மார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்


வெங்கட் சாமிநாதனின் ‘மார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல்’ அச்சுக் கோக்கப்பட்ட சமயம். தலைப்புக் கீழ் ஒரு பெரிய அடிக்கோடு வேண்டும் என்று சுந்தரத்திடம் சொல்லியிருந்தேன். ‘ஜாப் ஒர்க்’ செய்கிற – திருமண அழைப்பிதழ், ரசீதுகள், துண்டுப் பிரசுரங்கள் முதலியன; மிக நீண்டது என்றால் ‘புக் ஒர்க்’ மாதிரி வருவது, திருமண வாழ்த்துப் பா முதலியன செய்கிற – இந்தத் தொழிலாளர்களுக்கு ‘ஸ்டிக்’கில் வரி, வரி, அடுத்த வரி என்று அடுக்கிக் கொண்டே போவது சலிப்பூட்டும் வேலை; அதோடு எரிச்சலூட்டுவதும் கூட. சில தடவை அடிக்கோடு இன்னும் கொஞ்சம் பெரிதாக என்றதால், சுந்தரம் அந்தத் தலைப்புக்கு பார்டர் கட்டி விட்டார்; இருக்கட்டும்; ஆனால் ‘மேட்டரை’ இன்னும் கீழே இறக்கணும் அப்போது சரி என்றார். அச்சாகி வந்தபோது தோழர்கள் அதைத் தவறாகப் புரிந்து கொண்டதாகத் தெரிந்தது. அது, அப்படி எடுத்துக் கொள்ளப்படும் சாத்தியம் எனக்குப் படவேயில்லை. ஈமக்கிரியை அட்டைக்குத்தானே அப்படி, அதுவும் இன்னமும் சிறிய அலவில் என்று சுந்தரத்திற்கும் கூட தோன்றவில்லை. இதை அவரிடம் நான் சொன்னதாக ஞாபகமில்லை. அடுத்த இதழில் அது பற்றிய சிறு விளக்கம் தரலாம் என்ற எண்ணத்தையும் நாங்கள் விட்டுவிட்டோம்.
சில நினைவுகள்சி. மணி

மலேரியா சுரம் நிறைந்த பிரதேசத்தில் வாழும்போது, எவ்வளவோ அதிக முக்கியமான தேவைகள் முன் நின்றாலும் அவற்றையெல்லாம் பின்னொதுக்கு, முதன் முதலாக, நாம் வாங்குவது கொசு வலை. பின்னர், நீர்த்தேக்கங்களில் கொசுக்களைக் கொல்ல மருந்து வகைகள். சாப்பாட்டுத் தேவைகள் கூட அவ்வளவு முக்கியமல்ல. சூழ்நிலையைய் பொருத்து நேரும் தலைகீழ் முக்கியத்துவங்கள் இவை. இன்றைய தமிழ் இலக்கியச் சூழ்நிலையில், இக்கல்லறைக் குரலையும் பொருட்படுத்த வேண்டுவதாகிறது. அது, அநாவசிய நிர்பந்தம்.

