கரவினில் வந்துயிர்க் குலத்தினை அழிக்கும் காலன்


1968ல் ஃபிலிப் கே டிக் (Philip K. Dick) ஒரு நாவல் எழுதுகிறார். அதன் பெயர் எந்திரன்கள் மின்-ஆட்டை குறித்து கனவு காணுமா? (Do Androids Dream of Electric Sheep?).

அந்த 240 பக்க நாவல், இரண்டு மணி நேர திரைப்படமாக பிளேட் ரன்னர் (Blade Runner) என்னும் தலைப்பில் 1982ல் வெளியானது. முப்பத்தியேழு ஆண்டுகள் முன்னகர்ந்து, 2019ஆம் வருட அமெரிக்காவும் லாஸ் ஏஞ்சலீஸ் நகரமும் எவ்வாறு இருக்கும் என்பதை காட்சிபூர்வமாகக் கற்பனையில் காண்பித்தது.

முதல் பிளேட் ரன்னரில் தனி ஒருவனின் உளச்சோர்வை பிரதானமாக முன்னிறுத்தினார்கள். நம்முள்ளே பொதிந்து கிடக்கும் ஆற்றலிழப்பையும் தனிமையில் புழுங்கி செயலிழக்கும் தன்மையையும் உணர்த்தினார்கள்.

இப்போது அந்தப் படத்தின் அடுத்த பாகம் பிளேட் ரன்னர் 2049 (Blade Runner 2049) வெளிவந்திருக்கிறது. படம் வெளிவருவதற்கு முன்பே, நடுப்பட்ட முப்பதாண்டுகளில் என்ன நடந்திருக்கிறது என்பதற்கு முஸ்தீபாக மூன்று குறும்படங்களை முன்னோட்டம் விட்டார்கள். இவற்றில் முதல் குறும்படம் ஜப்பானிய மாங்கா வகையில் எடுக்கப்பட்டது. அது 2036ஆம் ஆண்டில் பிளேட் ரன்னர் குறிப்பிட்ட சமூகம் எப்படி நிலவியது என்பதை அசைபடமாகச் சொல்கிறது. அதற்கு அடுத்த இரண்டாம் குறும்படம் 2048ல் நடப்பதாக அமைந்திருக்கிறது. இந்தத் திரைப்படத்தின் பிரதான எதிர்நாயகன் ஆன நியாண்டர் வாலஸ் (நடிகர் ஜாரெட் லீடோ) இதில் தோன்றியிருக்கிறார்.

அந்தப் படங்களை இங்கே பார்க்கலாம்:

மூன்றாவது குறும்படம் தற்போதைய ப்ளேடு ரன்னருக்கு அஸ்திவாரம் அமைக்கிறது. அதில் வரும் முக்கிய கதாபத்திரமான ஒட்டன் (Sapper) 2049ன் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தின் சந்து பொந்துகளை சமாளிப்பதில் குறும்படம் துவங்குகிறது. மனிதர்கள் உயர்வானவார்களாகவும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்களாகவும், ரோபாட் எந்திரன்கள் அடிமைகளாகவும் வாழும் காலகட்டம் அது. மனிதத்தன்மை என்பது என்ன என்பதைக் குறித்த விமர்சனத்துடனேயே அந்தக் காட்சி அரங்கேறுகிறது. தாயையும் அவளின் பதின்ம வயதுச் சிறுமியையும் மனிதத்தனம் இல்லாமல் கொடூரத்திற்கு உள்ளாக்கும் மனிதர்களை அடித்து நொறுக்குகிறான் எந்திரன் ஆகிய ஒட்டன். மனிதர்களைத் தாக்கியதால் எந்திரனுக்கு கண்டதும் கொலை தண்டனை விதிக்கப்படுவதில் அந்தக் குறும்படம் முடிகிறது.

அதில் மாட்சியும் புகழும் (The Power and the Glory) என்னும் புத்தகம் பரிசளிக்கப்படுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ’தி பவர் அண்ட் தி குளோரி’ புத்தகம் கிரஹாம் க்ரீன் என்பவரால் 1940ல் எழுதப்பட்டது. இதன் தலைப்பு அஷ்டோத்திர நாமாவளிகளில் “போற்றி” என்று முடிவது போல்… “எல்லாப் புகழும் இறைவனுக்கே” என்று ஆஸ்கார் விருது ஒப்புதல் பேச்சின் முடிவில் ஏ ஆர் ரெஹ்மான் அனுஷ்டிப்பது போல்… ”உமக்கே புகழ், உமக்கே மாட்சி, ஆமென்.” என்று கிறித்துவ நற்செய்திகளின் முடிவிலும் ஜெபப் பாடல்களின் இறுதியிலும் மீண்டும் மீண்டும் வரும் சொற்றொடர் ஆகும்.

