சிறுகதையை இங்கு வாசிக்கலாம் – The Piano Teacher’s Pupil | The New Yorker
அவசரமில்லை… படித்து விட்டு வாருங்கள். ஜான் அப்டைக் போல் இந்தக் கதையை எழுதியவரையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்தானே?
சாதாரணமான நியு யார்க்கரின் கதைகள் போல் நீளமான சிறுகதையும் அல்ல. இரண்டாயிரம் வார்த்தைகளுக்குள் அடங்கி இருக்கிறது. மூன்றே பக்கங்கள்தான். சட்டென்று வாசிக்க முடியும். படித்து விட்டீர்களா?
ஆசிரியர் என்பவர் யார்? ஒரே இடத்திலேயே தேங்கி நிற்பவர் ஆசிரியர். கற்றுத்தரப் பட்டவர்கள் முன்னேறி வித்தை காண்பித்து புகழும் பணமும் பெறக்கூடியவர்கள். ஆனால், கற்றுத் தந்தவருக்கு அந்த வித்தையை அப்படி ஆக்கத் தெரிவதில்லை. வித்தகர் ஆக முடியாதவர் வாத்தியார் ஆகிறார். வர்த்தகமாக்க தெரியாதவர் வாத்தியாராக மட்டுமே வதங்குகிறார். எப்படி செய்ய வேண்டும் என்பது பியானோ ஆசிரியருக்குத் தெரியும். ஆனால், எதை எல்லாம் உருவாக்க முடியும் என்பது ஆசிரியர்களுக்கு புலப்படுவதில்லை.
இந்தக் கதை பியானோ ஆசிரியரைப் பற்றியது. மிஸ் நைட்டிங்கேல் (செல்வி வானம்பாடி) ஐம்பது வயதொத்த பெண்மணி. தன்னுடைய முப்பதுகள் வரை தந்தையோடு வசித்தார். தந்தைக்குத் தெரியாமல் மணமான ஒருவரின் காதல் பரத்தையாக பதினாறு ஆண்டுகள் இருந்திருக்கிறார். அந்தக் காதலர் இப்பொழுது அவளை நாடுவதில்லை. திங்கள் முதல் வெள்ளி வரை பல்வேறு தரப்பட்ட மாணவர்களுக்கு பியானோ வாசிக்கக் கற்றுத் தருகிறார்.
அவளிடம் ஒரு புத்தம்புது மாணவன் படிப்பு சொல்லிக் கொள்ள சேர்கிறான். வெள்ளி சாயங்காலம் அந்த மாணவன் வருகிறான். அவனிடம் கடவுள் கொடுத்த திறமை மட்டுமல்ல; அதற்கு மேற்பட்ட மேதாவித்தனம் கைவரிசையாக பியானோ இசையில் வெளியாகிறது. அவளுக்கெனவே பிரத்தியேகமாக வாசிக்கிறான். அவனுடைய கற்பனாசக்தியைத் தாண்டி கற்றுக் கொடுக்க என்று அவளுக்கு எதுவுமில்லை.
அவன் புறப்பட்ட பிறகு வீட்டில் இருந்து ஒவ்வொரு நாளும் ஒரு பொருள் காணாமல் போகிறது. மிகச் சிறிய கலைப்பொருள். அவளுடைய தந்தையார் ஞாபகார்த்தமாக சேமித்த சின்னச் சின்ன ஷோகேஸ் சின்னங்கள் மறைந்துவிடுகின்றன. அவளுடைய கழுத்தைச்சுற்றித் தொங்கவிடும் துகிலை, அவன் ஒரு சமயம் திருடி விடுகிறான். இன்னொரு சமயம் காலணியில் போட்டுக் கொள்ளும் அற்பமான அணிகலனை கவர்ந்து விடுகிறான். நகை போட்டு வைக்கும் பெட்டியை அவளுக்குத் தெரியாமல் எடுத்துச் சென்றுவிடுகிறான்.
கதை சொன்ன விதம் சுவாரசியமாக இருந்தது. டக்கென்று முடிந்ததும், முடிவு தெளிவாக புரியாததும் சற்றே எமாற்றம் தந்தது. வாழ்நாள் பறந்து சென்றுவிடுகிறது. நேரம் காணாமல் போகிறது என்பது புரிகிறது. இளமை கழிந்த பிறகே நமக்கு அதை இன்னும் பயனுள்ள முறையில் செலவிட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது.
