அரூ: கனவுருப்புனைவு காலாண்டிதழ் – அறிவியல் சிறுகதைப் போட்டி முடிவுகளை முன்வைத்து சில அறிமுகக் குறிப்புகள்
ஒவ்வொரு கதையும் ஒரு நாயைப் போல. சில வளர்ப்பு நாய்கள் தங்களின் எசமானர்கள் சொன்னபடி கேட்டு நடக்கும். பெரும்பாலான ஜாதி நாய்கள் தங்கள் பெருமைக்கேற்ப நடந்து கொள்ளும். தெருவில் சுயம்புவாக விடப்பட்ட அனாதரவான நாய்கள் விதவிதமாக தங்கள் சுயரூபத்தை சமயத்திற்கேற்ப காட்டும்.
இந்தப் போட்டில் வெற்றிபெற்ற கதைகளும் அந்த நாய்களைப் போன்றவை. சில கதைகள் தங்கள் புனைவாளரின் நடைக்கும் பாவனைக்கும் கட்டுப்பட்டவை. அனேக கதைகள், ஜாதி நாய்களைப் போல், தமிழில் வரும் அறிவியல் புனைவுகளுக்கே உரிய வகையில் அமைக்கப்பட்டவை. தெரு நாய்கள் போல் சுதந்திரமான போக்கில் தான்தோன்றித்தனமான கதைகளும் இருக்கிறது.
போட்டி முடிவுகளை இங்கே பார்க்கலாம்.
ஒவ்வொரு கதைக்கும் ஒரு குறியீட்டை வைத்து அறிமுகம் செய்து வைக்கலாம். இன்று எடுத்துக் கொண்டிருக்கும் படைப்பு: பல்கலனும் யாம் அணிவோம் – ரா.கிரிதரன்.
அப்பாவுடன் புராதனமான கோயில் வளாகத்துக்குச் சென்றபோது, “மயக்கும் கண்களைப் பாருடா. எப்படிச் செருகிக்கிடக்கு பார். தூங்கறான்னு நினைச்சியா? மனசு அப்படியொரு விழிப்போடு இருக்கு.” என்பார். “மனசா?”. “ஆமாம்,” எனச் சொன்னவர் என் கண்களை நேராகப் பார்க்கவில்லை. மனசு என்பது புராணப்பொருள். இன்றைக்கு மனசுக்குள் இருக்கும் பல அடுக்குகளுக்கு இடையே செய்தி பகிர்ந்துகொள்ளும் விதம் பற்றி எல்லாருக்கும் தெரியும். அப்பாவிடம் கேட்டால், அந்தச் செய்திகளை முழுமையாகத் தெரிந்துகொண்டால்கூட மனதைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள முடியாது என்பார். மனசு எனப் பேசுவதுகூடப் பழைய பாணி ஆகிவிட்டது. பல தலைமுறைகளுக்கு முன்னர் வாழ்ந்த மூத்தக்கிறுக்கர் வரிசையில் உங்களைச் சேர்த்துவிடுவார்கள்.
நாய்க்குட்டியை வளர்ப்பதற்கென்று விதிமுறைகள் இருக்கின்றன. அதனுடன் நிறைய நேரம் செலவிட வேண்டும். அது பீ பெய்வதற்கு, அந்த நாய்க்குட்டி எங்கெல்லாம் இழுக்கிறதோ அங்கெல்லாம் செல்ல வேண்டும். அந்த நாய்க்குட்டி திடீரென்று பின்னிரவு இரண்டரை மணிக்கு உங்களை எழுப்பும். அப்பொழுதும் கவனமாக விழிக்க வேண்டும். நாய்க்குட்டிகள் அச்சுபிச்சென்று வெறி கொண்டு துள்ளியோடும். அப்பொழுது அதைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டு, கொஞ்சினால், உறவாடினால்… உங்களிடம் பெட்டிப் பாம்பாக உள்ளடங்கி வசப்படும். அதற்கு பதிலாக, அந்த மாதிரியான வெறியாட்டா நேரங்களில், அதனுடன் முரண் கொண்டு விளையாடினால், கவனமாக நம் உடம்பை ரணமாக்காமல் பாதுகாப்பாக ஓட வேண்டும். நாய்க்குட்டிகள் வளர்ந்து முதிர்ச்சியடைய இருநூறு நாள்களுக்கு மேல் காத்திருக்க வேண்டும். நன்றியுள்ள நாயை அடைய எருமைப் பொறுமை அவசியம்.
இந்தக் கதையும் நாய்க்குட்டி போல் தறிகெட்டு ஓடுகிறது. எதற்காக எந்த வாயிலைப் பிராண்டுகிறது என்பது புலப்படுவதற்குள் அடுத்த ஏவுகணையை நோக்கி ஓடுகிறது. நிறைய நேரமும் சிரத்தையும் கவனத்தையும் கோருகிறது. மீண்டும் மீண்டும் சொன்னதையேத் திரும்பச் சொல்லி நாய்க்குட்டிக்கு புரிய வைப்பது போல், சில பத்திகளை மீண்டும் மீண்டும் வாசித்து புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. முக்கியமான திறப்புகளை இந்தக் கதை மூலம் அடைய எருமைப் பொறுமை அவசியம்.
கதையின் பலங்கள்
- அக்காவிற்கும் தம்பிக்குமான பாசம்
- அப்பா மேல் உள்ள ஆதர்சம்
- வேதாந்த மேற்கோள்கள்
- கனவு விவரிப்புகள்
கதையின் சவால்கள்
- தற்கால சிறு பத்திரிகை வாசிக்கும் தமிழ் வாசகர்களை குறிவைத்த அசுவாரசிய நடை
- கதாமாந்தர்கள் மீது ஈர்ப்போ இரக்கமோ ஏற்படாத தன்மை
- நிறைய பொறுக்கு தகவல்கள் ஏற்படுத்தும் குவியமின்மை
இங்கே வாசிக்கவும். உங்கள் வாசிப்பின் முடிவில் என்ன தோன்றுகிறது என்பதைப் பகிருங்கள்.
In Tamil, ordinarily literary efforts are a group activity. They gain legitimacy only when they transcend the limits of group association. It is nice to see you take Aroo seriously and discuss/ criticise their fiction. Please do write about all the selected stories.
பிங்குபாக்: குன்றின் மீது அமர்ந்த குமரன் | Snap Judgment