ஜோசியம் – ஜோலி – சீலம்


ஹாரி பாட்டரை படித்திருப்பீர்கள். குறைந்த பட்சம் பார்த்திருப்பீர்கள். அலிபாபா மாதிரி “அல்லா கா கசம்! அபு கா ஹுகும்! திறந்திடு சீசேம்!” என்று சொல்வார். எல்லா மாயங்களும் நடக்கும். நானும் அது மாதிரி நிறைய சொல்லி பார்த்திருக்கிறேன். எதுவும் நடக்கவில்லை. லத்தீன் உச்சரிப்பில் பிழை இருந்திருக்கலாம்.

ஜாதகம், ராசிக்கல், நாடி ஜோசியம், ஏடு பார்த்தல், மை போடுதல், கைரேகை, எண் கணிதம், நட்சத்திர பலன் என்று நம் ஊரில் பல வகை இருக்கிறது. துவக்கத்தில் ஜெயலலிதாவின் ராசி எண் 9. பின்னர், எம்.ஜி.ஆர். அவர்களுடைய ராசி நம்பர் 7 ஆக, அது மாறியது. கூடிய சீக்கிரமே 5 என்று கூறப்பட்ட நிலையில் கடைசியில் 2தான் ஜெயலலிதாவின் ராசியானது. அவருக்கு பச்சை நிறம் என்றால் கருணாநிதிக்கு மஞ்சள் துண்டு. நானும் வீட்டை மாற்றி, பெயரை மாற்றிப் பார்த்தேன். உழைப்புக்கேற்ற பலன் கிடைத்ததே ஒழிய, எண்ணியதெல்லாம் மாயமாக ஈடேறவில்லை.

இதெல்லாம் இந்தியாவில். மேற்குலகமோ அறிவியல் லோகம் என்னும் நம்பிக்கையுடனேயே நுழைந்தேன்.

இஸ்ரேலின் யூரி கெலர் (Uri Geller) தென்பட்டார்; அவர் கரண்டிகளை கண்ணாலே வளைத்தார்; மாற்றுகிரகவாசிகளுடன் உரையாடினார். மேற்கத்தியர்கள் அவரை அபரிமிதமாக நம்பினர். காற்றில் இருந்து பெட்ரோல் கிடைக்கும் இடங்களை கண்டுபிடிக்கலாம் என நம்பி, ஃப்ரெஞ்சு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பல மில்லியன் டாலர்களை எல்ப் அக்விடேன் (Elf Aquitaine) ஆருடத்தில் கரைக்கிறார். புற்று நோய் உருவாகுவதற்கு காரணமாக இருக்கும் “பூமிக் கதிர்”களை, அறிவியல்பூர்வமாக இல்லாமல் முள்கரண்டி குச்சிகளால் நீரோட்ட கணிப்பாளர்களைக் கொண்டு ஜெர்மனியில் தேடுகிறார்கள். ஃபிலிப்பைன்ஸில் ஆவியின் துணை கொண்டு அறுவை சிகிச்சை நடக்கிறது. ராணி எலிசபெத் முதற்கொண்டு கடைநிலை குடிமகன் வரை எல்லோரும் பேய், பிசாசு பைத்தியமாக இங்கிலாந்தில் திரிகிறார்கள். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு எக்கச்சக்கமான மதங்களை ஜப்பான் கண்டுபிடித்திருக்கின்றது. ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட குறி சொல்வோரை ஜப்பான் மட்டுமே தழைக்கவைக்கின்றது. ஆறாம் அறிவு கொண்டு காற்றில் அந்தரமாக எழமுடியும் என்று நம்பி ஓம் ஷின்ரிக்யோ (アレフ) என்னும் மதக்குழு டோக்யோ ரயிலில் நச்சுவாயு மூலம் பலரைக் கொல்கிறது. அதன் தலைவர் அசஹாரா குளித்த தண்ணீரை, காசு கொடுத்து குடிப்பது சகல ரோக நிவாரணி என்று ஆயிரக்கணக்கானவர்கள் அவரின் பின் சென்றார்கள். புனித மறைநூலில் இருந்து தயாரான கஷாயம் மூலம் தங்கள் நோய் குணமாகும் என்று தாய்லாந்தில் இன்னும் நம்புகிறார்கள். இன்றும் கூட சூனியக்காரிகளை தென்னாப்பிரிக்காவில் எரித்துக் கொல்கிறார்கள். கூரை விட்டு கூரை பாய்ந்து பறந்து செல்கிறாள் என்று நம்பும் பெண்ணொருத்தியை ஹைதி நாட்டில் மரத்தில் கட்டி வைத்து உதைக்கிறார்கள். ருஷியாவில் எயிட்ஸ் குணபடுத்துவேன் என்று புருடா விடும் நடாலி முக்கியமான அரசியல் தலைவராக இருந்தார்.