இந்த நாவலின் கதைக்கும் பிலிப் கே டிக் எழுதிய “எந்திரன்கள் மின்-ஆட்டை குறித்து கனவு காணுமா?” கதைக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. ”விஸ்கி பாதிரியார்” என்பவர் ”மாட்சியும் புகழும்” நாவலின் முக்கிய கதாபாத்திரம் ஆவார். விஸ்கி பாதிரியாரை ஒரு சமயம் பார்த்தால் பரிதாபமாக இருக்கும். இப்படித் தன்னைத் தானே அழித்துக் கொள்கிறாரே என வருத்தம் எழும். தன் மதம் சொன்ன குருமார்களுக்கான லட்சணத்தை மீறி ஒரு குழந்தைக்குத் தந்தையாக விஸ்கி பாதிரியார் இருக்கிறார். முன் செய்த பாவத்திற்காக வருந்தி வாழும் தவ ஒழுக்கத்தைப் பார்த்தால் கொஞ்சம் உன்னையே மன்னித்துக் கொள்ளுங்களேன் என சொல்லத் தோன்றும். அவரின் பிராயச்சித்தத் தேடலை முடிவுக்குக் கொணர்ந்து அவருக்கு நற்கதி கொடுக்கக் கூட நாம் எண்ணுவோம்.

விஸ்கி பாதிரியாருக்கு எதிர் நாயகராக காவல்துறை அதிகாரி உலாவருகிறார். இந்த இரு கதாபாத்திரங்களுக்கும் மாட்சியும் புகழும் நாவலில் பெயர்கள் எதுவும் தரப்படவில்லை. காவல்துறை அதிகாரிக்கோ திருச்சபை மீதும் தேவாலயம் மீதும் அப்படியொரு வெறுப்பு. அவர் சோஷலிஸத்தை சிரத்தையாக பின்பற்றும் காம்ரேடு ஆவார். சர்ச் அமைப்பு, காவல்துறை அதிகாரியின் இளமையில், அவரை சின்னாபின்னமாக்கியுள்ளதாலும் காவலருக்கு மாதாகோவில் மீது கோபம் கலந்த பழிவாங்கும் உணர்ச்சி நிலவுகிறது. அந்தக் காவலரைப் பொருத்தவரை தேவாலயம் என்பது திருடர் கூட்டத்தின் பதுங்குமிடம். திருச்சபை குருக்கள் எல்லோரும் கொலைகாரர்கள். மார்க்ஸ் சொன்னது போல் அது வெகுசனத்தின் அபின் என்னும் எண்ணம் கொண்டவர்.

இவர்கள் இருவரும் கொண்ட கொள்கையில் சிரத்தையாகப் பயணிப்பவர்கள். இவர்களுக்கு நடுவே மூன்றாவது முக்கிய கதாபாத்திரமாக முன்னாள் அருட்தந்தை ஹோஸே வருகிறார். அவர் முந்தைய அரசின் ஆணைப்படி கிறித்துவ மதத்தை போதிக்க வந்தவர். ஆனால், போர் முடிந்து அரசு மாறிய பிறகு, தன் மார்க்கத்தை கைவிட்டு மனைவியைக் கைப்பற்றியவர். முன்பு மதத்தின் வழி சென்றவர், இப்பொழுது மனைவியின் பின் செல்கிறார். மக்களுக்கு நம்பிக்கையையும் உற்சாகத்தையூட்டும் பிரச்சாரகராக விளங்கியவர், இப்போது எவ்வளவுதான் நம்பிக்கையாளர் கெஞ்சினாலும் – எந்தவித ஜெபமும் வழிபாடும் நடத்தாமல், அரசு கொடுக்கும் பென்சன் பணத்தில் காலந்தள்ளுகிறார். அதனால், மக்களின் மதிப்பை இழக்கிறார். தன் சுய கௌவரவத்தையும் இழந்து நிற்கிறார். காவல்துறைக்கு பயந்து அஞ்சி நடுங்கி வாழ்கிறார்.

