பொய் ⇒ புளுகு மூட்டை ⇒ புள்ளிவிவரம்


“செய்தி எப்போதும் ஞானம் கொண்டு உணரும் ஒளியூட்டத்திற்கு மாற்று ஆகாது.” – ‘சொற்களின் மன்சாட்சி’ கட்டுரையில் சூஸன் சொண்டாக்

“சொற்கள் என்பது நிகழ்வுகள், அவை காரியத்தை நிகழ்த்துகின்றன, மாற்றத்தைக் கொணர்கின்றன. தொடர்பாடல் என்பது கேட்பவரையும் பேசுபவரையும் உருமாற்றும்; சக்தியை இரு புறமும் பாய்ச்சி பெருக்கும்; புரிதலையும் உணர்ச்சியையும் முன்னும் பின்னுமாக உட்செலுத்தி விஸ்தரிக்கும்!” – ‘அசல் பேச்சு என்னும் மாயம்’ கட்டுரையில் உர்சுலா கே லெகுவின்

சொற்களை எப்படி பாவிக்கிறோம் என்பதைப் பொருத்து, அதன் அர்த்தம் மாறுகிறது. காப்புறுதிக்கான இந்த விளம்பரத்தைப் பார்திருப்பீர்கள். “இது என்னுடைய கார்!?! நம்பவே முடியவில்லை.” என்னும் எளிய சொற்றொடர் எவ்வாறு அதிர்ச்சியையோ மகிழ்ச்சியையோ குறிக்கும் என்பதை நகையுணர்வுடன் விளக்கும்.

நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை, அமைதி என ஒன்பதுவகைச் சுவைகளில் உண்டாகும் மனநிலை மெய்ப்பாடுகள் மனிதருக்குள் உண்டு. ஆசியம், இரதி, அரதி, சோகம், அர்ச்சம், மற்றும் குர்ச்சை என்ற ஆறு வகையான ரசம் இருக்கிறது. அதே போல் முகவபிநயத்தில்:

  1. அஞ்சித முகம் – வருத்தமாற்றாதிரு தோண்மேற்றலைசாய்தல்
  2. அதோ முகம் – ஆற்றுநீர்க்கழிமுகம், கீழ்நோக்கியமுகம்
  3. ஆகம்பித முகம் – சினத்தானுஞ் சம்மதியானும் மேற்கீழ்த் தலையாட்டல்
  4. ஆலோலித முகம் – ஆசையான் மலர்ந்தமுகமா ஒருவனை அழைத்தல்
  5. உத்துவாகித முகம் – தலை நிமிர்ந்து பார்த்தல்
  6. உலோலித முகம் – சிந்தையாலொரு தோண் மேற்றலைசாய்ந்து நிற்கு முகம், துக்கமுகம்
  7. சம முகம் – தலையசையாதிருத்தல்
  8. சௌந்தர முகம் – மலர்ந்தமுகங் காட்டல்
  9. திரச்சீன முகம் – நாணத்தாற்றலை யாட்டுமுகம்
  10. துத முகம் – வேண்டாமைக்குத் தலை யசைத்தல்
  11. பராவிருத்த முகம் – வேண்டாத தற்குமுகந்திருப்பல்
  12. பரிவாகித முகம் – மதத்தாற்றலையை ஒருபுறஞ் சாய்த்துச் சிறிதாய்ச் சுற்றியாட்டல்
  13. பிரகம்பித முகம் – அதிசயக்குறி காட்டும் முகம்
  14. விதுத முகம் – வேண்டாமைக்குத் தலை அசைத்தல்

இப்படிப்பட்ட வார்த்தை பாகுபாட்டை ஏன் விரிவாக விவரிக்க வேண்டும்? கணினிக்கு மனித உணர்வுகள் புரியாது. குறிப்பால் குறிப்புணர்ந்து செயல்படாது. மௌனமும் புரியாது; விரிவாக சொன்னாலும் குழம்பும். வார்த்தைகளும் பாவங்களும் நமக்கு ஒளியூட்டுபவை. அந்த ஞானத்தை எவ்வாறு கணினிக்கு புகட்டுவது? அரை நூற்றாண்டிற்கு முன் நார்பர்ட் வீனர் (Norbert Wiener) The Human Use of Human Beings: Cybernetics and Society என்னும் புத்தகம் எழுதுகிறார். அந்தப் புத்தகத்தை படிக்குமுன் பதஞ்சலி யோகத்திற்கு சென்று பார்க்கலாம்.