இவ்வளவு ஏன்? இந்த டி-ஷர்ட் போட்டுக் கொண்டு இன்ன இடத்தில் உட்கார்ந்தால்தான் தங்கள் அணி விளையாட்டுப் போட்டியில் வெல்லும் என்கிறோம். மாய மோதிரம், தாயத்து, கையில் கங்கணம், இடுப்பில் அரைஞாண் கயிறு, குரங்கின் மூளை சமையல் என்று விரித்துக் கொண்டே போகலாம். இதெல்லாம் ஏதோ சுயநம்பிக்கையற்றவர்களுக்கான தன்னம்பிக்கைக்கான வழி என்று விட்டு விடலாம்.

ஆனால், மேற்குலகில் ஜோதிடத்தையும் அறிவியலாக்கி விட்டிருக்கிறார்கள்.

நவம்பர் 24, 1912

சிக்மண்ட் ஃப்ராய்ட் தனக்கான வாரிசை தேடிக் கொண்டிருக்கிறார். கார்ல் குஸ்டாவ் யங் (Carl Jung) என்பவர் சரியான நபராகப் படுகிறார். ஆனால், யங்கோ ஜோசியத்தை புதிய மோஸ்தரில் வடித்து, விற்றுக் கொண்டிருந்தார். கடைசியாக ஒரு முறை பார்த்து பேசலாம் என்று எல்லா பெருந்தலைகளையும் அழைக்கிறார் பிராயிட். அதற்குப் பின் அவர்கள் இருவரும் இன்னொரு முறை சந்திப்பார்கள். நவம்பர் 24, 1912 அன்று, மனநோய் மருத்துவத்தின் தந்தை அழைத்த மிகப் பெரிய ஜமாபந்தி மியுனிக் நகரத்தில் நடக்கிறது.

இரவு உணவு சாப்பிட்ட பிறகு வட்ட மேஜை களைகட்டுகிறது. எகிப்திய இக்நடன் அரசர் குறித்து விவாதிக்கிறார்கள். தன் தந்தையின் பல்வேறு கடவுள் பொம்மைகளை இக்நாடன் அழிக்கிறான். அதன் பின், அந்த ஆயிரக்கணக்கான கடவுள்களுக்கு பதில் ‘ஒன்றே தேவன்’ என முழங்கி, புதிய மதத்தை இக்நாடன் தோற்றுவிக்கிறான். ஏன் என்பதற்கான காரணத்தை பிராயிடும் யங்கும் மற்ற உளவியல் நிபுணர்களும் ஆராய்ந்து வாதங்களை முன்வைக்கிறார்கள். சிலர் அவனுடைய தந்தைபால் கொள்ளும் எரிச்சல் என்றார்கள். யங் அதை நிராகரித்துப் பேசுகிறார். இக்நாதனுக்கு தன் தந்தை மீது மோகம் இருந்திருக்கிறது. அவரை மதிக்கிறான்; அவரை ஆதர்சமாகப் பார்க்கிறான். அதனால் அவரின் குறியீடாக அந்த ‘ஒன்றே குலம்’ மந்திரத்தை உபாசிக்கிறான் என்கிறார் யங். இதைக் கேட்டுக் கொண்டிருந்த பிராயிட் மயங்கி விழுகிறார். ஆறு அடி இரண்டு அங்குலம் உயரமுடைய ஆஜானுபாகுவான யங் அவரைத் தூக்கி சோபாவில் கிடத்துகிறார்; ஆசுவாசப்படுத்துகிறார்.

இந்த மாதிரி ஃபிராயிட் மயங்கி வீழ்வது இது முதன் முறையல்ல. 1909ல் இதே காட்சி அரங்கேறி இருக்கிறது. அப்போது ஃபிராயிடும் யங்கும் அமெரிக்காவின் கிளார்க் பல்கலைக்கழகத்தில் சொற்பொழிவாற்ற பயணித்துக் கொண்டிருந்தார்கள். (இந்தப் பல்கலை பாஸ்டன் அருகேயுள்ள என் வீட்டின் அருகாமையில் இருக்கும் வூர்ஸ்டர் என்னும் நகரத்தில் மாஸசூஸ்டஸ் மாநிலத்தில் இருக்கிறது.) அப்போதும் யங் தனக்கே உரிய உக்கிரத்துடன், பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் பதப்படுத்தப்பட்ட பிணங்களைப் பற்றி அளவளாவுகிறார். அந்த சடலங்களின் முக்கியத்துவத்தை உணர்ச்சிகரமாக விவரிக்கிறார். அந்த சமயத்திலும், ஏதோ ஒரு காரணத்தால், பிராயிட் மயக்குமுற்றார். ஆனால், காக்காய் உட்காரவும் பனங்காய் விழவும் காரணமாக இருந்த மாதிரி, யங் தன் மீது சாவு வசை இட்டதால்தான் மயக்குமுற்றதாக ஃபிராயிட் குற்றஞ்சாட்டுகிறார்.