மார்க்ஸின் நித்தாந்தம் பிறந்த பத்தொன்பதாம் நூற்றாண்டு, சகல துறைகளிலும் பொருள்நோக்கு (Materialism) நிறைந்த ஒரு காலம். விஞ்ஞானத்திலும், தத்துவ சிந்தனைகளிலும், பொருள் நோக்கு ஆதிக்கம் செலுத்தி வந்தது. பிரபஞ்சம் முழுவதையுமே ஒரு யந்திர ரீதியான அமைப்பாக பார்த்த, இதன் விளைவாக ஒரு குட்டிப் பிரபஞ்சத்தைப் பரிசோதனை சாலைகளில், working model ஆக அமைத்துக் காட்டிவிட முடியும் என்றும், மனித வாழ்க்கையும், பிரபஞ்ச இயக்கமும் ஒரு வரையறுப்பில் அடங்கிய, எனவே, அவற்றின் எதிர்காலமும் முன் அறியப்படக்கூடிய ஒரு நிர்ணய இயக்கமே என்ற கருத்துகள் மேலோங்கியிருந்த காலம். இத்தகைய யந்திர ரீதியான சூழ்நிலையில் மார்க்ஸ், உலகத்தின் ஒரு நாட்டில், ஒரு சமுதாயத்தில், ஒரு காலக்கட்டத்தில், அதன் புறவாழ்வின் ஒரு அம்சத்தில், நிகழ்ந்த மனிதத் தன்மையற்ற அநீதிப் போக்குகளைக் கண்டு, அவற்றின் இயல்பை, நேர்ந்த காரணங்களை ஆராய்ந்தார். அவருடைய ஆராய்வு, சில முடிவுகளைத் தந்தது. அம்முடிவுகள், அவ்வளவு ஒன்றும் புரட்சிகரமானவை, வெறுமையிலிருந்து பிறந்து திடுக்கிட வைப்பன அல்ல. உண்மையில் மார்க்ஸ் வரைய சிந்தனை வளர்ச்சி, சமுதாய வளர்ச்சி, அன்றைய மனிதநிலை, மார்க்சை எதிர்பார்க்க வைத்தன என்று சொல்லவேண்டும். மார்க்ஸுக்கும் முன்பு, பொருள் முதல் நோக்குகள் இருந்தன. தத்துவார்த்த ரீதியில், பொருளாதாரத்துறையில் கூட மார்க்ஸுக்கு முன் ராபர்ட் ஓவன், ரிக்கார்டோ முதலானோர், மார்க்ஸின் தோற்றத்திற்கு வழிவகுத்திருந்தனர். ஹெகல், மார்க்ஸுக்கு முன்னோடி. ஆனால், மார்க்ஸின் சிந்தனையில் இத்தகைய பரந்த, எல்லாத் துறைகளையும் உள்ளடக்கிய ஒரு பூரண சித்தாந்தத் தோற்றத்திற்கு விஞ்ஞான வளர்ச்சியும், சமூக மாறுதல்களும் வழிவகுத்தன. அக்கால இயல்பிலேயே, யந்திரப் பிரபஞ்சப் பார்வையில் மார்க்ஸ் ஒரு நாட்டில் அதனுள்ளும் குறுகி ஒரு சமுதாயத்தில், அதனுள்ளும் குறுகி அதன் ஒரு காலக் கட்ட நிகழ்வில், அதனுள்ளும் குறுகி அதன் புறவாழ்வின் ஓர் அம்சத்தில் தான் கண்ட தத்துவப் பின்னணியைப், பிரபஞ்ச அகண்டத்திற்கு விரித்து எல்லாச் சமுதாயங்களையும், எல்லாக் காலங்களையும், எல்லாத் துறைகளையும், தன் விதிமுறைகளில் உள்ளடக்கியதான ஒரு சித்தாந்த அமைப்பாக (System)க் கண்டார். மார்க்ஸின் சித்தாந்த்தின் பின் தூண்டுதலாக இருந்த அவருடைய மனிதாபிமானத்தையோ, அவருடைய மஹோன்னத மேதைமையையோ இது குறை கூறுவதாகாது. இவரை சரித்திர நிர்ப்பந்தங்கள். இத்தகைய சித்தாந்த அமைப்புகள் (System Building) பல நூற்றாண்டுகளாக, 19-ஆம் நூற்றாண்டு வரை தத்துவ தரிசிகளின் சிந்தனைகள் கட்டுப்பட்ட ஒரு பழக்கம். ஆமாம், அதைப் பழக்கம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், 20-ஆம் நூற்றாண்டில் இப்பழக்கம் கைவிடப்பட்டுள்ளது. காரணம், விஞ்ஞானத் துறைகளிலும், சிந்தனைத் துறைகளிலும் ஏற்பட்டுள்ள வளர்ச்சியும், பிரபஞ்சம் தன்னுள் கொண்ட சிக்கல்களின் ஞானமும் , இவை ஒரு புறம் இருக்கட்டும்.

மார்க்ஸின் முடிவுகள், மனித சிந்தனை வளத்திற்கு அளித்த பங்கு, உண்மையிலேயே அதிகம். அவரது காலம் வரை, இல்லாத அல்லது குறைபட்ட ஒரு பார்வை. மனித சிந்தனை இதுவரை தன்னை அவ்வளவாக ஈடுபடுத்திக் கொள்ளாத ஒரு பார்வையை அளித்தது. அப்பார்வை, எத்தனையோ பார்வைகளுடன் உடன்கொள்ள வேண்டிய ஓர் அவசியமான என்பதல்லாது, அதுவேதான் பார்வை, ஒரே பார்வை, மற்றவை இதன் சமன் தூக்கில் உட்கொள்ளப்பட வேண்டியவை, அல்லது வேண்டாது ஒதுக்கப்பட வேண்டியவை என்ற நிலை மார்க்ஸின் காலத்தில், அவர் வாழ்ந்த சூழ்நிலையில், அவர் காலம் வரை, கிடைத்த விஞ்ஞான, அறிவுத்துறை வளர்ச்சியில் நிர்ப்பந்தமாகிப் பெற்ற ஒன்று. மார்க்ஸ், இத்தகைய சிந்தனை அமைப்பு நிர்ணயத்திலிருந்து, தன்னைக் காத்துக் கொண்டிருக்க முடியாது. தவிர்த்திருக்க முடியாது.