கத்தோலிக்க மதம் தடை செய்யப்பட்ட கிராமத்தில் விஸ்கி பாதிரியார் நுழைவதுடன் கதை துவங்குகிறது. மெக்ஸிகோ எங்கும் ரோமன் கத்தோலிக்கத்தை பரப்பவியலாத நேரத்தில், சமயக்கோட்பாடுகளை நிறுவி மெக்சிக மக்களை மதம் மாற்றுவதை குறிக்கோளாகக் கொண்ட விஸ்கி பாதிரியாரின் பயணங்களை இந்த நாவல் விவரிக்கிறது. அவர் அனாதரவாக விட்ட அவரின் பெண் குழந்தையை அவர் தன் பாதையின் நடுவே சந்திக்கிறார். ஆனால், அந்த இளமைக்கால தவற்றுக்காக அவர் வருந்தி தன் மதம் பரப்புக் கொள்கையை விட்டு விலகுவதில்லை. தன் பாட்டுக்கு உறுதிப் பூசுதல், ஒப்புரவு வழங்குவது, ஆன்ம சோதனைகளை நிறைவேற்றுவது, என்று மதகுருவாக உலாவுகிறார்.

கதையின் இறுதியில் இறக்கும் தருவாயில் இருப்பவருக்காக கத்தோலிக்கம் தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் மதபோதகர் நுழைய வேண்டுமா என்னும் உச்சகட்டத்தில் நிற்கிறது. சோதனைகள், மனித பலவீனம், உலக துன்பங்கள், மாயக் கவர்ச்சிகள், பேராசை, சுயநலம் போன்றவற்றில் வீழ்த்தாட்டும் மனிதரை பாவத்தில் இருந்து மீட்டு புதுவாழ்வுக்கு அழைத்துச் செல்லும் பாவசங்கீத்தனம் செய்ய விஸ்கி பாதிரி செல்வாரா? அப்படிச் சென்றால் காவல்துறையினரால் கைது செய்யப்படுவாரா? கைதாகினால் மரண தண்டனை நிறைவேற்றப்படுமா? இந்த ஒரு மதபோதகரை நீக்கினால் மட்டும் கத்தோலிக்கம் நசுங்குமா? வாத்திகன் திருத்தூதரக அரண்மனையில் இருந்து மற்றுமொரு தூதர் அனுப்பப்படுவாரா?

இதே போன்ற பல கேள்விகளை ப்ளேட் ரன்னர் 2049 எழுப்புகிறது.

கிட்டத்தட்ட, முதல் பாகத்தைப் போலவே, ப்ளேட் ரன்னரின் இரண்டாம் பாகத்தை ”அரைவல்” (பார்க்க: உங்கள் வாழ்க்கையின் கதை – வருகை – சொல்வனம்) திரைப்படத்தின் இயக்குனர் அமைத்திருக்கிறார். எந்திரகதியையும் மனிதத்தனத்தையும் எந்த குணாதிசயம் வேறுபடுத்துகிறது? புறத்தோற்றத்தில் மானுடர் போல் இருந்தாலும் அகத்தில் எவ்வாறு நல்லுயிர் ஞானம் இருப்பதை உணர்வது? – போன்ற கேள்விகளை எழுப்பி விடை தேடிக் கொள்ளச் சொல்கிறார்கள்.

ப்ளேட் ரன்னர் என்பவர் யார்?

வருங்காலத்தில் மனிதரைப் போலவே தோற்றமளிக்கும் இயந்திரன்கள் உலாவுகிறார்கள். இவர்களை நகலன் (Replicant) என்று அழைக்கிறார்கள். மனிதர்கள் வெறுத்து ஒதுக்கும் வேலைகளை நகலர்கள் நிறைவேற்றுகிறார்கள். இந்த நகலன்களை, தெய்வத்தை ஒத்த முதலாளி என்னும் கடவுள் ஆன நியாண்டர் வாலஸ் படைக்கிறார். அவரின் நிறுவனம், பாலியல் வக்கிரங்களுக்கு துணைபோகும் அடிமைப்பெண்ணை, ”தேவதை” என்னும் வர்த்தகச் சின்னத்தின் கீழ் விற்பனை செய்கிறது. திரைப்படத்தில் தோலிகள் என்றும் தோல்-வேலயாட்கள் என்றும் கீழ்மையான விளிப்புகளின் மூலம், மனிதர்களின் கொத்தடிமைகளாக இவர்கள் நடத்தப்படுகிறார்கள்.