ப்ரமாண – விபர்யாய – விகல்ப நித்ரா – சம்ருதய |
பிரத்யக்ஷானுமானாகமா: ப்ரமாணானி ||

மன அலைகள் ஐந்து என்கிறது பதஞ்சலி யோகம். அந்த ஐந்து வகையாவது:

  1. சரியாகப் புரிந்து கொள்வது,
  2. தவறாகப் புரிந்து கொள்வது,
  3. பொருளற்ற கற்பனை,
  4. நினைவு
  5. தூக்கம்.

சரியான அறிவென்பது கீழ்கண்ட மூன்றின் மூலம் பெறப்படும் என்கிறது:

கட்டகம் என்றும் ஆச்சரியப்படுத்துபவை. உடங்கியம் என்னும் நம் உடலின் கட்டகம் நரம்புகளால் ஆனது. அந்த நரம்பணுக்களில் இருந்து விழிப்புணர்வு என்னும் சைதன்யம் தோன்றுகிறது. நம் உடலைப் போல் நகரம் என்னும் கட்டகம் கார்களால் ஆனது. கார்களில் இருந்து சாலை நெரிசல் தோன்றுகிறது. ஒரே ஒரு நரம்பு மட்டும் விழிப்புணர்விற்கு இட்டுச் செல்வதில்லை. ஒரு காரினால் போக்குவரத்து ஸ்தம்பிப்பது இல்லை. ஆனால், பல ஒன்றுகளின் குணாதிசயங்களினால், மொத்த கட்டகமும் உருப்பெருகிறது. இவற்றை தோற்றுவாய் எனலாம். நான்கு லட்சம் விதைகளை செக்கோயா மரம் அள்ளித் தெளிக்கிறது. எல்லா விதைகளும் விருட்சம் ஆவதில்லை. மரங்கள் அடர்ந்த வனத்தில், ஒரு சிறிய விதையில் இருந்து மற்ற மரங்களை விட உயரமாக வளரும் இயல்புடைய மரவகையை, தாவரவியலளர் இவ்விதம் தோற்றுவாய் என சுருக்கமாகக் குறிப்பிடுவர்.

இதற்கு மாற்றாக அமிழ்ந்திருக்கும் குணாதிசயங்களைக் காணலாம். மொத்த குழுவின் அங்கமாக நாம் இருக்கும்போது, நம்முடைய தனிப்பட்ட குணங்கள் மூழ்கி மறையும். கட்டகங்களில் ஒரு எளிய உதாரணம் கொண்டு இந்த எதிர்ப்பாதையை அணுகலாம். ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் ஒரு கருத்தை எழுதுகிறோம். நண்பர்கள் யாருமே அதற்கு பதிலிடவில்லை. எனவே, அவர்களுக்கு இசைவானதாக இன்னொரு கருத்தை அந்த லைக் விழுவதற்காக எழுதுகிறோம். இப்போது மறுவினைகள் குவிகின்றன. இது “எதிர்ப்பாதை” பயணம்.

