திரைப்படத்தை முன் வைத்து சில குறிப்புகள்:
1. நெட்ஃப்ளிக்ஸ்: இந்தப் படம் நெட்ஃப்ளிக்ஸ் மூலமாகப் பார்க்கக் கிடைக்கிறது. அரிதான தென்னிந்தியப் படங்கள் வரிசையில் இதை வைத்திருக்கிறார்கள். திதி, நிலா, ஒத்தாள், Revelations, விசாரணை என்று இந்தப் பட்டியலில் வித்தியாசமான கொத்துகளை சேர்த்திருக்கிறார்கள்.
2. சிங்கம்: இயக்குனர் ஹரி எடுத்த சிங்கம் படம் இப்படித்தான் போகும், நல்லதுதான் நடக்கும் என்று தெரியும். இருந்தாலும் பார்ப்போம். இந்தப் படத்திலும் இறுதியில் இப்படித்தான் முடியும் என்பது ஊகிக்க முடிகிறது.
3. குடும்பமா? சுயவிருப்பமா? : ’ரேடியோபெட்டி’ திரைப்படம் அருணாசலம் என்ற முதியவரை பற்றிய கதையாகும். அருணாசலம் தனது கடந்தகாலம் பற்றிய நினைவுகளில் மூழ்கி இருப்பவர். குறிப்பாக தனது அப்பா அளித்த ரேடியோவில் இளமைக்கால மெல்லிசை பாடல்களை கேட்பதில் மகிழ்பவர். தனது குடும்பம், மெல்லிசை ஆகிய இரண்டில் ஒன்றை அவர் தேர்வு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இரண்டில் ஒன்றை வாழ்நாள் முழுக்க இழக்க வேண்டும். அவர் எதை தேர்வு செய்வார் என்ற கதை களத்தை அடிப்படையாக கொண்ட திரைப்படமே ’ரேடியோ பெட்டி’.
4. பியூட்டி அண்ட் தி பீஸ்ட்: இந்தியக் குடும்பங்களில் ஆண் என்பவன் என்ன சிரமங்கள் கொடுத்தாலும் பொறுத்துக் கொண்டு போவது மனைவிகளின் கடமை. இதுதான் டிஸ்னியின் கதை. ஒரு ராட்சஸன் இருப்பான்; அவன் இருக்கும் இடமோ அடர்ந்த காடு; மக்களற்ற தீவாந்தரத்தில் வசித்தாலும் அவனின் இல்லத்தரசி அவனுக்கு சமைத்துப் போடுவாள்; சிசுருஷை செய்வாள்; அவளுக்கும் வயதாகி இருந்தாலும் அவனுக்கான தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுவாள். ரேடியோபொட்டியும் அருணாச்சலம் என்னும் பீஸ்ட் ஒருவரின் கதைதான்.
4. விருது: தென் கொரிய பூஸான் திரைப்பட விழா போட்டி பிரிவிலும், ஸ்பெயின் திரைப்பட விழாவில் சிறந்த இசைக்கான விருதும் வென்ற படம். ரோமானியா திரைப்பட விழா உள்பட பல்வேறு விழாக்களில் பங்கேற்ற படம். பல காலமாக விருதுக்காகவே எடுக்கப்படும் ஹிந்திப் படங்கள், காஞ்சிபுரம், குட்டி போன்ற சமீபத்திய தமிழ்ப் படங்கள் பார்த்து வருகிறேன். இருந்தாலும் இது தமிழகத்தின் அசல் கதை, இந்தியாவில் மட்டுமே எடுக்கக் கூடிய படம் என்று எதுவும் பளிச்சிடவில்லை. இந்த மாதிரி முதியவர்கள் எங்கும் எப்போதும் காணப்படுகிறார்கள். ஒரு ஐம்பதாண்டுகளாக இந்த சப்ஜெக்ட் — பரிதாபமான அனாதரவான பெற்றோர் என்னும் தேய்வழக்கு உலாவருகிறது.