இதனால் சில நகலன் இயந்திரன்கள், அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்கின்றன. மனிதர் கொடுக்கும் அறமற்ற கட்டளைகளை அவர்கள் செவிமடுக்க மறுக்கின்றன. அந்த அயோக்கிய நகலன்களைக் கொன்று அடக்குவோரே ப்ளேட் ரன்னர்கள்.

1982ல் வெளியான ப்ளேட் ரன்னரில், நெக்ஸஸ்-6 ரக நகலன்களை வேட்டையாடிக் கொல்வது கதாநாயகன் ஹாரிஸன் ஃபோர்டின் வேலை. தற்போதைய ப்ளேட் ரன்னரில், நெக்ஸஸ்-8 ரக நகலன் ஆன ஒட்டன் என்பவனைக் கொல்வதில் படம் துவங்குகிறது. படத்தின் நாயகனின் பெயர் வெறுமனே “கே” எனப்படுகிறது. அவனின் உற்பத்தி எண் ஆன KD6.3-7 என்பதன் சுருக்கம் “கே”. அவனும் ஒரு நகலன் தான். அவன் மனிதரின் கட்டளையை எந்த வித எதிர்க்கேள்வியுமின்றி அடிபணிந்து நிறைவேற்றுபவன். அவன் நெக்சஸ்-9 ரகத்தை சேர்ந்த நகலன்.

அந்த KD6-3.7 என்னும் நகலன் தன் வாழ்வின் ரகசியங்களை ஆராய்வதுதான் ப்ளேட் ரன்னரின் திரைக்கதை. எங்கிருந்து உருவானான்? எப்படிப்பட்ட நினைவுகளை தன்னகத்தேத் தேக்கியிருக்கிறான்? எவ்வாறு அந்த அவதானங்கள் தன்னுணர்ச்சியாக மாற்றம் பெறுகின்றன? ஒருவருடைய உறுதியான நம்பிக்கை, எவ்வாறு பொய்யாக கட்டமைக்கப்படிருக்கலாம்? முன்னோர் சொன்ன பொய்களும் அவர்கள் கற்பித்த கதைகளும் எவ்விதமான உணர்ச்சி வசப்படல்களை அவனுள் உருவாக்குகின்றன?

அறிபுனை திரைப்படங்களில் பட்டாசு வெடிப்பது போல் எல்லாம் வெடித்துச் சிதறும். மாயாஜாலம் போல் அனைத்தும் மின்னும். கார்கள் பறக்கும். ஸ்டார் வார்ஸ் போன்ற ஹாலிவுட் அறிவியல் படங்களில் இது போன்ற சாகசக் கற்பனைகளைப் பார்த்திருப்பீர்கள். பிளேட் ரன்னர் படங்கள் இதில் நிறைய வித்தியாசப்படுகின்றன. எப்போது பார்த்தாலும் சள்ளென்று ஜலதாரையாக மழை பொழிகிறது. மேகம் போல் நச்சுப்புகை படர்ந்திருக்கிறது. நடு நடுவே சாம்பல் நிறத்தில் பனிப்பொழிகிறது. மக்கள் வாழும் நகரைச் சுற்றி குப்பையினால் எழுந்த மலைகள் சூழ்ந்திருக்கின்றன. மலையெனும் கழிவுகளைத் தாண்டினால் கதிரியக்க பயனிலா பாலைவன நிலத்திற்குச் செல்கிறோம்.

ஆனால், இதையெல்லாம் விட ஒன்றேயொன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், அது – இசை. ’ச்சும்மாஆஆ அதிருதுல்ல..’ என அதிநாயகத் தமிழ்த் திரைப்படத்தில் வரும் இரைச்சல், அச்சுறுத்தாமல், நம்மை பல்லிளிக்க வைக்கும். இங்கே அதே பேரோசை நம்மை முற்றுகையிடுகிறது. 1982ல் வெளியான அசலைப் போலவே புதிய படத்தின் இசையும் இருக்கிறது. கொஞ்சம் போல் ஈ.டி.எம் எனப்படும் ‘எலெக்ட்ரானிக் டான்ஸ் மியூஸிக்’ வகை இசைக்கோர்வையைக் கலக்கிறது. காட்சியில் மூழ்கடித்து அந்த வெறுமையில் அமிழ்த்துகிறது. கரையை நோக்கி வரும் கப்பல் எழுப்பும் மூடுபனி எச்சரிக்கைக் கொம்பாக எதிர்பார்த்த தாக்குதலாகத்தான் பின்னணி ஒலித்தாலும், அதன் சிலிர்ப்பு தரும் வசைதாக்குதல், பிறழ்ந்த உலகில் நம்மை நிலைநிறுத்துகின்றது.