வில்லியம் டிரெவரைக் குறித்து இணையத்தில் தேடினால், ‘பதாகை’ தளத்தில் உருப்படியாக அறிமுகம் செய்திருக்கிறார்கள். அந்தக் குறிப்பில் இருந்து:
ட்ரெவரிடம் சிறுகதையின் வரையறை என்ன என்று கேட்கப்படுகிறது. அதற்கு பதிலளிக்கும் ட்ரெவர், அது ஒரு கண்ணுறு கலை என்று சொல்கிறார் (‘art of the glimpse‘). அதைத் தொடர்ந்து, சிறுகதையின் உண்மை வெடித்துத் தெறிக்க வேண்டும் என்று அவர் சொல்வதை, அதன் மிகச் சிறிய வடிவத்தில் மிகப் பெரிய ஆற்றல் பொதிந்திருக்க வேண்டுமென்பதாய் புரிந்து கொள்கிறேன். அது எதைச் சொல்லாமல் விடுகிறதோ, அதுவே சிறுகதையின் பலம் என்கிறார் அவர். அர்த்தப்படுத்துதல் மட்டுமே அதன் நோக்கம் – வில்லியம் ட்ரெவரின் சொற்களில், ‘It is concerned with the total exclusion of meaninglessness‘. வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் வகையில் நாவல் வடிவம் பெரும்பாலும் பொருளற்றதாகவும் அலைவுகள் கொண்டதாகவும் இருக்கலாம், ஆனால் சிறுகதை வடிவம் கலையின் சாரம் என்று அவர் வரையறை செய்கிறார் (‘It is essential art‘). நாவல்கள் ரத்தமும் சதையும் கொண்ட மனிதர்களைக் காட்டினால் சிறுகதை மனித வாழ்வின் ஆதார எலும்புகளை தொட்டுக் காட்டுகிறது.
இரக்கமே இல்லாமல் சிறுகதையை வெட்டித் தள்ளுபவர் டிரெவெர். அவருடைய கார்டியன் பேட்டியில் இவ்வாறு சொல்கிறார்:
திரைப்படத்தை உருவாக்குவது போல் நான் சிறுகதையை செதுக்குகிறேன். நாம் எதை சொல்லாமல் விடுகிறோமோ அதுதான் ஒரு கதையின் முக்கியமான அங்கம். ஒரே சிறுகதையை பல மாதம் வைத்து மறுபடியும் மறுபடியும் அந்தச் சிறுகதையை எழுதுவேன். ஒரு சிறுகதை என்பது ஒருவரின் வாழ்க்கையை போகிற போக்கில் காண்பிப்பது; அல்லது அந்த ஒருவரின் ஏதோவொரு உறவை புகைப்படமாகக் கண்ணுறுவது.
எழுதுவது என்பது எனக்கு அறியவியலாத இரகசியம். அது மறைபொருள் என்று நான் நம்பாவிட்டால், எழுதுவதே உபயோகமற்றதாகிவிடும்.
எனவே நாம்தான் கதையின் ஒவ்வொரு ரகசியத்தையும் அர்த்தம் கொள்ள வேண்டும். கதையில் பதினாறு ஆண்டு கழிந்ததை குறிப்பிடுவதை, நான் ஆயுர்வேதத்தில் ஷோடஷ சமஸ்காரம் என பதினாறு வகையாக வாழ்க்கையை பிரிப்பதோடு ஒப்பிடுவேன். மானுட வாழ்வில் பதினாறு சமஸ்காரங்கள் உள்ளன.
ஷோடச கர்மாக்களை ஐந்து வகையாக பிரிக்கலாம்:
அ) கார்பிகா சமஸ்காரம் (குழந்தை பிறப்பு சம்பந்தமானவை)
1) கர்ப்பாதனம்
2) பும்சவனம்
3) சீமந்தம்
மேலே உள்ளவை தம்பதியரால் அனுஷ்டிக்கப்படுபவை.
ஆ) சைஷவ சமஸ்காரம் (குழந்தை சம்பந்தமானவை)
4) ஜாதகர்மம்
5) நாமகர்ணம்
6) நிஷ்கிரமணம்
7) அன்னப்பிராசினம்
8) சூடாகர்மம்
9) கர்ணவேதம்
மேலே உள்ளவை பெற்றோரால் கடைபிடிக்கவேண்டியவை.
இ) சைக்ஷ்னிகா சமஸ்காரம் (கல்வி சம்பந்தமானவை)
10) உபநயனம்
11) வேதாரம்பம்
12) சமாவர்த்தனம்
மேலே உள்ளவை உபாத்தியாயரால் செய்யவேண்டியவை.
ஈ) ஆஷ்ரமிகா சமஸ்காரம் (மணம் புரிந்தவர்கள் சம்பந்தமானவை)
13) விவாகம்
14) வானப்பிரஸ்தம்
15) சன்யாசம்
மேலே உள்ளவை சுயமாக செய்யவேண்டியவை.