தீர்வை நோக்கிய பாதையில் பயணிப்பது ஒரு வகை. நமக்கு என்ன வகையான விளைவு வர வேண்டும் என்பதற்கான காரணங்களில் ஈடுபடுவது அந்த வகை. மனம் லேசாக ஆவதற்காக தியானம் செய்வது இந்த வகை. யோகா செய்தால் ரத்த அழுத்தம் குறையும் என்பதற்காக அந்த உடற்பயிற்சி செய்வது “நேர்ப்பாதை”. ஆனால், மேலாளர்களில் பலரும் தியானம் செய்கிறார்கள்; அவர்களுடன் நேரம் செலவிட்டால் பதவி உயர்வு கிட்டும்; எனவே, நாமும் கண் மூடினாற் போல் உட்கார்வோம் என்பது “எதிர்ப்பாதை”. மனநிம்மதி என்னும் விளைவு கிட்டாமல், கட்டகத்தில் அமிழும் வகை. வெறும் சடங்காகிப் போகும் காரணத்தினால், விளைவு தோன்றாது.

ஆதாரத்தில் துவங்கி முடிவுக்குச் செல்லலாம். அல்லது, புதிரின் முடிவுப்பாதையில் துவங்கி, துவக்கத்தை நோக்கி பயணிக்கலாம். ஆனால், அதே போன்ற திட்டம் எல்லா இடங்களிலும் பலிக்காது.

மூளை பாதிக்கப்பட்டோரில் பலர் நல்ல கவிஞர்களாகவும் முக்கியமான ஓவியர்களாகவும் பரிசு பெற்ற எழுத்தாளர்களாகவும் இருந்திருக்கிறார்கள். எனவே, நானும் என்னுடைய சாதாரண மூளையை மாற்றப்போகிறேன் என யோசிப்பது பைத்தியக்கார காரணம். இது எதிர்ப்பாதை. இந்த உள்விளைவுகளையும் விளையாட்டான மனித சிந்தை பரிசோதனைகளையும் எவ்வாறு கணினிக்கு உணர்த்தி, நம் சேஷ்டைகளை புரியவைப்பது?

ஒரு குட்டிக்கதை பார்ப்போம். குரு ஒருவர் சீடர்களுக்கு யாகம் நடத்துவது பற்றி விரிவாகப் பாடம் நடத்தினார். குருகுலத்தில் எலித் தொல்லை அதிகம். எனவே, பூனை வளர்த்தார். யாகத்தில் வார்க்கப்படும் நெய்யின் வாசனையால் ஈர்க்கப்பட்ட ஆசிரமப்பூனை நெய் பாத்திரத்தை வட்டமிட்டது. எனவே, யாகம் ஆரம்பிக்கும் முன் பூனையை ஒரு தூணில் கட்டி போட்டு விடுவார். அதன் பின்னரே குரு யாகம் நடத்துவார். பாடம் முடிந்தது. வேறு நாட்டிற்குச் சென்ற மாணவனிடம், யாகம் செய்ய முதலில் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்கள். அந்த நாட்டிலோ எலிகள் நடமாட்டம் கிடையாது. எனினும், அந்த புது குரு — பூனையைத் தேடி பிடித்தான். எதிரில் இருக்கும் தூணில் கட்டி, அதன்பின்னரே யாகத்தைத் துவங்கினான்.

பூனைக்கதை எப்படி கணினிக்குப் பொருந்தும்?

ஸ்டான்ஃபோர்ட் பல்கலையில் டெண்ட்ரல் (Dendral) என்னும் தர்க்க ரீதியான கட்டகத்தை 1960களில் அமைத்தார்கள். வேதியியலின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு அது தெரியாத பொருளை ஆராய்ந்து, கண்டுபிடித்துக் கொடுத்தது. ஒரு விஷயம் மட்டுமே செய்யத் தெரியும். கரிம வேதியியல் மட்டுமே அறியும். மனிதர்களை விட வேகமாக இயங்கும். அதற்கு கற்றுக் கொடுத்த கரிம வேதியயலில் இராப்பகலாக அயராது ஆராயும்; எப்போதும் துல்லிய முடிவுகளை நல்கும். சொல்லிக் கொடுத்தது மட்டுமே தெரியும். ஆனால், அதை பிஎச்டி செய்யாத மாணவரை விட நேர்த்தியாகவும் துரிதமாகவும் செய்து முடிக்கும்.