5. சூது கவ்வும்: விஜய் சேதுபதி நடித்து நலன் குமரசாமி எடுத்த இந்தப் படத்தைப் பார்த்திருப்பீர்கள். அதில் ”தாஸ்’ கதாபாத்திரம் தன்னுடன் அழகி ஒருத்தி உரையாடுவதாகக் கற்பனை செய்து உடன் வைத்திருக்கும். அந்த “ஷாலு”வுடன் பேசுவது பைத்தியம் என்று அழைக்க வைத்தாலும் தாஸ் என்பவன் அதை சகஜமாக எடுத்துக் கொள்வான். இங்கே “ரேடியோ பெட்டி”யிலும் அந்த மாதிரி மனச்சிக்கலை மையமாக வைத்து எடுக்கிறார்கள். ஆனால், ”சூது கவ்வும்” இதே போன்ற உளச்சிக்கலை இன்னும் நுட்பமாக ஆழமாகப் பதியுமாறு சர்வ சாதாரணமாகத் திரையில் காட்டிச் சென்றார்கள். ரேடியோபெட்டியில் அதை போட்டுடைத்துச் சொல்கிறார்கள். முன்னது திரைப்படத்திற்கு உகந்த அணுகல். இரண்டாமவது எழுத்திற்கு சாலச் சிறந்தது.
6. பழைய நினைப்புதான் பேராண்டி: நொஸ்டால்ஜியா என்பது சொர்க்கமா அல்லது மீள வேண்டிய நரகமா என்பது உங்களின் அனுபவத்தைப் பொருத்தது. இதில் தன் அப்பா, அவர் உபயோகித்த சின்னச் சின்ன விஷயங்கள், பழைய வேலை, பால்ய காலம், முதலில் பார்த்த வேலை, அந்த வேலையில் நெடுங்காலமாக கூட பயணிக்கும் சக ஊழியன் என்று ‘அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே! நண்பனே! நண்பனே! இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே அது ஏன்? ஏன்? ஏன்?
7. பொருள் என்பது பொருளல்ல? : இன்றைய ஐஃபோன், அல்லது செல்பேசியை எடுத்துக் கொள்வோம். இந்தக் கருவியை எங்கும் எடுத்துச் செல்லலாம்; எப்பொழுது வேண்டுமானாலும் நமக்கு என்ன பாட்டு வேண்டுமோ கேட்டுக் கொள்ளலாம். அது ஒரு இருப்பு சார்ந்த பொருள்.
நான் நிரலி எழுதுபவன். அதே செல்பேசியில் உங்களுக்கு இந்தப் பாட்டு பிடித்து இருந்தால், இன்னொரு பாட்டும் பிடிக்கும் என்று பரிந்துரை சொல்லும் மென்கலன் எழுதுவேன். அந்த ஐ-பாட் என்பது பாட்டு கேட்க என்பதில் இருந்து வேறு பல பயன்பாடுகளுக்குத் தகுந்தவாறு மாற்றுவேன். வெறும் பாட்டுப் பெட்டிக்கான கருவி என்றில்லாமல், புகைப்படங்கள் பார்ப்பதற்கோ மற்றொன்றிற்கோ கூட உருமாற்றி உபயோகமாகுமாறு வடிவம் தரவைக்கக் கூடிய பொருள்.
கடைசியாக பொருள் என்பது நம் அபிலாஷைகளுக்கு உருவம் தருகிறது. வினாயகரின் குட்டி விக்கிரகமாக இருக்கலாம், சிலுவையாக இருக்கலாம்; அது உங்களின் நம்பிக்கை சார்ந்தது. இந்தச் சிலுவையை இடியும் மின்னலும் கூடிய சமயத்தில் பிடித்துக் கொண்டால், அறிவியல்பூர்வமாக ஆபத்தாகக் கூட இருக்கலாம். ஆனாலும், ஆழ்மனம் சொன்னால் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு மழையில் இருந்து தப்பிக்க வைத்ததாகச் சொல்வோம். அருணாசலத்திற்கு ரேடியோபெட்டி அந்த மாதிரி உள்விருப்பம் சார்ந்த பொருள்.