உ) பிரயான் சமஸ்காரம் (மரணம் சம்பந்தமானவை)
16) அந்தியேஷ்டி
மேலே உள்ளவை உங்களின் இறப்பிற்கு பின் உங்கள் குழந்தைகளால் செய்யப்பட வேண்டியவை ஆகும்.
பதினாறு வகையாக இப்படி வாழ்க்கையை பிரித்து நம் நடவடிக்கைகளை வகுக்கலாம். இந்தப் பதினாறை இவ்வளவு வலியுறுத்த என்ன அவசியம்?
கதையில் மீண்டும் மீண்டும் இந்தப் பதினாறு வருகிறது. முதல் தடவை பியானோ ஆசிரியையின் கள்ளக் காதல் பருவம் குறித்த விவரிப்பில் எடுத்த எடுப்பிலேயே பதினாறு சொல்லப்படுகிறது.. இரண்டாவது தடவையும் அதே பதினாறு என்னும் எண் இன்னொரு பக்கத்தில் வலியுறுத்தப்படுகிறது – அவளின் தந்தையின் கடைசிக் காலத்தை நேசத்துடன் கவனித்துக் கொண்டு கழித்த பதினாறு ஆண்டுகள் என்கிறார் டிரெவர். தன்னுடைய ஒவ்வொரு பேட்டியிலும் தான் ஒரு கிறித்துவ ப்ராடெஸ்டண்ட் என்பதை ஊக்கமாக சொல்லிக் கொள்கிறார்.
கிருத்துவ மதத்தின் திருத்தூதர் பால் என்பவரும் விவிலியத்தில், தன்னுடைய முதல் நூலில், 16 வகையான நேசம் இருப்பதாக விரிவுரை எழுதுகிறார்.
Corinthians 13:4 – 8:
- அன்பு பொறுமையும்
- கருணையும் உள்ளது.
- அன்பு பொறாமைப்படாது,
- பெருமையடிக்காது,
- தலைக்கனம் அடையாது,
- கேவலமாக நடந்துகொள்ளாது,
- சுயநலமாக நடந்துகொள்ளாது,
- எரிச்சல் அடையாது,
- தீங்கை கணக்கு வைக்காது,
- அநீதியைக் குறித்து சந்தோஷப்படாமல்
- உண்மையைக் குறித்து சந்தோஷப்படும்.
- எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ளும்,
- எல்லாவற்றையும் நம்பும்,
- எல்லாவற்றையும் நம்பிக்கையோடு எதிர்பார்க்கும்,
- எல்லாவற்றையும் சகித்துக்கொள்ளும்.
- அன்பு ஒருபோதும் ஒழியாது.
இந்தக் கதையை எழுதிய வில்லியம் ட்ரெவர் (William Trevor) கடந்த நவம்பரில் தன்னுடைய 88ஆம் வயதில் மறைந்துவிட்டார். அவரின் இறப்பிற்கு பிறகு வெளியாகும் கதை இது. கடைசிக் காலத்தில் எழுதிய இந்தக் கதை முற்றுப்பெற்றதா? இதுதான் இந்த இந்தச் சிறுகதையின் இறுதி வடிவமா? இவ்வளவு சிறிய ஆக்கமாக இருப்பதற்கு அவரின் அந்திமக் காலமும் ஒரு காரணமா? கல்கியின் மறைவிற்குப் பின் அவருடைய புதல்வர் நிறைவாக்கிய ‘பொன்னியின் செல்வன்’ போல் வில்லியம் எடுத்திருந்த குறிப்புகளைக் கொண்டு இந்தக் கதை வடிவாக்கம் பெற்றதா?
வில்லியம் டிரவர் “The Piano Tuner’s Wives” என்னும் கதையை 1995ல் எழுதியிருக்கிறார். அந்தக் கதையை இங்கே வாசிக்கலாம்.
டிரெவரின் பெரும்பாலான சிறுகதைகள் போலவே இந்தக் கதையும் முன்னும் பின்னும் பயணிப்பவை. துவக்கத்தில் முடிவிற்கு வெகு அருகே இருக்கும். கொஞ்ச நேரம் படித்தவுடன் கதாபாத்திரங்களின் இளமைக் காலத்திற்கு சென்றிருப்போம். வாசிப்பவரின் ஆர்வத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்னும் அக்கறையை டிரவெர் எடுத்துக் கொள்வதில்லை. அதாவது வலிந்து அந்த விறுவிறுப்பைக் கொணர மாட்டார். நீங்கள் எப்பொழுதோ தூண்டிலில் சிக்கி இருப்பீர்கள்.