இன்றைய நவீன மருத்துவமனைகளில் நோயாளியின் ஒவ்வொரு தகவலும் சேமிக்கப்படுகிறது; ஆராயப்படுகிறது. மருத்துவமனையிலோ ஆயிரக்கணக்கான நோயாளிகள். அவர்களுக்கு ஒரேயொரு மருத்துவர். எப்படி சமாளிக்கிறார்கள்? கோடிக்கணக்கான விஷயங்களை ஒவ்வொரு நொடித்துளியும், ஒவ்வொரு நோயாளியின் நரம்பும் அனுப்புகிறது. அதில் இதயத் துடிப்பு, சர்க்கரை அளவு, உடலின் வெப்பநிலை போன்றவற்றில் ஏற்படும் மாறுதலை வைத்து, நோயாளியின் உடல்நிலை சீராகிறதா அல்லது மோசமாகிறதா என்பதை கணினிகள் தெரிவித்துக் கொண்டேயிருக்கின்றன. அந்தத் தகவலை வைத்து மருத்துவரை தானியங்கியாக அழைக்கின்றன.

இதற்கு எதிர்ப்பாதையாக, மைசின் (MYCIN) இயங்குகிறது. உங்களின் உடல் உபாதைகளையும் மாற்றங்களையும் நீங்களே சொல்ல வேண்டும். நீங்கள் கொடுக்கும் தகவலை வைத்து எந்த நுண்ணியிரி இதை விளைவித்து இருக்கும் என்பதை சொல்லும். இது பின்னோக்கிய சங்கிலிப் பாதை.

நமக்கு சாதகமான முடிவெடுக்க, இரண்டு விஷயங்களைக் குறித்த புரிதல் கலந்த அணுகுமுறை வேண்டும்:

1. எவ்வாறு நாம் தேர்ந்தெடுக்கும் வித விதமான விருப்பங்கள், வெவ்வேறு பாதைகளுக்கு இட்டுச் சென்று, பல்வேறு இறுதி முடிவுகளைக் கொடுக்கும்?
2. இவ்வளவு இறுதி முடிவுகளில், இருப்பதற்குள் நமக்கு உகந்த முடிவு எது?

இந்த மாதிரி எந்த ஒரு விஷயத்தையும் அணுக, ஸ்திரமான மதிப்பீடும், வருவது உரைக்கும் ஊகமும் தேவை. இந்தத் திறனாய்வை எப்படி எல்லோரும் ஒவ்வொரு காரியத்திலும் செய்வது?

அ) எதிலும் இறுதித் தீர்ப்பை முடிவாகக் கொள்ளாதீர்கள்: தன்னிடம் மட்டும் மந்திரக்கோல் இருந்தால், இந்த உலகில் எல்லோரிடமும் ஒருக்கும் ஓரவஞ்சனையை நீக்கிவிட வேண்டுவேன் என்கிறார் டானியல் கானிமான் (Daniel Kahneman). அதிலும், பெரும்பாலான பணக்காரர்களிடமும், ஆண்களிடமும், வல்லுநர்களிடமும் இந்த ஒருதலைச் சார்பு கோலோச்சுகிறது. அகம்பாவம் எனலாம்; மட்டுமீறிய தன்னம்பிக்கை எனலாம்; அந்த சுய உறுதியை சற்றே தளர்த்துங்கள். இந்தப் பாதையில் சென்றால், உங்களுக்கு சாதகமான முடிவு நிச்சயமாகக் கிட்டும் என நம்புகிறீர்களா? அதில் சந்தேகம் கொள்ளுங்கள். மாற்றுப் பாதையையும் மனதில் வையுங்கள். அந்த இறுதி பலனை விட இன்னொரு இறுதி விளைவு லாபகரமானது என நினைக்கிறீர்களா? இரண்டு விளைவையும் காமாலைக்கண் கொண்டு அணுகுங்கள்.