படத்தின் நாயகன் “கே” ஒரு நகலர் பொம்மையை தன் வீட்டில் வைத்திருக்கிறான். அந்த பொம்மையின் பெயர் “மகிழ்ச்சி” (Joi). அது “கே” என்ன விரும்புகிறானோ அந்த ஆடையை அணிகிறது. “கே” செத்தால் தானும் உடனே மரிக்க நினைக்கிறது. “கே” என்னும் நகலனை உயிருக்கு உயிராகக் காதலிக்கிறது. “கே” என்ன நினைக்கிறானோ, அதை அப்படியே கிளிப்பிள்ளை போல் திரும்பி உறுதி செய்து அவன் முன்மொழிந்த எண்ணங்களை மறுமொழிகிறது. இது அத்தனையையும் சொந்தமாக சிந்தித்து நிதானமாக யோசித்து தன்னுள்ளே விவாதித்த பின் தீர்மானித்தது போல் நம்பகமாக “கே”யின் முடிவுகளை ஆதரித்து அவனை குஷியாக்குகிறது. கடையில் இந்த “மகிழ்ச்சி” என்னும் பொம்மையை “காதல் (Luv) என்னும் இன்னொரு நகலர் கதாபாத்திரம் கொன்றுவிடுகிறது.

“மகிழ்ச்சி” என்பது ஒலிமப் பருவரை (ஹாலாகிராம்) நிரலி பொம்மை. அதை வில்லன் நியாண்டர் வாலஸ் நடத்தும் கடையில் “கே” வாங்கியிருக்கிறான். அதற்கு முப்பரிமாண படிமம் கொடுக்குமாறு, மற்றுமொரு நிரலியை வாங்கி “மகிழ்ச்சி”யின் திறத்தை உயர்த்துகிறான். தான் ஒரு நகலன் என்பதை “கே” அறிந்திருக்கிறான். அவனைப் போலவே ”மகிழ்ச்சி”க்கும் தான் ஒரு எந்திரம் என்பது தெரிந்தே இருக்கிறது. இருந்தாலும் அவளும் ஆன்மா என்னும் சுயம் அறியும் பயணத்தை மேற்கொள்கிறாள்.

ப்ளேட் ரன்னர் படத்தில் வரும் நகலன்களுக்கும் ரத்தமும் சதையும் கொண்ட நமக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. ப்ளேட் ரன்னர் படத்தின் நகலர்கள் போல் நாமும் எண்ணற்ற சக்திகள் கொண்டவர்கள். நம்முடைய உடலின் ஒவ்வொரு உறுப்பும் மிக சிக்கலான வடிவமைப்பு கொண்டவை. மூளையில் எவ்வளவு விஷயம் வேண்டுமானாலும் ஏற்றிக் கொள்ளலாம். அடிபட்டால் தானாகவே குணமாகும் வழியை நம் தோல் கொண்டிருக்கிறது. கணினி உருவான தேதி போல் நமக்கும் பிறந்த நாள் இருக்கிறது. கணினி காலாவதி ஆவது போல் நாமும் ஓய்வு பெறுகிறோம். படத்தில் வரும் நகலன் அஞ்சி அஞ்சி சாவது போல் நமக்கும் நிறைய பயம் இருக்கிறது. நகலர்களைப் போலவே யாருக்காவது அடிமையாகக் குழப்பத்தில் வாழ்கிறோம். நாளை எனும் நம்பிக்கையில் காலம் கடத்துகிறோம்.