”கதையில் உணரவேண்டியதை விரித்துரைத்து சொல்லக் கூடாது; சம்பவங்களினால் காட்ட வேண்டும்; அன்றாட செயல்களினால் விஷயங்கள் புலப்பட வேண்டும்.” என்பதை சிறுகதையின் பாலபாடமாக அறிவுறுத்துவார்கள். ’அது எப்படி?’ எனக் கேட்பவர்களுக்கு வில்லியம் ட்ரெவரின் இந்த “பியானோவிற்கு சுருதிசேர்ப்பவரின் மனைவிகள்” கதையையும் சுட்டலாம்.
அவரின் இன்னொரு கதைய அவரே வாசிப்பதை இங்கு பார்க்கலாம்:
மீண்டும் இந்தக் கதைக்கே வந்து விடலாம்.
ஆசிரியை எண்ணற்ற பொருள்களை சேமித்து இருக்கிறாள். ஒரு இடத்தின் ஞாபகமாக சில பொருள்கள் இருக்கின்றன. இருவரின் நினைவை சொல்லும் பொருட்டு சில பொருள்கள் அலங்காரமாக இருக்கின்றன. ஒரு வயதை, அந்தக் காலத்தை எண்ணிப் பார்க்கும்வகையில் சில பொருள்கள் அவளின் வீட்டை நிரப்புகின்றன. நம் பொருள்கள் காணாமல் போன பிறகே அவற்றின் அவசியத்தையோ, அல்லது அவசியமற்ற தன்மையையோ உணர்கிறோம். பொருள் இருக்கும் அந்த அறை எப்படிப்பட்டது?
அதற்கு அவளின் மூன்று பருவங்கள் நினைவுகூறப்படுகிறது. முதலில் பால்ய காலம். சாக்லேட் என்றால் உயிர். ஒவ்வொரு நாளும் அவளுடைய அப்பா புதிய இனிப்புகளை அவருடைய வினோத சாக்லேட்களைக் கொண்டு வருவார். அதே அறையில்தான் அவளுடைய ரகசியக் காதலன் அவளை இறுக்கி தேய்த்து, அவளை ஒரு அழகி என கிசுகிசுத்தான். அந்த பியானோ அறையில்தான் இப்பொழுது வாத்தியஜாலம் நிகழ்கிறது. வசீகரிக்கும் இசை வருடுகிறது; அந்த மாணவன் அவளுக்கு மட்டுமே நிகழ்த்திக் காட்டும் கச்சேரி அரங்கேறுகிறது. ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்.
அவள் வாழ்வில் வந்த அந்த மூவரும் திருடர்களே. அவளின் அப்பா அவளுக்கு மணமுடிக்கவில்லை. தன் கடைசிக் காலத்தில் தன்னைப் பாத்துக் கொள்ள அவருக்கு ஒரு தாதி தேவைப்பட்டு இருக்கிறது. அதற்காக மகளை வீட்டோடு வைத்துக் கொண்டார்.
அதே போல் அவளின் இளமை அந்தக் காதலருக்குத் தேவைப்பட்டு இருக்கிறது. அவளின் அழகைத் திருடி இருக்கிறார்.
ஒன்றை இழந்தால்தான் இன்னொன்று கிட்டுகிறது. அவளுக்கு காதல் வார்த்தைகள் தேவைப்பட்டது. அதற்காக திருட்டுக் காதலை வைத்துக் கொண்டாள். அந்தக் கூடாவொழுக்கத்திற்கு விலையாக தன் இளமையை இழக்கிறாள். ஆசிரியையின் காதலனின் முதல் மனைவியின் நிலை என்ன? அந்த மனைவியின் அன்பை அவள் கவர்ந்ததற்கு மாற்றுப் பண்டமாக தன் மணவாழ்க்கையை அர்ப்பணிக்கிறாள். அந்த இரு பெண்மணிகளில் யார் பெருந்தன்மையானவர் என்று முடிவெடுப்பதை நம்மிடமே விட்டிருக்கிறார்.
இறுதியாக ஆசிரியரின் மாணவன் விலை மதிப்பில்லாத சங்கீத சதிராட்டம் கொடுக்கிறான். அதற்கு பதிலாக தன் வாத்தியாரின் இசைவைக் கோருகிறான். அவனுடைய அந்த இசைக் கச்சேரியில் சுயநலம் இல்லை. தன் ஆசிரியருக்கான அந்த அரங்கேற்றத்தில் அங்கீகாரத்தை மட்டுமே விலையாகக் கேட்கிறான். நம் குழந்தைகள் நம்மிடம் அதைத்தானே எதிர்பார்க்கின்றன… நம்முடைய கௌரவம் என்பது நம் வழித்தோன்றலின் மதிப்பில் அமைந்திருக்கிறதா? கதையை மீள்வாசித்தால் விடை கிட்டும்.