எனவே, மார்க்ஸின் சித்தாந்தம் ஒரு காலக் கட்ட வளர்ச்சியின் சிறைக்குள் அகப்பட்ட ஒன்று. இது மாக்ஸுக்கு மாத்திரம் நிகழும் துரதிருஷ்டம் அல்ல. மனித சமுதாய வளர்ச்சியில், அறிவு விஸ்தாரத்தில், விஞ்ஞானப் பெருக்கத்தில், எந்த சித்தாந்தத்திற்கும் ஏற்படும் நிகழ்வு, இது. மார்க்ஸின் சித்தாந்தம் மனித சமுதாயத்தின் ஒரு துணுக்கில் ஒரு காலகட்டத்தில், ஒரு புறவாழ்வு அம்சத்தின் ஆராய்வில் பெற்ற சில முடிவுகளை விஸ்தரித்துப் பெற்ற பிரபஞ்ச நிர்ணய அமைப்பு. அதன் பிறப்பிடமான பொருளாதாரத்திலேயே அதன் முடிவுகள் செலாவணி அழிந்தது, குறையாகாது. அதுவே, அதன் நிறையும் ஆகும். அதிலேயே அதன் லட்சிய பூர்த்தியும் ஆகும். ஒரு நோக்கில், எந்நிகழ்ச்சிகள், அநீதி முறைகள், மார்க்ஸின் பொருளாதார சமுதாய நோக்குக்குக் காரணமாகவிருந்தனவோ, அம்முறைகளும் நிகழ்வுகளும் அழியக் காரணம், மார்க்ஸின் சித்தாந்தப் பிறப்புதான். அது அழியவே சித்தாந்த ஜீவிய நியாமும் உடம் மறைந்துவிட்டது. பொருளாதாரத் துறையிலும் சமூகவியல் துறையிலும் இம்மாற்றம் நிக்ழ்ந்து மாக்ஸின் சித்தாந்தம் மறைந்தபின், அப்பார்வையில் விஸ்தரிக்கப்பட்ட மனவியல், பௌதீகம், தத்துவம், இலக்கியம், கலைச் சித்தாந்தம், ஜீவ அணுஇயல், சரித்திரம் ஆகிய இவற்றில் அச்சித்தாந்தப் பார்வைகளும் அழிந்துவிட்டன.

ஆனால், அவற்றின் உயிர் இழப்பிற்குப் பின்னும், இச்சிந்த்தாந்தங்களினால் சவ உருவம் (mummies) பாதுகாக்கப்பட்டு நடமாட வைக்கப்படுகின்றன, காலம் கடந்து, ஜீவிய நியாயமற்று. காரணம், இச்சித்தாந்த அமைப்பு (Philosophic system), ஒரு ‘மூடுண்ட’ (closed system), வளர்ச்சி மறுக்கப்பட்ட ஓர் அமைப்பு. இதன் சிருஷ்டி இயல்பிலேயே இச்சித்தாந்தத்தின் பிறப்பிற்குப் பின், ஏற்பட்டுள்ள எந்த வளர்ச்சியும், மாறுதல்களும், அறிவுத் துறைகளிலும், சிந்தனைப் பாதைகளிலும், விஞ்ஞானப் பிரிவுகளிலும் சரி, எவையுமே, அவற்றின் முன் இவ்வமைப்பு, உரசி, அவற்றின் எதிர்ப்பில் இதன் நியாயத்தை, உண்மையைச் சரிபார்க்கவொட்டாதவாறு, ஒரு மூடுண்ட அமைப்பாக, சிருஷ்டிக்கப்பட்டு, எத்தகைய எதிர்ச்சிந்தனையும், விஞ்ஞானத் தெரிவுகளும், இவ்வமைப்பின் கட்டடத்தில் மார்க்ஸ் தன் காலச் சூழ்நிலையின் நிர்ப்பந்தத்தில், தான் நின்று பார்த்த கோணத்திலிருந்தே, பார்வையிலிருந்தே, காலத்தால் வளர்ச்சியால் பிற்பட்ட எந்த வளர்ச்சியின் எதிர்நோக்கும் நின்று பார்க்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை தன் உடன் அடக்கியது. இந்நிலையை, மார்க்ஸைத் தவிர வேறு எந்த மார்க்ஸிஸ வாதியாலும் எதிர்க்க, மறுக்க முடியாத ஒன்றாகிவிட்டது. ஓர் உதார்ணம்: வான சாஸ்திரத்தில் ஒரு புதிய கண்டுபிடிப்பு. பல்ஸார் (Pulsar) எனப்படும் ரிஷபக் கூட்டத்தில் (Taurus Constellation) காணப்படும் நட்சத்திர கோளங்கள். இக்கோளங்களிலிருந்து கிளம்பும் ரேடியோ அலைகள், ஒரு வருடத்திற்கு முன்னதாகத்தான் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றின் கண்டுபிடிப்பிற்குப் பிறகு பழைய பௌதிக சாஸ்திரத்தையே சிருஷ்டிக்க வேண்டியிருக்குமா என்பதே. உண்மையில் எந்த விஞ்ஞானமும், அறிவுத்துறையும் ஒரு மூடுண்ட அமைப்பாக இருக்க முடியாது. ஆனால் மார்க்ஸின் சித்தாந்த அமைப்பு அது பிறந்த நாளிலிருந்து இதுவரை ஏற்பட்டுள்ள எத்தகைய துறை வளர்ச்சிகளையும், மாறுதல்களையும், எதிர் கொண்டதுமில்லை; அவற்றைக் கண்கொண்டு பார்த்ததுமில்லை. அவை ஏதும் இச்சித்தாந்தத்தைப் பொருத்தவரை நிகழாதவை. ஒரே வரியில் 1848-க்குப் பிறகு உலகம் சிலையாகி நின்று விட்டது, மார்க்ஸியவாதிகளின் நோக்கில். இவர்கள் இங்கிலாந்தில் உள்ள Flat Earth Society-க்காரர்கள் போன்றவர்கள். நம் ஜோதிட நிபுணர்கள், ராவணனின் புஷ்பக விமானத்தைத் தாண்டி எதையும் நோக்க மறுக்கும் மடிசஞ்சிகள் போன்றவர்கள். டார்வின் சித்தாந்தம் பிறந்த காலத்தில், பைபிளின் Genesis-ஐ விடாப்பிடியாக அரவணைத்துக் கொண்டு விஞ்ஞான ஆராய்ச்சி முடிவுகளைக் கண்கொண்டும் பாராது, குருட்டுத்தனமாக எதிர்த்தா டார்வின் காலத்திய கத்தோலிக்க சர்ச்சுக்காரர்களைப் போன்றவர்கள் இவர்கள்.