அதன் பின் நடந்த 1912 உச்சிமாநாட்டிலும், ஃப்ராயிட் அதே பல்லவியைப் பாடுகிறார். தான் சாக வேண்டும் என்று யங் விரும்பியதாகவும், அதனாலேயே தான் அசர்ந்ததாகவும் வசை பாடுகிறார் ஃபிராயிட். 1913ல் இவர்கள் இருவரின் உறவு மொத்தமாக முறிகிறது. அதன் பின் ‘என் வழி… தனிவழி!’ என்று யங் தனக்கான ஜோசியத்தை முன்வைக்கிறார்.

யங்கின் இந்த ஜோசியம் இன்றளவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. அவரின் இந்த சாஸ்திரம் மையர்ஸ் – ப்ரிக்ஸ் குறியீடாக (Myers-Briggs Type Indicator – MBTI)வும் கெயர்சீ உளப்பண்பு பிரிவினையாகவும் (Keirsey Temperament Sorter) உருமாறி, ஒவ்வொருவருக்கும் அளவு மானியாக இருக்கிறது. மேற்குலகின் முக்கிய நிறுவனங்களும், மேலாண்மையைக் கற்றுத்தரும் முக்கிய கல்லூரிகளும், மானுட ஆற்றலைப் புரிந்துகொள்ளும் மேற்படிப்புகளிலும் யங், இன்றும் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறார். உங்களுக்கு மேற்பதவி வேண்டுமா? சகாதேவர் அருளிச்செய்த தொடுகுறி சாஸ்திரம் மாதிரியே, யங் சொல்லும் 4×4 = 16 கட்டத்தில் எங்கே விழுகிறீர்கள் என்பதைப் பொறுத்தே உங்களுக்கு பதவி உயர்வு கொடுக்கப்படும்.

யங்கும் சுயமாக இதை சிந்திக்கவில்லை. அவருக்கு டாலமி தேவைப்பட்டிருக்கிறார். டாலமி கொஞ்சம் போல் வானியல் கற்றவர்; மீதத்தை தன் கற்பனையும் பேச்சாற்றலும் ஆளுமையாலும் விற்றவர். வான்கோளங்களின் ஆய்வியல் மூலம், பூமி மனிதர்களின் குணாதிசயங்களைப் பகுக்கலாம் என்று சாதித்தவர். உலகில் உள்ள எல்லாரையும் பன்னிரெண்டாகப் பிரிக்கலாம் என்கிறார். அந்த 12 ராசியையும் நான்காக வகுக்கிறார்.

நெருப்பு ராசிகள் :- மேஷம், சிம்மம், தனுசு
நிலம் ராசிகள் :- ரிஷபம், கன்னி, மகரம்
காற்று ராசிகள் :- மிதுனம், துலாம், கும்பம்
நீர் ராசிகள் :- கடகம் , விருச்சிகம், மீனம்

இதை யங் அப்படியே உள்வாங்கிக் கொண்டு, உல்டா செய்கிறார்:

1. உள்ளுணர்வு
2. புலனுணர்வு
3. சிந்தையுணர்வு
4. உணர்ச்சியுணர்வு

யங் இதை இந்தக் காலத்திற்கேற்ப நவீன மோஸ்தரில் அடைத்திருக்கிறார். அவருக்கும் நெடிய பாரம்பரியம் இருந்திருக்கிறது. ஏற்கனவே சொன்னதை, கொஞ்சம் நல்லமுறையில், எல்லோருக்கும் உவப்பான வகையில் மாற்றிக் கொடுக்கிறார்.