இந்தக் கதையை வாசித்தபோது ஜானி கேஷ் (Johnny Cash) நினைவிற்கு வருகிறார். அமெரிக்காவில் புகழ் பெற்ற பாடகராக ஜானி காஷ் விளங்கினார். அவரின் குழந்தைப் பருவத்தில் குரல் மேம்படுவதற்கு பாட்டு வாத்தியாரிடம் அனுப்பினார்கள். மூன்றே வகுப்புகளுக்குப் பின் அவருடைய ஆசிரியர் “உன்னுடைய பாடும் வித்தையை எந்தப் பொழுதிலும் எவர் சொன்னாலும் மாற்றிக் கொள்ளாதே! இயற்கையாக அமைந்த குரலை விட்டு விடாதே!” என்று சொல்லி உச்சிமுகர்ந்து ஜானியின் பாடல் வகுப்பை பூர்த்தியாக்கிவிட்டார். (ஆதாரம்: biography.com)
வில்லியம் ட்ரெவரின் கதை நாயகர்கள் ஜானி காஷ் போல் புகழ்பெற்றவர்களை அடிப்படையாகக் கொண்டவர்கள் கிடையாது. அவருடன் ஆன ‘கார்டியன்’ நேர்காணலில் இவ்வாறு சொல்கிறார்:
”என்னுடைய கதைகளில் கொள்ளை கொள்ளையாக உணர்வுகள் வரும். எல்லாவித உணர்ச்சிகளும் சத்தியாமனவை. ஒவ்வொரு விநோதமாக ஆராய்ந்து விதந்து கூறுகிறேன். மற்ற நிஜங்களுக்கு கதையில் ரொம்ப இடம் தர மாட்டேன். உண்மை சம்பவங்களை விட விசித்திரங்களை குடைந்து எழுத்தில் கொணர்கிறேன். அதனால்தான் பெண்களைக் குறித்து எழுதுகிறேன். நான் பெண் இல்லை. அவர்கள் எண்ணங்கள் எப்படிப்பட்டவை என்பது தெரியாது. இது என்னை உற்சாகம் கொள்ளவைக்கிறது. அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சிந்திக்கிறேன். என்னால் அவர்களாக முடியாது. அதனால் ஆர்வத்துடன் அந்த அனுபவத்திற்குள் நுழைந்து ஆராய்கிறேன்.
தினசரி காரியங்களை செய்யும்போது மனம் தாவிச் சென்று என்றோ நடந்ததை அசை போடுகிறது. ஏதோவொரு வார்த்தையைக் கேட்கும்போது அந்த வார்த்தை வரும் பாடலை வாய் தானாகப் பாடத் துவங்கி, அதன் வழியே நினைவு நம் வாழ்வின் பழைய சம்பவத்தில் சென்று நிலைக்கிறது. பழசை திணித்து மூலையில் ஒதுக்கி வைக்கலாம். ஆனால், நீக்க முடிவதில்லை. அந்த மாணவனின் நினைவுச் சின்ன வேட்டைகளை பியானோ ஆசிரியை கண்டுகொள்வதில்லை. ஏன் அவள் அதை அவனிடம் கேட்கவில்லை? அவளே அந்தப் பொருள்களின் நினைவுகளை மறக்க நினைக்கிறாளா? தன்னால் கலையில் சாதிக்க இயலாததை தன் மாணவன் சாதிக்கிறான் என்னும் சந்தோஷமா? தன் கள்ளக் காதல் செய்கைகளுக்கான பிராயச்சித்தமா? தன்னுடைய குற்றவுணர்வை தவிர்க்கமுடியாதது போல், அந்த மாணவனிடமும் இந்த சில்லறைத் திருட்டு அவமானத்தை பிற்காலத்தில் தேக்கும் என்னும் தூரதிருஷ்டியா? அவனில் புதிய ஒளியைப் பார்ப்பதால் நம்பிக்கைக் கீற்றின் வெளிப்பாடா? இவ்வளவையும் யோசிக்க வைப்பதில் வில்லியம் ட்ரெவர் நிலைக்கிறார்.
படிக்க பைசா கட்டவேண்டுமோ? //You’ve read your last complimentary article this month. To read the full article, SUBSCRIBE NOW//
பிங்குபாக்: கனலி – சில எண்ணங்கள் | Snap Judgment