இச்சித்தாந்தத்தில் மூடுண்ட இயல்பிற்கும் ஒரு யதேச்சதிகாரத்தின் நிழலில், அதன் கருவியாக வளர்ந்த துரதிருஷ்டமும், இக்காலங்கடந்த சவ வாழ்விற்குப் பெரும் காரணமாகும். மற்ற துறைகள் போல, கலையும் இலக்கியமும் அவற்றின் தன் இயக்கம், சுய வளர்ச்சி மறுக்கப்பட்டு சித்தாந்தத்தின் பிரசார அம்சமாகக் கருதப்பட்டதாலும் சோஷலிஸ யதார்த்தம் பிறந்தது. சோஷலிஸ யதார்த்தவாதம் மார்க்ஸின் படைப்பும் அல்ல; இலக்கிய நோக்கும் அல்ல. ஒரு யதேச்சதிகாரம், தன்னைப் பலப்படுத்திக்கொள்ள, தன் வாழ்வை ஸ்திரமாக்கிக் கொள்ள சிருஷ்டித்துக் கொண்ட பிரசாரக் கருவி. மேலும், சோஷலிஸ யதார்த்தத்தின் கட்டுண்ட, இழிநிலைக்குக் காரணம், எந்த யதேச்சதிகாரத்தின் பிரசரா கருவியாயிற்றோ அதன் மூலகர்த்தா, கலை, இலக்கிய விகாரங்களில் ஒரு நிரட்சர குக்ஷியாக (Philistine) இருந்ததும் காரணம்.

ஆகவே, இப்பார்வை, மார்க்ஸியத்தின் பிறழ்ச்சி, இலக்கியத்துக்கும், கலைக்கும் சம்பந்தமில்லாத ஒரு அரசியல் பார்வை, அதிலும் ஒரு தனி மனித அதிகாரம், அரசியலாகிவிட்ட நிலையில் பிறந்த அரசியல் பார்வை.

எளிமை நாடும் மனம், ஒரு பத்திரிகை மனம், நோய்க்கூறான பண்பில், பொது ஜன நோக்கம் கொண்ட மனம் (demagogic mind) இதற்கும் சிந்தனை, இலக்கியம் போன்றவற்றிற்கும் உறவு ஏதும் இல்லை. இதைத் தெளிவாகச் சொல்வது என்றால் நான் C.E.M. Joad-ஐத்தான் மேற்கோள் காட்ட வேண்டும்.

“There is no necessary reason – atleast I know of none – why the universe should be readily comprehensible by a twentieth – century mind. or why persons of average capacity should be enabled easily to grasp the thoughts of the profoundest intelligences that life has yet succeeded in evolving.” (Guide to Philosophy – p.11)

—-
நடை, இதழ்கள் 3,4,5,6
பூரணு இதழ் 8, 1974 (இலங்கை)

———–

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.