சித்தார்த்த முகர்ஜி எழுதிய மரபணு (ஜீன்) படித்திருப்பீர்கள். நம்முடைய உயிரின் எல்லாத் தகவல்களுக்கும் ஒரு சின்ன மரபீனி முதல் துவங்குகிறது. கணினி எவ்வாறு ஆமாம்/இல்லை என்னும் இருமி எண்மத்தில் அமைக்கப்பட்டிருக்கறதோ… அவ்வாறே, நாமும் உருவாகிறோம். நம்முள் மரபணுத் தகவல் இருக்கிறது. கணினியில் இரும இலக்கங்களின் தொகுதி இருக்கிறது. இரண்டுமே துண்டுகளின் சேர்க்கைதான்.

தங்கம் ஏன் மினுமினுக்கிறது? கரியம் எப்படி படிம எரிபொருள் ஆகிறது? ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு குணாதிசயம். ஆனால், எல்லாப் பொருள்களுக்குள்ளும் அணுக்கள் இருக்கிறது. ஒரேயொரு அணுவில் இருந்து எல்லா பருப்பொருள்களும் உருவாகின்றன. கணினி ஏன் பிழற்ந்து செயல்படுகிறது என்பதற்கு இரும இலக்கம், 0, 1. தகவலின் அடிப்படையலகு சிக்கல்களைச் சொல்ல வேண்டும். அதே போல் மனிதன் எவ்வாறு பிழற்கிறான் என்பதற்கு மரபணுவிற்கு செல்லவேண்டும்.

இப்பொழுது படத்தில் அடிக்கடி வந்து போகும் விளாடிமிர் நபகோவ் எழுதிய ”மங்கிய தீ” (Pale Fire) என்னும் நாவல் ஏன் பொருத்தமாகிறது என எண்ணிப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.

Cells interlinked within cells interlinked
Within one stem. And dreadfully distinct
Against the dark, a tall white fountain played.

உயிரணுக்கள் ஒன்றொடு ஒன்று உயிரணுக்கள் இணையும்
அதில் ஒன்று. வியத்தகு வகையில் தனிப்படும்
இருட்டினுள்ளே, உயரமான வெள்ளையருவி விளையாடும்

இந்தக் கவிதையின் வார்த்தைகளை அதன் அர்த்தம் புரியாமலே திரும்பத் திரும்ப சொல்ல “கே” பணிக்கப்படுகிறான். அதாவது, கணினி ஒழுங்காக வேலை செய்கிறதா என சோதிக்க சில பரிசோதனைகளை மேற்கோள்வோம். அதன் நினைவகத்தில் ஏதேனும் பழுதாகி இருக்கிறதா அல்லது அதன் கட்டளை மையத்தில் நச்சுச் செயலிகள் குடிகொண்டுவிட்டதா என்னும் துப்புரவை தினமும் அனுசரிப்போம். அது போல், “கே”விற்கு நடக்கும் சோதனையில், ‘உயிரணு’ என்னும் வார்த்தையையும் ‘இணை’ என்னும் சொல்லையும் கவிதையின் பொருளோடு பார்க்காமல், இயந்திரத்தனமாக தனித்து உச்சரிக்க வைக்கிறார்கள். கணினி கொஞ்சம் போல் யோசிக்கவோ ஆராயவோ ஆரம்பித்தால், “கே” பழுதுப்பட நகலன் என்று ஓய்வுகொடுத்துவிடுவார்கள்.

முதல் படத்தில் வாழ்வதற்காக நகலர் இறைஞ்சினார். ஏன் தாம் படைக்கப்பட்டோம் என்னும் கேள்விக்கு விடை தேடினார். கடவுளையே பார்த்து அந்த வினாவிற்கான விடையைக் கேட்டாலும், தம் சுய அச்சத்திற்கும் அதனால் எழுப்பும் குழப்பங்களுக்கும் எளிமையான ஒரு வார்த்தை பதில்கள் கிடையாது என்பது புரிந்தது. நமக்கு வேண்டியது எல்லாமுமேக் கிடைக்கப் பெற்றாலும், ஏன் இந்த உலகில் நாம் இருக்கிறோம் என்பதற்கான தேடலையும் நாம் மனிதராக வாழ்வதற்கான கடமை என்ன என்பதற்கான பதிலையும், மகிழ்ச்சிக்கும் திருப்திக்குமான இடைவெளியை “கே” இங்கே ஆராய்கிறான். உங்களுக்கு விடைகள் கிடைக்காது. ஆனால், சரியான கேள்விகளை எழுப்பிக் கொள்வீர்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.