ஆ) அனேகமாக எவ்வளவு முறை இவ்வாறு நிகழ்ந்திருக்கிறது?” என வினவுங்கள்: டானியல் கானிமான் சொல்லும் கதையைப் பார்ப்போம். தாங்கள் எழுதும் இந்தப் புத்தகத்தை எழுத எத்தனை நாள் ஆகும் என சக நூலாசிரியர்களிடம் வினாத் தொடுக்கிறார் கானிமான். எல்லோரும் பதினெட்டு மாதங்களிலிருந்து இரண்டரை வருடத்திற்குள் புத்தகத்தை எழுதி முடித்துவிடலாம் என்கிறார்கள். அதன் பிறகு, இதற்கு முன்பு பல்வேறு நூல்களை எழுதிய ஒருவரிடம், “உங்களின் போன புத்தகங்களை எழுத எவ்வளவு நாள் ஆனது?” எனக் கேட்கிறார்.

– பத்தில் நாலு புத்தகம் முற்றுப் பெறவேயில்லை
– ஒரு புத்தகம் கூட ஏழு வருடத்திற்குள் முடிந்ததாக சரித்திரமே இல்லை

இத்தனைக்கும் அவர்களின் புத்தகம் பகுத்தறியும் திறன் குறித்தது. இருந்தாலும், சென்ற அனுபவங்களைக் கணக்கில் கொள்ளாமல் பதிலளித்து இருக்கிறார்கள். பழைய பாதைகளை நினைவில் கொண்டு புதிய திட்டங்களை கணக்கு போட வேண்டும். என்னுடைய கட்டுரையை, சாதாரணமாக பத்து சதவிகிதத்தினர் முழுமையாகப் படிக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். அந்த 10% என்பது அடிப்படை வீதம். எனக்குத் தெரிந்த என்னுடைய நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் முழுமையாக படிக்கிறார்கள் என்பது உள்மாந்தரப் பார்வை. ஆனால், நம்பகமான முடுவெடுக்க “வெளிப்பார்வை” தேவை. எனவே, “பொதுவாக இது எப்போது நடக்கிறது?” எனக் கேட்டுப் பார்க்க வேண்டும்.

இ) சிந்தனையில் சாத்தியப்பாட்டை ஏற்றவும் – நிகழ்தகவு சூத்திரங்களை மனதில் எப்போதும் வைத்துக் கொள்ளவும்: நம்முடைய ஒருபுறச் சாய்வுகளை, நிகழ்தகவு பாடங்களினால் நீக்கலாம். சராசரியாக, பெரும்பாலும், அனேகமாக, பொதுவாக, ஏறக்குறைய என்னும் பதங்களை விட்டுவிடுவீர்கள்.

அடுத்து கொஞ்சம் நிகழ்தகவு, புள்ளிவிபரம், எந்திர தற்கற்றல் என்று ஆராயலாம். பொதுவாக புள்ளி இயல் குறித்து குறிப்பிடும்போது “பொய், புளுகு, அண்டபுளுகு, புள்ளிவிவரம்” என்ற சொலவடை உள்ளது. அதுவே இந்தப் பகுதியின் தலைப்பானது.

முந்தையவை:

உசாத்துணை:
1. யாழ்ப்பாண அகராதி
ஆசிரியர்: சந்திரசேகரப் பண்டிதர், சரவணமுத்துப் பிள்ளை
பதிப்பாளர்: கோ. இளவழகன்
முதல் பதிப்பு: 1842
இரண்டாம் பதிப்பு: 2006
பக்கம்: 8+ 488 = 496
தமிழ்மண் பதிப்பகம்
நூலாக்கம்: பாவாணர் கணினி

2. The Book of Why – Judea Pearl replies to Kevin Gray article 
3. Tyler Vigen: “Spurious Correlations
4. Harvard Business Review: “Beware Spurious Correlations
5. Andrew Gelman: “‘How to Lie with Statistics’ Guy Worked for the Tobacco Industry to Mock Studies of the Risks of Smoking Statistics
6. BuzzFeed: “13 Graphs That Are Clearly Lying

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.