைகள் புல்வெளியின் பிரதேசங்களைக் குளிர்விக்கின்றன.
சோலை பெரும்பாலும் வெந்து எரிந்து சாம்பல் மட்டுமே எஞ்சி நிற்கின்றன. அப்போது, அதில் ஆங்காங்கே பசும்புல் இன்னும் தெரிகிறது. அது எப்படி சாத்தியம்?
மொத்த சோலையும் அல்லவா எரிந்து போயிருக்க வேண்டும்? எப்படி அந்த பாலைவனச் சோலைகள் உருவாகின?
அதற்கு அந்த வெட்டுக்கிளி கூட்டம்தான் காரணம். அவை ஒன்றாக ஒற்றுமையாக சேர்ந்து அருகருகில் நின்று கொண்டன. தங்களின் அச்சத்தை உழைப்பை வியர்வையாக சிந்தின. தங்கள் குட்டி சிறகுகளைக் கொண்டு விசிறி வீசின. அதில் பூமி குளிர்ந்தது. அந்தக் குளிர்ச்சி பசுமை எச்சத்தை விட்டு வைத்தது.
இந்த சொல்வனம் இதழ் அப்படி பல பெண்களின் பங்களிப்போடு உருவாகி இருக்கிறது.
சிறுத்தைப்புலியின் உடலைப் பார்த்தால் ஆங்காங்கே கரும்புள்ளிகள் தென்படும். அந்த மாதிரி ஆங்காங்கேதான் பெண்களின் பங்களிப்பு இந்த இதழில் தென்படுகிறது. எண்ணக்கூடிய அளவில்தான் இருக்கிறது.
வரிக்குதிரையின் முதுகைப் பார்த்தால் பத்து வெள்ளைக் கோடு இருக்கிறது என கணக்கிட மாட்டேன். சற்றே ஏறக்குறைய கருப்பும் வெண்மையும் சமமாக இருப்பதை உணர்வேன். ஆண்களும் பெண்களும் சமமாக மக்கள்தொகை கொண்ட நிலையில் இப்படி ஒரு கணக்கு போட்டு பட்டியல் போடுதல் அஞ்சத்தக்க நிலையே.
இருந்தாலும் காலங்கார்த்தாலே எழுந்து இன்று என்ன ஸ்டேட்டஸ் போடலாம் என்று இருபாலாரும் இன்று சமமாகவே யோசிக்கிறார்கள். நிலைத்தகவலுக்கு அடுத்த நிலைக்குச் செல்ல ஊக்கமும் எழுச்சியும் கிடைத்து வெட்டுக்கிளிகளும் பருந்தெனப் பறக்க வேண்டும்