ப்டாலாமி யங் (ஜுங்) கேலன் (கிபி 129 – 200) பிளாட்டோ (கிமு 427 – 347) பராசெல்சஸ் (16ஆம் நூற்றாண்டு)
நெருப்பு இயல்பானவள் (Intuitive) சிடுசிடுப்பான (Choleric) கற்பனை சாலமாண்டர் (Salamander)
நிலம் உணர்வானவள் (Sensation) மனச்சோர்வுடைய (Melancholic) செயல்முறை விளக்கம் பூமிக்கடியில் புதையல் காப்பவர் (Gnome)
காற்று யோசிப்பவள் (Thinking) எதிர்கால  (Sanguine) அறிவாற்றல் தேவதை (Sylph)
நீர் அனுபவிப்பவள் (Feeling) மந்தமான (Phlegmatic) அபிப்பிராயம் நீரணங்கு (Nymph)

ஜோசியத்திற்கேயுரிய சில சாமர்த்தியமான சாமுத்ரிகா லட்சணங்களை யங் செய்து கொண்டார்:
1. இப்படித்தான் இருப்பீர்கள் என்று சொல்ல இயலாது. நான்கில் ஒன்று மேலோங்கி இருக்கும்.
2. எல்லா குணமுமே நல்ல குணாதிசயமே! ஒவ்வொன்றும் ஒவ்வொரு வேலைக்கு உதவும்.
3. சில சமயம் உங்களின் அவதானிக்கும் குணத்தை பரிபாலிப்பீர்கள். சில சமயம் உங்களின் தீர்ப்பெழுதும் மனோபாவத்தைக் கொண்டிருப்பீர்கள்.
4. நீங்கள் எல்லோருடனும் பழகிக் கொண்டாடும் மனநிலையில் இருப்பவரா அல்லது தனிமையிலே இனிமை காண்பவரா என்பதைப் பொறுத்து இவை சற்றே மாறும்.
5. நீங்கள் எங்கே பிறந்தீர்கள் என்பதைப் பொறுத்து, உங்களின் தசை இருப்புகளும் எந்த கிரகம் எங்கே இருக்கிறது என்பது மாறும் என்பதைப் போல், இப்படித்தான் ஒவ்வொருவரும் இருப்பார் என்பதை இந்த பதினாறு பிரிவுக்குள் அடக்கிவிட முடியாது.

எனவே, உங்களுக்கென்றே பிரத்தியேகமான கணிப்பை நாங்கள் கணிப்போம் என்கிறார்கள். அதைக் கொண்டு மேட்ரிமொனி, டிண்டர் காதல், மணப் பொருத்தம், யோனி அளவு எல்லாம் கண்டு தாம்பத்தியத்தை அளக்கிறார்கள்.

ஜோசியம் என்பதும், ஆளுமைக்கான குணச்சித்திர பரீட்சை என்பதும் உங்களுக்கு தன்ன்ம்பிக்கை ஊட்டவே என்பதை புரிந்து கொள்வதற்கு இன்னும் சில கதைகளும் புத்தகங்களும் பார்க்கவேண்டும். அவற்றை அடுத்த பகுதியில் கவனிக்கலாம்.

* டிரொஃபோனியஸ் கூறிய அசரீரி என்ன? அது எவ்வாறு ஒரு மனிதனின் குணாதிசயங்களின் தொகுப்பு என்னும் கணிப்போடு தொடர்புடையது?

* மேட்ச்.காம், ஒகே க்யூபிட், பாரத் மேட்ரிமனி போல் பல்வேறு வகையான தளங்கள் எவ்வாறு நவீன விஞ்ஞானம் என்ற பேரிலும் அறிவியல் முறையிலான பொருத்தம் என்னும் பரிசோதனைத் தேர்வு என்னும் பம்மாத்துகளினாலும் புதிய காதலர்களுக்கு நம்பிக்கையூட்டி, மணவாழ்வில் வெற்றியடைய வைக்கிறார்கள்?

* நம் ஒவ்வொருவருக்குள்ளும் மந்தாரை என்ற கூனி பாத்திரம் இருப்பதை எவ்வாறு யங் உபயோகிக்கிறார் என்பதையும், அழையா விருந்தாளி என்னும் அந்த குணச்சித்திரத்தை எவ்வாறு நிர்வாகத்திறமையில் நுழைக்கிறார் என்பதையும் வரும் பகுதியில் அறியலாம்.

உசாத்துணை:

1. Belief in Astrology as a Strategy For Self-Verification and Coping With Negative Life-Events | European Psychologist | Vol 3, No 3 – Outi Lillqvist & Marjaana Lindeman – Department of Psychology, University of Helsinki, Finland

2. Good day for Leos: Horoscope’s influence on perception, cognitive performances, and creativity — Arizona State University – Magali Clobert, Patty Van Cappellen, Marianne Bourdon, Adam B. Cohen – “a positive horoscope may provide the extra boost of confidence necessary to perform well on a mathematical test”

3. Placebos without Deception: Placebos administered without deception is an effective treatment

4. The Barnum effect, also called the Forer effect: The fallacy of personal validation: a classroom demonstration of gullibility. – Forer, B. R. (1949)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.